Wednesday, May 18, 2011

திகைத்துப்போய், ஓரடி பின்வாங்கிய அழகிரி!



“இந்த நாட்டைவிட, ‘அந்த’ வீட்டைக் கவனிப்பதுதான் அவருக்கு (கருணாநிதி) முக்கியமாகப் போச்சு… இன்னும் 1 மாதத்தில் நாட்டைப்பற்றிக் கவலைப்படும் நிலையில் அவர் இருக்கமாட்டார். சந்தோஷமாக ‘அந்த’ வீட்டில் இருந்து, ‘அவர்களையே’ கவனித்துக் கொள்ளட்டும்”

மேலேயுள்ள வாக்கியத்தைச் சொன்னது ஒரு அ.தி.மு.க. தலைவராகவோ, தி.மு.க. எதிர்ப்புப் பிரமுகராகவோ இருந்தால், அதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

நம்புங்கள், மேலேயுள்ள வார்த்தைகள் வெளிவந்தது தி.மு.க.வின் தென்மாவட்டத் தளபதி என்று கூறப்படும் அழகிரியின் வாயிலிருந்து! தேர்தல் தினத்துக்குச் சில நாட்களுக்குமுன், கோபத்துடன் அவர் கூறிய வார்த்தைகள் அவை!

தேர்தல் முடிவுகள் வெளிவரும்போது, தி.மு.க. ஆட்சியிலிருந்து வீட்டுக்கு அனுப்பப்படும் என்பதை ஊகிக்காதவர்கள் மிகக்குறைவு. ஆனால், இப்போது நடந்திருப்பதுபோல மிகக் கேவலமான தோல்வியுடன் வீட்டுக்கு அனுப்பப்படும் என்று பலர் ஊகித்திருக்கவில்லை.

ஆனால் அழகிரி அதை ஊகித்திருக்கிறார். தனக்கு நெருக்கமானவர்களிடம் வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார் என்பதுதான் ஆச்சரியம்.

மதுரையில் தான் கட்டியெழுப்பிய சாம்ராச்சியம் இப்போது சரசரவெனச் சரிவதை, அவர் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலை. இனி எச்சரிக்கை ஏதும் செய்ய வேண்டியதில்லை. அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டியதில்லை. வெள்ளம் தலைக்கு மேல்!

அவரது ஆட்கள் என்று முத்திரை குத்தப்பட்ட அதிகாரிகள் அனைவரும், மதுரையிலிருந்து கிளம்ப பெட்டியைக் கட்டி விட்டார்கள். மதுரை மாநகருக்கு உள்ளேயுள்ள பல பில்டிங்குகளின் உரிமையாளர்களின் பெயர்கள், அவசர அவசரமாக ரிஜிஸ்தார் ஆபீசில் மாறுகின்றன.

மதுரை மத்தியில் கட்சிக் கொடியுடன் பந்தாவாகப் பவனிவந்த பல சுமோக்கள் இப்போதெல்லாம் மதுரை எல்லைக்குள்ளேயே தென்படுவதில்லை. இவற்றில் பல, மதுரைக்கு வெளியே கிராமங்களில் உள்ள பண்ணை வீடுகளில் கீற்றுக் கொட்டகைகளில் தற்காலிகமாகத் தூங்குகின்றன. கடந்த ஓரிரு தினங்களாக சில மதுரை வீடுகளில் டெம்போக்கள் இரவு நேரத்தில் வந்து நிற்கின்றன. பெட்டிகளை ஏற்றிக்கொண்டு இரவோடு இரவாக மதுரை மாநகர எல்லைக்கு வெளியே பறக்கின்றன.

ஒரு சாம்ராச்சியம் காலி செய்யப்படுகின்றது.

இவற்றில் ஏதும் அவருடன் (அழகிரி) நேரடியாகத் தொடர்புடையவை அல்ல என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள். இவையெல்லாம் அவரைச் சுற்றி வளைய வந்துகொண்டிருந்த ஆட்களின் சொத்துக்களாம். “தேர்தல் முடிவுகள் வருமுன்னரே, அண்ணன் முன்னேற்பாடுகளைச் செய்துவிட்டார்… தெரியுமோ?” என்று கண்ணடிக்கிறார்கள் அவர்கள்.

