புதுடெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தென்மாநிலங்களில் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 1ஆம் தேதி இரவு முதல் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.
சுங்க கட்டணப் பிரச்னைக்குத் தீர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய 5 மாநிலங்களில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என தென்மாநில லாரி உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.
இந்நிலையில், லாரி உரிமையாளர்களை மத்திய அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தது. அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா, தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி மற்றும் தென்மாநில லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.
அரசு தரப்பில் மத்திய தரைவழிப் போக்குவரத்துத் துறை அமைச்சக செயலர் பிரேமதாஸ் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரிகள், பெட்ரோலியத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
சுங்க கட்டணம் தொடர்பாக 1997இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த சட்டத்தையே பின்பற்ற வேண்டும், இடையில் அமைச்சகத்தின் மூலம் திருத்தம் செய்ததை வாபஸ் பெற வேண்டும், ஒரு கி.மீ. தூரத்துக்கு சுங்க கட்டணமாக ரூ. 1.40 மட்டுமே வசூலிக்க வேண்டும், வேளாண் விளைபொருட்களை கொண்டு செல்லும் விவசாயிகள் சுங்கச் சாலையை 3 கி.மீ. மட்டுமே பயன்படுத்தும் சூழலில் 60 கி.மீ. தூரத்துக்கான சுங்கம் வசூலிப்பதை கைவிட வேண்டும், மாவட்ட வாகனங்களுக்கு அந்தந்த மாவட்டத்தில் உள்ள சுங்கச் சாவடிகளில் கட்டணத்தில் 50 சதவீதம் விலக்கு அளிக்க வேண்டும் என லாரி உரிமையாளர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.
மூன்றரை மணிநேரத்துக்கும் மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து கோரிக்கை ஏற்கப்படும்வரை போராட்டம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் கே. நல்லதம்பி கூறுகையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததால் தென்மாநிலங்களில் ஆகஸ்ட் 1ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் வேலை நிறுத்தம் நடைபெறும். 5 மாநிலங்களில் 22 லட்சம் லாரிகள் நிறுத்தப்படும். பேருந்து உரிமையாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவர் என்றனர்.
அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தலைவர் ஜி.ஆர். சண்முகப்பா கூறுகையில், தென்மாநில போராட்டத்தைத் தொடர்ந்தும் கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்காவிட்டால் ஆகஸ்ட் 5ஆம் தேதி நள்ளிரவு முதல் நாடு தழுவிய அளவில் லாரிகள் வேலைநிறுத்தம் நடைபெறும். நாடு முழுவதும் 62 லட்சம் வாகனங்கள் நிறுத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment