Monday, December 19, 2011
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு இருந்தால் தீட்டு பட்டுவிடுமா? (ஆர்.எஸ்.எஸ் தீண்டத்தகாத அமைப்பா?) இருக்கிற மத்திய அமைச்சர்களில் மொழி ஆளுமை அதிகம் கொண்டவர், உள்துற
ஆர்.எஸ்.எஸ்., ஆதரவு இருந்தால் தீட்டு பட்டுவிடுமா? (ஆர்.எஸ்.எஸ் தீண்டத்தகாத அமைப்பா?)
இருக்கிற மத்திய அமைச்சர்களில் மொழி ஆளுமை அதிகம் கொண்டவர், உள்துறை அமைச்சர் சிதம்பரம். அதுவும், தமிழ், ஆங்கிலம், இந்தி என மும்மொழிகளிலும் வெளுத்துக் கட்டக் கூடியவர். தேர்ந்த வக்கீலான கபில் சிபலைப் போலவே, விஷய ஞானம் அதிகம் உள்ளவர் என்றும் சொல்லலாம். ஆனால், இவர்களின் ஞானமெல்லாம், குற்றம் செய்வதையே குல வழக்கமாகக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சிக்கு வக்காலத்து வாங்கவே பயன்படுவதால், அனைத்தும், விழலுக்கு இறைந்த நீராகிவிடுகின்றன.
அப்படி, சமீபத்திலும் கொஞ்சம் நீர் இறைத்திருக்கிறார் சிதம்பரம். "யோகா குரு பாபா ராம்தேவின், ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் பின்னணியில், ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் தூண்டுதல் உள்ளது' என முத்து உதிர்த்திருக்கிறார். எந்தச்சாமானியனும், "மன்மோகன் சிங்குக்கு அல்-கொய்தாவுடன் தொடர்பு இருக்கிறது' என்ற ரீதியில் தான் புரிந்துகொள்வான். அத்தனை அதிர்ச்சி தரத்தக்க வார்த்தைப்பிரயோகம். ஊழலுக்கு எதிரான போராட்டத்துக்கு, ஆர்.எஸ்.எஸ்.,சின் தூண்டுதல் இருந்தால் என்ன; ஆறுமுகச்சாமியின் தூண்டுதல் இருந்தால் என்ன? ஊழல் என்பது ஒழித்துக்கட்டப்பட வேண்டிய விஷயம் தானே! ஆர்.எஸ்.எஸ்.,சின் பின்னணி இருப்பதனாலேயே, அவர்களைப் புறந்தள்ளிவிட்டு, ஊழலைப் போற்றிப் பாட வேண்டுமா? அப்படி என்ன பயங்கரவாத செயலில் ஆர்.எஸ்.எஸ்., ஈடுபட்டுள்ளது? இந்தியாவில் இதுவரை நடந்த பயங்கரவாத சம்பவங்களுக்கும், ஆர்.எஸ்.எஸ்.,சுக்கும் நேரடித்தொடர்பை நிரூபிக்கும் எந்தவொரு ஆதாரமாவது உண்டா? மாலேகாவ்ன் குண்டுவெடிப்பிலும், அஜ்மீர் ஷெரீஃப் குண்டுவெடிப்பிலும் ஒரு சில ஆர்.எஸ்.எஸ்., பிரமுகர்களின் பெயர்கள் அடிபட்டன. இவர்களில், ஆர்.எஸ்.எஸ்., பிரசாரக் தேவேந்திர குப்தா கைது செய்யப்பட்டார். தகவல் அறிந்த உடனே, அவருடனான தொடர்பைத் துண்டித்துக் கொண்ட சங்கத்தின் மேலிடம், "போலீசாருக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார்' என பகிரங்கமாக அறிவித்தது. இதே வழக்குகளில், ஆர்.எஸ்.எஸ்.,சின் மத்திய செயற்குழு உறுப்பினர் இந்த்ரேஷ் குமார் பெயர், மீடியாக்களில் பெரிய அளவில் அலசப்பட்டது. என்னவென்று? தேவேந்திர குப்தாவுக்கும், இந்த்ரேஷ் குமாருக்கும் தொடர்பு என்று. ஒரே அமைப்பில் இருக்கும் இருவர், தொடர்புகொள்ள மாட்டார்களா, என்ன? இருந்தாலும், "அப்படி யாரையும் நாங்கள் விசாரிக்கவில்லை' என சி.பி.ஐ., இயக்குனரே தெளிவுபடுத்தியிருக்கிறார்.