சரி. நிலைமை இவ்வளவு மோசமாகும் என்று ‘அண்ணனுக்கு’ எப்படித் தெரிந்தது?

தேர்தல் பிரசார டைமிலேயே அண்ணனை உண்டு இல்லையென்று ஆக்கிவிட்டார்களாம். அவசரப் படாதீர்கள். அப்படிச் செய்தது எதிரணியினர் அல்ல… அவரது சொந்தக் கட்சித் தலைமைதான்!

அப்படி என்னதான் நடந்தது என்று அழகிரியுடன் நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். சுவாரசியமான விஷயங்கள் வெளிவருகின்றன.

தேர்தல் கமிஷன் கடுமை காட்டப்போகின்றது என்பது உறுதியானவுடன், முதன்முதலில் ‘மாற்று வழிகளை’ கண்டுபிடித்தது மதுரையில்தான். அந்தளவுக்கு அழகிரி அலேர்ட்டாக இருந்திருக்கிறார்.

தென்மாவட்ட வேட்பாளர் தேர்விலும் ஓரிரு நெருடல்கள் இருந்தாலும், ஓவர்ஆல் நிலைமை அவருக்குத் திருப்தியாகவே இருந்தது. நிதி நிலைமையில் எப்போதும், எந்தக் கவலையும் இல்லை. மொத்தத்தில் யுத்தத்துக்கு 100% அஞ்சாநெஞ்சர் ரெடியாகவே இருந்தார்.

ஆனால் அதன்பின்தான் சென்னையிலிருந்து சரம்சரமாக உத்தரவுகள் வரத் தொடங்கின.

மதுரைப் படப்பிடிப்பில் இவர்தான் டைரக்டர் என்பதே அதுவரை இருந்த நிலை. ஆனால் தேர்தல் நெருங்க நெருங்க, டைரக்ஷன் உத்தரவுகள் சென்னையிலிருந்து வர, இவர் உதவி டைரக்டர்போல ஆகிவிட்டார்!

ராசா-கனிமொழி ஊழல் விவகாரம் தமிழ்நாடு முழுவதும் ஹாட் டாப்பிக்காக இருக்க, தென்மாவட்டங்களும் அதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. அப்படியான நிலையில் மக்களை வாக்களிக்க அனுப்பி வைத்தால், ‘கோவிந்தா’ தான் என்பது பலவருட அரசியல்வாதியான அவருக்கும் தெரியும்.

போதும் போதாதற்கு, காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வேறு! காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் களம் இறங்கியிருந்த தமிழின உணர்வாளர்களின் ஸ்ட்ராங் ஸ்பாட்டே, தென் மாவட்டங்கள்தான். சீமான் போன்றவர்களுக்குக் கூட்டம் அதிகம் கூடியதும் தென்மாவட்டங்களில்தான்.

இதற்காக அழகிரி வகுத்திருந்த வியூகம், வாக்களிக்கச் செல்லும்போது மக்களை மகிழ்ச்சியான மனநிலையில் செல்ல வைப்பது. ஆடல், பாடல், வடிவேலு காமடி என்று மக்களின் மனநிலையை லேசாக்கும் வேலையில் இவர் ஈடுபட்டுக் கொண்டிருக்க-

பிரசாரத்துக்கு கனிமொழியைக் களம் இறக்குவது என்ற முடிவு சென்னையில் எடுக்கப்பட்டது.

இந்தத் தகவல் மதுரையை வந்தடைந்தபோது, அழகிரி முதலில் அதை நம்பவில்லை. “தலைமை அப்படியெல்லாம் செய்யாது. பிரச்சினையே அவங்கதானே (கனிமொழி). பிரசாரத்துக்காக அவங்க வெளியே வரமாட்டாங்க” என்று சொல்லிவிட்டு, சென்னையைத் தொடர்பு கொண்டு கேட்டால், கிடைத்த சேதி நிஜம்!

அப்போதே “இந்த விபரீத விளையாட்டெல்லாம் வேண்டாம்” என்று எச்சரித்திருக்கிறார். ஆனால் அங்கிருந்து என்ன சொல்லப்பட்டதோ தெரியவில்லை, அப்போது ஆஃப் ஆகிவிட்டார்.

