Saturday, June 4, 2011
வரவேற்கிறோம் தயாநிதி மாறன்...
சென்னை, ஜூன் 3: "தூங்குகிறது சிபிஐ அறிக்கை' (தினமணி, ஜூன் 2, 2011) என்ற செய்தி முழுக்க முழுக்க தயாநிதி மாறனின் வீட்டு தொலைபேசி இணைப்பகம் குறித்த சிபிஐ-யின் ரகசிய அறிக்கையை பிரதானமாகக் கொண்டு வெளியிடப்பட்டது. அதில் முக்கியமானது சுமார் ரூ. 440 கோடி இழப்பானது திருட்டுத்தனமாக பயன்படுத்தப்பட்ட 323 ஐஎஸ்டிஎன் இணைப்புகளால் ஏற்பட்டது என கணக்கிடப்பட்டுள்ளது. எனவே "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமம் மீது தயாநிதி மாறன் வெளிப்படுத்தியுள்ள கோபம் நகைப்புக்குரிய கேலிக்கூத்தாகும்.
தயாநிதி மாறனின் தவறுகளைச் சுட்டிக்காட்டி சிபிஐ அளித்த அறிக்கையை யாருமே மறுக்க முடியாது. ஏனென்றால் சிபிஐ-யும் அரசு அமைப்புதான். இரண்டாவதாக இந்த விசாரணையை சிபிஐ தானாகவே மேற்கொண்டு நடத்தியுள்ளது. எனவே அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தயாநிதி மாறனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்று இதைக் கூற முடியாது.
மூன்றாவதாக, மத்திய அரசின் சிபிஐ அறிக்கைக்கு பதில் அளிக்காமல், அறிக்கையை பட்டவர்த்தனமாக வெளியிட்ட தினமணி மீது குற்றம் காண்கிறார் தயாநிதி மாறன்.
தான் குற்றமற்றவர் என்பதற்கு ஆதாரமாக பிஎஸ்என்எல் சென்னை தொலைபேசி பொதுமேலாளர் வி. மீனலோசனி 6-4-2009-ல் அளித்த கடிதத்தைக் காட்டுகிறார் தயாநிதி மாறன்.
இந்தக் கடிதம் தயாநிதி மாறன் எழுதி அனுப்பி பெறப்பட்ட பதில் கடிதமாகும். பிஎஸ்என்எல் கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்பு மட்டும் தயாநிதி மாறனின் போட் கிளப் வீட்டிற்கு அளிக்கப்பட்டுள்ளது; அந்த தொலைபேசி எண் 24371500 ஐஎஸ்டிஎன்-பிஆர்ஏ என்றும் வேறு எந்த பிஎஸ்என்எல் இணைப்பும் இதுவரை அளிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மூன்றாவதாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 4,50,000 அலகுகள் வரை மூன்று ஆண்டுகளுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ளலாம் என்றும் அதில் மூன்றில் ஒரு பகுதி அளவுக்கே அவர் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது அவர் பயன்படுத்திய கோடிக்கணக்கான அழைப்புகளோடு ஒப்பிடுகையில் மிக மிகக் குறைவானது. இந்த கடிதத்தின்படி ஒரு எம்.பி.-க்கு அனுமதிக்கப்படும் தொலைபேசி அழைப்புகளின் அளவுக்குக் குறைவாக அவர் பயன்படுத்தியுள்ளார் என்பதே அது. மீனலோசனியின் கடிதத்தின் அடிப்படையில் தினமணியில் குறிப்பிட்டபடி அவரது வீட்டில் நிறுவப்பட்ட 323 பிஎஸ்என்எல் இணைப்புகளும் தவறு என்பதாகும். அது தவறா, சரியா என்பதை இப்போது பார்க்கலாம்.
சிபிஐ அறிக்கையின்படி குறிப்பிட்ட 323 பிஎஸ்என்எல், ஐஎஸ்டிஎன் இணைப்புகளும் தயாநிதி மாறனின் போட்கிளப் வீட்டில் நிறுவப்பட்டது. ஆனால் மீனலோசனியின் கடிதத்தில் ஒரே ஒரு இணைப்பு அதாவது 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டும் வழங்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. வேறெந்த இணைப்பும் வழங்கப்படவில்லை என அவர் கூறுவது உண்மையல்ல. இதைக் காட்டி தப்பிக்க நினைக்கும் தயாநிதி மாறனின் திட்டமும் இதனால் தகர்ந்துவிட்டது. மீனலோசனியின் கடிதமும் தவறானது.
சென்னை தொலைபேசி டைரக்டரியில் விவரம் அறிய ட்ற்ற்ல்://210.212.240.244:8181/ஸ்ரீண்ல்க்வ்.ஹள்ல்ஷ் என்ற முகவரி உள்ள இணையதளத்திற்குச் சென்று தயாநிதி மாறன் எம்.பி. என்று டைப் செய்தாலே உங்களுக்கு பின்வரும் விவரங்கள் கிடைக்கும். தொலைபேசி எண் 24371515, தயாநிதி மாறன் எம்.பி., 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை-600 028 என்ற முகவரி கிடைக்கும். தொலைபேசி டைரக்டரியில் குறிப்பிட்டுள்ள தொலைபேசி எண் 24371515 என்றிருப்பதைக் காணலாம். ஆனால் மீனலோசனி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருப்பது 24371500 என்ற தொலைபேசி எண்ணைப் பற்றிய விவரம்தான். ஆனால் அவர் 24371515 என்ற மாறன் வீட்டு தொலைபேசி எண்ணைப் பற்றி குறிப்பிடவில்லை.
இதே இணைய பக்கத்தில் சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற எண்ணுடன் தயாநிதி மாறனின் போட் கிளப் முகவரியைப் பதிவு செய்தால் உங்களுக்கு தொலைபேசி எண் 24371500, சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ், வீட்டு முகவரி 3/1, போட் கிளப், முதல் அவென்யூ, ராஜா அண்ணமலைபுரம், சென்னை - 600 028 என்ற விவரம் இருக்கும். இதிலிருந்தே ஒரே ஒரு பிஎஸ்என்எல் இணைப்புதான் மாறன் வீட்டுக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பது தவறான தகவல் என்று தெரியவருகிறது.
24371500 என்ற தொலைபேசி எண் தயாநிதி மாறனின் வீட்டில் இல்லை, அது சிஜிஎம் சென்னை டெலிபோன்ஸ் என்ற பெயரில் செயல்பட்டுள்ளது. இதன்படி தயாநிதி மாறனின் வீட்டில் இன்று வரை செயல்படும் தொலைபேசி எண் 24371515. இதுவே மீனலோசனி கடிதத்தில் குறிப்பிடும் 24371500 என்ற எண் கொண்ட தொலைபேசி இணைப்பு மட்டுமே தயாநிதி மாறனின் வீட்டில் செயல்படுவதாகக் குறிப்பிடும் கடித தகவல் தவறு என்பதை நிரூபிக்க போதுமானது.
