| ||||
நாரதக் கோமாளியின் 5,600வது நாடகத்தில் கடந்த வாரம் கலந்துகொண்ட தி.மு.க தலைவர் மு.கருணாநிதி, எஸ்.வி.சேகரும் எம்.ஆர்.ராதாவும் ஒரே வரிசையில் வருபவர்கள் என்ற அர்த்தத்தில் கருத்து கூறியிருக்கிறார். "நாடகங்களில் கருத்துக்களை மருந்து கேப்சூல் போல் வழங்குவதில் எம்.ஆர்.ராதாவுக்கு அடுத்து திறமை பெற்றவர் எஸ்.வி.சேகர்" என்று பேசியிருக்கிறார் கருணாநிதி. முதலில் எஸ்.வி.சேகரின் நாடகங்களில் வருவதைக் கருத்துக்கள் என்று கண்டுபிடித்திருப்பது திராவிட இயக்கம் எவ்வளவு பரிதாபத்திற்குரிய அதள பாதாளத்தில் சரிந்திருக்கிறது என்பதைக் காட்டுகிறது. பிராமண எதிர்ப்பையும் பெரியாரின் கொள்கைகளையும் பகுத்தறிவையும் சாகும்வரை தனது மூச்சாகக் கொண்டிருந்த எம்.ஆர்.ராதாவை, பிராமண தயிர்சாதமாகத் திகழும் நாடகங்களை எடுத்து வரும் எஸ்.வி.சேகருடன் அவர் பட்டியலிட்டிருக்கிறார். சட்டநாதபுரம் வெங்கட்ராமன் சேகர் நாடகத் துறையில் செய்த சாதனைகள் என்ன? மொத்தம் இவர் எழுதியது 24 நாடகங்கள். அதையே மீண்டும் மீண்டும் 5,600 முறை அரங்கேற்றி அனைவருக்கும் அல்வா கொடுத்து வருகிறார். அவரின் நகைச்சுவை என்பது ஒரு மட்டத்தில் கிச்சுகிச்சு மூட்டுவதாகவும் இன்னொரு மட்டத்தில் இரட்டை அர்த்த வசனங்கள் கொண்ட ஆபாசமாகவும் மட்டுமே இருந்திருக்கிறது. நாரதர் என்ற பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவரான சேகர் திராவிட அரசியலில் பிராமணிய எதிர்ப்பு யுகம் முடிந்துவிட்டதன் சின்னமாகத் திகழ்கிறார். தனது வீட்டு விசேஷங்களுக்கான பத்திரிகையில் காஞ்சி சங்கராச்சாரியாரின் படத்தை அச்சிடும் நபரைத்தான் பகுத்தறிவின், கடவுள் மறுப்பின் ஒரே காவலர்களாகத் தங்களைக் காட்டிக்கொள்ளும் தி.மு.க.வின் முதல்வரும் துணை முதல்வரும் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள். திராவிட இயக்கப் போர்வாள் என்று அழைக்கப்படும் ஒரே தகுதி கொண்ட எம்.ஆர்.ராதாவை எஸ்.வி.சேகருடன் பட்டியலிடுவது என்பது உவர்க்களிக்கக்கூடிய சிந்தனை. தமிழ் நாடகம் புராணக் கதைகளிலிருந்து சமூகக் கருத்துகளுக்கு மாறத் தொடங்கிய பாய்ஸ் கம்பெனி யுகத்தில் தனது கலை-அரசியல் பயணத்தைத் தொடங்கிய மதராஸ் ராஜகோபால் நாயுடுவின் மகனான ராதாகிருஷ்ணன் உண்மையில் எந்த ஒப்பீடும் வைக்க முடியாத அளவுக்கு மிகுந்த தனித்துவமிக்கவர். கடந்த நூற்றாண்டின் கவனிக்கத்தக்க ஆளுமைகளுள் அவரும் ஒருவர். எம்.ஆர்.ராதாவின் வாழ்வையும் கலை-அரசியல் பங்களிப்பையும் பார்க்கும்போது மயிர்க்கூச்செரிகிறது. சே குவேரா போர்ப் படைகள் மூலம் செய்ய நினைத்ததை அவர் தனது நாடகங்கள், சமூகக் கருத்துக்கள் மூலம் செய்ய நினைத்தார். கலகக்காரர், கொள்கைப் பற்றுள்ளவர், தனது சமூக நோக்கிலிருந்து இம்மியும் பிசகாதவர், தான் உண்மையென நம்பியதன் வழியில் செல்வதற்கு எவ்வளவு பெரிய எதிர்ப்பு வந்தாலும் சளைக்காதவர் என்று அழைக்கக்கூடிய ராதாவே பெரியாரின் முதலும் முடிவுமான கொள்கை விசுவாசியாகத் திகழ்ந்தார். குரலின் ஏற்ற இறக்கம், குறும்பு, சமய சந்தர்ப்பத்திற்கேற்ப அடிக்கும் நறுக்குத்தெரித்தாற்போன்ற கருத்துக்கள் போன்ற அவரின் கலைத் திறன்கள் எந்த மலிவான நோக்கத்திற்காகவும் பயன்பட்டதில்லை. தனது லீலைகளை அம்பலப்படுத்தியவரை ஆள் வைத்துக் கொன்ற ஜெயந்திரர் மீதான விசுவாசத்தின் காரணமாகக் கட்சி மாறியவர் எஸ்.வி.சேகர். அதற்கு மாறாக, பகுத்தறிவையும் கடவுள் மறுப்பையும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் முன்னேற்றத்தையும் தனது வாழ்க்கையாகக் கொண்ட பெரியாரின் கொள்கைகள் மீதான விசுவாசத்திற்காக எமர்ஜென்சி சிறைவாசத்தை அனுபவித்தவர் ராதா. ஆனால் பிராமணியத்திற்கு எதிராகப் போரிட்ட ஒரு இயக்கத்தின் வழித்தோன்றல்கள் பிராமணியத்தின் தொடர்ச்சியான எஸ்.வி.சேகரைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு, பெரியாரியத்தின் பிதாமகரைத் தாழ்த்தியிருக்கிறார்கள். ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’ என்ற ஒரு நாடகத்தின் நடிப்பிற்கு எஸ்.வி.சேகரின் ஒட்டுமொத்த நாடகங்களின் தொகுப்பும் ஈடாகாது. ‘தூக்கு மேடை’, ‘லட்சுமிகாந்தன் கொலை வழக்கு’ போன்ற பிரபலமான நாடகங்கள் போக ராமாயணத்தைக் கிண்டலடித்து ராதா எடுத்த நாடகங்களும் முக்கியமானவை. என்.எஸ்.கிருஷ்ணன்கூட தனக்குப் பாதிப்பு இல்லாத மென்மையான பிரச்சினைகளில்தான் தனது சமூகக் கருத்துக்களை வெளியிட்டார். ஆனால் ராதா எந்தவித அச்சமும் இன்றி கடுமையான சமூக-அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்துவதில் திளைத்தார். அவரது நாடகங்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் எண்ணிலடங்காதவை. அதனால் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் தனது நாடகக் குழுவை ஒரு போர்ப் படையைப் போலத்தான் ராதா வைத்திருந்தார். நடிகர்களுக்குப் பொன்னாடை போர்த்துவது பற்றிய ஒரு கேள்விக்கு, "பொன்னாடைகள் பிணத்திற்குத்தான்" என்று கூறிய அவர், இன்றைய கட் அவுட் அரசியலையும் தனி நபர் துதி பாடலையும் பற்றி என்ன நினைத்திருப்பார் என்று அறிந்துகொள்ள ஆவலாக இருக்கிறது. ஏனெனில் பெரியாரிடம் காணப்பட்ட அதே போர்க்குணம் ராதாவிடமும் இருந்தது. திராவிட இயக்கத்தின் பிற கலைஞர்கள் தங்களுக்குக் கிடைத்த சிறிய வாய்ப்பில் தங்கள் திராவிட சிந்தாந்தங்களைக் காற்றில் பறக்க விட்டார்கள். சினிமாவிற்குத் தாவினார்கள். ஆனால் ராதா எவ்வளவு எதிர்ப்பு வந்தபோதும் திராவிட இயக்க சிந்தனைகளில் சமரசம் செய்துகொள்ளவில்லை. தனது சினிமா வாழ்வை 'ரிட்டயர்மெண்ட்' என அழைத்தவர் ராதா. தனது சமூக-அரசியல் கருத்துக்களை முன்கொண்டு செல்ல நாடகமே சிறந்த ஊடகம் என்று கருதியதால் நிறைய சினிமா வாய்ப்புகள் வந்தபோதும் அவர் நாடகத்திலேயே தொடர்ந்தார். சினிமாவில் வில்லனாக நடித்த போதுகூட தனது சமூக, அரசியல் கருத்துக்களைக் கிடைத்த வாய்ப்பில் புகுத்த அவர் தவறவில்லை. எஸ்.வி.சேகரின் நண்பனாகக் காட்டிக்கொள்வதன் மூலம் தங்கள் மீதான பிராமண எதிர்ப்பு பிம்பம் அகலும் என தி.மு.க. தலைவர் கணக்குப் போடுகிறாரா என தெரியவில்லை. இதன் மூலம் சென்னையில் ஒரு சில தொகுதிகளில் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் பிராமண ஓட்டுகள் கிடைத்தால் தமிழகத் தலைநகரில் தி.மு.க.வுக்கு ஏற்பட்டு வரும் சரிவு தடுக்கப்படும் என அவர்கள் நினைக்கிறார்களா? ஆனால் தமிழகத்தில் வெறும் 2 சதவீதம் இருக்கும் ஒரு சமூகத்தைத் திருப்திப்படுத்துவதற்காக திராவிட இயக்கத்தின் ஆதாரமாக இருந்த ராதா போன்றவர்களை அவமானப்படுத்துவது தி.மு.க. தனது அடித்தளத்தை தானே அசைப்பதற்கு சமமானது. சித்தாந்தத்தை தொலைக்கும் அரசியல் கட்சிகள் திடீர் சரிவுகளுக்குத் தங்களை எளிய இலக்காக்கிக்கொள்கின்றன. maya.flowerpower@gmail.com |
Wednesday, May 11, 2011
எம்.ஆர்.ராதாவும் எஸ்.வி.சேகரும் ஒன்றா : மு.கருணாநிதியின் ஒப்பீடு எழுப்பும் கேள்விகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment