Thursday, April 7, 2011

ஊழலும் கருணாநிதியும் வேறு வேறல்ல

தனிமையிலே ‘இனிமை’ காணமுடியுமா? — ஞாநி

ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய் முறை கேட்டை ஆ.ராசாவால் தனியாகச் செய்திருக்க முடியாது என்று தான் நான் நினைக்கிறேன்.

முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியும் அப்படித்தான் நினைக்கிறார் என்று இப்போது தெரியவந்திருப்பது எனக்குப் புல்லரிக்கிறது. இப்படி ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை இதற்கு முன்பு யாரும் கொடுத்ததில்லை.

‘இளைஞன்’ பட விழாவில் பேசிய கருணாநிதி, ஊமைப்படக் காலத்தில் பகாசுரன் வதைக் காட்சிகளை தாம் பார்த்தபோது எப்படி அசுரனைப் பற்றி மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகள் சொல்லப்பட்டன என்று விவரித்துவிட்டு, அதேபோல ஒரு தனி நபர் ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 356 கோடி ரூபாய்களைத் தனியாக அபகரித்திருக்க முடியுமா என்று சிந்திக்காமல், படித்தவர்களும் நம்புகிறார்களே என்று கேட்டிருக்கிறார்.

அடுத்தபடி அவர் சொன்னதைத்தான் ஆங்கிலத்தில் உளவியலில் ஃப்ராய்டியன் ஸ்லிப் என்பார்கள். தன்னையறியாமலே அடி மனத்தில் இருக்கும் உண்மையை உளறிவிடுவதுதான் அது. “எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் இன்றைக்கு ஒரு மனிதன் அந்தக் காரியத்தைச் செய்கிறான் என்றால் அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்யமுடியும். ‘எந்திரன்’ படத்தில் ரஜினி எப்படி ரோபோவாக வந்து இந்தக் காரியங்களைச் செய்கிறாரோ, அதைப்போல செய்ய முடியுமே தவிர, தனியாக ஒரு மனிதன் அப்படிச் செய்யமுடியாது என்பதை அறிவுபூர்வமாக இன்றைக்கு உணர்கிறோம்,” என்கிறார் கருணாநிதி!

புராண பகாசுரன் வேலைகளை இன்று விஞ்ஞான பூர்வமாகச் செய்ய முடியும் என்று கருணாநிதி சொன்னால், சரியாகத்தான் இருக்கும். ஏனென்றால் விஞ்ஞானபூர்வமாக ஊழல்கள் செய்பவர் என்று 35 வருடங்களுக்கு முன்பே நீதிபதி சர்க்காரியாவால் வர்ணிக்கப்பட்டவர் அவர்!

ராசாவோடு ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் சம்பந்தப்பட்டவர்கள் யார் யாராக இருக்கும் என்று யூகிக்கும் வசதியை, நமக்கு நீரா ராடியா டேப்கள் அளிக்கின்றன. அவற்றைப் பற்றி ஒருபோதும் கருணாநிதி ஒரு வார்த்தை கூட சொல்லப்போவதே இல்லை.

தி.மு.க. சம்பந்தப்பட்ட முறைகேடு ஸ்பெக்ட்ரம் என்பது மட்டும் அல்ல. பல ஊழல்களில் அது ஒன்று. மிகப் பெரும் தொகைகளும், மிகப் பெரிய சூழ்ச்சிகளும் சம்பந்தப்பட்டிருப்பதால் அதைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.

ஆ.ராசாவும் டி.ஆர்.பாலுவும் தொடர்புடைய இன்னொரு மிகப் பெரும் முறை கேடினை தெஹல்கா இதழ் அம்பலப்படுத்தியிருக்கிறது. ராசா டெலிகாம் அமைச்சராவதற்கு முன்பு சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்தார். அவருக்கு முன்பு அந்தப் பொறுப்பில் பாலு இருந்தார். இருவர் கீழுமாக ஏழு வருடங்கள் அந்த அமைச்சகம் இருந்திருக்கிறது.

புதிய தொழில் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரும்போது அவற்றால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பு பற்றி மதிப்பிட்டுவிட்டு அனுமதி தருவதும்/ மறுப்பதும் அமைச்சகத்தின் முக்கியப் பணிகளில் ஒன்று. அதற்கு முன்பு 20 வருடங்களில் நான்காயிரம் தொழில் திட்டங்களுக்கு அனுமதி தரப்பட்டது. ஆனால் பாலு, ராசா இருந்த சமயத்தில் மாதம் 100 திட்டங்களுக்கு க்ளியரன்ஸ்…! இரண்டே வருடங்களில் 2000 திட்டங்களுக்கு ஒப்புதல்.

ராசாவின் தனிச் செயலாளராக இருந்து இப்போது விசாரிக்கப்படும் ஆர்.கே.சந்தோலியா, முதலில் அவருடன் சுற்றுச் சூழல் துறையில் இருந்தவர். ராசா- நீரா ராடியா நட்பு அப்போதுதான் ஆரம் பம். நாட்டின் இன்னொரு மூலையில் இருக்கும் ராசாத்தி அம்மாள், அவர் ஆடிட்டர் ரத்தினம் ஆகியோரின் நட்பு எல்லாம் ராடியாவுக்கு ஏற்படுவதற்கான வித்து, சுற்றுச் சூழல் துறையில் தொடங்குகிறது.

பாலு-ராசா ஆட்சியில் சுற்றுச் சூழல் பாதிப்பு அறிக்கைகள் தருவதில் பெரும் முறைகேடுகள் நடந்திருப்பதாக சூழல் பாதுகாப்பு இயக்கங்கள் கூறுகின்றன. சூழல் பாதுகாப்பை மதிப்பிடுவதற்கான குழு உறுப்பினர்களாக, தமிழ்நாட்டிலிருந்து தமக்கு வேண்டியவர்களையே ராசா நியமித்த தாகக் குற்றம் சாட்டப்படுகிறது.

பாலு காலத்தில் ஒவ்வொரு தொழிலுக்கும் நடத்தைக் கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. இவற்றை வகுப்பதில் தொழில் அதிபர்களுக்குச் சாதகமாக, பல முறைகேடுகளை பாலு செய்திருப்பதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. நடத்தைக் கோட்பாட்டை மீறினால் தண்டனை எதுவும் இல்லை. அது சுயக்கட்டுப்பாட்டுக் கோட்பாடு அவ்வளவுதான். ஸ்பெக்ட்ரம் முறைகேட்டைவிடப் பல மடங்கு அதிகமான பாதிப்பை சுற்றுச்சூழல் துறையில் நாட்டுக்கு தி.மு.க அமைச்சர்கள் ஏற்படுத்தியிருப்பதாக தெஹல்கா குற்றம் சாட்டியிருக்கிறது.

மன்மோகன்சிங் இரண்டாம் முறை பிரதமரானபோது பாலு, ராசா இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க விரும்பவில்லை என்று கூறப்பட்டது. இது தயாநிதி மாறனின் விஷமப் பிரசாரம் என்று நீரா ராடியாவிடம் கனிமொழி சொல்கிறார். மாறனையும் பாலுவையும்தான் மன்மோகன் விரும்பவில்லை என்பது அவர் தரப்பு வாதம்.

ஆனால் பிரதமர் மன்மோகன்சிங்கால் எதுவும் செய்ய முடியவில்லை. அவரால் அதிகபட்சம் செய்ய முடிந்ததெல்லாம் பாலுவை அடுத்த முறை அமைச்சரவையில் சேர்க்காமல் விட்டதுதான். ராசா ஒரு வழியாக விலகியதும் அந்தத் துறையை எந்த தி.மு.க. காரரிடமும் ஒப்படைக்காமல் தம் கட்சிக்காரரிடமே கொடுக்க முடிந்ததுதான்.

காங்கிரசும் தி.மு.க.வும் கூட்டணியில் இருந்தாலும், காங்கிரசால் தன் முதலமைச்சர் மீது நடவடிக்கை எடுப்பது போல, தி.மு.க அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை. காரணம் கருணாநிதி சொன்னதாகத்தான் இருக்க முடியும்.“யாரும் தனி மனிதனாக அவ்வளவு பெரிய தொகையை எல்லாம் அபகரித்துவிட முடியாது” என்பது எவ்வளவு ஆழ்ந்த அனுபவத்தின் விளைவாக உதிர்ந்த பொன்மொழியாக இருக்க வேண்டும்! இந்தப் பகுத்தறிவு முடிவிலிருந்துதான் கூட்டணி தர்மம் என்ற கோட்பாடே உருவாகியிருக்க முடியும்.

கூட்டணி தர்மம் என்ற ஒன்று இல்லாவிட்டால், காங்கிரஸ் மகா ராஷ்டிரத்தில் தம் முதலமைச்சரை ஆதர்ஷ் வீட்டு ஒதுக்கீடு ஊழலுக்காக விலக வைத்ததுபோல, தமிழகத்தில் கருணாநிதியை வீட்டு வசதி வாரிய ஊழலுக்காக விலகச் சொல்லலாம். ம்ஹூம் முடியாது. கருணாநிதி கூட்டணி தர்மத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவர். அதனால்தான் தமிழக வீட்டு வசதி வாரிய ஒதுக்கீடு முறைகேட்டில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களுக்கும் உரிய பங்கு கொடுத்துவிடுகிறார். சென்னையில் சொந்த வீடு இருக்கும் காங்கிரஸ் பெண் எம்.எல். ஏ.வுக்கு, விதிகளை மீறி வீட்டு வசதி வாரிய நிலம் ஒதுக்கப்படுகிறது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சமூக ஆர்வலர் கோபாலகிருஷ்ணன் வெளிக் கொணர்ந்திருக்கும் இந்தத் தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன….. என்று சொல்லமாட்டேன். இந்த ஆட்சியில் இப்படியெல்லாம் நடக்காமல் இருந்தால்தான் நமக்கு அதிர்ச்சி.

கருணாநிதி ஆட்சியில் சமூக சேவகர்களின் எண்ணிக்கை ஒரேயடியாக எகிறிவிட்டது. அண்ணா அறிவாலயத்தில் வேலை செய்யும் ஒருவர் சமூக சேவகராம். உடனே வீடு ஒதுக்கீடு. ஓர் அமைச்சரின் மருமகள், பேத்தி எல்லோரும் சமூக சேவகர்கள்! சட்ட மன்ற தி.மு.க. கொறடாவின் மனைவி சமூக சேவகி! முதல்வரின் செயலாளர் மகள் சமூக சேவகி! ஐ.ஏ.எஸ். அதிகாரியின் மகன், ஐ.பி.எஸ். அதிகாரியின் மனைவி, மகள் எல்லோரும் சமூக சேவகர்கள்!! முதலமைச் சருக்கு செக்யூரிட்டி வேலை செய்தால் அவர்கள் “அப்பழுக்கற்ற அரசு ஊழியர்கள்!”

இப்படிக் கோடிக்கணக்கான ரூபாய்கள் மதிப்புள்ள வீட்டு மனை, வீடுகளை கருணா நிதியின் அரசு, தமக்கு வேண்டியவர்களுக்கெல்லாம் சுண்டல் மாதிரி விநியோகித்திருக்கிறது. இத்துடன் ஒப்பிட்டால் மும்பையின் ஆதர்ஷ் வீடு ஒதுக்கீடு ஊழல் ஜுஜூபி.

ஆனால், தான் ஏழையாகப் பிறந்து ஏழையாக வளர்ந்து, ஏழைகளோடே பழகி ஏழைகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருப்பவன் என்று கூசாமல் பேசுகிறார் கருணாநிதி.

சொத்துக் கணக்கு கேட்டால், உடனே தான் ஒன்றும் ஏழையாகப் பிறக்கவில்லை என்றும் அந்தக் காலத்திலேயே பக்கத்து ஊர் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைக்கும் வசதியுடன் பிறந்ததாகவும் சொல்லிக் கொள்கிறார்.

கருணாநிதியின் சமீப பேச்சுகள் ஒரு பக்கம் சிரிப்பையும் இன்னொரு பக்கம் எரிச்சலையும் ஏற்படுத்துகின்றன. அவருடைய மொத்த சொத்து மதிப்பு வெறும் ஆறு கோடி ரூபாய்தானாம். அப்படியானால் எப்படி அவர் மகன் அழகிரியின் சொத்து மதிப்பு 13 கோடியாக ஆயிற்று? ஸ்டாலினின் சொத்து மதிப்பு 13 கோடியாயிற்று? இருவரும் படித்த காலத்திலிருந்து ஒரு வேலைகூட பார்த்ததில்லை. எங்கேயும் பெரிய சம்பளம் வாங்கியதில்லை. என்ன தொழில் செய்தார்கள்? முதலீடுகள் எங்கிருந்து வந்தன? கனி மொழிக்குச் சொத்து மதிப்பு எப்படி 8 கோடி 45 லட்சம் ஆயிற்று? அவர் பார்த்த வேலை, வாங்கிய சம்பளம் என்ன? பாட்ஷா, அண்ணாமலை, சிவாஜி, எந்திரன் வசனகர்த்தாக்களுக்குத் தருவதைவிடப் பல மடங்கு அதிகமாக வசனகர்த்தா கருணாநிதிக்கு 50 லட்சம் சம்பளம் தரும் தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். கனிமொழியின் கவிதைக்கு 5 லட்சம் யாராவது தருகிறார்களா என்ன? கருணாநிதியின் பேரன்கள் எல்லாம் கல்லூரியிலிருந்து வந்த உடனே கோடிக்கணக்கான ரூபாய் முதலீட்டில் வரிசையாக சினிமா எடுத்துக்கொண்டே இருக்கிறார்கள்… எப்படி?

கருணாநிதி எழுதவேண்டிய அடுத்த புத்தகம்: ‘நூறே நாட்களில் கோடீஸ்வரனாவது எப்படி?’ தனியே தன்னந்தனியே ஒரு கோடீஸ்வரக் குடும்பத்தை உருவாக்கிய அந்தச் சாதனை ரகசியத்தை மட்டும் தமிழக மக்களுக்கு அவர் தெரிவித்துவிட்டால், உலகம் அழியும்வரை அவருக்கு நன்றி விசுவாசத்தோடு அத்தனை தமிழர்களும் இருப்பார்கள்.

http://tamilan-superpowerindia.blogspot.com/2011/02/blog-post_10.html

தி.மு.க.-காங்கிரசின் கூட்டுக் களவாணித்தனம்

கிணற்றில் போடப்பட்டக் கல்லைப் போல் கிடந்த அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல் விவகாரம் மீண்டும் சூடுபிடித்திருக்கிறது. இந்தியாவெங்கிலுமான தொலைபேசி சேவை 122 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட உரிமக் கட்டணத்தின்படி, 2008-இல் இந்த 122 மண்டலங்களும் முதலில் வருபவருக்கு முதலில் உரிமம் என்ற அடிப்படையில் 9 தனியார் நிறுவனங்களுக்கு (அந்நிய முதலீடும் இதில் உண்டு) விற்கப்பட்டுள்ளன.

ஒரு பொருள் 2001-இல் என்ன விலைக்கு விற்கப்பட்டதோ, அதே விலைக்கு 2008-இலும் விற்பதற்கு சந்தைப் பொருளாதாரம் இடம் தராது என்பது பாமரனுக்கும் தெரியும். ஆனால், சந்தையில் கிராக்கி அதிகமுள்ள இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசையின் உரிமக் கட்டணமோ, 2008-இல் நிலவிய சந்தை மதிப்புக்கு ஏற்ப நிர்ணயிக்கப்படாமல், 2001-இல் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தின்படி விற்கப்பட்டுள்ளது. சந்தைப் பொருளாதாரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மன்மோகன் சிங் அரசு, இந்தத் தவறை அறியாமலா செய்திருக்கும்?

அலைக்கற்றை வரிசைகளைப் பெற்ற ஒன்பது தனியார் நிறுவனங்களுமே இந்தப் பொன்னான வாய்ப்பை நன்கு பயன்படுத்திக் கொண்டன. 13 மண்டலங்களை 1,537 கோடி ரூபாய்க்குப் பெற்ற “ஸ்வான்” என்ற நிறுவனம், அதில் 45 சதவீதத்தை மட்டும் 4,200 கோடி ரூபாய்க்கு “எடில்சலாட்” என்ற நிறுவனத்துக்கு விற்றுக் கொள்ளை இலாபம் அடைந்திருக்கிறது. 22 மண்டலங்களை 1,658 கோடி ரூபாய்க்குப் பெற்ற “யூனிடெக்” நிறுவனம், தனது 60 சதவீதப் பங்குகளை 6,100 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கிறது. எனவே, அலைக்கற்றை விற்பனையில் ஊழலும், மோசடியும் நடந்திருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க மூளையைக் கசக்கிப் புலனாய்வு நடத்த வேண்டிய அவசியமேயில்லை. தனியார்மயம் என்பதே சட்டப்படி நடக்கும் கொள்ளைதான் என்பதற்கு இந்த ஊழல் விவகாரம் இன்னுமொரு சான்றாய் அமைந்திருக்கிறது.

இந்த விற்பனையில் கிடைத்த இலஞ்சப் பணத்தை வாரியிறைத்துத்தான் தி.மு.க.-காங்கிரசு கூட்டணி, அண்மையில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் எதிர்பாராத வெற்றியை அடைந்தது என்பது ஊரறிந்த உண்மை. எனவே, காங்கிரசும் இந்தக் கொள்ளையில் பலன் அடைந்திருக்கிறது என்பதை மறுத்துவிட முடியாது. ஆனால், கூட்டணியில் நிலவும் முட்டல் – மோதலின் காரணமாக, இந்த ஊழலின் முழுப் பொறுப்பையும் தி.மு.க.வைச் சேர்ந்த ராசாவின் தலையில் சுமத்திவிட முயலுகிறது, களவாணி காங்கிரசு. காங்கிரசுன் இந்த நரித்தனத்திற்கு எதிர்க்கட்சிகளும் தேசியப் பத்திரிகைகளும் முட்டுக் கொடுக்கின்றன.

ராசா தொடர்புடைய இந்த ஊழல் பத்திரிகைகளில் அலசப்பட்ட அளவிற்கு, கடந்த அக்டோபர் மாதம் அம்பலமான வேறு இரண்டு ஊழல்கள் குறித்து விரிவாக அலசப்படவில்லை. ஜார்கண்ட் மாநில சுயேச்சை சட்டமன்ற உறுப்பினராக இருந்த மதுகோடா, பா.ஜ.க.வின் தயவில் அமைச்சராகி, பின்னர் காங்கிரசின் தயவில் அம்மாநில முதல்வராகி, ஆகஸ்டு 2006 முதல் ஜூன் 2008 முடிய ஆட்சி நடத்தினார். அவர் எம்.எல்.ஏ. ஆனபொழுது 40 இலட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு, அவரது ஆட்சி கவிழ்க்கப்பட்ட சமயத்தில் 400 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. ஜார்கண்ட் மாநிலத்திலுள்ள தாதுப்பொருள் சுரங்கங்களைத் தரகு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் பட்டா போட்டுக் கொடுத்ததில் நடந்த முறைகேடுகள் காரணமாகத்தான் அவரது சொத்து மதிப்பு 1000 மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்த இலஞ்சப் பணத்தைக் கொண்டு, அவர் வெளிநாடுகளில் செய்துள்ள முதலீடுகள் குறித்து இப்பொழுது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய அரசுக்குச் சொந்தமான ஹைட்ரோகார்பன் இயக்குநரகத்தின் தலைவரான வீ.கே.சிபலின் மகளுக்கு, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவரான முகேஷ் அம்பானி மும்பய் நகரில் மிக நவீனமான வீடொன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். கோதாவரி படுகையில் கிடைக்கும் எரிவாயுவைப் பகிர்ந்து கொள்வதில் அம்பானி சகோதரர்களுக்கு இடையே நடந்து வரும் தகராறில், முகேஷ் அம்பானிக்கு சாதகமாக வீ.கே.சிபல் நடந்து வருவதற்காகக் கொடுக்கப்பட்ட சிறு அன்பளிப்புதான் இந்த வீடு. இந்த அன்பளிப்பு பற்றி இப்பொழுது மையப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

தனித்தனியாகத் தெரியும் இந்த மூன்று ஊழல்களுக்கும் இடையே இருக்கும் பொதுவான அம்சம் தனியார்மயம். தனியார்மயத்தின் பின், பொதுச் சொத்துக்களை விற்பதற்கு எடுக்கப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கையிலும் ஊழலும் மோசடிகளும் நடந்திருப்பதற்குப் பல ஆதாரங்கள் கொட்டிக் கிடக்கின்றன. இந்த மோசடிகள் மூலம் கிடைத்த எலும்புத் துண்டுகளைப் பொறுக்கிக் கொண்ட அதிகாரிகளும், ஓட்டுக்கட்சிகளும் அம்பலமான அளவிற்கு, கறித்துண்டு முழுவதையும் விழுங்கி ஏப்பம் விட்ட தரகு முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்கள் பற்றி அடக்கியே வாசிக்கப்படுகின்றன. எனவே, ஊழலை ஒழிக்க வேண்டும் என்றால், அதிகாரிகளையும் அமைச்சர்களையும் தண்டிக்கக் கோரினால் மட்டும் போதாது; ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருக்கும் தனியார்மயத்தையும் ஒழிப்பதற்குப் போராட வேண்டும்.

http://gnalam.blogspot.com/2011/02/blog-post_8925.html

தேவையா இந்த மானங்கெட்ட பொழப்பு....?





2ஜி அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) முறைகேட்டுக்கு ஓர் அதிர்ஷ்டம் உண்டு. அந்தப் பிரச்னை விஸ்வரூபம் எடுக்கும் போதெல்லாம் வேறு ஏதாவது பரபரப்பான செய்தி வெளிவந்து ஸ்பெக்ட்ரம் பிரச்னை ஊடகங்களில் முக்கியத்துவம் பெறாமல் பின்னுக்குத் தள்ளிவிடும்.

ஸ்பெக்ட்ரம் ஊழல் பணத்திலிருந்து வெட்டப்பட்ட ஒரு கால்வாய் திமுகவின் தலைமையிடமான சென்னையிலுள்ள அண்ணா அறிவாலயத்திலிருந்து இயங்கும் கலைஞர் தொலைக்காட்சியைச் சென்றடைந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணைக்காக மத்தியப் புலனாய்வுத் துறையினர் அண்ணா அறிவாலயத்துக்கு வந்து கலைஞர் டி.வி.யின் பங்குதாரர்களான முதல்வரின் மனைவி தயாளு அம்மாளையும், மகளும் மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியையும் விசாரித்தனர்.

பாருங்கள் அதிர்ஷ்டத்தை, எந்தப் பத்திரிகையும் விசாரணை தொடர்பான செய்திகளுக்கு முக்கியத்துவம் தர முடியாமல் ஜப்பானை சுனாமி தாக்கிய செய்தி தடுத்துவிட்டது. முக்கிய ஊடகங்களான சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும் அவர்கள் குடும்ப நிறுவனங்கள் என்பதால் அடக்கி வாசித்து விசாரணை நடந்த விஷயத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தவிர்த்துவிட்டன.

இப்போதும் பாருங்கள், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிபிஐயின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளில் இந்தியா உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்று, அந்தச் செய்தியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. சுமார் 80,000 பக்கங்களுக்கும் அதிகமான அந்தக் குற்றப்பத்திரிகை 654 ஆவணங்களையும், 125 சாட்சிகளையும் முன்வைத்திருக்கிறது. ஒன்பது நபர்களையும், மூன்று நிறுவனங்களையும் இந்திய குற்றவியல் சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம்சாட்டியிருக்கிறது.

கைது செய்யப்பட்டுள்ள முக்கிய எதிரிகளான முன்னாள் தொலைத்தொடர்பு அமைச்சரும், திமுகவின் கொள்கை பரப்புச் செயலருமான ஆ. ராசா, முன்னாள் தொலைத்தொடர்புத்துறை செயலர் சித்தார்த் பெஹுரா, ஆ. ராசாவின் தனிச்செயலர் ஆர்கே. சந்தோலியா இப்போது எட்டிசலாட் டி.வி. என்று வழங்கப்படும் ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் இயக்குநர் உஸ்மான் பால்வா ஆகிய நால்வருக்கும் குற்றப்பத்திரிகை வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்வான் டெலிகாம், யூனிடெக், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் கலைஞர் தொலைக்காட்சி போன்றவை குற்றப்பத்திரிகையில் ஸ்பெக்ட்ரம் முறைகேட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களாக அடையாளம் காட்டப்பட்டுள்ளன, அவ்வளவே.