24371515 என்ற தொலைபேசி எண்ணானது சாதாரண தொலைபேசி எண் அல்ல. இந்த எண்ணிலிருந்து மேற்கொள்ளப்பட்ட தொலைபேசி அழைப்புகளை சிபிஐ பட்டியலிட்டுள்ளது.
சோதனை அடிப்படையில் சிபிஐ மேற்கொண்ட ஆய்வில் 48,72,027 அலகு தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 24371515 என்ற தொலைபேசி எண்ணிலிருந்து 2007-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இத்தனை அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதிலிருந்தே எந்த அளவுக்கு மல்டி-மீடியா தகவல் பரிமாற்றம் இந்த இணைப்பு மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பதை உணரலாம்.
48 மணி நேரத்திற்குள் தயாநிதி மாறனுக்கு பதில் அளிக்க வேண்டும் என்ற நிர்பந்தம் காரணமாக கடிதம் தயாரித்த மீனலோசனி, தொலைபேசி எண் 24371515 என்ற எண்ணை முற்றிலுமாக மறந்திருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இந்த எண்ணை சிபிஐ ஆய்வுக்குள்படுத்தியுள்ளது என்பதை அவர் ஒப்புக்கொண்டு அதை விட்டிருக்கலாம்.
மேலும் இந்த எண் புழக்கத்தில் உள்ளது என்ற விவரம் சென்னை டெலிபோன்ஸ் இணையதளத்தில் இன்றளவும் உள்ளது. இருப்பினும் இது விடுபட்டு போனது எப்படி? ஏனெனில் இந்த எண் குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டுள்ளது என்பதாலா? மேலும் பார்க்கலாம்.
"2437' என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணில் தொடங்கும் தொலைபேசி இணைப்பகத்தை சிபிஐ முதலில் கண்டறிந்து, 323 லைன்களைக் கொண்ட சிறிய தொலைபேசி இணைப்பகமே தயாநிதி மாறனின் வீட்டில் ஏற்படுத்தப்பட்டு, ரகசிய புதைகேபிள் மூலம் சன் டிவி அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருந்ததை கண்டுபிடித்தது.
சென்னை டெலிபோன்ஸில் உள்ள மொத்த 323 இணைப்புகளும் மொத்தம் 2437 என்ற பொதுவான நான்கு இலக்க எண்ணைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஒருவேளை மீனலோசனியின் வாதம் சரி என்று ஏற்றுக் கொண்டால், சென்னை வட்டார தொலைபேசி எண்கள் அனைத்துமே 2437 என்ற எண்ணில் தொடங்குவதாக இருக்கும். தயாநிதி மாறனுக்கு மட்டும் ஏன் இப்படி பிரத்யேக, தனிப்பட்ட எண் வழங்கப்பட்டது? அதற்கான காரணத்தை மீனலோசனிதான் விளக்க வேண்டும்.
அல்லது அவரது கடிதத்தை தனது வாதத்திற்கு வலுசேர்க்கும் தயாநிதி மாறன்தான் விளக்கி, தான் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும்.
மேலும் மீனலோசனி இப்போது நிர்வாகப் பிரிவு பொதுமேலாளர் அல்ல, ஆனால் அவர் இன்னமும் சென்னை டெலிபோன்ஸில் உள்ளார். அவரைத் தொடர்பு கொள்ள மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தயாநிதி மாறனின் ஆலோசனையால் ஈடேறவில்லை. குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும் வீணாகிப்போனது.
மேலும் சிபிஐ அறிக்கையில் 2437 எனத் தொடங்குவதில் 23 இணைப்புகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் முதல் நான்கு இலக்கங்கள் பின்வரும் எண்களில் அதாவது 2211 முதல் 2213 வரை (3 இணைப்புகள்); 2222; 2233; 2244 முதல் 2246 வரை (3 லைன்); 2255 முதல் 2257 வரை (3 லைன்); 2266 முதல் 2268 வரை (3 லைன்); 2277 முதல் 2279 வரை (3 லைன்); 2288 முதல் 2290 வரை (3 லைன்); 2290; 2299; 2300; 2301; இதன்படி மொத்தம் 300 தொலைபேசி எண்கள் 2437 என்ற முதல் நான்கு இலக்கங்களில் தொடங்கும். மேலும் இந்த நான்கு இலக்கங்களில் தொடரும் பிற எண்கள் 1500-ல் தொடங்கி 1799-ல் 300 இணைப்புகள் முடியும். இந்த எண்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தவில்லை. காரணம் அவை ஏற்கெனவே புழக்கத்தில் உள்ளன.
ஆனால் அவை எங்கே இருக்கின்றன? தயாநிதி மாறன் 24371515 என்ற தொலைபேசி எண்ணை மறந்தது எப்படி? அது தயாநிதி மாறன் எம்.பி. பெயரில்தானே போட்கிளப் வீட்டு முகவரியில் மார்ச் 2007 முதல் உள்ளது.
இந்த இணைப்பு மூலம் 48 லட்சம் அலகுகள் தொலைபேசி அழைப்புகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதை அவர் பயன்படுத்தியிருக்க முடியாது. அதை சன் டிவி பயன்படுத்தியிருக்கிறது என சிபிஐ குறிப்பிட்டுள்ளது. இதை மாறன் கவனிக்கவும்.
இனி, தயாநிதி மாறன் தாராளமாக "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் மீது வழக்குப் பதிவு செய்யலாம். ஆனால் அது அவரது பதவிக்கு சரியான படிப்பினையை அளிக்கும். உண்மையை மறைக்க முற்படாமல் மெளனமாக இருப்பதுதான் அவருக்கு நல்லது.
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=426922&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
Friday, June 3, 2011
தலையங்கம்: முதலில் பதவி விலகுங்கள்...
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் முறைகேடு, ராணுவ வீரர்களுக்காக அடுக்குமாடிக் குடியிருப்புகளைக் கட்டுகிறோம் என்கிற சாக்கில் அரசியல்வாதிகளின் பினாமிகள் அரங்கேற்றி இருக்கும் அதிகார துஷ்பிரயோகங்கள் என்று இந்த வரிசையில் சேர்ந்து கொள்கிறது மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் மீது எழுப்பப்பட்டிருக்கும் தொலைபேசி இணைப்பு மோசடிக் குற்றச்சாட்டு.
தங்களது நிறுவனத்தின் சார்பில் ஒரு சட்டப் பிரிவும், அதில் சில வழக்குரைஞர்கள் ஊழியர்களாகவும் இருப்பதால், எந்தப் பத்திரிகை தங்களைப் பற்றிய செய்திகளை வெளியிட்டாலும் உடனே வக்கீல் நோட்டீஸ் அனுப்புவதும், மான நஷ்ட வழக்குப் போட்டு அந்தப் பத்திரிகையாளரை நீதிமன்றத்தின் கூண்டிலேற்றுவதாகப் பயமுறுத்துவதும் சன் குழுமத்துக்கு வாடிக்கையாகிவிட்டது.
