Wednesday, June 1, 2011

2 ஜி ஊழல் விவகாரம்: தயாநிதி மாறனுக்கு பாஜக 4 கேள்விகள்




புது தில்லி, மே 31: 2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் தயாநிதி மாறனுக்கு பாஜக நான்கு கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு விளக்கம் அளிக்குமாறு கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஊழல்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்த வரிசையில் இப்போது மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டு வெளிவந்துள்ளது. இது தொடர்பாக செய்திகளை வெளியிட்ட ஊடகங்களுக்கு அவர் சட்டரீதியாக நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆனால் பாஜகவை பொறுத்தவரை, தங்களுக்கு கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் மத்திய அமைச்சரிடம் விளக்கம் கோருவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார். 2004-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்து வந்தார். அப்போது மத்திய அரசு, இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டினர் முதலீடு செய்யும் விதிமுறைகளை மாற்றி 24 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தியதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

தமிழகத்தில் இருந்து ஏர்செல் நிறுவனம் முதலில் ஒரு சர்க்களில் தனது பணியை தொடங்கி செயல்பட்டு வந்ததாகவும், பின்னர் இந்த நிறுவனத்துக்கு 14 சர்க்கிள்களில் அனுமதி வழங்கப்பட்டது. இந்த நிறுவனத்தில் மலேசியாவை சேர்ந்த மாக்சிஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் 74 சதவீத பங்குகளை வாங்கியுள்ளது. இந்த நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழும நிறுவனத்தில் முதலீடு செய்திருப்பதாகவும் அது குறித்து பாஜக இந்த கேள்விகளை எழுப்பியுள்ளதாகவும் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவைச் சேர்ந்ததாகக் கூறப்படும் மாக்சிஸ் கம்யூனிகேஷன் தனது மற்றொரு நிறுவனமான ஆஸ்ட்ரோ நிறுவனம் மூலம் சன் குழுமத்தில் முதலீடு செய்துள்ளதா? தயாநிதி மாறன் தொலைத் தொடர்புத் துறையின் அமைச்சராக இருந்த போதுதான் அலைக்கற்றை விலையை நிர்ணயம் செய்வது தொடர்பான அதிகாரத்தை அமைச்சர் குழுவிடம் இருந்து மாற்றி தானே முடிவை நிர்ணயம் செய்யும் அதிகாரத்தை பெற்றுள்ளதாகத் தெரிகிறது.

2 ஜி ஊழல் விவகாரத்தில் கடந்த காலத்தில் பிரதமர் உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்தது போல் இந்த விவகாரத்தில் நடந்து கொள்ளக்கூடாது என்றும் மீண்டும் இது போன்ற தவறுகள் நடைபெறாமல் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளிக்க வேண்டும் என்றும் ரவிசங்கர் பிரசாத் வலியுறுத்தினார். 2 ஜி ஊழலில் குறிப்பாக திமுகவின் குடும்ப நிறுவனங்கள் தொடர்பு கொண்டிருப்பது குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரினார்.

2 ஜி ஊழல் விவகாரம் தொடர்பாக மத்திய அமலாக்க பிரிவு வெளிநாடுகளுக்குச் சென்று விசாரணை நடத்தி வந்துள்ளது. வெளிநாடுகளில் நடைபெற்ற விசாரணையில் தக்க ஆதாரங்கள் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அதன் அடிப்படையில் விரைவில் மேலும் சிலர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment