Sunday, January 4, 2015

நண்பர்களுக்கோர் பணிவான வேண்டுகோள்:

கோவையில் வசிக்கும் எனது மூத்த சகோதரர் கே. ராமகிருஷ்ணன் அவர்களின் மகன், (கோவை எஸ்.என். எஸ். பொறியியல் கல்லூரியில் B.E இறுதியாண்டு படித்து கொண்டிருந்தார்)  ஆர். சந்தோஷ் குமார் (வயது 21) கோவை சிங்காநல்லூர் அருகே  கடந்த 31.12.2014 ஆம் தேதி நள்ளிரவு 1:15 (01.01.2015 அதிகாலை) தமது இரு சக்கர வாகனத்தில் அவரது நண்பருடன் வீட்டிற்கு வந்துகொண்டிருந்த - போது   எதிர்பாராவிதமாக, எதிரே வந்துகொண்டிருந்த லாரி  மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.

அவரது அகால மரணம் எங்கள் குடும்பத்தினர் அனைவரையும் மிகவும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது.

உயிரிழந்த எனது அன்னாரின் மகன் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக தமது இரு சக்கர வாகனத்தை சற்று வேகமாக இயக்கி வந்துகொண்டிருந்ததாகவும், அதன் காரணமாகவே, விபத்து நேரிட்டது எனவும் கூறப்படுகின்றது. என்றுமே, எப்பொழுதுமே தலைக்கவசம் அணிந்துகொண்டு செல்லும் பழக்கம் கொண்ட அவர், அன்று ஏனோ தலைக்கவசத்தை அணிந்துகொண்டு செல்ல மறுத்து விட்டார். தலைக்கவசம் அணிந்துகொண்டு சென்றிருந்தால், ஒரு வேளை, விபத்தில் சிக்கியிருந்தாலும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பு கிட்டியிருக்கலாம்.

புத்தாண்டு கொண்டாட்ட ஆர்ப்பாட்டம்
தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது
அதி வேகமாக வாகனத்தை ஓட்டுவது

போன்ற பல் வேறு காரணங்களால், இது போன்ற விபத்துக்கள் வருடம் தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளன.

படித்து முடித்து தகுதியான ஒரு வேலையில் சேர்ந்து, தனக்கும் தனது குடும்பத்திற்கும் பயன் தர வேண்டிய சந்தர்ப்பத்தில், விலை மதிப்பில்லா உயிரை துச்சமென மதித்து, இது போன்ற ஆபத்து நிறைந்த முயற்சிகளிலும், மகிழ்ச்சியிலும் ஈடுபட்டு, உயிரை இழக்கும் மாணவர்களும், இளைஞர்களும், இனியாவது குடும்பத்திற்கும், சமூகத்திற்கும் உள்ள தங்களது பொறுப்புகளை உணர்ந்து, விபத்தில்லா பண்டிகைகள், வருடப்பிறப்புகள் போன்றவற்றை உறுதி செய்ய வேண்டும்.

இதை வாசிக்கும் நண்பர்கள் தங்களது குடும்பத்தில் யாரேனும் இது போன்ற ஆபத்து நிறைந்த செயல்களில் ஈடுபடாமல் இருக்கும் விதமாக, அவர்களுக்கு போதிய அறிவுரை வழங்கி, அவர்களின் ஒளிமிகு எதிர்காலத்தை முன்னிட்டு, கல்லூரிக்கு செல்ல இரு சக்கர வாகனத்தை பயன் படுத்தாமல், கல்லூரி பேருந்துகளிலோ, அல்லது பொது பேருந்துகளிலோ செல்ல, அவர்களிடம் அன்புடன் வேண்டிக்கொள்ளுங்கள்.

மறுத்தால் சற்று கண்டிப்பு காட்டினாலும் தவறில்லை.

வேண்டாம் இது போன்ற  விபரீதம்   >>> உயிர் விலை மதிப்பற்றது !!!

அதை விட குடும்பத்தினர் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அன்பும் பாசமும் பல மடங்கு விலை உயர்ந்தது. !!!



http://www.maalaimalar.com/2015/01/01103037/2-died-in-accident-while-new-y.html