Wednesday, May 18, 2011

ராசாவுக்கு சுண்ணாம்பு.... ராணிக்கு வெண்ணெய்...

தி.மு.க. ஆட்சியில் மாநில அமைச்சருக்கு ஒரு நியாயம். எம்.பி.க்கு ஒரு நியாயம் என்பது சரியா இல்லையா என்று அக்கட்சியின் தலைமைதான் தெரிவிக்க வேண்டும்.

2008ம் ஆண்டு ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியருக்கு சலுகை காட்டும்படி சொன்ன தமிழ்நாட்டின் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த பூங்கோதை ஆலடி அருணாவை, ராஜினாமா செய்யும்படி சொன்னார். காரணம், பத்திரிகைகள் வெளியிட்ட செய்திகள் தி.மு.க. தலைமையை நெருக்கடி செய்தது.

ஆனால், கனிமொழி 2-ஜி ஊழல் என்று சொல்லப்படும் ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் கூட்டுச் சதியாளர் என்று சி.பி.ஐ. குற்றஞ்சாட்டியும் கனிமொழி மீது தி.மு.க. தலைமையால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. காரணம், பூங்கோதை யாரோ பெற்ற பிள்ளை. கனிமொழி தான் பெற்ற செல்ல மகள்.

பூங்கோதையை விடுங்கள். எப்படியோ, விட்ட அமைச்சர் பதவியை, கனிமொழியை வைத்து, ராசாத்திக்கு காய்கறி நறுக்கிக் கொடுத்து, சில நேரங்களில் ராசாத்திக்கு கால் அமுக்கிவிட்டு, பிடித்துக் கொண்டார்.

தி.மு.க.வின் நகைச்சுவை நாயகன் துரைமுருகன் கதி ? அவருக்கு என்ன நன்றாகத்தான் இருக்கிறாரே என்று சொல்லலாம். ஆனால், முதல்வர் சொன்னபடி பேச்சை கேளாமல், கெம்பிளாஸ்ட் நிறுவனத்துக்கு எதிராக செயல்பட்டு தனியார் மின் உற்பத்தி நிறுவனத்துக்கு ஆதரவாக இருந்தார் என்பதால், அவர் வகித்து வந்த பொதுப்பணித்துறை பறிக்கப்பட்டது. பறிக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

அவருடைய அமைச்சர் பதவி பறிக்கப்பட்டு, அவருக்கு வெறும் சட்டத்துறை அமைச்சர் பதவிதான் கொடுக்கப்பட்டது. சில வாரங்கள் கருணாநிதி, துரைமுருகனை சந்திப்பதையே தவிர்த்தார். அதன் பிறகு ஆற்காட்டார் உடல்நிலை குன்றி, மீண்டும் துரைமுருகன் நெருங்கி வந்த பிறகும், அவருக்கு பொதுப்பணித்துறை கொடுக்கப்படவில்லை.

காரணம், துரைமுருகன் யாரோ பெற்ற பிள்ளையாயிற்றே!

இதைவிட கொடுமைகள் இன்னும் அரங்கேறிக் கொண்டிருப்பதுதான் கொடுமையிலும் கொடுமை!

கனிமொழிக்கு ஏற்பட்ட நிலை வேறு யாருக்காவது ஏற்பட்டிருந்தால், கட்சியிலிருந்து அவர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள்.

சரி... கனிமொழிக்கு இப்படிப்பட்ட சங்கடம் வந்துவிட்டது. என்ன செய்திருக்க வேண்டும். குறைந்தப்பட்சம், அவரை எம்..பி. பதவியிலிருந்து ராஜினாமா செய்யும்படி கருணாநிதி சொல்லியிருக்க வேண்டும். இதைத்தானே, கடந்த டிசம்பரில் அழகிரி சொன்னார்.

"ராசாவையும் கனிமொழியையும் கொஞ்ச காலத்துக்கு தள்ளி வையுங்கள். குறிப்பாக சென்னை சங்கமத்தை இந்த முறை கனிமொழி நடத்த வேண்டாம்" அழகிரி சொன்னாரே.. அதையாவது செய்தாரா கருணாநிதி.

போன வாரம் வரை ராசாவை தாங்கிப்பிடித்த கருணாநிதியின் குரல், டெல்லி கோர்ட்டில் ராம்ஜெத்மலானி வாயிலிருந்து ஒலித்ததே... அதைப் பார்த்தால், ராசா என்ன நினைப்பார் என்று கருணாநிதி யோசித்து இருப்பாரா?

கனிமொழிக்கு ஒன்றுமே தெரியாது. எல்லாமே ராசாதான் என்கிறார் ராம்ஜெத்மலானி. அடுத்து, அப்படியே பண பரிவர்த்தனை நடந்தாலும், அது அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஷரத்குமாருக்குதான் பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் ராம்ஜெத்மலானி.'

