1949ம் ஆண்டு, திராவிட முன்னேற்றக் கழகத்தை துவக்கி வைத்து, அண்ணா என்ன பேசினார் என்பது நினைவிருக்கிறதா கருணாநிதி அவர்களே… ? நீங்கள் மறந்திருப்பீர்கள்.
“திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி விட்டது. திராவிடக் கழகத்திற்குப் போட்டியாக அல்ல. அதே கொள்கைப் பாதயில் தான், திராவிடர் கழகத்தின் அடிப்படைக் கொள்கைகளின் மீதேதான் திராவிட முன்றேற்றக் கழகம் அமைக்கப் பட்டுள்ளது. அடிப்படைக் கொள்கைகளில் கருத்துகளில் மாறுதல், மோதல் எதுவும் கிடையாது. சமுதாயத் துறையிலே சீர்திருத்தம், போருளாதாரத் துறையிலே சமதர்மக் குறிக்கோள், அரசியலில் வட நாட்டு ஏகாதிபத்தியத்தினின்று விடுதலை ஆகிய கொள்கைகள் தான் திமுகவின் கோட்பாடுகளாகும்.”
இந்தக் கொள்கைகளையெல்லாம் நீங்கள் என்றோ குழிதோண்டிப் புதைத்து விட்டீர்கள். அண்ணா மறைவுக்குப் பிறகு, தந்திரமாக, நெடுஞ்செழியனுக்கு போக வேண்டிய கட்சித் தலைவர் பதவியை எம்ஜிஆர் உதவியோடு, தட்டிப் பறித்து விட்டு, அதே எம்ஜிஆரை கட்சியை விட்டு நீங்கியவர் நீங்கள். திமுக என்பது எத்தனை தியாகங்களால் உருவானது ? அறிஞர் அண்ணா எழுதிய ஆரிய மாயை நூலுக்குத் தடை, திமுக கூட்டங்களுக்கு 144 தடை உத்தரவு, மீறி நடந்த குன்றத்தூர் கூட்டத்தில் துப்பாக்கிச் சூடு, என்று தொடங்கிய காலம் முதலாகவே எத்தனை தடைகள் ? அடக்குமுறைகள் ? ஆனால், இந்த அடக்குமுறைகள் அத்தனைனையும் மீறி, திமுக வளர்ந்ததற்காக காரணம், காலத்தின் தேவை. திராவிட முன்னேற்றக் கழகம் போன்ற ஒரு கட்சியின் அவசியத்தை அன்று மக்கள் உணர்ந்திருந்தார்கள். ஆனால், அதே திராவிட முன்னேற்றக் கழகம் இன்று, இன்றோ நாளையோ அவிழும் நெல்லிக்காய் மூட்டை போன்ற நிலைக்கு ஆளாக்கியது நீங்கள் தான்.
நீங்கள் கட்சியின் தலைவராக பொறுப்பேற்ற நாளிலிருந்தே, நீங்கள் சம்பந்தப் படாத அத்தனை விவகாரங்களையும் கல்லறைக்கு அனுப்பினீர்கள். அண்ணாவால் தொடங்கப் பட்ட திராவிட நாடு இதழ் எங்கே ? கழக செய்திகளைத் தாங்கி வந்த மாலை மணி இதழ் எங்கே ? அந்த இதழ்கள் அத்தனையையும் ஓரங்கட்டி விட்டு, நீங்கள் தொடங்கியது என்ற ஒரே காரணத்துக்காக முரசொலியை கட்சியின் அதிகார பூர்வ ஏடாக ஆக்கியது உங்கள் அகந்தையும் சுயநலமும் அல்லாமல் வேறு என்ன ? அந்த முரசொலியை திமுகவுக்கு வழங்கியதற்காக நீங்கள் செய்த தந்திரம் என்ன ? போதுமான நிதி இல்லாததால் இனி முரசொலியை நடத்த முடியாது என்று அறிவிப்பு வெளியிட்டு, ஒரு வாரத்திற்கு அந்த ஏட்டை நிறுத்தி, கோடானு கோடி தொண்டர்கள் ‘தலைவா, இதழைத் தொடங்கு தலைவா’ என்று கடிதமும் தந்தியும் அனுப்பியதும், அவர்களிடமிருந்து நிதியைப் பெற்று, நீங்கள் தொடங்கிய இதழ் என்பதால், திமுகவுக்கு அந்த இதழை விற்க, 2 கோடியை திமுகவிடமிருந்தே பெற்ற அற்ப மனிதர் தானே நீங்கள் ?
இப்படி ஆரம்பம் முதலாகவே, சுயநலம், சுயநலம் என்று சுயநலத்தின் மொத்த உருவமாகத்தானே இருந்தீர்கள். ? இன்று இப்படி ஒரு மோசமான சூழலில் சிக்கி, அவமானப்பட நேர்ந்ததற்கு வேறு யாரும் காரணம் அல்ல கருணாநிதி அவர்களே.. நீங்களே தான். பதவியையும் அதிகாரத்தையும் உங்கள் மகனுக்காக கூட விட்டுத் தரத் தயாராக இல்லை நீங்கள். அந்த அகந்தையே உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டிருக்கிறது. எண்பத்து ஏழு வயது வரை ஓயாமல் உழைப்பதும், படிப்பதும், எழுதுவதும், நல்ல விஷயம் என்றாலும் கூட, உழைப்பதற்கு வேறு நபர்கள் இருக்கும் போது, அதுவும் உங்கள் சொந்த வாரிசாக இருக்கும் போது, அவருக்குக் கூட விட்டுத் தராமல், தொடர்ந்து தள்ளுவண்டியிலும் அதிகாரத்தை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டிருப்பது உங்களின் பிடிவாதம் மற்றும் அதிகார வெறி காரணமாகவே… இது போல தள்ளுவண்டியில் அமர்ந்து கொண்டு, காங்கிரஸ் கட்சியோடு, பேச்சு வார்த்தை நடத்தினால் உங்களுக்கு என்ன மரியாதை கிடைக்கும் என்று நினைக்கிறீர்கள் ?
அரசியலில் இருந்து ஓய்வு பெற்று இலக்கியப் பணி ஆற்றப் போகிறேன் என்று எத்தனை கூட்டங்களில் பேசியிருக்கிறீர்கள் ? வசதியாக அதை மறந்து விட்டு, ஆறாவது முறையாக முதல்வராகப் போகிறேன் என்று கூசாமல் பேசினால், ஊர் சிரிக்காது ?
திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வந்து அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் தொடங்கப் பட்ட திமுகவை, உங்களின் மூட நம்பிக்கைகளினாலும், திருட்டுத் தனத்தாலும், சாய்பாபா மறைவுக்கு இரங்கல் தீர்மானம் போடுவது வரை கேவலப்படுத்தி விட்டீர்கள். திமுக வரலாற்றில் என்றாவது ஒரு சாமியாருக்கு இரங்கல் தீர்மானம் போடப்பட்டது உண்டா ? வாயைத் திறந்தால், அறிஞர் அண்ணாவின் வழியில், பெரியாரின் நிழலில் என்று ஜிகர்தண்டா கதைகளாக விடுகிறீர்களே… அண்ணாவும் பெரியாரும், இப்படியா தீர்மானம் போட உங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள் ?
உங்கள் துறையைச் நேர்ந்த அமைச்சர் தீமிதித்தார் என்பதற்காக, தீமிதிப்பது காட்டுமிராண்டிச் செயல் என்று சொல்லி, அந்தியூர் செல்வராஜ் என்ற அமைச்சரை ஓரங்கட்டவில்லை ? உங்கள் மனைவி காற்றிலிருந்து மோதிரம் எடுக்கும் போலிச் சாமியார் சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், உங்கள் அருமைப் பிள்ளை சாய்பாபாவின் காலில் விழுந்த போதும், பிறந்த நாளுக்கு ஆசி வாங்க புட்டபர்த்தி சென்ற போதும் அது காட்டுமிராண்டித்தனமாக செயலாக உங்களுக்குப் படவில்லையா ? ஊர் ஊராக நாத்திகம் பிரச்சாரம் செய்த, பெரியாரும், அண்ணாவும் உங்களுக்கு இதையா கற்றுக் கொடுத்தார்கள் ?
மிகப் பெரிய தானைத் தலைவராக, டெல்லியை அசைத்த உங்களை நம்பாமல், உங்கள் மகளே தனக்கும், ராசாவுக்கும் மந்திரிப் பதவி வேண்டும் என்று ஒரு தரகரோடு உரையாடிய விபரங்கள் வெளியாகி ஒரு வருடம் ஆகிறதே…. ?
