Friday, January 14, 2011

பொங்கல் அன்று சூரியனை வழிபடுவது ஏன்?



"தூரத்தே நெருப்பை வைத்துச் சாரத்தைத் தருபவன் சூரியன்' என்று நயமாகப் பாடியுள்ளார் கவியரசு கண்ணதாசன். இது மாபெரும் உண்மை. ஆதவனின் சாரமாகிய வெப்பம் மற்றும் வெளிச்சத்தின் சக்தியைக் கொண்டுதான், இப்புவியில் மரம், செடி, கொடி, புல் பூண்டு மற்றும் மிருகம், பறவை இன்னும் புழு- பூச்சி இனங்கள்... ஏன் மனித குலம் வரை அனைத்துமே தோன்றி வளர்ந்து, இப்புவியைத் தழைக்கச் செய்கின்றன.

மேலும், சூரியனின் பேருதவியின்றி எந்த ஓர் உயிரினமும் தனது உணவைப் பெற்றுவிட முடியாது. அதுமட்டும் அன்று! புவியின் அனைத்து உயிரினங்களின் வாழ்வுக்கும் ஒவ்வாதவற்றை அழித்து, அவற்றின் சுகாதாரமான நலவாழ்வை உறுதி செய்வதும் சூரியனே! இயற்கைப் படைப்புகளின் அழகின் வெளிப்பாடு, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுக்கும் மூலாதாரக் காவலனாக விளங்குவதும் சூரியன்தான். உலகின் தொன்மைப் படைப்பான வேதங்களில், "சூரியனின் பெருமைகள்' கூறப்பட்டுள்ளன.

பாரதத்தில் சூரிய வழிபாடு, மார்கழி முடிந்து தை பிறக்கின்ற நன்னாளில், "மகர சங்ராந்தி'யாக அனுசரிக்கப்படுகிறது. இதுவே "பொங்கல் திருநாள்' ஆகும். இந்தக் காலகட்டத்தில் சூரியன், தனது வடக்கு நோக்கிய பயணத்தைத் தொடங்குவதால், அந்தத் தினம் மிகவும் புனிதமானதாகும். சூரியனின் அந்தப் பயணம்தான் பூமத்திய ரேகைக்கு வடக்கில் அமைந்துள்ள நமது பாரதத்துக்கான கோடையின் தொடக்கமாகும். கோடைக்காலம் தரும் சூரியனின் வட திசைப் பயணம், அதாவது உத்தராயணம், தேவர்களின் பகல் பொழுது. அதன் தொடக்கம், இந்த "மகர சங்கரமணம்' என்பதால், புலரும் சூரியனை அன்று வணங்குவது மிகவும் பொருத்தமானது; புண்ணியம் தரக் கூடியது.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை, மிகவும் பிரபலமானது. பண்டைக் காலத்திலிருந்தே சூரிய வழிபாட்டை தமிழர்கள் தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். சூரியன் தரும் சாரத்தைக் கொண்டு நாம் விளைவித்த பயிர்களை அறுவடை செய்யும் நேரம் அது. அந்த அறுவடையை சூரியன் நமக்களிக்கும் காரணத்தால், அதற்கு நன்றி செலுத்தும் விதமாக சூரியனை நாம் வழிபடுகிறோம். இதனால்தான் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக "உழவர் திருநாள்' கொண்டாடப்படுகிறது.

பொங்கல் திருநாளன்று பசும்பாலில் உலை வைத்து, அதில் புத்தரிசியும் புதுவெல்லமும் சேர்த்துப் பொங்கல் செய்து சூரியனுக்குப் படைக்கிறோம். அச்சமயத்தில் புதிய அறுவடையாகக் கிடைக்கும் புதுமஞ்சள், புது இஞ்சி ஆகியவற்றைக் கொத்தோடு படைக்கிறோம். வாழைப் பழம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றையும் ஆதவனுக்கு நிவேதனம் செய்து, அகம் மகிழ்கின்றோம்.

பொங்கல் தினத்துக்கு முன் தினம், பழையன கழித்துப் புதியன புகுத்திப் போகிப் பண்டிகையும், மறுநாள் உழவுக்குத் துணை நின்ற மாடுகளுக்கான மாட்டுப் பொங்கல் மற்றும் கனு எனும் கன்னிப் பொங்கலும் கொண்டாடப்படுகின்றன.

நம் பாரதத்தில் மட்டுமல்லாது, உலகின் பல பகுதிகளிலுமே சூரிய வழிபாடு ஏதாவது ஒரு வகையில் இருந்து வருகிறது.

கிரேக்க நாட்டினர் சூரியனை, "இவ்வுலகைப் படைத்தவர்' எனக்கருதி வழிபடுகின்றனர். மெக்சிகோவாசிகளும் அப்படியே! அவர்களின் திருமணச் சடங்குகளில் சூரிய ஆராதனை, முக்கிய இடம் பெற்றுள்ளது. அது மட்டுமல்ல... கிரேக்கர்கள் நம் பாரத தேசத்தவர் போலவே ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கிளம்பி வந்து, இரவில் திரும்பிச் செல்பவர் சூரியன் என்று கூறி, அவரை ஆராதிக்கின்றனர்.

வேறு சில வெளி நாட்டினர், சூரியனுக்குத் தேக ஆரோக்கியத்துடன் நெருக்கமான தொடர்பு இருப்பதை உணர்ந்து, "சூரிய உபாசனை செய்தால் கொடிய நோய்கள் தீரும்' என்ற நம்பிக்கையோடு வழிபடுகின்றனர். அரசனை சூரியனின் வம்சத்தில் உதித்ததாகக் கருதி, ஜப்பானியர்கள் சூரியனை வழிபடுகின்றனர்.

பண்டைய எகிப்தியர்கள் உதய ரவியை "ஹோரஸ்' என்றும், நண்பகல் சூரியனை "ஆமென்ரர்' என்றும், மாலைச் சூரியனை "ஓசிரில்' என்றும் அழைத்தனர். "டைஃபோ' என்ற இருளரக்கன், முதலை உருவத்தில் வந்து, மாலையில் "ஓசிரிலை' விழுங்கிவிடுவதாகவும், மறுநாள் காலையில் "ஹோரஸ்' அவனை வென்றுவிடுவதாகவும் நம்பினர். பண்டைய எகிப்தில் பல சூரியக் கோயில்கள் இருந்துள்ளன. சூரிய வழிபாடு மட்டுமல்லாமல், அங்கு நட்சத்திர ஆய்வுகளும் நடத்தப்பட்டன.

இங்கிலாந்தின் பூர்வ குடிகள், திறந்த வெளியில் சூரிய பூஜையை நடத்தினர். வேறு சில நாடுகளில் சூரியச் சிலைகள் அரசனின் உருவத்தில் அமைக்கப்பட்டன. அவற்றுக்குத் தலைக் கவசம், உடற் கவசம் மற்றும் காலணிகள் இருந்தன. நேபாளத்தில் இன்றும் சூரியக் கோயில்கள் உள்ளன. அங்கு முறைப்படி சூரிய வழிபாடு நடைபெறுகிறது.

இவ்விதம், பண்டைக்காலம் தொட்டே உலகின் பல்வேறு நாடுகளில், சூரிய வழிபாடு செய்யப்பட்டு வருகிறது என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் உண்மையாகும்.

எனவே நாளது பொங்கல் திருநாளை எழுச்சியுடன் கொண்டாடுவோம். இது தமிழர் திருநாள்! ஒவ்வொரு தமிழரின் இல்லத்திலும் மகிழ்ச்சியொளி வீச, சூரிய பகவான் திருவருள் பொழிவார்.

Source: www,dinamani.com

பொங்கல் பண்டிகை: ஏன்? எதற்கு?



"பொங்கல் பண்டிகை' என்றதுமே தமிழர்களின் நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சியில் தாண்டவமாடும். அந்த அளவுக்கு அனைத்துத் தரப்பினராலும் ஆனந்தத்தோடு கொண்டாடப்படுவது பொங்கல் திருநாள். இது தொடர்ச்சியாக நான்கு நாட்கள், நகரம் முதல் கிராமங்கள் வரை பரவலாகக் கொண்டாடப்படுகின்றது. எனினும் கிராமங்களில்தான் இந்தப் பண்டிகையில் கொண்டாட்டங்கள் அதிகம்.