சக பத்திரிகையாளர்களையும், தொலைக்காட்சிச் சேனல்களையும் மிரட்டியும், பயமுறுத்தியும் பணிய வைக்கும் முயற்சியில், ஒரு அமைச்சரே ஈடுபடும்போது அதை வாய் பொத்திக் கைகட்டி வேடிக்கை பார்ப்பது என்பது பத்திரிகை தர்மத்துக்கே அடுக்காது என்பதால் தலையங்கம் தீட்டி பதிலளிக்க வேண்டிய நிர்பந்தம் நமக்கும் ஏற்பட்டிருக்கிறது.
அன்றைய மத்திய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இன்றைய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் தயாநிதி மாறன் இருந்தபோது, தனது சென்னை போட் ஹவுசிலுள்ள வீட்டிலிருந்து சன் தொலைக்காட்சித் தலைமையகத்தைத் தொலைபேசி மூலம் இணைத்து, அந்தத் தனியார் சேனலின் பயன்பாட்டுக்கு அமைச்சரின் பெயரிலான தொலைபேசி முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டது என்பது குற்றச்சாட்டு. இதற்காக 3.4 கி.மீ. தூரத்துக்கு ரகசியமாக சாலைக்கடியில் கேபிள் இணைப்பு கொடுக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஏறத்தாழ 323 பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகள் ஒரு குட்டி தொலைபேசி இணைப்பகம்போல, தனது குடும்பத் தொலைக்காட்சி மற்றும் பத்திரிகையின் பயன்பாட்டுக்காக அன்றைய தகவல் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தயாநிதி மாறனால் முறைகேடாக உபயோகப்படுத்தப்பட்டன என்கிற குற்றச்சாட்டு 2009 தேர்தலின்போதே எழுப்பப்பட்டது. அமைச்சர் அதிபுத்திசாலித்தனமாக, பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் ஒருவரிடமிருந்து, அமைச்சரின் பெயரில் ஒரு தொலைபேசி மட்டுமே இயங்குவதாக ஒரு கடிதம் எழுதி வாங்கி வெளியிட்டு பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்பட்டார்.
அத்துடன் முடிந்தது என்று அமைச்சர் தயாநிதி மாறன் நினைத்த விஷயம் இப்போது விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. இதற்குக் காரணம், "தினமணி'யோ, பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தியோ அல்ல.
2007-ம் ஆண்டு தயாநிதி மாறனின் தகவல் தொலைத் தொடர்பு அமைச்சர் பதவி பறிக்கப்பட்ட பிறகு, அவரது இடத்தைப் பிடித்த ஆ. ராசாதான் இந்தப் பிரச்னை இப்போது பூதாகரமாக வடிவம் எடுத்திருப்பதற்குக் காரணம் என்பது தயாநிதி மாறனுக்கும் சன் குழுமத்துக்கும் தெரியாதா, இல்லை, அவர்களது தாத்தாவான திமுக தலைவர் கருணாநிதிக்குத்தான் தெரியாதா?
தயாநிதி மாறனுக்குப் பிறகு மத்திய தகவல் தொலைத் தொடர்பு அமைச்சராகப் பதவி ஏற்ற ஆ. ராசாவின் பரிந்துரையின் பேரில்தானே, ஜூன் 2004 முதல் ஜூன் 2007 வரையில் அமைச்சர் என்ற முறையில் தயாநிதி மாறனின் செயல்பாடுகளுக்குப் பயன்பட்ட தொலைபேசி இணைப்புகள் பற்றிய விசாரணையை மத்தியப் புலனாய்வுத் துறையினர் (சி.பி.ஐ.) முடுக்கிவிட்டனர். 2007 செப்டம்பர் மாதம் 10-ம் தேதி சிபிஐயின் சிறப்பு ஆணையர் எம்.எஸ். சர்மாவின் கையொப்பத்துடன் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
323 தொலைபேசி இணைப்புகளைத் தனது குடும்ப நிறுவனமான சன் குழுமத்துக்காக அன்றைய அமைச்சர் தயாநிதி மாறன் முறைகேடாகப் பயன்படுத்தியதாகவும், இதனால் அரசுக்குப் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த அறிக்கையின் மீது அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைப்பதாகவும் மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை குறிப்பிடுகிறது.
இப்போதைய கேள்வி, தயாநிதி மாறன் தொலைபேசி இணைப்புகளை முறைகேடாகப் பயன்படுத்தினாரா, இல்லையா என்பதல்ல. மத்தியப் புலனாய்வுத் துறையின் அறிக்கை கடந்த நான்கு ஆண்டுகளாகத் தூங்குகிறதே அது ஏன் என்பதுதான்.
தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், முறைகேடுகளில் ஈடுபடவில்லை என்றும் தயாநிதி மாறன் கூறுவது உண்மையானால், முதலில் தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விசாரணைக்குத் தயாராகட்டுமே... பத்திரிகையாளர்களை நீதிமன்றத்தின் பெயராலும், மான நஷ்ட வழக்கு போடுவேன் என்றும் மிரட்டுவதை விட்டுவிட்டு, நீதி விசாரணைக்கு தயாநிதி மாறன் தயாராகத் துணியட்டுமே...
அவர் தயாராகிறாரோ இல்லையோ, அவரை அமைச்சரவையில் இருந்து அகற்றி, சிபிஐயின் அறிக்கை மீது அடுத்தகட்ட நடவடிக்கையைத் தொடர வேண்டிய கடமை பிரதமருக்கு உண்டு. "சட்டம் தனது கடமையைச் செய்யும்' என்கிற பிரதமரின் கூற்று உண்மையானால், நான்கு ஆண்டுகளாகத் தூங்கிக் கொண்டிருக்கும் சிபிஐயின் அறிக்கை தூசு தட்டப்பட்டு, நீதி நிலைநாட்டப்படட்டும்!
Wednesday, June 1, 2011
தயாநிதி மாறனால் இழப்பு ரூ.440 கோடி? "தூங்குகிறது சி.பி.ஐ. அறிக்கை'
சென்னை, ஜூன் 1: நினைத்தாலே அதிர்ச்சிதரத்தக்க துணிகரமான கொள்ளை! தமிழ்நாட்டைச் சேர்ந்த மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் 323 தொலைபேசிகளைத் தன்னுடைய வீட்டோடு இணைக்குமாறு பி.எஸ்.என்.எல்.லைப் பணிக்கிறார். இது எங்கே நடந்தது தில்லியிலா, இல்லையில்லை சென்னையிலேயேதான். இந்த 323 இணைப்புகளும் அமைச்சரின் பெயரில் அல்ல சென்னை பி.எஸ்.என்.எல். பொது மேலாளர் பெயரிலேயே இணைக்கப்படுகின்றன.