ஒரு கைதேர்ந்த அரசியல்வாதியாக இருந்திருந்தால், அப்போதே அல்லவா கனிமொழியை கட்சியை விட்டு விலக்கி வைத்திருக்க வேண்டும் ? அப்போது விலக்கி வைத்திருந்தால், இன்று இத்தனை சிக்கல்கள் சமாளிக்க முடியாதது போல் உருவாகியிருக்காதே ? இரண்டு பெண்மணிகள் பேசுவதில் என்ன தவறு என்றல்லவா சப்பைக் கட்டு கட்டினீர்கள் ? பேராசைக்கு ஓர் அளவில்லையா கருணாநிதி அவர்களே ? ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடங்குவதற்கு முன்பாக, உங்கள் குடும்பத்திடம் பணம் இல்லையா ? சொத்து இல்லையா ? என்று நீங்கள் பொதுப்பணித்துறை அமைச்சராக ஆனீர்களோ, அன்று முதல், நீங்கள் ஊழல் புரிந்து வந்துள்ளீர்கள் என்பதை நீதிபதி சர்க்கரியாவின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. பணம் பண்ணுவதையே முழு நேரத் தொழிலாகவும், ஆட்சி புரிவதையும் கட்சி நடத்துவதையும் அதற்காக வழியாகவும் கடைபிடித்தவர் நீங்கள். அத்தனை பணம் வைத்திருந்தும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும் எதற்காக இத்தனை பேராசை கருணாநிதி ? எத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தவர் நீங்கள் ? எத்தனை விசாரணைகளை சந்தித்திருப்பீர்கள் ? ராசா தொலைத் தொடர்புத் துறை அமைச்சரான முதல் நாளே ஆயிரம் கோடியை உங்களிடம் வந்து கொடுத்த போது, நீங்கள் உஷாராயிருக்க வேண்டாமா ? இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளாக பணம் வந்து கொட்டினால், இதில் பின்னாளில் சிக்கல் வரும் என்பதை உணர்ந்திருக்க வேண்டாமா ? பேராசைப் பிடித்த உலகில், மிகப் பெரிய ஆதாயத்தை அடையாமல் ஆயிரக்கணக்கான கோடிகளை எவனும் தர மாட்டான் என்பது உங்களுக்கு புரிந்திருக்க வேண்டாமா ? மற்ற ஊழல்களைப் புரிந்து விட்டு, ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் மட்டும், ஊழல் செய்யாமல் இருந்திருந்தால் இன்று உங்களை யாருமே அசைத்திருக்க முடியாதே ? தமிழ்நாட்டில் ஊழல் புரிந்திருந்தால், பதவி போகும் வரை உங்கள் ஆட்சி என்பதால், தடயத்தையாவது அழித்திருக்க முடியும். வட இந்தியாவில், டெல்லியில், உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு இடத்தில் இப்படி ஒரு இமாலய ஊழலைச் செய்து விட்டு தப்பித்துக் கொள்ளலாம் என்று எப்படி நம்பினீர்கள் ?
நீங்கள் வளர்த்து ஆளாக்கிய உங்கள் அருமைப் பேரப்பிள்ளைகள் உங்களுக்கு எதிராக திரும்பிய போது, அவசர அவசரமாக கலைஞர் டிவியை தொடங்க வேண்டும் என்று விரும்பினீர்கள். விருப்பம் சரி. அவ்வாறு தொடங்கப் பட்ட டிவிக்கு இயக்குநராக, கட்சியில் எந்த நாயையாவது போட்டிருக்கலாமே ? உங்களை மீறி யாராவது செயல்பட முடியுமா ? அதையும் மீறி செயல்பட்டால் விட்டு விடுவீர்களா ? அதிகபட்சம் அந்த நபர் 10 ரூபாயை கையாடுவான். அவ்வளவு தானே ? உலகத்தில் யாராவது பெண்டாட்டியையும், பெண்ணையும் இயக்குநராக போட்டு, லஞ்சப் பணத்தில் டிவியை தொடங்குவார்களா ? உங்கள் கீழ் செயல்படும் துறையான லஞ்ச ஒழிப்புத் துறையில் போடப்படும் வழக்குகளில், மனைவி பெயரில் சொத்துக்கள் இருந்தால், குற்றவாளிக்கு உடந்தை என்ற, மனைவியையும் குற்றவாளியாக சேர்ப்பார்கள் என்பது கூடவா உங்களுக்கு மறந்து விட்டது ?
அப்படி இருக்கும் போது, யாராவது ஒரு குப்பனையோ, சுப்பனையோ, கலைஞர் டிவியில் இயக்குநராகப் போட்டிருக்கலாமே ? அதாவது பத்து பைசா கூட வேறு யாருக்கும் போகக் கூடாது. அந்த பத்து பைசாவையும் குடும்பம் தான் தின்ன வேண்டும். ஏன் கருணாநிதி உங்களுக்கு இப்படி ஒரு பேராசை ?
கடன் வாங்கினார்கள், திருப்பிக் கொடுத்து விட்டார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது என்று நாட்டு மக்களிடம் கேள்வி எழுப்பினீர்களே…. ராசா கைது செய்யப் பட்டதும் திருப்பிக் கொடுக்கப் பட்டால், இப்போது ஏன் திருப்பிக் கொடுத்தீர்கள் என்று சிபிஐ கேட்காது என்று எதை வைத்து முடிவு செய்தீர்கள் ? கலைஞர் டிவியின் நிகர லாபமே, 1.34 கோடியாக இருக்கும் போது, 200 கோடி ரூபாய் எங்கிருந்து வந்தது என்று சிபிஐ கேட்காதா ? சிபிஐ அதிகாரிகள் அவ்வளவு முட்டாள்களா ?
ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியதும், இந்த இமாலய ஊழலை மறைக்க நீங்கள் எடுத்த முயற்சி மிக மிக கேவலமானது கருணாநிதி அவர்களே… ராசா தலித் என்பதால் வட இந்திய ஊடகங்களும், பார்ப்பன சக்திகளும் ராசாவை குற்றம் சொல்லுகின்றன என்பது எத்தனை அபத்தமான வாதம் ? அபத்தமானது மட்டுமல்ல, விஷமத்தனமானதும் கூட. இந்த ஊழலில் சாதி இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா ? தலித்தாகிய ராசா வாங்கித் தந்த பணத்தை, இசை வேளாளராகிய தயாளு அம்மாள், நாடார்களாகிய ராசாத்தி கனிமொழி, ரெட்டியாராகிய நக்கீரன் காமராஜ், இஸ்லாமியராகிய ஜாபர் சேட், தேவராகிய டி.ஆர்.பாலு, நாயுடுவாகிய ஆற்காடு வீராச்சாமி, கிறித்துவரான ஜெகத் கஸ்பர், என சாதி மதப்பாகுபாடு இல்லாமல் தானே அனைவரும் பங்கு போட்டுக் கொண்டீர்கள் ? இதில் சாதி எங்கிருந்து வந்தது ? மேலும், உங்களின் பசப்பு வார்த்தைகளை நம்புவதை மக்கள் எப்போதோ நிறுத்தி விட்டார்கள் என்பது உங்களுக்கு ஏன் புரியவில்லை ? நீங்கள் கோலோச்சும் அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் டிவி அலுவலகத்தில் சிபிஐ சோதனை நடத்திய போதே நீங்கள் பதவி விலகியிருக்க வேண்டும் கருணாநிதி. இதை விட உங்களுக்கு பெரிய அவமானம் என்ன வேண்டும் ? உங்கள் மகளையும், மனைவியையும், சிபிஐ உங்கள் மூக்குக்கு கீழே கேள்வி கேட்டுச் செல்கிறார்கள் இதற்குப் பிறகும் வெட்கமில்லாமல், கலைஞர் டிவியில் தவறே நடக்கவில்லை என்று சொல்லுவதன் மூலம், தப்பித்து விடலாம் என்று எப்படி தப்புக் கணக்கு போட்டீர்கள் ? கனிமொழி பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றதும், உடனடியாக திமுவின் உயர்நிலை செயல்திட்டக் குழுக் கூட்டத்தை கூட்டினீர்களே… கனிமொழி உங்கள் மகள் என்பதை விட, திமுகவில் அப்படி என்ன பெரிய அந்தஸ்து பெற்றிருக்கிறார் ? உங்கள் மகள் ஊரான் பணத்தை திருடினால், கேள்வி கேட்க மாட்டார்களா ? விசாரிக்க மாட்டார்களா ? உங்கள் மகளை குற்றம் சாட்டி விட்டார்கள் என்பதற்கும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழுவுக்கும் என்ன சம்பந்தம் ? உங்கள் பெண்டாட்டி, பிள்ளை, மகளுக்காகத் தான் திமுக இருக்கிறதா ? அந்தக் கூட்டத்தில் இயற்றிய தீர்மானத்திலும், ஏதாவது உப்பு சப்பு இருந்ததா ? யாரையாவது கண்டித்தீர்களா ? ‘சரத்குமார் மற்றும் கனிமொழியின் பெயர் குற்றப் பத்திரிக்கையில் இடம் பெற்றிருப்பது, ஆச்சயர்யத்தை அளிக்கிறது’ என்றால் என்ன ஆச்சர்யம் இதில் உங்களுக்கு ? காலில் விழுந்து கெஞ்சிக் கதறியும், மாட்டி விட்டு விட்டார்களே என்றா ? திமுகவின் தீர்மானங்கள் எப்படி இருக்கும் தெரியுமா ? மறந்திருப்பீர்கள். நினைவு படுத்துகிறேன்.
1957ம் ஆண்டு, நேருவுக்கு கருப்புக் கொடி காட்ட வேண்டும் என்று இயற்றப் பட்ட தீர்மானம்.
“பாராளும் பண்டிதரின் ஆணவம் - எதற்கும் எவரையும் நான்சென்ஸ் என்றும், அறிவும் அனுபவமும் மிக்க தலைவர்களைப் பித்தர்கள் என்றும், மூதறிஞர்களை ஆற்றல் மிக்கோரை முட்டாள்கள் என்றும், இன எழுச்சி ஊட்டுவோரை கட்டு மிராண்டிகள் என்றும், தென்னக மக்களுக்கு பெருந்தொண்டாற்றிடும் பெரியார் ஈவெராவை மூட்டை முடிச்சுடன் நாட்டை விட்டு ஓடச் சொல்லும்படியும் பேசும் பண்டித நேரு – பஞ்சம் பேக்கினாரா ? பட்டினி துடைத்தாரா ? விலை ஏற்றம் போக்கினாரா ? செல்வம் வளரச் செய்தாரா ? எதைச் சாதித்துத் தந்தார் இந்நாட்டு மக்களுக்கு ?
எடுத்தேன் கவிழ்த்தேன் என்று பேசி எல்லாத் தலைவர்களையும் ஏசித் தமிழரின் மனம் புண்படச் செய்யும் பண்டித நேரு பவனி வருகிறார்.
பம்பாய் போல் பயங்கரம் வேண்டாம். குஜராத் போல் கலகம் வேண்டாம். கண்ணியமான முறையில் கறுப்புக் கொடி காட்டி கண்டனம் தெரிவிக்க வேண்டாமா நாம் ? தமிழர்களே… ! உங்கள் நாடு சீரியது. உமது வரலாறு புகழ்மிக்கது. உமது தலைவர்கள் ஆற்றல் மிக்கோர். எனினும் ஏசுகிறார் நேறு !
ஆந்திரர் தமது உரிமையைப் பெற ரயிலை கவிழ்த்தனர். தபாலுக்குத் தீயிட்டனர்.
ஆமதாபாத்தில் கதர்சசட்டையை காந்தி குல்லாயைத் தீயிட்டனர். அந்த விதமான அநாகரிகம் வேண்டாம். அகில உலகில் அனுமதிக்கப் பட்டிருக்கும் நாகரிக முறையான கறுப்புக் கொடி காட்டுவது என்பதைச் செய்யவுமா வகையற்றுப் போனீர்கள் என்று இந்த வையகம் கேட்கும்.
தையலர் சிரிப்பர். பின் சந்ததியும் ஏசும். எனவே எல்லோரும் வாருங்கள். ஏசிப்பேசும் நேரு பண்டிதருக்கு காட்டுவோம் கருப்புக் கொடி.”
எப்படி இருக்கிறது தீர்மானம் ? அனல் பறக்கவில்லை ?
