Tuesday, October 12, 2010

கஜினி முகமதுவும் ராஜராஜ சோழனும்

“ஹிட்லர் ஆறு மில்லியன் யூதர்களைக் கொல்லவில்லை தெரியுமா? உண்மையிலேயே நாஸிகள் யூதர்களைக் கொல்லவே இல்லை. அந்த வாயு அறைகளில் கொன்றிருக்கவே முடியாது. தொழில்முறை வாயு அறை அமைப்பவர்களிடமெல்லாம் கேட்டு…”

1940களில் நடந்த யூதப் படுகொலைகளையும் நாஸிகளின் வதைமுகாம்களையும் குறித்துப் பரவலாகப் பரப்பப்பட்ட / படும் சால்ஜாப்புகள் இவை. இதைச் செய்வோர் யூத வெறுப்பாளர்கள், தீவிர வலதுசாரி வெள்ளை இனமேன்மைவாதிகள், அரேபிய இஸ்லாமிய அடிப்படைவாதிகள். தெள்ளத்தெளிவாக வரலாற்றில் நடந்த கொடுஞ்செயல்களை நடக்கவே இல்லை என்றும், அவை முழுக்க முழுக்க வேறு கோணத்தில் அணுகப்பட வேண்டியவை என்றும் சொல்லும் போக்கு ஒன்று இருந்து வருகிறது. அரசியல் இலாபக் கணக்குகளில் தொடங்கி, மனவக்கிரம் வரை அத்தகைய அணுகுமுறைக்குப் பல காரணிகள் இருக்கலாம். ஆனால் ஒரு சமூக நோய்ச் சூழலில் அத்தகைய மனவக்கிரங்கள் பல தலைக் காளிங்கனெனப் படம் எடுத்து ஆடி, சூழலையே நச்சாக்கிவிடும்.

இந்த ஞாயிற்றுக் கிழமை தினமலர் வாரமலரில் திண்ணை பகுதியில் நடுத்தெரு நாராயணன் கஜினி முகமதுவின் புகழைப் பாடியிருக்கிறார். உரையாடல் பாணியில் எழுதப்பட்டிருக்கும் அப்பகுதி:

கஜினி முகம்மது

“கஜினி முகமது…ரொம்ப நல்லவன்; வல்லவன்…”

“என்னய்யா, அந்தக் கொள்ளைக்காரப் பாவி, அடிக்கடி நம்மூருக்குள்ளே கோவில் அது, இதுன்னு புகுந்து, கொள்ளையடிச்சிட்டுப் போயிருக்கான். அவனைப் போய் நல்லவன்னு சொல்றியே…’

“அப்படியல்ல, நாணா… நம்ம தமிழ்நாட்டு ராஜாக்கள் கூட, அந்தக் காலத்தில் வடநாட்டை வென்றான், இமயத்திலே புலிக் கொடி பறக்க விட்டான், கங்கை கொண்டான், கடாரம் கொண்டான், இலங்கையை வென்றான் அப்படீனெல்லாம், நாம் நம் நாட்டு அரசர்களைப் பற்றிப் பெருமை பேசுகிறோமல்லவா? அதுபோல, அவனுடைய பாலைவன நாட்டிலே, பயிர், பச்சைக்கே பஞ்சம். நம் நாட்டிலே ஐந்து நதி பாயும், பஞ்சாப் பகுதி வளமாக இருந்தது. வந்தான்; கொள்ளையடித்தான். கோவிலில் இருந்த தங்க விக்கிரகங்களை எடுத்துப் போனான். அந்தத் தங்கத்தைப் பக்கத்து நாட்டுக்கு விற்று, வேண்டிய பண்டம் வாங்கி, தன் நாட்டினரைக் காப்பாற்றினான். அவ்வளவுதானே!”

பெல்ஜியத்தைச் சேர்ந்த இந்தியவியலாளர் கொயன்ராட் எல்ஸ்ட் இந்த மனநிலையை “Negationism” என்கிறார். வரலாற்றின் யதார்த்தத்தைக் காணமறுக்கும் மனநிலை. அப்படிப் புதைகுழிக்குள் தலை மூடிக் கொள்வதை அறிவுஜீவித்தனமெனக் கருதும் மனநிலை.

மேலே சொன்ன நடுத்தெரு நாராயணனின் கஜினி முகமது குறித்த “கண்டுபிடிப்புகளும்” இந்த Negationism வகையறாவைச் சார்ந்த்துதான். இவர் கூறியிருக்கும் ஒவ்வொரு கருத்தும் எத்தனை உண்மை என்று பார்க்கலாம்:

1. சோழர்கள் கடாரம் மீதும் இலங்கை மீதும் படையெடுக்கவில்லையா? அதைப்போலத்தான் முகமது கஜினி படையெடுத்ததும்.

இலங்கை மீது சோழர்கள் படையெடுத்தது வரலாறு. நமக்கெல்லாம் தெரியும். ஜாவா, சுமத்ரா ஆகிய நாடுகளுக்கும் படையெடுத்தார்கள் சோழர்கள். இலங்கையில் அனுராதபுரத்தை அவர்கள் தாக்கினார்கள். எந்தப் படையெடுப்பையும் போலவே அதுவும் அழிவைக் கொண்டு வந்தது. உதாரணமாக, அனுராதாபுரத்தில் சோழ வீர்ர்கள் அங்கிருந்த பௌத்த ஆலயங்களைத் தாக்கினார்கள். ஆனால் படையெடுப்புக்குப் பின்னர் ராஜராஜ சோழனின் நடத்தை எப்படி இருந்தது எனப் பார்க்க வேண்டும். திரிகோணமலை கல்வெட்டுச் செய்திகள், ராஜராஜ சோழன் ஒரு பௌத்த விகாரத்தையும் / மடாலயத்தையும் சீர் செய்து அதற்கு நிலத்தையும் செல்வத்தையும் அளித்த செய்தியைக் கூறுகின்றன. தாங்கள் கடல்கடந்து வென்ற சுமத்ராவின் சைலேந்திர குல அரசர்கள், நாகப்பட்டினத்தில் பௌத்த சூடாமணி விகாரத்தை நிறுவ நிலமும் ஆதரவும் அளித்தது ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும்தான். மேலும், அவர்களின் கடல்கடந்த சாம்ராஜ்ஜிய உருவாக்கம் வெறும் போர்களால் மட்டுமல்ல; உறுதியான வணிக – கலாசார உறவுகளால் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த உறவினை நிலைநிறுத்த கோவில்களையும் பௌத்த விகாரங்களையும் சோழர்கள் கட்டினார்கள்.

அதாவது, சோழர்கள் கடல் கடந்து மதச்சூறையாடல்களைச் செய்யவில்லை. மாறாக, அவர்கள் உருவாக்கிய பண்பாட்டு உறவுகள் இருவழிப்பாதையாக இருந்தன. ராஜராஜ சோழன் தான் பவுத்தர்களைத் தண்டித்து சைவ மதத்தைப் பரப்பியதாக எந்த க் கல்வெட்டு ஆதாரமும் சொல்லவில்லை. ராஜ ராஜ சோழனோ, ராஜேந்திர சோழனோ ஒரு நாட்டின்மீது படையெடுத்தால் அங்குள்ள மக்களைக் கொன்று, தேவாலயங்களை – புத்த விகாரங்களை உடைத்ததாகத் தங்கள் மெய் கீர்த்திகளில் தங்களைப் புகழ்ந்துகொண்டது கிடையாது. தப்பித்தவறி அவர்களுடைய வீரர்கள் இம்மாதிரிச் செயல்களில் ஈடுபட்டால் அது அரசனுக்கு இழுக்காகக் கருதப்பட்டதே ஒழிய, பெருமையாக அல்ல.

இதற்கு நேர் மாறானது கஜினி முகமது நடத்திய தாக்குதல்கள். எப்படி?

2. கஜினி இந்தியாவின்மீது படையெடுத்தது, கொள்ளையடிக்க மட்டுமே. அந்த நோக்கத்தை ஒவ்வொரு முறையும் வெற்றிகரமாக நிறைவேற்றினான்.

