Thursday, May 19, 2011

"அலைகள் ஓய்வதில்லை" - தொடர்

2ஜி ஸ்பெக்ட்ரம்... சர்வதேச பகீர் உண்மைகள் - Part 1

பற்றியெரியும் ஸ்பெக்ட்ரம் 2ஜி ஒதுக்கீடு தொடர்பாக முன்னாள் சி.பி.ஐ. அதிகாரி ஒருவர், புதுசாக ஒரு பொறியை நம்மிடம் கொளுத்திப் போட்டார். ''இதில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் யார் யார் என்று ஆதியோடு அந்தமாகத் தோண்டிப் பாருங்கள். அப்போதுதான் இந்த முறைகேட்டின் பின்னால் இருக்கும் தொடர்புகளின் நெட்வொர்க் புரியும்!'' என்பது பொறி கொளுத்தும்முன் அந்த அதிகாரி கொடுத்த முன்னுரை!

''ஆ.ராசா, கருணாநிதி, தி.மு.க., காங்கிரஸ் என்ற பேச்சுகளோடு இந்த விவகாரம் திசை திரும்பிவிட வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் நினைக்கிறது. தி.மு.க-விலிருந்து ஆ.ராசாவை நீக்குவதோ... தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகுவதோ மட்டுமே இதற்கு முழுப் பரிகாரம் ஆகிவிடாது. பதவியில் உள்ள அரசியல்வாதிகளுக்கு மாபெரும் 'கட்டிங்' கொடுத்துவிட்டு, அதற்கு இணையாக லாபத்தில் கொழிக்கும் கம்பெனிகளின் நிஜ முகங்களும் வெளியில் வரவேண்டும். அப்போதுதான் நாட்டுக்கான இழப்பு பற்றிய முழு உண்மையும் வெளியில் வரும்!'' என்றும் அந்த அதிகாரி சொன்னார்!

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு மற்றும் தணிக்கைத் துறையின் அறிக்கை தெளிவு படுத்துகிறது. ''இந்த ஒதுக்கீட்டில் சுமார் 22 ஆயிரம் கோடி வரை, 'சாதித்துக் கொடுத்தவர்களுக்கு' சன்மானமாகக் கைமாறியிருக்கிறது!'' என்று மத்திய விஜிலென்ஸ் கமிஷனர் கணக்கிட்டு பிரதமருக்கு கடிதம் எழுதுகிறார். இதன் அடிப்படையில் சி.பி.ஐ. இதை வழக்காகப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அவரது வீட்டை சி.பி.ஐ. ரெய்டு செய்துள்ளது. இரண்டு நாட்கள் சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அவர் வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளார். இந்தக் காலகட்டத்தில் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டுக்கு உள்கையாகச் செயல்பட்ட தொலைத்தொடர்புத் துறை அமைச்சகத்தின் அனைத்து அதிகாரிகளின் வீட்டிலும் ரெய்டும் விசாரணையும் நடந்து முடிந்திருக்கின்றன. இதுவரை நடந்ததெல்லாம் நாடு முழுக்கப் பரபரப்பைக் கிளப்பியது. ஊழலுக்கு எதிராக இரும்புக் கரம் உயர்ந்துவிட்டது போன்ற தோற்றத்தை மக்களுக்கு ஏற்படுத்தியது. ஆனால், இதற்குப் பிறகு சி.பி.ஐ. என்ன செய்யப் போகிறது?

பிப்ரவரி 10-ம் தேதிக்குள் ஸ்பெக்ட்ரம் 2ஜி அலைவரிசை தொடர்பாக விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சி.பி.ஐ-க்கு உச்சநீதிமன்றம் உத்தரவு இட்டுள்ளது. அத்தோடு, 2001-ம் ஆண்டு முதல் அலைவரிசை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் சரிபார்த்து, அதிலும் முறைகேடுகள் நடந்திருக்கிறதா என்பதை சோதனை நடத்திச் சொல்லவேண்டும் என்றும் கோர்ட் கட்டளை போட்டிருக்கிறது. இந்தக் கட்டளையை முன்னிறுத்தி, சி.பி.ஐ. கூடுதல் அவகாசத்தை நீதிமன்றத்திடம் கேட்க முடிவு செய்திருக்கிறதாம். ''கடைசியாக நடந்த ஒதுக்கீடு தொடர்பாக மட்டுமே எங்களால் விசாரணையை முடிக்க முடிந்தது. 2001-ம் ஆண்டு முதல் உள்ள ஆவணங்களை சரிபார்க்க மேலும் 6 மாதங்கள் தேவை!'' என்று சி.பி.ஐ. சொல்லுமாம். ஒருவேளை, சுப்ரீம் கோர்ட் 6 மாத அவகாசம் தர விரும்பாவிட்டாலும், மூன்று மாதங்களாவது தரும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மே மாத விடுமுறை முடிந்து ஜூலை மாதம்தான் சுப்ரீம் கோர்ட் மீண்டும் திறக்கும். அதற்குள் தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும்.

