லாட்டு பெற்ற தரிசனம்
ஸ்ரீராமகிருஷ்ணர் வாழ்ந்த காலத்திலேயே அவரிடம் சிறு வயதில் வந்து சீடனாகச் சேர்ந்தான் "லாட்டு' என்பவன். இவன், "ராம்' என்ற ராமகிருஷ் -ணரின் பக்தர் வீட்டில் வேலைக்காரனாக இருந்தான். வழக்கமாக கல்கத்தா அருகேயுள்ள தட்சிணேஸ்வர காளி கோயிலில்தான் ராமகிருஷ்ண பரமஹம்ஸர் தங்குவது வழக்கம்.
ஒரு சந்தர்பத்தில், தன் சொந்த ஊரான காமார்புகூருக்கு சென்றிருந்தார் பரமஹம்ஸர். அது தெரியாமல் சிறுவன் லாட்டு, தன் முதலாளி ராமுடன் பரம -ஹம்ஸரை தரிசிக்கும் பேராவலோடு அங்கு வந்தான். "அவர் சொந்தக் கிராம -த்துக்குப் போயிருக்கிறார்; அவரை அன்று தரிசிக்க முடியாது' என்று தெரிய வந்த -தும், லாட்டுவால் தாங்க முடியவில்லை. அச்சிறுவன் மிகுந்த மன வேதனை -யடைந்தான்; ராமகிருஷ்ணர் எப்போதும் தவமியற்றும் "பஞ்சவடி'க்குச் சென்றான்; குருவின் தரிசனம் வேண்டி காலை முதல் தொடர்ந்து கதறியழுதான். பிற்பகலுக்கு மேல் லாட்டுவுக்கு பரமஹம்ஸரின் திவ்விய தரிசனம் கிடைத்தது!! ஆனால் லாட்டுவின் முதலாளி ராமுக்கு பரமஹம்ஸர் அன்று அங்கு இல்லாதது, பெரிய அளவில் பாதிக்கவில்லை. இத்தனைக்கும் அவரும் ஒரு பெரும் பக்தர் -தான். வீட்டுக்குப் புறப்படலாம் என்ற எண்ணத்துடன் லாட்டுவை கோயில் முழுதும் தேடிய ராம், கடைசி -யில் பஞ்சவடியில் அவனைக் கண்டார். பேரானந்தத்தில் மூழ்கியபடி தனியே(?) அவன் பேசிக் கொண்டிருப்பதையும் பார்த்தார். ""லாட்டு! வெட்ட வெளியில் என்ன பிதற்றிக் கொண்டிருக்கிறாய்?'' என்று கேட்ட ராமிடம், ""நான் நமது தாக்கூரோடு (பரமஹம்ஸர்) ஆனந்தமாகப் பேசிக் கொண்டிரு -க்கிறேன். இதோ அவர் நிற்பதும், என்னுடன் விளையாடுவதும் உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா?'' என்று பதில் சொன்னான் லாட்டு. கபடமற்ற அந்தச் சிறுவனின் மெய்யன்புக்காக காமார்புகூரில் இருந்தபடியே தட்சிணேஸ்வரத்திலும் தரிசனம் அளித்த ராமகிருஷ்ணர், ஒரு சித்த புருஷரில்லை என்று எவர் கூறுவார்? எதற்காக இதைக் குறிப்பிடுகிறோம் எனில், அவதார புருஷர்களிடம் சித்திகள் கை கட்டிச் சேவகம் செய்யும். ஆனால் அவற்றை வெளிப்படுத்தி கூட்டமும், பணமும் சேர்க்கும் அற்ப குணம் அவர்களிடம் இருக்காது. அப்படி அடங்கி -யிராமல் சித்திகளைக் காட்டி, மனிதர்களின் புத்திகளை மயக்கும் எவரையும் "இறைவனின் அவதாரம்' என நாம் எண்ணுவது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள் -ளும் செயலாகும். படிப்பறிவு இல்லாத லாட்டு, குருவருளால் பிற்காலத்தில் வேத, உபநிடத சாரங்களை சரளமாகப் பொழிந்தார். பரமஹம்ஸரின் நேரடிச் சீடரான இவரை, "அத்புதானந்தர்' என்று இன்றளவும் உலகம் கொண்டாடிக் -கொண்டிருக்கிறது.
