தலைப்பாகை கட்டியது ஏன்? :
விவேகானந்தரின் அடையாளமே அவரது அழகான தலைப்பாகை தான். பாலைவனப்பகுதியான ராஜஸ்தான் மாநிலத்தில் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகம். வெயிலின் கொடுமையால் மக்கள் உஷ்ண சம்பந்தமான நோய்களில் தவிப்பது வழக்கம். அதனால், வெயில் தாக்காதபடி நீளமான துணியால் தலையில் முண்டாசு கட்டிக் கொள்வர். ஒருமுறை அங்கு சென்ற விவேகானந்தரை வெப்பம் தாக்காமல் இருக்க, ராஜஸ்தான் மன்னர் தானே அவருக்கு தலைப்பாகை கட்டிவிட்டார். விவேகானந்தரும் ஆர்வத்துடன் அதைக் கட்டும் முறையை கற்றுக் கொண்டார். அந்நிகழ்ச்சிக்குப் பின் விவேகானந்தர் எங்கு சென்றாலும் தலைப்பாகையுடன் சென்றார்.
கைகளைக் கட்டி நின்ற காட்சி :
விவேகானந்தரின் இன்னொரு அடையாளம் கைகளைக் கட்டிக்கொண்டு கம்பீரமாக நிற்கும் தோற்றம். வீரம்,ஆண்மை, எழுச்சி, தன்மானம், கம்பீரம் ஆகிய தைரிய குணங்கள், அவர் கம்பீரமாக நிற்பதையும், இவை அனைத்தும் உள்ளவனுக்கு பணிவும் வேண்டும் என்பதையும் அவரது தோற்றம் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. சிகாகோவில், சர்வ மத மகாநாடு நடைபெற்ற நாட்களில், ஒருபுகைப்படக்காரர் கைகட்டி நின்ற விவேகானந்தரை படம் பிடித்து விட்டார். சிகாகோவைச் சேர்ந்த லித்தோ கிராபிக் கம்பெனி விவேகானந்தரின் இத்தோற்றத்தைச் சுவரொட்டியாகத் தயாரித்து ஊர் முழுக்க ஒட்டியது. இந்த வித்தியாசமான கோலத்தைக் கண்ட மக்கள் அவருடைய பேச்சைக் கேட்க ஆர்வத்துடன் கூடியதற்கு இந்த சுவரொட்டியும் ஒரு காரணம் .
உங்களுக்கு இங்கிலிஷ் தெரியுமா :
சுவாமி விவேகானந்தர் ஒருமுறை ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். உடன் பயணம் செய்த ஆங்கிலேயர் இருவர் துறவியான விவேகானந்தரை கிண்டல் செய்து பேசிக் கொண்டு வந்தனர். விவேகானந்தருக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவர்கள் எண்ணிக் கொண்டனர். ரயில் நின்றதும் அங்கிருந்த ரயில்வே அதிகாரியிடம்,"" தண்ணீர் எங்கு கிடைக்கும்?'' என்று ஆங்கிலத்தில் கேட்டார். இதைக் கேட்டதும் கிண்டல் செய்தவருக்கு அதிர்ச்சியாகி விட்டது."" உங்களுக்கு இங்கிலிஷ் தெரியுமா? தெரிந்தும் ஏன் அமைதியாக வந்தீர்கள்? '' என்று கேட்டார் அவர். சுவாமிஜி சிரித்தபடியே,""நான் முட்டாள்களிடம் பேச எப்போதும் விரும்புவதில்லை!'' என்று "கூலாக' பதில் சொன்னார். தான் செய்த தவறுக்காக ஆங்கிலேயர் சுவாமி விவேகானந்தரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.
Source: http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=986
No comments:
Post a Comment