Saturday, May 21, 2011

கருணாநிதியின் து(வ)க்கம்

சர்க்காரியா கமிஷன்: 1976-ஆம் ஆண்டு இந்திரா காந்தியினால் – கருணாநிதி பற்றும் அவர் அமைச்சர்கள் மீது அப்போதிருந்த வானளாவிய ஊழல்கள் பற்றி விசாரிக்க – ஒரு அப்பழுக்கற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட கமிஷன் தான் இது.

நீதிபதி ரஞ்சித் சிங் சர்க்காரியா (1916 – 2007) - 2003-ல் எடுத்த புகைப்படம்; நன்றி: பிரன்ட்லைன்

இதே சர்க்காரியா அவர்கள், பின்னாளில் (1983) மத்திய-மாநில உறவுகள் பற்றி ஆய்ந்தறிந்து, சிபாரிசுகளை முன்வைக்க ஒரு அதே இந்திரா காந்தியினால் கமிஷன் வைக்கப் பட்டு அதன் தலைவராகப் பணியாற்றினார், மிகவும் சிறப்பாக..

ஆனால், நான் சர்க்காரியா கமிஷன் என்று ஒத்திசைவில் எழுதுவது 1976 கமிஷனைப் பற்றி மட்டும் தான்.

ஒரு சிறிய வரலாற்றுப் பின்னணி இங்கு நான் கொடுக்க விரும்புகிறேன் – நம் கருணாநிதியின் கயமைப் பின்புலம் புரிவதற்காக மட்டும் – இதனை திமுகவின் வரலாறாகக் கொள்ள முடியாது.

கயமைநிதியின் (சர்க்காரியா கமிஷன் வரையிலான) அவசர வரலாறு

1944-ல் ஜஸ்டிஸ் கட்சியிலிருந்து, ஈவேரா திராவிடர் கழகத்தைத் துவக்கினார். அப்போது, அதில் ஒரு தொண்டனாக இருந்த கருணாநிதிக்கு வயது இருபது தான்! இவர் அப்போது அண்ணாதுரையின் அடிவருடிகளில் ஒருவராகவும் அவர் நம்பிக்கைக்கு உரியவராகவும் இருந்தார்.

1947-ல் இந்திய விடுதலை ஈ வே ரா ‘பெரியாரால்’ துக்க தினமாக அனுஷ்டிக்கப் பட்டபோது – அண்ணாதுரை பெரியாரிடமிருந்து கருத்தளவில் மாறு பட்டார். மேலும் அண்ணாதுரை, தன்னை ஒரு சமூகச் சேவை ஆளாக மட்டும் கருதிக் கொள்ளாமல், அரசியல்-பதவிகள் மூலமாகவும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். ஆனால், ஈவேராவின் ஆளுமை மிகவும் வலியதான ஒன்றான காரணத்தால் அண்ணாதுரையால் அவரை எதிர்கொண்டு, தன் கருத்துக்களை முன் வைக்க முடியவில்லை.

இச்சமயம் EVK சம்பத் (பெரியாருடைய மருமகன்) தான் ஈவேராவுடைய அடுத்த தலைமுறை வாரிசாக, பரவலாக அறியப்பட்டார் – அண்ணாதுரையோ அல்லது வேறு எந்த தலைவரோ அல்லவே அல்ல. சம்பத் ஒரு படித்த, பண்பான, சதிமனம் இல்லாத, ஒரு தலைவர்.