பெண்ணாசை அற்ற புனிதர்கள்!
இது ஒரு புறமிருக்க, தனது சாதனை (இறைவனை நேரில் காண்பதற்கான தெய்வீக முயற்சிகள்) காலத்தில், அல்லும் பகலும், "அம்மா! காளி' என்று அரற்றிக் கொண்டே இருப்பார் ஸ்ரீராமகிருஷ்ணர். உண்ணவோ உறங்கவோ செய்யாது, ஆடை அவிழ்வது கூடத் தெரியாமல் தேவியின் தரிசனத்தை எதிர்பார்த்துப் பித்தேறி இருப்பார். அந்த ஆன்மீகப் பித்தைப் புரிந்து கொள்ள யாரால் முடியும்?அந்நேரத்தில் ராமகிருஷ்ணரின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஆண்டவனால் அனுப்பப்பட்ட "மதுர் பாபு' என்னும் செல்வந்தர், பரமஹம்ஸரின் பக்திவேகத்தை உணர முடியாமல் தடுமாறினார். ராமகிருஷ்ணரிடம் உயிரையே வைத்திருந்த மதுர், "பெண் சகவாசமே இன்றி பிரம்மச்சாரியாக இருப்பதால்தான் நம் ராமகிருஷ்ணருக்கு இப்படிப்பட்ட நோய்(?) வந்துள்ளது' என்று தானாகவே தீர்மானித்தார். சில விலை மாதர்களை ராமகிருஷ்ணர் சந்திக்கும்படி ஏற்பாடு செய்தார். ஆனால் ராமகிருஷ்ணரோ அந்தப் பெண்களை வணங்கி, ""தாயே! காளி! காளி'' என்று அரற்றினார். உடலை விற்க வந்தவர்களையும் "உலக அன்னை'யா -கவே கண்டது பரமஹம்ஸரின் தூய உள்ளம். "இப்படிப்பட்ட மகானிடம் எங்களை அபச்சாரப்பட வைத்தீர்களே?' என்று அந்த விலை மகளிர், மதுர் பாபுவை கடிந்து கொண்டனராம்.
இப்படிப்பட்ட பண்பு நலக்குன்றுகளாக எத்தனையோ மகான்கள் வாழ்ந்து, வழி காட்டிய பாரத தேசத்தில் பிறந்துள்ள நாம் பெண்ணாசை, பொன்னாசை, மண்ணாசை, புகழாசை என்று திரிபவர்களைப் "புனிதர்கள்' எனக் கருதி ஏமாற -லாமா?
வீரத் திருமகன்
ராமகிருஷ்ணரின் பிரதம சீடர் நரேந்திரன் என்னும் விவேகானந்தர். "வானில் உள்ள ஏழு முனி நட்சத்திரக்கூட்டத்தில் தவம் செய்து கொண்டிரு -ந்த ஒருவரே, தன் கொள்கைகளைப் பரப்ப நரேந்திரனாக தோன்றியிரு -க்கிறார்' என்று பரமஹம்ஸரே இவரை பற்றிக் குறிப்பிட்டுள்ளார். மேலும், "சிவாம்சம் உடையவர் நரேன்' என்பதும் ராமகிருஷ்ணரின் வாக்கு. நரேந்திரன் சட்டக் கல்வி பயின்று கொண்டிருந்த காலத்தில், இரவுப் போதில் தனது உறவினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று பாடங்களைப் பயில்வார். அவ்வப்போது கந்தர்வர்களைப் பழிக்கும் தனது கம்பீரக் குரலால் பாடவும் செய்வார். அந்த வீட்டுக்கு எதிரே ஒரு இளம் விதவைப் பெண் வாழ்ந்து வந்தாள். நரேந்திரனின் கட்டுமஸ்தான உடலும், இளமையும், வசீகரமான திருமுகமும் அவளது காம இச்சையைக் காட்டுத் தீயாக வளர்த்தது. ஓரிரவு நரேந்திரனிடம் தன்னை "ஒப்படைக்க' வந்தாள் அந்தப் பெண். ஆனால் நரேனோ, அவளைத் தனது தாயாகக் கருதி வணங்கினார்; நல்ல அறிவுரை தந்து வெளியேற்றினார்.
