“ஜெயாவின் ஆட்சி என்றாலே நிர்வாகத் திறமைமிக்க ஆட்சி; சட்டம்ஒழுங்கைக் கண்டிப்புடன் பேணக்கூடிய ஆட்சி. தி.மு.க.வின் ஆட்சியோ இதற்கு நேர்மாறானதுசு என்றொரு கருத்தைப் பார்ப்பன ஊடகங்கள் திட்டமிட்டே நீண்டகாலமாகப் பரப்பி வருகின்றன.
அ.தி.மு.க., சட்டசபைத் தேர்தல்களில் அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவையை அமைத்தவுடன், ஜெயாவின் சாணக்கியனான சோ ராமஸ்வாமி, “தடம் புரண்டுவிட்ட நிர்வாகத்தை மீண்டும் நிமர்த்துவது லேசான காரியம் அல்ல. அதைச் செய்து காட்டுகிற திறமை இவரிடம் உண்டு என்ற மக்களின் எதிர்பார்ப்பை உணர்ந்த முதல்வர், அதை நிறைவேற்றி வைக்க முழுமையாக முனைந்திருக்கிறார்சு என “பில்ட்அப்சு கொடுத்து எழுதினார்.
முன்னாள் அரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசகர் பொன்ராஜை அழைத்துவந்து, “புரட்ச்ச்சி தலைவிசு நடத்திய அமைச்சரவை ஆலோசனைக் கூட்டத்தில், விவசாயத்தை மேம்படுத்துவது, மின் தட்டுப்பாட்டை மூன்று மாதங்களில் சரி செய்வது, மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைப்பது என்றெல்லாம் தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ள ஜூனியர் விகடன், “ஆட்சி நிர்வாகத்தில் முக்கியமான மாற்றத்தைக் கொண்டுவரும் அறிகுறி இதுசு என அக்கூட்டத்தைப் புகழ்ந்து தள்ளியது.
பாடச் சுமையைக் குறைக்க வேண்டும் எனக் கல்வியாளர்கள் கூறிவருவதை, மாணவர்களிடமிருந்து புத்தகங்களைப் பறித்துவிட வேண்டும் என ஜெயா புரிந்து கொண்டிருக்கிறார் போலும். தமிழகத்தில் பள்ளிக்கூட மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களாக புத்தகங்களே இல்லாமல் பள்ளிக்கூடத்திற்குப் போய் பொழுதைக் கழித்துவிட்டுவருவதே, ஒரு அசாதாரணமான நிர்வாகியிடம் தமிழகம் மாட்டிக் கொண்டிருப்பதைப் புரிய வைத்துவிடுகிறது. பள்ளிக்கூடத்திற்குப் போக மாட்டேன் என அடம் பிடிக்கும் மாணவர்களைப் பார்த்திருக்கும் தமிழகம், பள்ளிக்கூட மாணவர்கள் புத்தகம் கொடுக்கக் கோரி சாலையில் மறியல் போராட்டம் நடத்துவதை இன்று பார்க்கிறது. ஒரு சட்டத்திருத்தத்தின் மூலம் மாணவர்கள் மத்தியில் இந்த ‘மாற்றத்தை’க் கொண்டு வந்திருக்கும் செல்வி ஜெயாவின் நிர்வாகத் திறமையை, அவரது துதிபாடிகள் கின்னஸ் சாதனைக்குப் பரிந்துரைக்கலாம்.
மாணவர்கள் வீதியில் இறங்கிப் புத்தகம் கேட்டுப் போராடும்பொழுது, ஜெயாவோ 200 கோடி ரூபாய் செலவில் அச்சடிக்கப்பட்டுத் தயார் நிலையில் உள்ள சமச்சீர் கல்வி நூல்களைக் கரையான் தின்ன விடுகிறார். இப்புதிய பாடநூல்களுக்குப் பதிலாக, காலாவதியாகிப் போன பழைய பாடத் திட்டத்தின் கீழ் அச்சடிக்கப்பட்ட பாடநூல்களைக் கொடுத்துத் தமிழக மாணவர்களின் கல்வித் தகுதியை உயர்த்தப் போகிறாராம், இத்திறமைசாலி.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்துத் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருப்பதால், அத்தீர்ப்பை அரசிதழில் வெளியிட முடியாது என்ற நிலையிலும், அதனை அரசிதழில் வெளியிட வேண்டும் என அறிக்கைவிடுத்துத் தனது அதிபுத்திசாலித்தனத்தை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறார், ஜெயா.