தம் பதவி/அதிகார வேட்கையை அடக்கிக் கொள்ளவே முடியாத, அதே சமயம் சரியான நேரத்துக்குக் காத்திருந்த கருணாநிதி, இப்போது அண்ணாவுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்து திராவிடர் கழகத்திலிருந்து சம்பத்தைப் பிரித்து, ஈவேராவை, பலமிழந்தவராக்கினார். இதற்கான காரணமாக அப்போது அவர்கள் சொன்னது – ஈவேரா தன்னை விட வயதில் மிக இளையவரான மணியம்மையைத் திருமணம் செய்து கொண்டது…

இப்படி ஒரு உப்பு சப்பில்லாத, இன்னொருவரின் பிரத்யேக வாழ்க்கையில் தலையிட்டு (ஈவேரா ஒளிவு மறைவு கொண்டவரே அல்ல; கருணாநிதிகளைப் போலல்லாமல் – மணியம்மையை அவர் ஏமாற்றியோ, நயவஞ்சகமாகவோ திருமணம் செய்து கொள்ளவில்லை; கண்ட, காணாத பெண்களையும் வன்புணர்ச்சி செய்யவில்லை), கிடைத்தது ஆதாயம் என்று சம்பத்தைப் பிரித்து – 1949-ல் திமுக உதயமாகிறது.

அப்போது திமுகவில் அறியப்பட்ட ஐம்பெரும் தலைவர்கள் – நெடுஞ்செழியன், சம்பத், மதியழகன், நடராசன், அண்ணாதுரை. இப்போதும் 25 வயதே ஆன கருணாநிதி அண்ணாதுரையின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தார். வசீகரத் தலைவரான அண்ணாதுரை, ஒரு விதத்தில், கருணாநிதியின் வழிமுறைகள், நேர்மையின்மை போன்றவற்றை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், அவர் சொல்லை தட்டாமல் கேட்பது, பொறுத்துக் கொள்வது என்கிற வழியை, தன் அரசியல் தன்னலம் கருதிச் செய்து கொண்டிருந்தார்.

அப்போதே கருணாநிதி திரைக்கதை-வசனம் – அதாவது அடுக்குமொழி மொக்கை, ஆபாச, இரட்டை அர்த்த வசனங்கள், வாய்ப்பேச்சு வீரம் – உள்ளிட்ட குப்பைகளை எழுதி வந்தார். MGR உடன்தொடர்பு ஏற்பட்டு பணி செய்யும்போது, அவருடைய வசீகரம், மற்றும் திரைபிம்பத்தை திமுக (அதாவது, தான்) உபயோகித்துக் கொள்ளவேண்டும் என்று எண்ணினார், கருணாநிதி.

1953-ல் MGR சேருகிறார் – திமுகவில். இவருக்கு, கருணாநிதி போலல்லாமல், அண்ணாதுரை மேல் மிகுந்த மரியாதையும் கூட . கட்சிக்கு MGR வருகையினால் ஏகப்பட்ட ஆதரவு மக்களிடையே பெருகுகிறது.

ஆனால் சம்பத்துக்கு இம்மாதிரி கொள்கைப்பிடிப்பில்லாமல் திரைப்பட நடிகர்களைச் சேர்ப்பதில் பிடித்தமில்லை. மேலும் அண்ணாதுரை+கருணாநிதியின் அரைவேக்காட்டு ‘திராவிடநாடு’ போன்ற கோஷங்களை அவர் ஒப்புக் கொள்ளவில்லை. நிறைய விரிசல்கள் – ஆனால், MGR பிம்பத்தையும், அண்ணாதுரையின் வசீகரத்தையும் மீறி, சம்பத் திமுகவில் ஏகோபித்த ஆதரவு பெற்றவராக விளங்கினார்.

பதவி சுகம் காண அல்லாடும், கருணாநிதிகளுக்கு இது பொறுக்குமா? ஏற்கனேவே இவர் 1957-ல் MLA வேறு ஆகியிருந்தார் – அப்போது இவருக்கு வயது 33.