போகி பண்டிகை

"போகி'யோடு தொடங்குகிறது பொங்கல் திருநாள். இந்திரனுக்கு "போகி' என்றொரு பெயர் உண்டு. எனவே இந்நாள், "இந்திர விழா'வாகவும் இருந்திருக்கக்கூடும். மழை பொழிய வைக்கும் கடவுள், வருணன். அவனுக்கு அரசனாகத் திகழ்ந்து இயக்குபவன் இந்திரன். வேதத்தில் இந்திரனை பற்றிய துதிகள் பல இடம் பெற்றுள்ளன.

மழை பெய்தால்தான் பயிர்கள் செழிக்கும்! உயிர்கள் வாழும்! எனவே பண்டைய நாட்களில் வருணனின் அதிபதியான இந்திரனை "போகி'யன்று பூஜிக்கும் வழக்கமிருந்தது. தற்போது, "பழையன கழிதலும், புதியன புகுதலும்' என்ற வகையில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழம் பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.

ஆனால் இப்போதெல்லாம் போகியன்று "டயர்'களைக் கொளுத்தும் மூடத்தனம், பரவலாக நடக்கின்றது. இதனால் வளி மண்டலம் மாசு படுவதோடு, மனிதர்களுக்கு நோயும் உண்டாகின்றன. ஏற்கெனவே சுவாசக் கோளாறு உள்ளவர்கள், டயர்கள் வெளியிடும் நச்சுப் புகையால் மேலும் பாதிப்புக்குள்ளாவார்கள். என்னதான் காவல் துறையினர் எச்சரித்தாலும், வீட்டுக்கு ஒரு காவலரையா நிறுத்த முடியும்? எனவே நாமே சமுதாயக் கட்டுப்பாடோடும், அறிவியல் விழிப்புணர்வோடும் இருந்து, நோய்கள் தரும் டயர் கொளுத்தும் வழக்கத்தினை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.

பொங்கல் பண்டிகை

ஆடிப் பட்டம் தேடி விதைப்பது தமிழர் மரபு. அவை தை மாதம் பிறப்பதற்கு முன் அறுவடையாகின்றது. அந்தப் புத்தரிசியை மண் பானையில் வைத்து (இதற்காகவே புதிய பானை வாங்கப்பட்டு, அதில் திருநீறும் குங்குமமும் இட்டு, அப்பானையை தெய்வீகமாகக் கருதுவது வழக்கம்) சர்க்கரைப் பொங்கல் செய்வது மரபு.

பெரும்பாலும் கிராமப்புறங்களில், வாசலிலே வண்ணக் கோலமிட்டு, அதன் நடுவே பொங்கல் பானையை வைத்து, பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கை இலையோடு கட்டி, மணம் பரப்பும் பொங்கல் சோறு பொங்கியெழும்போது, "பொங்கலோ பொங்கல்' என்று கூறி மகிழ்வார்கள். இப்படித் திறந்த வெளியில் பொங்கல் வைப்பதால், சூரிய பகவான் அதை நிவேதனமாக ஏற்று மகிழ்கிறார். இதற்காக கூடவே கரும்பும் வைத்து, கடவுளுக்குப் படைப்பார்கள்.

நகரங்களில் உள்ளோர், சமையலறையிலேயே பொங்கல் தயார் செய்துவிடுவார்கள். சந்து, பொந்துகளில்கூட வாகன நெரிசல் வளைத்துக் கட்டும்போது, சமையலறை பொங்கலே நகரங்களில் சாத்தியம். ஆயினும் "பால்கனி'யிலிருந்தோ, மொட்டை மாடியிலிருந்தோ அந்தப் பொங்கலை சூரியனுக்குப் படைத்து மகிழ்வார்கள்; தூபம், தீபம் காட்டி ஆதவனை ஆராதனம் செய்வார்கள். இங்கும் கட்டாயம் கரும்பு நிவேதனம், முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது.

கிராமங்களில் தீபாவளிக்கு புத்தாடை வாங்காது போயினும், பொங்கலுக்கு எப்படியும் புதிய ஆடைகளையே அணிவார்கள். நகரங்களில் ஏனோ தீபாவளியின் இடத்தை பொங்கல் பண்டிகை பிடிக்கவில்லை என்றுதான் தோன்றுகிறது. அது சரி, "மாடுகளை மேய்க்க மந்தைவெளி இங்கு இல்லையே' என்ற பாடல் வரிகள் கூறுவதும் நியாயம்தானே?

எது எப்படியோ... பொங்கல் பண்டிகை தரும் மகிழ்ச்சி, நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் பொதுவானதே!