கடந்த 2-ம் தேதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாவிட்டால், ஆ. ராசாவின் காவல் 60 நாளைக் கடந்திருக்கும் என்பதால் அவரைக் கட்டாயமாகப் பிணையில் விடுவிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும். ஏற்கெனவே, ஸ்பெக்ட்ரம் உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளால் அவப்பெயரைச் சம்பாதித்துக் கொண்டிருக்கும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ராசாவின் விடுதலை மேலும் தலைவலியை ஏற்படுத்திவிடும் என்பதாலோ என்னவோ அவசரக் கோலத்தில் ஒரு குற்றப்பத்திரிகையைப் புலன் விசாரணைத்துறை தாக்கல் செய்திருக்கிறதோ என்கிற சந்தேகம் எழுகிறது.

சிபிஐ தாக்கல் செய்திருக்கும் குற்றப்பத்திரிகை 80,000 பக்கங்கள் கொண்டது என்கிற பிரமிப்பை ஏற்படுத்துகிறதே தவிர, முறையாகக் குற்றங்களைப் பட்டியலிட்டுத் தகுந்த சாட்சிகளுடனும், ஆதாரங்களுடனும் தாக்கல் செய்திருக்கிறதா என்றால் இல்லை. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளை விசாரிக்க ஏற்படுத்தப்பட்டிருக்கும் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பு இருப்பது தெரிந்தும், அரசியல் நிர்பந்தங்களை மீறி நமது புலனாய்வுத் துறையால் செயல்பட முடியவில்லையோ என்கிற தோற்றத்தைத்தான் குற்றப்பத்திரிகை ஏற்படுத்துகிறது.

60 நாள்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், எதிரிகளாக அடையாளம் காட்டப்பட்டிருப்பவர்கள் பிணையில் விடுதலையாகி விடுவார்கள் என்பது, அரைகுறையாகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்குக் காரணமாக இருக்க முடியாது. குற்றம் நிகழ்ந்திருப்பது கண்டறியப்பட்டிருக்கும் நிலையில் எதிரிகள் அனைவரும் ஐயம் திரிபறக் கண்டறியப்பட்டு, தகுந்த ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகைகளில் அடையாளம் காட்டப்பட்டிருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?

சிபிஐ கைது செய்திருப்பதும்கூட தேர்ந்தெடுத்த சிலரைத்தானே தவிர, குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படவில்லையே, ஏன்? கலைஞர் தொலைக்காட்சிக்குப் பணம் போயிருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியில் விசாரணை நடத்தப்பட்டு அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்படியானால், கலைஞர் தொலைக்காட்சி முதல்வரின் குடும்பத்தினருடன் தொடர்புடையது என்பதால், சட்டப்பேரவைத் தேர்தல் முடியும்வரை நடவடிக்கைகள் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா? அரசியல் காரணங்கள் சிபிஐயின் கையை ஏன் கட்டிப்போட வேண்டும்?

தலைமைத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையை அடிப்படையாக எடுத்துக்கொண்டுதான் மத்தியப் புலனாய்வுத் துறை வழக்குப் பதிவு செய்திருக்கிறது. தணிக்கை அதிகாரியின் அறிக்கைப்படி ஸ்பெக்ட்ரம் முறைகேடுகளால் ஏற்பட்டிருக்கும் உத்தேச இழப்பு ரூ. 57,666 கோடியிலிருந்து ரூ. 1,76,645 கோடிவரை. ஆனால், குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருக்கும் தொகை வெறும் ரூ. 22,000 கோடி மட்டும்தானே, ஏன் அப்படி?

முறைகேடு நடக்கிறது என்று மன்மோகன் சிங்குக்குத் தெரிந்தும், தனக்குப் பலர் தகவல்கள் தந்தார்கள் என்று பிரதமரே வாக்குமூலம் அளித்தும் அவரைப் பற்றிக் குற்றப்பத்திரிகையில் ஒரு வார்த்தைகூட இல்லையே, ஏன்? பிரதமர் மத்தியப் புலன் விசாரணைத் துறையின் விசாரணை வரம்புக்கு அப்பாற்பட்டவரா?

அனில் அம்பானியில் தொடங்கி ரத்தன் டாடா வரை பல பெரு முதலாளிகள், கார்ப்பரேட் முதலைகள் சம்பந்தப்பட்டிருக்கிறார்களே, அவர்களை நெருங்க மத்தியப் புலனாய்வுத் துறை பயப்படுகிறதே, ஏன்? ஏனோ தானோ என்று வழக்கை ஜோடித்து, கார்ப்பரேட் முதலாளிகளும், அவர்களது இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களும் தப்பித்துப்போக வழிவகுத்து விடுமோ மத்தியப் புலன் விசாரணைத் துறை என்கிற அச்சம் மேலிடுகிறது. குற்றப்பத்திரிகையில் சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் நிறுவனங்களும், அரசியல் தொடர்புள்ள குடும்பத்தினரும் ஏன் இடம்பெறவில்லை என்கிற கேள்விக்கு இடமாகிவிட்டது.

சுதந்திர இந்தியாவில் நடந்த மிகப்பெரிய முறைகேடு இது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் இனம் காணப்பட்டுத் தகுந்த ஆதாரங்களுடன் சட்டத்தின்முன் நிறுத்தப்படாவிட்டால், மக்களாட்சியின் மீதான நம்பிக்கையே தகர்ந்துவிடும் என்பதை மத்தியப் புலன்விசாரணைத் துறை புரிந்துகொள்ள வேண்டும்!




Tuesday, April 5, 2011

சோனியா சேலை அணிந்துள்ள கருணாநிதி


07-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

இந்தியர்களால் வெளிநாட்டு வங்கிகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் கருப்புப் பணம் பற்றி ஆடிட்டர் குருமூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய பேச்சின் சுருக்கம் இது. மிக எளிமையாக, புரியும்விதத்தில் சொல்லியிருக்கிறார். படித்துப் பாருங்கள்..!

குருமூர்த்தியின் பேச்சு :

ஸ்பெக்ட்ரமுக்கும், வெளிநாட்டுப் பணத்திற்கும் தொடர்பு உள்ளது. ஆகையால் இரண்டையும் இணைத்துத்தான் பேசியாக வேண்டும். முதலில் இந்தப் பிரச்சினை கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தலைதூக்கியது. ஆனால், வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் எந்த அளவுக்கு உள்ளது என்பது பற்றிய ஒரு கற்பனைகூட அந்த நேரத்தில் இல்லை.

ஸ்விஸ் வங்கிகளின் அசோஸியேஷன் வெப்சைட்டில் இது பற்றி பார்த்தபோது, 1.4 ட்ரில்லியன் டாலர் - கிட்டத்தட்ட 70 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வெளிநாட்டு வங்கிகளில் நமது நாட்டுப் பணம் முடங்கியுள்ளது தெரிய வந்தது. அதைத் திரும்ப இங்கு கொண்டு வர வேண்டும் என்று பா.ஜ.க. முயற்சி எடுத்தபோது, காங்கிரஸை சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், “வெளிநாட்டு வங்கிகளில் இதுபோல பணம் எல்லாம் கிடையவே கிடையாது. இது பூச்சாண்டி காட்டும் வேலை..” என்று கூறி முழுப் பூசணிக்காயை மறைக்கப் பார்த்தார்.

தற்போது குளோபல் பைனான்ஸியல் இன்ட்டெக்ரெட்டி என்ற சுயசார்பு நிறுவனம், இந்திய நாட்டின் பணம் 21 லட்சம் கோடி ரூபாய் வெளிநாட்டு வங்கிகளில் உள்ளது என்று புள்ளி விவரங்களுடன் கடந்த டிசம்பர் மாதம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இதில், முக்கியமான விஷயம் என்னவென்றால், உலகத்தில் உள்ள பல நாடுகளில் இந்தக் கறுப்புப் பணத்தைக் கொண்டு போய் வைப்பதற்கு, வரி செலுத்த வேண்டிய அவசியமில்லாத பனாமா போன்ற சில நாடுகள் இருக்கின்றன.

அங்கெல்லாம் யார் இந்தப் பணத்தை வைத்திருக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள முடியாத ஒரு முறை கடந்த 50, 60 ஆண்டுகளில் உருவாகியுள்ளது. இது சில நாடுகளின் பொருளாதாரத்தையே பாதிக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது. அது அமெரிக்கப் பொருளாதாரமாகவும் இருக்கலாம். பிரான்ஸ் நாட்டு பொருளாதாரமாகவும் இருக்கலாம். எல்லா நாடுகளின் பொருளாதார அமைப்புகளையும் இந்தப் பதுக்கல் பாதிப்பதால், இந்த நாடுகள் இதில் தீவிர கவனம் எடுத்துக் கொண்டு, அப்படி பதுக்கப்பட்ட பணத்தை எப்படியாவது திரும்பக் கொண்டு வர வேண்டும் என்று முயற்சி எடுத்துக் கொண்டிருக்கின்றன.

இப்போது சில பேர், மனசாட்சியின் உந்துதல் காரணமாக, இப்படி பதுக்கப்பட்ட பணத்தைப் பற்றித் துப்புக் கொடுக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியொருவர், லெக்ஸ்டன்ஸ்டைன் பேங்க் என்ற அமைப்பில் யார், யார் ரகசியக் கணக்கு வைத்திருக்கிறார்களோ, அவர்களைப் பற்றிய விவரங்களைக் கொடுத்திருக்கிறார். நம் நாட்டைச் சேர்ந்த 250 பேர் அங்கு பணம் வைத்திருக்கிறார்கள்.

ஜெர்மன் நாட்டின் நிதியமைச்சர் இது பற்றிக் கூறி, “இந்தக் கணக்கு வைத்திருப்பவர்களின் பெயர்களை யார் எங்களிடம் கேட்டாலும் கொடுப்போம்” என்று சொன்னார். ஆனால் அவர் அப்படிச் சொன்ன பிறகும், இந்தப் பட்டியலைத் தாருங்கள் என்று நம் நாட்டிலிருந்து கேட்கவே இல்லை.

எல்லோருக்கும் ஒரே ஆச்சரியம். உலகத்தில் பல நாடுகள் இந்த விவரங்களைக் கேட்கின்றன. ஆனால், கொடுக்கிறோம் என்று அவர்களே சொன்ன பிறகும், எங்களுக்கு அந்தப் பட்டியலைக் கொடுங்கள் என்று கடிதம் எழுதக் கூட இந்த அரசுக்கு நாதி இல்லையே என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா போன்ற பத்திரிகைகள் எழுதின.

பிறகு அரைகுறை மனதுடன் எங்களுக்கு அதைக் கொடுங்கள் என்று கேட்டார்கள். எப்படி கேட்டார்கள் என்றால், நமக்கும் அவர்களுக்கும் இடையில் உள்ள வருமான வரி தொடர்பான ஒப்பந்தத்தில் ஒரு ரகசிய ஷரத்து இருக்கிறது. அவர்கள் கொடுக்கிற எந்த விவரத்தையும் நாம் ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் வெளிப்படையாகத் தருகிறோம் என்று கூறியதை, “நீங்கள் ரகசியமாகக் கொடுங்கள்” என்று கேட்டு வாங்கி அந்த 250 பேர்களைப் பற்றிய விவரங்களை இந்த அரசு ரகசியமாகவே வைத்திருக்கிறது.

அவர்கள் யார், யார் என்று நமக்குத் தெரியாது. அந்த 250 நபர்களின் பெயர்களில் இருக்கும் பணத்திற்கு அரசு வரி போடுகிறதா.. அதை இங்கு கொண்டு வருவதற்கு முயற்சி செய்கிறதா என்பதைப் பற்றி இன்றுவரை ஒரு விவரமும் இல்லை.

பூனாவைச் சேர்ந்த ஹசன் அலி என்பவர் வெளிநாட்டில் இருந்து குதிரைகளை இறக்குமதி செய்து இங்கே அவற்றை விற்பனை செய்யும் தொழில் செய்பவர். அவருக்கு வருடத்திற்கு மிஞ்சிப் போனால், இரண்டு அல்லது மூன்று கோடி ரூபாய் லாபம் வரலாம். இவருடைய இடத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தி அவருடைய கணக்குகளை ஆராய்ந்தபோது, அவருக்கு வெளிநாட்டில் 1,50,000 கோடி ரூபாய் இருப்பதாக பல தாஸ்தாவேஜூகள் கிடைத்தன. அப்போது நிதியமைச்சராக இருந்தவர் ப.சிதம்பரம்.