கனிமொழி குற்றப் பத்திரிக்கை நகலை வாங்க டெல்லி செல்கிறார் என்றதும், உங்கள் கட்சி எம்பிக்கள் அத்தனை பேரையும் டெல்லிக்கு அனுப்பினீர்கள். உங்கள் உள்துறைச் செயலாளரை அனுப்பினீர்கள். அனைவரையும், மகளோடு ஆதரவாக இருக்கச் செய்தீர்கள். உங்களால் தகத்தகாய கதிரவன் என்று அழைக்கப் பட்ட ராசாவை சிபிஐ விசாரணைக்கு அனுப்பிய போது, ஏன் உங்கள் கட்சி எம்பிக்களை அனுப்பவில்லை ? தலித் இனத்தின் தன்னிகரில்லாத தலைவனல்லவா ராசா ? பொட்டல் காட்டில் பூத்துக் குலுங்கிய பூச்செடி இல்லையா ராசா ? இதையெல்லாம் விட நீங்கள் செய்த மிகப் பெரிய அயோக்கியத்தனம், உங்கள் மகளுக்காக ராம் ஜெத்மலானி செய்த வாதம். கைது செய்யப் பட்டதனாலேயே ஒருவர் குற்றம் நிரூபிக்கப் பட்டதாக ஆகாது என்று பேசி விட்டு, எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஜெத்மலானியை தவறு செய்தவர் ராசாதான், கனிமொழிக்கு பொறுப்பில்லை என்று பேச வைத்தீர்கள் ? இதை விட ஒரு மனிதனின் முதுகில் குத்த முடியுமா ? ராசா யாருக்காக கொள்ளையடித்தார் கருணாநிதி ? உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்காகவும் தானே ? ஆயிரக்கணக்கான கோடிகளை உங்களுக்காக ராசா கொள்ளையடித்துக் கொண்டு வந்து கொடுத்த போது ராசா இனித்தாரா ? ராசா அப்ரூவராக மாறினால், தள்ளு வண்டியோடு நீங்களும் திஹார் செல்ல வேண்டியிருக்கும் என்பது உங்களுக்கு ஏன் உறைக்கவில்லை ? இனி உங்கள் வாயில் இருந்து வரும் ஒரு வார்தையைக் கூட யாரும் நம்பப் போவதில்லை கருணாநிதி. இனியாவது எழுதுவதையும் பேசுவதையும் நிறுத்துங்கள். உங்கள் பொய்யுரைகளும், புனை சுருட்டும் இனியும் நம்பப் படாது. உங்களுக்கு மான உணர்ச்சியெல்லாம் இல்லை என்பது நன்கு தெரியும். “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் பெரியார். உங்களை நீங்கள் மனிதனாக கருதினால், உடனடியாக பதவி விலகுங்கள். உங்களுக்குப் பிறகு திமுகவில் தலைவர் பொறுப்புக்கு வருவதற்கு ஒருவருக்குக் கூட தகுதி இருப்பதாக சவுக்கு கருதவில்லை. தகுதி இல்லை என்று சொல்வது, திறமை இல்லை என்பதற்காக அல்ல ? நீங்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்து, உங்கள் மகளுக்கு பாதுகாவலனாக டெல்லி சென்று காத்துக் கிடப்பவர்களை தலைவர்களாக ஏற்றுக் கொள்ள முடியாது. திறமையான திருச்சி சிவா உட்பட. அதனால், உங்கள் குடும்பத்திலிருந்து ஒருவரை தேர்ந்தெடுக்கலாம். இப்போதைக்கு உங்கள் ஊழல் கறை படியாமல் இருப்பது, கனிமொழியின் மகன் ஆதித்யா தான். அதனால் ஆதித்யாவிடம் தலைமை பொறுப்பை ஒப்படைப்பதை பற்றி சிந்தியுங்கள். அய்யன் வள்ளுவர் என்ன சொல்லுகிறார் என்று நினைவிருக்கிறதா ? நாணால் உயிரைத் துறப்பர் உயிர்ப்பொருட்டால் நாண்துறவார் நாணாள் பவர்.
நாண உணர்வுடையவர்கள், மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள உயிரையும் விடுவார்கள். உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மானத்தை விடமாட்டார்கள்.
நீங்கள் எப்போதா இறந்து விட்டீர்கள் கருணாநிதி. இனி இறப்பதற்கு வேலையில்லை. http://www.savukku.net/home/790-2011-05-09-02-11-28.html
|