மாட்டுப் பொங்கல்

கால்நடைகளே நமது நாட்டில் செல்வத்தின் அடையாளமாக ஒரு காலத்தில் திகழ்ந்தன. "ஆயிரம் பசுவுடைய கோ நாயகர்' என்ற பட்டப் பெயர்களெல்லாம் புழக்கத்தில் இருந்தன. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை.

அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் உறைவதாகப் பெரியோர்கள் கூறுகின்றனர். எனவே பசுவை வணங்குவதன் மூலம், அனைத்து தேவர்களின் ஆசிகளும் நமக்குக் கிடைக்கின்றன.

மாட்டுப் பொங்கலன்று பசுக்களுக்கு மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். அதன் பசிக்குத் தேவையான உணவையும் படைப்பர்.

காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "அங்க வஸ்திரம்' போர்த்தி, மரியாதை செய்வார்கள். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே! ஆனால் அக்காளைகளுக்கு செயற்கையான முறைகளில் வெறியூட்டுவது தவறு. தக்க மருத்துவர்களின் ஆலோசனைகளைக் கேட்டுப் பெற்று, அதன் வீரத்தை வளர்ப்பதே விவேகமான செயலாகும்.

திருவள்ளுவர் தினம்

மாட்டுப் பொங்கலன்று திருவள்ளுவர் தினமும் வருகின்றது. நாத்திகர்களாலும் மறுக்க முடியாத தெய்வப் புலவர் திருவள்ளுவர். கடவுள் வாழ்த்தோடு திருக்குறளைத் தொடங்கும் வள்ளுவப் பெருந்தகை, காதலுடன் அவ்வரிய நூலை நிறைவு செய்கின்றார்.

திருக்குறளில் சொல்லப்படாத விஷயமே இல்லை.

"உண்டது செரித்ததை உணர்ந்து உண்போர்க்கு மருந்தே தேவையில்லை' என்று அன்றே சொன்ன மருத்துவ வல்லுநர் திருவள்ளுவர். நீதி, நேர்மை, உண்மை, துறவு, அரச நீதி, காதல் என்று அவர் பாடாத விஷயமே இல்லை. திருவள்ளுவர் தினத்தன்று வள்ளுவர் கூறிய அறநெறிப் பாடல்களை நாமும் ஓதி, இளைய சமுதாயத்தினருக்கும் அவற்றின் பொருட்களை உணர்வித்தலே உண்மையான "வள்ளுவ பூஜை'யாகும். இந்நன்னெறியை தமிழர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

காணும்பொங்கல்

பெண்கள் தங்கள் சகோதரர்களின் நலனுக்காகச் செய்வது "கனு' பொங்கல். அன்று காலை நீராடி, வெறும் வயிற்றுடன், வெட்ட வெளியில் சூரியக் கோலமிட்டு, அதில் பொங்கல், கரும்பு போன்றவற்றை வைத்து, ஆதவனுக்கு அர்ப்பணிப்பார்கள்.

"காணும் பொங்கலும்' இந்த நன்னாளே! அன்று புத்தாடை அணிந்து சுற்றத்தாரையும், நண்பர்களையும் பார்த்து அளாவி மகிழ்வது வழக்கம். சிலர் இன்பச் சுற்றுலாவும் சென்று களிப்பர். ஒரு காலத்தில் எல்லாச் சந்தர்பங்களிலுமே சொந்தமும், நட்பும் அடிக்கடி சந்தித்து மகிழும் பண்பாடிருந்தது. இன்றைய "சீரியல்' உலகில், வீட்டுக்கு வரும் சிநேகங்களைப் பார்த்துச் சிரிப்பதுகூட அரிதாகிவிட்டது. இந்த அவல நிலையை மாற்ற இந்தக் காணும் பொங்கல் நாளில் சபதமேற்போம்!

வாழ்கின்ற ஒவ்வொரு நாளுமே திருநாளாக மலரட்டும்! ஜாதி, மத, இன, மொழி வேறுபாடுகள், "சூரியனை' கண்ட பனிபோல விலகட்டும்! அதற்கு அந்த ஆதவனே நல்வழி காட்டட்டும்! வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்! வாழிய பாரத மணித் திருநாடு!

Source: dinamani.com

Thursday, January 13, 2011

தலையங்கம்: நடக்க ஓர் இடமில்லையே...



