உடல் இங்கே... உறவுகள் எங்கே? 2G மர்மச் சுழல்
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சாதிக் பாட்சாவின் உடலுக்கு போஸ்ட்மார்ட்டம் நடந்த நேரம். சாதிக் பாட்சாவின் நண்பர்களும், ஊழியர்களும் பதைபதைப்புடன் காத்திருந்த சமயத்தில், சாதிக் பாட்சாவின் மரணம் பற்றி விசாரித்தோம். அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளை அப்படியே இங்கே தருகிறோம்...
1. மார்ச் 16-ம் தேதி காலை நேரத்தில், சாதிக் பாட்சாவை காரில் யாரோ ஒருவர் அழைத்துச் சென்றதாகவும், பின்னர் ஒரு மணி நேரம் கழித்து அவரே திருப்பிக் கொண்டுவந்து விட்டதாகவும் தெருவாசிகள் சொல்கிறார்களே? அது, உண்மையா... அழைத்துச் சென்றவர் யார்?
2. ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி திகார் சிறையில் உள்ள சாகித் பால்வாவுக்கும் சாதிக் பாட்சாவுக்கும் நெருக்கம் உண்டு. அந்த வகையில், பண பரிவர்த்தனை தொடர்பான பல்வேறு கேள்விகளுக்குப் பதில் சொல்லவேண்டிய சூழ்நிலையில் சாதிக் இருந்தார் என்றும், அதனால் மும்பையில் இருந்து சில நிழல் மனிதர்கள் கிளம்பிவந்து சாதிக்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் என்றும் சொல்லப்படுகிறதே... அது உண்மையா?
3. கடந்த இரண்டு வருடங்களில் பலமுறை சாதிக் வெளிநாடுகள் போய் வந்திருக்கிறார். அந்த நேரங்களில் நடந்த சந்திப்புகளை விசாரிக்க மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் முடிவுசெய்து, விசாரணைக்காக அழைத்ததாகச் சொல்கிறார்கள். அதற்குள் என்ன நடந்தது?
4. சாதிக்கை சுதந்திரமாக உலவவிட்டு இருந்தாலும், அவரை எந்த நேரமும் கண்காணிப்பு வளையத்தில்தான் சி.பி.ஐ. வைத்து இருந்ததாக சொல்கிறார்களே? அப்படியானால், அவர் இறந்த அன்றும் அவரது வீட்டு வாசலில் நிச்சயமாக சி.பி.ஐ. இருந்திருக்குமே... அவர்கள் ஏன் அசம்பாவிதத்தைத் தடுக்கவில்லை?
5. சாதிக்கின் உடலை அவரது வீட்டிலிருந்து அப்போலோ மருத்துவமனைக்கு அனுப்பிய அவரது குடும்பத்தினர், வீட்டின் வெளியே பூட்டுப் போட்டுவிட்டு எங்கே கிளம்பிப் போனார்கள்? பிற்பகல் 1.30 மணியில் இருந்து மாலை 5 மணி வரையில் அவர்கள் வீட்டிலும் இல்லை, மருத்துவமனையிலும் இல்லை. எங்கே போனார்கள்? அவர்களை யாரோ அழைத்துச் சென்று 'நடந்ததை இப்படித்தான் சொல்லவேண்டும்' என்று ரிகர்சல் நடத்தியதாகச் சொல்கிறார்களே... அது உண்மையா? யார் அவர்கள்?
6. மாலை 5 மணி வரை சாதிக் வீட்டு வாசலில் நிருபர்களும் போலீஸாரும் தடய அறிவியல் துறை அதிகாரிகளும் காத்துக் கிடந்தனர். இந்த நிலையில், திடீரென மாலை 5 மணிக்கு சாதிக் பாட்சாவின் மனைவி ரெஹானா பானு தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகித் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்தார். இவரை ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தது யார்?
