அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல் புகார் தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாக உச்ச நீதிமன்றம் கண்டித்தது (நவ. 16) அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் மத்திய சட்ட அமைச்சரும், ஜனதா கட்சித் தலைவருமான சுப்பிரமணிய சாமி தாக்கல் செய்த வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர், ‘மிஸ்டர் கிளீன்’ மன்மோகன் சிங்கை கேட்ட கேள்விகள், மிகவும் கூர்மையானவை. ஆனால், மன்மோகன் சிங் எதுவுமே நடக்காதது போல நடமாடுகிறார். மத்திய அரசின் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியமோ, பிரதமரை உச்சநீதி மன்றம் ஏதும் விமர்சிக்கவில்லை என்று முழுப்பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கிறார்.
”தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இரண்டாம் தலைமுறை மின்காந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு செய்யப்பட்டதில், அமைச்சர் ராசாவின் தன்னிச்சையான செயல்பாட்டால், அரசுக்கு பல்லாயிரம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்க வேண்டும்” என்று கோரி பிரதமர் மன்மோகன் சிங்கிடம் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி புகார் மனு அளித்திருந்தார். இந்த மனு 2008, நவ.29-ம் தேதி அளிக்கப்பட்டது. இந்த மனுவுக்கு இந்த ஆண்டு மார்ச் 19-ம் தேதி தான் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பதில் அனுப்பப்பட்டது. இந்தப் பதில் கடிதத்தில், ”விசாரணை ஆரம்ப நிலையில் உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ராசா மீது வழக்குத் தொடர அனுமதி அளிக்கப்படாததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் சுப்பிரமணியசாமி.
சாமியின் வழக்கு கடந்த நவ.16-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போதுதான், ஆ.ராசா மீது வழக்குத் தொடர அனுமதி உண்டா, இல்லையா என்பதை முடிவு செய்வதில் பிரதமர் மன்மோகன் சிங் மிகவும் காலதாமதம் செய்துவிட்டதாகக் கூறி நீதிபதிகள் ஜி.எஸ்.சிங்வி, ஏ.கே.கங்குலி ஆகியோர் கண்டனம் தெரிவித்தனர். ”வழக்குத் தொடர அனுமதிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்ய நல்ல அரசுக்கு மூன்று மாதங்கள் போதுமானது. அமைச்சர் மீது வழக்குத் தொடர அனுமதி அளிப்பதற்கான காலவரையறையை (ஏற்கனவே விநீத் நாராயணன் என்பவர் தொடர்ந்த வழக்கில்) உச்ச நீதிமன்றம் வகுத்துள்ளது. தேவைப்பட்டால் இது தொடர்பாக அரசு தலைமை வழக்கறிஞரை ஆலோசித்து முடிவு எடுத்திருக்கலாம். ஆனால் அலைக்கற்றை ஊழல் புகாரில் அரசு 16 மாதங்களுக்கு மேலாக பதில் அளிக்காமல் இருந்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் வருத்தத்துக்கு உரியது” என்ற நீதிபதிகள், ”அலைக்கற்றை ஊழல் தொடர்பாக பிரதமருக்கு எதிராக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு அரசு தரப்பு நவ.20-க்குள் பதிலளிக்க வேண்டும்,” என்றும் உத்தரவிட்டனர்.
சுப்பிரமணியசாமி பிரதமருக்கு அனுப்பிய மனுவில், அனில் அம்பானிக்குச் சொந்தமான ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு தொடர்புள்ள `ஸ்வான் டெலிகாம்’ நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ததில் நடந்த முறைகேடு பற்றிக் குறிப்பிட்டு இருந்தார். ரிலையன்ஸ் குழும நிறுவனத்துக்கு, `ஆர் காம்’ மற்றும் `ஸ்வான்’ என்ற பெயர்களில் இரு முறை ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழங்கப்பட்டு இருப்பதாகவும், ஒதுக்கீடு வழங்கப்பட்ட பின் அவற்றின் பங்குகள் மொரிஷியஸ் நிறுவனம் ஒன்றுக்கு மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் குற்றம் சாட்டப்பட்டு இருந்தது.
இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் காட்டும் தீவிரத்தைப் பார்த்தால், கூடிய விரைவில் மத்திய ஊழல் அரசுக்கு மேலும் பல சங்கடங்கள் காத்திருக்கின்றன என்பது தெளிவாகவே தெரிகிறது. உண்மையில், மத்தியத் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவியில் இருந்து ஆ.ராசா அவசர அவரசமாக விலகியதே, சாமி தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தால் அரசுக்குக் கேவலமான நிலை ஏற்படும் என்பதால்தான். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நடத்தும் ஆர்ப்பாட்டத்தைவிட, மத்திய அரசு அதிகம் பயப்படுவது, சாமி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொலைக்கப் போகிறார்களோ என்பதுதான்.http://www.tamilhindu.com/2010/11/congress-upa-spectrum-2g-scandal/
No comments:
Post a Comment