Tuesday, December 27, 2011




""புதிய பெட்ரோல் பங்குகளுக்கு அனுமதி வழங்கக் கூடாது, பெட்ரோல் கொள்முதல் லாபத்தை அதிகரிக்க வேண்டும், ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் ஸ்டிரைக்கில் ஈடுபடுவோம்,'' என, தமிழக பெட்ரோல் வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக பெட்ரோலிய வணிகர்கள் சங்கத்தின் தலைவர் கண்ணன், நிருபர்களுக்கு அளித்த பேட்டி:எண்ணெய் நிறுவனங்கள் அனாவசியமாக, ஆடம்பரமாக செலவு செய்கின்றன. இந்த செலவையெல்லாம் நஷ்ட கணக்கில் காட்டுகின்றன.

உண்மையில், கடந்த ஆண்டில் எண்ணெய் நிறுவனங்கள், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் சம்பாதித்துள்ளன. இதை மறைத்து விட்டு, அடிக்கடி பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன.இதனால், பொதுமக்களும், பெட்ரோலிய வணிகர்களும் தான் பாதிக்கப்படுகின்றனர். பெட்ரோலிய பொருட்களுக்கு, 28 சதவீதம் மாநில அரசு வரி விதிக்கிறது. எனவே, எண்ணெய் நிறுவனங்களின் விலை உயர்வால் மாநில அரசுக்கும் கூடுதல் வருவாய் கிடைக்கிறது. இதில், மாநில அரசு குறிப்பிட்ட அளவு, வரியை குறைத்தால், லிட்டருக்கு 1.50 ரூபாய் வரை குறையும். ஆனால், மாநில அரசு வருவாயை கருத்தில் கொண்டு, வரியை குறைப்பதில்லை.

பெட்ரோல் வணிகர்களுக்கு, முதலீட்டில் 2.2 சதவீதம் தான், லாபம் கிடைக்கிறது. இந்த தொகையும் பல்வேறு காரணங்களால், எங்களது நஷ்டத்திற்கு காரணமாகிறது. எனவே, பெட்ரோல், டீசல் கொள்முதலில், 5 சதவீத லாபம் கிடைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். எண்ணெய் நிறுவனங்களிடம் உள்ள சுதந்திரமாக விலை உயர்த்தும் முடிவை வாபஸ் பெற வேண்டும்.இது தவிர, இந்தியா முழுவதும், 12 ஆயிரம் புதிய பங்குகள் துவங்க, மத்திய அரசு அறிவிப்பு செய்துள்ளது. இதனால், ஏற்கனவே நஷ்டத்தில் இருக்கும் பெட்ரோலிய வணிகர்கள், இன்னும் அதிக அளவு நஷ்டத்தை சந்திக்க வேண்டிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, புதிய பங்குகளுக்கு அனுமதி தரக் கூடாது.இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒரு நாள் அடையாள கொள்முதல் ஸ்டிரைக் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கான தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இதே போல், எப்போதெல்லாம் பெட்ரோல் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்போதெல்லாம், ஒரு நாள் ஸ்டிரைக் நடத்துவோம்.இவ்வாறு கண்ணன் கூறினார்.