சந்திரவம்சத்தை சேர்ந்த மன்னன் ரந்திதேவன். பரம தயாளமூர்த்தியான இவனிடம், யார் எது கேட்டாலும் இல்லை என்று சொல்லாமல் கொடுப்பான். இவனது தேசத்தில் யாகங்கள் நடந்த வண்ணம் இருக்கும். மக்கள் பஞ்சமின்றி வாழ தேவர்களைத் திருப்திப்படுத்தும் வகையில் இந்தயாகங்கள் செய்யப்பட்டன. யாகம் செய்தே இவனது கஜானா காலியாகியும் விட்டது.
நல்லவர்களைச் சோதித்து, அவர்களை மற்றவர்களுக்கு வழிகாட்டியாக்குவதற்காக ஆண்டவன் பல சோதனைகளைக் வைப்பான். ரந்திதேவன் விஷ்ணு பக்தன். அவனுக்கு அந்த மகாவிஷ்ணு கொடுத்த சோதனையின் அளவு எல்லை மீறியது. யாகம் செய்வதே பஞ்சம் வரக்கூடாது என்ற கராணத்துக்காகத் தான். ஆனால், ரந்திதேவனின் நாட்டில் பெரும் பஞ்சத்தை உண்டாக்கினான். எங்கும் பசி பசி என்ற ஓலம். ரந்தி
தேவன் அரண்மனைத் தானியக் களஞ்சியத்தில் இருந்த அத்தனை பொருட்களையும் மக்களுக்கு வழங்கினான். அதுவும் காலியானது. ராஜா, ராணி, பிள்ளைகளுக்கு கூட அரண்மனையில் உணவில்லை. அவர்கள் பசியில் தவித்தனர். மக்களுக்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்து விட்டது. தங்கள் இல்லங்களில் இருந்த கொஞ்ச அரிசியைச் சேகரித்து கூழாகக் காய்ச்சி ராஜா வீட்டுக்கு வந்து, ""தாங்களும், ராணியும், பிள்ளைகளும் சாப்பிட்டு எங்களைக் காக்க வேண்டும். உங்களால் பலனடைந்த நாங்கள் இந்த நன்றிக்கடனைக் கூட செய்யாவிட்டால், உங்கள் பிரஜைகளாக வாழ்ந்ததில் அர்த்தமே இல்லை,'' என்றனர்.
மக்கள் சொல்லை மன்னன் தட்டவில்லை. வாங்கிக் கொண்டான். அவர்கள் சாப்பிட இருந்த வேளையில், ஒரு அந்தணர் அங்கே வந்தார். அவர் வேறு யாருமல்ல, மகாவிஷ்ணுவே தான்.
""ராஜா! பசி தாங்கவில்லை. ஏதாவது கொடுங்களேன்,'' என்றார். ராஜா மட்டுமல்ல, அந்த குடும்பத்தினர் அனைவருமே தாங்கள் குடிக்க இருந்த கஞ்சியில் ஒரு பகுதியை அவருக்கு கொடுத்தனர். அவர் குடித்துவிட்டு கிளம்பிவிட்டார். மீதியை குடிக்க இருந்த வேளையில் இன்னொருவன் வந்தான்.
""ராஜா பசி தாங்கலையே,'' என்றான். அவனுக்கும் ஒரு பகுதி தரப்பட்டது. இப்படியே மூன்றாமவன் ஒருவனுக்கும் கொடுத்தார்கள். மிச்சத்தை ராணியும், பிள்ளைகளும் குடித்து விட்டார்கள். ராஜா மட்டும் தன் பங்கைக் குடிக்கவில்லை. ஒருவேளை வேறு யாராவது வந்தால் "இல்லை' என்று சொல்லி, பாவத்தைச் சேர்க்க வேண்டி வருமே! மாலை வரை வராவிட்டால் குடிப்போம்,'' என எடுத்து வைத்திருந்த வேளையில், ஒரு வேட்டைக்காரன் சில நாய்களுடன் வந்தான்.
அவனை நாராயணனாகவே பார்த்த ராஜா அவனுக்கும், நாய்களுக்குமாக கஞ்சியைக் கொடுத்துவிட்டு மயக்க நிலையில் மகாவிஷ்ணுவிடம், ""பரந்தாமா! இங்கே வந்த எல்லாருமே ஏதோ ஒரு துன்பத்துடன் என்னை அணுகினார்கள். அவர்களைப் போல இந்த உலகில் கோடானு கோடி மனிதர்களும், பிற ஜீவராசிகளும் துன்பத்தால் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதனால் அவர்களின் உள்ளம் என்ன பாடுபட்டுக் கொண்டிருக்கும்? அவர்களது உள்ளங்களுக்குள் என்னை அனுப்பி வை. நான் எல்லா ஜீவராசிகளின் துன்பத்தையும் எடுத்துக்கொண்டு எவ்வளவு கஷ்டத்தை வேண்டுமானாலும் அனுபவிக்கிறேன். அந்த துன்பத்திடம் சரணடைகின்றேன் ,'' என்று உருக்கமாகப் பிரார்த்தித்தான். பின்னர். அங்கிருந்த ஒரு குவளையில் இருந்த தண்ணீரைக் குடித்தாவது உயிர் வாழலாம் என குடிக்க இருந்த வேளையிலும், பரந்தாமன் தன் லீலையைக் காட்டினான். அப்போதும், ஒருவன் வந்து "தாகமாயிருக்கிறது' என்று சொல்ல, அவனுக்கு அதை கொடுத்து விட்டான். அப்போது பரந்தாமனிடம்,""கேசவா! இவனுக்கு கொடுத்த இந்த தீர்த்தத்தை உனக்குக் கொடுத்ததாகக் கருதுகிறேன். நீயே இதைப் பருகியதாக நினைக்கிறேன். உன் தாகம் தீர்ந்தால் உலகத்தின் தாகமே தீர்ந்துவிடுமே,'' என்று
வணங்கினான். இந்த தியாகத்தைப் பார்த்து, பரமாத்மாவே அவன் முன் தோன்றி, அவனுக்கு பரமபதத்தை அருளினார்.
http://www.dinamalar.com/aanmeegamNews_Detail.asp?news_id=900