Wednesday, May 18, 2011

குடும்ப அரசியலும்; இனத் துரோகமும் பெற்ற வீழ்ச்சி!

karunanidhi_01தமிழகத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் வெளிவந்து விட்டன.

கடந்த ஐந்து வருடங்களாகத் தமிழகத்தில் ஆட்சிசெய்த தி.மு.க வுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் மக்கள் பிரியாவிடை அளித்துவிட்டார்கள்.

இந்தத் தேர்தலில் ஜெயலலிதா அவர்களது தலைமையில் அமைந்த கூட்டணி பெற்றிருக்கும் இம் மாபெரும் வெற்றி, உண்மையில் ;அறிஞர் அண்ணாவின் வழியை விட்டுத் தடம் மாறி – மிதமிஞ்சிய ஆடம்பரத்துக்கும் தன் குடும்பம் தன் பதவி என்னும் சுயநலத்துக்கும் அடுத்திருக்கும் குட்டித்தீவில் தமிழினப் படுகொலைகள் அரங்கேறிக் கொண்டிருந்த வேளையிலுங்கூட ‘பாசாங்குத் தனமான’ செயல்களில் ஈடுபட்டும் வந்த – கலைஞரின் ஆட்சி மீது தமிழக மக்கள் கொண்டிருந்த வெறுப்பு, நம்பிக்கையின்மை ஆகியவற்றுக்குக் கிடைத்த ‘விலை’ என்பதே பொருந்தும்.

அதிலும், அண்ணாவுக்குப் பின்னர்,-1991 ஆம் வருடம் ராஜீவ் கொலையை அடுத்து ஏற்பட்ட அனுதாப அலையில் தி.மு.க அடைந்த பின்னடைவைத் தவிர்த்து- தொடர்ந்து முதல்வராயும் அவ்வாறு இல்லாவிடில் எதிர்க்கட்சித் தலைவராயும் தமிழக சட்டமன்றத்தை அலங்கரித்த கலைஞர் இந்தத் தடவை எதிர்க்கட்சிக்கான தகுதியையே இழந்து விட்டிருக்கிறார்.

தி.மு.க வோடு கடைசிவரை போராடித் தமக்கு 63 இடங்களைப் பெற்றுக்கொண்ட காங்கிரசால் ஐந்து இடங்களில் மட்டுமே வெற்றிபெற முடிந்திருக்கிறது.

’இது வெற்றிக் கூட்டணி’ எனப் புளகாங்கிதமடைந்த பா.ம.க வுக்குக் கிடைத்ததோ மூன்றேமூன்று இடங்கள். வேண்டுமானால்;மூன்றெழுத்தில் மூச்சிருக்கும் கட்சிக்கு முட்டுக் கொடுத்தவருக்கு மூன்றிடங்கள் கிடைத்திருக்கிறது என ‘கவித்துவத்துடன்’ கூறித் தங்களைத் தேற்றிக் கொள்ளலாம்.

அதுமட்டுமில்லாமல் யாருமே எதிர் பார்க்காத வகையில் இந்தத் தடவை தமிழக மக்கள்; தி.மு.க வுக்கும் அதன் கூட்டணியில் முக்கிய இடம் பெற்றிருக்கும் காங்கிரசுக்கும் மரண அடி கொடுத்திருக்கிறார்கள்.

இந்தக் கட்சியும் இதன் கூட்டணியும் இனித் தமிழகத்தில் அரசியல் நடாத்துவதையே எண்ணிப்பார்க்கக் கூடாது என்னுமாப்போல், எதிரணிக்கு மிகப் பெருமளவில் தங்கள் ஆதரவினை வழங்கிய தமிழக மக்களது நாடித்துடிப்பினை அறியாது…..; தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு இடைப்பட்ட ஒரு மாதகாலத்தில் தி.மு.க வின் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஒருவர்மாறி மற்றொருவராய், கலைஞரைச் சந்தித்து தங்கள் கூட்டணியே அதிக பெரும்பானமையுடன் ஆட்சிக்கு வரும் எனப் பேட்டி அளித்துக் கொண்டிருந்ததை நினைக்கையில் சிரிப்புத்தான் வருகிறது. தங்களால் ஆளப்படும் மக்களின் உணர்வுகளை, அவர்களது எண்ணங்களை அறியாத அரசுத் தலைவராகக் கலைஞர் செயல்பட்டிருக்கிறார் என்பது வியப்பாகவும் இருக்கிறது.

எனினும், இந்தத் தேர்தலில் தி.மு.க கூட்டணி பெற்றிருக்கும் மோசமான தோல்வியின் பின்னால்…….. 2ஜி ஊழல் தொடங்கி ஈழப் படுகொலைகள் வரை பல காரணங்கள் வரிசை பிடித்து நிற்கின்றன.

தி.மு.க வின் வரலாற்றில், ஊழலுக்குப் பிள்ளையார் சுழி இட்டவர் என்னும் பெருமையைப் பெற்றிருக்கும் கலைஞர்( தி.மு.க வின் முதலாவது அமைச்சரவையின் தலைவராக இருந்த அண்ணா ஊழல் வதந்திகளுக்கு ஆட்படவில்லை) இந்தத் தடவை தனது துணைவி உட்படப் பலர் இந்த ஊழல் சாக்கடையில் புரண்டெழுந்து ‘முத்துக் குளிக்கும்’ வாய்ப்பினைத் தாராளமாகவே வழங்கியிருக்கிறார் என்னும் சந்தேகம் தமிழக மக்களிடம் பதிந்து விட்டிருக்கிறது.

முதலில் அமைச்சர் ராசா, தொடர்ந்து அவரது மகள் கனிமொழி என ஊழலின் பரிமாணம் விரிவடைந்த நேரத்தில் தேர்தலும் இடம் பெற்றது ஒரு காரணம் என்றால்; தமிழகத்தில் ‘கட்டெறும்’பாகிக் கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சி, இறுதி நேரத்தில் கலைஞரை மிரட்டும் பாணியில் செயலில் இறங்கியதும்…… தனது மகள் கனி மொழியைப் பாதுகாப்பதற்காக அக்கட்சிக்கு 63 தொகுதிகளைத் தாரை வார்த்ததும் மற்றொரு காரணம் எனலாம்.

இவை மட்டும் அல்லாமல், ‘அஞ்சாநெஞ்ச சாகசம்’ புரிந்து தேர்தலில் வெற்றிக் கனியைப் பறிக்கும் மதுரை வித்தையாளரின் கரங்களைத் தேர்தல் ஆணையம் சாதுர்யத்துடன் முடக்கி விட்டிருந்தது. போதாதென்று, கலைஞரின் ‘பேரன்கள்’ திரைப்படத்துறையின் ’ஆக்டோபஸ்’களாய் உருவாகியதால் பாதிப்புற்றவர்கள் கலைஞரின் குடும்ப ஆதிக்கத்துக்கு எதிராகக் களமிறங்கி இருந்தார்கள்.

ஈழத்தமிழருக்குத் துரோகம் இழைத்த காங்கிரசுக்கு எதிராக சீமான் தலைமையில் நாம் தமிழர் இயக்கம் செயல்பட்டதால், அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.கவின் செல்வாக்கும் சேர்ந்தே சரியத் தொடங்கியது.போதாதென்று, தங்கபாலுவின் நடவடிக்கைகளால் உருவான உட்கட்சிப் பூசல்கள்…….

மாநிலம் தழுவிய மின் தட்டுப்பாடு……. ஊழல் பிரச்னை காரணமாக கலைஞரின் குடும்பதிற்குள்ளேயே உருவான முறுகல்கள்…….. ஆகியனவும் இவற்றோடு இணைந்து கொண்டன.

தி.மு.கவின் பங்குக்கு, குடும்ப ஆட்சியும்; காங்கிரசின் பங்குக்கு இனத் துரோகமும் என இவ்விரு கட்சிகளினதும் சம அளவிலான பங்களிப்பினால் ; அவற்றுடன் இணைந்து கொண்ட பா.ம.க வும், விடுதலைச் சிறுத்தைகளும் பலியாகி விட்டதாகவே தெரிகிறது.

மக்களாட்சியின் வலிமையினை நிரூபித்திருக்கும் இந்தத் தேர்தல் முடிவுகள் தமிழகத்தை வளர்ச்சிப் பாதையில் இட்டுச் செல்லுமாயின்; அது புதிதாக ஆட்சியில் அமரப்போகும் அ.தி.மு.க வுக்குப் பெருமை சேர்க்கும்.

"சர்வசித்தன்"

[www.sarvachitthan.wordpress.com]

No comments:

Post a Comment