சென்னை மாநகரக் காவல்துறைத் தரப்பிலிருந்து கிடைத்த புள்ளிவிவரப்படி, கடந்த பத்து ஆண்டுகளில் சாலை விபத்தால் ஏற்பட்ட மரணங்களின் எண்ணிக்கை பத்து மடங்காக அதிகரித்திருக்கிறது. சென்னை மாநகர மற்றும் புறநகர் காவல்துறை எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் மட்டும் கடந்த ஆண்டு 1,415 பேர் சாலை விபத்தில் பலியாகி இருக்கிறார்கள். தில்லிக்கு அடுத்தபடியாக மிக அதிகமான சாலை விபத்துகளும் மரணங்களும் இந்தியாவில், நமது சிங்காரச் சென்னையில்தான் நிகழ்கின்றன என்பது நாம் எந்த அளவுக்கு சாலைப் பாதுகாப்பில் கவனமாக இருக்கிறோம் என்பதைத்தான் காட்டுகிறது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் சென்னையில் வாகன எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வாகன எண்ணிக்கை அதிகரிப்பு போலவே சாலைகளில் போக்குவரத்து விதிமீறல்களும் அதிகரிப்பதில் வியப்பொன்றும் இல்லை. சாலை விபத்தில் 30 சதவீதம் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதாலோ, சாலையைக் கடப்பதாலோ ஏற்படுவதாக ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. வீதிதோறும் "டாஸ்மாக்'கால் ஆன உதவி!

நாளொன்றுக்கு சுமார் 1,000 புதிய வாகனங்கள் சென்னை மாநகர வீதிகளில் புதிதாக வலம் வரத் தொடங்குவதாக இன்னொரு புள்ளிவிவரம் கூறுகிறது. ஆகஸ்ட் மாதக் கணக்கின்படி, சென்னை நகர வீதிகளில் புறநகர் பகுதிகளையும் சேர்த்து, 24,35,000 இருசக்கர வாகனங்கள் வலம் வந்து கொண்டு இருக்கின்றன. கார்களின் எண்ணிக்கை 5,31,000. ஆட்டோ ரிக்ஷாக்கள் 52,000. டெம்போ வேன்கள் 24,000. மாநகரப் போக்குவரத்து பஸ்கள் 3,500. பள்ளி வாகனங்கள் 2,500. இதுதவிர, தனியார் கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றுக்காக ஓடும் வாகனங்கள் என ஏனைய வாகனங்களின் எண்ணிக்கை 83,350.

இப்படி ஏறத்தாழ 31,32,000 வாகனங்கள் சென்னை மாநகரத் தெருக்களில் வலம் வரும்போது விபத்துகள் ஏற்படாமல் என்ன செய்யும்? இந்த வாகனங்களில் 70 சதவீத வாகனங்கள் காலையிலும் மாலையிலும் அலுவலக நேரங்களுக்காக சாலையை அடைத்துக் கொள்ளும்போது அதிலிருந்து வெளியாகும் புகையும், அதனால் ஏற்படும் சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகளும் இன்னொரு தனிக்கதை.

நகர்ப்புற வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாதது என்பது மறுக்க முடியாததாக இருக்கலாம். ஆனால், ஒரு நாடு வளர்ச்சிப் பாதையில் செல்லும்போது அந்த வளர்ச்சி சமச்சீர் வளர்ச்சியாக இருப்பதையும், அந்த வளர்ச்சிக்கு ஏற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதையும் உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பு அரசுக்கு உண்டு. நாளைய நிலைமையை உணர்ந்து திட்டமிடத் தெரியாதவர்களின் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு, நாற்சந்தியில் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கும் பரிதாப நிலைக்கு மக்கள் இப்போது தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

குறிப்பாக, சென்னை நகரத்தையும் அதன் புறநகர்ப் பகுதிகளையும் பொறுத்தவரை அடிப்படையாக இரண்டு முக்கியமான பிரச்னைகளில் நமது நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் கோட்டைவிட்டிருக்கிறது. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, புரசைவாக்கம், மாம்பலம், ஜார்ஜ் டவுன் போன்ற புராதனமான சென்னை நகரின் தெருக்களை அகலப்படுத்துவது என்பது வேண்டுமானால் இயலாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், புறநகர்ப் பகுதிகளில்கூட குறைவான திட்டமிடுதலுடன்கூடிய நடைமேடையே இல்லாத குறுகலான சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறதே, அது யார் செய்த தவறு? அதைக்கூட உறுதிப்படுத்த ஏன் நமது சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் தவறியது?