இது ஒரு பெரிய பிரச்சினையாக உருவெடுத்தவுடன், ஆளும் கட்சிப் புள்ளிகள் பலருடைய விவரங்கள் இத்துடன் தொடர்புடையவர்களாக இருந்ததால், இது அப்படியே மறைக்கப்பட்டது. அவருடைய பெயரில் 76000 கோடி ரூபாய் வரி போடப்பட்டு அந்த வரித் தொகை அரசுக்குக் கிடைக்க வேண்டியது என்று டிமாண்ட் தயார் செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் பெயரில் இருந்த 1,50,000 கோடி ரூபாய் நம் நாட்டுக்குத் திரும்ப வருமா? வரி மூலமாக வருமா என்ற விவரங்கள் எல்லாம் மூடி மறைக்கப்பட்டுள்ளன.

1991 நவம்பர் 11-ல் அதாவது ராஜீவ்காந்தி மறைந்து சிறிது காலத்திற்குப் பிறகு ஸ்விஸ் இல்லஸ்ட்டிரியேட் என்ற பத்திரிகையில் வளர்ந்து வரும் நாடுகளின் 16 தலைவர்களின் படங்களைப் பிரசுரித்து, அவர்கள் எல்லாம் அந்த நாடுகளில் லஞ்சம் வாங்கி, அந்த லஞ்சப் பணத்தை இங்கே கொண்டு வந்து பதுக்கியிருக்கிறார்கள் என்று எழுதியிருந்தது.

அந்தத் தலைவர்களின் வரிசையில் ராஜீவ்காந்தியின் படத்தையும் பிரசுரித்திருந்ததோடு, 2.2 பில்லியன் டாலர் இவருடைய கணக்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ளது என்ற செய்தியையும் அப்போது வெளியிட்டிருந்தது.

1998-ல் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையில் ஏ.ஜி.நூரானி இது பற்றி முதன்முதலாக எழுதினார். அதன் பிறகு சுப்பிரமண்யம் சுவாமியும் வெப்சைட்டில் அந்தப் பத்திரிகையின் பக்கங்களை அப்படியே பிரசுரித்து அவர் இதற்கு ஒரு லிங்க்கும் கொடுத்தார். ரஷ்ய உளவு அமைப்பான கே.ஜி.பி.யின் தாஸ்தாவேஜூகளை வெளியே கொண்டு வந்த டாக்டர் ஆல்பர்ட்ஸ் என்ற ஒரு இன்வெஸ்டிகேட்டிவ் ஜர்னலிஸ்ட், “ராஜீவ்காந்தி எப்படி கே.ஜி.பி.யிடம் இருந்து ரகசியமாகப் பணம் பெற்றார்..? ரஷ்யாவுடன் வியாபார சம்பந்தத்தின் மூலம் எப்படி ராஜீவ்காந்தியின் குடும்பத்துக்கு ஏராளமான பணம் கிடைத்தது என்பதையும் வெளியிட்டிருந்தார். அந்தப் பணம் அங்கு வங்கியில் இருக்கிறது என்று சுப்பிரமணியம் சுவாமி 2002-ல் வெப்சைட்டில் வெளியிட்டிருந்தார்.

2009-ல் நான் இது பற்றியெல்லாம் கோர்வையாக எழுதியிருந்தேன். அதற்குப் பிறகு இப்போது இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை, இதையெல்லாம் தொகுத்து கோர்வையாக எழுதியிருந்தது. இந்தப் பின்னணியில் இந்த விவரங்கள் எல்லாம் தவறு என்றோ, இவை எல்லாம் அவதூறு என்றோ எனக்கு அவமானம் ஏற்படுத்திவிட்டது என்றோ, ஒரு அவதூறு வழக்கைத் தொடர்வதற்கு சோனியாகாந்திக்கு இன்றுவரை தைரியமில்லை.

காங்கிரஸ் கட்சியிலும் யாரும் இது பற்றி வாய் திறக்கவில்லை. சோனியா காந்தியும் எதுவும் கூறவில்லை. மூடி மறைக்க முயற்சி மட்டுமே நடக்கிறது. இப்போது இந்தச் சூழ்நிலையில் அதாவது அந்த 250 பேர் அடங்கிய பட்டியலில் ஆளும் கட்சியோடு சம்பந்தப்பட்ட புள்ளிகளின் பெயர்கள் உள்ளன. ஹசன் அலியின் 1.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டின் பின்னணியிலும், ஆளும் கட்சியின் முக்கியப் புள்ளிகள் இருக்கிறார்கள். 2.2. பில்லியன் டாலர் பணத்தை அமெரிக்கப் பங்கு பத்திரத்தில் போட்டு வைத்திருந்தால், இன்றைக்கு அது 9 பில்லியன் டாலராக விசுவரூபம் எடுத்திருக்கும். அந்தப் பணமும் இப்போது வெளிநாட்டில் இருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில் எந்த அதிகாரி அல்லது எந்த மந்திரி, எந்த பிரதம மந்திரி இந்தப் பணத்தையெல்லாம் திரும்ப நம் நாட்டுக்குக் கொண்டு வர முயற்சி செய்ய முடியும்..? சோ கூறியது போல, யார் பதுக்கி வைத்திருக்கிறார்களோ, அவர்கள் பதவியில் இருக்கிறார்கள். அவர்கள் பதவியில் இருந்து விலக்கப்பட்டால்தான், அந்தப் பணம் நம் நாட்டுக்குத் திரும்ப வர முடியும்.

இன்னொன்று வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள 21 லட்சம் கோடி ரூபாயில் நான்கில் ஒரு பங்குத் தொகை இங்கு திரும்ப கொண்டு வரப்பட்டாலே நம் நாட்டின் வளர்ச்சி 14 முதல் 15 சதவிகிதம்வரை உயரும். நம் நாட்டில் பணத்தட்டுப்பாடு நீங்கும். நம் நாட்டுக்கு இப்போதே பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடு தேவையில்லை என்ற நிலைதான் நீடித்து வருகிறது.

நன்றி : துக்ளக்

கருணாநிதியும் சர்க்காரியா கமிஷனும்

29-03-2011

என் இனிய வலைத்தமிழ் மக்களே..!

சர்க்காரியா கமிஷனின் விசாரணையில் வெளியான கருணாநிதியின் ஊழல்களில் அடுத்தது இந்த பூச்சி மருந்து ஊழல்..! தாத்தா தனது ஊழலை பைசா கணக்கில் ஆரம்பித்துதான் இப்போது லட்சம் கோடியில் வந்து நின்றிருக்கிறார்..! என்னவொரு கடின உழைப்பு..! இதற்காகவே தாத்தாவை தனியாக வாழ்த்த வேண்டும்..! இனி படியுங்கள்..!

முந்த்ரா முதல் ஸ்பெக்ட்ரம் வரை - பகுதி 17

கிராமங்களில் வயல்களில் உள்ள பயிர்களைப் பூச்சிகள் தாக்காமல் இருப்பதற்கு பூச்சி மருந்து தெளிப்பதைப் பார்த்திருப்பீர்கள்.. அதுபோல, ஒரு பூச்சி மருந்து தொடர்பான விவகாரத்தைத்தான் நீதிபதி சர்க்காரியா விசாரித்தார். இந்தப் பூச்சி மருந்து தெளித்ததில், பூச்சிகள் செத்ததோ இல்லையோ.. நேர்மையும், நியாயமும் செத்துப் போனதென்னவோ உறுதி..!

1970-ம் ஆண்டு மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து தெளிக்கும் தி்ட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதிகமாக பூச்சித் தாக்கும் பகுதிகளில் விமானம் மூலமாக பூச்சி மருந்தை தெளித்து, அதன் மூலம் விவசாயத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் இத்திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது..

இதற்காக ஒரு ஏக்கருக்கு 7 ரூபாயை மத்திய அரசு செலவிடும் என்றும், அதற்கு மேலாகும் செலவுகளை மாநில அரசே ஏற்க வேண்டும் என்றும் திட்டமிடப்படுகிறது. திட்டமெல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனா, தமிழ்நாட்டில் அந்தத் திட்டம் பட்டபாடு இருக்கிறதே..!

இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே களத்தில் இறங்குகிறார் தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளரும், தி.மு.க.வின் மூத்தத் தலைவருமான அன்பில் தர்மலிங்கம். பொதுப்பணித் துறை காண்ட்ராக்டர் ராஜகோபால் என்பவர் அன்பிலுக்கு நெருக்கமாகிறார். உடனே ராஜகோபாலுக்கு தொழில் அபவிருத்தி ஆகிறது. தன்னுடைய தொழிலை அபிவிருத்தி செய்வது மட்டுமில்லாமல், அன்பில் தர்மலிங்கம் தன்னை அபிவிருத்தி செய்து கொள்ளவும் உதவிகள் செய்கிறார் ராஜகோபால்.


மத்திய அரசு விமானம் மூலம் பூச்சி மருந்து என்ற திட்டத்தை அறிவித்த உடனேயே அன்பிலை சந்திக்கிறார் ராஜகோபால். “அண்ணே.. இந்த விமானக் கம்பெனிக்காரங்க பூச்சி மருந்து தெளிக்கிறதுல நிறைய சம்பாதிக்கிறாங்க.. நாம இதுல தலையிட்டா கமிஷன் வாங்கலாம்..” என்று யோசனை தெரிவிக்கிறார். கரும்பு தின்ன யாருக்குத்தான் கசக்கும்? அன்பில் உடனடியாக ஆமோதிக்கிறார்.

மருந்துத் தெளிப்பு விமான கம்பெனிகளோடு பேச்சுவார்த்தையைத் தொடங்க உத்தரவிடுகிறார் அன்பில். கம்பெனி பிரதிநிதிகளை அழைத்து ஒரு ஏக்கருக்கு எத்தனை ரூபாய்க்கு மருந்து தெளிக்க இயலும் என்று கேட்கிறார்கள்.. ஒரு ஏக்கருக்கு 7 ரூபாய்க்கே தெளிக்கலாம் என்று அவர்கள் கூறுகிறார்கள். மத்திய அரசு நிர்ணயித்த விலையிலேயே மருந்து தெளித்தால், அப்புறம் அன்பில் எப்படி சம்பாதிப்பது?

அதனால் பூச்சி மருந்துத் தெளிப்புக் கம்பெனிகள் ஏக்கருக்கு 9 ரூபாய்க்கு மருந்து தெளிப்பதாக கொட்டேஷன் கொடுக்க வேண்டும் என்றும், அதில் ஒரு ஏக்கருக்கு 40 பைசா கமிஷனாகக் கொடுக்க வேண்டும். ஒப்பந்தம் அவர்களுக்குத்தான் என்பதற்கு தாங்கள் கியாரண்டி என்றும் பேசப்படுகிறது. அது மட்டுமல்ல.. கமிஷன் முன் பணமாக உடனடியாகக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் பேசப்படுகிறது. கம்பெனிகளுக்கும் இதில் லாபம்தானே? உடனடியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

சரி.. கமிஷன் வாங்குவதென்று முடிவாகிவிட்டது. எப்படி வாங்குவது..? அந்தக் கம்பெனிகளும் கொடுக்கும் பணத்துக்கு ரசீது வேண்டுமென்று கேட்கிறார்கள். நூதனமான யோசனை ஒன்று தோன்றுகிறது அன்பிலுக்கு. அதன்படி, பொன்னி ஏஜென்சீஸ் என்று ஒரு நிறுவனத்தைத் தொடங்குகிறார். மருந்து தெளிக்க ஆர்டர் பெறும் விமானக் கம்பெனிகள் அந்த பொன்னி ஏஜென்ஸியோடு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்.

அதாவது பொன்னி ஏஜென்ஸீஸ் அரசிடமிருந்து ஒப்பந்தம் பெற்றுத் தருவதற்காக விமானக் கம்பெனிகளிடமிருந்து ஒரு ஏக்கருக்கு 40 பைசா வீதம் கமிஷன் பெறுவதென்று ஒப்பந்தம் போடப்படுகிறது. இந்த ஏற்பாட்டின்படி 75 ஆயிரம் ரூபாய் முன் பணமாக அன்பில் தர்மலிங்கத்திற்குக் கொடுக்கப்படுகிறது. இந்தப் பணம் கொடுக்கப்படுகையில் அன்பில் தர்மலிங்கம், தி.மு.க.வின் திருச்சி மாவட்டச் செயலாளர். அவ்வளவுதான்..