நம்மிடம் பேசிய அதிகாரி, ''தமிழ் நாடு, மேற்குவங்கம், கேரளா, அஸ்ஸாம், புதுச்சேரி உள்ளிட்ட ஐந்து மாநிலங் களின் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் நேரத்தில் ஸ்பெக்ட்ரம் தொடர்பான எந்த விசாரணையும் வெளிப்படையாக நடந்து, இதையும் தாண்டி உள்ள சில அந்தரங்கத் தகவல்கள் வெளியில் கசிவதை காங்கிரஸ் மேலிடம் விரும்பவில்லை. இதற்காகவே முடிந்த அளவு இழுத்தடிப்பதும் அதற்குப் பின்னால் ஆறப்போடுவதுமான காரியங்களைப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். மத்திய அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் இந்த விவகாரம் நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் சம்பந்தப்பட்டுள்ளார்கள். இவர்களில் ஒருவர் தவிர மற்ற நான்கு பேரும் காங்கிரஸ்காரர்கள்! இந்த ஐவர் தவிர, சோனியாவுக்கு அருகில் இருந்து ஆலோசனைகள் சொல்லி வரும் இரும்புத் தனமான நபர் மற்றும் தமிழக காங்கிரஸ் வட்டாரங்களைக் கட்டுப் படுத்தக்கூடிய பிரபலமான மற்றொரு டெல்லி மனிதர் ஆகிய இருவரும் இந்த விஷயம் தொடர்பாக அமைச்சர் ஆ.ராசாவுக்கு துணையாக இருந்திருக்கிறார்கள். இந்த ஏழு நபர்களைத் தாண்டி ஸ்பெக்ட்ரம் விசாரணையை சி.பி.ஐ-யால் சுதந்திரமாக நடத்த முடியாது. அவர்களை சி.பி.ஐ-யால் நெருங்கவும் முடியாது!'' என்று குண்டு போடுகிறார்.

அந்த சி.பி.ஐ. அதிகாரியே மேலும், ''சோனியாவுக்கு நெருக்கமான அரசியல் ஆலோசகரிடம் பேசிய நீரா ராடியா, 'என் மீது விசாரணை நடத்துவதை ஒரு கட்டம் வரைக்கும்தான் நான் அனுமதிப்பேன். அதன் பிறகு நான் பேச ஆரம்பித்தால்... ஸ்பெக்ட்ரம் விஷயத்தைவிட இன்னும் பல பகீர் ரகசியங்கள் வெளியில் வரும். நாடே கலகலத்துப் போகும்!’ என்று சொன்னதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது. இதைத் தொடர்ந்து சோனியாவின் அரசியல் ஆலோசகர் மூலமாக காங்கிரஸ் மேலிடம் வரை பெரும் பதற்றம் உண்டாகி இருக்கிறது. ஆ.ராசா ராஜினாமா செய்ய வேண்டிய சூழ்நிலை வந்தபோது, 'மூன்று மாதங்கள் மட்டும் பொறுங்கள். எல்லாப் புயலும் அடங்கிவிடும். அதன் பிறகு மீண்டும் நீங்கள் மந்திரி ஆவதற்கு நான் உதவுவேன்!’ என்று சோனியாவுக்குஅருகில் இருக்கும் ஒரு பிரமுகர் வாக்குறுதி கொடுத்து உற்சாகப் படுத்தினார். அவரும் நீரா ராடியாவின் கொதிப்பு வார்த்தைகளைக் கேட்டு ஆடிப் போயிருக்கிறார்...'' என்று கூறுகிறார்.

இதில் காங்கிரஸ் அதிகமாக பயப்படுவதற்குக் காரணம், இது வெறும் ஊழல் வழக்கு மட்டுமல்ல. ஸ்பெக்ட்ரம் 2ஜி உரிமங்களைப் பெற்ற கம்பெனிகள், அதை அவர்களிடம் இருந்து வாங்கிய கம்பெனிகள், இதில் முதலீடு செய்திருப்பவர்கள்... என்று பட்டியல் எடுத்த சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு, வருவாய்ப் புலனாய்வு மற்றும் ரா அதிகாரிகள் அனை வருமே ஆடிப் போயிருக்கிறார்களாம். லைசென்ஸ் பெற்ற ஸ்வான் டெலிகாம் நிறுவனத்தின் உரிமையாளர் சாகித் உஸ்மான் பல்வாவுக்கும் மும்பைத் தாக்குதலில் தொடர்புடைய தாவூத் இப்ராஹி முக்கும்நெருக்கமான தொடர்புகள் இருப்பதாக சி.பி.ஐ. நினைக்கிறது.

மேலும், இந்தியாவின் பரம எதிரி நாடான பாகிஸ் தானின் வர்த்தகத் தொடர்புள்ள கம்பெனிகளும் இதற்குள் இருக்கின்றன. சீனா லிபரேஷன் ஆர்கனை சேஷன் அமைப்பின் தொடர்புகளும் இதில் இருக் கின்றன. அரபு நாடுகளின் மதத் தீவிரவாதிகளும், இந்தியாவுக்கு எதிரான தேச விரோத சக்திகளும்கூட இதில் அங்கம் வகிப்பதாக சி.பி.ஐ-க்கு சந்தேகம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறதாம்.

''இந்த தகவல்கள் எல்லாம் வெளியில் வந்தால்... இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கித் தந்த காங்கிரஸ் கட்சியே, இந்தியாவின் பாதுகாப்பை பல லட்சம் கோடிக்கு அடகு வைத்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் எரிமலையாகப் பொங்கும். அதனால்தான் ஆ.ராசா சம்பந்தப்பட்ட ஒரு விஷயமாக மட்டுமே இந்த விவகாரங்களை முடித்துவிட சிலர் துடியாகத் துடிக் கிறார்கள். தி.மு.க-வின் கூட்டணியை காங்கிரஸ் உதறுமா என்பதுகூட சந்தேகம்தான். மத்தியில் தொடர்ந்து ஆட்சி செய்வதற்குத் தேவையான எம்.பி-க்களை தி.மு.க. அளிக்கிறது என்பது மட்டும் இதற்குக் காரணம் இல்லை. காங்கிரஸ் கட்சியின் பெருந்தலைகளுக்குத் தெரிந்தது எல்லாமே ஆ.ராசாவுக்குத் தெரியும்... அவருடைய தலைவருக்கும் தெரியும். இதுவும்தான் காங்கிரஸ் பம்முவதற்குக் காரணம்!'' என்று அந்த சி.பி.ஐ. அதிகாரி சொல்லி முடித்தபோது, நமக்கு தலை கிறுகிறுவென தட்டாமாலை சுற்றியது

ஸ்பெக்ட்ரம் 2ஜி லைசென்ஸ் உரிமங்களைப் பெற்ற கம்பெனிகளின் உரிமையாளர்கள் பற்றிய விவரங்கள் இப்போது கசிய ஆரம்பித்திருக்கிறது!

1.ஸ்வான்: சாகித் பல்வா குடும்பமும் வினோத் கோயங்கா குடும்பமும் இணைந்து நடத்தும் கம்பெனி. மும்பையில் ரியல் எஸ்டேட் துறையில் கொடிகட்டிப் பறக்கும் பலே கம்பெனி. ''இந்திய உளவுத் துறை எடுத்துவைத்திருக்கும் சான்றுகளின்படி இதன் முக்கியத் தொடர்பில் தற்போது கராச்சியில் வசிக்கும் - பகீர் மனிதர் ஒருவரும் இருக்கிறார்!'' என்றும் சொல்லப்படுகிறது. கம்பெனி உரிமையாளரான சாகித் உஸ்மான் பல்வா உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 937-வது நபராக இருக்கிறார். இவரது இருப்பிடம் மும்பை. இதே கம்பெனியின் இன்னொரு சேர்மனான வினோத் கே.கோயங்கா இருப்பதும் மும்பையில்தான்.

2.சிஸ்டமா ஷியாம் டெலிகாம்: எம்.டி.எஸ். குரூப்புடன் இணைந்த நிறுவனம் இது. டவர் 334, உதயோக் பவன், குர்ஹான், ஹரியானா மாநிலம் என்ற முகவரியில் திடீரென முளைத்த நிறுவனம் இது. இதன் இயக்குநர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை!

3.லூப் டெலிகாம்: இதன் இந்திய இயக்கு நராக சந்தீப் பாசு என்பவரும் பங்குதாரராக அய்லோன் என்பவரும் இருக்கிறார்கள். மும்பை மாகிம் வெஸ்ட் பகுதியில் இவர்கள் இருந்திருக்கிறார்கள். 2ஜி விண்ணப்பத்தை உத்யோக் விஹார், குர்ஹான் பகுதியில் இருந்து அனுப்பியிருந்தார்கள். இதன் நிஜஉரிமை யாளர்கள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்களாம்!