நரேந்திரனின் வாலிப வயதில் மற்றொரு சோதனையும் வந்தது. வசதியாக வாழ்ந்த நரேனுடைய குடும்பம், அவருடைய தந்தையின் திடீர் மரணத்தால் வறுமைப் பள்ளத்தாக்கில் தள்ளப்பட்டது. பரமஹம்ஸரின் வார்த்தைகளில் சொல்வதானால், "வேக வைத்த வாழைக் காய்க்கு உப்பு வாங்கக்கூட வசதியில்லாமல் போனது' அவர் குடும்பம். அந்தக் கடுமையான நெருக்கடிக் காலத்தில், பணக்கார இளம் விதவை ஒருத்தி, நரேந்திரனை தன் வயமாக்க முனைந்தாள். தன் தேக இச்சைகளைத் தீர்த்தால் வறுமையின் சோகச் சுவடுகளைத் துடைத்தெறிவதாகத் தூதனுப்பினாள். ஆனால், "துறவியாக வேண்டும்' என்ற லட்சியத் தீப்பந்தத்தைக் கண்களில் சுமந்திருந்த வீரத் திருமகனாகிய நரேன், பெண்ணுக்கும் பொன்னுக்கும் அடிமையாகவில்லை. "பாரத தேசம் மேம்பட வேண்டும்' என்ற ஒரே சிந்தனையில் ஊறியிருந்த அவரை காம நேசமா கலக்கிவிடும்?
சித்திகளை மறுத்த சித்தர்
அவர் பெண், பொன், மண் ஆசைகளை மட்டுமா வென்றிருந்தார்? அவரது குருநாதரான ராமகிருஷ்ணர், ஒரு முறை அவரிடம், ""நரேன்! நான் ஏராள -மான ஆன்மீகச் சாதனைகளைப் பயின்றதனால் எனக்கு அணிமாதி அட்ட சித்திகளும் வசமாகிவிட்டன. நானோ அவற்றை பயன்படுத்தப் போவதில் -லை. நீ அவற்றை என்னிடமிருந்து பெற்றுக் கொள்கிறாயா?'' என்று கேட்டார். உடனே நரேந்திரன், ""இந்த சித்திகளால் ஆன்மீக முன்னேற்றம் உண்டாகுமா? இவற்றால் முக்தியைப் பெற முடியுமா?'' என்று கேட்டார். "சித்திகளை முக்திக்கான தடைக் கற்கள்' எனப் போதிக்கும் ராமகிருஷ்ணர், "இல்லை' என்ற உண்மையைத் தனது தலைமைச் சீடனுக்கு உரைத்தார். ""அப்படியென்றால் அந்த சித்திகள் எனக்குத் தேவையில்லை'' என்று கம்பீரத்துடன் மறுத்துவிட்டார் நரேந்திரன். பின்னாளில் அவர் "சுவாமி விவேகானந்தர்' என்ற பெயர் தாங்கி மேலை நாடுகளுக்குச் சென்றபோது, அங்கே பலர் அவரிடம், ""நீங்கள் இந்திய நாட்டுத் துறவியா? அப்படியெனில் எதாவது சித்து வேலை தெரியுமா?'' என்று கேட்பார்கள். ""சித்திகளா? அவைகளுக்கும், மெய்யான ஆன்மீகத்துக்கும் சம்பந்தமேயில்லை'' என்று பதில் தருவார் விவேகானந்தர். ஆனால் உண்மையில் விவேகானந்தரும் ஒரு சித்த புருஷரே! அவர் "வேண்டாம்' என மறுத்தும், அவரது குருநாதரான ராமகிருஷ்ணர், சித்திகளை அவருக்கு அருளியிருக்க வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணச் சம்பவம் இங்கே! மேலை நாட்டில் ஒருவர், தனது வீட்டுக்கு விவேகானந்தரை விருந்துக்கு அழைத்தார்; சிறிது நேரம் அவரோடு வரவேற்பறையில் அமர்ந்து பேசிவிட்டு, திடீரென வெளியே சென்று அந்த அறைக் கதவைப் பூட்டிவிட்டார். ஆயின் சற்று நேரத்தில் தனது இல்லத்தின் பிரதான அறையில், மற்ற விருந்தினர்களோடு விவேகானந்தர் அமர்ந்து உரையாடிக் கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்து போனார் வீட்டின் உரிமையாளர். "பூட்டிய அறையிலிருந்து இவர் எப்படி வெளியே வந்தார்?' என்ற வியப்போடு ஓடிச் சென்று, வரவேற்பறையைத் திறந்து பார்த்தார். உள்ளே இன்னொரு விவேகானந்தர் அமைதியாக உட்கார்ந்திருந்தார்!!