முகமது கஜினி, பொருளுக்காக இந்தியா மீது படையெடுத்தான் என்று சொல்வது சரியல்ல. இந்தியாவில் ஓர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தை நிறுவுவதே அவனது நோக்கம். அவனது தாக்குதல்கள் “உருவ வழிபாடு செய்பவர்களை தண்டிக்கவே”. ஆனால் அவனது படையெடுப்புகள், சாம்ராஜ்ஜியம் நிறுவும் நோக்கத்தில் தோல்வி அடைந்தன. பல நேரங்களில் படையெடுப்பு என்பதே நிலை மாறி, சூறையாடிவிட்டு ஓடும் கொள்ளைக்காரச் செயலாக மட்டுமே முடிந்தது. சில நேரங்களில் அதுவும் இல்லாமல் திரும்ப வேண்டிவந்தது. அவனது அவைப் புலவர்களின் மிகையான புகழ்பாடல்களுக்குள் கொஞ்சம் கூர்ந்து பார்த்தாலும் இந்த உண்மைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

உதாரணமாக, கிபி 1015இல் முகமது கஜினி இந்தியாவின்மீது நிகழ்த்திய படையெடுப்பு தோல்வியில் முடிந்தது. இதைக் குறித்து அவனது புகழ் சரிதம் பாடும் அவனது அரசவைக் கவிஞன் உத்பி எதுவுமே சொல்லவில்லை. ஆனால் ஃபெரிஷ்தா இந்தப் படையெடுப்புத் தோல்வி குறித்துக் குறிப்பிடுகிறார். இதைக் குறித்து எழுதும் வரலாற்றாசிரியர்கள், உத்பியின் மௌனம் தோல்வி அடைந்த படையெடுப்புகள் நடக்கவே இல்லை என்பதாகக் காட்ட வேண்டிய கட்டாயம் நிலவியதைக் குறிப்பதாகச் சொல்கின்றனர். முகமதுவின் அவைப் புலவர்களின் துதிகளைப் பெரும்பாலும் அப்படியே வரலாறாக ஏற்ற இஸ்லாமிய வரலாற்றாசிரியர் முகமது சையது கூட, கிபி 1021-22 இந்தியப் படையெடுப்பு அவனது வரலாற்றாசிரியர்களால் பூசி மெழுகப்பட்ட தோல்வி எனச் சொல்கிறார். முகமதுவின் புகழ்பெற்ற சோம்நாத் சூறையாடலின் பின்னரும் அவன் தப்பிதோம் பிழைத்தோம் என்றுதான் ஓடி, தன் தாய்நாடு சேர வேண்டியிருந்தது. போகும் வழியில் ஜாட் இனத்தவரின் கடுமையான தாக்குதலுக்கு உள்ளான அவன், பின்னர் திரும்பப் படகுகளில் வந்து ஜாட்களை தண்டித்ததாக எழுதியிருப்பது தாடியில் மண் ஒட்டவில்லை என்பதற்காக உருவாக்கப்பட்ட புகழ்ச்சிக் கதையே என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.

ஆனால் முகமதுவை ஒரு கதாநாயகனாகக் காட்ட வேண்டிய அவசியம் அன்றைக்கு கலீபாவுக்கு இருந்தது. அன்று கஜினி இஸ்லாமிய கலீபாவின் ஆளுகைக்கு உட்பட்டதுதான். இந்தியாவின் மீதான அவனது படையெடுப்புகளுக்கும் கலீபாவின் மத அங்கீகாரம் இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான் முகமது கொண்டு வந்த தங்கமும் வைரமும் குறித்து அதீத விவரணைகள் உருவாக்கப்பட்டன. அவன் விக்கிரக ஆராதனையாளர்களான ஹிந்துக்களைத் தண்டித்தது குறித்தும் இஸ்லாமினை நிலை நிறுத்தியது குறித்தும் புகழ்மாலைகள் புனையப்பட்டன. முகமது கஜினி இஸ்லாமிய விரிவாதிக்கத்தின் மத்தியகால ஆதர்சமாக்கப்பட்டான். இவனது படையெடுப்பு விவரணங்கள் கஜினி பிரதேசத்தில் புழங்கி வந்த அலெக்ஸாண்டரின் இந்தியப் படையெடுப்புக் கதைகளைப் பிரதி எடுப்பதாகக் காட்டும் வரலாற்றாசிரியர் அலி அனூஷார் கூறுகிறார்: “(இந்தக் கதைகளெல்லாம்) எந்த ஆதாரத்தில் உருவாக்கப்பட்டவை? கஜினி அரசவை உத்வேக உரைகளின் பொம்மலாட்டக்காரர்களால்.”

3. முகமது கஜினி கொள்ளையடித்துக் கொண்டு சென்ற செல்வத்தைக் கொண்டு பல நல்ல காரியங்கள் செய்தான். கலை – அறிவியலை வளர்த்தான். அல்-பரூனியை ஆதரித்தான்.

அல்-பரூனியை கஜினி முகமது ‘ஆதரித்த’ விதம் விசித்திரமானது. வரலாற்றாசிரியரும் வானவியலாளருமான அல்-பரூனியின் சேவைகளை கஜினி முகமது பயன்படுத்திக் கொண்டாலும் அவர் ஒரு கைதியாகவே முகமதுவால் கைப்பற்றப்பட்டு இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டார். பின்னர் சரித்திர ஆசிரியராக மாறியபோதும் கைதி அந்தஸ்து போய்விடாமலே கடைசி வரை இருந்தார். இஸ்லாமியராக இருந்தபோதிலும் அன்னியர்களான ஹிந்துக்களிடம் இயல்பான ஒரு வெறுப்பு அல்லது பாரபட்சப் பார்வை அவருக்கு இருந்தபோதிலும், எது சரி எது தவறு என்பதை அவர் ஆழமாக உணர்ந்திருந்தார். உதாரணமாக முகமது கஜினியின் தாக்குதலுக்கு ஆளாகி அவனை மிகக் கடுமையாக எதிர்த்த எல்லைப்புற ஹிந்து அரச வம்சமான ஸாஹாஹியர்களைக் குறித்து அல்-பரூனி சொல்கிறார்: “அவர்கள் நல்லதைச் செய்வதில் எப்போதும் பின்வாங்கியதில்லை. அவர்கள் நன்னடத்தையும் திண்மையான மனமும் கொண்டவர்கள்”

பல தடவை முகமது கஜினி அல்-பரூனியின்மீது சினம் கொண்டு அவரை மாதக்கணக்கில் தனிமைச் சிறைகளில் அடைத்த விவரணங்களும் கிடைக்கின்றன. முகமது கஜினியின் கொடூரமான நடவடிக்கையால் ஹிந்து அறிஞர்களுடனும் அறிவியலாளர்களுடனும் பழகி அறிவைப் பெறும் வாய்ப்பை இஸ்லாமிய உலகம் இழக்கிறது என்பதையும் அல்-பரூனி பதிவு செய்கிறார்.

முகமது கஜினியின் அரசவை வரலாற்றாசிரியரான உத்பி, எப்படி முகமது இஸ்லாமிய மையக் கருத்தாக்கத்துக்கு எதிரான கருத்துகள் பரவுவதைத் தடுத்தான் என்பதையும், எந்தவிதப் புதிய எண்ணவோட்டத்தையும் ஏற்பட்டுவிடாமல் தடுப்பதில் எத்தனை தீவிரமாகவும் கவனமாகவும் இருந்தான் என்பதையும் விவரிக்கிறார். இஸ்லாமிய கலீப்பேத்திலிருந்து தப்பி கிழக்கத்திய நாடுகளுக்கு நூல்களின் ஓலைச்சுருள்களுடன் தப்பி ஓடிவந்த ஓர் எகிப்திய அறிஞரை முகமது கைப்பற்றி தூக்குமேடைக்கு அனுப்பினான் என்பதை உத்பி பெருமையுடன் விவரிக்கிறார்.

ஆக, கலைகளை, அறிவியலை, கல்வியை முகமது கஜினி வளர்த்தான் என்பது நிச்சயமாகத் தவறான விஷயமே ஆகும்.

4. அப்படியானால் முகமது கஜினி எப்படிப்பட்ட மன்னன்? அவனது முக்கியத்துவம்தான் என்ன?

முகமது கஜினி ஒரு சிறந்த போர்வீரன். காட்டுமிராண்டியோ, பண்பாடற்றவனோ அல்ல. போருக்காகப் போர் என்று போரிடுபவனும் அல்ல. அவனது முதன்மை நோக்கமாக, அவனது காலகட்டத்திலும், பின்னர் அடுத்த 1000 ஆண்டுகளுக்கும் அவன் இஸ்லாமிய விரிவாதிக்கத்தின் சின்னமாகவே இருந்திருக்கிறான். உதாரணமாக, இந்த வாசகங்களைப் படியுங்கள்:

‘இஸ்லாம், விக்கிர ஆராதனையின்மீது கொண்ட வெற்றியின் மணிமகுடமாக சோமநாத் கோவில் சூறையாடல் கருதப்பட்டது. இஸ்லாமிய உலகமே முகமது கஜினியைப் பெரும் வீரனாகப் பாராட்டியது. அரசவைக் கவிஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு அவனைப் பாராட்டினார்கள்.’