"ஆர்.எஸ்.எஸ்.,சில் இருக்கும் இருவர் மீது புகார் எழுந்ததே, ஆர்.எஸ்.எஸ்., மீது குற்றம் சாட்டுவதற்குப் போதுமானது' எனக் கொண்டால், காமன்வெல்த் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் கல்மாடி அல்ல; அவரது கட்சித் தலைவர் சோனியா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் கைது செய்யப்பட வேண்டியவர் ராஜா அல்ல; கருணாநிதி. இது ஒரு புறம் இருக்கட்டும். சிதம்பரம் சொன்னதைப் பின்தொடர்வோம்: கர்நாடகா மாநிலத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ்., உயர்மட்டக் குழுவில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், "ஊழலுக்கு எதிராக எந்தத் தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தினாலும், அதற்கு ஆதரவு தர வேண்டும்' என குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வளவு அற்புதமான விஷயத்தை, எவ்வளவு பெரிய ஆபத்து போல சித்தரிக்கிறார், பாருங்கள். "ஊழலுக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரவு தரவேண்டும்' என்பதை, "தேசத்துக்கு எதிராக யார் போராடினாலும் ஆதரிக்க வேண்டும்' என்கிற தொணியில் திசை திருப்புகிறார். கர்நாடகா மாநிலம் புத்தூரில் நடந்த, அகில பாரதிய பிரதிநிதி சபாவின் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன?
நாட்டில் தற்போது எழுந்துள்ள அசாதாரண சூழ்நிலையில், ஊழலுக்கு எதிராகத் திரண்டுள்ள துணிச்சல் மிக்க தனி மனிதர்கள், நிறுவனங்கள், அரசியல் சாசன அமைப்புகள், விழிப்புணர்வு மிக்க ஊடகங்கள், கண்கொத்திப் பாம்பாகச் செயல்படும் நீதித்துறை ஆகியவற்றின் முயற்சிகளை, இந்தச் சபை பாராட்டுகிறது. மேலும், இதுபோன்ற புனிதப் பணிகளில், இந்தத் தேசத்தின் அனைத்து குடிமக்களும், ஆத்ம சுத்தியோடு, அர்ப்பணிப்பு உணர்வோடு, தங்களது ஆக்கப்பூர்வமான ஆதரவை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இப்படி முடிகிறது அந்தத் தீர்மானம். இதில் எந்த வரி தேச விரோதமாக இருக்கிறது? சிதம்பரம், மேலும் சொல்கிறார்: ஊழல் எதிர்ப்பு முன்னணி ஒன்றை ஆர்.எஸ்.எஸ்., அறிவித்துள்ளதாம். அதில் ஒரு புரவலராக பாபா ராம்தேவ் இருக்கிறாராம். "இதைவிட ஒரு தேச விரோத காரியத்தை, யாராவது செய்ய முடியுமா' என கேட்பார் போல. காங்கிரஸ் என்னும் கொள்ளைக் கூட்டத்தில் இவர்கள் முக்கிய பிரமுகர்களாக இருப்பார்களாம்; இவர்களை எதிர்க்கும் முயற்சியில் ஒருவரும் ஈடுபடக் கூடாதாம். என்ன நியாயம் இது? ஊழலுக்கு எதிராக யார் திரண்டாலும், காங்கிரசுக்கு எதிராகத் திரண்டதாக, இவர்களே அர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. அதற்கு நாமென்ன செய்ய முடியும்? பி.கு.,: சீனப்போரின்போது சிறப்பாக செயல்பட்டதைக் கவுரவிக்கும் விதமாக, குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்க, அப்போதைய பிரதமர் நேருவால் அழைக்கப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்.,
- ஆர்.ரங்கராஜ் பாண்டே - நன்றி : தினமலர் .....
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment