Saturday, May 21, 2011

என்னதான் செய்யும் திமுக!



இந்த அளவுக்கு மோசமான ஒரு சோதனையை திமுக இதுவரை சந்தித்ததே இல்லை என்கிற அளவுக்குக் கனிமொழியின் கைது அந்தக் கட்சியை அனைத்து மட்டங்களிலும் புரட்டிப் போட்டுவிட்டிருக்கிறது. ஆ. ராசாவின் கைது, கலைஞர் தொலைக்காட்சியில் சோதனை, முதல்வரின் மனைவி தயாளு அம்மாள் விசாரிக்கப்பட்டது, என்று ஒன்றன் பின் ஒன்றாக சோதனைகள் வந்தபோதுகூடத் தனது நெஞ்சுரத்தையும், எதையும் சந்தித்துக் கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையையும் இழக்காத திமுக தலைவர் கருணாநிதி, கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு ஆடிப் போயிருக்கிறார் என்பதை விட இடிந்து போயிருக்கிறார் என்பதுதான் உண்மை.

÷முந்தைய நிகழ்வுகளின்போது பதவி பலம் துணிவைக் கொடுத்தது. தேர்தலில் வெற்றி பெற்றுவிட்டால், காங்கிரஸ் தனக்குத் துணை நிற்கும் என்றும், நீதித்துறைகூடத் தனது குடும்பத்தினருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கத் தயங்கும் என்றும் கருணாநிதி கருதினார் என்றுகூட அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள். அவர் நம்பினார் என்பதைவிட அவரைச் சுற்றி இருந்தவர்கள் அவரை நம்ப வைத்து ஏமாற்றிவிட்டனர் என்பதுதான் உண்மை.

÷""தலைவரே, முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த முறை பணம் முறையாகப் பட்டுவாடா செய்யப்பட்டிருக்கிறது. நமது ஐந்தாண்டு ஆட்சியில் ஏதாவது ஒரு இலவசத்தால் பயனடையாத குடும்பமே தமிழகத்தில் கிடையாது. குறைந்தபட்சம் திமுக 80 இடங்களிலும், கூட்டணிக் கட்சிகள் 50 இடங்களிலும் வெற்றி பெற்று விடும்'' என்று அவரை நம்ப வைத்தவர்கள் அமைச்சர்களும் கட்சிக்காரர்களும் மட்டுமல்ல, அவருக்கு நெருக்கமானவர்கள் என்று கருதப்பட்ட மாநில புலனாய்வுத் துறை அதிகாரிகளும், பத்திரிகையாளர்களும்கூட.

÷""நீதிபதி சைனியின் உறவினர்களை நன்றாகத் தெரியும். அவர்கள் மூலம் அவரைச் சரிக்கட்டியாகிவிட்டது. சந்தேகம் ஏற்படாத வகையில் கனிமொழிக்கு ஜாமீன் வழங்க அவர் சம்மதித்துவிட்டார்'' என்றுகூட ஒரு மாநிலங்களவை உறுப்பினர் உறுதி அளித்திருந்தாராம். மூத்த வழக்கறிஞர் ஜேட்மலானியை கனிமொழிக்காக வாதாட ஒப்பந்தம் செய்ததிலேயேகூட ஊழல் நடந்ததாகவும், ஜேட்மலானி வாதிட்டதாலேயே வழக்கு ஜெயிக்கவில்லை என்றும்கூட கூறப்படுகிறது.

÷1977-ல் எம்.ஜி.ஆரின் அதிமுகவிடம் தோற்றுப் போய் ஆட்சி இழந்தபோதும், 1991-ல் ராஜீவ் காந்தி படுகொலையைத் தொடர்ந்து மிகப்பெரிய தேர்தல் தோல்வியைச் சந்தித்தபோதும் கருணாநிதியால் கட்சியை நிலைகுலையாமல் காப்பாற்ற முடிந்தது. அதற்குக் காரணம், அவருக்கு வயதும் துணிவும் சாதகமாக இருந்தன. இப்போது முதுமை ஒரு புறமும், முன்பு போலப் பம்பரமாய்ச் சுற்றிச் சுழன்று செயல்பட முடியாமல் உடல்நலக் குறைவு இன்னொரு புறமும் கருணாநிதியை முடக்கிப் போட்டிருக்கிறது. போதாக் குறைக்குக் குடும்பப் பிரச்னைகள் வேறு.

÷""தலைவரைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. குடும்பத்தை கவனிக்க வேண்டிய நேரத்தில், தனது மனைவி மக்களைப் பற்றிக் கவலையே படாமல் கட்சியைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தார். இப்போது கட்சியைக் காப்பாற்ற வேண்டிய நேரத்தில் அவர் குடும்பத்தைப் பற்றிய கவலையில் மூழ்கி இருக்கிறார். 2001 தேர்தலில் "இதுதான் எனது கடைசித் தேர்தல்' என்று அறிவித்தது போல, அவர் தேர்தல் தோல்விக்குப் பிறகு அரசியலிருந்து விலகி இருந்தால் இன்று அவருக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது'' என்று சிஐடி காலனி வீட்டில், கனிமொழியின் கைது செய்திக்குப் பிறகு கூடியிருந்த முன்னாள் அமைச்சர்களில் ஒருவர் கூறியதைத் தொண்டர்கள் பலரும் பேசத் தொடங்கிவிட்டனர்.

÷2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடில் நடந்த முறைகேடுகள் பற்றிய விசாரணை ஒருபுறம் தீவிரமடைந்து வருவதால் ஆ. ராசாவின் நிலைமை மேலும் தர்மசங்கடமாகிறது. கலைஞர் தொலைக்காட்சிப் பிரச்னை, கனிமொழி கைதுக்குப் பிறகு என்னவாகும் என்பதை உடனடியாகச் சொல்ல முடியவில்லை. அதிகாரத்தை எல்லாம் நிர்வாக இயக்குநர் சரத்குமாருக்கு தான் அளித்துவிட்டதாகக் கூறி தயாளு அம்மாள் தப்பித்துக் கொள்ள முடியுமா என்பதும் சந்தேகமாக இருக்கிறது. 60% பங்குகளை வைத்திருக்கும் ஒருவர் தனக்குத் தொடர்பே இல்லை என்று பிரச்னையிலிருந்து நழுவ முடியுமா என்று கேள்வி எழுப்புகிறது சி.பி.ஐ.

÷இனி அடுத்த கட்டமாகக் கலைஞர் தொலைக்காட்சி முடக்கப்படக் கூடும். முன்பு ஜெ.ஜெ. டிவியை முடக்குவதற்காகக் கூறப்பட்ட எல்லா காரணங்களும் இப்போது கலைஞர் தொலைக்காட்சிக்கும் பொருந்தும் என்று கூறுகிறார்கள்.

÷மிகவும் மோசமான நிலையில் இருப்பது கருணாநிதி குடும்பத்தில் காணப்படும் குழப்பம்தான். "கனிமொழிக்காகக் கட்சியை ஏன் காவு கொடுக்க வேண்டும்?' என்கிற கேள்வியுடன் மு.க. அழகிரியும், மு.க. ஸ்டாலினும் இருக்கிறார்கள் என்றும், "20% பங்கு வைத்துக் கொண்டிருக்கும் எனது மகள் சிறையிலும், 60% பங்கு வைத்திருக்கும் தயாளு அம்மாளும் குடும்பமும் ஸ்பெக்ட்ரம் பணத்தை அனுபவிப்பது என்ன நியாயம்?' என்று ராஜாத்தி அம்மாள் தரப்பும் கருணாநிதியைத் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுகிறது.

÷""இத்தனை பிரச்னைக்கும் காரணமே தயாநிதி மாறன்தான்'' என்று கட்சியினர் மத்தியில் பரவலாக அதிருப்தி ஏற்பட்டிருக்கிறது. மாறன் சகோதரர்களுடன் ஏற்பட்ட மனக்கசப்பும், தயாநிதி மாறன் எப்படியாவது ஆ. ராசாவை அகற்றிவிட்டுத் தான் மீண்டும் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராவதற்குச் செய்த பின்னணி வேலைகளும்தான் இத்தனைக்கும் காரணம் என்று கூறி வருத்தப்படாத கட்சிக்காரர்களே கிடையாது.

÷""ஆ. ராசா பலிகடா ஆக்கப்பட்டிருக்கிறார்'' என்று தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார், முன்னாள் தொலைத் தொடர்புத் துறை அமைச்சருக்கு நெருக்கமான வழக்கறிஞர் ஒருவர். ""2009 மக்களவைத் தேர்தலுக்கு ஆ. ராசா கொடுத்த பெரும் பணம்தான் திமுக கூட்டணி தமிழகம் (27), புதுவை (1) இடங்களில் வெற்றி பெறக் கை கொடுத்தது. கலைஞர் தொலைக்காட்சி தொடங்குவதற்கும் ஆ. ராசாவிடமிருந்துதான் பணம் பெற்றுக் கொண்டார்கள். அது ஏன்? இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இவர்கள் செலவழித்த பணம் எங்கிருந்து வந்தது?' ராசா கைதானபோது கவலைப்படாதவர்கள், அவருக்கு ஜேட்மலானி போன்ற மூத்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட வேண்டும் என்று நினைக்காதவர்கள் இப்போது கனிமொழிக்கு ஒன்று என்றால் மட்டும் துடிதுடித்துப் போகிறார்களே, அது என்ன நியாயம்?'' என்று கேள்வி எழுப்பினார் அந்த ராசாவின் நண்பர்.

÷""ராசா ஒரு "தலித்' என்பதால் பழிவாங்கப்படுகிறார் என்று தலைவர் சொன்னபோது அதை நாங்கள் நம்பினோம். இப்போதுதான் தெரிகிறது, ராசா ஒரு தலித் என்பதால்தான் தலைவர் அவரைப் பலிகடா ஆக்கப் பார்த்திருக்கிறார். தனது மனைவியும் மகளும் நிரபராதிகள், ஒன்றும் தெரியாதவர்கள் என்றும், ஆ. ராசாதான் அத்தனை தவறுகளுக்கும் காரணம் என்றும் நீதிமன்றத்தில் வாதாட எப்படி மனம் வந்தது?'' தன்னை வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாத, கடந்த திமுக ஆட்சியில் பொறுப்பான பதவி வகித்த "தலித்' ஒருவரின் குமுறல் இது.

÷""தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் மீது கருணாநிதிக்கு எப்போதுமே உதட்டளவுப் பாசம்தான் இருந்திருக்கிறது. இதற்கு நேர் எதிராக முதல்வர் ஜெயலலிதாவைப் பாருங்கள். சீனியர்கள் பலர் இருந்தும்கூட, தாற்காலிக பேரவைத் தலைவராக குடியரசுக் கட்சித் தலைவர் செ.கு. தமிழரசனைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். முதல்வர் ஜெயலலிதாவிலிருந்து அத்தனை சட்டப்பேரவை உறுப்பினர்களையும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த செ.கு. தமிழரசன் மூலம் பதவிப் பிரமாணம் செய்ய வைத்து நிஜமாகவே ஒரு புரட்சியைச் செய்து காட்டி இருக்கிறார் முதல்வர். இதை கருணாநிதி நிச்சயமாகச் செய்திருக்க மாட்டார்'' என்று கருத்துத் தெரிவித்த இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் கணிப்பின்படி, ஆ. ராசா அப்ரூவராகக் கூடும்.

÷இன்றைய நிலையில் திமுக மத்திய அமைச்சரவையில் தொடருமா என்கிற கேள்வி எழுப்பப்படுகிறது. காங்கிரஸ் திமுகவைக் கழற்றி விடுமா என்கிற கேள்வியும் எழுப்பப்படுகிறது. இரண்டுமே நடக்காது என்கிறார்கள் தில்லியிலுள்ள அரசியல் நோக்கர்கள்.

÷""ஆட்சியையும் இழந்துவிட்ட நிலையில் திமுகவுக்கு இருக்கும் கொஞ்சநஞ்சப் பாதுகாப்பு மத்திய அரசில் அங்கம் வகிப்பதுதான். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதால் திமுகவுக்கு என்ன லாபம் ஏற்பட்டுவிடப் போகிறது. நிலைமை மேலும் மோசமாகக் கூடும். அந்தத் தவறைக் கருணாநிதி ஒருநாளும் செய்யமாட்டார்'' என்பதுதான் பரவலான கருத்து.

÷காங்கிரஸýம் சரி, திமுகவைத் தனது கூட்டணியிலிருந்து விலக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆதர்ஷ் அடுக்குமாடிக் குடியிருப்பு, காமன்வெல்த் போன்ற ஊழல்களில் சிக்கி இருக்கும் நிலையில் திமுகவை ஊழல் என்று காங்கிரஸ் கூறுவது "ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை' என்ற கதையாகத்தான் இருக்கும்.

÷""தமிழகத்தில் அதிமுக ஆட்சியுடன் சுமுகமான உறவை வைத்துக் கொள்ள நிச்சயமாகக் காங்கிரஸ் தலைமை விரும்பும். அதற்காக, திமுகவை வெளியே அனுப்பிவிட்டு அதிமுகவுடன் உடனடியாகக் கைகோர்க்குமா என்பது சந்தேகம்தான். பலவீனமான திமுகவின் தோழமையும், வலிய நேசக்கரம் நீட்டும் அதிமுகவின் ஆதரவும் கிடைத்தால் காங்கிரஸýக்குக் கசக்கவா செய்யும்? அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு மூன்று ஆண்டுகள் இருப்பதால், இப்போதைக்கு உறவில் மாற்றம் இருக்காது. ஆனால், திமுகவுக்கு அதனால் எந்தவித லாபமும் இருக்காது. இதுதான் நிலைமை'' என்று கணிக்கிறார்கள் தில்லி அரசியல் பார்வையாளர்கள்.

÷திமுகவின் நிலைதான் என்ன? என்ன செய்வது என்று சிந்திக்கக்கூட முடியாத நிலையில் இருக்கிறது திமுக. எந்தக் கருணாநிதியால் பல சோதனைகளைக் கடந்து திராவிட முன்னேற்றக் கழகம் காப்பாற்றப்பட்டதோ, அதே கருணாநிதியின் குடும்பப் பாசத்தால் திமுக இப்போது நிலைகுலைந்து போயிருக்கிறது.

கருணாநிதியை விலக்கி நிறுத்திவிட்டுக் கட்சித் தலைமையிடத்து திமுகவை வழிநடத்தக் கூடிய திறமை யாருக்குமே இல்லை என்பதுதான் எதார்த்த உண்மை.

திமுக சார்பாக ஆங்கிலத் தொலைக்காட்சிச் சேனல் விவாதங்களில் பங்கேற்க நடிகை குஷ்பு அனுப்பப்படுகிறார் என்றால், பார்த்துக் கொள்ளுங்கள். சுயமரியாதை, பகுத்தறிவு என்றெல்லாம் பேசி ஆட்சியைப் பிடித்த கட்சி இப்போது சுயமரியாதையை முற்றிலுமாக இழந்து, "விதிவிட்ட வழி' என்கிற பகுத்தறிவுடன் செயல்பட வேண்டிய நிலைமை.

÷இதையெல்லாம் முன்கூட்டியே எதிர்பார்த்து இருந்ததால்தானோ என்னவோ, அறிஞர் அண்ணா தனது தம்பிகளிடம் "எதையும் தாங்கும் இதயம் வேண்டும்' என்று வலியுறுத்தினார்? என்னே அண்ணாவின் தீர்க்க தரிசனம்!

http://dinamani.com/edition/story.aspx?&SectionName=Tamilnadu&artid=421195&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=

கருணாநிதியின் து(வ)க்கம்

சர்க்காரியா கமிஷன்: 1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் – கருணாநிதி பற்றும் அவர் அமைச்சர்கள் மீது அப்போதிருந்த வானளாவிய ஊழல்கள் பற்றி விசாரிக்க – ஒரு அப்பழுக்கற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் இது.

நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா (1916 – 2007) - 2003-ல் எடுத்த புகைப்படம்; நன்றி: பிரன்ட்லைன்

இதே சர்க்காரியா அவர்கள், பின்னாளில் (1983) மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்ந்தறிந்து, சிபாரிசுகளை முன்வைக்க ஒரு அதே இந்திரா காந்தியினால் கமிஷன் வைக்கப் பட்டு அதன் தலைவராகப் பணியாற்றினார், மிகவும் சிறப்பாக..

ஆனால், நான் சர்க்காரியா கமிஷன் என்று ஒத்திசைவில் எழுதுவது 1976 கமிஷனைப் பற்றி மட்டும் தான்.

ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி இங்கு நான் கொடுக்க விரும்புகிறேன் – நம் கருணாநிதியின் கயமைப் பின்புலம் புரிவதற்காக மட்டும் – இதனை திமுகவின் வரலாறாகக் கொள்ள முடியாது.

கயமைநிதியின் (சர்க்காரியா கமிஷன் வரையிலான) அவசர வரலாறு

1944-ல் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து, ஈவேரா திராவிடர் கழகத்தைத் துவக்கினார். அப்போது, அதில் ஒரு தொண்டனாக இருந்த கருணாநிதிக்கு வயது இருபது தான்! இவர் அப்போது அண்ணாதுரையின் அடிவருடிகளில் ஒருவராகவும் அவர் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார்.

1947-ல் இந்திய விடுதலை ஈ வே ரா ‘பெரியாரால்’ துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டபோது – அண்ணாதுரை பெரியாரிடமிருந்து கருத்தளவில் மாறு பட்டார். மேலும் அண்ணாதுரை, தன்னை ஒரு சமூகச் சேவை ஆளாக மட்டும் கருதிக் கொள்ளாமல், அரசியல்-பதவிகள் மூலமாகவும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், ஈவேராவின் ஆளுமை மிகவும் வலியதான ஒன்றான காரணத்தால் அண்ணாதுரையால் அவரை எதிர்கொண்டு, தன் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை.

இச்சமயம் EVK சம்பத் (பெரியாருடைய மருமகன்) தான் ஈவேராவுடைய அடுத்த தலைமுறை வாரிசாக, பரவலாக அறியப்பட்டார் – அண்ணாதுரையோ அல்லது வேறு எந்த தலைவரோ அல்லவே அல்ல. சம்பத் ஒரு படித்த, பண்பான, சதிமனம் இல்லாத, ஒரு தலைவர்.

தம் பதவி/அதிகார வேட்கையை அடக்கிக் கொள்ளவே முடியாத, அதே சமயம் சரியான நேரத்துக்குக் காத்திருந்த கருணாநிதி, இப்போது அண்ணாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து திராவிடர் கழகத்திலிருந்து சம்பத்தைப் பிரித்து, ஈவேராவை, பலமிழந்தவராக்கினார். இதற்கான காரணமாக அப்போது அவர்கள் சொன்னது – ஈவேரா தன்னை விட வயதில் மிக இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது…

இப்படி ஒரு உப்பு சப்பில்லாத, இன்னொருவரின் பிரத்யேக வாழ்க்கையில் தலையிட்டு (ஈவேரா ஒளிவு மறைவு கொண்டவரே அல்ல; கருணாநிதிகளைப் போலல்லாமல் – மணியம்மையை அவர் ஏமாற்றியோ, நயவஞ்சகமாகவோ திருமணம் செய்து கொள்ளவில்லை; கண்ட, காணாத பெண்களையும் வன்புணர்ச்சி செய்யவில்லை), கிடைத்தது ஆதாயம் என்று சம்பத்தைப் பிரித்து – 1949-ல் திமுக உதயமாகிறது.

அப்போது திமுகவில் அறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள் – நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன், அண்ணாதுரை. இப்போதும் 25 வயதே ஆன கருணாநிதி அண்ணாதுரையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். வசீகரத் தலைவரான அண்ணாதுரை, ஒரு விதத்தில், கருணாநிதியின் வழிமுறைகள், நேர்மையின்மை போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவர் சொல்லை தட்டாமல் கேட்பது, பொறுத்துக் கொள்வது என்கிற வழியை, தன் அரசியல் தன்னலம் கருதிச் செய்து கொண்டிருந்தார்.

அப்போதே கருணாநிதி திரைக்கதை-வசனம் – அதாவது அடுக்குமொழி மொக்கை, ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள், வாய்ப்பேச்சு வீரம் – உள்ளிட்ட குப்பைகளை எழுதி வந்தார். MGR உடன்தொடர்பு ஏற்பட்டு பணி செய்யும்போது, அவருடைய வசீகரம், மற்றும் திரைபிம்பத்தை திமுக (அதாவது, தான்) உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார், கருணாநிதி.

1953-ல் MGR சேருகிறார் – திமுகவில். இவருக்கு, கருணாநிதி போலல்லாமல், அண்ணாதுரை மேல் மிகுந்த மரியாதையும் கூட . கட்சிக்கு MGR வருகையினால் ஏகப்பட்ட ஆதரவு மக்களிடையே பெருகுகிறது.

ஆனால் சம்பத்துக்கு இம்மாதிரி கொள்கைப்பிடிப்பில்லாமல் திரைப்பட நடிகர்களைச் சேர்ப்பதில் பிடித்தமில்லை. மேலும் அண்ணாதுரை+கருணாநிதியின் அரைவேக்காட்டு ‘திராவிடநாடு’ போன்ற கோஷங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய விரிசல்கள் – ஆனால், MGR பிம்பத்தையும், அண்ணாதுரையின் வசீகரத்தையும் மீறி, சம்பத் திமுகவில் ஏகோபித்த ஆதரவு பெற்றவராக விளங்கினார்.

பதவி சுகம் காண அல்லாடும், கருணாநிதிகளுக்கு இது பொறுக்குமா? ஏற்கனேவே இவர் 1957-ல் MLA வேறு ஆகியிருந்தார் – அப்போது இவருக்கு வயது 33.

சம்பத்துக்கு எதிராக சூழ்ச்சிகள் பல செய்து (அடிதடிகள், மிரட்டல்கள், கொலைகள், துரோகங்கள் என்று பலப்பல) – MGR விசுவாசிகளை, அண்ணாதுரையின் வசீகரத்தை – காரிய மவுனத்தை, உபயோகித்து – சம்பத்தையே திமுக விலிருந்து விலக்கினார் கருணாநிதி…

ஆக, 1961-ல் சம்பத் அண்ணாதுரை-கருணாநிதி சகவாசத்தை வெறுத்து ஒதுக்கி, இவர்களிடமிருந்து விலகி பழ நெடுமாறன் (எப்பேர்ப்பட்ட மகத்தான மனிதர், இந்த நெடுமாறன்!), கண்ணதாசன் போன்றோருடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். பின், வருந்தத் தக்க விதத்தில் வரலாற்றின் பக்கங்களில், ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டார்.

பின் கருணாநிதி, ராஜாஜி அவர்களை வைத்து, அவரை உபயோகித்து, காமராஜ் அவர்களை பலவீனப் படுத்தி கடைசியில் வீழ்த்தினார். பின் ராஜாஜியையும் உதறினார்.

1967-இல் திமுக அண்ணாதுரையின் கீழ், தமிழகத்தில் பதவிக்கு வந்தது. நம் கயமைநிதி அதில் 43 வயது பொதுப் பணித்துறை (PWD) அமைச்சர்!

இங்கு இவர் பயங்கரமாக கமிஷன் மண்டி நடத்தி, அண்ணாவை நொந்து போகச் செய்தார். மெல்லவோ துப்பவோ முடியாமல், அண்ணா அல்லல் பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த கயமைநிதி துள்ளல் போட்டுத் தமிழகத்தைத் துப்புரவாக சுத்தம் செய்து கொண்டிருந்தார். பொறுக்க முடியாத அண்ணா, பொங்கிஎழ முடியாமல் புற்றுநோய் பெற்று இறந்தார் – 1969-இல்.

இப்போது கருணாநிதிக்கும், தமிழக முதலமைச்சர் பதவிக்கும் நடுவில் ஒரே ஒருவர் தான் இருந்தார் – அவர் படித்தவர், பண்பாளர், மென்மையானவர் – அவர் தான் நெடுஞ்செழியன்.

இந்த தடைக்கல்லை முறியடிக்க கருணாநிதி இச்சமயமும் அணுகியவர் எம்ஜீஆர் – அவர் உதவி பெற்று – அதாவது அவர் காலில் விழுந்து, மன்றாடி உதவி கேட்டு – சூழ்ச்சிகள் பல செய்து நெடுஞ்செழியனையும் ஓரம் கட்டினார், இந்தக் கயமைநிதி.

ஆக, முதலமைச்சரும் ஆனார் 1969-ல், இந்தக் கருணாநிதி, தன்னுடைய 49-ஆம் வயதில் – MGR தயவில்! பின் என்ன 1972 வரை ஒரே கொண்டாட்டம், ஒரே ஊழல், ஒரே ஜல்சா தான்…(விரசத்துக்கு மன்னிக்கவும்)

MGR தான் திமுகவின் போஷகர், அவர் தான் கட்சியின் பொக்கிஷதாரர் – எவ்வளவு சந்தோஷம் பாருங்கள், கருணாநிதிக்கு!

மீண்டும், வெள்ளை மனதினரான MGR அவர்களின் வசீகரத்தைப், பணத்தை உபயோகித்து, குள்ள நரித்தனமாக மற்றத் தலைவர்களை ஓரம் கட்டி 1971-ல் முதலமைச்சரானார்.

ஆனால் இப்போது MGR தெரிந்து கொண்டார், இந்தக் கயமைநிதி ஒரேயடியாக ஊழல் செய்கிறார், தான் திமுகவிற்கு கொடுத்த பணத்தையும் திருடுகிறார். மேகலா படக் கம்பெனி மூலமாகவும் திருடுகிறார் என்பது!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக், கடைசியில் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டார் – கடைசியில் 1972-ல் திமுகவிலிருந்து விலகினார் MGR! (கணக்கு மட்டும் கிடைக்கவே இல்லை!)

பின் 1976 வரை கருணாநிதிக்கு ஒரே கொண்டாட்டம் தான், அதாவது, அளவு கடந்த ஊழலோதி ஊழல்!

இப்போது சொல்லுங்கள், நான் கருணாநிதியை, கயமைநிதி என்றழைப்பது சரிதானே?

=-=-=-=-=

இதற்குப் பின், 35 வருடங்களில், இம்மனிதர் செய்த விசித்திர வினோதங்கள், ஊழல்கள், பண்ணிய புலம்பல்கள், துரோகங்கள், அழுத அழுகைகள் பற்றியெல்லாம் நான் இப்போது எழுதுவதாக இல்லை.

சர்க்காரியா கமிஷன் குறித்த இவ்விடுகைகளைப் புரிந்து கொள்ள, தெரிந்து தெளிய, நீங்கள் கருணாநிதியில் பின்புலம் இவ்வளவு தெரிந்து கொண்டால் போதுமானது என்று நினைக்கிறேன்.

=-=-=-=-=

நீங்கள் இந்த சர்க்காரியா அறிக்கையைப் படிக்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை:

  1. 1970-களில் – அதுவும் அதன் முன்பாதியில் நடந்த ஊழல்கள் மட்டும் தான் இதில் விசாரிக்கப் பட்டன.
  2. அப்போதைய தொகைகள், இப்போதைய திமுக ஊழல் அளவுகளோடு ஒப்பிடப்படும்போது, லட்சக் கணக்கான கோடிகளாக இல்லை. ஆனாலும், அக்காலத்து மதிப்பில் இவை மிகவும் அதிகம்.
  3. சர்க்காரியா அவர்களுக்கு அளிக்கப்பட கால அளவும் மிகக் குறைவு – இருந்தாலும் அவர் இழுத்தடிக்காமல், நீட்டிப்பு கேட்காமல், கயமைக் கருணாநிதியின் அராஜகங்களையும், ஒத்துழையாமையும், அச்சுறுத்தல்களையும் மீறி ஒரு கச்சிதமான அறிக்கையை அளித்தார்.
  4. சர்க்காரியா அவர்கள் அறிந்தது கடுகளவு – ஆனால், அப்போதே கருணாநிதி ‘அடித்தது’ மாபெரும் திருப்பதி லட்டு அளவு!
  5. அடிப்படையில் சர்க்காரியா அவர்கள், கூர்மையான மதியும், அறியும் திறனும் மிக்கவர் – நல்ல நேர்மையாளர் – ஆனால் அவரே வியக்கும் அளவுக்கு, அறிவியல் (‘விஞ்ஞான’) பூர்வமான ஊழல் செய்தவர், தடயங்களை அழித்தவர், ஆய்ந்தறிய முடியாத, அளவிட இயலாத ஊழல்களை மிகவும் சாமர்த்தியமாகச் செய்தவர் இந்தக் கருணாநிதி.
  6. ஒவ்வொரு இந்தியனும், குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழனும் படித்து, வியந்து, கருணாநிதி மேல் காறித் துப்பவேண்டிய விஷயம் இது…
  7. படிப்பதற்கு கொஞ்சம் கரடு -முரடாக இருக்கலாம் இந்த அறிக்கை – ஆனால் தயவு செய்து இதனைப் படிக்கவும்.

இனி அடுத்த பதிவுகளில் – முதலில் சர்க்காரியாவின் முதல்/முன்னோட்ட அறிக்கையையும், பின்னர் விரித்து எழுதப் பட்ட முழு அறிக்கையையும் காணலாம்…

http://othisaivu.wordpress.com/2011/05/16/post-33/

Friday, May 20, 2011

அ.தி.மு.க., விஸ்வரூபம்: முன்னிறுத்தப்படும் 5 முக்கிய காரணங்கள்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 203 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 146 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேர்தல் அறிவித்த பின்னும், ஓட்டுப்பதிவுக்கு பின்னும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அ.தி.மு.க., கூட்டணி இப்படி ஒரு மெகா வெற்றியை பெரும் என கூறவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை.

அ.தி.மு.க.,வுக்கு இப்படிப்பட்ட வெற்றி கிடைக்க ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தி.மு.க.,வினரின் ரவுடியிசம் ஆகிய ஐந்து விஷயங்களே முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா கைதாகி சிறையில் உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பமும் “2ஜி’ ஊழல் விவகாரத்தில் சிக்கி பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளது. இதை, தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா, மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். அதுதான், மக்கள் மத்தியில் பரவி, தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவ வைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் விஸ்வரூப வெற்றிக்கு முக்கிய காரணமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதல்காரணமாக உள்ளது.

ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், தன்னுடைய துறையால் தான் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டது தமிழகத்தில் மட்டும்தான். மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி, ஒரு கூட்டத்தில் இப்படி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுதான் உண்மை நிலை என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும், வழங்கப்பட்ட இலவசங்களும் பெண்களை அதிகம் கவர்ந்துள்ளது என்ற கணக்கில், தி.மு.க., இருந்தது. எனவே, சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் என்று அக்கட்சி பலமாக நம்பியது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற பிரச்னை தி.மு.க.,வின் கணிப்பை தவறாக்கிவிட்டது.

அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, விலைவாசி உயர்வும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தமிழக போலீசாரின் செயல்பாடுகளை தி.மு.க.,வினர் முடக்கி வைத்திருந்ததால், தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதால், கண்ணெதிரே நடந்த குற்றங்களையும் தடுக்க முடியாத சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்,, அ.தி.மு.க.,வுக்கு ஆளுங்கட்சி வாய்ப்பை வழங்கிவிட்டனர். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மேற்கண்ட ஐந்து காரணங்கள்தான் அ.தி.மு.க., பக்கம் மக்களை திருப்பியது என்றால் மிகையாகாது.

http://senthilvayal.wordpress.com/2011/05/

Thursday, May 19, 2011

"அலைகள் ஓய்வதில்லை" - தொடர்

2ஜி ஸ்பெக்ட்ரம்... சர்வதேச பகீர் உண்மைகள் - Part 1

பற்றியெரியும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், புதுசாக ஒரு பொறியை நம்மிடம் கொளுத்திப் போட்டார். ''இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யார் யார் என்று ஆதியோடு அந்தமாகத் தோண்டிப் பாருங்கள். அப்போதுதான் இந்த முறைகேட்டின் பின்னால் இருக்கும் தொடர்புகளின் நெட்வொர்க் புரியும்!'' என்பது பொறி கொளுத்தும்முன் அந்த அதிகாரி கொடுத்த முன்னுரை!

''ஆ.ராசா, கருணாநிதி, தி.மு.க., காங்கிரஸ் என்ற பேச்சுகளோடு இந்த விவகாரம் திசை திரும்பிவிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. தி.மு.க-விலிருந்து ஆ.ராசாவை நீக்குவதோ... தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதோ மட்டுமே இதற்கு முழுப் பரிகாரம் ஆகிவிடாது. பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மாபெரும் 'கட்டிங்' கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக லாபத்தில் கொழிக்கும் கம்பெனிகளின் நிஜ முகங்களும் வெளியில் வரவேண்டும். அப்போதுதான் நாட்டுக்கான இழப்பு பற்றிய முழு உண்மையும் வெளியில் வரும்!'' என்றும் அந்த அதிகாரி சொன்னார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. ''இந்த ஒதுக்கீட்டில் சுமார் 22 ஆயிரம் கோடி வரை, 'சாதித்துக் கொடுத்தவர்களுக்கு' சன்மானமாகக் கைமாறியிருக்கிறது!'' என்று மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் கணக்கிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இதன் அடிப்படையில் சி.பி.ஐ. இதை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது வீட்டை சி.பி.ஐ. ரெய்டு செய்துள்ளது. இரண்டு நாட்கள் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அவர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு உள்கையாகச் செயல்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்டும் விசாரணையும் நடந்து முடிந்திருக்கின்றன. இதுவரை நடந்ததெல்லாம் நாடு முழுக்கப் பரபரப்பைக் கிளப்பியது. ஊழலுக்கு எதிராக இரும்புக் கரம் உயர்ந்துவிட்டது போன்ற தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், இதற்குப் பிறகு சி.பி.ஐ. என்ன செய்யப் போகிறது?

பிப்ரவரி 10-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. அத்தோடு, 2001-ம் ஆண்டு முதல் அலைவரிசை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, அதிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை சோதனை நடத்திச் சொல்லவேண்டும் என்றும் கோர்ட் கட்டளை போட்டிருக்கிறது. இந்தக் கட்டளையை முன்னிறுத்தி, சி.பி.ஐ. கூடுதல் அவகாசத்தை நீதிமன்றத்திடம் கேட்க முடிவு செய்திருக்கிறதாம். ''கடைசியாக நடந்த ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே எங்களால் விசாரணையை முடிக்க முடிந்தது. 2001-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை சரிபார்க்க மேலும் 6 மாதங்கள் தேவை!'' என்று சி.பி.ஐ. சொல்லுமாம். ஒருவேளை, சுப்ரீம் கோர்ட் 6 மாத அவகாசம் தர விரும்பாவிட்டாலும், மூன்று மாதங்களாவது தரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மே மாத விடுமுறை முடிந்து ஜூலை மாதம்தான் சுப்ரீம் கோர்ட் மீண்டும் திறக்கும். அதற்குள் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.

நம்மிடம் பேசிய அதிகாரி, ''தமிழ் நாடு, மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான எந்த விசாரணையும் வெளிப்படையாக நடந்து, இதையும் தாண்டி உள்ள சில அந்தரங்கத் தகவல்கள் வெளியில் கசிவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதற்காகவே முடிந்த அளவு இழுத்தடிப்பதும் அதற்குப் பின்னால் ஆறப்போடுவதுமான காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இந்த விவகாரம் நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் தவிர மற்ற நான்கு பேரும் காங்கிரஸ்காரர்கள்! இந்த ஐவர் தவிர, சோனியாவுக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் சொல்லி வரும் இரும்புத் தனமான நபர் மற்றும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களைக் கட்டுப் படுத்தக்கூடிய பிரபலமான மற்றொரு டெல்லி மனிதர் ஆகிய இருவரும் இந்த விஷயம் தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுக்கு துணையாக இருந்திருக்கிறார்கள். இந்த ஏழு நபர்களைத் தாண்டி ஸ்பெக்ட்ரம் விசாரணையை சி.பி.ஐ-யால் சுதந்திரமாக நடத்த முடியாது. அவர்களை சி.பி.ஐ-யால் நெருங்கவும் முடியாது!'' என்று குண்டு போடுகிறார்.

அந்த சி.பி.ஐ. அதிகாரியே மேலும், ''சோனியாவுக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகரிடம் பேசிய நீரா ராடியா, 'என் மீது விசாரணை நடத்துவதை ஒரு கட்டம் வரைக்கும்தான் நான் அனுமதிப்பேன். அதன் பிறகு நான் பேச ஆரம்பித்தால்... ஸ்பெக்ட்ரம் விஷயத்தைவிட இன்னும் பல பகீர் ரகசியங்கள் வெளியில் வரும். நாடே கலகலத்துப் போகும்!’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சோனியாவின் அரசியல் ஆலோசகர் மூலமாக காங்கிரஸ் மேலிடம் வரை பெரும் பதற்றம் உண்டாகி இருக்கிறது. ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது, 'மூன்று மாதங்கள் மட்டும் பொறுங்கள். எல்லாப் புயலும் அடங்கிவிடும். அதன் பிறகு மீண்டும் நீங்கள் மந்திரி ஆவதற்கு நான் உதவுவேன்!’ என்று சோனியாவுக்குஅருகில் இருக்கும் ஒரு பிரமுகர் வாக்குறுதி கொடுத்து உற்சாகப் படுத்தினார். அவரும் நீரா ராடியாவின் கொதிப்பு வார்த்தைகளைக் கேட்டு ஆடிப் போயிருக்கிறார்...'' என்று கூறுகிறார்.

இதில் காங்கிரஸ் அதிகமாக பயப்படுவதற்குக் காரணம், இது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்ல. ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமங்களைப் பெற்ற கம்பெனிகள், அதை அவர்களிடம் இருந்து வாங்கிய கம்பெனிகள், இதில் முதலீடு செய்திருப்பவர்கள்... என்று பட்டியல் எடுத்த சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருவாய்ப் புலனாய்வு மற்றும் ரா அதிகாரிகள் அனை வருமே ஆடிப் போயிருக்கிறார்களாம். லைசென்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளர் சாகித் உஸ்மான் பல்வாவுக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராஹி முக்கும்நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக சி.பி.ஐ. நினைக்கிறது.

மேலும், இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ் தானின் வர்த்தகத் தொடர்புள்ள கம்பெனிகளும் இதற்குள் இருக்கின்றன. சீனா லிபரேஷன் ஆர்கனை சேஷன் அமைப்பின் தொடர்புகளும் இதில் இருக் கின்றன. அரபு நாடுகளின் மதத் தீவிரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரான தேச விரோத சக்திகளும்கூட இதில் அங்கம் வகிப்பதாக சி.பி.ஐ-க்கு சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்.

''இந்த தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தால்... இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சியே, இந்தியாவின் பாதுகாப்பை பல லட்சம் கோடிக்கு அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் எரிமலையாகப் பொங்கும். அதனால்தான் ஆ.ராசா சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக மட்டுமே இந்த விவகாரங்களை முடித்துவிட சிலர் துடியாகத் துடிக் கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணியை காங்கிரஸ் உதறுமா என்பதுகூட சந்தேகம்தான். மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்வதற்குத் தேவையான எம்.பி-க்களை தி.மு.க. அளிக்கிறது என்பது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளுக்குத் தெரிந்தது எல்லாமே ஆ.ராசாவுக்குத் தெரியும்... அவருடைய தலைவருக்கும் தெரியும். இதுவும்தான் காங்கிரஸ் பம்முவதற்குக் காரணம்!'' என்று அந்த சி.பி.ஐ. அதிகாரி சொல்லி முடித்தபோது, நமக்கு தலை கிறுகிறுவென தட்டாமாலை சுற்றியது

ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது!

1.ஸ்வான்: சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பலே கம்பெனி. ''இந்திய உளவுத் துறை எடுத்துவைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் - பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!'' என்றும் சொல்லப்படுகிறது. கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான்.

2.சிஸ்டமா ஷியாம் டெலிகாம்: எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக் பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!

3.லூப் டெலிகாம்: இதன் இந்திய இயக்கு நராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜஉரிமை யாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்!

4.யூனிடெக்: ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள். ''இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!'' என்கிறது சி.பி.ஐ.

5.எஸ்.டெல் நிறுவனம்: 'ஸ்டெர்லிங்' சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்கன்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய 'கலைஞர்' டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)... மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது.

6.ஐடியா செல்லுலார்: இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர்.

7. வீடியோகான்: வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்!

8. ரிலையன்ஸ் டெலிகாம்: அனில் அம்பானி - அதிகம் சொல்ல வேண்டியதில்லை!

9. டாடா டெலிகாம்: ரத்தன் டாடா - தனியாகச் சொல்ல வேண்டியதில்லை

நன்றி: ஜூனியர் விகடன்


ஜெயலலிதாவுக்கு ஒரு திறந்த மடல்!

*அ*.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு... வணக்கம். வளர்க
.
உங்களை நினைத்தால் ஒரு பக்கம் வியப்பாகவும், இன்னொரு பக்கம் வேதனை​யாகவும் இருக்கிறது. அன்று முதல் இன்று வரை இது ஓர் ஆணாதிக்க உலகம். நீங்கள் இருந்ததிரைப்பட உலகமும், இருக்கும் அரசியல் உலகமும் முழுக்க முழுக்க ஆணாதிக்கத்தின் மோசமான ஆளுகைக்கு ஆட்பட்டவை. 1964-ல் ஸ்ரீதரின் 'வெண்ணிற ஆடை’ படத்தில் முதன்முதலாக நீங்கள் அறிமுகமானபோது, தமிழகத்தின் தலைவிதியை நிர்ணயிக்கும் முதலமைச்சர் நாற்காலியில் ஒரு நாள் அமரக்​கூடும் என்று கண்ணுறக்க வேளையில்கனவு​கூடக் கண்டிருக்க மாட்டீர்கள்! தமிழர்களின் ரசனை எல்லா வகையிலும்வித்தியாசமானது. திரைப்படங்களில் நாயக, நாயகியராய் இணைந்து நடித்த இருவரையும்முதல்வர் நாற்காலியில் அமரவைத்து அழகு பார்த்த வரலாற்றுச் சாதனை, உலகில்தமிழகத்தைத் தவிர வேறெங்கும் வாய்த்ததே இல்லை.

எம்.ஜி.ஆர்., சிவாஜி என்ற இருவரின் ஆதிக்கத்தில் கட்டுண்டுக் கிடந்த திரையுலகில் அடியெடுத்துவைத்த நீங்கள், இரு வேறுபட்ட குணாம்சங்கள் கொண்ட அந்தக்கலையுலகச் சிகரங்களோடு கைகோத்து உங்கள் தோற்றப் பொலிவினாலும், நடிப்புத்திறமையாலும் முதன்மைக் கதாநாயகியாக முன்னேறியதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.ஆனால், கதாநாயகிக் கட்டம் முடிந்ததும் தமக்கையாய், தாயாய் வேடம் பூண்டு காலம்முழுவதும் ஒரு நடிகையாகவே வாழ்ந்து முடித்துவிட விரும்​பாமல், எம்.ஜி.ஆர். ஆதரவில் 1981-ல் அரசியல் உலகில் கால் பதித்து, ஆர்.எம்.வீரப்பன் போன்றவர்கள் விரித்துவைத்த சதிவலையை அறுத்தெறிந்து, அவர்களால் இழைக்கப்பட்ட அவமானங்களைசகித்துக்கொண்டு, அ.தி.மு.க-வை உங்கள் அசைக்க முடியாத தலைமையின் கீழ்கொண்டுவந்தீர்களே... அந்த அரிய சாதனை உண்மையிலேயே வியப்புக்கு உரியது!

உங்களுடைய விரிந்த வாசக ஞானம், தெளிந்த ஆங்கிலப் பேச்சு, தளராத தன்னம்பிக்கை, அபூர்வமான அரசியல் ஆளுமை, சர்க்கஸ் கூடாரத்தின் ரிங் மாஸ்டரைப் போல் உங்கள்கட்சியின் அனைவரையும் ஆட்டிப்படைக்கும் அசாத்திய ஆற்றல் அனைத்தும் நீங்கள் வளர்த்துக்கொண்ட பலமான பாது​காப்பு அரண்கள். எம்.ஜி.ஆர். கைதூக்கிவிட்டதனால்​தான் அரசியலில் நீங்கள் இந்த உயரத்தை எட்ட முடிந்தது என்பதுபிழையான கருத்து. சரோஜாதேவியும், லதாவும் எம்.ஜி.ஆரே விரும்பி அரசியலில் ஆளாக்க முனைந்து இருந்​தாலும், உங்களைப்போல் உருவாகி இருக்க முடியாது. எம்.ஜி.ஆர்.மறைவுக்குப் பின்பு உங்கள் தலைமை வாய்த்திருக்காவிட்டால், அ.தி.மு.க. ஓர்அரசியல்சக்தியாக நீடித்திருக்காது என்பதும் நிஜம்.

எல்லாம் சரி. ஆனால், ஒரு கோட்டை எவ்வளவு பாதுகாப்பாக வடிவமைக்கப்பட்டு இருந்தாலும், அதற்குள் சில பலவீனங்கள் புலப்​படுவது இயல்பு. உங்கள் பலங்களுக்குசமமாக பலவீனங்களும் பாதித்திருப்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?'பரிசோதிக்கப்படாத வாழ்க்கை வாழத் தகுதியற்றது’ என்றார் சாக்ரடீஸ். நீங்கள்பரிசோதித்துப் பார்த்து, பள்ளத்தில் வீழ்த்தும் பலவீனங்களில் இருந்து விடுபடவிரும்பாததுதான் வேதனைக்கு உரியது.

காமராஜரைப்போலவோ, கலைஞரைப்​போலவோ படிப்படியாக அரசியலில் நீங்கள் வளர்ந்தவர்இல்லை. உங்கள் அரசியல் பிரவேசம் 1981-ல் அரங்கேறியது. உடனே அ.தி.மு.க-வின்கொள்கைப் பரப்புச் செயலாள​ராக உயர்த்தப்பட்டீர்கள். 1988-ல் நாடாளுமன்ற மேலவைஉறுப்பினராக பணியாற்றினீர்கள். 1989 தேர்தலுக்குப் பின்பு தமிழக சட்டமன்றவரலாற்றில் எதிர்க் கட்சித் தலைவராக அமர்ந்த முதல் பெண்மணி என்ற பெருமை பெற்றீர்கள். நிதி நிலை அறிக்கையை முதல்வ​ராக நின்று சட்டமன்றத்தில் கலைஞர் சமர்ப்பித்தபோது, நீங்கள் உருவாக்கிய கலவர நாடகத்தில் நேர்ந்த விபரீதக்காட்சிகளின் விளைவாக, மக்களின் அனு​தாபத்தைப் பெற்று 1991-ல் கோட்டையில்முதல்வராகக் கொலுவீற்றீர்கள்.

யாருக்கும் எளிதில் கிடைக்காத வரம் தமிழக வாக்காளர்களால், உங்களுக்கு எளிதாக வழங்கப்பட்டது. எளிதில் கிடைக்கும் எதுவும் பெரிதாகப் போற்றப் படுவது இல்லை.வாக்காளர்கள் விருப்பத்தோடு வனைந்து கொடுத்த பதவிக் குடத்தை நீங்கள் நந்தவனத்துஆண்டி​யைப்போல் கூத்தாடிப் போட்டு​டைத்தீர்கள். மக்களால் தேர்ந்​தெடுக்கப்பட்டதமிழகத்தின் முதல் பெண் முதல்வர் நீங்கள். நேர்த்தியாக உங்கள் நிர்வாகம்நடந்திருந்தால்... கலைஞர் மீண்டும் முதல்வராகும் வாய்ப்பே கனிந்து இருக்காது.அவருடைய குடும்பமும், பரிவாரமும் கோடிக் கோடி​யாய்ப் பணத்தைக் குவிக்கும் சந்தர்ப்பம் பிறந்திருக்காது. கலைஞரின் குடும்பம் உங்களுக்​குத்தான் அன்றாடம் நன்றி சொல்ல வேண்டும். அதிலும் குறிப்பாக, ஆ.ராசா உங்களுக்கு நிரம்பவும்நன்றிக்கடன் பட்டிருக்கிறார்.

'அறிவியல்பூர்வமாக ஊழல் செய்தவர் கலைஞர்’ என்று சர்க்காரியா சொன்னதை உரத்தகுரலில் ஊர் ஊராய் முழங்கிய நீங்கள், ஊழலின் நிழல் படாத உன்னதமான ஆட்சியைவழங்கிவிடவில்லை. அதிகாரத் துஷ்பிரயோகம், ஆணவப் போக்கு, சொத்துக் குவிப்பு,ஊழலில் திளைத்த அமைச்சர் குழு, விமர்சனங்​களை விரும்பாத சர்வாதிகாரச் சாயல், பழிவாங்கும் மனோபாவம் போன்றவை வாக்காளர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியதால்,உங்கள் மீது இருந்த நம்பிக்கை நலிவடைந்​தது. 'ஸ்பிக்’ விவகாரத்தில் உங்கள்விருப்பத்துக்கு வளைந்து கொடுக்காத ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகாவின் முகத்தில்ஆசிட் வீசப்பட்டதன் பின்புலம் அறியாமல் தமிழகம் அதிர்ந்தது. தி.மு.க.வழக்கறிஞர் சண்முகசுந்தரத்தின் மீது நடத்தப்பட்ட கொடுமையான தாக்குதலின் பின்னணிபுரிந்ததும் நல்ல அரசியலை நாடுவோர் நெஞ்சம் நடுங்கியது. எல்லா​வற்றுக்கும்சிகரம்போல் சசிகலா குடும்பத்தினரின் ஆதிக்கம் அமைந்துவிட்டது. உங்கள் வளர்ப்பு மகன் சுதாகரனுக்கு நீங்கள் நடத்திவைத்த திருமணத்தில் பளிச்சிட்ட ஆடம்பரம் பாமரமக்களைக்கூட முகம் சுளிக்கவைத்தது. உங்கள் வீழ்ச்சி கலைஞரின் வியூகத்தில்விளைந்துவிடவில்லை. உங்களுக்கான பள்ளத்தை நீங்களே வெட்டிய விதம்தான்பரிதாபத்துக்கு உரியது.