இரண்டாவதாக, தெருக்கள், சாலைகள் என்பவை வாகனங்களுக்காக மட்டும் அமைந்தவை அல்ல. சாலை அமைக்கும்போது முன்னுரிமை பாதசாரிகளுக்கு அளிக்கப்பட வேண்டும். உலகிலுள்ள வளர்ச்சியடைந்த நாடுகளில் எல்லாம் பாதசாரிகள் செல்லும் நடைமேடை குறைந்தது 10 அடி அகலமாவது இருக்கும். இங்கே ஐந்தடி நடைபாதையை ஒரு சில இடங்களில் மட்டும் அமைத்துவிட்டு அதையும் தெருவோர வியாபாரிகளும் நடைபாதைக் கோயில்களும் ஆக்கிரமித்துக்கொள்ள அனுமதிக்கிறது மாநகராட்சியும் அரசும்.

பாதசாரிகள் சாலையைக் கடக்க ஆங்காங்கே ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறதா என்றால் அதுவும் கிடையாது. பாதசாரிகள் சுலபமாகத் தெருவைக் கடக்க ஆங்காங்கே சுரங்கப் பாதைகளையாவது அமைக்கிறார்களா என்றால் இல்லை.

இன்றைய வாகன ஓட்டி, நேற்றைய சாலைகளில் தனது வாகனத்தை ஓட்ட வேண்டிய அவலம். நகரின் மையப் பகுதியையும் முக்கியமான மூன்று சாலைகளையும் தவிர, சென்னைநகரத்தில் உள்ள சாலைகளின் நிலைமையை சேர, சோழ, பாண்டியர் காலத்திய சாலைகளுடன் ஒப்பிடலாம். மாட்டுவண்டிகளும், குதிரைகளும் பயணிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட சாலைகளைப் போலல்லவா மேடும் பள்ளமுமாக இவை காட்சியளிக்கின்றன. இதன் மூலம் தனியார் மோட்டார் வாகன உற்பத்தியாளர்களுக்கு உதிரி பாகங்களின் விற்பனையை அதிகரிக்க அரசு மறைமுகமாக உதவுகிறதோ என்றுகூட சந்தேகம் ஏற்படுகிறது.

தனியார் கல்லூரிகளும், தனியார் நிறுவனங்களும், தனியார் பள்ளிகளும் இயக்கும் பஸ்கள் சென்னை நகரச் சாலைகளை அலுவலக நேரங்களில் ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டு விடுகின்றனவே, இவைகளை முறைப்படுத்துவது பற்றி அரசு எப்போதாவது யோசித்திருக்கிறதா? சென்னையைப் புகைமண்டலமாக்கும் இந்த வாகனங்கள் தில்லியில் இருப்பதுபோல எரிவாயுவில்தான் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியமாவது ஒரு கோரிக்கை எழுப்ப வேண்டாமா?

வாகனங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும். சாலைகளின் தரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பாதசாரிகள் நடமாடவும், சாலையைக் கடக்கவும் முன்னுரிமையுடன் வழிகோல வேண்டும். தனியார் பஸ்கள் எரிவாயுவில் இயங்குவது கட்டாயமாக்கப்பட வேண்டும். குறைந்த கட்டணத்தில் வசதிகளுடன்கூடிய பொதுப்போக்குவரத்து அதிகரிக்கப்பட வேண்டும். இதையெல்லாம் செய்தால் மட்டுமே சாலை விபத்துகளும் குறையும். சென்னையும் சிங்காரச் சென்னையாகும்!

நாயும் பிழைக்கும் இந்த பிழைப்பு

தினம் ஓரு ஊழல்!


மானங்கெட்ட பிழைப்பு - விவஸ்தை கெட்ட அரசியல்

நன்றாக சிந்தித்துப் பார்க்க வேண்டும்


Courtesy: Dinamani

இணைந்த கைகள்

ஊழல் அரசியல்!


ஊழல் அரசியல்!
courtesy: Dinamani

1.7.2010 முதல் செயல்படுத்தப்படும் தென்னக இரயில்வேயின் புதிய கால அட்டவணை மற்றும் புதிய,நீட்டிக்கப்பட்ட இரயில்களின் பட்டியல்(southern railway new timeta