இவை வெறும் 323 தொலைபேசி இணைப்புகள் அல்ல - இவை ஒரு தொலைபேசி இணைப்பகமே; இந்த இணைப்பகம் அமைச்சர் குடும்பத்து வியாபார நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக 3.4 கிலோ மீட்டர் நீளத்துக்கு பொது வீதியில் "ரகசியமாக' கேபிள்கள் பதிக்கப்பட்டுள்ளது. வீட்டிலிருந்து குடும்பத்து வர்த்தக நிறுவனத்துக்கு இணைப்பு தரப்பட்டிருக்கிறது. இதனால் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு.
பொதுச் சொத்துகளைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட அந்த புத்திசாலியான அமைச்சர் யார்? அலைக்கற்றை ஊழலில் சிக்கி பெயரையும் புகழையும் இழந்திருக்கிறாரே அந்த ஆ. ராசாவா? இல்லையில்லை, இன்னமும் மத்திய அமைச்சராகப் பெயருடனும் புகழுடனும் வலம் வருகிறாரே அந்த தயாநிதி மாறன்தான் அவர். ஆ. ராசாவுக்கும் முன்னதாக அந்தத் துறையை வகித்துவந்தார், இப்போது ஜவுளித்துறையில் அமைச்சராக இருக்கிறார்.
அவருடைய இந்த இணைப்பக ஊழலை விசாரித்த மத்தியப் புலனாய்வுக் கழகம் (சி.பி.ஐ.) இந்த மோசடிக்காக தயாநிதி மாறன் மீது நடவடிக்கை எடுக்குமாறு மத்தியத் தகவல் தொடர்புத்துறை செயலருக்கு 10.9.2007-ல் கடிதம் எழுதியது. இந்தக் கடிதம் ஒரு பெட்டிச் செய்தியாகவும் சி.பி.ஐ. அறிக்கையின் சாரம் தனிச் செய்தியாகவும் தரப்பட்டுள்ளது. படியுங்கள், படியுங்கள் படித்துக்கொண்டே இருங்கள்.
323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் பொழுதுபோக்குக்காக வைத்துக் கொள்ளவில்லை. சென்னையில் தான் வசித்த போட்கிளப் சாலை வீட்டிலிருந்து அண்ணா சாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள சன் டி.வி. அலுவலகம் வரையிலும் தன்னுடைய குடும்ப நிறுவனத்தின் பயன்பாட்டுக்காகத் தனிப்பட்ட முறையில் தொலைபேசி இணைப்புக் கேபிள்களைப் பதித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய வீட்டுடனான 323 தொலைபேசி இணைப்புகளையும் மோசடியாக தன்னுடைய சகோதரர் கலாநிதி மாறனின் சன் டி.வி. குழுமத்தின் டி.வி. நிகழ்ச்சி ஒளிபரப்புகளுக்குப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
இந்த 323 இணைப்புகளில் முதல் 23 இணைப்புகள் 24372211 முதல் 24372301 வரையிலான எண்ணில் செயல்பட்டவை. அடுத்த 300 இணைப்புகள் 24371500 முதல் 24371799 வரையிலானவை. எல்லா தொலைபேசிகளும் 2437 என்ற எண்ணுடன் தொடங்கியதால் 323 இணைப்புகளும் ஒரே தொலைபேசி இணைப்பகத்தைச் சேர்ந்தவையாகச் செயல்பட்டன. 2007 ஜனவரி முதல் பல மாதங்களுக்கு இந்த இணைப்பகம் சன் குழுமத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது.
இவை சாதாரண தொலைபேசி இணைப்புகள் அல்ல; விலைமதிப்புள்ள ஐ.எஸ்.டி.என். இணைப்புகளைக் கொண்டவை. செயற்கைக் கோள்களைவிட அதிக விரைவாக உலகின் எந்தப்பகுதியிலிருந்தும் எந்தப் பகுதிக்கும் செய்திகளையும் படங்களையும் விடியோ காட்சிகளையும் நொடிக்கணக்கில் கொண்டுபோய்ச் சேர்க்கும் அதிநவீன தகவல் தொடர்பு இணைப்புகளாகும்.
டிஜிடல் வழியிலான தகவல்களைக் கொண்டுபோய்ச் சேர்க்கவும் விடியோ கான்ஃபரன்சிங் சேவை அளிக்கவும் ஆடியோ, விடியோ சேவைகளை அளிக்கவும் வல்லவை இந்த இணைப்புகள். சுருக்கமாகச் சொன்னால் சன் குழுமத் தொலைக்காட்சி நிறுவனங்கள் வெகு திறமையாகச் செயல்பட பெரும் பங்காற்றியவை.
இதை சன் குழுமம் தனிப்பட்ட முறையில் வாடகைக்கு அமர்த்தியிருந்தால் கோடிக்கணக்கான ரூபாய்கள் இதற்காகச் செலவிட வேண்டியிருந்திருக்கும். ஆனால் அமைச்சரின் அபாரமான உத்தியால் இவை அனைத்தும் நயா பைசா செலவில்லாமல் முழுக்க முழுக்க இலவசமாகவே குடும்ப வியாபாரத்துக்குப் பயன்படுத்தப்பட்டன.
இது அமைச்சரின் சொந்த உபயோகத்துக்காக மட்டுமே ஏற்படுத்தப்பட்ட இணைப்பகம் என்று பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் ஒரு சில ஊழியர்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாதவண்ணம் மிகமிக ரகசியமாக இது வைக்கப்பட்டிருந்தது என்று இந்த விவகாரத்தை விசாரித்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் தெரிவிக்கிறது.
மேலோட்டமாகப் பார்க்கும்போது பி.எஸ்.என்.எல். தொலைபேசி இணைப்புகளை அமைச்சர் தன்னுடைய வீட்டில் பயன்படுத்தியதைப்போலத் தோற்றம் அளிக்கும். ஆனால் இந்த இணைப்புகள் அனைத்தும் நீட்டிக்கப்பட்ட கேபிள்கள் வழியாக அமைச்சருடைய குடும்ப நிறுவனத்தின் வர்த்தக நோக்கத்துக்குப் பயன்பட்டன என்று சி.பி.ஐ. சுட்டிக்காட்டியுள்ளது.
கூகுள் மேப் சேவை மூலம் இந்தத் தொலைவைக் கணக்கிட்டபோது அது மொத்தம் 3.4 கிலோ மீட்டர் என்று காட்டுகிறது. நகரின் மையப் பகுதியில் பெரிய சாலைகள் வழியாக இந்த கேபிள் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இதை ரகசியமான மோசடி என்று சொல்ல முடியாது, பகிரங்கமாக நடத்தப்பட்ட ரகசிய மோசடி என்றே கருத வேண்டும்.
