சுனிதா கிருஷ்ணன் - பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள்
சுனிதா கிருஷ்ணன் - தாய்மையின் விஸ்வரூபம்சில நாட்களுக்கு முன் தமிழ்மணத்தில் ஒருவர் பகிர்ந்த அந்த விடியோவை என்னால் ஒரே தடவையில் பார்க்க முடியவில்லை. நெஞ்சே வெடித்து விடும் போலிருந்தது. தொண்டை கிழியக் கத்திச் செத்துவிட மாட்டோமா என்றிருந்தது.
ஆனால் பின்னால் ஒலித்த உறுதியான குரல் காதுகளில் அதிர்ந்து கொண்டே இருக்கிறது.
"பல்லாயிரக்கணக்கானப் பெண் குழந்தைகளும் சிறுமிகளும் நாள் தோறும் பலாத்காரம் செய்யப்படுவதும், சிறு சலனம் கூட இல்லாமல் இது குறித்து நிலவும் பெருத்த மௌனமுமே என்னைப் பெருஞ்சினம் கொள்ள வைக்கின்றன"
அந்தக் குரலுக்குச் சொந்தமானவர்:
சுனிதா கிருஷ்ணன்
இவர் மனிதப் பிறவி தானா? பெண் தானா?
நாலாயிரம் குழந்தைகளுக்கு மேல் பாலியல் தொழில், மற்றும் கடத்தலிலிருந்து காப்பாற்றியிருக்கும் இவரை என்னவென்று சொல்வது?
பதின்மபருவத்தில் பாலியல் வன்முறைக்கு ஆளான இவர் அதனால் துவண்டு விடாமல் பழகிய ரௌத்திரம் விஸ்வரூபம் எடுத்து நிற்க வைத்திருக்கிறது!
ஆஹா, இவரல்லவா பெண்! இவரல்லவா தாய்? வணங்குகிறேன் சுனிதா உங்களை.
ஐந்து வயது கூட நிரம்பாத பிஞ்சுகளுக்குக் கூட நேரும் கொடுமைகளை இவர் விவரிப்பதைக் கேட்கக் கூட நம்மால் முடியவில்லை. அடி உதை, சித்ரவதை எல்லாம் தாங்கிக் கொண்டு களத்தில் நின்று போராடி இவர் மீட்ட குழந்தைகள் ஆயிரமாயிரம்.
1996 ல் இவர் தொடங்கிய ப்ரஜ்வாலா அமைப்பு ஐந்து முக்கிய பணிகளில் கவனம் செலுத்துகிறது: தடுப்பு நடவடிக்கை, காப்பாற்றுதல், மறுவாழ்வு, ஒருங்கிணைப்பு, பிரசாரம்.
தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானது பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகளுக்குக் கல்வி கொடுப்பது. அதன் மூலம் அவர்களும் அதே பாதையில் சென்றுவிடாமல் தடுப்பது. ஐந்து குழந்தைகளுடன் தொடங்கப்பட்ட இவ்வமைப்பு இப்போது ஐயாயிரம் சிறுமிகளுக்கு மறுவாழ்வு அளித்துள்ளது.
பேருந்து மற்றும் நிலையங்களில் சோதனை நடத்தி குழந்தைகள் கடத்தப் படுவதையும் பாலியல் தொழிலாளிகளின் குழந்தைகள் அதே சுழற்சில் சிக்குவதையும் தடுப்பது. இவ்விடங்களில் நடத்தப்பட்ட சோதனை முலம் மட்டும் 1700 சிறுமிகளும் மொத்தமாக 3200 சிறுமிகளும் ப்ரஜ்வாலா மூலம் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
அத்தொழிலிலேயே சிறுவயது முதல் ஈடுபடுத்தப்பட்ட சிறுமிகளைக் காப்பாற்றுவதும் மறுவாழ்வு அளிப்பதும் சவாலான செயல் தான் என்றும் கூறுகிறார் சுனிதா. அவர்கள் உண்மையில் மறுமலர்ச்சி அடைய வெகுகாலம் ஆகிறதாம்.
தனது புனிதப் போரில் சுனிதா சந்தித்த கொடுமைகளும் கொஞ்சநஞ்சமல்ல. கடத்தல் ரவுடிகளிடமிருந்து சிறுமிகளைக் காப்பாற்றப் போன இடத்தில் வாங்கிய் ஆடி உதையால் இவரது வலது காது கேட்கும் திறனை இழந்திருக்கிறது. ஆனால் தனது இழப்பு தான் காப்பாற்றத் தவறிய, அல்லது காப்பாற்றியும் உயிரழந்த குழந்தைகளின் இழப்புக்கு முன் ஒன்றுமில்லை என்று நெஞ்சம் உருகுகிறார் சுனிதா. (அதை என்னால் மொழிபெயர்த்து எழுத முடியாது. மன்னியுங்கள்.)
தன் போராட்டத்தில் மிகப்பெரிய சவாலாக இவர் சொல்வது, ரவுடிகளிடம் அடிவாங்குவதோ, மிரட்டல்களோ இல்லை; பாதிக்கப்பட்டவர்களை நம்மில் ஒருவராகப் பார்க்கும் மனப்பான்மை சமூகத்தில் இல்லாதது தான், என்கிறார்.
அவர்கள் மீது பரிதாபப்படுபவர்கள் கூட, பண உதவி செய்பவர்கள்கூட தங்கள் வீட்டிலோ அலுவலகத்திலோ வேலைக்குச் சேர்த்துக் கொள்ளப் பயப்படும் அறிவீனத்தை எண்ணி மனம் வெதும்புகிறார்.
சமூகத்தில் இந்த மனப்பான்மை இருக்கும் வரை இவர்களுக்கு மறுவாழ்வு என்பது மிகக்கடினமான ஒன்று தான் என்பது தான் இவரது ஆதங்கமாக வெளிப்படுத்துகிறார்.
இறுதியாக, சுனிதா அழுத்தமாக வலியுறுத்துவது, "சக மனிதர்களாக இவர்களைப் பார்த்து அன்பு காட்டுங்கள். ஏனெனில் எந்த ஒரு மனிதப்பிறவிக்குமே நேரக்கூடாதது இந்தப் பிஞ்சுக் குழந்தைகளுக்கு நேர்ந்திருக்கிறது."
ஏதாவது செய்யவேண்டும் என்று நினைப்பவர்கள் இவரது போராட்டத்துக்கு இயன்றவரை உதவுவோம். நாம் செய்யக் கூடிய மிகச்சிறிய செயல் அது மட்டும் தான்.
Source: http://ojasviviji.blogspot.com/2010/07/blog-post_07.html
No comments:
Post a Comment