முன்னாள் முதல்வரே... கடந்த காலத்தை இன்று நிதானமாகத் திரும்பிப் பார்த்துநீங்கள் கற்றறிய வேண்டிய பாடங்கள் கணக்கற்றவை. மிகுந்த நம்பிக்கையுடன் மக்களால்1991-ல் ஆட்சியில் அமர்த்தப்பட்ட நீங்கள், 1996 தேர்தலில் மிக மோசமாகப்புறக்கணிக்கப்பட்டீர்கள். உங்கள் அமைச்சரவையில் இடம்பெற்ற அனைவரும்தோற்கடிக்கப்பட்டனர். நீங்களே பர்கூர் தொகுதியில் மக்கள் அறியாத ஒரு மனிதரிடம்தோற்கும் நிலை நேர்ந்தது. சரிந்துவிட்ட உங்கள் அரசியல் செல்வாக்கை முற்றாக முடித்துவிட முதல்வர் பொறுப்பேற்ற கலைஞர் காரியத்தில் கண்வைத்தார். உங்கள் மீது40-க்கு மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுவிரைவாக உங்களை சிறைக்கு அனுப்பிவைக்க அடித்தளம் அமைக்கப்பட்டது. கலைஞர் கண்டகனவு நனவானது. நீங்கள் சில காலம் சிறைவைக்கப்பட்டீர்கள். 'டான்சி’ வழக்குஉங்கள் உறக்கத்தைக் கலைத்தது. சொத்துக் குவிப்பு வழக்கு 'விடாது கருப்பு’என்பதுபோல் இன்று வரை தொடர்ந்து உங்களைத் துன்புறுத்துகிறது. ஸ்பெக்ட்ரம்ஊழலில் 1.76 லட்சம் கோடியை நாட்டுக்கு நஷ்டம் ஏற்படுத்திய 'நேர்மையானவர்கள்’,நீங்கள் 60 கோடி சேர்த்துவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை போனதும், இன்றுவரை கூச்சம் இல்லாமல் உங்கள் ஊழல் குறித்து வக்கணையாக விமர்சிப்பதும் வேறு கதை.

ஒரே ஒரு ரூபாய் தவறாகப் பெற்றாலும் ஊழல்... ஊழல்தான். யார் செய்தாலும் ஊழல்தண்டனைக்கு உரியதுதான். ஐந்து ஆண்டு ஆட்சியில் நீங்கள் செய்த தவறுகள் மொத்தமாகமுற்றுகையிட்டு உங்களை அடியோடு வீழ்த்தியதும், உங்கள் அரசியல் வாழ்வுஅஸ்தமித்துவிட்டது என்றே அனைவரும் ஆரூடம் கணித்தனர். 'ஒழிந்தார் ஜெயலலிதா;அழிந்தது அ.தி.மு.க.’ என்று மகிழ்ந்தது கலைஞரின் பரிவாரம்.

'ஃபீனிக்ஸ் பறவை தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர்த்தெழும்’ என்பது நிஜம்அல்ல. ஆனால், அரசியல் உலகம் அதிசயிக்கும் வகையில் உங்கள் சாம்பல் மேட்டில்இருந்து நீங்கள் உயிர்த்தெழுந்ததுதான் நிஜம். உங்கள் தவறுகளைத் தமிழகத்துமக்கள் மிகவும் பெருந்​தன்மையுடன் மன்னித்து மீண்டும் ஆட்சி நாற்காலியில் அமரச்செய்தார்கள். 140 தொகுதிகளில் நின்று 132 தொகுதிகளில் வென்று,தனிப்பெரும்பான்மையுடன் நீங்கள் அரசை அமைத்தீர்கள். உங்களோடு கூட்டணிசேர்ந்தவர்கள் 64 தொகுதிகளில் வெற்றிக் கனியைப் பறித்துச் சுவைத்தனர். ஆடம்பரமணவிழா, 'சகோதரி’ சசிகலாவின் குடும்ப அத்துமீறல், டான்சி நிலப் பேரம் என்றகுறைகளை எல்லாம் புறந்தள்ளி 234 தொகுதிகளில் உங்கள் கூட்டணிக்கு 196எம்.எல்.ஏ-க்களை வழங்கிய வாக்காளர்கள் உங்களிடம் எதிர்பார்த்தது ஒன்றே ஒன்றுதான்... நல்லாட்சி! அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நீங்கள் நடந்துகொண்டீர்களா சகோதரி? மருத்துவர் ராமதாஸைப்போல் அரசியல் ஆதாயத்துக்காக'அன்புச் சகோதரி’ என்று நான் அழைக்கவில்லை.

சட்டமன்றத் தேர்தல் 2001-ல் நடந்தபோது நான்கு தொகுதிகளில் வேட்பு மனுத்தாக்கல்செய்தீர்கள். அது ஒரு தவறான நடவடிக்கை. தேர்தலில் உங்கள் வேட்பு மனுக்கள்நிராகரிக்கப்பட்ட நிலையில், அ.தி.மு.க. ஆட்சி​யைக் கைப்பற்றியதும் நீங்கள்முதல்வராக முயன்றது இரண்டாவது தவறு. கிரிமினல் வழக்கில் இரண்டு ஆண்டு​களுக்குக்குறையாமல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் முதல்வராக முடியாது என்பது சட்டம். ஆனால்,உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து தமிழகத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்றுக்கொண்டஃபாத்திமா பீவி உங்களை முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து அனைவரையும்திகைப்பில் ஆழ்த்தினார். தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தலில் நிற்க முடியாமல்தடுக்கப்பட்ட முதலமைச்சர் நீங்கள் ஒருவரே. ஊழல் குற்றச்சாட்டில் தண்டிக்கப்பட்ட முதல்வரும் நீங்களே. கலைஞருக்குள்ள சாமர்த்தியம் உங்களுக்கு சாத்தியப்படவில்லை.அதனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பின்பு நீங்கள் பதவியில் இருந்துவிலகிப் பன்னீர்செல்வத்தை முதல்வராக்கினீர்கள். யாருக்கு எப்போது எதுகிடைக்கும் என்று யார்தான் அறிவார்? வீதியில் விளையாடிய கரிகாலன் கழுத்தில்யானை மாலையிட்ட கதையை எம் கண் முன்னால் நிகழச் செய்தவர் நீங்கள். நான்குமாதங்கள் முதல்வர் நாற்காலியில் பன்னீர்செல்வம் அமர்ந்திருந்தாலும், பின்னால்இருந்தபடி பரிபாலனம் செய்தது நீங்கள்தானே சகோதரி!

ஒருவழியாக சட்டம் எழுப்பிய தடுப்புச் சுவரைத் தகர்த்துவிட்டு, ஆண்டிபட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று முதல்வர் நாற்காலியைத் தன்னிடம் தக்கவைத்துக்​ கொள்வதில் நீங்கள் காட்டிய முனைப்பு, அரசியலில் பழம் தின்றுகொட்டை போட்டவர்களுக்குக்கூட எளிதில் கைவராதது! நீங்கள் மீண்டும் ஆட்சியில்அமர்ந்ததே அரிய சாதனைதான். ஆனால், அதன் மூலம் மக்கள் அடைந்த பயன் என்ன?உங்களைச் சிறைக்கு அனுப்பிய கலைஞரை நீங்கள் சிறைக்கு அனுப்ப நாள் குறித்துநள்ளிரவில் கைது செய்து, மக்கள் அனுதாபத்தை அவர் பக்கம் திருப்பும்திருப்பணியில்தானே ஈடுபட்டீர்கள்! உங்களுக்குப் பிரச்னை கலைஞர். கலைஞருக்குப் பிரச்னை நீங்கள். உங்கள் இருவர் கால்களிலும் மாறி மாறி மிதிபடுவது மக்கள். 'விதியே, விதியே, தமிழ்ச் சாதியை என்செய்ய நினைத்தாய்?’ என்று சரியாகத்தான் புலம்பினான் பாரதி. உங்களுடைய அசைக்க முடியாத பலம் அபாரத் தன்னம்பிக்கை. அதுவே சில நேரங்களில்வரம்பு கடந்து பிறர் பார்வையில் தலைக்கனமாய் தரிசனம் தரும்படி நடந்துகொள்வதுதான் உங்களது மோசமான பலவீனம். ஜனநாயக அமைப்பில் விமர்சனங்களை ஆரோக்கியமாக நேர்கொள்ளும் தன்மை மிக முக்கியம். தமிழகத்தில் உள்ள ஆறரைக் கோடிமக்களும் பன்னீர்செல்வம், செங்கோட்டையன்போன்று கை கட்டி, வாய் பொத்தி, முதுகுவளைந்து 'அம்மா’ என்று ஆராதிக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பதுதான்தவறு. ஊடகங்கள் அனைத்தும் ஒத்தூத வேண்டும் என்ற விருப்பம் கலைஞரைப்போல்உங்களுக்கும் உண்டு. 'இந்து’ நாளிதழ் உங்கள் சகிப்புத்தன்மையற்ற நடவடிக்கைகள்குறித்துக் கட்டுரை தீட்டியதற்காக என்.ராம் உட்பட ஆறு பேரை கைது செய்ய முயன்றது சரியான நடவடிக்கையா என்று இப்போது சிந்தியுங்கள். பல்வேறு இதழ்கள் மீதுவழக்குப் பதிவு செய்த உங்கள் செயல் பத்திரிகை சுதந்திரத்துக்கு எதிரானதுஇல்லையா?

அரசு ஊழியர்கள் 2003-ல் ஓய்வூதியச் சலுகைகளுக்காக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டபோது ஒரு துளி மையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேரை வேலை நீக்கம்செய்ததும், இரவில் வீடு புகுந்து அவர்களைக் கள்வர்கள்போல் கைது செய்ததும்,சாலைப் பணியாளர்கள் வாழ்வோடு விளையாடியதும்தான் உங்கள் வீழ்ச்சிக்கு வியூகம்அமைத்ததை இப்போதாவது உணர்ந்துவிட்டீர்களா? அப்போது 'அரசு ஊழியர்களை அழைத்துப்பேச வேண்டும்; அன்பால் சாதிக்க வேண்டும்’ என்று உங்களுக்கு அருளுரை வழங்கிய கலைஞருடைய இப்போதைய ஆட்சியில், அதே அரசு ஊழியர்கள் காவல் துறையால் நடுவீதியில்கடுமையாகத் தாக்கப்பட்டனர் என்பது தனியரு கொடுமை!

திருமங்கலம் தேர்தல் பாணி குறித்துக் கடுமையாக விமர்சிக்கும் நீங்கள்தான், உங்கள் ஆட்சியில் இடைத்தேர்தல்கள் நடந்தபோது, அமைச்சர்களின் படையெடுப்பை அறிமுகப்படுத்தினீர்கள். சென்னை மாநகராட்சி இடைத்தேர்தலில் விதிமுறைகளை மீறிஉங்கள் தொண்டர்கள் செயல்பட்டபோது நீங்கள் வேடிக்கை பார்த்தீர்கள்.சாத்தான்குளம் இடைத்தேர்தலில் நிர்வாக எந்திரத்தை உங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தினீர்கள். வாக்காளர்களுக்கு 'அன்பளிப்பு' தரும் 'ஜனநாயகக் கடமை’யை நீங்களும் செய்தீர்கள். கலைஞரின் குடும்பம் குறித்துப் பேசும்போதெல்லாம், சசிகலா குடும்பம் உங்கள் நினைவில் நிற்பதில்லை. திரைப்பட உலகில் தேவைக்கு மேல்நீங்கள் சொத்து சேர்த்தாயிற்று. உங்களுக்கென்று தனியாக ஒரு குடும்பம் இல்லை.'தத்துவஞானிகள் ஆளவேண்டும். அவர்களுக்குக் குடும்பம் கூடாது’ என்றார் பிளேட்டோ.அந்த வரம் உங்களுக்கு இயல்​பாக வாய்த்திருந்தது. ஒரு செப்புக் காசும் நேர்மைதவறிச் சேர்க்காமல் ஊழலற்ற நிர்வாகத்தை நீங்கள் நினைத்திருந்தால், தமிழக மக்களுக்குத் தந்திருக்க முடியும். சசிகலா குடும்பம் உங்கள் கால்களை நேர்வழியில் நடக்கவிடாமல் பிணைத்திருக்கும் இரும்புச் சங்கிலி என்று நீங்கள்இப்போதேனும் உணர்ந்தீர்களா?

போகட்டும். உங்கள் 10 ஆண்டு ஆட்சியில் நல்லதே நடக்கவில்லை என்று நான்சொல்லவில்லை. கந்துவட்டிக் கொடுமையில் இருந்து ஏழைகளைக் காப்பாற்றிய நடவடிக்கை,பாமர மக்களின் வாழ்வாதாரத்தைச் சுரண்டிய லாட்டரி சீட்டுக்குத் தடை விதித்தநற்செயல், வீரப்பன் விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதில் வெளிப்படுத்தியதுணிச்சல், காஞ்சி சங்கராச்சாரியாரைக் கைது செய்ததில் காட்டிய கண்டிப்பு, மழைநீர் சேகரிப்பில் மக்களை ஈடுபடுத்திய ஆளுமை, கலைஞரால் கை கழுவப்பட்ட வீராணம்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றிச் சென்னையின் தாகம் தவிர்த்த ஆட்சித் திறன், தாய்மை உணர்வுடன் தொடங்கிய தொட்டில் குழந்தைத் திட்டம் மூலம் வெளிப்படுத்தியசமூகப் பார்வை, கல்வி வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசசைக்கிள் வழங்கிய கருணை போன்றவற்றுக்காக நிச்சயம் நீங்கள் பெருமைப்படலாம். உங்கள் ஆட்சியின் சிறப்பு அம்சமாக மக்கள் மறவாமல் நினைப்பது சட்டம் - ஒழுங்குபராமரிப்பு. கட்சிக்காரர்கள் அதிகாரம் செலுத்தும் கொத்தடிமைக் கூடங்களாக காவல்நிலையங்கள் கழிந்துபோக நீங்கள் அனுமதித்தது இல்லை!

சகோதரி... நீங்கள் மூன்றாவது முறை முதல்வராகும் முயற்சியில் ஈடுபட்டுஇருக்கிறீர்கள். வலிமையான கூட்டணி உங்களுக்கு வாய்ப்பாக அமைந்து இருக்கிறது.வாக்காளர்களுக்கு வேறு வழி இல்லை. ஜனநாயகத்தில் நன்மை தீமைக்கு நடுவே போட்டிநடந்தால், மக்கள் நன்மையின் பக்கமே நிற்க விரும்புவார்கள். அதற்கான சூழல்இன்னும் கனியாதபோது, பெரிய தீமையைப் புறந்தள்ளிவிட்டு, சிறிய தீமையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்க இயலும். சாம்பல் மேட்டில் இருந்து நீங்கள் மீண்டும் உயிர்த்தெழ வாய்ப்பு உள்ளது. தேர்தல் களத்தின் ஆதரவுக் காற்றை உங்களுக்கு சாதகமாக மாற்றிக் கொள்ளும் வாய்ப்பும் இருக்கிறது. அந்த வாய்ப்பை நீங்கள்பயன்படுத்திக் கொள்ள முடிந்தால்...ஈழத் தமிழர் நலன் காக்க உண்மையான உள்ளுணர்வுடன் நீங்கள் செயற்பட வேண்டும். தமிழகத்தின் ஒரு மீனவரும் கடலில் சாவைசந்திக்காத நிலை வர வேண்டும். இலவசத் திட்டங்கள் என்னும் போர்வையில், ஏழைமக்களை ஏழை மக்களாகவே என்றும் கையேந்தும் இழிநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கநீங்கள் காமராஜர் வழியில் உருப்படியான திட்டங்கள் தீட்ட வேண்டும். டாஸ்மாக்கை அரசுடமையாக்கிய பாவத்தைச் செய்த நீங்கள் பூரண மதுவிலக்கை வழங்கமுடியாமற்போனாலும், வீதியெங்கும் பரவியிருக்கும் கடைகளைக் குறைக்க வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஊழலற்ற ஆட்சியைத் தந்து நீங்கள் உயர வேண்டும். சசிகலா சாம்ராஜ்யம் மீண்டும் எழுவதற்கு எந்த நிலையிலும் நீங்கள் இடம் அளித்துவிடலாகாது. இந்த முறை நீங்கள் தவறு இழைத்தால்... இனி வாழ்வின் இறுதி வரைஆட்சி நாற்காலியில் அமர முடியாது என்றே உணர்ந்து செயற்படுங்கள். ஆட்சி மாற்றம்வெறும் காட்சி மாற்றமாக முடிந்துவிடக் கூடாது என்பதுதான் எங்கள் பிரார்த்தனை.

'உழுகலப்பையைப் போல் தாழ்ச்சிகொண்டவன் நான்’ என்றார் இயேசு பிரான். பணிவே நீங்கள் அணியும் மிக உயர்ந்த அலங்காரம் என்பதை மறவாதீர்கள்!