தலைசிறந்த இஸ்லாமிய வரலாற்றாசிரியர் முகமது நஸீம் 1930இல் எழுதிய வாசகங்கள் இவை. ராஜராஜ சோழனின் அத்தனை மெய் கீர்த்திகளிலும் ஒரு வரியாவது அவன் (அல்லது அவனது வீர்ர்கள்) புத்த விகாரங்களை இடித்ததைப் பாராட்டி இருப்பதைக் காட்டமுடியுமா? இத்தனைக்கும் தன்னை சிவபாதசேகரன் என்று சொல்லிக் கொண்ட மன்னன்தான் அவன். ஆனால் நிச்சயமாக பல புத்த விகாரங்களுக்கும் பள்ளிகளுக்கும் நிலம் கொடுத்த செப்பேடுகளில் அவன் பெயரை காணமுடியும்.

முகமது கஜினிக்கு ஒரு மதச்சார்பற்ற காரணத்தைக் கண்டுபிடித்து அவனை “வல்லவன் நல்லவன்” ஆக்குவதன் மூலம் ஊக்குவிக்கும் சக்திகள் எத்தகையவை என்பதை நாம் அறியவில்லை என்பதால்தான், ஒவ்வொரு பாகிஸ்தானிய ஆக்கிரமிப்பின் போதும் பாகிஸ்தானிய வானொலி முகமது கஜினியின் பெயரை முழங்குகிறது. இன்று இந்தியாவை மிரட்டும் அணு முனையுடன் கூடிய ஏவுகணைகளுக்குப் பெயரும் கஜினிதான்.

ஆனால் இத்தகைய போலி சால்ஜாப்புக்கள் எதுவும் இல்லாமல் வரலாற்றை எதிர்நோக்கி நம்மால் கடந்து செல்ல முடியாதா? முடியும் என்கிறது அண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சி. முகமதுவின் தலைநகரமான கஜினி இன்று ஆப்கனிஸ்தானில் ஒரு நகரம். அங்கிருந்து வருகிறது ஒரு குழு. எந்த சோமநாதபுரக் கோவிலை கஜினி உடைத்தானோ, அதே குஜராத்துக்கு. இன்று சோமநாதபுரத்தில் கம்பீரமாக நிற்கிறது சோமநாதர் ஆலயம். கஜினியில் இருந்து வந்த குழுவினர் வைக்கும் கோரிக்கை “போர் எங்கள் நகரத்தை அடியோடு அழித்துவிட்டது. அதை மீண்டும் கட்டி எழுப்ப நீங்கள் உதவவேண்டும்.”

கோரிக்கையை ஏற்று உதவுகிறது குஜராத் அரசு.

இதுதான் இந்தியா. இலங்கையில் பௌத்த விகாரத்தைப் புதுப்பித்த சிவபாத சேகரனான இராஜராஜனின் சூடாமணி விகாரத்தை நாகப்பட்டினத்தில் அமைப்பதில் பெருமைப்பட்ட சோழர்களின் பண்பாடு மிளிரும் இந்தியா.

ஜெர்மனிக்கும் இஸ்ரேலுக்குமான நல்லுறவு தழைக்க, யூதர்களை ஹிட்லர் கொன்றது யூத வெறுப்பினால் என்பதை மாற்றி, அன்று ஜெர்மனியில் நிலவிய சமுதாய – பொருளாதாரச் சூழல்தான் காரணம் என எவரும் சொல்வதில்லை. எவனோ ஒரு வெறிபிடித்த கொள்ளைக்காரன் மதத்தினால் செய்த செயலை நியாயப்படுத்துவதன் மூலம்தான் ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் உள்ள நல்லுறவை உருவாக்க முடியும் என நினைப்பது இரு சமுதாயத்தினருக்கும் செய்யும் மோசடி. குறிப்பாக, முஸ்லீம் சமுதாயத்தினருக்குச் செய்யப்படும் அவமானம். ஏனெனில், இந்திய முஸ்லீம்கள் முகமது கஜினியின் வாரிசுகளும் இல்லை. அவனது மனநிலையைக் கொண்டவர்களும் இல்லை – நம் போலி மதச்சார்பின்மைவாதிகளின் பொய்ப் பரப்பல்கள் எடுபடாதவரை.

அரவிந்தன் நீலகண்டன்

http://www.tamilpaper.net/?p=381

No comments:

Post a Comment