இதெல்லாம் ராம்ஜெத்மலானி சொந்த வாதங்கள் என்றா நினைக்கிறீர்கள். அந்த வாதங்கள் எல்லாம், கருணாநிதியின் வாசகங்கள் என்பது மக்களுக்கு தெரியாமல் இருக்கலாம். ராசாவுக்கு?

என்ன இப்படி சொல்கிறார் ராம்ஜெத்மலானி என்று பத்திரிகையாளர்கள், தி.மு.க. எம்.பி.யான டி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்ட போது, 'ராம்ஜெத்மலானி என்பவர் கனிமொழியின் வக்கீல். கனிமொழிக்காக அவர் வாதம் செய்வதையும் ராசா விவகாரத்தையும் முடிச்சி போட வேண்டாம்" என்கிறார்.

அடடா.... என்ன விளக்கம்... என்ன விளக்கம்.

ஆ.ராசா..... "ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ' என்று கோர்ட்டிலேயே அலறி இருப்பார்.

என்ன செய்வது... கத்தவும் முடியாது. கனிமொழியை மிரட்டவும் முடியாது.

காரணம். கனிமொழி போட்ட பிச்சைதானே ராசாவுக்கு மந்திரி பதவி கிடைத்தது.

ஆனாலும், வெள்ளியன்று கனிமொழி சி.பி.ஐ. கோர்ட்டில் ஆஜரான அன்று, ஆ.ராசாவும் அந்த கோர்ட்டுக்கு வந்திருக்கிறார்.

கனிமொழியிடம் கோர்ட்டுக்குள்ளே பேச முயற்சித்திருக்கிறார் ராசா. ஆனால், கனிமொழியுடன்வந்த 5 வக்கீல்கள், அதாவது வக்கீல்கள் என்ற போர்வையில் வந்த 5 எம்.பி.க்கள், கனிமொழியிடம் ராசா பேசுவதை தடுத்துவிட்டார்களாம். அதுமட்டுமா... கோர்ட் வளாகத்தில் கனிமொழி சாப்பிடும் இடத்துக்கும் ராசா வந்திருக்கிறார். அங்கேயும், அவரிடம் கனிமொழி பேசாமல் ஒதுங்கிவிட்டாராம். இது டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், இன்று(7.5.11) வந்திருக்கிறதே?

அந்த தகத்தகாய கதிரவனை கண்டு ஏன் இப்படி ஒதுங்க வேண்டும்.

நீரா ராடியாவிடம் சொல்லி நீங்கள்தானே மந்திரி பதவியை வாங்கிக் கொடுத்தீர்கள்.

ஆ.ராசா இந்த விவகாரத்தில் எந்த தவறும் செய்யவில்லையே என்று நீங்கள்தானே சொன்னீர்கள்.

அப்புறம் என்ன தயக்கம்?

கோர்ட்டில் ராம்ஜெத்மலானி வைத்த வாதங்களை பார்த்தால், மகா கேவலமாக இருக்கிறது.

"கலைஞர் டிவிக்கு வந்த 200 கோடி ரூபாய் தொகை குறித்து கனிமொழிக்கு தெரியாது. அதெல்லாம் ஷரத்குமார்தான் கவனித்துக் கொண்டார்" என்று சொல்லி இருக்கிறார்.

கலைஞர் டிவியின் இயக்குனராக இருந்தவர் கனிமொழி. அவருக்கு தெரியாமல், ஷரத்குமார் எப்படி கடன் வாங்க முடியும். அதுவும், ஒரு ரூபாயா இரண்டு ரூபாயா. 200 கோடி ரூபாய். அதுவும் ஒரு இயக்குனர், மற்ற இரு இயக்குனர்களுக்கு (கனிமொழி, தயாளு ஆகியோருக்கு) தெரியாமல் 200 கோடியை எப்படி கடன் வாங்க முடியும். அப்படியே வாங்கினாலும் விட்டு விடுவார்களா ?

கனிமொழி 20 சதவிகித பங்கு வைத்திருந்தாலும், அவர் முதலாளி. ஷரத் 20 சதவிகித பங்கு வைத்திருந்தாலும், அவர் தொழிலாளி என்பது எல்லாருக்கும் தெரியும். தொழிலாளிக்கு தெரியாமல் முதலாளி கடன் வாங்கலாம். ஆனால், முதலாளிக்கு தெரியாமல், தொழிலாளி அந்த நிறுவனத்துக்காக கடன் வாங்குவாரா?