இதனால் அரசுக்கு ஏற்பட்ட நஷ்டம் எவ்வளவு? மலைக்கவைக்கும் இந்தக் கணக்கையும் சி.பி.ஐ.யே ஒரு மாதிரிக்கு போட்டுக் காட்டியிருக்கிறது. 24371515 என்ற ஒரு தொலைபேசி மூலம் மட்டும் 2007 மார்ச் மாதத்தில் மட்டும் 48 லட்சத்து 72 ஆயிரத்து 27 யூனிட்டுகள் அளவுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதாவது ஒரே ஒரு தொலைபேசி மூலம் ஒரு மாதத்துக்கு சராசரியாக 49 லட்சம் யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அப்படியானால் 323 இணைப்புகள் வாயிலாக எத்தனை லட்சம் - இல்லையில்லை - கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும்.
2007 ஜனவரி முதல் ஏப்ரல் வரையில் 629.5 கோடி யூனிட்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கும் என்று சராசரி கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஒரு யூனிட்டுக்கு 70 பைசா என்ற கணக்கில் பார்த்தால் பி.எஸ்.என்.எல்லுக்கு இதன் மூலம் ரூ.440 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்கிறது சி.பி.ஐ. இதையே சி.பி.ஐ. மதிப்பிடாமல் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் கணக்கிட்டால் இன்னமும் துல்லியமாக - ரூ.440 கோடியைவிட - அதிகமாக இருக்கக்கூடும். கதை இத்தோடு முடியவில்லை.
இந்த இணைப்புகள் சன் டி.வி. குழுமத்தோடு நிற்கவில்லை; அதன் சகோதர நிறுவனமான தினகரன் நாளிதழின் மதுரை அலுவலகப் பதிப்புக்கும் பயன்பட்டிருக்கிறது, அந்த தொலைபேசி இணைப்புகள் குறித்து துல்லியமான விவரங்கள் கிடைக்காவிட்டாலும் பயன்பாடு குறித்து தகவல்கள் கிடைத்துள்ளன என்கிறது சி.பி.ஐ. அறிக்கை.
2 ஜி ஊழல் விவகாரம்: தயாநிதி மாறனுக்கு பாஜக 4 கேள்விகள்
புது தில்லி, மே 31: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு பாஜக நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் இப்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. இது தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு அவர் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆனால் பாஜகவை பொறுத்தவரை, தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அமைச்சரிடம் விளக்கம் கோருவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார். 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது மத்திய அரசு, இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகளை மாற்றி 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தமிழகத்தில் இருந்து ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு சர்க்களில் தனது பணியை தொடங்கி செயல்பட்டு வந்ததாகவும், பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 சர்க்கிள்களில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அது குறித்து பாஜக இந்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்.
மலேசியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மாக்சிஸ் கம்யூனிகேஷன் தனது மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளதா? தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த போதுதான் அலைக்கற்றை விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சர் குழுவிடம் இருந்து மாற்றி தானே முடிவை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.
2 ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். 2 ஜி ஊழலில் குறிப்பாக திமுகவின் குடும்ப நிறுவனங்கள் தொடர்பு கொண்டிருப்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.
2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க பிரிவு வெளிநாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளது. வெளிநாடுகளில் நடைபெற்ற விசாரணையில் தக்க ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் விரைவில் மேலும் சிலர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Monday, May 23, 2011
தேர்தல் முடிவு ஓய்வல்ல... தண்டனை!
தேர்தல் தெளிவான முடிவைத் தந்துள்ளது. முதல் பெருமை தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தால், அடுத்த பெருமை தமிழக மக்களைச் சேர்ந்தது. ஆமாம், குழப்பமில்லாத தெளிவான முடிவு. ஜனநாயகத்தை மதிக்காமல் ஒரு குடும்பத்தினர் செய்த கொடுமையான தவறுகளுக்குச் சரியான தண்டனையைத் தந்துள்ளனர்.
தொண்டர்களே இல்லாத தலைவர்களால் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் பெற்றிருக்கும் கேவலமான தண்டனை தமிழினம் அறிவாற்றலில் சிறந்தது, உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது.
பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைச் சிகிச்சைக்குக்கூட அனுமதிக்க மறுத்த கருணாநிதியோடு கூட்டணி வைத்துக் கொண்டதற்காக ஈழத்தமிழ் ஆதரவாளர்களாக இருந்த திருமாவளவனுக்கும் ராமதாஸýக்கும் தண்டனை அளித்திருக்கிறார்கள். தெளிந்த தீர்ப்பு.
மக்கள் தனக்கு ஓய்வளித்திருப்பதாகப் பெரியவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தம் மக்களைக் குறித்துத்தான் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், தமிழக மக்கள் தந்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. அரச பரம்பரைபோல கருணாநிதியுடைய மொத்தக் குடும்பமும் அவரது கட்சியினரின் குடும்பங்களும் தமிழ்நாட்டில் நடத்திய அத்து மீறல்களுக்குத் தண்டனை.
சகோதரி குஷ்பு தமிழக மக்களுக்குத்தான் தோல்வி என்கிறார். இது நமது தலைவிதி. கருணாநிதிக்கு அடுத்து கருத்துச் சொல்லும் உரிமை திமுகவில் அவருக்குத்தான் இருக்கிறது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறைச்சாலையில் இருப்பதால், அந்தப் பதவிக்குத் தாற்காலிகமாக நடிகை குஷ்புவை நியமித்திருக்கிறார்களோ என்னவோ. இவர்தான் தேசியத் தொலைக்காட்சிகளில் திமுகவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார்.
தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர்களின் தன்மானம் பற்றியும், கற்பு பற்றிப் புதியதொரு வியாக்யானத்தை முன்மொழிந்த "தமிழச்சி' குஷ்பு பேசுவதை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ, தமிழினத் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ரசிக்கிறார். வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது... இந்தியாவில் அல்ல, திமுகவில்...
இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியோ வாய்திறக்க மறுக்கிறார். அறிவான பலர்கூட இவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் முடிவு குறித்துக் குழம்பிப் போயிருந்தனர். என்னிடம் பலர் கேட்டனர். எப்படி நீங்கள் மட்டும் 200 இடங்களில் வெற்றி கிட்டும் என்று சொன்னீர்கள் என்று.
மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மக்கள் தமிழக மக்கள். அமைதியாகப் பதற்றம் காட்டாமல், பணம் வாங்கிக் கொள்ளாவிட்டால் சந்தேகப்படுவார்கள் என்று, கொடுத்த பணத்தையும் பல கிராமங்களில் வாங்கிக் கொண்டு, நமது பணத்தைத்தானே நமக்குத் தருகிறார்கள் என்று தெளிந்து, தேர்தல் ஆணையத்தின் நல உதவியோடு (வாக்காளர் அடையாளச் சீட்டோடு) ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.
