Sunday, May 8, 2011

M.G.R - 23 நினைவு நாள்




கடந்த 1917 இலங்கையில் கண்டி அருகே உள்ள நாவலப்பிட்டியில் பிறந்த எம்.ஜி.ஆர்., கடந்த 1987 டிச., 24ல் மறைந்தார். அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்பச் சூழ்நிலை காரணமாக நாடகங்களில் நடித்தார். பின்னர் அதில் அனுபவம் பெற்ற அவர், திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பெற்றார். 1977ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று தமிழக முதல்வரானார். அதன்பின்னர், 1984ல் நோய்வாய்ப் பட்டிருந்த போதிலும், தேர்தலில் போட் டியிட்டு மீண்டும் வெற்றி பெற்றார். தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியிலிருந்த எம்.ஜி.ஆர்., 1987ல் மறைந்தார். இவரது மறைவுக்குப் பின்னர் பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்கப் பட்டார். இவருக்கு புரட்சி நடிகர் என்று முதல்வர் கருணாநிதியும், பொன்மனச் செம்மல் என்று கிருபானந்த வாரியாரும், கொடுத்துச் சிவந்த கரம் என்று கும்பகோணம் ரசிகர்களும், வாத்தியார் என்று திருநெல்வேலி ரசிகர்களும் பட்டங்களை வழங்கி மகிழ்ந்தனர்.

M.G.R ஒரு பத்திரிக்கையாளரின் பார்வையில்

துணிச்சலுக்கு மறுபெயர் எம்.ஜி.ஆர்

மதுரை தமுக்கம் மைதானத்தில் அ.தி.மு.க., மாநாடு மற்றும் கட்சிக்கு நிதி சேர்த்தல் நிகழ்ச்சி 1974ல் நடந்தது. அப்போது, மத்திய அரசு சுற்றுலா மாளிகையில் (தற்போதைய சங்கம் ஓட்டல்) தங்கியிருந்தார் எம்.ஜி.ஆர்.,
"எம்.ஜி.ஆரை சந்திக்கலாமா?` என்று, வெளியே இருந்த எம்.ஜி.ஆரின் உதவியாளர் சபாபதியிடம் கேட்டதற்கு, "அதனாலென்ன, தலைவர் ப்ரீயாக தான் உள்ளார். போய் பேசுங்கள்!` என்றார்.
தொப்பி, கண்ணாடி இல்லாமல், முண்டா பனியன் மற்றும் கைலியுடன், தோளில் ஒரு வெள்ளை டர்க்கி டவல் அணிந்து, இரு தலையணை களை மடியில் வைத்தவாறு வெகு கேஷுவலாக அந்த அறையில் அமர்ந்திருந்தார் எம்.ஜி.ஆர்., உள்ளே சென்றவுடன், "வணக்கம்` சொல்லி, அவர் எதிரில் அமர்ந்தேன். கட்சி ஆரம்பித்த நேரத்திலிருந்து அவரிடம் தனியாக சிறப்பு பேட்டி வேண்டும் என அடிக்கடி கேட்டு வந்தேன். "பிறகு பார்க்கலாம்!` என்று தட்டிக் கழித்துக் கொண்டே வந்தார். அப்போது நல்ல மூடில் இருந்த எம்.ஜி.ஆரிடம், "உங்களிடம் சில கேள்விகள் நான் கேட்கலாமா?` என்றேன்; அவரும், உடனே, "கேளுங்கள்...` என்றார். கொண்டு போயிருந்த டேப்-ரிகார்டரை ஆன் செய்து, எம்.ஜி.ஆரிடம் ஒரு கேள்வி கேட்டேன்.
அன்றைய நிலையில், எம்.ஜி.ஆரை, மதுரை முத்து மற்றும், "சோ` ஆகியோர் தரக்குறைவாக தாக்கி பேசுவது பற்றி சிக்கலான ஒரு கேள்வியைக் கேட்டவுடன், அதற்கு பதில் சொல்லாமல், என்னிடம் இருந்த டேப்-ரிகார்டரை வாங்கி தன் மடியில் வைத்துக் கொண்ட எம்.ஜி.ஆர்., அதில் இருந்த ஸ்டாப் பட்டனை அழுத்தி, நிறுத்திய பின், என்னிடம், "ஊம், கேளுங்கள்...` என்றார். நானும் விடாமல், "ஏன் டேப்-ரிகார்டரை ஆப் செய்தீர்கள்?` என்றேன். "பேட்டி முடிந்த பின் கூறுகிறேன்...` என்றார்.
அரைமணி நேரம் பேட்டி; சளைக்காமல் பதிலளித்தார் எம்.ஜி.ஆர்., அதன் பின் டேப் வேண்டாம் என்றதற்கு நீண்டதொரு விளக்கம் கொடுத்தார்:
நாம் இவ்வளவு நேரம் பேட்டியில் எவ்வளவோ விஷயங்கள் பேசினோம். அது முழுவதும் பத்திரிகையில் வரப்போவதில்லை. குறிப்பிட்ட முக்கிய விஷயம் தவிர, தேவையில்லாத சில சர்ச்சைக்குரிய விஷயங்களும் பேசி உள்ளோம். அது, "ஆப் த ரிகார்ட்` ஆகும்-நமக்குள் பேசிக் கொண்டது. அது பத்திரிகையில் வெளிவந்தால், வீணான பிரச்னை ஆகும். ஆகவே, டேப்-ரிகார்டரில் பதிவாகாமல் இருப்பது நல்லது என்பதாலேயே வேண்டாம் என கருதி நிறுத்தினேன் என்றார்.

அரசியலில் தீவிரமாக எம்.ஜி.ஆரை எதிர்த்த மதுரை முத்து, பின்னாளில் தி.மு.க.,வை விட்டு விலகினார். தன் எதிரியாக நினைத்த எம்.ஜி.ஆரை ஆளுயர மாலை, பூச்செண்டுடன் சந்தித்து அ.தி.மு.க.,வில் சேர்ந்தார்.
தன்னை நம்பி வந்த மதுரை முத்துவுக்கு மீண்டும் மேயர் பதவி அளித்து கவுரவித்தார் எம்.ஜி.ஆர்., இப்படி பின் விளைவுகளை எதிர்பார்த்து அதற்கேற்றவாறு தன் நடவடிக்கைகளை வைத்துக் கொண்டதால் தான் யாரும் அவர் மீது குறை கூற முடியாதவாறு ஆயிற்று.

சினிமாவில் வீர, தீர செயல்களுக்கு டூப் போட்டு எடுப்பதை அறிவோம். ஆனால், பொதுமக்கள் முன் தைரியமாக, துணிச்சலுடன் செயல்படுபவர் எம்.ஜி.ஆர்., என்பதை அவரது கட்சி பிரசார சுற்றுப்பயணத்தின் போது பலமுறை நேரில் பார்த்துள்ளேன்.

முதல்வரான பின்பும் நடைபெற்ற ஒரு சம்பவம்... பெரியார் நூற்றாண்டு விழா என்று நினைக்கிறேன். மதுரையில், அரசு சார்பில் ஊர்வலம் நடைபெற்றது. நான்கு மாசி வீதிகளில் முக்கிய இடமான தெற்கு மாசி வீதி, மேல மாசி வீதி சந்திப்பில் அமைந்திருந்த மேடையில் இருந்து, ஊர்வலத்தை பார்வையிட்டுக் கொண்டிருந்தார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் எம்.ஜி.ஆருடன் அப்போதைய கலெக்டர் சிரியாக் மற்றும் உயரதிகாரிகள் இருந்தனர்.

ஊர்வலம் சென்று கொண்டிருக்கும் போது இடையில் கையில் மனுக்களுடன் மேடை அருகே நின்று கொண்டிருந்தனர் சிலர். அருகிலிருந்த காவல் துறையினர், அவர்களை ஒதுக்கப் பார்த்தும் போக மறுத்துவிட்டனர். "சரி, மனுக்களையாவது கொடுங்கள்; முதல்வரிடம் சேர்த்து விடுகிறோம்!` என்று கேட்டுப் பார்த்தும் பயனில்லை.

அவர்கள் தொடர்ந்து, "எம்.ஜி.ஆரிடம் தான் கொடுப்போம்!` என்று பிடிவாதம் செய்து கொண்டிருந்தனர்.

மேடைக்கு கீழே நடந்த இந்த சலசலப்பை கவனித்த எம்.ஜி.ஆர்., என்னவென்று விசாரிக்க, "உங்களிடம் தான் மனு கொடுக்க வேண்டும் என கூறி, போக மறுக்கின்றனர்!` என்று அதிகாரிகள் சொன்னவுடன், சிறிதும் தயங்காமல், "அவ்வளவு தானே! நானே வாங்கிக் கொள்கிறேன்!` என்று சற்றும் எதிர்பாராதவிதமாக, அனைவரும் ஆச்சரியப்படும் வகையில் மேடை தடுப்பு கம்பியை தாண்டி வந்து, அந்த குறுகலான இடத்தில் மேடை விளம்பில் இருந்து குனிந்தவாறு அவர்களிடம் மனுக்களை வாங்கினார் முதல்வர் எம்.ஜி.ஆர்., மேடையில் இருந் தவர்கள் பதறினர், அசம்பாவிதம் ஏதும் நிகழ்ந்து விடக் கூடாதே என்று; ஆனால், எதைப் பற்றியும் சிந்திக்காமல், மனுக்களை வாங்கியவுடன், மீண்டும் மேடைத் தடுப்பை தாண்டி, பழைய இடத்தில் புன்னகையுடன் நின்ற காட்சியைக் கண்டு, அங்கு கூடியிருந் தவர்கள் கரகோஷம் எழுப்பினர். (அந்த படம் தான் மேலே காண்பது) இப்படி அசாத்திய தைரியத்துடன் செயல்பட்ட முதல்வர் எம்.ஜி.ஆர்., தவிர வேறு யாரேனும் இருக்க முடியுமா என்பது சந்தேகமே.

http://www.tamilulakam.com/news/view.php?id=751

No comments:

Post a Comment