Friday, May 20, 2011

அ.தி.மு.க., விஸ்வரூபம்: முன்னிறுத்தப்படும் 5 முக்கிய காரணங்கள்

தமிழகத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணி, 203 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. அ.தி.மு.க., 146 இடங்களில் வெற்றி பெற்று தனித்து ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ளது. தேர்தல் அறிவித்த பின்னும், ஓட்டுப்பதிவுக்கு பின்னும் வெளியிடப்பட்ட கருத்துக் கணிப்புகளில், அ.தி.மு.க., கூட்டணி இப்படி ஒரு மெகா வெற்றியை பெரும் என கூறவும் இல்லை; எதிர்பார்க்கவும் இல்லை.

அ.தி.மு.க.,வுக்கு இப்படிப்பட்ட வெற்றி கிடைக்க ஸ்பெக்ட்ரம் ஊழல், மின்வெட்டு, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு, தி.மு.க.,வினரின் ரவுடியிசம் ஆகிய ஐந்து விஷயங்களே முக்கிய காரணங்களாக அமைந்து விட்டன. ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா கைதாகி சிறையில் உள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் குடும்பமும் “2ஜி’ ஊழல் விவகாரத்தில் சிக்கி பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாகியுள்ளது. இதை, தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெயலலிதா, மக்கள் மத்தியில் எடுத்து வைத்தார். அதுதான், மக்கள் மத்தியில் பரவி, தேர்தலில் தி.மு.க., தோல்வியை தழுவ வைத்துள்ளது. அ.தி.மு.க.,வின் விஸ்வரூப வெற்றிக்கு முக்கிய காரணமாக, ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் முதல்காரணமாக உள்ளது.

ஒரு துறைக்கு அமைச்சராக இருப்பவர், தன்னுடைய துறையால் தான் கட்சிக்கு தோல்வி ஏற்படும் என்று பகிரங்கமாக ஒப்புக் கொண்டது தமிழகத்தில் மட்டும்தான். மின்துறை அமைச்சரான ஆற்காடு வீராசாமி, ஒரு கூட்டத்தில் இப்படி பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. ஆனால், அதுதான் உண்மை நிலை என்பதை, தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளது. தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பல திட்டங்களும், வழங்கப்பட்ட இலவசங்களும் பெண்களை அதிகம் கவர்ந்துள்ளது என்ற கணக்கில், தி.மு.க., இருந்தது. எனவே, சட்டசபை தேர்தலில் பெண்களின் ஓட்டு தி.மு.க.,வுக்கு தான் என்று அக்கட்சி பலமாக நம்பியது. ஆனால், விலைவாசி உயர்வு என்ற பிரச்னை தி.மு.க.,வின் கணிப்பை தவறாக்கிவிட்டது.

அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு, விலைவாசி உயர்வும் முக்கிய காரணமாக அமைந்து விட்டது. தமிழக போலீசாரின் செயல்பாடுகளை தி.மு.க.,வினர் முடக்கி வைத்திருந்ததால், தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, அடிதடி, திருட்டு, கொள்ளை, கொலை ஆகியவை சர்வசாதாரணமாகிவிட்டது. ஆளுங்கட்சிக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்பதால், கண்ணெதிரே நடந்த குற்றங்களையும் தடுக்க முடியாத சூழலுக்கு போலீசார் தள்ளப்பட்டிருந்தனர். இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மக்கள்,, அ.தி.மு.க.,வுக்கு ஆளுங்கட்சி வாய்ப்பை வழங்கிவிட்டனர். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் அ.தி.மு.க.,வின் வெற்றிக்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மேற்கண்ட ஐந்து காரணங்கள்தான் அ.தி.மு.க., பக்கம் மக்களை திருப்பியது என்றால் மிகையாகாது.

http://senthilvayal.wordpress.com/2011/05/

No comments:

Post a Comment