தமிழகத்தின் விவசாயத்தை மேம்படுத்த ஜெயாவிடம் சொந்த சரக்கு எதுவும் கிடையாது; குஜராத் பாணியை காப்பியடிப்பது என்பதுதான் அவரது திட்டம். இந்த குஜராத் பாணி மேம்பாடு என்பது சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளை நிலங்களிலிருந்து சிறுகச்சிறுக அப்புறப்படுத்திவிட்டு அல்லது அவர்களை ஐ.டி.சி., ரிலையன்ஸ் போன்ற நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாற்றிவிட்டு விவசாயத்தை கார்ப்பரேட்மயமாக்குவதுதான். விவசாயத்திலும் தனியார்மயம் தாரளமயத்தைப் புகுத்த வேண்டும் என்ற உலக வங்கியின் கட்டளையை நடைமுறைப்படுத்துவதுதான். எனவே, அமைச்சரவை ஆலோசனை கூட்டத்தில் விவசாய மேம்பாடு குறித்து ஜெயா கும்பல் நடத்திய ஆலோசனைகளை, தமிழக விவசாயிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட சதி என்றுதான் கூற முடியும்.
மின் பற்றாக்குறையைச் சமாளிக்க மின்வெட்டை அமல்படுத்துவது என்ற புளித்துப்போன சூத்திரத்தைதான் இந்தத் திறமைசாலியும் பின்பற்றி வருகிறார். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் அறிவிக்கப்பட்ட மின்வெட்டோடு, திடீர் திடீரென மின்சாரத்தை நிறுத்திவிடும் அறிவிக்கப்படாத மின்வெட்டும் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த தி.மு.க. ஆட்சியில் குறிப்பிட்ட நேரம் மின் தடை அமல்படுத்தப்பட்டு வந்த நடைமுறை போய், ஜெயாவின் ஆட்சியில் மின்சாரம் எப்பொழுது வரும், எப்பொழுது போகும் என்ற நிச்சயமற்ற நிலை உருவாகிவிட்டதாகப் பொதுமக்களும், சிறுவீத உற்பத்தியாளர்களும் புலம்பும் அளவிற்கு மின்வெட்டு தீவிரமாகியிருக்கிறது.
மூன்று மாதங்களில் மின் பற்றாக்குறையைச் சமாளித்துவிடுவேன் என ஜெயா அடித்த சவடால் புஸ்வானமாகிப் போய்விட்டதால், புதிய திட்டங்களின் மூலம் அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் நிலைமை சீராகி விடும் என இப்பொழுது பீற்றி வருகிறார். இந்தப் புதிய திட்டங்கள் தனது ஆட்சியின் பொழுது தீட்டப்பட்டு, அவற்றின் கட்டுமானப் பணிகள் அப்பொழுதே தொடங்கப்பட்டதாக உரிமை பாராட்டுகிறார், கருணாநிதி.
தமிழகத்தின் மின் பற்றாக்குறைக்கு யார் காரணம்? யார் அதனைத் தீர்க்கப் போகிறார்கள்? என்பது குறித்து அய்யாவும், அம்மாவும் எதிரும் புதிருமாக நின்று அடித்துக் கொள்ளும் அதே சமயம், இவ்வளவு மின் பற்றாக்குறை நிலவும் சமயத்திலும் தமிழகத்தில் செயல்பட்டு வரும் பன்னாட்டு நிறுவனங்களுக்குத் தடையில்லாத மின்சாரம் வழங்குவதில் மட்டும் முன்னாள் தி.மு.க. ஆட்சிக்கும், இந்நாள் அ.தி.மு.க. ஆட்சிக்கும் இடையே எந்தவிதமான வேறுபாடும் இல்லை.
“கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தால் தனியார் மருத்துவமனைகளும் தனியார் காப்பீடு நிறுவனமும்தான் பயன் பெறுகின்றன. காப்பீடு திட்டத்தைச் செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்குத் தருகின்ற நிதியில் அரசு மருத்துவமனைகளை மேம்படுத்தலாம்சு என கவர்னர் உரையிலேயே அறிவித்தார் ‘புரட்ச்சித் தலைவி’. தான் அறிவித்ததைத் தானே ஓரம் கட்டிவிட்டு, பழைய கள்ளு புதிய மொந்தை என்ற கணக்காய், புதிய காப்பீடு திட்டத்தை அறிவித்திருக்கிறது, ஜெயா அரசு. தி.மு.க. அரசு தனியார் காப்பீடு நிறுவனத்திற்குக் கொட்டிக் கொடுத்ததைவிட நான்கு மடங்கு அதிகமாகக் கொட்டிக் கொடுக்கப் போகிறது, இப்புதிய காப்பீடு திட்டம்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகச் செயல்படுத்தப்பட்டு வந்த கலைஞர் காப்பீடு திட்டத்தின் மூலம் ஸ்டார் ஹெல்த் இன்ஸ்யூரன்ஸ் என்ற தனியார் காப்பீடு நிறுவனம் 400 கோடி ரூபாய் இலாபம் அடைந்ததாகவும், அதிலொரு பங்கு கருணாநிதி குடும்பத்திற்குப் போய்ச் சேர்ந்ததாகவும் குற்றஞ்சாட்டி வந்தார், ஜெயா. இன்னும் ஓரிரு மாதங்கள் போனால், புதிய காப்பீடு திட்டத்தின் மூலம் எந்த கார்ப்பரேட் நிறுவனம் இலாபத்தைச் சுருட்டப் போகிறது, அதிலொரு பங்கு அ.தி.மு.க.வைக் கட்டுப்படுத்தும் எந்தக் குடும்பத்திற்குப் போய்ச் சேரப் போகிறது என்பதும் தெரிந்துவிடும்.