எல்லாம் நன்றாகத்தான் நடந்து கொண்டிருந்தது. இவர்களே பங்கு பிரித்துக் கொண்டால், விவசாயத் துறைக்கென்று ஒரு அமைச்சர் இருப்பாரே..? அவரைக் கவனிக்காமல் கோட்டைவிட்டு விட்டார்கள். அங்குதான் பிரச்சினை ஆரம்பித்தது..

இந்த விவகாரத்தைக் கேள்விப்பட்ட அப்போதைய விவசாயத் துறை அமைச்சர் திருமதி சத்தியவாணி முத்து உடனடியாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் 1970 ஜூன் 4-ம் தேதியன்று தன்னைச் சந்திக்க வேண்டுமென்று உத்தரவிடுகிறார்..

அவ்வளவுதான்.. அன்பில் தர்மலிங்கத்துக்கும், ராஜகோபாலுக்கும் கிலி ஏற்படுகிறது. இந்த அம்மையார் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டால் என்ன செய்வது என்று பதறுகிறார்கள். உடனடியாக விமானக் கம்பெனி நபர்களை அழைத்து சத்தியவாணி முத்துவிடம் பேச்சுவார்த்தை நடத்துகையில் ஏக்கருக்கு 9 ரூபாய்க்குக் குறைவாக மருந்து தெளிக்க இயலாது என்று உறுதியாகக் கூறிவிடுமாறு சொல்கிறார்கள்.

சத்தியவாணி முத்துவோடு மீட்டிங் நடக்கிறது. சத்தியவாணிமுத்து ஒரு ஏக்கருக்கு 8.25 ரூபாய்க்கு மேல் முடியாது என்று உறுதியாக நிற்கிறார். விமானக் கம்பெனிகள் 9 ரூபாய் என்பதில் உறுதியாக நிற்கின்றன. கம்பெனி பிரதிநிதிகளின் பிடிவாதத்தைப் பார்த்து எரிச்சலடைந்த சத்தியவாணிமுத்து, “8.25 ரூபாய்க்கு மருந்து தெளிக்க முன் வருபவர்கள், விவசாயத் துறை இயக்குநரை சந்திக்கலாம். மற்றவர்கள் செல்லலாம்” என்று கூட்டத்தை முடித்துக் கொள்கிறார். இந்த விஷயத்தை கோப்பிலும் பதிவு செய்கிறார்.

“வேலையை முடித்துக் கொடுக்கிறேன்..” என்று அட்வான்ஸ் லஞ்சத்தை பெற்றுக் கொண்ட அன்பிலுக்கு திருடனுக்குத் தேள் கொட்டியதைப் போல இருந்தது. உடனடியாக முதல்வர் கருணாநிதியைச் சந்திக்கிறார். “என்ன தலைவரே..! இந்த அம்மா இப்படித் தொந்திரவு பண்ணுது..” என்று வத்தி வைக்கிறார். கருணாநிதிக்கு வந்ததே கோபம்..!

நான் முதலமைச்சராக இருக்கும்போது இந்த அம்மையாருக்கு என்ன இப்படியொரு துணிச்சல்.. என்று நினைத்து தலைமைச் செயலாளராக இருந்த ஈ.பி.ராயப்பாவை அழைக்கிறார். உடனடியாக ஒரு ஏக்கர் 9 ரூபாய்க்கு பூச்சி மருந்து தெளிக்க ஆணை வெளியிடுமாறு உத்தரவிடுகிறார்.

ராயப்பாவும் அப்படியே அவர் உத்தரவை நிறைவேற்றுகிறார். ராயப்பாவைவிட பணியில் மூத்தவர்கள் எட்டு பேர் காத்திருக்கும்போது ராயப்பாவை தலைமைச் செயலாளர் ஆக்கியவர் கருணாநிதி. இதுபோல சீனியாரிட்டியை மதிக்காமல் தலைமைச் செயலாளரை நியமிப்பதை இன்றுவரை வாடிக்கையாக கொண்டிருக்கிறார் கருணாநிதி.

அதற்கடுத்து இது தொடர்பாக நடந்த கூட்டத்தில், அந்தக் கோப்பை பார்வையிட்ட சத்தியவாணி முத்து, 9 ரூபாய்க்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் எழுதிய குறிப்பு, கோப்பில் இருந்து காணாமல் போனது கண்டு அதிர்கிறார். அதன் பிறகு அவர் மீதும் கப்பல் கட்டுமானத்தில் ஊழல் புகார் எழுந்தது தனிக் கதை.

ஒரு பாகம் முடிந்த நிலையில் ஊழலின் அடுத்த பாகம் அடுத்த நிதியாண்டில் தொடங்குகிறது. 1971-ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வான அன்பில் தர்மலிங்கம் இப்போது விவசாயத் துறை அமைச்சராகிறார். இந்த முறை நேரடியாக தானே விமானக் கம்பெனிகளிடம் பேச்சுவார்த்தையைத் தொடங்குகிறார்.

“போனவாட்டி ஒரு ஏக்கருக்கு 40 காசு கொடுத்தீங்க.. இப்போ விலைவாசி ஏறிப் போச்சு.. அதனால ஒரு ஏக்கருக்கு 1 ரூபா கமிஷனா கொடுத்திருங்க.. உங்களுக்கு ஒரு ஏக்கருக்கு 11 ரூபாய் தர்றோம்..” என்று பேரம் பேசுகிறார் அன்பில். விமானக் கம்பெனிக்காரர்கள், “அவ்வளவு தர முடியாது.. ஒரு ஏக்கருக்கு 80 காசுகள் கமிஷனாகத் தருகிறோம்.. அதற்கு ரசீது தாருங்கள்..” என்று கூறுகிறார்கள்.

இதற்கு ஒப்புக் கொண்ட அன்பில், ராஜகோபால் இந்த விவகாரத்தில் நிறைய உள்குத்து செய்வதாக சந்தேகிக்கிறார்.. இதனால் ராஜகோபாலைக் கழற்றிவிட முடிவு செய்து விவசாயத் துறை செயலாளராக இருந்த வேதநாராயணனை அழைக்கிறார். “நீங்கள் நேரடியாக கம்பெனிகளிடம் பேசுங்கள். முதலமைச்சர் ஒரு ஏக்கருக்கு 1 ரூபாய் கமிஷன் வேண்டும் என்று விரும்புகிறார். 90 காசுக்குக் குறைய மாட்டார். மேலும் 25 சதவிகித கமிஷன் முன்னதாகவே கொடுக்கப்பட வேண்டும்..” என்றும் கூறுகிறார்.

இதன்படி விஷயம் விமானக் கம்பெனிகளுக்குச் சொல்லப்படுகிறது. எழுத்துப்பூர்வமான ஒப்பந்தம் எதுவும் கையெழுத்து ஆகாமலேயே பணியைத் தொடங்க அவர்கள் பணிக்கப்படுகிறார்கள். அதன்படியே பணியைத் தொடங்குகிறார்கள்.

இப்போது புதிய சிக்கலாக கடந்தாண்டு செய்த வேலைக்கு உரிய தொகை வந்து சேரவில்லை என்றும், அதை முதலில் பைசல் செய்ய வேண்டும் என்றும் கம்பெனிகள் போர்க்கொடி தூக்குகின்றன. மேலும் முன் பணத்தைத் தவிர கமிஷன் தொகையும் கருணாநிதியின் கைக்கு வரவில்லை. விடுவாரா அவர்..? கடும் கோபமடைந்த கருணாநிதி, 12.09.1971 அன்று அன்பில் தர்மலிங்கத்தை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு ப.உ.சண்முகத்தை வேளாண் அமைச்சராக்குகிறார்.

அடுத்ததாக கருணாநிதி பிறப்பித்த உத்தரவு. கம்பெனிகள் ஏக்கருக்கு 90 பைசா என்று ஒப்புக் கொண்டபடி கொடுக்கவில்லை. அதனால், அவர்களுக்குச் சேர வேண்டிய தொகைகள் அனைத்தையும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி நிறுத்தி வைக்கவும் உத்தரவிடுகிறார். இந்த உத்தரவை கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கம் நிறைவேற்றுகிறார். கம்பெனிகள் அரண்டுபோய், வேளாண் துறை அமைச்சர் ப.உ.சண்முகத்தைச் சந்தித்தபோது, அவர் தனக்கு எதுவும் தெரியாதென்று முதலமைச்சரைக் கை காட்டுகிறார்.

கம்பெனிக்காரர்களுக்கு இக்கட்டில் சென்று மாட்டிக் கொண்டோம் என்பது புரிகிறது. வேறு வழியின்றி 1,17,273 ரூபாயை வசூல் செய்து கருணாநிதியின் செயலாளர் வைத்தியலிங்கத்திடம் கொடுக்கிறார்கள். அவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு விவசாயத் துறை செயலாளருக்கு கம்பெனிகளுக்குச் சேர வேண்டிய நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டார்.

சர்க்காரியா கமிஷனில் நடந்த வழக்கு விசாரணையின்போது சாட்சியம் அளித்த கருணாநிதியின் அப்போதைய செயலாளர் வைத்தியலிங்கம், தனது சாட்சியத்தில், “என்னைப் பொறுத்தவரையில் குற்ற நோக்கிலோ, உள் நோக்கம் கொண்டோ, தெரிந்தோ எனது சொந்த ஆதாயத்துக்காகவோ இந்தப் பணத்தைப் பெற்றுக் கொள்ளவில்லை.. நான் செய்ததெல்லாம் அந்தப் பணத்தை முதலமைச்சரிடம் சேர்ப்பிக்கும் தீங்கில்லாத ஒரு கருவியாக இருந்ததுதான்..” என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஊழலைப் பற்றி குறிப்பிட்ட நீதிபதி சர்க்காரியா, “முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோரின் வாய் மொழி உத்தரவுகளால்தான் இது நடந்துள்ளது. மோசடியை அடிப்படையாகக் கொண்ட இந்த முறையற்ற தந்திரங்களினால் விமான கம்பெனிக்காரர்கள் முதலில் கவரப்பட்டு மீள முடியாத சிக்கலில் மாட்டிவிடப்பட்டு வழிக்குக் கொண்டு வரப்பட்டனர். முதலமைச்சர், வேளாண்மைத் துறை அமைச்சர் ஆகியோர் லஞ்சமாகப் பணம் பறிக்க, அவர்களது கோரிக்கைகளுக்கு இவர்கள் பணிய வேண்டியதாயிற்று..” என்று குறிப்பிடுகிறார்..

சமீபத்தில் அன்பில் தர்மலிங்கம் சிலை திறக்கப்பட்டதையொட்டி கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில், “என்னையும், உன்னையும் சிலை வடிவில் நின்று சிரித்த முகத்துடன் அன்பில் அழைக்கின்றார்..! எதையும் உரிமையுடன் உணர்வு கலந்த உணர்வு நட்புடன் கணமும் பிரியாமல் கண்ணின் கருவிழி போல என்னையும், என் நட்பையும், எம் கழகத்தையும் காத்து நின்ற காவலன்..” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பூச்சி மருந்து தெளிப்புத் திட்டத்தில் இறந்தது பூச்சிகளா? நேர்மையும், உண்மையுமா..?

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் 27-03-2001

கருணாநிதியும் சர்க்காரியா கமிஷனும்


முரசொலி மாறனின் தலையீடு - கருணாநிதி - சர்க்காரியா கமிஷனின் அறிக்கை!

30-03-2011

தி.மு.க. அரசு பத்திரிகையாளர்களை மிரட்டுவதும், வேண்டாத செய்திகளை வெளியிடும் பத்திரிகையாளர்களை வழக்குப் போட்டு மிரட்டுவதும், பிறகு சம்பந்தப்பட்ட பத்திரிகையாளர்கள் அரசிடம் பணிந்ததும் அந்த வழக்குகளை குப்பைத் தொட்டிக்கு அனுப்புவதும் நாம் பார்த்து பழகிப் போன ஒரு விஷயம். ஆனால், இது போன்ற நடவடிக்கைகளெயெல்லாம் 1969-ம் ஆண்டிலேயே கருணாநிதி நடத்தியிருக்கிறார் என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்..

வர்கீஸ் என்ற ஐ.சி.எஸ். அதிகாரி தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். ஓய்வு பெற்ற பிறகும் அவர் தமிழ்நாடு அரசின் திட்ட ஆலோசகராகவும், விஜிலென்ஸ் பிரிவின் ஆணையராகவும் பணியாற்றி வந்தார்.

அவரின் மகன் ஓபல் காரை இந்தியாவிற்குள் இறக்குமதி செய்ததில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக பிராட்வே டைம்ஸ் என்ற நாளிதழ் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.

இந்தச் செய்தியை அடுத்து வர்கீஸ், தமிழக அரசின் தலைமைச் செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்புகிறார். அந்தக் கடிதத்தில் தனது மகன் கார் இறக்குமதி செய்ததில் சரியான நடைமுறைகள்தான் பின்பற்றப்பட்டன என்றும், அதில் எவ்விதமான முறைகேடுகளும் இல்லை என்றும், பிராட்வே டைம்ஸ் பத்திரிகை, அதிகாரிகளை மிரட்டுவதற்காகவே இது போன்ற செய்திகளை வெளியிட்டு வருவதாகவும், அதனால் அந்தப் பத்திரிகை மீது அரசு அவதூறு வழக்குத் தொடர வேண்டும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

தன் மீது இந்தப் பத்திரிகை இப்படியொரு செய்தியை வெளியிடுவதற்கும் தனிப்பட்ட காரணம் ஒன்று உண்டு என்றார் வர்கீஸ். அது என்னவெனில், இந்த பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் உரிமையாளர் மேத்யூ செரியன் தி.மு.க. கட்சியினருக்குத் தெரிந்தவர்தான். அதிலும் முரசொலி மாறனுக்கு மிகவும் நெருக்கமானவர். முரசொலி மாறன் தேர்தலில் நிற்கும் காலங்களில் அவரது பிரச்சார உபயோகத்திற்காக தனது கம்பெனி கார்களை வழங்கி உதவிடும் அளவுக்கு நண்பர்தான் மேத்யூ செரியன்.

ஆனால் வர்கீஸ் மீது இந்த செரியனுக்கு என்ன கோபம் எனில், பிராட்வே டைம்ஸ் பத்திரிகையை அச்சிடும் நிறுவனம் தாம்ஸன் அண்ட் சன்ஸ். இதுவும் செரியனுக்குச் சொந்தமானதுதான். இந்த அச்சகத்தில் சில காலங்கள் தமிழக அரசின் பாட நூல் வெளியீட்டுக் கழகத்தின் சார்பில் வெளியிடப்படும் தமிழக அரசின் பள்ளிப் பாடப் புத்தகங்கள் அச்சிடப்பட்டு வந்தன.

ஒரு கட்டத்தில் தாம்ஸன் நிறுவனம் செய்த குளறுபடியால் புத்தகங்கள் அச்சிடுவதில் தாமதமும், முறைகேடுகளும் நடந்திருக்கின்றன. இதனால் அப்போதைய தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த வர்கீஸ், இந்த தாம்ஸன் அண்ட் சன்ஸ் நிறுவனத்திற்கான பாட நூல் அச்சிடும் கான்டிராக்ட்டை ரத்து செய்துவிட்டு இந்நிறுவனத்தையும் கறுப்புப் பட்டியலில் வைத்துவிட்டார். இதனால் லம்பமாக அரசிடம் இருந்து வரும் பணத்தினை இழந்துவிட்டார் செரியன். இந்தக் கோபத்தில்தான் இப்படியொரு அபாண்டமான புகாரை செரியன் தன் மீது எழுப்பியிருப்பதாக வர்கீஸ், அரசிடம் கடிதம் மூலம் புகார் கூறினார்.

இந்தக் கடிதம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியின் பார்வைக்கு வைக்கப்பட்டது. செரியன் மீதும், அந்தப் பத்திரிகை மீதும் வழக்குத் தொடர கருணாநிதியால் உடனுக்குடன் அனுமதியும் அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த வழக்கு செரியனுக்கு ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்க உதவப் போகிறது என்று அப்போது வர்கீஸுக்குத் தெரியவில்லை.

வழக்குத் தொடரப்பட்டு நீதிமன்றம் பிராட்வே டைம்ஸ் பத்திரிகைக்கு சம்மன் அனுப்பிய பின்புதான், இந்த விஷயத்தில் பரபரப்பான காட்சிகள் அரங்கேறியுள்ளன.

அந்தப் பத்திரிகையின் அதிபரை முதலமைச்சரான கருணாநிதியின் செயலாளர் தொடர்பு கொண்டு, முதலமைச்சரிடம் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்ளும்படி ஆசிரியரின் சார்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தால் வழக்கு வாபஸ் பெறப்படும் என்றும் தகவல் தெரிவிக்கப்படுகிறது.

இதனையேற்று செரியனும் அரசுக்கு ஒரு கடிதத்தை எழுதுகிறார். அந்தக் கடிதத்தில் வர்கீஸ் மற்றும் அவரது மகன் பற்றி ஏற்கெனவே வெளியிட்ட செய்திக்கு எவ்வித வருத்தமும் தெரிவிக்காமல் “பிராட்வே டைம்ஸ் பத்திரிகை சிறிது காலத்திற்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தாலும், இப்போது எனது பத்திரிகைக்கும், முன்னேற்ற நோக்கங்கள் கொண்ட உங்கள் அரசுக்கும் இடையில் நெருங்கிய உறவு நிலவுவதாலும் எங்கள் மீதான வழக்கை அரசு வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும்..” என்று அக்கடிதத்தில் தெரிவிக்கப்படுகிறது. இக்கடிதத்தைப் படித்த கருணாநிதி அக்கடிதத்திலேயே “அரசுத் தரப்பு வழக்கை வாபஸ் பெறலாம்” என்று எழுதி உத்தரவிடுகிறார்.

ஆனால் பிராட்வே டைம்ஸ் பத்திரிகையின் அதிபரான செரியன் எழுதிய அக்கடிதத்தில் மன்னிப்புக் கேட்பது போன்ற எந்தத் தொனியும் இல்லை. மாறாக, தான் வெளியிட்ட கட்டுரைக்கு நியாயம் கற்பிப்பதாகவே இருந்தது.

மேலும் பிராட்வே டைம்ஸ் பத்திரிகை மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசுத் தரப்பில் விரிவாக நடந்த ஆலோசனை.. சட்டத் துறை அமைச்சருடனான ஆலோசனை என்று எதுவுமே வாபஸ் பெறும்போது பின்பற்றப்படவில்லை. அவசர கதியில், அவதூறு வழக்கு வாபஸ் பெறப்பட்டது முதல் மாங்காய் என்றால் இரண்டாவது மாங்காயாக, அதே வேகத்திலேயே, அந்நிறுவனம் பாடநூல் நிறுவனத்தின் புத்தகங்களை அச்சிடும் ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் கறுப்புப் பட்டியலில் இருந்தும் நீக்கப்பட்டது. இந்த நீக்கத்திற்கு அடிப்படையாகக் கருதப்பட்டது மேத்யூ செரியனின் அக்கடிதம்தான்.

இந்த விவகாரத்தில் மொத்தமாகப் பார்த்தால், எதற்காக கருணாநிதி இவ்வளவு முனைப்பாக வழக்கை வாபஸ் பெறுவதிலும், அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் முனைப்புக் காட்டினார் என்ற கேள்வி எழும். இங்கேதான் முரசொலி மாறன் வருகிறார்.

“மாறன்தான் அரசு இந்த வழக்கை வாபஸ் பெற்று, கறுப்புப் பட்டியலில் இருந்து அந்த நிறுவனத்தை நீக்க வேண்டும் என்பதில் மிகுந்த முனைப்புக் காட்டி தன்னிடம் வலியுறுத்தினார்..” என்பதை கருணாநிதியே சர்க்காரியா கமிஷனில் அளித்த தனது வாக்குமூலத்தில் ஒத்துக் கொண்டார்.

இவ்வாறு மாறன் கருணாநிதிக்கு நெருக்கடி கொடு்த்தது வெறும் நட்பினால்தானா என்றால் இல்லை. பிராட்வே டைம்ஸ் நிறுவனம் தேர்தல் சமயங்களில் மாறனுக்கு தன்னுடைய கார்களை இலவசமாக வழங்கி உதவி செய்திருக்கிறது என்பதும் சர்க்காரியா கமிஷன் விசாரணையில் தெரிய வந்தது.

இவ்வழக்கில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம். ஒரு தனியார் நிறுவனம் அரசின் கான்ட்ராக்டைப் பெற்று பாட நூல் தயாரிக்கும்போது முறைகேடுகளில் ஈடுபட்டு அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்துகிறது.

அவ்வாறு நஷ்டம் ஏற்படுத்திய நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்க ஒரு நேர்மையான அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்து அவ்வாறே அந்நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் வைக்கிறார்.

அந்த அதிகாரியைப் பழி வாங்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக அந்தப் பத்திரிகை அவரைப் பற்றிய அவதூறான செய்தியை வெளியிடுகிறது. அப்பத்திரிகை மீது வழக்குத் தொடுக்க வேண்டும் என்று, அதனால் பாதிக்கப்பட்ட அதிகாரி அரசுக்குப் பரிந்துரை செய்ததன் அடிப்படையில் வழக்கும் தொடுக்கப்படுகிறது.

வழக்குத் தொடுக்கப்பட்ட பின்னர் முதலமைச்சரின் மருமகனான முரசொலி மாறன், முதல்வர் மீதான தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, அந்த வழக்கை வாபஸ் பெற வைத்ததோடு ஊழலில் ஈடுபட்ட அந்த நிறுவனத்தை கறுப்புப் பட்டியலில் இருந்து நீக்கவும் உதவுகிறார்.

கருணாநிதியின் இந்த நடவடிக்கைகளைப் பற்றிக் குறிப்பிடும் நீதிபதி சர்க்காரியா, “இவ்வழக்கில் வரக் கூடிய நியாயமான முடிவு என்னவெனில், சரியான நடைமுறையைப் பின்பற்றாமல் குறுக்கு வழியில் செல்லவும், தம்முடைய சட்டத் துறை அமைச்சரின் கருத்தை முரட்டுத்தனமாக ஒதுக்கிவிட்டுச் செல்லவும், தொடர்புடைய மற்ற இரண்டு அமைச்சர்களும் தங்களது கருத்துக்களைத் தெரிவிக்கும் வாய்ப்பைத் தர மறுக்கவும், மாறனின் அலுவல் சார்பற்ற தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக கருணாநிதி, செரியனுக்கு உதவும் நோக்கத்திற்கு தூண்டப்பட்டுள்ளார்” என்று கூறியுள்ளார்..!

நன்றி : குமுதம் ரிப்போர்ட்டர் : 31-03-2011

http://truetamilans.blogspot.com/2011/03/blog-post_31.html

Monday, April 4, 2011

குமுதம் ரிப்போர்டர் பிரத்யேக சர்வே முடிவுகள்.

தமிழகம் முழுவதும் மக்களின் மனநிலை எப்படி இருக்கிறது, யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்பதை அறிய 60,000 பேரிடம் ஒரு மெகா சர்வேயை நடத்தினோம். கடந்த இதழின் தொடர்ச்சியாக இந்த இதழிலும் முடிவுகள் வெளியாகியுள்ளன.

சர்வே முடிவுகள் அதிர்ச்சி அளிக்கும் பல தகவல்களைத் தந்துள்ளது. பணமும் இலவசங்களும் ஆட்சியைத் தக்க வைக்கவோ அல்லது ஆட்சியைப் பிடிக்கவோ உதவப்போவதில்லை என்பது சர்வே கொடுக்கும் ரிசல்ட். ஆளும் கட்சி கடந்த ஐந்தாண்டுகளில் அறிவித்த இலவசத் திட்டங்கள் மக்களுக்கு முழுமையாகச் சென்று சேரவில்லை என்பதும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளால், ஆளும் கட்சியினருக்கே அவை கொண்டு செல்லப்பட்டுள்ளது என்பதும் மக்களிடையே பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் கடந்த ஐந்தாண்டுகளில் 11 இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. ஓட்டுக்காக ஆளுங்கட்சி சார்பில் அதிக பணம் விளையாடியதும் அனைவரும் அறிந்தது தான். இதேபோல் வரும் பொதுத்தேர்தலிலும் பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என ஆளுங்கட்சி நினைக்கிறது. ஆனால், மக்களின் மனநிலை இதற்கு மாறாக இருப்பது ஆச்சரியம்.