இப்படிக்கு,
நீங்கள் நிச்சயம் மாறியிருப்பீர்கள்
என்ற நம்பிக்கையுடன்

http://solaimani-kalaimani.blogspot.com/2011_05_01_archive.html

Wednesday, May 18, 2011

ஜெயலலிதாவின் புதிய அணுகுமுறை; சுறுசுறுப்புடன் பணியாற்ற அமைச்சர்களுக்கு உத்தரவு

மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும்:
jajalalitha-18-05-11
தமிழகத்தின் முதல்-அமைச்சராக ஜெயலலிதா 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். இந்த முறை அவரது அணுகுமுறையில் பெரிய மாற்றங்கள் காணப்படுகின்றன.13-ந்தேதி தேர்தல் முடிவு வந்ததும் பத்திரிகையாளர்களை சந்திக்கையில் தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலை நாட்ட முக்கியத்துவம் அளிக்கப்படும். தமிழக மக்கள் அவதிப் பட்டு வரும் மின் வெட்டு பிரச்சினையை தீர்ப்பேன்.மக்கள் நலப்பணிகளுக்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார்.
இதைப்பார்த்து பொது மக்களும் பத்திரிகையாளர்களும் வியந்தனர். தமிழ்நாட்டுக்கு பக்குவம் வாய்ந்த அனுபவ முதிர்ச்சி பெற்ற தலைவர் கிடைத்து விட்டார் என்று தமிழக மக்கள் சந்தோஷப்பட்டனர்.சட்டம்- ஒழுங்கை நிலை நாட்டுவேன் என்று அவர் சொன்னது மக்களுக்கு நிம்மதி அடையச் செய்துள்ளது. குறிப்பாக சென்னை மக்கள் மிகவும் வரவேற்றுள்ளனர்.
மந்திரி சபை பதவி ஏற்பின் போது அமைச்சர்கள் யாரும் முதல்-அமைச்சர் காலில் விழவில்லை. இது அ.தி.மு.க. வினருக்கும், பார்வையாளர்களுக்கும் ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.கட்சி தலைவர்களையும், மூத்த தலைவர்களையும் அரவணைத்து சென்று ஜெயலலிதா புதிய கலாச்சாரத்துக்கு வித்திட்டு இருப்பதாக தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பதவி ஏற்பு விழாவுக்கு முன் ஜெயலலிதா தலைவர்களது சிலைகளுக்கு மாலை அணிவிக்க செல்லும் போது தனக்காக போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருப்பதை அறிந்தார். உடனே போக்குவரத்து போலீஸ் அதிகாரிகளை அழைத்து தனக்காக போக்குவரத்து நிறுத்தப்படக்கூடாது என்று கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தார்.
ஜெயலலிதா “இசட்” பிரிவு பாதுகாப்பில் உள்ளார். அவருக்காக போக்குவரத்து நிறுத்தப்படலாம். ஆனால் தனக்காக போக்குவரத்தை நிறுத்தக் கூடாது என்று உத்தரவிட்டது அவரது புதிய அணுகு முறையையே காட்டுகிறது. போலீசார் ஒருவருக்கொருவர் இதைச் சொல்லி ஆச்சரியப்பட்டனர்.போலீஸ் அதிகாரிகளும் அரசியல் தலையீடு இல்லாமல் நேர்மையுடன் கடமையாற்றலாம் என்று பேசிக் கொண்டனர்.
மக்களுக்கு பயனுள்ள நல்ல திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பதில் ஜெயலலிதா அதிக அக்கறையுடன் உள்ளார். தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட திட்டங்களை நிறைவேற்ற தனி இலாகாவையே உருவாக்கி அதற்கு அமைச்சரையும் நியமித்துள்ளார்.இது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத ஒன்றாகும். இதன் மூலம் ஜெயலலிதா தமிழகத்தை பெரிய முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்ல தொடங்கி விட்டதாக அதிகாரிகள் மத்தியில் பேசப்படுகிறது.
கோட்டையில் அமர்ந்து முதல்-அமைச்சராக பொறுப்பேற்றதும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு 4 கிராம் தங்கத்தாலி, அரசு பெண் ஊழியர்களின் மகப்பேறு விடுப்பு சலுகையை 6 மாதமாக உயர்த்துவது உள்ளிட்ட 7 திட்டங்களை நிறைவேற்றுவதற்கான கோப்புகளில் முதலாவதாக கையெழுத்திட்டார்.
தேர்தல் அறிக்கையில் சொன்ன திட்டங்களை 1 1/2 வருடத்தில் நிறைவேற்றுவேன் என்று கூறியிருந்தார். அதற்கான பணிகளில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் முடுக்கி விட்டுள்ளார். முதல்-அமைச்சரின் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள் திறமை சாலிகளாகவும், பல்வேறு துறைகளில் முத்திரை பதித்தவர்களாகவும் விளங்கியவர்கள்.
இதனால் தமிழக அரசு முழு வீச்சில் இயங்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.முதல்-அமைச்சர் பதவி ஏற்ற மறுநாளே அரசு உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். அவர்களுக்கு அதிரடியான பல உத்தரவுகளை பிறப்பித்தார். அடுத்து பிற்பகலில் கோட்டையில் அமைச்சர்கள் கூட்டத்தை கூட்டி 3 மணி நேரம் அவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் 33 அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் துறைகளைப் பற்றியும், அதன் செயல்பாடுகளைப் பற்றியும் எப்படி தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அவர்களிடமே ஜெயலலிதா கேட்டு அறிந்து கொண்டார்.
அனைத்து அமைச்சர்களும் சிறப்பாக பணியாற்றி மக்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும். அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மாதமும் துறைகளைப் பற்றி ஆய்வு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது குறித்தும் ஜெயலலிதா ஆலோசனை நடத்தினார்.
இதற்காக அமைச்சர்களிடம் தேர்தல் அறிக்கையின் நகல்கள் வழங்கப்பட்டு ஒவ்வொரு திட்டங்களாக விவாதிக்கப்பட்டது. அமைச்சர்கள் அனைவரும் அடிக்கடி கிராமப் பகுதிகளுக்கு சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து அவர்களிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்றும் அறிவுரை கூறினார்.
மக்களுக்கு தேவையான புதிய திட்டங்களை செயல் படுத்த வேண்டும் என்றார். ஒவ்வொரு துறைகளில் என்னென்ன மாற்றங்களை கொண்டு வரவேண்டும், புதிய விஷயங்களை எப்படி புகுத்தலாம் என்பது குறித்தும் அமைச்சர்களிடம் யோசனைகளை கேட்டறிந்தார்.
தமிழகத்தில் நவீன அறிவியல் புரட்சி, வேளாண்மை, தொழில் வளம், கல்வி, வேலை வாய்ப்பு போன்றவற்றை பெருக்கவும் ஆக்கப்பூர்வமான செயல் திட்டங்களை நிறைவேற்றவும் இலக்கு வைத்துள்ளார். ஜெயலலிதாவின் எண்ணத்துக்கு ஏற்ப அமைச்சர்களும் சுறுசுறுப்பாக பணியில் இறங்கி விட்டனர்.
இன்று 2-வது நாளாக தங்களது துறை சார்ந்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்கள். பதவி ஏற்ற 3 நாளிலேயே ஜெயலலிதா புதிய அணுகு முறையுடன் களம் இறங்கி இருப்பதால் தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
http://tamilstar.net/news-id-jajalalitha-18-05-11891.htm


கருணாநிதியின் படுதோல்வியை மகிழ்வுடன் கொண்டாடும் உலகத் தமிழினம்.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலில் வரலாறு காணாத வகையில் கருணாநிதி தலைமையிலான தி.மு.க. சோனியா தலைமையிலான காங்கிரஷ் கட்சிக் கூட்டணி படுதோல்வியை சந்திதுள்ளது. இதனை உலகத் தமிழர்கள் மகிழ்வுடன் கொண்டாடி வருகின்றனர். அப்போ உலகத் தமிழினத்தின் தலைவன் தான்தான் என்று முழங்கிவந்ததெல்லாம்....? என்னவாயிற்று? சும்மா லொலலலலல.... தானா? மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தோல்வியால் துவண்டுபோய் கோபால புரத்திற்குள் பதுங்கியிருந்தவரிற்கு அதிர்ச்சியளிப்பது போன்று இந்த உலகத் தமிழர்களது மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

தொலைபேசிகளில் தமது உறவுகளுடன் தொடர்பை ஏற்படுத்திய புலம்பெயர் உறவுகள் நலம் விசாரிப்பதற்கு முன்னர் தமிழகத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டது பரிமாறிக் கொண்டதை காணக்கூடியதாக இருந்தது. அத்துடன் கருணாநிதி படுதோல்வி அடைந்திருப்பது குறித்து பெருமகிழ்வுடன் சிலாகிக்க தவறவில்லை.

முள்ளிவாய்க்காலில் இரண்டு ஆண்டுகளிற்கு முன்னர் எமது சொந்தங்கள் புழு பூச்சிகளை நசுக்குவதைப் போல மானிட வரலாற்றில் என்றுமில்லாதளவிற்கு சிங்களத்தால் கொன்று குவிக்கப்பட்டதற்கு முழுவதுமாக ஒத்துழைப்பு நல்கியிருந்தவர் இந்த கருணாநிதி என்பதை வரலாற்றுப் பக்கங்களில் மறைக்க முடியாது.

அதன் வெளிப்பாடாகத்தான் உலகத் தமிழர்கள் கருணாநிதியின் தோல்வியை எமது பெரு வெற்றியாக எண்ணி கொண்டாட வைத்துள்ளது. எத்தனை மயக்கும் வார்த்தை விளையாட்டுக்களை மேற்கொண்டாலும் தமிழினத்தை அவ்வளவு சீக்கிரம் ஏமாத்திவிட முடியாது.

உலகத் தமிழர்களின் ஒரே நிரந்தரத் தலைவன் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தான். இது தான் சத்தியமான உண்மை. வரலாறு திரும்பும் என்பது இதனைத் தான்.

தமிழ் மக்களிற்கான அரசை தனது குடும்பம் செழிக்க கோபாலபுரத்திற்கும் சி.ஐ.டி. காலனிக்கும் மடை மாற்றிவிட்டு தனிக்காட்டு ராசாவாக விளங்கிய கருணாநிதி ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு எமது தலைவனைப்பற்றியும் விடுதலைப் போராட்டத்தைப் பற்றியும் அடிப்படையற்ற பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வந்திருந்தார். அப்போதெல்லாம் அவர் நினைத்திருப்பாரா... இப்படி தள்ளாத வயதிலும் தலைகுப்புற விழுத்துவார்கள் என்று.

நாம் எதிர்பாரத்தோம். இந்த வரலாற்றுத் தோல்வியை மட்டுமல்ல, உலகத் தமிழர்களுக்கான நிரந்தர அரசாக தமிழீழத் தனியரசை தமிழினத் தலைவன் மேதகு வே.பிரபாகரன் அமைப்பதை இந்த கருணாநிதி கண்ணார கண்டுகளிக்க வேண்டும் என்று. அதற்காக கருணாநிதி இன்னும் சொற்ப காலம் உயிரோடு இருக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டிருக்கின்றோம்.

பட்டங்களும் பதவிகளும் தானாகத் தேடிவர வேண்டும். அப்போதுதான் அதற்கு மதிப்பு மரியாதை உண்டு. ஆட்சி அதிகாரங்களை வைத்துக் கொண்டு வீரமணி, திருமாவளவன் போன்ற அல்லக் கைகளை ஏவிட்டு பாராட்டுப் பத்திரம் வாசிக்க செய்வதெல்லாம் மல்லாக்க படுத்துக் கொண்டு மேலே துப்புவதைப் போன்றது என்பதை உணர்ந்து கொள்ளாமலா இருப்பார் இந்தக் கைப்புள்ளை கருணாநிதி...?

கைப்புள்ளையாக திரையில் வந்து ரசிகப் பெருமக்களை வயிறு குழுங்கவைத்து சற்று ஆரோக்கியச் சிறப்பிற்கு வழியேற்படுத்திய வடிவேலுவை நம்பி தேர்தலை சந்திக்க வேண்டியளவிற்கு அரசியல் சாணக்கியம் மிக்கவர் வல்லவர் நல்லவர் எனப் பெயரெடுத்த கருணாநிதி வந்தபோதே பேரறிஞர் அண்ணா அவர்கள் மெரினா பீச் கடற்கரையோரம் உள்ள நிணைவிடத்தில் இருந்து எழுந்து தலையிலடித்துக் கொண்டிருந்திருப்பார்.

மெரினா பீச் என்ற போது தான் இன்னொன்று ஞாபகத்திற்கு வருகின்றது. கருணாநிதிக்கு இந்த மெரினா பீச்சின் மீது அளவு கடந்த காதல். தனது சமாதியைக் கூட மெரினா பீச்சோரம் நிறுவ வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசையாம். அது நிறைவேற வேண்டும் என்றால் ஆறாவது முறையாக இந்த முறை முதலமைச்சர் ஆனால்தான் உண்டு.

கருணாநிதியின் இந்த கடைசி ஆசையை நிறைவேற்ற ஜெயலலிதாவின் அரசு ஒருக்காலும் சம்மதிக்கப் போவதில்லை. இந்த ஏக்கத்தை வாரிசு சண்டையில் ஈடுபட்டிருந்த தனது புத்திரர்களுக்கு ஆதங்கத்துடன் சொல்லித்தான் கோடி கோடியாக கொட்டி ஆட்சியை தக்கவைக்க முயன்றார் இந்த கருணாநிதி.

அதுதான் நடக்காது என்று தெரிந்து விட்டதே. தமிழக மக்கள் கருணாநிதியின் கடைசி ஆசையைக் கூட நிராசையாக்கி விட்டு விட்டார்களே. அய்யோ பாவம்.

நாம் எதிர்பார்த்த முதல் வெற்றி கிடைத்துவிட்டது. அதுவும் முள்ளிவாய்க்காலில் மூச்சடங்கிப்போன எமது சொந்தங்களை நிணைவு கூறும் இந்தக் காலத்தில் இந்த வெற்றி கிடைத்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி.

எமது தியாகமும் இழப்புக்களும் ஒருபோதும் வீண்போகாது. தமிழீழத் தனியரசை தமிழினத் தலைவன் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தலைமையில் உலகத் தமிழினம் வென்றெடுக்கும் நாள் விரைந்து வரத்தான் போகுது. அதுவரைக்கும் இந்த தள்ளாத வயது தாத்தா கருணாநிதியின் உயிரோடு இருக்க வேண்டும் என்று தலைவன் வணங்கும் நல்லூர் கந்தனை நாமும் வேண்டுவோம்.

http://suthumaathukal.blogspot.com/2011/05/blog-post_1146.html

ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் வடிவேலு அந்தர்பல்டி

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… என்று அந்தர் பல்டியடித்து வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல… சினிமாவிலும் இதெல்லாம் சாதாரணம்தான். ஆளும் கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?

தேர்தல் முடிவு வருவதற்கு முன்பு வரை திமுகவுக்கு ஆதரவாக பேசி வந்த நடிகர் வடிவேலு, இப்போது தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதால், அதிமுகவும் ஒரு பெரிய கட்சிதான்; மக்கள் விரும்பியதால் ஜெயலலிதா முதல்வர் ஆகியிருக்கிறார், என்று கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில் திமுகவின் பிரசார பீரங்கியாக மாநிலம் முழுவதும் ஒரு தொகுதி விடாமல் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்தவர் நடிகர் வடிவேலு. செல்லும் இடங்களில் இல்லாம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு வந்து வடிவேலுவின் பேச்சை கேட்டு ஆர்ப்பரித்தனர். வடிவேலுவும் சொந்த பகை காரணமாக ‌தேமுதிக தலைவர் விஜயகாந்தை குடிகாரன், டம்மி பீசு, குடிச்சிட்டு உளறுகிறான்… என்பன போன்ற வார்த்தைகளால் ஒருமையில் பேசினார். அதையும் ரசிகப்பெருமக்கள் ரசித்து கேட்டனர். பிரபலமான நடிகர் என்பதால்தான் இப்படி கூட்டம் கூடியிருக்கிறது என்பதை உணராத வடி‌வேலுவும், தி.மு.க.வும் எல்லாம் ஓட்டுக்களாக மாறும் என கணித்தனர். ஆனால் அவர்களது கணிப்பு பொய்த்துப் போய், தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. (இப்படியெல்லாம் நடக்கும் என முன்கூட்டியே தெரிந்ததாலோ என்னவோ தேர்தல் பிரசாரத்தில் ஜெயலலிதாவை தாக்கி ஒரு வார்த்தைகூட பேசவில்லை வடிவேலு)

தேர்தல் முடிவு அதிமுகவுக்கு சாதகமாக வரும் என்பதை ஓட்டு எண்ணிக்கை ஆரம்பத்திலேயே கணித்த நடிகர் வடிவேலு சென்னையில் இருந்து அவசரம் அவசரமாக மதுரைக்கு புறப்பட்டுச் சென்றார். அங்கு மத்திய அமைச்சர் அழகிரி வீட்டுக்கு சென்று ஆலோசனை நடத்தினார். பின்னர் வெளியே வந்த அவர் தோல்வி குறித்து கருத்து சொல்ல மறுத்து விட்டார். இதற்கிடையில் சென்னையில் அவரது வீட்டை தாக்க தேமுதிகவினர் முயற்சி செய்ததால், சென்னைக்கு வர வேண்டாம் என்று போலீசார் வடிவேலுவை கேட்டுக் கெண்டனர். இதனால் மதுரையிலேயே பதுங்கியிருக்கும் வடிவேலு, தேர்தல் தோல்வி பற்றி அந்தர் பல்டியடித்து பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் அளித்துள்ள பேட்டியில், ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி. அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை. எனக்கும், விஜயகாந்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டது, ஒரு படப்பிடிப்பில்தான். அவரை, வருங்கால முதல்-அமைச்சர் என்று வசனம் பேச சொன்னார்கள். நான், அப்படி பேச மறுத்து விட்டேன். ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன்.

மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள். தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்? இது, நல்லாயில்லை. அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும், என்று கூறியுள்ளார்.

ஒரு படத்தில் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா… என்று வசனம் பேசுவார். அரசியல்ல மட்டுமல்ல… சினிமாவுலயும் இதெல்லாம் சாதாரணம்தான். ஆளும்கட்சிகளுக்கு ஜால்ரா அடித்து காக்கா பிடித்தே பழகிவிட்ட திரையுலக காக்கா கூட்டம் இனி அதிமுக பக்கம் ‌போகும்; கருணாநிதியை புகழ்பாடியவர்கள் எல்லாம் இனி முதல்வர் ஜெயலலிதா புகழ்பாடிக் கொண்டிருப்பார்கள் என்பதை சொல்லவும் வேண்டுமா என்ன?.

சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து!

சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் காமெடி நடிகர் சிங்கமுத்து. வடிவேலு அண்ட் கோ காமெடி கூட்டணியில் முக்கிய புள்ளியாக இருந்தவர் சிங்கமுத்து. சொத்து தகராறு காரணமாக வடிவேலு – சிங்கமுத்து இடையே மோதல் வெடித்து, கோர்ட் – கேஸ் என அலைந்து கொண்டிருக்கிறார்கள். தேர்தல் களத்தில் திமுகவுக்கு ஆதரவாக வடிவேலு களமிறங்கியதால், அவருக்கு போட்டியாக அவரது அந்தரங்க விஷயங்கள் எல்லாமும் தெரிந்த சிங்கமுத்து களமிறக்கப்பட்டார். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பேச… வடிவேலுக்கு எதிராக சிங்கமுத்து பேசினார். வடிவேலுவின் பிரசாரத்துக்கு கிடைத்த அளவு சிங்கமுத்து பிரசாரத்துக்கு ஆதரவு இல்லையென்றாலும்…‌ ஜெயித்தது என்னவோ சிங்கமுத்து பிரசாரம் செய்த அதிமுகதான்.

அதனால்தான் இப்போது சிரியோ சிரியென சிரித்துக் கொண்டிருக்கிறார் சிங்கமுத்து. தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ஆசி பெறுவதற்காக போயஸ் கார்டன் சென்ற சிங்கமுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது கூறுகையில், தேர்தல் பிரசாரத்திற்கு புறப்படும்போது, இந்த வெற்றி எங்களுக்கு தெரியவில்லை. ஆனால், மக்களை பார்த்தபோது, அவர்களின் கண்களில் ஏக்கம் தெரிந்தது. பெரிய மாற்றத்தை மக்கள் விரும்பினார்கள். அதனால், வெளியில் சொல்ல பயந்து கொண்டே, இரட்டை இலைக்கு ஓட்டு போட்டு விட்டார்கள். இனி மக்கள் எதிர்பார்க்கும் அத்தனையும் நடக்கும், என்றார்.

வடிவேலு பிரசாரம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த சிங்கமுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்கள் ஜெயிக்க வேண்டும் என்று வடிவேலு எங்கேயும் பிரசாரம் செய்யவில்லையே. எம்.ஜி.ஆர். பாட்டை பாடிக்காட்டி ஓட்டு கேட்டு விட்டு, எம்.ஜி.ஆர். வளர்த்த கட்சிக்கு ஓட்டு போடாதே என்றார். அவரது பிரசாரம் காமெடியில் முடிந்துவிட்டது, என்றார்.

http://suthumaathukal.blogspot.com/2011/05/blog-post_15.html


ராசாவுக்கு சுண்ணாம்பு.... ராணிக்கு வெண்ணெய்...

தி.மு.க. ஆட்சியில் மாநில அமைச்சருக்கு ஒரு நியாயம். எம்.பி.க்கு ஒரு நியாயம் என்பது சரியா இல்லையா என்று அக்கட்சியின் தலைமைதான் தெரிவிக்க வேண்டும்.

2008ம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியருக்கு சலுகை காட்டும்படி சொன்ன தமிழ்நாட்டின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணாவை, ராஜினாமா செய்யும்படி சொன்னார். காரணம், பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தி.மு.க. தலைமையை நெருக்கடி செய்தது.

ஆனால், கனிமொழி 2-ஜி ஊழல் என்று சொல்லப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கூட்டுச் சதியாளர் என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியும் கனிமொழி மீது தி.மு.க. தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், பூங்கோதை யாரோ பெற்ற பிள்ளை. கனிமொழி தான் பெற்ற செல்ல மகள்.

பூங்கோதையை விடுங்கள். எப்படியோ, விட்ட அமைச்சர் பதவியை, கனிமொழியை வைத்து, ராசாத்திக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து, சில நேரங்களில் ராசாத்திக்கு கால் அமுக்கிவிட்டு, பிடித்துக் கொண்டார்.

தி.மு.க.வின் நகைச்சுவை நாயகன் துரைமுருகன் கதி ? அவருக்கு என்ன நன்றாகத்தான் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆனால், முதல்வர் சொன்னபடி பேச்சை கேளாமல், கெம்பிளாஸ்ட் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டு தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்தார் என்பதால், அவர் வகித்து வந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது. பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு வெறும் சட்டத்துறை அமைச்சர் பதவிதான் கொடுக்கப்பட்டது. சில வாரங்கள் கருணாநிதி, துரைமுருகனை சந்திப்பதையே தவிர்த்தார். அதன் பிறகு ஆற்காட்டார் உடல்நிலை குன்றி, மீண்டும் துரைமுருகன் நெருங்கி வந்த பிறகும், அவருக்கு பொதுப்பணித்துறை கொடுக்கப்படவில்லை.

காரணம், துரைமுருகன் யாரோ பெற்ற பிள்ளையாயிற்றே!

இதைவிட கொடுமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

கனிமொழிக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால், கட்சியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள்.

சரி... கனிமொழிக்கு இப்படிப்பட்ட சங்கடம் வந்துவிட்டது. என்ன செய்திருக்க வேண்டும். குறைந்தப்பட்சம், அவரை எம்..பி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். இதைத்தானே, கடந்த டிசம்பரில் அழகிரி சொன்னார்.

"ராசாவையும் கனிமொழியையும் கொஞ்ச காலத்துக்கு தள்ளி வையுங்கள். குறிப்பாக சென்னை சங்கமத்தை இந்த முறை கனிமொழி நடத்த வேண்டாம்" அழகிரி சொன்னாரே.. அதையாவது செய்தாரா கருணாநிதி.

போன வாரம் வரை ராசாவை தாங்கிப்பிடித்த கருணாநிதியின் குரல், டெல்லி கோர்ட்டில் ராம்ஜெத்மலானி வாயிலிருந்து ஒலித்ததே... அதைப் பார்த்தால், ராசா என்ன நினைப்பார் என்று கருணாநிதி யோசித்து இருப்பாரா?

கனிமொழிக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாமே ராசாதான் என்கிறார் ராம்ஜெத்மலானி. அடுத்து, அப்படியே பண பரிவர்த்தனை நடந்தாலும், அது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஷரத்குமாருக்குதான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ராம்ஜெத்மலானி.'

இதெல்லாம் ராம்ஜெத்மலானி சொந்த வாதங்கள் என்றா நினைக்கிறீர்கள். அந்த வாதங்கள் எல்லாம், கருணாநிதியின் வாசகங்கள் என்பது மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ராசாவுக்கு?

என்ன இப்படி சொல்கிறார் ராம்ஜெத்மலானி என்று பத்திரிகையாளர்கள், தி.மு.க. எம்.பி.யான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது, 'ராம்ஜெத்மலானி என்பவர் கனிமொழியின் வக்கீல். கனிமொழிக்காக அவர் வாதம் செய்வதையும் ராசா விவகாரத்தையும் முடிச்சி போட வேண்டாம்" என்கிறார்.

அடடா.... என்ன விளக்கம்... என்ன விளக்கம்.

ஆ.ராசா..... "ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ' என்று கோர்ட்டிலேயே அலறி இருப்பார்.

என்ன செய்வது... கத்தவும் முடியாது. கனிமொழியை மிரட்டவும் முடியாது.

காரணம். கனிமொழி போட்ட பிச்சைதானே ராசாவுக்கு மந்திரி பதவி கிடைத்தது.

ஆனாலும், வெள்ளியன்று கனிமொழி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான அன்று, ஆ.ராசாவும் அந்த கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்.

கனிமொழியிடம் கோர்ட்டுக்குள்ளே பேச முயற்சித்திருக்கிறார் ராசா. ஆனால், கனிமொழியுடன்வந்த 5 வக்கீல்கள், அதாவது வக்கீல்கள் என்ற போர்வையில் வந்த 5 எம்.பி.க்கள், கனிமொழியிடம் ராசா பேசுவதை தடுத்துவிட்டார்களாம். அதுமட்டுமா... கோர்ட் வளாகத்தில் கனிமொழி சாப்பிடும் இடத்துக்கும் ராசா வந்திருக்கிறார். அங்கேயும், அவரிடம் கனிமொழி பேசாமல் ஒதுங்கிவிட்டாராம். இது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், இன்று(7.5.11) வந்திருக்கிறதே?

அந்த தகத்தகாய கதிரவனை கண்டு ஏன் இப்படி ஒதுங்க வேண்டும்.

நீரா ராடியாவிடம் சொல்லி நீங்கள்தானே மந்திரி பதவியை வாங்கிக் கொடுத்தீர்கள்.

ஆ.ராசா இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லையே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

அப்புறம் என்ன தயக்கம்?

கோர்ட்டில் ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களை பார்த்தால், மகா கேவலமாக இருக்கிறது.

"கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடி ரூபாய் தொகை குறித்து கனிமொழிக்கு தெரியாது. அதெல்லாம் ஷரத்குமார்தான் கவனித்துக் கொண்டார்" என்று சொல்லி இருக்கிறார்.

கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்தவர் கனிமொழி. அவருக்கு தெரியாமல், ஷரத்குமார் எப்படி கடன் வாங்க முடியும். அதுவும், ஒரு ரூபாயா இரண்டு ரூபாயா. 200 கோடி ரூபாய். அதுவும் ஒரு இயக்குனர், மற்ற இரு இயக்குனர்களுக்கு (கனிமொழி, தயாளு ஆகியோருக்கு) தெரியாமல் 200 கோடியை எப்படி கடன் வாங்க முடியும். அப்படியே வாங்கினாலும் விட்டு விடுவார்களா ?

கனிமொழி 20 சதவிகித பங்கு வைத்திருந்தாலும், அவர் முதலாளி. ஷரத் 20 சதவிகித பங்கு வைத்திருந்தாலும், அவர் தொழிலாளி என்பது எல்லாருக்கும் தெரியும். தொழிலாளிக்கு தெரியாமல் முதலாளி கடன் வாங்கலாம். ஆனால், முதலாளிக்கு தெரியாமல், தொழிலாளி அந்த நிறுவனத்துக்காக கடன் வாங்குவாரா?

இந்த விவகாரத்தில் கருணாநிதியின் மனைவி தயாளுவையும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டி இருந்தால், இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு பல விடைகள் தானாக வந்து விழுந்து இருக்கும்.

"நான் செயல்படாத இயக்குனர். மேலும், எனக்கு ஆங்கிலமும் தெரியாது. அவர்கள் கையெழுத்துப் போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டேன்" என்று தயாளு சொல்லி சி.பி.ஐயிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதும் ஒரு மோசடிதான். ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் இயக்குனர் தவறு செய்தால், மற்றவர்கள் மீதும் இதே கருணையை சி.பி.ஐ. காட்டுமா?

சி.பி.ஐ. கோர்ட்டிலிருந்து சம்மன் வந்த பிறகுதான் கனிமொழி டெல்லி சென்று ஆஜராகி இருக்கிறார். அவருக்காக அரசு எந்திரங்களும், பரிவாரங்களும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் பெரும் கொடுமை!

1. தனிப்பட்ட வழக்கு விவகாரத்துக்காக சென்ற கனிமொழி முதலில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது முதல் தவறு. இரண்டாவது அவருக்கு மட்டுமல்ல, அது ராசாத்திக்கும் பொருந்தும். இவர்களுக்கு காசுக்கா பஞ்சம். மவுரியா ஷெராட்டனில் தங்கினாலாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொஞ்சம் கணக்கு காட்ட வசதியாக இருக்குமே!

2. கனிமொழிக்காக, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசின் உள்துறை செயலாளர் டெல்லி செல்லலாமா? அவர்கள் வேறு விவகாரத்துக்கு சென்றிருந்தால், அதை மாநில அரசு வெளியிடுமா?

3. முதல்வரின் தனி பாதுகாப்பு அதிகாரி தாமோதரன், எதற்காக டெல்லி சென்றிருக்கிறார்.

4. டெல்லி திகார் சிறை பாதுகாப்புகாக இருக்கும் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸார், கனிமொழியின் பாதுகாப்புகாக மூன்று பேர் சுழற்சி அடிப்படையில் தனி காரில் கோர்ட்டுக்கு வந்து செல்வது சரியா?

இதெல்லாம், மாநில அரசு பதில் சொல்ல வேண்டியவை.

தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு ஒரு கேள்வி. இந்த வழக்கில் தி.மு.க.வில் இருக்கும் எத்தனையோ அறிவார்ந்த வக்கீல்களை வைத்து வாதாடாமல், ராம்ஜெத்மலானியை ஏன் தேர்வு செய்தீர்கள்.

அவர் ஒரு முறை கோர்ட்டுக்கு வந்தால், 5 லட்சம்தான் வாங்குவார். ஆனால், நீங்கள் கொடுத்த தொகை ஒரு கோடி.

அதுவும் அவர் வேறு ஊரில் இருந்து டெல்லி வருவதற்கு, அவருக்காக சார்ட்டட் பிளைட் ஏற்பாடு செய்து, அதற்கு 20 லட்சம் ரூபாய் செலவு.

இதே வழக்கில், சிறை சென்றிருக்கும் ராசாவுக்கு இப்படி ஒரு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.

ராசாவுக்காக, ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசிய வீரமணி, சுப.வீரபாண்டியன், ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பர் ஆகியோருக்கு ஒரே கேள்வி.

"இந்த பிரச்னைக்கெல்லாம் காரணம் ஆ.ராசா" என்று ராம்ஜெத்மலானி சொல்லி இருக்கிறாரே?

இப்போது நீங்கள் கருணாநிதியிடம் என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள்.

ஆக, அடுத்தவருக்கு ஒரு நியாயம். கருணாநிதி குடும்பத்துக்கு வேறு நியாயம்!

அதாவது ராசா கண்ணில் சுண்ணாம்பு.... ராணி அதாங்க.... கனி கண்ணில் வெண்ணெய்!

எப்படி?

http://www.tamilleader.in/news/136-2011-05-07-14-27-58.html

திகைத்துப்போய், ஓரடி பின்வாங்கிய அழகிரி!



“இந்த நாட்டைவிட, ‘அந்த’ வீட்டைக் கவனிப்பதுதான் அவருக்கு (கருணாநிதி) முக்கியமாகப் போச்சு… இன்னும் 1 மாதத்தில் நாட்டைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் அவர் இருக்கமாட்டார். சந்தோஷமாக ‘அந்த’ வீட்டில் இருந்து, ‘அவர்களையே’ கவனித்துக் கொள்ளட்டும்”

மேலேயுள்ள வாக்கியத்தைச் சொன்னது ஒரு அ.தி.மு.க. தலைவராகவோ, தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகராகவோ இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நம்புங்கள், மேலேயுள்ள வார்த்தைகள் வெளிவந்தது தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி என்று கூறப்படும் அழகிரியின் வாயிலிருந்து! தேர்தல் தினத்துக்குச் சில நாட்களுக்குமுன், கோபத்துடன் அவர் கூறிய வார்த்தைகள் அவை!

தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தி.மு.க. ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை ஊகிக்காதவர்கள் மிகக்குறைவு. ஆனால், இப்போது நடந்திருப்பதுபோல மிகக் கேவலமான தோல்வியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை.

ஆனால் அழகிரி அதை ஊகித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

மதுரையில் தான் கட்டியெழுப்பிய சாம்ராச்சியம் இப்போது சரசரவெனச் சரிவதை, அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. இனி எச்சரிக்கை ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியதில்லை. வெள்ளம் தலைக்கு மேல்!

அவரது ஆட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மதுரையிலிருந்து கிளம்ப பெட்டியைக் கட்டி விட்டார்கள். மதுரை மாநகருக்கு உள்ளேயுள்ள பல பில்டிங்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள், அவசர அவசரமாக ரிஜிஸ்தார் ஆபீசில் மாறுகின்றன.

மதுரை மத்தியில் கட்சிக் கொடியுடன் பந்தாவாகப் பவனிவந்த பல சுமோக்கள் இப்போதெல்லாம் மதுரை எல்லைக்குள்ளேயே தென்படுவதில்லை. இவற்றில் பல, மதுரைக்கு வெளியே கிராமங்களில் உள்ள பண்ணை வீடுகளில் கீற்றுக் கொட்டகைகளில் தற்காலிகமாகத் தூங்குகின்றன. கடந்த ஓரிரு தினங்களாக சில மதுரை வீடுகளில் டெம்போக்கள் இரவு நேரத்தில் வந்து நிற்கின்றன. பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இரவோடு இரவாக மதுரை மாநகர எல்லைக்கு வெளியே பறக்கின்றன.