4.யூனிடெக்: ஒன்பது உரிமையாளர்கள் கொண்ட நிறுவனமாக இது உள்ளது. ரமேஷ் சந்திரா (சேர்மன்), அஜய்சந்திரா (எம்.டி., எச்.ஆர்.டி), சஞ்சய் சந்திரா (எம்.டி., அட்மின்), சஞ்சய் பகதூர், அனில் ஹரீஸ், ரவீந்தர் சின்கானியா, அம்ப்வானி, மினோத் பாஷி, மகந்தி ஆகிய ஒன்பது பேர்தான் சூத்திரதாரிகள். ''இந்த நிறுவனத்துக்கு முழுக்க முழுக்க நீரா ராடியா ஏஜென்டாக செயல்பட்டுள்ளார். இதுதான் மிகப்பெரிய வெளிநாட்டு நிறுவனத்தின் துணைப் பெயரில் உருவானது!'' என்கிறது சி.பி.ஐ.

5.எஸ்.டெல் நிறுவனம்: 'ஸ்டெர்லிங்' சிவசங்கரன் என்றால் முன்பு தமிழகம் நன்கு அறியும். முரசொலி மாறனின் நண்பராக இருந்தவர். மெர்கன்டைல் வங்கியை வாங்கிய பிரச்னையில் இவர் செம ஹாட்டாக நியூஸில் அடிபட்டார். இன்றைய 'கலைஞர்' டி.வி-யின் உருவாக்கத்திலும் இவரது பங்கு நிறைய இருந்ததாகச் சொல்வார்கள். நிலம் விவகாரம் ஒன்றில் புகார்கள் கிளம்பி அவர் தவிர மற்ற பல நிர்வாகிகளும் கைதான பழங்கதையும் உண்டு. அந்த சிவசங்கரனின் நிறுவனம்தான் இது சிவசங்கரன் (சேர்மன்), வி.சீனிவாசன் (சி.இ.ஓ), பி.சுவாமிநாதன் (தலைவர்)... மற்றும் இயக்குநர்களான பீட்டர் கலிபோல்ஸ், எஸ்.சரவணன், எஸ்.நடராஜன், அலி யூசுப், அப்துல் ரஹ்மான் ரஷிம், டாக்டர் காசன் முராத் ஆகியோர் அடங்கிய டீம் இந்த நிறுவனத்தை நடத்துகிறது.

6.ஐடியா செல்லுலார்: இதன் இந்திய உரிமையாளர்களாக 12 பேரின் பெயர்கள் உள்ளன. குமாரமங்கலம் பிர்லா இதன் சேர்மனாக இருக்கிறார். ராகேஷ் ஜெயின், பிஸ்வாஜித் அன்னசுப்பிரமணியம், பிரகாஷ், தர்ஜானி வாகிப், பி.முராரி, ஜான் விட்டலங்க நவரோ, ராஜஸ்ரீ பிர்லா, சூரிபுத்த அன்ஸா, அருண் தியாகராஜன், சஞ்சய் அஹா, பார்கவா (இயக்குநர்கள்) ஆகியோர் பெயர்கள் உள்ளன. குஜராத் மாநிலம் காந்திநகர் முகவரியில் இருந்து இந்நிறுவனம் செயல்பட்டுள்ளது. இவர்கள் தங்களது பங்குகளை வெளிநாட்டுக்கு விற்றுள்ளனர்.

7. வீடியோகான்: வேணுகோபால் என்.தத் என்பவர் இதன் சேர்மன். பிரதீப் என்.தத், கே.சி.ஸ்ரீவத்சவா, சத்யபால் தல்வார், எஸ்.பத்மநாபன், மேஜர் ஜெனரல் எஸ்.சி.என். ஜட்டார், அருன் எல்.போங்னிவார், ராடி ஷியாம் அகர்வால், குனிலா நார்ஸம், பி.என்.சிங், அஜய் சாப் ஆகியோர் பெயர்கள் இதன் முக்கிய நிர்வாகிகள் பட்டியலில் உள்ளன. இதற்கான தலைமை அலுவலகம் டெல்லியில்!

8. ரிலையன்ஸ் டெலிகாம்: அனில் அம்பானி - அதிகம் சொல்ல வேண்டியதில்லை!

9. டாடா டெலிகாம்: ரத்தன் டாடா - தனியாகச் சொல்ல வேண்டியதில்லை

நன்றி: ஜூனியர் விகடன்


No comments:

Post a Comment