Monday, May 23, 2011

தேர்தல் முடிவு ஓய்வல்ல... தண்டனை!

நெல்லை கண்ணன்

தேர்தல் தெளிவான முடிவைத் தந்துள்ளது. முதல் பெருமை தேர்தல் ஆணையத்தைச் சேர்ந்தால், அடுத்த பெருமை தமிழக மக்களைச் சேர்ந்தது. ஆமாம், குழப்பமில்லாத தெளிவான முடிவு. ஜனநாயகத்தை மதிக்காமல் ஒரு குடும்பத்தினர் செய்த கொடுமையான தவறுகளுக்குச் சரியான தண்டனையைத் தந்துள்ளனர்.

தொண்டர்களே இல்லாத தலைவர்களால் நிறைந்த தமிழ்நாடு காங்கிரஸ் பெற்றிருக்கும் கேவலமான தண்டனை தமிழினம் அறிவாற்றலில் சிறந்தது, உயர்ந்தது என்பதை நிரூபித்திருக்கிறது.

பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளைச் சிகிச்சைக்குக்கூட அனுமதிக்க மறுத்த கருணாநிதியோடு கூட்டணி வைத்துக் கொண்டதற்காக ஈழத்தமிழ் ஆதரவாளர்களாக இருந்த திருமாவளவனுக்கும் ராமதாஸýக்கும் தண்டனை அளித்திருக்கிறார்கள். தெளிந்த தீர்ப்பு.

மக்கள் தனக்கு ஓய்வளித்திருப்பதாகப் பெரியவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தம் மக்களைக் குறித்துத்தான் இந்தக் கருத்தைச் சொல்லியிருக்க முடியும். ஏனென்றால், தமிழக மக்கள் தந்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. அரச பரம்பரைபோல கருணாநிதியுடைய மொத்தக் குடும்பமும் அவரது கட்சியினரின் குடும்பங்களும் தமிழ்நாட்டில் நடத்திய அத்து மீறல்களுக்குத் தண்டனை.

சகோதரி குஷ்பு தமிழக மக்களுக்குத்தான் தோல்வி என்கிறார். இது நமது தலைவிதி. கருணாநிதிக்கு அடுத்து கருத்துச் சொல்லும் உரிமை திமுகவில் அவருக்குத்தான் இருக்கிறது. திமுகவின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆண்டிமுத்து ராசா திஹார் சிறைச்சாலையில் இருப்பதால், அந்தப் பதவிக்குத் தாற்காலிகமாக நடிகை குஷ்புவை நியமித்திருக்கிறார்களோ என்னவோ. இவர்தான் தேசியத் தொலைக்காட்சிகளில் திமுகவுக்கும் ஊழலுக்கும் சம்பந்தமே இல்லை என்று வக்காலத்து வாங்குகிறார்.

தமிழ்ப் பண்பாடு பற்றியும், தமிழர்களின் தன்மானம் பற்றியும், கற்பு பற்றிப் புதியதொரு வியாக்யானத்தை முன்மொழிந்த "தமிழச்சி' குஷ்பு பேசுவதை யார் ரசிக்கிறார்களோ இல்லையோ, தமிழினத் தலைவர் என்று தன்னைக் கூறிக்கொள்பவர் ரசிக்கிறார். வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது... இந்தியாவில் அல்ல, திமுகவில்...

இம்சை அரசன் இரண்டாம் புலிகேசியோ வாய்திறக்க மறுக்கிறார். அறிவான பலர்கூட இவர்கள் ஏற்படுத்திய குழப்பங்களால் முடிவு குறித்துக் குழம்பிப் போயிருந்தனர். என்னிடம் பலர் கேட்டனர். எப்படி நீங்கள் மட்டும் 200 இடங்களில் வெற்றி கிட்டும் என்று சொன்னீர்கள் என்று.

மீண்டும் மீண்டும் சொல்கிறேன். மக்கள் தமிழக மக்கள். அமைதியாகப் பதற்றம் காட்டாமல், பணம் வாங்கிக் கொள்ளாவிட்டால் சந்தேகப்படுவார்கள் என்று, கொடுத்த பணத்தையும் பல கிராமங்களில் வாங்கிக் கொண்டு, நமது பணத்தைத்தானே நமக்குத் தருகிறார்கள் என்று தெளிந்து, தேர்தல் ஆணையத்தின் நல உதவியோடு (வாக்காளர் அடையாளச் சீட்டோடு) ஜனநாயகக் கடமையைச் சிறப்பாக ஆற்றியுள்ளனர்.