ஒரு சாம்ராச்சியம் காலி செய்யப்படுகின்றது.

இவற்றில் ஏதும் அவருடன் (அழகிரி) நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவையெல்லாம் அவரைச் சுற்றி வளைய வந்துகொண்டிருந்த ஆட்களின் சொத்துக்களாம். “தேர்தல் முடிவுகள் வருமுன்னரே, அண்ணன் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டார்… தெரியுமோ?” என்று கண்ணடிக்கிறார்கள் அவர்கள்.

சரி. நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று ‘அண்ணனுக்கு’ எப்படித் தெரிந்தது?

தேர்தல் பிரசார டைமிலேயே அண்ணனை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்களாம். அவசரப் படாதீர்கள். அப்படிச் செய்தது எதிரணியினர் அல்ல… அவரது சொந்தக் கட்சித் தலைமைதான்!

அப்படி என்னதான் நடந்தது என்று அழகிரியுடன் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். சுவாரசியமான விஷயங்கள் வெளிவருகின்றன.

தேர்தல் கமிஷன் கடுமை காட்டப்போகின்றது என்பது உறுதியானவுடன், முதன்முதலில் ‘மாற்று வழிகளை’ கண்டுபிடித்தது மதுரையில்தான். அந்தளவுக்கு அழகிரி அலேர்ட்டாக இருந்திருக்கிறார்.

தென்மாவட்ட வேட்பாளர் தேர்விலும் ஓரிரு நெருடல்கள் இருந்தாலும், ஓவர்ஆல் நிலைமை அவருக்குத் திருப்தியாகவே இருந்தது. நிதி நிலைமையில் எப்போதும், எந்தக் கவலையும் இல்லை. மொத்தத்தில் யுத்தத்துக்கு 100% அஞ்சாநெஞ்சர் ரெடியாகவே இருந்தார்.

ஆனால் அதன்பின்தான் சென்னையிலிருந்து சரம்சரமாக உத்தரவுகள் வரத் தொடங்கின.

மதுரைப் படப்பிடிப்பில் இவர்தான் டைரக்டர் என்பதே அதுவரை இருந்த நிலை. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க, டைரக்ஷன் உத்தரவுகள் சென்னையிலிருந்து வர, இவர் உதவி டைரக்டர்போல ஆகிவிட்டார்!

ராசா-கனிமொழி ஊழல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருக்க, தென்மாவட்டங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அப்படியான நிலையில் மக்களை வாக்களிக்க அனுப்பி வைத்தால், ‘கோவிந்தா’ தான் என்பது பலவருட அரசியல்வாதியான அவருக்கும் தெரியும்.

போதும் போதாதற்கு, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வேறு! காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் களம் இறங்கியிருந்த தமிழின உணர்வாளர்களின் ஸ்ட்ராங் ஸ்பாட்டே, தென் மாவட்டங்கள்தான். சீமான் போன்றவர்களுக்குக் கூட்டம் அதிகம் கூடியதும் தென்மாவட்டங்களில்தான்.

இதற்காக அழகிரி வகுத்திருந்த வியூகம், வாக்களிக்கச் செல்லும்போது மக்களை மகிழ்ச்சியான மனநிலையில் செல்ல வைப்பது. ஆடல், பாடல், வடிவேலு காமடி என்று மக்களின் மனநிலையை லேசாக்கும் வேலையில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்க-

பிரசாரத்துக்கு கனிமொழியைக் களம் இறக்குவது என்ற முடிவு சென்னையில் எடுக்கப்பட்டது.

இந்தத் தகவல் மதுரையை வந்தடைந்தபோது, அழகிரி முதலில் அதை நம்பவில்லை. “தலைமை அப்படியெல்லாம் செய்யாது. பிரச்சினையே அவங்கதானே (கனிமொழி). பிரசாரத்துக்காக அவங்க வெளியே வரமாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, சென்னையைத் தொடர்பு கொண்டு கேட்டால், கிடைத்த சேதி நிஜம்!

அப்போதே “இந்த விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை, அப்போது ஆஃப் ஆகிவிட்டார்.

“தலைமை என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். தென் மாவட்டங்களில் எங்கள் வேலையை நாங்கள் தொடர்வோம். கனிமொழி நம்ம ஏரியாவுக்கு வரமாட்டார்” என்று தன்னையும் சமாதானப்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், இதுகூட ஓரிரு மணிநேரத்துக்குமேல் நீடிக்கவில்லை. அடுத்த தகவல் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது – “கனிமொழி தென்மாவட்டங்களிலும் சூறாவளிப் பிரசாரம்!”

பொங்கியெழுந்தார் அஞ்சாநெஞ்சர்! தலைமையுடன் டெலிபோனில் அவர் போட்ட சண்டையில் ‘காரமான’ சொற்களும் வந்து விழுந்தன என்கிறார்கள். நான்கைந்து தடவைகள் போன் போட்டுப் பேசியபின், “இல்லை.. நிச்சயம் கனிமொழி நம்ம ஏரியா பக்கம் வரப்போவதில்லை” என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குச் சொல்லி உற்சாகப் படுத்தினார்.

ஒருவேளை சென்னையிலிருந்து அப்படியொரு உறுதிமொழி அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சென்னைக்கு என்ன அழுத்தமோ(!), ‘டாண்’ என்று தெற்கே வந்திறங்கினார் கனிமொழி! நடப்பதை நம்ப முடியாமல், திகைத்துப்போய் ஓரடி பின்வாங்கினார் அழகிரி.

“என்னய்யா… அவங்க (கனிமொழி) பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாயிருக்கு. அதையெல்லாம் மக்களை மறக்க வைக்கலாம் என்று நான் கிடந்து அல்லாட, அவங்களையே கொண்டுவந்து இறக்கிறாங்களா? எதுக்கு? மக்களுக்கு ஞாபகப்படுத்தவா?” என்றெல்லாம் நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் அவர்.

“நிலைமை கையை மீறிப் போய்விட்டது. தெற்கே இனியும் நான் ராஜா இல்லை” என்று அப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது அவருக்கு. அதன்பின்தான் ஒதுங்கிக் கொண்டார். ஏதோ, சம்பிரதாயத்துக்கு தலையைக் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, ஆட்சி மாற்றம் வந்தால் என்ன செய்வது என்ற ‘தனது வேலைகளை’ பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது நிஜமாகவே ஆட்சி மாறிவிட்டது. அழகிரி, ‘தனது விஷயத்தில்’ மதுரையை கிளீன் ஸ்லேட்டாக மாற்றி வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள். புதிய அரசு தலைகீழாக முயன்றாலும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளில் அவரைச் சிக்க வைக்க முடியாதாம்! ஆட்சி முடியும் முன்னரே, முடிக்க வேண்டிய விஷயங்கள் முடிக்கப்பட்டு விட்டனவாம்!

நம்புவோம். இவ்வளவு கால அவகாசத்தில் அதைச் செய்திருக்க முடியும்தான்.

ஆனால், புதிய அரசு பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைத் தொடாமல், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் கவனத்தைத் திருப்பினால்?

ஏனென்றால் அவை அசையாச் சொத்துக்களைப் பற்றியவையல்ல… (எந்தப் பக்கமும்) அசையக்கூடிய சாட்சிகளைப் பற்றியவை அல்லவா!

http://viruvirupu.com/2011/05/16/1796/



ஜாபர் சேட்-கலைஞர் விவகார ‘திடுக்’ மர்மம்! இப்போது கசியும் கதை!!



சென்னை, இந்தியா: “வாக்குச் சாவடிக்கு கடைசி நேரத்தில் வந்தவங்க எல்லாமே நம்ம ஆட்கள்தான் ஐயா. அவங்க ஓட்டு போட்டதே போதும்… நீங்க ஜெயிச்சதா வெச்சுக்குங்க” இந்த வார்த்தைகள்தான் இப்போது தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்களால் தமக்கிடையே கோபத்துடன் பரிமாறப்படும் வார்த்தைகள்.

“இப்படிச் சொல்லியே அந்தாள் தலைவரை பிரைன் வாஷ் செஞ்சிட்டார்” என்று அவர்கள் குறிப்பிடும் ‘அந்தாள்’ வேறுயாருமில்லை, தமிழகக் காவல்துறையின் முன்னாள் (இனி அப்படிக் கூறலாம்தானே!) உளவுப் பிரிவின் இன்ஸ்பெக்டர் ஜெனரல், ஜாபர் சேட்!

படுதோல்வியடைந்த அதிர்ச்சியில் இதுவரை இருந்த தி.மு.க. இரண்டாம் நிலைத் தலைவர்கள், இப்போதுதான் திகைப்பிலிருந்து விடுபட்டு, ஒவ்வொருவராக நிஜ உலகுக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள். ஏற்பட்ட தோல்வி பற்றித் தமக்கிடையே விவாதிக்கவும் தொடங்கியிருக்கிறார்கள்.

தோல்விக்குக் காரணம் என்று அவர்களில் ஒவ்வொருவரும் வெவ்வேறு காரணங்களை சொல்கிறார்கள். ஆனால், சொல்லி வைத்தாற்போல அனைவரும் ஒற்றுமையாகச் சொல்லும் ஒரு காரணம், உளவுப்பிரிவை நம்பி கலைஞர் ஏமாந்து விட்டார் என்பதே!

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால், ஜாபர் சேட் கூறியதை நம்பிய கலைஞர், அதை இவர்களுக்கும் கூற, இவர்களும் அதையே நம்பியதாக இப்போது புலம்புவதுதான்.

“தேர்தல் முடிந்த நாளில் இருந்து முடிவு அறிவிக்கப்பட்ட நாள்வரை, கிட்டத்தட்ட 1 மாதமாக கலைஞர் ரொம்ப நம்பிக்கையுடனே இருந்தார். ஒருவேளை தோற்றுவிடலாம் என்ற சிறிய நினைப்புக்கூட அவருக்கு இருக்கவில்லை. அடுத்த கேபினெட்டிலேயும் நீதானப்பா அந்த இலாகாவுக்கு அமைச்சர் என்று சில நெருக்கமான அமைச்சர்களிடமும் கூறினார். தலைவரே இப்படி அழுத்தமாகச் சொல்ல, அதை நாங்களும் நம்பினோம்” என்கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

“நாமதானே மீண்டும் இங்கே வரப்போகின்றோம்” என்ற நினைப்பில் பல அமைச்சர்கள், தத்தமது அமைச்சு அலுவலகங்களில் இருந்த விலையுயர்ந்த பொருட்களைக்கூட அகற்றாமல், அங்கேயே வைத்திருந்திருக்கிறார்கள்.

அந்தளவுக்கு ஒரு நம்பிக்கை!

நாம் விசாரித்தபோது, தென்மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு முன்னாள் அமைச்சர், தனது மனதில் இருந்ததைக் குமுறித் தீர்த்துவிட்டார்.

“தேர்தல் தினத்தன்றே எங்களுக்கு கொஞ்சம் டவுட் இருந்தது. வாக்குப்பதிவு முடிந்தவுடன் நம்ம பசங்களைக் கேட்டேன். ‘கொஞ்சம் சந்தேகம்தான் ஐயா’ என்றுதான் சொன்னாங்க. ஆனா சென்னைக்கு போன் போட்டா, வேறு கதை சொன்னாங்க. ‘உங்க வெற்றி காரண்டி… உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கு. கவலைப்படாம ஆகவேண்டியதைப் பாருங்க’ அப்பிடீன்னு சொன்னாங்க.

அப்பவும் எனக்கு டவுட். என்னடா இது, நாம தொகுதியில் இருக்கோம். நமக்கே ஜெயிப்போமான்னு சந்தேகமாயிருக்கு. ஆனா சென்னையிலே அடிச்சுச் சொல்லுறாங்களே!

ரெண்டுநாள் கழிச்சு சென்னைக்குப்போய் தலைவரைப் பாத்தபோது அவரும் சிரிச்சிட்டே, எம்பா ஜெயிச்சிருவாயாமே… தொகுதி பற்றி நல்ல ரிப்போர்ட் இருக்குன்னு சொன்னார். அந்தளவுக்கு உளவுத்துறை ரிப்போர்ட்டை தலைவர் நம்பினார். வந்த முடிவைப் பாத்தா, எல்லாமே தலைகீழ்” என்று எம்மிடம் போனில் குமுறினார் அவர்.

எம்முடன் பேசிய அமைச்சர், பத்தாயிரத்துக்கு மேற்பட்ட வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.

தி.மு.க.வின் முன்னாள்கள் பலரும் இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த ஜாபர் சேட்டையே குற்றம் சாட்டுகின்றனர். கலைஞருக்கு என்ன சொன்னால் பிடிக்குமோ, அதையே சொல்லிக்கொண்டு பதவியில் இருந்துவிட்டார் என்கிறார்கள் அவர்கள்.

கடந்தமுறை கலைஞர் அட்சிக்கு வந்தபோது ஜாபர் சேட் உளவுத்துறையின் தலைவராக இருக்கவில்லை. மத்திய மண்டல ஐ.ஜி.யாகத்தான் இருந்தார்.

ஒரு கட்டத்தில், அவருடைய பதவிக்கு உட்பட்ட ஏரியாவுடன் தொடர்பான சில சென்சிட்டிவ்வான விஷயங்களை கலைஞருக்கு ரிப்போர்ட் செய்ய அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தபோது, அதை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டார் என்கிறார்கள் தி.மு.க. உள்வட்டத்தில்.

கலைஞருக்கு அவரால் ரிப்போர்ட் செய்யப்பட்டிருந்த சென்சிட்டிவ்வான விஷயத்தில், தமிழகத்தின் அன்றைய ‘முதல் குடும்பத்தை’ சேர்ந்த ஒருவரது வில்லங்கமான ஒரு ட்ரான்சாக்ஷனும் இருந்ததாம். அதைப்பற்றி கலைஞர் ஏதோ கேட்கப்போக, யாராலும் காட்டமுடியாத ஒரு பாதையைக் காட்டினாராம் இவர்.

இவர் அந்த வழியைக் காட்டியிராவிட்டால், மத்திய ரிசர்வ் பேங்க் இழுபறி ஒன்றுக்குள் முதல் குடும்ப நபர் சிக்கியிருப்பாராம்!

அதன்பின்னரே இவர் கொஞ்சம் கொஞ்சமாக முதல் குடும்ப நபருடன் நெருங்கிவர, கலைஞர் இவருக்கு உளவுத்துறையின் ஐ.ஜி. பதவியைக் கொடுத்தாராம்!

இந்தப் பழைய கதை இப்போது எப்படி வெளியே வருகின்றது? வேறொன்றுமில்லை, சில முன்னாள் அமைச்சர்களின் கோபக் கொந்தளிப்பில்தான், இந்தக் கதை இப்போது வெளியே லீக் ஆகியிருக்கிறது.

இந்தக் கதை சில முன்னாள் அமைச்சர்களுக்குத் தெரிந்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமல்ல. ஆனால் அவர்களுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுதான்.

“இவர் தலைவரைத் திருப்திப்படுத்த பொய் சொன்னாரா? அல்லது யாரோ போட்டு இவருக்குக் கொடுத்திருந்த திட்டப்படி, பொய்சொல்லி கவிழ்த்து விட்டாரா?” என்பது தெரியாமல்தான் சில முன்னாள்கள் தலையை உடைத்துக் கொள்கிறார்கள்!

ஒருவேளை, அப்படியும் இருக்குமோ!

ஏனென்றால், எமக்குக் கிடைத்த தகவல்களின்படி சில வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களும் இதில் இருக்கின்றன. கொஞ்சம் பொறுங்கள்… அவற்றையும் எடுத்து வருகிறோம்.

http://viruvirupu.com/2011/05/18/1994/


குடும்ப அரசியலும்; இனத் துரோகமும் பெற்ற வீழ்ச்சி!

karunanidhi_01தமிழகத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்து விட்டன.

கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழகத்தில் ஆட்சிசெய்த தி.மு.க வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் பிரியாவிடை அளித்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அவர்களது தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றிருக்கும் இம் மாபெரும் வெற்றி, உண்மையில் ;அறிஞர் அண்ணாவின் வழியை விட்டுத் தடம் மாறி – மிதமிஞ்சிய ஆடம்பரத்துக்கும் தன் குடும்பம் தன் பதவி என்னும் சுயநலத்துக்கும் அடுத்திருக்கும் குட்டித்தீவில் தமிழினப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையிலுங்கூட ‘பாசாங்குத் தனமான’ செயல்களில் ஈடுபட்டும் வந்த – கலைஞரின் ஆட்சி மீது தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்குக் கிடைத்த ‘விலை’ என்பதே பொருந்தும்.

அதிலும், அண்ணாவுக்குப் பின்னர்,-1991 ஆம் வருடம் ராஜீவ் கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தி.மு.க அடைந்த பின்னடைவைத் தவிர்த்து- தொடர்ந்து முதல்வராயும் அவ்வாறு இல்லாவிடில் எதிர்க்கட்சித் தலைவராயும் தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த கலைஞர் இந்தத் தடவை எதிர்க்கட்சிக்கான தகுதியையே இழந்து விட்டிருக்கிறார்.

தி.மு.க வோடு கடைசிவரை போராடித் தமக்கு 63 இடங்களைப் பெற்றுக்கொண்ட காங்கிரசால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது.

’இது வெற்றிக் கூட்டணி’ எனப் புளகாங்கிதமடைந்த பா.ம.க வுக்குக் கிடைத்ததோ மூன்றேமூன்று இடங்கள். வேண்டுமானால்;மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் கட்சிக்கு முட்டுக் கொடுத்தவருக்கு மூன்றிடங்கள் கிடைத்திருக்கிறது என ‘கவித்துவத்துடன்’ கூறித் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் யாருமே எதிர் பார்க்காத வகையில் இந்தத் தடவை தமிழக மக்கள்; தி.மு.க வுக்கும் அதன் கூட்டணியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் காங்கிரசுக்கும் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கட்சியும் இதன் கூட்டணியும் இனித் தமிழகத்தில் அரசியல் நடாத்துவதையே எண்ணிப்பார்க்கக் கூடாது என்னுமாப்போல், எதிரணிக்கு மிகப் பெருமளவில் தங்கள் ஆதரவினை வழங்கிய தமிழக மக்களது நாடித்துடிப்பினை அறியாது…..; தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இடைப்பட்ட ஒரு மாதகாலத்தில் தி.மு.க வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர்மாறி மற்றொருவராய், கலைஞரைச் சந்தித்து தங்கள் கூட்டணியே அதிக பெரும்பானமையுடன் ஆட்சிக்கு வரும் எனப் பேட்டி அளித்துக் கொண்டிருந்ததை நினைக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. தங்களால் ஆளப்படும் மக்களின் உணர்வுகளை, அவர்களது எண்ணங்களை அறியாத அரசுத் தலைவராகக் கலைஞர் செயல்பட்டிருக்கிறார் என்பது வியப்பாகவும் இருக்கிறது.

எனினும், இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்றிருக்கும் மோசமான தோல்வியின் பின்னால்…….. 2ஜி ஊழல் தொடங்கி ஈழப் படுகொலைகள் வரை பல காரணங்கள் வரிசை பிடித்து நிற்கின்றன.

தி.மு.க வின் வரலாற்றில், ஊழலுக்குப் பிள்ளையார் சுழி இட்டவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கும் கலைஞர்( தி.மு.க வின் முதலாவது அமைச்சரவையின் தலைவராக இருந்த அண்ணா ஊழல் வதந்திகளுக்கு ஆட்படவில்லை) இந்தத் தடவை தனது துணைவி உட்படப் பலர் இந்த ஊழல் சாக்கடையில் புரண்டெழுந்து ‘முத்துக் குளிக்கும்’ வாய்ப்பினைத் தாராளமாகவே வழங்கியிருக்கிறார் என்னும் சந்தேகம் தமிழக மக்களிடம் பதிந்து விட்டிருக்கிறது.

முதலில் அமைச்சர் ராசா, தொடர்ந்து அவரது மகள் கனிமொழி என ஊழலின் பரிமாணம் விரிவடைந்த நேரத்தில் தேர்தலும் இடம் பெற்றது ஒரு காரணம் என்றால்; தமிழகத்தில் ‘கட்டெறும்’பாகிக் கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சி, இறுதி நேரத்தில் கலைஞரை மிரட்டும் பாணியில் செயலில் இறங்கியதும்…… தனது மகள் கனி மொழியைப் பாதுகாப்பதற்காக அக்கட்சிக்கு 63 தொகுதிகளைத் தாரை வார்த்ததும் மற்றொரு காரணம் எனலாம்.

இவை மட்டும் அல்லாமல், ‘அஞ்சாநெஞ்ச சாகசம்’ புரிந்து தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்கும் மதுரை வித்தையாளரின் கரங்களைத் தேர்தல் ஆணையம் சாதுர்யத்துடன் முடக்கி விட்டிருந்தது. போதாதென்று, கலைஞரின் ‘பேரன்கள்’ திரைப்படத்துறையின் ’ஆக்டோபஸ்’களாய் உருவாகியதால் பாதிப்புற்றவர்கள் கலைஞரின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராகக் களமிறங்கி இருந்தார்கள்.

ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்த காங்கிரசுக்கு எதிராக சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் செயல்பட்டதால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் செல்வாக்கும் சேர்ந்தே சரியத் தொடங்கியது.போதாதென்று, தங்கபாலுவின் நடவடிக்கைகளால் உருவான உட்கட்சிப் பூசல்கள்…….

மாநிலம் தழுவிய மின் தட்டுப்பாடு……. ஊழல் பிரச்னை காரணமாக கலைஞரின் குடும்பதிற்குள்ளேயே உருவான முறுகல்கள்…….. ஆகியனவும் இவற்றோடு இணைந்து கொண்டன.

தி.மு.கவின் பங்குக்கு, குடும்ப ஆட்சியும்; காங்கிரசின் பங்குக்கு இனத் துரோகமும் என இவ்விரு கட்சிகளினதும் சம அளவிலான பங்களிப்பினால் ; அவற்றுடன் இணைந்து கொண்ட பா.ம.க வும், விடுதலைச் சிறுத்தைகளும் பலியாகி விட்டதாகவே தெரிகிறது.

மக்களாட்சியின் வலிமையினை நிரூபித்திருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுமாயின்; அது புதிதாக ஆட்சியில் அமரப்போகும் அ.தி.மு.க வுக்குப் பெருமை சேர்க்கும்.

"சர்வசித்தன்"

[www.sarvachitthan.wordpress.com]

Sunday, May 15, 2011

நல்லாட்சி வழங்குங்க மேடம்..........

சொல்லியா தரவேண்டும்?


வாக்காளப் பெருமக்களின் ஏகோபித்த ஆதரவுடன் வரலாறு காணாத அளவில் ஐந்தில் நான்கு பங்கு பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையாக முதல்வராகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்கு "தினமணி' வாசகர்களின் சார்பில் வாழ்த்துகள்.

தேமுதிக என்கிற கட்சி தொடங்கப்படாமல் இருந்திருந்தால், ஒருவேளை 2006-லேயேகூட அதிமுக வெற்றிபெற்று தொடர்ந்து மூன்று முறை முதல்வராக இருந்த பெருமையும்கூட இப்போது அவருக்குக் கிடைத்திருக்கக் கூடும். ஆனால், இந்த ஐந்தாண்டு இடைவெளியேகூட ஒருவகையில் பார்த்தால் அவருக்குப் பல பாடங்களைக் கற்றுத் தந்திருக்கும். தனது முந்தைய ஆட்சிக்காலத்தில் என்னென்ன தவறுகள் நடந்தன என்பதைச் சிந்தித்துச் சீர்தூக்கி, மக்களால் நிராகரிக்கப்பட்ட கடந்த திமுக ஆட்சியின் தவறுகளைத் தவிர்த்து, ஒரு நல்லாட்சியைத் தலைமையேற்று நடத்தும் பக்குவத்தை இந்த இடைவெளி அவருக்கு நிச்சயமாக ஏற்படுத்தியிருக்கும்.

ஏறத்தாழ எண்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. ராஜாஜியும் பெரியாரும் மிக நெருங்கிய நண்பர்கள். "ஆச்சாரியாரே' என்று ராஜாஜியைப் பெரியாரும், "நாயக்கரே' என்று பெரியாரை ராஜாஜியும் அழைத்து உரையாடும் அளவுக்கு அவர்களுக்குள் நெருக்கம் இருந்ததை உலகறியும்.

ஒரு கூட்டத்தில் இருவரும் கலந்துகொண்டு அடுத்தடுத்து அமர்ந்திருந்தார்களாம். அப்போது, ஒருவர் ஏதோ ஒரு பிரச்னை பற்றிக் கூறிய கருத்துகள் ராஜாஜிக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. பக்கத்தில் அமர்ந்திருந்த தனது நண்பர் பெரியாரிடம், அந்தப் பேச்சாளரின் கருத்துகளுக்கு எதிரான வாதங்களை முன்வைத்துப் பேசும்படி கேட்டுக் கொண்டாராம் ராஜாஜி.

அடுத்தாற்போல பேசிய பெரியார், தனக்கு முன் பேசியவரின் அத்தனை கருத்துகளையும் தர்க்க ரீதியாக விமர்சித்துப் பேசி, அவரது வாதங்களை உடைத்தெறிந்தார். பேசிவிட்டுத் தனது இருக்கையில் வந்தமர்ந்ததும், "ஆச்சாரியாரே, எதற்காக என்னை அந்தக் கருத்துகளை விமர்சித்துப் பேசச் சொன்னீர்கள்?' என்று கேட்டாராம் பெரியார். அதற்கு ராஜாஜி ""அதைத்தானே நீங்கள் பிட்டுப் பிட்டு வைத்துப் பேசினீர்கள். அதற்காகத்தான் சொன்னேன்'' என்று பதிலளித்ததாகக் கூறுவார்கள்.

ஜெயலலிதா தலைமையில் இன்று ஆட்சிப் பொறுப்பேற்கும் அதிமுக அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்குப் பட்டியல் எதுவுமே போடத் தேவையில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் கோவையில் நடந்த ஜெயலலிதாவின் பிரம்மாண்டமான விலைவாசி எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தொடங்கி, திருச்சி, மதுரையில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், தனது தேர்தல் பிரசாரத்தின்போதும் அவர் பேசிய பேச்சுகளை ஒருமுறை மீண்டும் படித்துப் பார்த்தாலே போதும், இந்த அரசு என்னென்ன செய்ய வேண்டும் என்பதும், என்னென்ன செய்யக்கூடாது என்பதும் அவருக்குத் தெரிந்துவிடும்.

கேபிள் டி.வி.யை அரசுடைமையாக்குவதில் தொடங்கி, மின் தட்டுப்பாடு, மணல் கொள்ளை, அரிசிக் கடத்தல், கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்குப் பதிலாக அரசு மருத்துவமனைகளைச் சீர்படுத்தி மக்கள் நல்வாழ்வுத் துறையை உண்மையிலேயே மக்களின் நல்வாழ்வுக்குத் சேவைசெய்யும் துறையாக மாற்றுவது, காவிரிப் பிரச்னை, முல்லைப் பெரியாறு பிரச்னைக்குத் தீர்வு, இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து அவர்கள் நல்வாழ்வுக்கு உத்தரவாதம் அளிப்பது, தெருவுக்குத் தெரு காளான்களாகி இருக்கும் "டாஸ்மாக்' கடைகள், கல்விக் கொள்ளை, உயர் கல்வியில் நடக்கும் ஊழல்கள் என்று தமிழகத்தை எதிர்நோக்கும் அத்தனை பிரச்னைகளையும் கடந்த ஓராண்டாக எல்லா கூட்டங்களிலும் முதல்வர் ஜெயலலிதா பேசி வந்திருக்கிறார் என்பதால், புதிதாக அவருக்கு எதையும் நாம் நினைவுபடுத்தத் தேவையில்லை.

அமோக வெற்றிக்குப் பிறகு, பத்திரிகையாளர்களைச் சந்தித்தபோதும், தனது தனிப்பட்ட பேட்டிகளின்போதும், ஜெயலலிதாவின் பேச்சில் நிறையவே மாற்றம் காணப்படுகிறது. "நான்' என்கிற வார்த்தைகள் குறைந்து "நாங்கள்' என்கிற வார்த்தை அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது கவனத்தை ஈர்த்தது. "நான்', "எனது' என்கிற வார்த்தைகளை ஒரு முதல்வர் பயன்படுத்தக் கூடாது என்பதல்ல, முடிந்தவரை தவிர்ப்பது அவரது பெருமைக்குப் புகழ் சேர்க்கும். கடைசிவரை எம்.ஜி.ஆர். தனது அரசு என்று கூறிக்கொள்ளாமல், "உங்களது அண்ணாவின் அரசு' என்று குறிப்பிடுவார் என்பதை நாம் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியவில்லை.

மக்கள் மத்தியில் ஜெயலலிதா என்று சொன்னாலே, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் ஆட்சி என்கிற கருத்து இருக்கிறது. நிர்வாகத்திலோ, காவல்துறை தனது கடமையைச் செய்வதிலோ, ஆளும் கட்சி அமைச்சர்களோ, தொண்டர்களோ தலையிடுவதை அனுமதிக்காத நிர்வாகம் ஜெயலலிதாவுடையது என்பது எதிர்பார்ப்பு மட்டுமல்ல, உண்மையும்கூட. கடந்த ஐந்தாண்டுகளில் முதல்வரின் குடும்ப உறுப்பினர்களிலிருந்து, கவுன்சிலர்கள்வரை நடத்திய அதிகாரத் துஷ்பிரயோகங்களும், சட்ட வரைமுறை மீறல்களும், அவர்களது தலைமையில் நடந்த கட்டப் பஞ்சாயத்துகளும், நிச்சயமாக ஜெயலலிதா தலைமையிலான இந்த ஆட்சியில் தொடராது என்று நம்பலாம்.

ஜெயலலிதா தலைமையில் 34 பேர் கொண்ட அமைச்சரவை பதவி ஏற்கிறது. முதன்முறையாக, சிறப்புத் திட்டங்களின் செயல்பாடுகளைக் கவனிக்க ஒரு தனித்துறை அமைக்கப்பட்டு அதற்கு ஓர் அமைச்சரும் நியமிக்கப்பட்டிருக்கிறார். மருத்துவர் ஒருவர் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராகவும், உதகையைச் சேர்ந்தவர் சுற்றுலா வளர்ச்சித் துறை அமைச்சராகவும், நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் மீன்வளத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். சரியான நபர்கள் சரியான துறைக்கு, முதல்வரால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம் படித்த ஒருவர் சட்டத்துறை அமைச்சராக்கப்படவில்லை என்பது மட்டும்தான் ஒரு சின்ன நெருடல்.

கடந்த ஆட்சியில் நடந்த பல தவறுகள் திருத்தப்பட வேண்டும். தவறான திட்டங்கள் கைவிடப்பட வேண்டும். அதில் சந்தேகமில்லை. அதேநேரத்தில், பல கோடி ரூபாய் மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தலைமைச் செயலகம் நிராகரிக்கப்படத்தான் வேண்டுமா? கோயம்பேடு பஸ் நிலையத்துக்குக் காட்டப்பட்ட கருணை ஏன் புதிய தலைமைச் செயலகத்துக்கும் காட்டப்படக் கூடாது?

சரித்திரத்தில் தனது பெயர் நிலைபெற வேண்டும் என்பதற்காக, முந்தைய ஜெயலலிதா அரசு கட்ட இருந்த தலைமைச் செயலகத் திட்டத்தைக் குப்பைத்தொட்டியில் போட்டுவிட்டுக் கருணாநிதி அரசால் கட்டப்பட்டதுதான் புதிய தலைமைச் செயலகம். தேவையில்லாமல் பல கோடி ரூபாயை விழுங்கி அரைக்கோள வடிவில் விதானம் அமைக்கப்பட்டிருப்பது பணவிரயம். ஆனாலும், மக்களின் வரிப்பணமல்லவா விரயம் செய்யப்பட்டிருக்கிறது. அதைப் பயன்படுத்தாமல் இருப்பது என்ன நியாயம்? புதிய தலைமைச் செயலகம், தலைமைச் செயலகமாகத் தொடர்ந்தால் முன்னாள் முதல்வர் கருணாநிதி கட்டியது என்று கூறுவார்கள் என்பதைவிட இன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பெருந்தன்மையைப் பறைசாற்றி அவருக்குப் புகழ் சேர்க்கும் என்பதும் நிஜம்தானே?

ஒரு சில அனுபவசாலிகளும், பல புதியவர்களும் அடங்கிய இளமைப் பொலிவுடன்கூடிய அமைச்சரவை பதவி ஏற்கிறது. இதேபோல, செயல்திறம் மிக்க, நேர்மையாளர்கள் தலைமைச் செயலராகவும், செயலர்களாகவும், காவல்துறை உயர் அதிகாரிகளாகவும் நியமிக்கப்படுவதைப் பொறுத்துத்தான் நல்லாட்சி அமையும் என்பதை மூன்றாவது முறையாகப் பதவி ஏற்கும் ஜெயலலிதாவுக்குச் சொல்லியா தரவேண்டும்?

துதிபாடிகளைச் சற்று தள்ளியே இருக்கச் செய்து, தேவையில்லாத விளம்பரங்களுக்கும், பாராட்டு விழாக்களுக்கும் முந்தைய முதல்வர்போல ஆசைப்படாமல், தவறுகளைச் சுட்டிக்காட்டும்போது அதை ஆரோக்கியமான விமர்சனமாக ஏற்றுக்கொண்டு அந்தத் தவறுகளைத் திருத்த முற்படும் ஆட்சியாக முதல்வர் ஜெயலலிதாவின் இந்த ஆட்சி அமைய வேண்டும் என்பது எங்கள் வேண்டுகோள்.

இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாகத் தமிழகத்தை உருவாக்க முதல்வர் ஜெயலலிதாவுக்கு வாழ்த்துகள்!