சம்பத்துக்கு எதிராக சூழ்ச்சிகள் பல செய்து (அடிதடிகள், மிரட்டல்கள், கொலைகள், துரோகங்கள் என்று பலப்பல) – MGR விசுவாசிகளை, அண்ணாதுரையின் வசீகரத்தை – காரிய மவுனத்தை, உபயோகித்து – சம்பத்தையே திமுக விலிருந்து விலக்கினார் கருணாநிதி…

ஆக, 1961-ல் சம்பத் அண்ணாதுரை-கருணாநிதி சகவாசத்தை வெறுத்து ஒதுக்கி, இவர்களிடமிருந்து விலகி பழ நெடுமாறன் (எப்பேர்ப்பட்ட மகத்தான மனிதர், இந்த நெடுமாறன்!), கண்ணதாசன் போன்றோருடன் சேர்ந்து தமிழ் தேசிய கட்சி என்று ஒன்று ஆரம்பித்தார். பின், வருந்தத் தக்க விதத்தில் வரலாற்றின் பக்கங்களில், ஒரு மூலையில் ஒதுக்கப் பட்டார்.

பின் கருணாநிதி, ராஜாஜி அவர்களை வைத்து, அவரை உபயோகித்து, காமராஜ் அவர்களை பலவீனப் படுத்தி கடைசியில் வீழ்த்தினார். பின் ராஜாஜியையும் உதறினார்.

1967-இல் திமுக அண்ணாதுரையின் கீழ், தமிழகத்தில் பதவிக்கு வந்தது. நம் கயமைநிதி அதில் 43 வயது பொதுப் பணித்துறை (PWD) அமைச்சர்!

இங்கு இவர் பயங்கரமாக கமிஷன் மண்டி நடத்தி, அண்ணாவை நொந்து போகச் செய்தார். மெல்லவோ துப்பவோ முடியாமல், அண்ணா அல்லல் பட்டுக் கொண்டிருக்கும்போது, இந்த கயமைநிதி துள்ளல் போட்டுத் தமிழகத்தைத் துப்புரவாக சுத்தம் செய்து கொண்டிருந்தார். பொறுக்க முடியாத அண்ணா, பொங்கிஎழ முடியாமல் புற்றுநோய் பெற்று இறந்தார் – 1969-இல்.

இப்போது கருணாநிதிக்கும், தமிழக முதலமைச்சர் பதவிக்கும் நடுவில் ஒரே ஒருவர் தான் இருந்தார் – அவர் படித்தவர், பண்பாளர், மென்மையானவர் – அவர் தான் நெடுஞ்செழியன்.

இந்த தடைக்கல்லை முறியடிக்க கருணாநிதி இச்சமயமும் அணுகியவர் எம்ஜீஆர் – அவர் உதவி பெற்று – அதாவது அவர் காலில் விழுந்து, மன்றாடி உதவி கேட்டு – சூழ்ச்சிகள் பல செய்து நெடுஞ்செழியனையும் ஓரம் கட்டினார், இந்தக் கயமைநிதி.

ஆக, முதலமைச்சரும் ஆனார் 1969-ல், இந்தக் கருணாநிதி, தன்னுடைய 49-ஆம் வயதில் – MGR தயவில்! பின் என்ன 1972 வரை ஒரே கொண்டாட்டம், ஒரே ஊழல், ஒரே ஜல்சா தான்…(விரசத்துக்கு மன்னிக்கவும்)

MGR தான் திமுகவின் போஷகர், அவர் தான் கட்சியின் பொக்கிஷதாரர் – எவ்வளவு சந்தோஷம் பாருங்கள், கருணாநிதிக்கு!

மீண்டும், வெள்ளை மனதினரான MGR அவர்களின் வசீகரத்தைப், பணத்தை உபயோகித்து, குள்ள நரித்தனமாக மற்றத் தலைவர்களை ஓரம் கட்டி 1971-ல் முதலமைச்சரானார்.

ஆனால் இப்போது MGR தெரிந்து கொண்டார், இந்தக் கயமைநிதி ஒரேயடியாக ஊழல் செய்கிறார், தான் திமுகவிற்கு கொடுத்த பணத்தையும் திருடுகிறார். மேகலா படக் கம்பெனி மூலமாகவும் திருடுகிறார் என்பது!

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துக், கடைசியில் கருணாநிதியிடம் கணக்குக் கேட்டார் – கடைசியில் 1972-ல் திமுகவிலிருந்து விலகினார் MGR! (கணக்கு மட்டும் கிடைக்கவே இல்லை!)

பின் 1976 வரை கருணாநிதிக்கு ஒரே கொண்டாட்டம் தான், அதாவது, அளவு கடந்த ஊழலோதி ஊழல்!

இப்போது சொல்லுங்கள், நான் கருணாநிதியை, கயமைநிதி என்றழைப்பது சரிதானே?

=-=-=-=-=

இதற்குப் பின், 35 வருடங்களில், இம்மனிதர் செய்த விசித்திர வினோதங்கள், ஊழல்கள், பண்ணிய புலம்பல்கள், துரோகங்கள், அழுத அழுகைகள் பற்றியெல்லாம் நான் இப்போது எழுதுவதாக இல்லை.

சர்க்காரியா கமிஷன் குறித்த இவ்விடுகைகளைப் புரிந்து கொள்ள, தெரிந்து தெளிய, நீங்கள் கருணாநிதியில் பின்புலம் இவ்வளவு தெரிந்து கொண்டால் போதுமானது என்று நினைக்கிறேன்.

=-=-=-=-=

நீங்கள் இந்த சர்க்காரியா அறிக்கையைப் படிக்கும்போது நினைவில் வைத்துக் கொள்ளவேண்டியவை:

  1. 1970-களில் – அதுவும் அதன் முன்பாதியில் நடந்த ஊழல்கள் மட்டும் தான் இதில் விசாரிக்கப் பட்டன.
  2. அப்போதைய தொகைகள், இப்போதைய திமுக ஊழல் அளவுகளோடு ஒப்பிடப்படும்போது, லட்சக் கணக்கான கோடிகளாக இல்லை. ஆனாலும், அக்காலத்து மதிப்பில் இவை மிகவும் அதிகம்.
  3. சர்க்காரியா அவர்களுக்கு அளிக்கப்பட கால அளவும் மிகக் குறைவு – இருந்தாலும் அவர் இழுத்தடிக்காமல், நீட்டிப்பு கேட்காமல், கயமைக் கருணாநிதியின் அராஜகங்களையும், ஒத்துழையாமையும், அச்சுறுத்தல்களையும் மீறி ஒரு கச்சிதமான அறிக்கையை அளித்தார்.
  4. சர்க்காரியா அவர்கள் அறிந்தது கடுகளவு – ஆனால், அப்போதே கருணாநிதி ‘அடித்தது’ மாபெரும் திருப்பதி லட்டு அளவு!
  5. அடிப்படையில் சர்க்காரியா அவர்கள், கூர்மையான மதியும், அறியும் திறனும் மிக்கவர் – நல்ல நேர்மையாளர் – ஆனால் அவரே வியக்கும் அளவுக்கு, அறிவியல் (‘விஞ்ஞான’) பூர்வமான ஊழல் செய்தவர், தடயங்களை அழித்தவர், ஆய்ந்தறிய முடியாத, அளவிட இயலாத ஊழல்களை மிகவும் சாமர்த்தியமாகச் செய்தவர் இந்தக் கருணாநிதி.
  6. ஒவ்வொரு இந்தியனும், குறைந்த பட்சம் ஒவ்வொரு தமிழனும் படித்து, வியந்து, கருணாநிதி மேல் காறித் துப்பவேண்டிய விஷயம் இது…
  7. படிப்பதற்கு கொஞ்சம் கரடு -முரடாக இருக்கலாம் இந்த அறிக்கை – ஆனால் தயவு செய்து இதனைப் படிக்கவும்.

இனி அடுத்த பதிவுகளில் – முதலில் சர்க்காரியாவின் முதல்/முன்னோட்ட அறிக்கையையும், பின்னர் விரித்து எழுதப் பட்ட முழு அறிக்கையையும் காணலாம்…

http://othisaivu.wordpress.com/2011/05/16/post-33/

No comments:

Post a Comment