Thursday, March 17, 2011

சூடும் இல்லை. சொரணையும் இல்லை.

யாருக்கு என்று கேட்கிறீர்களா ? தமிழ்நாட்டில் உள்ள அதிகாரிகளுக்குத் தான்.

ஒரு அரசாங்கம் தவறு செய்திருக்கிறது என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டினால், அதை திருத்திக் கொள்வதை விட்டு விட்டு, அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திலே மேல் முறையீடு செய்யும் ஒரு கேடு கெட்ட அரசாங்கத்தை என்னவென்று சொல்வீர்கள் ?

சிவில் சர்வீஸ் என்று அழைக்கப் படும், அகில இந்தியப் பணித் தேர்வானது, இருப்பதிலேயே மிக மிக கடினமான தேர்வு. அந்தத் தேர்வை ஏன் அவ்வளவு கடினமாக வைத்திருக்கிறார்கள் என்றால், அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ் ஆகவோ, ஐபிஎஸ் ஆகவோ பணிக்கு வருபவர்களிடம் ஒப்படைக்கப் பட இருக்கும் பொறுப்புகள் ஏராளம். பலரின் தலையெழுத்தை தீர்மானிக்கும் பொறுப்பு அந்த அதிகாரிகளுக்கு உண்டு. அதனால்தான் அவ்வாறு மிகப் பொறுப்பு வாய்ந்த பதவிகளுக்கு நியமிக்கப் பட இருப்பவர்கள், மிகுந்த கவனத்தோடும், அறிவோடும் பணியாற்ற வேண்டும் என்று கடினமான தேர்வாக இருக்கிறது.

ஆனால் அப்படிப் பட்ட தேர்வில் தேர்ச்சி அடைந்து மிகப் பெரிய பொறுப்பில் இருப்பவர்கள் தறுதலைகளாக இருந்தால் ? அதுதான் நடக்கிறது தமிழ்நாட்டில்.

letikha_saran

டிஜிபி பதவிக்கு லத்திக்கா சரணை நியமித்தது தவறு, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் இந்த நியமனம் நடைபெற்று உள்ளது. உச்சநீதிமன்றத் தீர்ப்பானது, இந்நாட்டின் சட்டமாகும். அந்தச் சட்டத்தை மதிக்காமல் லத்திக்கா சரண் நியமனம் நடைபெற்றுள்ளது, இது போல உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை செயல்படுத்தாமல் இருந்தால், அதைச் செயல்படுத்துவது எங்களது கடமை என்று ஒரு நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 26 அக்டோபருக்குள், புதிய டிஜிபி நியமிப்பதற்கான பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணையத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் உத்தரவிடுகிறது.

இதை அமல்படுத்துவார்கள் என்று பார்த்தால், இதை எதிர்த்து உச்ச நிதிமன்றத்திற்கு போகிறார்களே இந்த அறிவுக் கெட்டவர்கள் ? உயர்நீதிமன்றம் செருப்பால் அடித்தது போல, இந்த நியமனம் தவறு, செய்யக் கூடாது என்று உத்தரவு போட்டும், உச்ச நீதிமன்றத்திலும் சென்று செருப்படி வாங்கிக் கொண்டு வரும் இந்த அதிகாரிகளை எதால் அடிப்பது ?

26ந் தேதிக்குள் பட்டியலை மத்திய பணியாளர் தேர்வாணைத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அரசு வழக்கறிஞர் எடுத்துரைத்த போது, நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஆனால் இதை அவசர வழக்காகக் கருதி விசாரிக்க முடியாது என்றுதானே உச்ச நீதிமன்றம் சொல்லியது… இப்படியொரு அவமானத்தை எதற்காக இழுத்துப் போட்டுக் கொண்டார்கள் இந்தக் கயவர்கள் ?

அப்படி என்ன லத்திக்கா சரண் ஊர் உலகத்தில் இல்லாத தெறம வாய்ந்த அதிகாரியா ? வேறு யாருமே இல்லையா ?

இந்த லத்திக்கா சரண், உதவி ஆய்வாளர்கள் பதவி உயர்வு விஷயத்தில் எவ்வளவு குளறுபடிகளை செய்திருக்கிறார் தெரியுமா ? 1999ம் ஆண்டு நேரடி பெண் உதவி ஆய்வாளர்களாக தேர்ந்தேடுக்கப் பட்டவர்களுக்கு ஆய்வாளர் பதவி உயர்வு வழங்காமல், 2003ல் தலைமைக் காவலராக இருந்து உதவி ஆய்வாளராக ஆன 10 பேருக்கு, விதிகளை மீறி ஆய்வாளர் பதவி உயர்வு கொடுத்திருக்கிறார். இதை எதிர்த்து நீதிமன்றம் சென்ற பெண் உதவி ஆய்வாளர்களை, அழைத்து நேரில் மிரட்டியிருக்கிறார். நீதிமன்றம் செல்வதற்கு உங்களுக்கு என்ன துணிச்சல் ? அரசாங்கத்தை எதிர்த்து வழக்கு போடும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டதா என்று மிரட்டியிருக்கிறார்.

உதவி ஆய்வாளர்கள் தங்கள் பதவி உயர்வு தொடர்பாக வழக்கு போடக்கூடாதாம். இவர் மட்டும் ஜுனியர்களை முந்தி பதவி உயர்வு வாங்கிக் கொண்டு, அதை எதிர்த்து யாராவது நீதிமன்றம் சென்றால், அப்பீலுக்கு மேல் அப்பீல் செய்வாராம்.

உச்சநீதிமன்றத்துக்கு மேல் முறையீடு செய்கிறாரே ஞானதேசிகன்… அவருக்கு இது போல நடந்திருந்தால் வழக்கு போடாமல் இருப்பாரா.. ? எப்படியாவது, மாலதி உடல் நலம் குன்றி, விருப்ப ஓய்வில் செல்லுவார். அப்போது, தலைமைச் செயலாளர் பதவியை கைப்பற்றலாம் என்ற நப்பாசை தானே இன்று ஜாபர் சேட் சொல்லுகிற படியெல்லாம் ஆட வைக்கிறது… ?

ஞானதேசிகன் அவர்களே…. லத்திக்கா வழக்கில், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீங்கள் தாக்கல் செய்த மனு பச்சைப் பொய் என்பது நிரூபிக்கப் பட்டும் கூடவா உங்களுக்கு சொரணை இல்லாமல் போய் விட்டது ? புதிய காவல் பயிற்சிக் கல்லூரி அருகே உங்கள் தொழில் கூட்டுதாரர்களோடு நீங்கள் வாங்கியிருக்கும் 1000 ஏக்கர் நிலத்தை ஜாபர் அபகரித்துக் கொள்வார் என்ற பயமா ? இல்லை ஜாபரோடு கூட்டு சேர்ந்து நீங்கள் செய்யும் அட்டூழியங்களை வெளியில் சொல்லி விடுவார் என்ற பயமா ?

லத்திக்கா சரண்தான் வேண்டும் என்று ஜாபர் சேட், கே.ராதாகிருஷ்ணன், மாலதி, ஞானதேசிகன் ஆகிய அனைவரும் கங்கணம் கட்டிக் கொண்டு இருப்பதன் காரணம், லத்திக்கா சரண் டிஜிபியாக இருக்கும் வரை தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், யார் மீது வேண்டுமானாலும் பொய் வழக்கு போடலாம், யாரை வேண்டுமானாலும் உள்ளே தள்ளலாம் என்பதுதான். லத்திக்கா ஒரு மங்குணி டிஜிபி என்பதால்தான் இவரே இருக்கட்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்.

இந்த அதிகாரிகள் தங்களுக்குள் இப்படி பதவிச் சண்டை போட்டுக் கொண்டு, நீதிமன்றம் சென்று கொண்டிருந்தால், இவர்களுக்குக் கீழே பணியாற்றும் மற்ற அதிகாரிகள் எப்படி இவர்களை மதிப்பார்கள்… ?

இவர்கள் இஷ்டத்துக்கு யாரை வேண்டுமானாலும் எந்தப் பதவியில் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம் என்று இருக்கக் கூடாது என்பதற்காகத் தானே, நீதிமன்றங்கள் உள்ளன. அந்த நீதிமன்றங்களின் தீர்ப்பையும் மதிக்காமல் இழுத்தடித்துக் கொண்டு இருந்தால், மக்கள் மட்டும் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று எப்படி எதிர்ப்பார்கிறார்கள் ?

ஏதாவது ஒரு கட்டத்திலாவது தவறு செய்தவர்கள் தங்கள் தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். அப்படி திருத்திக் கொள்ளாவிட்டால் திருத்தப் படுவார்கள்.

காவல்துறையில், துரை ஆடாத ஆட்டமா…. ? முத்துக் கருப்பன் ஆடாத ஆட்டமா ? சிவணான்டி ஆடாத ஆட்டமா ? கடைசியில் துரை எப்படிப் பட்ட மரணத்தை சந்தித்தார் தெரியுமா ?

அந்தக் கதி இன்று அதிகாரத்தின் உச்சாணிக் கொம்பில் உட்கார்ந்து கொண்டு ஆட்டம் போடும் ஜாபர் சேட்டுக்கும், கே.ராதாகிருஷ்ணனுக்கும், ஞானதேசிகனுக்கும் வராது என்று என்ன நிச்சயம் ?

மிக மிக கடினமான ஒரு நோயோடு போராடிக் கொண்டிருக்கும் தலைமைச் செயலாளர் மாலதியும், இந்த அநியாயங்களுக்கு ஒத்து ஊதிக் கொண்டிருப்பது தான் வேதனையிலும் வேதனை.

இந்த ஆட்சியில் இருந்த தலைமைச் செயலாளர்களில் ஒருவர் கூட உருப்படியானவர் இல்லை. திரிபாதி ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிக்க வைக்க முயற்சி செய்தார் என்றால், ஸ்ரீபதி ஊழல் வழக்கில் சிக்கிய இரண்டு திருடர்களை காப்பாற்ற முயற்சி செய்தார். அடுத்து தலைமைச் செயலாளர் மாலதி, ஊழல் வழக்கில் இருந்து ஜாபர் சேட் உதவியுடன் தன்னைக் காப்பாற்றிக் கொண்டவர்.

Malathy_S

தமிழகத்தில் உள்ள அதிகார வர்க்கம், காங்கிரசின் கோஷ்டிச் சண்டைகளை விட, மோசமான தெருச் சண்டையில் இறங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு ஒரு ஆபத்தான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த அதிகாரப் போட்டிக்கான தீர்வு இப்போதைக்கு இல்லை என்பது மட்டும் தெளிவு.

http://savukku.net/index.php?option=com_content&view=article&id=131:2010-10-22-19-23-01&catid=1:2010-07-12-16-58-06&Itemid=2

No comments:

Post a Comment