Friday, July 8, 2011

தலையங்கம்: ஆமாம், விதிவிலக்கல்ல!





எப்போதோ நடந்திருக்க வேண்டியது, காலதாமதமாக இப்போது நடந்திருக்கிறது. மத்தியப் புலனாய்வுத் துறை ஐயம்திரிபற மத்திய ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறனின் செயல்பாடுகளில் இருந்த தவறை உச்ச நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டிய பிறகுதான் வேறு வழியே இல்லாமல் அவரது பதவி விலகல் கடிதத்தைக் கேட்டுப் பெற்றிருக்கிறார் என்பதிலிருந்தே தனது கடமையைப் பிரதமர் நன்கு செய்யவில்லை என்பது உறுதியாகிறது.

2004 மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் அங்கம் வகிக்க திமுக முன்வைத்த நிபந்தனைகளில் முக்கியமானது, தயாநிதி மாறனுக்குத் தகவல் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் பதவி. அந்தப் பேராசைதான் இப்போது அந்தக் குடும்பத்தினர் ஒருவர்பின் ஒருவராக திகார் சிறைச்சாலைக்குள் அடைக்கப்பட வழிகோலியிருக்கிறது.

அப்படி என்னதான் தவறு செய்துவிட்டார் தயாநிதி மாறன்? 2004 முதல் 2007 வரை தயாநிதி மாறன் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த காலகட்டத்தில்தான் அலைக்கற்றை ஒதுக்கீடு என்பது லாபம் கொழிக்கும் ஒன்றாக மாறத் தொடங்கியது. அதுவரை குறைந்த அளவிலான செல்பேசிகள் இருந்ததுபோய், ரிக்ஷா ஓட்டுநரும், காய்கறி வியாபாரியும், விவசாயியும், கட்டடத் தொழிலாளியும்கூட செல்பேசியும் கையுமாக இந்தியாவை ஒளிரச் செய்யத் தொடங்கிய காலகட்டம் அது.

1994-ல் செல்பேசி சேவையில் ஈடுபடத் தொடங்கிய சிவசங்கரன் என்பவரின் "ஏர்செல்' நிறுவனம் 1999 முதல் சென்னையைத் தவிர, தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் சேவைக்காக உரிமம் பெற்றது. 2003-ல் சென்னையிலும் சேவையில் ஈடுபட உரிமம் பெற்றதுடன், 2004-ல் விண்ணப்பித்திருந்த இந்தியாவின் 10 வெவ்வேறு பகுதிகளில் 7 பகுதிகளுக்கான உரிமத்தையும் பெற்றது. இதற்குள் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தயாநிதி மாறன் 2004-ல் மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகிறார்.

தான் விண்ணப்பித்திருந்த மீதமுள்ள 3 பகுதிகளுக்கு உரிமம் பெற தலைகீழாக நின்றும் சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் வேண்டுமென்றே தள்ளிப்போடுகிறார் அமைச்சர் தயாநிதி மாறன். ஏர்செல் நிறுவனம் மீதமுள்ள 3 உரிமங்களையும் பெற்றுவிட்டால் தொலைக்காட்சி டிடிஎச் சேவையைத் தொடங்கக்கூடும், அதனால் தங்களது குடும்ப நிறுவனமான சுமங்கலி கேபிள் விஷன் பாதிக்கப்படக்கூடும் என்பதுதான் தயாநிதி மாறனின் தயக்கத்துக்கான பின்னணி.

அரசியல் சட்டத்தின் மீது விருப்பு வெறுப்பில்லாமல், சுயநல மனமாச்சரியங்களுக்கு இடம்கொடுக்காமல் பணியாற்றுவேன் என்று கூறி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட தயாநிதி மாறனின் அடுத்தகட்ட நடவடிக்கை அதைவிட மோசமானது. ஏர்செல் நிறுவனத்துக்கு உரிமம் தராமல் இழுத்தடித்து சிவசங்கரனை உருட்டி மிரட்டி ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் என்கிற நிறுவனத்துக்கு விற்றுவிடச் செய்திருக்கிறார் அமைச்சர் தயாநிதி மாறன்.

ரூ. 36,000 கோடி விலை மதிப்புள்ள ஏர்செல் நிறுவனத்தின் பங்குகள் வெறும் ரூ. 3,600 கோடிக்கு மேக்சிஸ் நிறுவனத்துக்கும் (74%), அப்போலோ குழுமத்துக்கும் (26%) வலுக்கட்டாயமாகப் பெறப்பட்டன. இந்த விற்பனை முடிந்ததுதான் தாமதம், முறையான கட்டணத்தைப் பெறுவதற்குக்கூட காத்திராமல் ஏர்செல் நிறுவனத்துக்கு மீதமுள்ள 3 உரிமங்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இந்தியாவிலுள்ள 62 கோடி செல்பேசி வாடிக்கையாளர்களின் வியாபாரத்தைப் பெறும் வாய்ப்பை புதிய நிர்வாகத்தின்கீழ் உள்ள ஏர்செல் நிறுவனம் பெற்றது. இதற்குப் பிரதியுபகாரமாக மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஆஸ்ட்ரோ என்கிற நிறுவனம் சன் குழுமத்தின் டிடிஎச் சேவையிலும் எப்எம் சேவையிலும் ரூ. 600 கோடி முதலீடு செய்திருக்கிறது என்பது சிவசங்கரனின் குற்றச்சாட்டு.

அத்துடன் நின்றுவிடவில்லை தயாநிதி மாறனின் முறைகேடுகள். 2006-ல் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர்களின் குழுவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்கிற நிதியமைச்சகத்தின் கருத்தைப் பிடிவாதமாக எதிர்த்து, அது தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் என்கிற முறையில் தனது தனிப்பட்ட உரிமையாகத்தான் இருக்க வேண்டும் என்று கேட்டுப் பெற்றிருக்கிறார் தயாநிதி மாறன். ஒருவேளை, அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான கட்டண நிர்ணயம் அமைச்சர் குழுவால் தீர்மானிக்கப்பட்டிருந்தால் ஒதுக்கீட்டில் முறைகேடுகளுக்கு இடமே இல்லாமல் போயிருக்கும்.

மாறன் சகோதரர்களின் முறைகேடான வியாபார வழிமுறைகள் என்றாவது ஒருநாள் அவர்களைச் சட்டத்தின் பிடியில் சிக்க வைக்கும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், எதிர்பாராத ஒன்றும் நடந்திருக்கிறது. மாறன் சகோதரர்களின் தாத்தாவான முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் விசித்திரமான வியாக்கியானம்தான் அது.

"உலகிலேயே, குறிப்பாக இந்தியாவில் மீடியாக்களின் ஆட்சி நடைபெறுகிறது. அவர்கள் நினைத்தால் யாரையும் இழிவுபடுத்திவிட முடியும். அதற்குத் தயாநிதி மாறன் விதிவிலக்கல்ல' என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார் கருணாநிதி. ஊடகத்தின் மூலம் தனக்கு வேண்டாதவர்களை இழிவுபடுத்தும் வழிமுறைக்கு வித்திட்டதே கருணாநிதியும் அவர் சார்ந்த இயக்கமும்தானே. காமராஜ், பக்தவத்சலத்தில் தொடங்கி யார் யாரையெல்லாமோ, ஊடகம் கையிலிருக்கிறது என்கிற மமதையிலும் இறுமாப்பிலும் இழிவுபடுத்தி அரசியல் ஆதாயம் தேடியபோது கிடைக்காத ஞானோதயம் இப்போது தனது மகளும், பேரனும் "மெகா' ஊழலில் ஈடுபட்டு சட்டத்தின் பிடியில் சிக்கும்போதுதான் கருணாநிதிக்கு ஏற்பட்டிருக்கிறது!

No comments:

Post a Comment