அயோத்தி அகழ்வாராய்ச்சி முடிவுகள்: டாக்டர் ஆர்.நாகசாமி
17 Sep 2010 |
அயோத்தி ராமஜென்ம பூமி என்று அழைக்கப்படும் இடத்தில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டு, தன் அறிக்கையை நீதிமன்றத்துக் -குச் சமர்ப்பித்துள்ளது. இவ்வறிக்கை ராமஜென்ம பூமியைப் பற்றி மட்டுமல்ல, இந்திய வரலாற்றுக்கே சிறந்த செய்திகளை அளித்துள்ளது.
இங்கு பூமியை அகழ்வதற்கு முன்பாக நவீன ரேடர் கருவிகளைக் கொண்டு பூமிக்கடியில் ஏதாவது கட்டடங்கள் புதைந்து கிடக்கின்றனவா என்று ஆய்ந்து பார்த்துள்ளனர். இந்த ஆய்வில் சில தூண்களின் பகுதிகளும், கட்டடப் பகுதிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. ரேடார் கருவியினால் காணப்பட்டவை உண்மையானவை தானா என்றும் மேலும் ஏதாவது உள்ளதா எனவும் பார்க்கத்தான் அகழாய்வு இங்கு மேற்கொள்ளப்பட்டது. அதன் அறிக்கைதான் இப்பொழுது சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. இவ்வறிக்கையின் சுருக்கம் வருமாறு.
மூவாயிரம் ஆண்டுகள்
பாபர் மசூதிப் பகுதியில் மிகவும் ஆழமான பகுதியில் எவ்வளவு காலம் மக்கள் வாழ்ந்து இருக்கின்றனர் என அறிய இயற்கையான பகுதி உள்ள வரையில் ஆழ்ந்து பார்த்துள்ளனர். அதன்படி இங்கு 3,000 ஆண்டுகளாக மனிதன் தொடர்ந்து வாழ்ந்துள்ளான் எனக் குறிக்கும் தடயங்கள் கிடைத்துள்ளன.
‘கார்பன் 12’ எனப்படும் விஞ்ஞான முறையில், கிடைத்த பொருட்களின் காலம் கணக்கிடப் பட்டுள்ளது. அக்கால மனிதன் பயன்படுத்திய பானை ஓடுகள், சுடுமண் பாவைகள், மணிகள் முதலியன கிடைத்துள்ளன. சுடுமண் பாவைகளில் தாய் முலை தழுவிய சேய்களின் உருவங்கள் உள்ளன.
இவற்றில் முக்கியமாக குறிப்பிடத்தகுந்தது ஒரு மோதிரமாகும். இதில் அசோகன் காலத்து பிராம்மி எழுத்து பொறிக்கப் பட்டுள்ளது. இங்கு கிடைத்த பொருட்களைக் கொண்டு மக்கள் சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்திருக்கின்றனர் என்னும் உண்மை கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து சுங்கர் என்னும் அரச வமிசத்தவர்கள் ஆண்ட காலத் தடயங்கள் கிடைத்துள்ளன. அக்காலத்தில் வழங்கிய சுடுமண் பாவைகள், விலங்குகளின் உருவங்கள், பானை ஓடுகள் முதலியன கிடைத்துள்ளன. சுமார் இருநூறு ஆண்டுகள் சுங்கர் காலச் சான்றுகள் கிடைக்கின்றன.
சுங்கர் காலத்துக்குப்பின் இங்கு குஷானர் காலப் பொருள்கள் கிடைத்துள்ளன. 300 ஆண்டுகள் இப்பண்பாடு நிலவிய சான்றுகள் இங்கு உள்ளன. அதாவது கிறிஸ்தவ சகாப்தம் தொடங்கி, முதல் மூன்று நூற்றாண்டுகள் இங்கு இந்தப் பண்பாடு நிலவியது. இதை மூன்றாவது காலகட்டம் என்று கூறலாம்.
இதில் பெரிய செங்கற்களைக் கொண்டு கட்டப்பட்ட சுவரின் அடிப்பகுதி ஒன்றும் கிடைத்துள்ளது. ஏழு அடுக்குகள் வரை இச்சுவரின் செங்கல் வரிசை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கட்டடப் பகுதியாகும்.
குப்தர் காலம்
இதையடுத்து குப்தர் காலச் சின்னங்கள் இங்கு தொடர்ந்து கிடைக்கின்றன. இவை சுமார் 300 ஆண்டுகள் அதாவது கி.பி. 5 ஆம் நூற்றாண்டு வரை வழங்கிய பொருட்கள் ஆகும். இங்கு கிடைத்தவற்றில் சந்திரகுப்த அரசன் வெளியிட்ட செப்புக்காசு ஒன்று உள்ளது. இதில் ‘ஸ்ரீ சந்திர’ என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
குப்தர்களுக்குப் பின் ஆண்ட ராஜபுத்திரர்கள் காலம் வரை அடுத்த கட்டம் எனலாம். சுமார் 400 ஆண்டுகள் வரை நிலவிய, அதாவது கி.பி. 600 முதல் கி.பி. 1000 வரையில் மக்கள் வாழ்ந்த பகுதிகளும் கிடைத்துள்ளன.
இக்காலத்தைச் சார்ந்த வட்ட வடிவமான ஒரு கட்டடம் இங்கு கிடைத்துள்ளது. இது ஒரு கோயிலின் வடிவமாகவே காணப்படுகிறது என்பதில் சந்தேகம் இல்லை. செங்கற்களால் கட்டப்பட்ட சுவரில் வடபுறத்தில் அபிஷேக நீர் வழிந்தோட கோயில்களில் அமைக்கப் படும் பிரனாளம் என்னும் பகுதியும் தெளிவாக அடையாளம் காணப் பட்டுள்ளது.
இது ஒரு மாபெரும் கட்டடமாக மண்டபம் போல் காணப்படுகிறது. இரு அங்கணமாக எழுப்பப்பட்டுள்ளது. முன்பிருந்த கட்டடத்தின் மேலேயே இந்தக் கட்டடமும் எழுப்பப்பட்டுள்ளது. இக்கட்டடம் வெகு காலம் பயன்பாட்டில் இருந்துள்ளது. இது 150 அடி நீளமும் 100 அடி அகலமுமாக கட்டப்பட்டுள்ளது.
இப்பெரும் கட்டடத்தின் மேல் தான் பிற்காலத்தில் பாபர் மசூதி எழுப்பப் பட்டிருக்கிறது. பாபர் மசூதியின் நேர் கீழே தான் தெற்கு வடக்காகவும், கிழக்கு மேற்காகவும் இப்பெரும் கட்டடச் சுவர்கள் காணப்படுகின்றன. இம்மண்டபப் பகுதியில் சீராக அமைக்கப்பட்ட ஐம்பது தூண்களின் அடிப்பகுதிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை செங்கல் தூண்களைப் பாவி திமிசு அடித்தும் அதன் மேல் மணற்கற்களை அடுக்கியும் அமைக்கப்பட்டுள்ளன. இத்தூண்கள் எந்த அமைப்பில் இக்கட்டடம் இருந்தது என்பதை தெளிவாகக் காட்டுகின்றன. இக்கட்டடச் சுவர்களின் பகுதிகள் 150 அடி நீளத்திற்கு இன்னமும் எஞ்சியுள்ளன.
இக்கட்டடத்தின் நேர்மையத்தின் மேல்தான் பாபர் மசூதியை எழுப்பியுள்ளனர். இதன் கிழக்கில் செங்கல் பாவிய தரையில் வட்ட வடிவில் குடையப்பட்டுள்ளது. இங்கு ஏதோ முக்கியமான பொருள் பொருத்தி வைத்திருந்தனர் என ஊகிக்க முடிகிறது. இங்கு பல மண் விளக்குகளும் கிடைத்துள்ளன. இவ்விளக்குகள் இக்கட்டடம் புழக்கத்தில் இருந்த காலத்தில் ஏற்றி வைக்கப்பட்டுள்ளன. இதன் மேல்தான் பாபர் மசூதியைக் கட்டியுள்ளார்.
பாபர் மசூதி கட்டிய காலத்தில் இருந்து செலிடான் என்ற வகை பீங்கான் பானை ஓடுகளும், மேல் புறத்தே பீங்கான் போன்ற வழவழப்பான மண்பாண்டங்களும் கிடைத்துள்ளன. இந்த நிலையில் மனித உடல்களைப் புதைத்ததால் எஞ்சியிருக் -கும் மனித எலும்புகளும் கிடைக்கின்றன.
பாபர் மசூதி கட்டியபிறகு இங்கு ஜனநடமாட்டம் குறைந்து போன தடயங்கள் உள்ளன. இந்த அகழாய்வில் பல நிலைகளிலும் கிடைத்த கரித்துண்டுகளைக் கொண்டு கார்பன் 14 என்னும் விஞ்ஞான முறையில் காலத்தைக் கணித்துள்ள -னர். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்து, அதாவது கிறிஸ்தவ சகாப்தத்திற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பிருந்தே அயோத்தியில் மக்கள் பரவலாக வாழ்ந்துள்ளனர் என்பது இதனால் நிரூபணமாகிறது.
பிற்கால கரித்துண்டுகள் அங்கு தொடர்ந்து வரலாற்றுக் காலங்களில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை திட்டவட்டமாகக் காட்டியுள்ளன. தொடக்க காலத்தைச் சேர்ந்த கட்டடங்கள் எதற்காக பயன்பட்டன எனக்கூற இயலாது.
பத்தாம் நூற்றாண்டில்
ஆனால் பத்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்டு தொடர்ந்து பாபர் மசூதி கட்டப்படும் வரை புழக்கத்தில் இருந்த பகுதி பொதுமக்களின் பரவலான பயன்பாட்டுக்கான கட்டிடம் என்பது தெளிவாகிறது. வட இந்திய கோயில்களின் அமைப்புடைய பகுதியும் இதில் அடங்கும். இப்பெரும் கட்டடப் பகுதியில் காணப்படும் ஐம்பதுக்கும் மேற்பட்ட தூண்களின் அடிப்பகுதிகளும், வாயில் நிலைகளும், சிற்பங்களும், அதில் காணப்படும் அபிஷேக நீர் வழியும் பிரனாளமும், மண்விளக்குகளும் கோயில் வழிபாட்டை நினைவு கூர்கின்றன. இவை பாபர் மசூதியின் நேர் கீழே காணப்படுகின்றன. இக்கட்டத்தின் மேல் தான் பாபர் மசூதி கட்டப்பட்டுள்ளது என்பதும் வெளிப்படை. இதுதான் மத்திய தொல்லியல் துறை அளித்துள்ள அறிக்கையாகும்.
இந்த அகழாய்வு முற்றிலும் உயர்நீதிமன்ற அதிகாரியின் நேர்முகப் பார்வையில் நடைபெற்ற ஒன்றாகும். மேலும் இருதரப்பு பிரதிநிதிகளும் அகழாய்வின்போது உடன் இருந்துள்ளனர். இங்கு கிடைத்த பொருள்களைப் பற்றியோ, அன்றி பாபர் மசூதியின் கீழே கட்டடம் இருந்துள்ளது என்பதைப் பற்றியோ இனி ஐயம் எதுவும் இருக்க முடியாது.
டாக்டர் ஆர்.நாகசாமி (1930-) இந்தியாவின் தலைசிறந்த அகழ்வாராய்ச்சி நிபுணர்களில் ஒருவர். தமிழகத் தொல்லியல் துறையின் முன்னாள் இயக்குனர். தஞ்சை, கங்கைகொண்ட சோழபுரம், கரூர், கொற்கை போன்ற இடங்களில் விரிவான அகழ்வாராய்ச்சிகள் நடத்தியவர். தமிழகத்தின் முக்கியமான அருங்காட்சியகங்களை உருவாக்கி, வடிவமைத்தவர். பிரபல லண்டன் நடராஜர் சிலை வழக்கில் இந்திய அரசு சார்பாக வாதாடி பத்தூர் நடராஜர் திருவுருவத்தை மீட்டு வந்தவர். வரலாறு, கல்வெட்டு ஆராய்ச்சி, கலை, இலக்கியம், சமயம், கோயில் ஆகமங்கள் ஆகிய பல துறைகளிலும் புலமை கொண்டவர். இவற்றின் அணுகுமுறைகளை இணைத்து ஆய்வுகள் செய்தவர்.
http://www.tamilhindu.com/2010/09/ayodhya-facts/
No comments:
Post a Comment