7. தேனாம்பேட்டை போலீஸ், 'சாதிக் பாட்சா இறந்தது எப்போது தெரியும்? யார் முதலில் பார்த்து? நீங்கள் அப்போது வீட்டில் இருந்தீர்களா? வெளியில் எங்கே போனீர்கள்?' என்றெல்லாம் குடும்பத்தினரிடம் கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணான தகவல்கள் வந்ததாகச் சொல்கிறார்களே, உண்மைதானா?
8. பெரம்பலூரில் இருந்து வந்திருந்த சாதிக் பாட்சாவின் நண்பர் ஒருவர், ''சி.பி.ஐ-யின் தீவிர விசாரணை, ரெய்டுகளால்தான் மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்தார் சாதிக் என்கிறபோது, அவசரஅவசரமாக தமிழக அரசு இந்த வழக்கை மீண்டும் சி.பி.ஐ-யிடமே ஒப்படைக்க முடிவு செய்தது ஏன்? சாதிக் பாட்சாவை தற்கொலைக்குத் தூண்டியதாக சி.பி.ஐ-யின் குறிப்பிட்ட சில அதிகாரிகள் மீது குற்றம்சாட்ட அவரது உறவினர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டதே...'' என்று வருந்துகிறார். ஏன் இந்த வழக்கு அவசரமாக சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது?
8. சாதிக்கின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த ராயப்பேட்டை ஆஸ்பத்திரி மருத்துவர் குழுவினர்,''சாதிக் பாட்சாவின் உடலில் எந்தக் காயமும் இல்லை. கழுத்து இறுக்கப்பட்டதால், மூச்சுத் திணறி இறந்திருக்கிறார். அவரது கழுத்துப் பகுதி சதையை பரிசோதனைக்கு எடுத்து அனுப்பி இருக்கிறோம். அந்த ரிசல்ட் வந்தபிறகுதான், மற்ற விவரங்களைச் சொல்லமுடியும்'' என்கிறார்கள். இதன்படி பார்த்தால், கழுத்து இறுக்கப்பட்டு இறந்த நிலையில், சாதிக் பாட்சா தூக்கில் தொங்கவிடப்பட்டாரா? அல்லது, தூக்கு மாட்டியதால் கழுத்து இறுகி, மூச்சுத் திணறி இறந்தாரா?
9. சாதிக் பாட்சா இறந்தது எப்போது என்கிற கேள்விக்கு மருத்துவர்கள் தரப்பில், 'ஆஸ்பத்திரிக்கு கொண்டுவருவதற்கு 12 மணி நேரத்துக்குள் மரணம் நிகழ்ந்திருக்கலாம்’ என்று பொத்தாம்பொதுவாக சொல்கிறார்கள். ஆனால், சாதிக்கின் குடும்பத்தினர் மதிய வேளையில்தான் தூக்கு மாட்டி இறந்தார் என்று சொல்கிறார்கள். இதில் ஏதோ முரண்பாடு தெரிகிறதே? சாதிக் இறந்த நேரத்தில் வீட்டில் வேறு யாரும் இருந்தார்களா?
10. சாதிக் எழுதி வைத்ததாகச் சொல்லப்படும் கடிதங்களில் காணப்படும் கையெழுத்து அவருடையதுதானா? சாதிக் பாட்சா இறப்பதற்கு முன், சுதந்திரமான சூழலில் எழுதினாரா? மிரட்டல் ஆசாமிகள் எழுத வைத்தார்களா? மனதில் குழப்பத்துடன் இருக்கும்போது எழுதினாரா? இவற்றைப் பழைய கையெழுத்துடன் ஒப்பீடு செய்தால் கண்டுபிடிக்க முடியும்தானே? கடிதத்தில் இருந்தது 15-ம் தேதி என்கிறார்களே, உண்மையா?
11. சாதிக் இறந்தது முதல், அவரது அடக்கம் வரை அவரது முகத்தை மூடிக் கொண்டுபோனது ஏன்? இறந்தது சாதிக் பாட்சாதானா?
இந்தக் கேள்விகளுடன், டெல்லியில் இருந்த ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமியைத் தொடர்புகொண்டு, சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து கருத்துக் கேட்டோம்.
''2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை சி.பி.ஐ. தீவிரமாக விசாரிக்கத் துவங்கியதும், எனக்கு நம்பகமான சோர்ஸில் இருந்து வந்த தகவல்படி, 'ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கியப் பிரமுகர்கள் சிலரை இந்தியாவில் சுட்டுக் கொல்ல துபாயில் இருந்து இரண்டு வெள்ளைக்காரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அதனால், ஸ்பெக்ட்ரம் வழக்கின் முக்கியப் பிரமுகரான ஆ.ராசாவுக்கும் ஆபத்து நேரிடலாம். அவர் வெளியில் இருப்பதைவிட ஜெயிலுக்குள் இருப்பதுதான் நல்லது' என்று அன்றே சொன்னேன். நல்லவேளை! ராசா தற்போது திகார் ஜெயிலில் மிகவும் பாதுகாப்பான வார்டில் இருக்கிறார். வெளியே சென்றால் ஆபத்து என்பதை உணர்ந்து, காவல் நீட்டிப்புக்குக்கூட கோர்ட்டுக்குப் போகாமல் சிறையில் இருந்தபடியே, வீடியோ கான்ஃபரன்ஸை பயன்படுத்துகிறார். சாதிக் பாட்சாவுக்கு கீழக்கரை, துபாய், மலேசியா நாடுகளுடன் ஹவாலா தொடர்பு உண்டு.
ஆ.ராசா பணத்தை இவர் மூலம் டீல் பண்ணியிருக்கலாம் என்பது சி.பி.ஐ-யின் சந்தேகம். ஆனால், சாதிக் பாட்சா ரொம்ப தைரியமானவர். மனக்குழப்பம் இல்லாமல் வெளியில் நடமாடி வந்தார். அவர் தற்கொலை செய்துகொள்ளும் மனோநிலையில் இல்லை. சாதிக்கின் மனைவியும் வக்கீலும் அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் சாதிக்கை 'அப்ரூவர்' ஆகிவிடும்படி அட்வைஸ் பண்ணி இருக்கிறார்கள். இந்தத் தகவல் எப்படியோ வெளியில் கசிந்திருக்கிறது. அதன்பிறகு, யார் அவரைத் தொடர்பு கொண்டார்கள், என்ன பேசினார்கள் என்றெல்லாம் தெரியவில்லை. திடீரென சாதிக் தற்கொலை செய்துகொண்டதாக தகவல் வெளியாகி உள்ளன. இதன் பின்னணியில் நடந்ததை முழுவதுமாக விசாரிக்கவேண்டும். இப்போதெல்லாம் ஹார்ட் அட்டாக்கைக்கூட, திடீரென உண்டாக்கும் அளவுக்கு கிரிமினல்கள் வளர்ந்து விட்டார்கள். காலி சிரிஞ்ச் ஒன்றை ஒருவரின் கையில் குத்தி, வெறும் காற்றை அழுத்திவிட்டால், அது காற்றுக் குமிழியாக ரத்தக் குழாய் வழியாக இதயத்துக்குப் போய் வெடிக்க வாய்ப்பு இருக்கிறதாம். இதுபோன்று எத்தனையோ நவீன வழிகளைக் கையாள்கிறார்கள். அதனால், சாதிக்கின் தற்கொலை சம்பவத்தையும் அந்தக் கோணத்தில் சி.பி.ஐ. விசாரிக்கவேண்டும்!'' என்கிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோரும் சாதிக் பாட்சாவின் மரணம் குறித்து சந்தேகங்களை எழுப்பியுள்ளனர். தமிழக மக்களும் விடை தேடி காத்திருக்கிறார்கள்.
பதில் சொல்லுமா சி.பி.ஐ.?
Thanks to Junior Vikatan. | | |