தமது குடும்பத்தினரின் அத்து மீறல்களைஎல்லாம் நியாயப்படுத்த முயன்றார் கருணாநிதி. அதில் ஒழுக்கமாக உழைத்து முன்னேறிய எத்தனை பெரியவர்களைஎல்லாம் அசிங்கப் படுத்த முயன்றார்.

ஏவி.எம். செட்டியார் காரைக்குடியில் படப்பிடிப்புத் தளத்தைத் தொடங்கி பின்னர் சென்னைக்கு வந்து படிப்படியாக முன்னேறி இன்றும் அவரது பிள்ளைகள் அடக்கமாக இத்தனை பெரிய நிறுவனத்தின் உரிமையாளர்கள் என்ற ஆணவம் இல்லாமல் "அடக்கம் அமரருள் உய்க்கும்' என்ற குறளின் இலக்கணமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தனது அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி சூப்பர் ஸ்டார்களையும், சூப்பர் ஸ்டாரினிகளையும் தங்கள் விரலசைப்புக்கு ஆடவைத்த கருணாநிதி குடும்ப வாரிசுகளின் அகம்பாவத்தோடு, உழைப்பே உயர்வுதரும் என்று வாழ்ந்து காட்டும் ஏவி.எம். குடும்பத்தை உதாரணம் காட்டக் கருணாநிதிக்குத்தான் மனம் துணியும்.

தங்கள் உழைப்பால் முன்னேறிய பலரைத் தனது முதல்வர் பதவியை வைத்துக்கொண்டு எல்லை மீறிய தங்கள் பேரப்பிள்ளைகளோடு ஒப்பிட்டு அறிக்கை தந்தாரே. அதைப் பார்த்த தமிழக மக்கள் ஓய்வல்ல, தண்டனை தந்துள்ளார்கள்.

ஒரு தலித் வழக்கறிஞர் ராசாவை திகார் சிறைச்சாலைக்கு அனுப்பிவிட்டு தனது மகள் கனிமொழிக்காக எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நீதிமன்றத்துக்கே அனுப்பிவிட்டு வழக்கறிஞர் பெரியவர் ராம் ஜேட்மலானியைவிட்டு எல்லா ஊழல்களையும் ராசாதான் திட்டமிட்டுச் செய்துள்ளார் என்று நீதிமன்றத்திலேயே சொல்லவைத்து எப்படியேனும் கனிமொழியைக் காப்பாற்ற முயன்ற அசிங்கமான அநியாயத்துக்காகத் தலித்துகள் கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள். இன்னும் ராசா திமுக நாடாளுமன்ற உறுப்பினர்தானே?

ஒரு திமுக நாடாளுமன்ற உறுப்பினரை நீதிமன்றத்திலேயே மகளுக்காகக் காட்டிக் கொடுத்த உங்கள் துரோகத்துக்காக உண்மையான திமுக உடன்பிறப்புகளும் சேர்ந்து கருணாநிதியைத் தண்டித்துள்ளார்கள்.

உங்கள் இலவசங்கள் சிறு குழந்தைகளிடம் தோடு கம்மலைத் திருடுகிற திருடர்கள் அவர்களுக்கு வாங்கித் தருகிற மிட்டாய் போன்றது என்று மக்கள் புரிந்து கொண்டதன் தண்டனை இது.

பல இடங்களிலே தாங்கள் வழங்கிய இலவசத் தொலைக்காட்சிப் பெட்டிகள் குப்பைக்கு வந்துவிட்டன என்பதைச் செய்தித்தாள்களும் ஊடகங்களும் மக்களுக்குக் காட்டிக்கொடுத்தன.

இந்திரா காந்தியை மட்டும் மேடைதோறும் அவசர நிலைத் தவறுகளுக்கு அவர் சென்னை கடற்கரைக் கூட்டத்திலே மன்னிப்புக் கேட்டார் என்று தேர்தல் கூட்டங்களிலேகூட நல்ல மானமுள்ள காங்கிரஸ் நண்பர்கள் இளங்கோவன் போன்றோரை வைத்துக்கொண்டு சொன்னீர்களே. அப்போதாவது இந்திரா காந்தியே மன்னிப்புக் கேட்டுள்ளாரே, நமது குடும்பத்தினர் செய்த தவறுகளுக்கு நாமும் மன்னிப்பு கேட்போம் என்று தங்களுக்குத் தோன்றவே இல்லையே, ஏன்?

நேரு குடும்பத்திடம் காணப்படும் அந்தப் பெருந்தன்மை எல்லாம் திருக்குவளையிலிருந்து திருட்டுத்தனமாகச் சென்னை வந்து இன்று ஆசியக் கோடீஸ்வரர்களின் வரிசையில் இடம்பிடித்தவர்களுக்கு வருமா என்ன?

கனிமொழி ஒரு பெண் என்கிறார் அவரது வழக்குரைஞர் ராம் ஜேட்மலானி. இப்போது தனது மகளுக்காக வாய்தா வாங்குவதிலும் ஜாமீன் வாங்குவதிலும் தவறில்லை என்று நியாயப்படுத்துகிறார் பெரியவர் கருணாநிதி. ஜெயலலிதா நீதிமன்ற விதிமுறைகள்படி வழக்கில் வாய்தா வாங்குவதைக் கண்டித்து நாடு பூராவும் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தியது ஒரு பெண்ணுக்கு எதிரான வன்முறை என்று உணரவில்லை. இன்று அதே நீதிமன்றத்தில் கனிமொழி பெண் என்கிறீர்கள்.

நீதிமன்றத்திலே ராசாத்தி அம்மாள் காலில் தலித் இளைஞர் ராசா விழுந்து வணங்குகின்றாரே, அதுவும் ஒரு வழக்கறிஞர் ஏன்? ஜெயலலிதா காலில் கழகத் தோழர்கள் விழுந்தால் மேடைக்கு மேடை அவரைக் கேலி செய்வீர்களே. ராசா ஏன் ராசாத்தி அம்மையார் கால்களிலே விழுந்தார்? அவருக்கு ராசாத்தி அம்மாள் என்ன உறவு? ஓர் அமைச்சர் அல்லது கட்சிக்காரர் முதல்வரின் காலில் அல்லது கட்சித் தலைவரின் காலில் விழுந்து ஆசிபெறுவது தமிழனின் தன்மானத்துக்கு இழுக்கு என்று வாய் கிழியப் பேசியவர்கள் "இப்போது தனது துணைவியின் காலில் முன்னாள் அமைச்சர் விழும்போது வாய்மூடி மௌனியாக இருக்கிறாரே, ஏன்?

கடைசியாக ஒன்று, நீங்கள் யாரையும் ஏசியது இல்லை என்கிறீர்கள். அரசியல் நாகரிகம் பற்றி உபந்நியாசம் செய்கிறீர்கள். மதுரை மாநகராட்சித் தேர்தல். முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். சொன்னார் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி மக்கள் பணிகளில் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். அதற்கு நீங்கள் மேலமாசி வீதிப் பொதுக்கூட்டத்தில் சொன்ன பதில் அரசியல் அநாகரிகத்தின் உச்சம். ஏன் இதைக் கூறுகிறேன் என்றால் நீங்கள் நெடுமாறன் அண்ணாச்சிக்கு அரசியல் நாகரிகம் பற்றி எழுதுகிறீர்கள்.

அந்த மாநகராட்சித் தேர்தலிலே பணியாற்றிக் கொண்டிருந்த நாங்கள் மேலமாசி வீதியில் தாங்கள் பேசிய பொதுக்கூட்டம் ஒன்றைக் கேட்டோம். நான் கேட்ட உங்களின் ஒரே பொதுக்கூட்டம் அதுதான். அதில் சொன்னீர்கள் எம்.ஜி.ஆர். முதல்வராக இருப்பாராம் நான் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டுமாம்.

அடுத்துச் சொன்னீர்களே அதுதான் பண்பாட்டின் உச்சம். அவர் கல்யாணம் செய்வாராம். நான்... என்று இடைவெளி விட்டீர்களே. அந்தத் தரக்குறைவான கருணாநிதியை மக்கள் மறந்துவிடவில்லை.

மக்கள் உங்களுக்கு அளித்திருப்பது ஓய்வல்ல, தண்டனை. உங்களது அநாகரிக அரசியலுக்கும், சந்தர்ப்பவாத அரசியலுக்கும் கிடைத்திருக்கும் தண்டனை இது!

http://www.dinamani.com/edition/story.aspx?&SectionName=