ஆபத்தில்லாத ஆன்மீக வழி
நாம் "மாஜிக்' நிகழ்ச்சிகளைப் பார்க்கிறோம்! அதில் மாஜிக் நிபுணர்கள், எத்தனையோ வித்தைகளைக் காட்டி நம்மைப் பிரமிக்க வைக்கின்றார். அதற்காக நாம் கை தட்டி மகிழ்வோமேயன்றி, அந்த நிபுணர்களைக் கடவுள் என நம்பி வழிபடுகின்றோமா? அப்படிச் செய்தால் அது நம்முடைய பிழைதானே? ஆனால் இதே ஜாலங்களை காவியுடை அணிந்து துறவி வேடத்தில் உள்ள எவரேனும் ஒருவர் செய்தால் அவரை "இறைவன்' என்கிறோம். இதில் குற்றவாளி அவர் மட்டும்தானா? இல்லை! நாம்தான் ஒருவகையில் அறியாமையினால் குற்றங்களுக்குத் துணை போகின்றோம்.
ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகானந்தர் என்றில்லை... பாரத தேசத்தின் அனைத்து மாநிலங்களிலும் எத்தனையோ உண்மையான அருளாளர்கள் அவதரித்து நன்னெறி காட்டியுள்ளனர். அவர்களது வரலாறுகளையும், உபதேசங்களையும் ஊன்றிப் படித்துக் கொண்டிருந்தால்கூட போதும்; போலிகளிடம் ஏமாறாமல் இருக்கலாம்!மறுபடியும் இந்தக் கட்டுரையின் துவக்கப் பகுதியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். இதுவோ கலியுகம்! இதில் மின்மினிகள்தான் அதிக ஆரவாரம் செய்யும். ஆயின் இப்போதும் உண்மை -யான அருளாளர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். நம்மில் பலருக்கு அவர்களை அடையாளம் கண்டறியும் ஆற்றல் இல்லை. இந்நிலையில் ஆன்மீகப் பாதையில் செல்ல விரும்பி, "எவர் உண்மையான சத்குரு?' என்று உணர முடியாது தத்தளிப்பவர்களுக்கு ஒரு அரிய ஆலோசனை :
உண்மையான அருளாளர்களுக்கு ஒரு நாளும் மரணமில்லை. கால நியதி கருதி அவர்கள் பூத உடலைத் துறந்தாலும், புனித உடலோடு அவர்கள் நம்மோடுதான் இருக்கின்றனர். தற்போது உயிருடன் நம் முன்னர் உலா வராவிட்டாலும் உண்மையான மகான்கள் இறப்பதில்லை. எனவே நிஜமான "சத்குரு' வேண்டுமென ஆசைப்படுபவர்கள், நமது பெரியோர்களாலும் முன்னோர்களாலும் ஆராதிக்கப்பட்ட உண்மையான அருளாளர்களில் ஒருவரை தமது குருநாதராகக் கருதி பக்தி செய்யலாம்.நமது பக்தியும், ஞானத் தேடலும் சத்தியமானவையாக இருந்தால் அந்த அருளாளர்கள் நமக்கு ஏதேனும் ஒரு வகையில் வழி காட்டுவார்கள். நமக்குப் பக்குவம் இருந்தால் அவர்களே கனவில் தரிசனமளித்து உபதேசிப்பார்கள்! பக்குவ நிலையில் பழுத்தால் நேரிலும் காட்சி தருவார்கள்! அவ்வளவு தகுதி நமக்கில்லாது போகுமெனில், இப்போதும் உள்ள உண்மையான மகான்களிடம் நம்மை எப்படியாவது அனுப்பி வைத்து உய்வு பெறச் செய்வார்கள். இது ஒன்றே இக்காலத்துக்கு ஏற்ற ஆபத்தில்லாத ஆன்மீக வழி!
Source: http://dinamani.com/edition/story.aspx?SectionName=Vellimani&artid=220141
No comments:
Post a Comment