தமது குடும்பத்தினரின் அத்து மீறல்களைஎல்லாம் நியாயப்படுத்த முயன்றார் கருணாநிதி. அதில் ஒழுக்கமாக உழைத்து முன்னேறிய எத்தனை பெரியவர்களைஎல்லாம் அசிங்கப் படுத்த முயன்றார்.
ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளத்தைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்றும் அவரது பிள்ளைகள் அடக்கமாக இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற ஆணவம் இல்லாமல் "அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டாரினிகளையும் தங்கள் விரலசைப்புக்கு ஆடவைத்த கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அகம்பாவத்தோடு, உழைப்பே உயர்வுதரும் என்று வாழ்ந்து காட்டும் ஏவி.எம். குடும்பத்தை உதாரணம் காட்டக் கருணாநிதிக்குத்தான் மனம் துணியும்.
தங்கள் உழைப்பால் முன்னேறிய பலரைத் தனது முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எல்லை மீறிய தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிக்கை தந்தாரே. அதைப் பார்த்த தமிழக மக்கள் ஓய்வல்ல, தண்டனை தந்துள்ளார்கள்.
ஒரு தலித் வழக்கறிஞர் ராசாவை திகார் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு தனது மகள் கனிமொழிக்காக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிமன்றத்துக்கே அனுப்பிவிட்டு வழக்கறிஞர் பெரியவர் ராம் ஜேட்மலானியைவிட்டு எல்லா ஊழல்களையும் ராசாதான் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திலேயே சொல்லவைத்து எப்படியேனும் கனிமொழியைக் காப்பாற்ற முயன்ற அசிங்கமான அநியாயத்துக்காகத் தலித்துகள் கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். இன்னும் ராசா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தானே?
ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திலேயே மகளுக்காகக் காட்டிக் கொடுத்த உங்கள் துரோகத்துக்காக உண்மையான திமுக உடன்பிறப்புகளும் சேர்ந்து கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள்.
உங்கள் இலவசங்கள் சிறு குழந்தைகளிடம் தோடு கம்மலைத் திருடுகிற திருடர்கள் அவர்களுக்கு வாங்கித் தருகிற மிட்டாய் போன்றது என்று மக்கள் புரிந்து கொண்டதன் தண்டனை இது.
பல இடங்களிலே தாங்கள் வழங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் குப்பைக்கு வந்துவிட்டன என்பதைச் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தன.
இந்திரா காந்தியை மட்டும் மேடைதோறும் அவசர நிலைத் தவறுகளுக்கு அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்திலே மன்னிப்புக் கேட்டார் என்று தேர்தல் கூட்டங்களிலேகூட நல்ல மானமுள்ள காங்கிரஸ் நண்பர்கள் இளங்கோவன் போன்றோரை வைத்துக்கொண்டு சொன்னீர்களே. அப்போதாவது இந்திரா காந்தியே மன்னிப்புக் கேட்டுள்ளாரே, நமது குடும்பத்தினர் செய்த தவறுகளுக்கு நாமும் மன்னிப்பு கேட்போம் என்று தங்களுக்குத் தோன்றவே இல்லையே, ஏன்?
நேரு குடும்பத்திடம் காணப்படும் அந்தப் பெருந்தன்மை எல்லாம் திருக்குவளையிலிருந்து திருட்டுத்தனமாகச் சென்னை வந்து இன்று ஆசியக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு வருமா என்ன?
கனிமொழி ஒரு பெண் என்கிறார் அவரது வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி. இப்போது தனது மகளுக்காக வாய்தா வாங்குவதிலும் ஜாமீன் வாங்குவதிலும் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறார் பெரியவர் கருணாநிதி. ஜெயலலிதா நீதிமன்ற விதிமுறைகள்படி வழக்கில் வாய்தா வாங்குவதைக் கண்டித்து நாடு பூராவும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை என்று உணரவில்லை. இன்று அதே நீதிமன்றத்தில் கனிமொழி பெண் என்கிறீர்கள்.
நீதிமன்றத்திலே ராசாத்தி அம்மாள் காலில் தலித் இளைஞர் ராசா விழுந்து வணங்குகின்றாரே, அதுவும் ஒரு வழக்கறிஞர் ஏன்? ஜெயலலிதா காலில் கழகத் தோழர்கள் விழுந்தால் மேடைக்கு மேடை அவரைக் கேலி செய்வீர்களே. ராசா ஏன் ராசாத்தி அம்மையார் கால்களிலே விழுந்தார்? அவருக்கு ராசாத்தி அம்மாள் என்ன உறவு? ஓர் அமைச்சர் அல்லது கட்சிக்காரர் முதல்வரின் காலில் அல்லது கட்சித் தலைவரின் காலில் விழுந்து ஆசிபெறுவது தமிழனின் தன்மானத்துக்கு இழுக்கு என்று வாய் கிழியப் பேசியவர்கள் "இப்போது தனது துணைவியின் காலில் முன்னாள் அமைச்சர் விழும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே, ஏன்?
கடைசியாக ஒன்று, நீங்கள் யாரையும் ஏசியது இல்லை என்கிறீர்கள். அரசியல் நாகரிகம் பற்றி உபந்நியாசம் செய்கிறீர்கள். மதுரை மாநகராட்சித் தேர்தல். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மக்கள் பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அதற்கு நீங்கள் மேலமாசி வீதிப் பொதுக்கூட்டத்தில் சொன்ன பதில் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் நெடுமாறன் அண்ணாச்சிக்கு அரசியல் நாகரிகம் பற்றி எழுதுகிறீர்கள்.
அந்த மாநகராட்சித் தேர்தலிலே பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் மேலமாசி வீதியில் தாங்கள் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றைக் கேட்டோம். நான் கேட்ட உங்களின் ஒரே பொதுக்கூட்டம் அதுதான். அதில் சொன்னீர்கள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருப்பாராம் நான் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமாம்.
அடுத்துச் சொன்னீர்களே அதுதான் பண்பாட்டின் உச்சம். அவர் கல்யாணம் செய்வாராம். நான்... என்று இடைவெளி விட்டீர்களே. அந்தத் தரக்குறைவான கருணாநிதியை மக்கள் மறந்துவிடவில்லை.
மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!
http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=
Saturday, May 21, 2011
என்னதான் செய்யும் திமுக!
இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.
÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.
÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.
÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.
÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.
÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.
÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.
÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.
÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.
÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.
÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.
÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது.
÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள். சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.
÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.
÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.
÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.
÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.
÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.
கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.
திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.
÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!
http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=421195&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=
கருணாநிதியின் து(வ)க்கம்
சர்க்காரியா கமிஷன் பின்புலம்
மே 16, 2011
இதே சர்க்காரியா அவர்கள், பின்னாளில் (1983) மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்ந்தறிந்து, சிபாரிசுகளை முன்வைக்க ஒரு அதே இந்திரா காந்தியினால் கமிஷன் வைக்கப் பட்டு அதன் தலைவராகப் பணியாற்றினார், மிகவும் சிறப்பாக..
ஆனால், நான் சர்க்காரியா கமிஷன் என்று ஒத்திசைவில் எழுதுவது 1976 கமிஷனைப் பற்றி மட்டும் தான்.
ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி இங்கு நான் கொடுக்க விரும்புகிறேன் – நம் கருணாநிதியின் கயமைப் பின்புலம் புரிவதற்காக மட்டும் – இதனை திமுகவின் வரலாறாகக் கொள்ள முடியாது.
கயமைநிதியின் (சர்க்காரியா கமிஷன் வரையிலான) அவசர வரலாறு
1944-ல் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து, ஈவேரா திராவிடர் கழகத்தைத் துவக்கினார். அப்போது, அதில் ஒரு தொண்டனாக இருந்த கருணாநிதிக்கு வயது இருபது தான்! இவர் அப்போது அண்ணாதுரையின் அடிவருடிகளில் ஒருவராகவும் அவர் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார்.
1947-ல் இந்திய விடுதலை ஈ வே ரா ‘பெரியாரால்’ துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டபோது – அண்ணாதுரை பெரியாரிடமிருந்து கருத்தளவில் மாறு பட்டார். மேலும் அண்ணாதுரை, தன்னை ஒரு சமூகச் சேவை ஆளாக மட்டும் கருதிக் கொள்ளாமல், அரசியல்-பதவிகள் மூலமாகவும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், ஈவேராவின் ஆளுமை மிகவும் வலியதான ஒன்றான காரணத்தால் அண்ணாதுரையால் அவரை எதிர்கொண்டு, தன் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை.
இச்சமயம் EVK சம்பத் (பெரியாருடைய மருமகன்) தான் ஈவேராவுடைய அடுத்த தலைமுறை வாரிசாக, பரவலாக அறியப்பட்டார் – அண்ணாதுரையோ அல்லது வேறு எந்த தலைவரோ அல்லவே அல்ல. சம்பத் ஒரு படித்த, பண்பான, சதிமனம் இல்லாத, ஒரு தலைவர்.
தம் பதவி/அதிகார வேட்கையை அடக்கிக் கொள்ளவே முடியாத, அதே சமயம் சரியான நேரத்துக்குக் காத்திருந்த கருணாநிதி, இப்போது அண்ணாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து திராவிடர் கழகத்திலிருந்து சம்பத்தைப் பிரித்து, ஈவேராவை, பலமிழந்தவராக்கினார். இதற்கான காரணமாக அப்போது அவர்கள் சொன்னது – ஈவேரா தன்னை விட வயதில் மிக இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது…
இப்படி ஒரு உப்பு சப்பில்லாத, இன்னொருவரின் பிரத்யேக வாழ்க்கையில் தலையிட்டு (ஈவேரா ஒளிவு மறைவு கொண்டவரே அல்ல; கருணாநிதிகளைப் போலல்லாமல் – மணியம்மையை அவர் ஏமாற்றியோ, நயவஞ்சகமாகவோ திருமணம் செய்து கொள்ளவில்லை; கண்ட, காணாத பெண்களையும் வன்புணர்ச்சி செய்யவில்லை), கிடைத்தது ஆதாயம் என்று சம்பத்தைப் பிரித்து – 1949-ல் திமுக உதயமாகிறது.
அப்போது திமுகவில் அறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள் – நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன், அண்ணாதுரை. இப்போதும் 25 வயதே ஆன கருணாநிதி அண்ணாதுரையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். வசீகரத் தலைவரான அண்ணாதுரை, ஒரு விதத்தில், கருணாநிதியின் வழிமுறைகள், நேர்மையின்மை போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவர் சொல்லை தட்டாமல் கேட்பது, பொறுத்துக் கொள்வது என்கிற வழியை, தன் அரசியல் தன்னலம் கருதிச் செய்து கொண்டிருந்தார்.
அப்போதே கருணாநிதி திரைக்கதை-வசனம் – அதாவது அடுக்குமொழி மொக்கை, ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள், வாய்ப்பேச்சு வீரம் – உள்ளிட்ட குப்பைகளை எழுதி வந்தார். MGR உடன்தொடர்பு ஏற்பட்டு பணி செய்யும்போது, அவருடைய வசீகரம், மற்றும் திரைபிம்பத்தை திமுக (அதாவது, தான்) உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார், கருணாநிதி.
1953-ல் MGR சேருகிறார் – திமுகவில். இவருக்கு, கருணாநிதி போலல்லாமல், அண்ணாதுரை மேல் மிகுந்த மரியாதையும் கூட . கட்சிக்கு MGR வருகையினால் ஏகப்பட்ட ஆதரவு மக்களிடையே பெருகுகிறது.
ஆனால் சம்பத்துக்கு இம்மாதிரி கொள்கைப்பிடிப்பில்லாமல் திரைப்பட நடிகர்களைச் சேர்ப்பதில் பிடித்தமில்லை. மேலும் அண்ணாதுரை+கருணாநிதியின் அரைவேக்காட்டு ‘திராவிடநாடு’ போன்ற கோஷங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய விரிசல்கள் – ஆனால், MGR பிம்பத்தையும், அண்ணாதுரையின் வசீகரத்தையும் மீறி, சம்பத் திமுகவில் ஏகோபித்த ஆதரவு பெற்றவராக விளங்கினார்.
பதவி சுகம் காண அல்லாடும், கருணாநிதிகளுக்கு இது பொறுக்குமா? ஏற்கனேவே இவர் 1957-ல் MLA வேறு ஆகியிருந்தார் – அப்போது இவருக்கு வயது 33.
சம்பத்துக்கு எதிராக சூழ்ச்சிகள் பல செய்து (அடிதடிகள், மிரட்டல்கள், கொலைகள், துரோகங்கள் என்று பலப்பல) – MGR விசுவாசிகளை, அண்ணாதுரையின் வசீகரத்தை – காரிய மவுனத்தை, உபயோகித்து – சம்பத்தையே திமுக விலிருந்து விலக்கினார் கருணாநிதி…
ஆக, 1961-ல் சம்பத் அண்ணாதுரை-கருணாநிதி சகவாசத்தை வெறுத்து ஒதுக்கி, இவர்களிடமிருந்து விலகி பழ நெடுமாறன் (எப்பேர்ப்பட்ட மகத்தான மனிதர், இந்த நெடுமாறன்!), கண்ணதாசன் போன்றோருடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். பின், வருந்தத் தக்க விதத்தில் வரலாற்றின் பக்கங்களில், ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டார்.
