2001ஆம் ஆண்டு நிருணயிக்கப்பட்ட உரிமைக் கட்டணத்தை (License fee) 7 ஆண்டுகளுக்குப் பிறகு முதலில் வரும் நிறுவனத்திற்கு முதலில் என்று கூறி, திருப்பதி லட்டை போல அள்ளி வழங்கிவிட்டு, அந்த கூத்தை பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுடன்தான் நடத்தினேன் என்று அமைச்சர் இராசா கூறியதைக் கேட்டு பிரதமர் அலுவலகம் ஏன் வாய் திறக்கவில்லை என்பதும் புரியவில்லை. ஆனால், மற்றொரு கதை விட்டார் அமைச்சர் இராசா. அது என்னவெனில், எல்லாம் டிராய் (Telecom Regulatory Authority of India - TRAI) வழிகாட்டுதலின்படியே செய்யப்பட்டது என்றார். டிராய் மறுத்தது. ஒன்று, சந்தை நிலவரத்தை மதிப்பீடு செய்து உரிமக் கட்டணத்தை நிருணயிக்கலாம் அல்லது 3 ஜிக்கு விட்டதுபோல் ஏலம் விடலாம் என்பதே டிராயின் யோசனையாகும். அதையெல்லாம் கண்டுகொள்ளவில்லை.
செம்மொழி மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பதற்காக டெல்லி செல்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்ற தமிழக முதல்வர் கருணாநிதி, தனக்கே உரித்தான திராவிடப் பாணியில் தனது கட்சியின் அமைச்சருக்கு எதிராக சொல்லப்படும் ஊழல் குற்றச்சாற்றிற்கு பதிலடி கொடுத்தார். “இராசா தலித் என்பதால் ஆதிக்க சக்திகள் அவரை பதவியில் இருந்து வெளியேற்ற முயற்சிக்கின்றன” என்று போட்ட போட்டில் மன்மோகன், சோனியா கூட அசந்து போனார்கள். தமிழக முதல்வரிடம் இல்லாத அஸ்திரமா?
ஆக, அரசுக்கு வர வேண்டிய, வந்திருக்க வேண்டிய, 60 ஆயிரம் கோடி ரூபாய் மிகச் சாதுரியமான ‘வழிமுறை’யால் அரசுக்கு வரவில்லை. போபர்ஸ் பீரங்கிக்கு அண்ணன் ஊழல் இது. சாதாரண விலை நிருணயம் செய்து, அதை சும்மா பெயரை வைத்துக் கொண்டு விண்ணப்பம் போட்ட நிறுவனங்களுக்கு விற்று, அந்த நிறுவனங்கள் ஏற்கனவே செல்பேசி சேவைகளை நடத்திவரும் நிறுவனங்களுக்கு நல்ல தொகைக்கு விற்றுவிட, அதில் முறைகேடு நடந்ததற்கான ஆதாரங்கள் ஏதுமில்லை என்று காங்கிரஸ் கட்சி தனது செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வியை விட்டு செய்தியாளர்களிடம் சொல்கிறது.
இந்தியா தவிர வேறு எந்த ஜனநாயக நாட்டில் இவ்வளவு வள்ளிசாக 60 ஆயிரம் கோடி ரூபாய் கபளீகரம் செய்ய முடியும்? மிக சாமர்த்தியமான ஊழல். எத்தனையோ ஆண்டுக் காலமாக கொள்ளையடித்து அயல் நாட்டு வங்கிகளில் இருக்கும் பல இலட்சக் கோடி இந்தியப் பணத்தை கொண்டு வர சபதமேற்றுள்ள நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு இங்கே கபளீகரம் செய்யப்பட்ட 60 ஆயிரம் கோடி யார் யாருக்கு போனது என்று கண்டுபிடிக்க உத்தரவு வரவில்லை. என்ன காரணம் என்று நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை.
ஆனால், கச்சா விலையேற்றத்தினால் பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படும் இழப்பை தடுத்து நிறுத்திட விலைக் கட்டுப்பாட்டை நீக்க அதிகாரமிக்க அமைச்சரவைக் குழு கூடுகிறது. விலைக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு பெட்ரோல், டீசல் விலையேற்றப்பட்டால் அதனால் அத்யாவசியப் பொருட்களின் விலைகள் கூடும், ஆனால் மக்களின் மீது விழும் சுமை குறித்துக் கவலைப்படாமல் விலைக் கட்டுப்பாட்டை நீக்க முற்படுகிறது.
மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கு ரூ.90,000 கோடி அளவிற்கு ஏற்படும் இழப்பை தடுக்க விலைக் கட்டுப்பாட்டை நீக்க முன்வந்துள்ள மத்திய அரசு, அரசுக்கு ரூ.60,000 கோடி இழப்பை ஏற்படுத்திய 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு குறித்து விசாரிக்க வேண்டுமல்லவா? ஏன் செய்யவில்லை. அரசுக்கு வராமல் போன வருவாயை விட, ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வது முக்கியம் என்பதாலா?
Source: http://tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/1005/21/1100521094_2.htm
No comments:
Post a Comment