இந்த விவகாரத்தில் கருணாநிதியின் மனைவி தயாளுவையும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகையில் குற்றஞ்சாட்டி இருந்தால், இந்த வழக்கில் சி.பி.ஐ.க்கு பல விடைகள் தானாக வந்து விழுந்து இருக்கும்.

"நான் செயல்படாத இயக்குனர். மேலும், எனக்கு ஆங்கிலமும் தெரியாது. அவர்கள் கையெழுத்துப் போட சொன்ன இடத்தில் கையெழுத்து போட்டேன்" என்று தயாளு சொல்லி சி.பி.ஐயிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதும் ஒரு மோசடிதான். ஆங்கிலம் தெரியாமல் இருக்கும் இயக்குனர் தவறு செய்தால், மற்றவர்கள் மீதும் இதே கருணையை சி.பி.ஐ. காட்டுமா?

சி.பி.ஐ. கோர்ட்டிலிருந்து சம்மன் வந்த பிறகுதான் கனிமொழி டெல்லி சென்று ஆஜராகி இருக்கிறார். அவருக்காக அரசு எந்திரங்களும், பரிவாரங்களும் எப்படியெல்லாம் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதுதான் பெரும் கொடுமை!

1. தனிப்பட்ட வழக்கு விவகாரத்துக்காக சென்ற கனிமொழி முதலில் தமிழ்நாடு இல்லத்தில் தங்குவது முதல் தவறு. இரண்டாவது அவருக்கு மட்டுமல்ல, அது ராசாத்திக்கும் பொருந்தும். இவர்களுக்கு காசுக்கா பஞ்சம். மவுரியா ஷெராட்டனில் தங்கினாலாவது, ஸ்பெக்ட்ரம் பணத்தில் கொஞ்சம் கணக்கு காட்ட வசதியாக இருக்குமே!

2. கனிமொழிக்காக, சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், தமிழக அரசின் உள்துறை செயலாளர் டெல்லி செல்லலாமா? அவர்கள் வேறு விவகாரத்துக்கு சென்றிருந்தால், அதை மாநில அரசு வெளியிடுமா?

3. முதல்வரின் தனி பாதுகாப்பு அதிகாரி தாமோதரன், எதற்காக டெல்லி சென்றிருக்கிறார்.

4. டெல்லி திகார் சிறை பாதுகாப்புகாக இருக்கும் தமிழ்நாடு ஆயுதப்படை போலீஸார், கனிமொழியின் பாதுகாப்புகாக மூன்று பேர் சுழற்சி அடிப்படையில் தனி காரில் கோர்ட்டுக்கு வந்து செல்வது சரியா?

இதெல்லாம், மாநில அரசு பதில் சொல்ல வேண்டியவை.

தி.மு.க. தலைமைக் கழகத்துக்கு ஒரு கேள்வி. இந்த வழக்கில் தி.மு.க.வில் இருக்கும் எத்தனையோ அறிவார்ந்த வக்கீல்களை வைத்து வாதாடாமல், ராம்ஜெத்மலானியை ஏன் தேர்வு செய்தீர்கள்.

அவர் ஒரு முறை கோர்ட்டுக்கு வந்தால், 5 லட்சம்தான் வாங்குவார். ஆனால், நீங்கள் கொடுத்த தொகை ஒரு கோடி.

அதுவும் அவர் வேறு ஊரில் இருந்து டெல்லி வருவதற்கு, அவருக்காக சார்ட்டட் பிளைட் ஏற்பாடு செய்து, அதற்கு 20 லட்சம் ரூபாய் செலவு.

இதே வழக்கில், சிறை சென்றிருக்கும் ராசாவுக்கு இப்படி ஒரு நடவடிக்கை ஏன் எடுக்கவில்லை.

ராசாவுக்காக, ஊர் ஊராக கூட்டம் போட்டு பேசிய வீரமணி, சுப.வீரபாண்டியன், ரமேஷ் பிரபா, ஜெகத் கஸ்பர் ஆகியோருக்கு ஒரே கேள்வி.

"இந்த பிரச்னைக்கெல்லாம் காரணம் ஆ.ராசா" என்று ராம்ஜெத்மலானி சொல்லி இருக்கிறாரே?

இப்போது நீங்கள் கருணாநிதியிடம் என்ன கேள்வி கேட்கப் போகிறீர்கள்.

ஆக, அடுத்தவருக்கு ஒரு நியாயம். கருணாநிதி குடும்பத்துக்கு வேறு நியாயம்!

அதாவது ராசா கண்ணில் சுண்ணாம்பு.... ராணி அதாங்க.... கனி கண்ணில் வெண்ணெய்!

எப்படி?

http://www.tamilleader.in/news/136-2011-05-07-14-27-58.html

No comments:

Post a Comment