“தலைமை என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப் போகட்டும். தென் மாவட்டங்களில் எங்கள் வேலையை நாங்கள் தொடர்வோம். கனிமொழி நம்ம ஏரியாவுக்கு வரமாட்டார்” என்று தன்னையும் சமாதானப்படுத்தி, தன்னைச் சுற்றியிருந்தவர்களையும் சமாதானப்படுத்திக் கொண்டார்.

ஆனால், இதுகூட ஓரிரு மணிநேரத்துக்குமேல் நீடிக்கவில்லை. அடுத்த தகவல் சென்னையிலிருந்து வந்து சேர்ந்தது – “கனிமொழி தென்மாவட்டங்களிலும் சூறாவளிப் பிரசாரம்!”

பொங்கியெழுந்தார் அஞ்சாநெஞ்சர்! தலைமையுடன் டெலிபோனில் அவர் போட்ட சண்டையில் ‘காரமான’ சொற்களும் வந்து விழுந்தன என்கிறார்கள். நான்கைந்து தடவைகள் போன் போட்டுப் பேசியபின், “இல்லை.. நிச்சயம் கனிமொழி நம்ம ஏரியா பக்கம் வரப்போவதில்லை” என்று தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்குச் சொல்லி உற்சாகப் படுத்தினார்.

ஒருவேளை சென்னையிலிருந்து அப்படியொரு உறுதிமொழி அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

ஆனால் சென்னைக்கு என்ன அழுத்தமோ(!), ‘டாண்’ என்று தெற்கே வந்திறங்கினார் கனிமொழி! நடப்பதை நம்ப முடியாமல், திகைத்துப்போய் ஓரடி பின்வாங்கினார் அழகிரி.

“என்னய்யா… அவங்க (கனிமொழி) பற்றித்தான் ஊரெல்லாம் பேச்சாயிருக்கு. அதையெல்லாம் மக்களை மறக்க வைக்கலாம் என்று நான் கிடந்து அல்லாட, அவங்களையே கொண்டுவந்து இறக்கிறாங்களா? எதுக்கு? மக்களுக்கு ஞாபகப்படுத்தவா?” என்றெல்லாம் நெருக்கமானவர்களிடம் புலம்பியிருக்கிறார் அவர்.

“நிலைமை கையை மீறிப் போய்விட்டது. தெற்கே இனியும் நான் ராஜா இல்லை” என்று அப்போது தெளிவாகப் புரிந்துவிட்டது அவருக்கு. அதன்பின்தான் ஒதுங்கிக் கொண்டார். ஏதோ, சம்பிரதாயத்துக்கு தலையைக் காட்டிக் கொண்டிருந்தாரே தவிர, ஆட்சி மாற்றம் வந்தால் என்ன செய்வது என்ற ‘தனது வேலைகளை’ பார்க்கத் தொடங்கிவிட்டார்.

இப்போது நிஜமாகவே ஆட்சி மாறிவிட்டது. அழகிரி, ‘தனது விஷயத்தில்’ மதுரையை கிளீன் ஸ்லேட்டாக மாற்றி வைத்திருக்கிறார் என்கிறார்கள் அவருடன் நெருக்கமானவர்கள். புதிய அரசு தலைகீழாக முயன்றாலும் பொருளாதாரக் குற்றச்சாட்டுகளில் அவரைச் சிக்க வைக்க முடியாதாம்! ஆட்சி முடியும் முன்னரே, முடிக்க வேண்டிய விஷயங்கள் முடிக்கப்பட்டு விட்டனவாம்!

நம்புவோம். இவ்வளவு கால அவகாசத்தில் அதைச் செய்திருக்க முடியும்தான்.

ஆனால், புதிய அரசு பொருளாதாரக் குற்றச்சாட்டுகளைத் தொடாமல், கிரிமினல் குற்றச்சாட்டுகளில் கவனத்தைத் திருப்பினால்?

ஏனென்றால் அவை அசையாச் சொத்துக்களைப் பற்றியவையல்ல… (எந்தப் பக்கமும்) அசையக்கூடிய சாட்சிகளைப் பற்றியவை அல்லவா!

http://viruvirupu.com/2011/05/16/1796/



No comments:

Post a Comment