அதேபோல விலைவாசி உயர்வும் கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாமல் ஆட்சியாளர்கள் மீது மக்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து கிராமங்களிலும் மக்கள் பேசுகின்றனர். மின்வெட்டு கிராமங்களில் அரசுக்கு எதிராக மக்களை வாக்களிக்க வைக்கும் என்று தெரிகிறது. குறிப்பாக விவசாயிகள், பெண்கள், சிறு தொழிலதிபர்கள் மத்தியில் மின்வெட்டு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எப்போதும் இல்லாத அளவுக்கு தி.மு.க. மீது அரசு ஊழியர்கள் மத்தியில் அதிருப்தியைக் காண முடிந்தது. அவர்கள்கூட ஆட்சி மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதை ரிசல்ட் சொல்கிறது. இதையெல்லாம்விட தி.மு.க.வின் ஓட்டு வங்கியாக இருந்த சிறுபான்மையினர் மத்தியிலும் நிறைய மாற்றங்கள் தெரிகிறது. கடந்த தேர்தலில் அ.தி.மு.க. வுக்கு வாக்களிக்காத சிறுபான்மையின மக்கள் இந்தத் தேர்தலில் குறிப்பிட்ட சதவிகிதம் அ.தி.மு.க.வுக்கு வாக்களிக்கத் தயாராக இருக்கிறார்கள்.


01a
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் ஷெயலலிதா முதல்வராக வருவதற்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறார்கள்.அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒரு பகுதியினர் ஸ்டாலின் முதல்வராக வரவேண்டும் என்று சொல்கின்றனர். இளைஞர்கள், பெண்கள், படித்த வர்கள் மத்தியில் ஸ்டாலினுக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதை கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கிறது.

சர்வேயில் அ.தி.மு.க.வுக்கு 58 சதவிகிதம் பேரும், தி.மு.க.வுக்கு 33 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. அணி அதிக இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்பது தீர்க்கமாகத் தெரிகிறது.

இந்தத் தேர்தலில் முக்கிய பிரச்னையாக எது இருக்கும்? என்ற கேள்விக்கு விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு, ஸ்பெக்ட்ரம், மின்வெட்டு ஆகிய நான்கு சாய்ஸ் கொடுக்கப்பட்டது.

கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் 57 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வே முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கூறியிருந்தனர். அடுத்தபடியாக ஸ்பெக்ட் ரமும், மின்வெட்டும் உள்ளது. இந்த இரண்டும் தி.மு.க. வெற்றியை பாதிக்கும் என்று தலா 15 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை 13 சதவிகிதம் பேர் மட்டுமே முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று கருத்துத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக் கணிப்பில் கலந்துகொண்ட ஆண்களில் 55 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வையும், 19 சதவிகிதம் பேர் ஸ்பெக்ட்ரத்தை யும், 17 சதவிகிதம் பேர் மின்வெட் டையும், 16 சதவிகிதம் பேர் சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் கூறுகின்றனர்.

01b

பெண்களில் 60 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வை தலையாய பிரச்னையாகக் கருதுகின்றனர். 17 சதவிகிதம் பேர் மின்வெட்டையும், 15 சதவிகிதம் பேர் ஸ்பெக்ட்ரத் தையும், 13 சதவிகிதம் பேர் சட்டம் ஒழுங்கு பிரச்னையையும் சொல்கின்றனர்.

படிக்காதவர்களில் 60 சதவிகிதம் பேர் விலைவாசி உயர்வு முக்கிய பிரச்னையாக இருக்கும் என்று சொல்லியுள்ளனர். அடுத்த இடத்தில் மின்வெட்டு இருக்கிறது. 21 சதவிகிதம் பேர் மின்வெட்டுக்கு ஆதரவாக கருத்துச் சொல்லியுள்ளனர். ஸ்பெக்ட்ரம், சட்டம் ஒழுங்கு பிரச்னைக்கு தலா பதினொரு சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஐந்தாண்டுகால தி.மு.க. ஆட்சி மன நிறைவைத் தருகிறதா? என்ற கேள்விக்கு மனநிறைவைத் தருகிறது என்று 25 சதவிகிதம் பேரும், மனநிறைவைத் தரவில்லை என்று 54 சதவிகிதம் பேரும் சொல்லியிருந்தனர். 21 சதவிகிதம் பேர் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தனர்.

தி.மு.க. ஆட்சி மனநிறைவு தருவதாக ஆண்களில் 27 சதவிகிதம் பேரும், பெண்களில் 22 சதவிகிதம் பேரும் தெரிவித்துள்ளனர். மனநிறைவைத் தரவில்லை என்று சொன்ன வர்களில் ஆண்கள் 53 சதவிகிதம், பெண்கள் 54 சதவிகிதம். இந்த ஆட்சி மனநிறைவு தருகிறது என்று படிக்காதவர்களில் 26 சதவிகிதம் பேரும், அதே அளவில் கல்லூரிப் படிப்பை முடித்தவர்களும் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், மனநிறைவைத் தரவில்லை என்று படிக்காதவர்களில் 61 சதவிகிதம் பேர் சொல்லியுள்ளனர். படித்தவர்களில் 49 சதவிகிதம் பேர் மட்டுமே மனநிறைவு தரவில்லை என்று சொல்லியுள்ளனர்.

அரசு ஊழியர்களில் 35 சதவிகிதம் பேர் மனநிறைவைத் தந்தது என்றும், 42 சதவிகிதம் பேர் மனநிறைவைத் தரவில்லை என்றும் கருத்துச் சொல்லியுள்ளனர். கிராமப்புறங்களில் 24 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 26 சதவிகிதம் பேரும் மனநிறைவு தருவதாகச் சொல்கிறார்கள். மனநிறைவு தரவில்லை என்று கிராமப்பகுதிகளில் 55 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 54 சதவிகிதம் பேரும் கருத்துச் சொல்லியுள்ளனர்.

01d

எந்தக் கூட்டணிக்கு வாக்களிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அ.தி.மு.க. அணிக்கு 58 சதவிகிதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க. அணிக்கு 33 சதவிகிதம் பேர் மட்டுமே வாக்களிப்பதாகத் தெரிவித்துள்ளனர். மூன்றாவது அணிக்கு 9 சதவிகிதம் பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆண்களில் 58 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வுக்கும், 34 சதவிகிதம் பேர் தி.மு.க.வுக்கும், 8 சதவிகிதம் பேர் மூன்றாவது அணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 59 சதவிகிதம் பேர் அ.தி.மு.க.வுக்கும், 32 சதவிகிதம் பேர் தி.மு.க.வுக்கும் 9 சதவிகிதம் பேர் மூன்றாவது அணிக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். கிராமப் பகுதிகளில் அ.தி.மு.க.வுக்கு 58 சதவிகிதம் பேரும், நகர்ப்பகுதிகளில் 59 சதவிகிதம் பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். தி.மு.க.வுக்கு கிராமப் பகுதிகளில் 34 சதவிகித ஆதரவும் நகர்ப் பகுதிகளில் 32 சதவிகித ஆதரவும் இருக்கிறது. வழக்கமாக நகர்ப்பகுதிகளில் தி.மு.க.வுக்கு கூடுதலாக ஆதரவு இருக்கும். இந்த முறை ஏனோ குறைந்திருக்கிறது.

அ.தி.மு.க.வுக்கு கிறிஸ்துவர்களில் 46 சதவிகிதம் பேரும், இஸ்லாமியர்களில் 63 சதவிகிதம் பேரும் ஆதரவாக உள்ளனர். கடந்த தேர்தலில் இவர்களில் பெரும்பாலானோர் தி.மு.க.வுக்கு வாக்களித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் தி.மு.க.வினருக்கு கிறிஸ்துவர் களின் ஆதரவு 44 சதவிகிதமும், இஸ்லாமியர்க ளின் ஆதரவு 40 சதவிகிதமுமே இருக்கிறது. இந்துக் களின் ஓட்டு 60 சதவிகிதம் அ.தி.மு.க.வுக்கும் 32 சதவிகிதம் தி.மு.க.வுக்கும் இருக்கிறது.

யார் முதல்வராக வரவேண்டும் என்று கருதுகிறீர்கள்? என்ற கேள்விக்கு 60 சதவிகிதம் பேர் ஜெயலலிதா முதல்வராக வரவேண்டும் என்று சொல்லியுள்ளனர். கரு ணாநிதிக்கு 24 சதவிகிதம் பேரும் ஸ்டாலினுக்கு 16 சதவிகிதம் பேரும் முதல்வராக ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். இருவரது ஆதரவு சதவிகிதத்தை கூட்டினாலும் 40 சதவிகிதம்தான் வருகிறது. எனவே, பெரும் பான்மை மக்கள் ஜெயலலிதா ஆட்சிக்கு வரு வதை விரும்புகிறார்கள் என்பது தெளிவாகப் புரிகிறது.
01c
ஆண்களில் 59 சதவிகிதம் பேர் ஜெய லலிதாவுக்கும், 25 சதவிகிதம் பேர் கருணா நிதிக்கும், 12 சதவிகிதம் ஸ்டாலினுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். பெண்களில் 60 சதவிகிதம் பேர் ஜெயலலிதாவுக்கும், 20 சதவிகிதம் பேர் கருணாநிதிக்கும் 13 சதவிகிதம் பேர் ஸ்டா லினுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். 55 வயது வரை உள்ள வர்களிடம் ஜெயலலிதாவுக்கு 60 சதவிகித ஆதரவு இருக்கிறது. அதற்கு மேல் வயதுடையவர்களிடம் 55 சதவிகித ஆதரவு மட்டுமே உள்ளது.

படிக்காதவர்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கு 65 சதவிகித ஆதரவு இருக்கிறது. பள்ளிப் படிப்பு முடித்தவர்கள் மத்தியில் ஜெய லலிதாவுக்கு ஆதரவு 61 சதவிகித மாகவும், பட்டப்படிப்பு படித்தவர்கள் மத்தியில் 55 சதவிகிதமாகவும் உள்ளது. படிக்காதவர்கள் மத்தி யில் கருணாநிதிக்கு 25 சதவிகித ஆதரவும், பள்ளிப் படிப்பு முடித்த வர்கள் மத்தியில் 23 சதவிகித ஆதரவும் கல்லூரி படித்தவர்கள் மத்தியில் 26 சதவிகித ஆதரவும் உள்ளது.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்.

Sunday, April 3, 2011

தலையங்கம்: விலைபோகும் ஜனநாயகம்!




கடந்த இரு நாள்களாக இந்தியா முழுவதிலும் பேசப்படுகின்ற பேச்சாகவும், நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் ஸ்தம்பிக்க வைத்த விவகாரமாகவும் மாறியிருக்கிறது - ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு 2008-ம் ஆண்டு ஜூலை மாதம் நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வெற்றிபெற பிற கட்சி உறுப்பினர்களுக்குக் கோடிகோடியாய் பணத்தைக் கொட்டித் தீர்த்த விவகாரம்.

நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட அந்த நாளின்போதும்கூட, தங்களுக்குப் பணம் கொடுக்க முயன்றார்கள் என்று பாஜக உறுப்பினர்கள் சிலர் பணக் கட்டுகளை அவையில் எடுத்துக் காட்டி, அந்த செய்தி நாடு முழுவதும் ஒளிபரப்பானபோது, மத்திய அரசு அதை மறுத்தது.

ஆனால் தற்போது விக்கிலீக் வெளியிட்டுள்ள ஆவணங்களில் இந்த உண்மைகள் அப்பட்டமாக வெளியாகியுள்ளன. காங்கிரஸின் முக்கிய பிரமுகரான சதீஷ் சர்மா என்பவர், நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கவிருந்த 4 நாள்களுக்கு முன்பாக, எம்பி-க்களுக்குக் கொடுப்பதற்காக ரூ.50 கோடி முதல் 60 கோடி வரை பணத்தை வைத்திருப்பதைத் தமக்குக் காட்டியதாக அமெரிக்கத் தூதரக அலுவலர் ஒருவர் அமெரிக்க அரசுக்கு ஜூலை 17-ம் தேதி ரகசிய மின்னஞ்சலை அனுப்பியுள்ளார். இதனை விக்கிலீக் அம்பலப்படுத்தியுள்ளது. இச்செய்தி இந்தியப் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது.

இதற்கு தார்மீகப் பொறுப்பேற்றுப் பிரதமர் பதவி விலக வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை வைத்து, அமளியில் ஈடுபட்டபோது, இதில் பிரதமர் அளித்துள்ள விளக்கம் - இதுவரை அளித்துள்ள தன்னிலை விளக்கங்களையெல்லாம் விஞ்சக்கூடியதாக இருக்கிறது. ""இந்திய மக்களால் விவாதிக்கப்பட்டு, அலசப்பட்டு, தள்ளுபடி செய்யப்பட்ட பழைய விஷயங்களுக்கு எதிர்க்கட்சியினர் அங்கீகாரம் அளித்து, உயிர் கொடுக்க நினைக்கிறார்கள்'' என்று கூறியுள்ளார் பிரதமர்.

அதெப்படி அவரால் இந்த விவகாரம் மக்களால் தள்ளுபடி செய்யப்பட்டவை என்று தீர்மானிக்க முடிகிறது. இதை தீர்மானிக்க அவருக்கு உதவியாக இருக்கிறது ஒரு புள்ளிவிவரம். நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோல்வியுறச் செய்த காங்கிரஸýக்கு அடுத்து வந்த 2009 மக்களவைத் தேர்தலில் 141 இடத்திலிருந்து 206 இடங்கள் அதிகமாக அளித்து, அரசின் மீது மக்கள் மன்றம் நம்பிக்கை தெரிவித்திருக்கிறதாம். ஆனால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்த பாஜகவுக்கு 138 இடங்களிலிருந்து 116 இடமாகக் குறைந்தது. கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 59 இடங்களிலிருந்து 39 ஆகக் குறைந்துவிட்டது என்கிறார்.

அதாவது தேர்தலில் எதிர்க்கட்சியினர் பல இடங்களில் தோற்றுவிட்டால், மக்கள் இவர்களது செயலை அங்கீகரித்துவிட்டார்கள் என்று அர்த்தமா? அடுத்தத் தேர்தலில் 206 இடங்களுக்கும் கூடுதலாக சில இடங்கள் பெற்றுவிட்டால், ஸ்பெக்ட்ரம் ஊழலை மக்கள் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்று சொல்லிவிடலாமா? எதற்கு எதை அளவுகோலாக வைப்பது?

இந்தத் தகவல் அமெரிக்க நாட்டுக்கும் அமெரிக்கத் தூதுவர் அலுவலகத்துக்கும் இடையிலான ரகசிய கடிதப் போக்குவரத்து. இதை யாரும் உறுதிப்படுத்த மாட்டார்கள் என்கிற தைரியத்தில் பிரதமர் இத்தகைய வாதத்தை முன்வைக்கின்றார். இதை பாஜக, இடதுசாரிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் நன்கு அறியும். அதனால்தான், இப்பதவியில் நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்றே சொல்கிறார்கள்.

நம்பிக்கை வாக்கெடுப்பில் மத்திய அரசு தோற்றுப் போகுமெனில், அதனால் மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை மற்றொரு தேர்தலை சந்திக்க வேண்டும்; அதில் வெற்றி பெறலாம் அல்லது தோல்வியுற்று எதிர்க்கட்சியாக இருக்கலாம் என்பதைத் தவிர, பெரிய இழப்பு ஏதுமில்லை. ஆனால் பதவியின் மோகம், அதிகார போதை எப்படியும் இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் வெற்றி பெற்று, தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முயலும்போது, அந்த பேராசையின் முன்னால் எல்லா நீதி, நியாயங்களும் உடைந்து போகின்றனவே...

நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் இவ்வாறு பணம் கொடுத்து நாடாளுமன்றத்தில் மற்ற கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதில் காங்கிரஸýக்கு முன்அனுபவம் உண்டு. இது ஒன்றும் புதியதல்ல.

அமெரிக்கத் தூதரகம் இந்தியாவில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக, அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்பதை வலியுறுத்தி, கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொண்டதால்தான் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர வேண்டிய நிலைமை ஏற்பட்டது. தனது பெரும்பான்மை ஆதரவு பலத்தை நிரூபிக்க வேண்டிய அவசியம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கு ஏற்பட்டது. இதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், அமெரிக்கா எந்த அளவுக்கு இந்த விவகாரத்தை மிகவும் நுட்பமாகக் கண்காணித்திருக்கும் என்பதை எவரும் உணர முடியும். அணுசக்தி ஒப்பந்தம் கைகூடாமல் போனால் அதனால் இழப்பும் கௌரவக் குறைச்சலும் அமெரிக்க அரசுக்குத்தான்.

யார் கண்டது, இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்கக் காங்கிரஸýக்கு உதவியது அமெரிக்க உளவுத்துறையாகக்கூட இருந்திருக்கக்கூடும். இல்லையென்றால், அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த அமர்சிங்கின் உதவியுடன் சமாஜ்வாதி கட்சியின் ஆதரவைக் காங்கிரஸ் எப்படிப் பெற்றது என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய சந்தேகத்துக்கு காங்கிரஸ் பதில் அளித்ததாகத் தெரியவில்லையே ஏன்?

மத்திய அரசோ அல்லது காங்கிரஸ் நிர்வாகிகளோ இத்தகைய சட்டவிரோதச் செயலைச் செய்யவில்லை என்று ஆணித்தரமாகச் சொல்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். அப்படியானால், அமெரிக்க அரசு தனது நலனுக்காக இந்தியாவில் ஆட்சி கவிழாமல் காப்பாற்ற பணத்தை வாரி இறைத்தது என்கிறாரா? இதற்கு வேறு என்னதான் பொருள்?

தலையங்கம்: எதையெல்லாம் தாங்குவது?



சில ஆண்டுகளுக்கு முன்பு சட்டப்பேரவையில் எழுப்பப்பட்ட கேள்வி, "ராஜாத்தி அம்மாள் யார்?' அதற்கு முதல்வர் கருணாநிதி அளித்த சாதுர்யமான பதில், "என் மகள் கனிமொழியின் தாய்'. தர்மசங்கடமான ஒரு கேள்வியை எளிமையாக, சொல்வன்மையால் கருணாநிதி எதிர்கொண்ட அழகை எதிர்க்கட்சியினரும்கூட ரசிக்கவே செய்தார்கள்.

இரு நாள்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்குத் தமிழக முதல்வர் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், கலைஞர் தொலைக்காட்சி தொடர்பாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அளித்த பதில்: "கலைஞர் டி.வி. கருணாநிதிக்குச் சொந்தமானது அல்ல. கருணாநிதி குடும்பத்தைச் சேர்ந்த 2 பேர் அதில் பங்குதாரர்களாக இருக்கிறார்கள்' அவ்வளவே!

இப்போதும் அதே சாதுர்யத்துடன் தமிழக முதல்வர் பதிலளித்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அப்போது ரசித்ததுபோல இப்போது அவரது பதிலை ரசிக்க இயலவில்லை. முந்தைய பதிலின் பின்புலத்தில் ஒரு தனிநபரின் அன்பின் விரிவும் ஆழமும் இருந்தது. இப்போதைய பதிலின் பின்புலத்தில் பொதுமக்களின் பணம், சட்ட விதிமீறல், முறைகேடு, அரசியல் ஆதாயம் எல்லாமும் வெட்டவெளிச்சமாக இருக்கிறது.

ஒரு தனிநபரின் மனைவியும் மகளும் தனிப்பட்ட முறையில் சொத்து வைத்திருப்பது புதிதல்ல. முடியாத செயலும் அல்ல. அது ஒருவகையில் பூர்வீகச் சொத்தாக இருக்கலாம். அல்லது கணவன், தந்தை வழியாகக் கிடைத்ததாக இருக்கலாம். அல்லது அவர்கள் வணிகம் நடத்தியோ, நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தோ சம்பாதித்ததாகக்கூட இருக்கலாம். அதேவேளையில், இத்தகைய நடவடிக்கைகளில் அந்த மகளோ அல்லது மனைவியோ சட்டவிதிகளை மீறியிருந்தால், பொருளாதாரக் குற்றம் செய்திருந்தால், அவர்களைத்தான் சட்டம் தண்டிக்குமே தவிர, கணவரையோ அல்லது தந்தையையோ அல்ல என்பதும் எல்லோரும் அறிந்ததுதான்.

மகள் 20 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார், மனைவி 60 விழுக்காடு பங்குகள் வைத்திருக்கிறார் என்றால், அதற்கான பணம் ரூ.214 கோடியை கடனாகப் பெற்று வட்டியுடன் கடனைச் செலுத்திவிட்டார்கள் என்றால், நல்லது. அப்படியே ஆகட்டும். ஆனால், யாரோ ஒருவரால் எந்தவித அடமானமும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாகக் கொடுக்கப்பட்டது ஏன்? கருணாநிதி முதல்வராக இல்லாமல் இருந்திருந்தால், அவரது கட்சியினரான ஆ. ராசா மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால், அந்த நிறுவனம் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின் மூலம் லாபம் அடைவதாக இல்லை என்றால், கலைஞர் தொலைக்காட்சிக்கு கடன் கொடுத்துக் கைதூக்கிவிட முன்வந்திருக்குமா என்கிற கேள்விக்கும் முதல்வர் கருணாநிதி பதிலளித்திருக்க வேண்டுமே, ஏன் செய்யவில்லை?

கனிமொழி மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வுசெய்யப்பட்டபோது, கலைஞர் டி.வி. செயல்பட்டுக் கொண்டிருந்தது. அவர் அதில் பங்குதாரர் என்றால், அதனை உரிய படிவத்தில் தெரிவித்திருந்தாரா? அவை கடன்தான் என்பதைக் குறிப்பிட்டிருந்தாரா?

முதல்வர் கருணாநிதியின் சொத்து மதிப்பு ரூ. 4.92 கோடி என்றால், தயாளு, ராஜாத்தி இரு மனைவிமார்களின் மொத்தச் சொத்து மதிப்பு ரூ. 39.42 கோடி. இப்படியிருக்க, இந்தச் சொத்து மதிப்பைக் காட்டிலும் 5 மடங்கு அதிகமாக ரூ. 214 கோடி கடன், எந்த அடமானமும் இல்லாமல், அநியாய வட்டி என்றாலும் பரவாயில்லை, யாராவது தருவார்களா?

மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி என்ற மனிதர், தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா புறப்படும்போது, அவரது சேவையை நினைவுகூர்ந்து ஒரு பாராட்டுவிழா நடத்தப்படுகிறது. விழாவை ஏற்பாடு செய்தவர்கள், காந்தியின் மனைவி கஸ்தூரிபா அம்மையாருக்கு சில நகைகளைப் பரிசாக அளிக்கின்றனர். அந்த நகைகளைப் பொதுக்கணக்குக்கு நன்கொடையாக அளித்து விடு என்று மனைவிக்குச் சொல்கிறார் காந்திஜி.

கஸ்தூரிபா மறுக்கிறார். ""இவை எனக்காக அளிக்கப்பட்ட நகைகள்; உங்களுக்கானது அல்ல. இதைத் தர மாட்டேன்''.

ஆனாலும் காந்திஜி சொல்கிறார். ""கஸ்தூரிபா என்பதற்காக அளிக்கப்பட்ட நகைகள் அல்ல அவை. அவர்களுக்கு உதவிகள் செய்த என்பொருட்டு உனக்கு அளிக்கப்பட்ட பரிசு. அவை உனக்கானவை அல்ல'' என்று சொல்லி வலுக்கட்டாயமாகப் பறித்து பொதுக்கணக்கில் சேர்க்கிறார்.

தயாளு அம்மாள் தனது மனைவி என்று ஒத்துக் கொள்கிறார். கனிமொழி தனது மகள் என்பதையும் ஒத்துக் கொள்கிறார். தனது சொத்துக் கணக்கில் மனைவியின் சொத்துகளையும், துணைவியின் சொத்துகளையும் பட்டியலிட்டுச் சமர்ப்பிக்கிறார். அவர்கள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் தொலைக்காட்சியின் அலுவலகத்தைக் கட்சித் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் இயங்க அனுமதிக்கிறார். அந்தத் தொலைக்காட்சிக்குத் தனது பெயரைச் சூட்டி மகிழ்கிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இன்னின்ன என்பதுவரை தனது ஆலோசனைப் பங்களிப்பையும் தந்து உதவுகிறார். ஆனால், கலைஞர் தொலைக்காட்சியின் பங்குதாரர்களாகத் தனது மனைவியும் மகளும் இருப்பதைத் தவிரத் தனக்கும் அதற்கும் தொடர்பே இல்லை என்று நாகூசாமல் கூறவும் செய்கிறார்.

எதையும் தாங்கும் இதயம் வேண்டுமென்றாய்; இதையும் தாங்க ஏதண்ணா எமக்கிதயம்? "கடற்கரையில் காற்று வாங்கும் அண்ணாவிடம் இதையெல்லாம் கூறி வருந்துவதைத் தவிர, வேறென்ன செய்ய?' அப்படி ஓர் அண்ணா, அவருக்கு இப்படி ஒரு தம்பி!