பின் கருணாநிதி, ராஜாஜி அவர்களை வைத்து, அவரை உபயோகித்து, காமராஜ் அவர்களை பலவீனப் படுத்தி கடைசியில் வீழ்த்தினார். பின் ராஜாஜியையும் உதறினார்.
1967-இல் திமுக அண்ணாதுரையின் கீழ், தமிழகத்தில் பதவிக்கு வந்தது. நம் கயமைநிதி அதில் 43 வயது பொதுப் பணித்துறை (PWD) அமைச்சர்!
இங்கு இவர் பயங்கரமாக கமிஷன் மண்டி நடத்தி, அண்ணாவை நொந்து போகச் செய்தார். மெல்லவோ துப்பவோ முடியாமல், அண்ணா அல்லல் பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த கயமைநிதி துள்ளல் போட்டுத் தமிழகத்தைத் துப்புரவாக சுத்தம் செய்து கொண்டிருந்தார். பொறுக்க முடியாத அண்ணா, பொங்கிஎழ முடியாமல் புற்றுநோய் பெற்று இறந்தார் – 1969-இல்.
இப்போது கருணாநிதிக்கும், தமிழக முதலமைச்சர் பதவிக்கும் நடுவில் ஒரே ஒருவர் தான் இருந்தார் – அவர் படித்தவர், பண்பாளர், மென்மையானவர் – அவர் தான் நெடுஞ்செழியன்.
இந்த தடைக்கல்லை முறியடிக்க கருணாநிதி இச்சமயமும் அணுகியவர் எம்ஜீஆர் – அவர் உதவி பெற்று – அதாவது அவர் காலில் விழுந்து, மன்றாடி உதவி கேட்டு – சூழ்ச்சிகள் பல செய்து நெடுஞ்செழியனையும் ஓரம் கட்டினார், இந்தக் கயமைநிதி.
ஆக, முதலமைச்சரும் ஆனார் 1969-ல், இந்தக் கருணாநிதி, தன்னுடைய 49-ஆம் வயதில் – MGR தயவில்! பின் என்ன 1972 வரை ஒரே கொண்டாட்டம், ஒரே ஊழல், ஒரே ஜல்சா தான்…(விரசத்துக்கு மன்னிக்கவும்)
MGR தான் திமுகவின் போஷகர், அவர் தான் கட்சியின் பொக்கிஷதாரர் – எவ்வளவு சந்தோஷம் பாருங்கள், கருணாநிதிக்கு!
மீண்டும், வெள்ளை மனதினரான MGR அவர்களின் வசீகரத்தைப், பணத்தை உபயோகித்து, குள்ள நரித்தனமாக மற்றத் தலைவர்களை ஓரம் கட்டி 1971-ல் முதலமைச்சரானார்.
ஆனால் இப்போது MGR தெரிந்து கொண்டார், இந்தக் கயமைநிதி ஒரேயடியாக ஊழல் செய்கிறார், தான் திமுகவிற்கு கொடுத்த பணத்தையும் திருடுகிறார். மேகலா படக் கம்பெனி மூலமாகவும் திருடுகிறார் என்பது!
பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக், கடைசியில் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டார் – கடைசியில் 1972-ல் திமுகவிலிருந்து விலகினார் MGR! (கணக்கு மட்டும் கிடைக்கவே இல்லை!)
பின் 1976 வரை கருணாநிதிக்கு ஒரே கொண்டாட்டம் தான், அதாவது, அளவு கடந்த ஊழலோதி ஊழல்!
இப்போது சொல்லுங்கள், நான் கருணாநிதியை, கயமைநிதி என்றழைப்பது சரிதானே?
=-=-=-=-=
இதற்குப் பின், 35 வருடங்களில், இம்மனிதர் செய்த விசித்திர வினோதங்கள், ஊழல்கள், பண்ணிய புலம்பல்கள், துரோகங்கள், அழுத அழுகைகள் பற்றியெல்லாம் நான் இப்போது எழுதுவதாக இல்லை.
சர்க்காரியா கமிஷன் குறித்த இவ்விடுகைகளைப் புரிந்து கொள்ள, தெரிந்து தெளிய, நீங்கள் கருணாநிதியில் பின்புலம் இவ்வளவு தெரிந்து கொண்டால் போதுமானது என்று நினைக்கிறேன்.
=-=-=-=-=
நீங்கள் இந்த சர்க்காரியா அறிக்கையைப் படிக்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை:
- 1970-களில் – அதுவும் அதன் முன்பாதியில் நடந்த ஊழல்கள் மட்டும் தான் இதில் விசாரிக்கப் பட்டன.
- அப்போதைய தொகைகள், இப்போதைய திமுக ஊழல் அளவுகளோடு ஒப்பிடப்படும்போது, லட்சக் கணக்கான கோடிகளாக இல்லை. ஆனாலும், அக்காலத்து மதிப்பில் இவை மிகவும் அதிகம்.
- சர்க்காரியா அவர்களுக்கு அளிக்கப்பட கால அளவும் மிகக் குறைவு – இருந்தாலும் அவர் இழுத்தடிக்காமல், நீட்டிப்பு கேட்காமல், கயமைக் கருணாநிதியின் அராஜகங்களையும், ஒத்துழையாமையும், அச்சுறுத்தல்களையும் மீறி ஒரு கச்சிதமான அறிக்கையை அளித்தார்.
- சர்க்காரியா அவர்கள் அறிந்தது கடுகளவு – ஆனால், அப்போதே கருணாநிதி ‘அடித்தது’ மாபெரும் திருப்பதி லட்டு அளவு!
- அடிப்படையில் சர்க்காரியா அவர்கள், கூர்மையான மதியும், அறியும் திறனும் மிக்கவர் – நல்ல நேர்மையாளர் – ஆனால் அவரே வியக்கும் அளவுக்கு, அறிவியல் (‘விஞ்ஞான’) பூர்வமான ஊழல் செய்தவர், தடயங்களை அழித்தவர், ஆய்ந்தறிய முடியாத, அளவிட இயலாத ஊழல்களை மிகவும் சாமர்த்தியமாகச் செய்தவர் இந்தக் கருணாநிதி.
- ஒவ்வொரு இந்தியனும், குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழனும் படித்து, வியந்து, கருணாநிதி மேல் காறித் துப்பவேண்டிய விஷயம் இது…
- படிப்பதற்கு கொஞ்சம் கரடு -முரடாக இருக்கலாம் இந்த அறிக்கை – ஆனால் தயவு செய்து இதனைப் படிக்கவும்.
இனி அடுத்த பதிவுகளில் – முதலில் சர்க்காரியாவின் முதல்/முன்னோட்ட அறிக்கையையும், பின்னர் விரித்து எழுதப் பட்ட முழு அறிக்கையையும் காணலாம்…