ஜெயா அறிவித்திருக்கும் மற்ற இலவசத் திட்டங்களும்கூடக் குளறுபடிகளும், சர்ச்சைகளும் நிறைந்ததாகதான் தீட்டப்பட்டுள்ளன.“மாதமொன்றுக்கு 1 இலட்சம் கிரைண்டர்கள்தான் தயாரித்து வழங்க முடியும்சுஎன கோவையைச் சேர்ந்த கிரைண்டர் உற்பத்தியாளர்கள் அரசுக்குத் தெளிவுபடுத்தியிருந்த பிறகும், இந்த டெண்டரைக் கோரும் நிறுவனங்கள் ஆண்டொன்றுக்கு 25 இலட்சம் கிரைண்டர்கள் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையை விதித்திருக்கிறது, ஜெயா அரசு. சீன நாட்டு கிரைண்டர்களை இறக்குமதி செய்து விற்கும் வட இந்திய வியாபாரிகளிடம் டெண்டரை ஒப்படைக்கும் நோக்கம் இந்த நிபந்தனையின் பின் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தைத் தமிழகத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் தற்பொழுது எழுப்பியுள்ளனர்.
இலவச கலர் டி.வி. வழங்கும் திட்டத்தைச் செயற்படுத்திய தி.மு.க. அரசு, அதற்காக டெண்டர்களைக் கோரியபொழுது, வெளிப்படைத் தன்மையோடு நடந்து கொண்டதாகவும், அ.தி.மு.க. அரசு இலவச மிக்ஸி, கிரைண்டர், ஃபேன் வழங்கும் திட்டங்களுக்காக டெண்டர் கோரும் விஷயத்தில் முந்தைய ஆட்சியைப் போல வெளிப்படைத் தன்மையோடு நடக்கவில்லை என்றும் அ.தி.மு.க.வின் தோழமைக் கட்சிகள்கூட குற்றஞ்சுமத்தி வருகின்றன. இதன் பொருள் இந்த இலவசத் திட்டங்களில் கமிசன் என்ற பெயரில் கொள்ளையடிப்பதற்கான வாய்ப்புகளை அ.தி.மு.க. திறந்துவிட்டுள்ளது என்பதுதான்.
கிராமப்புற ஏழை மக்களுக்கு இலவச ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் தனது தேர்தல் அறிக்கையில் ஜெயா அறிவித்தபொழுதே, மலிவான விலையில் மாட்டுத் தீவனம் கிடைப்பதை உத்திரவாதப்படுத்தாமல் மாடு வழங்குவது, கிராமப்புற ஏழை மக்களை மேலும் கடனில் மாட்டிவிடுவதில் முடிந்துவிடும் எனப் பலரும் சுட்டிக்காட்டினர். “அதனாலென்ன, மாடு வழங்கும் திட்டத்தோடு, மாட்டுத்தீவன உற்பத்தியைப் பெருக்கும் திட்டத்தையும் சேர்த்து அறிவித்தால் தீர்ந்தது பிரச்சினைசு எனக் கோமாளித்தனமாக முடிவெடுத்து இத்திட்டத்தை ஜெயா அரசு அறிவித்திருக்கிறது.
தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்திற்கு விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், அத்திட்டம் ஏழைக் குடும்பங்களை மனதில் வைத்துக் கொண்டு உருவாக்கப்பட்ட திட்டமாகத் தெரியவில்லை. வெறும் விளம்பரத்திற்காகவோ அல்லது ஏழைகளின் பெயரைச் சொல்லி அ.தி.மு.க. கும்பலும் அதிகார வர்க்கமும் சேர்ந்து சுருட்டிக் கொள்வதற்காகவோ உருவாக்கப்பட்ட திட்டம் போல தெரிகிறது.
பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே 4,000 கோடி ரூபாய் அளவிற்கு கூடுதல் வரிகள் விதிக்கப்பட்டதோடு, 1,400 கோடி ரூபாய் அளவிற்கு டாஸ்மாக் சரக்குகளின் கட்டணங்களும் உயர்த்தப்பட்டன. இக்கூடுதல் வரிகள் விதிக்கப்பட்ட ஒரு சில நாட்களிலேயே, ஜவுளி பொருட்களின் மீது விதிக்கப்பட்ட வரியை ரத்து செய்வதாக அறிவிக்கிறார், ஜெயா. “நினைத்தால் வரி விதிப்பதும், நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவதும் ஜெயாவின் பொழுதுபோக்குசு என இதனை நக்கலடித்தார், கருணாநிதி.
ஒரு பக்கம் இலவசம், இன்னொருபுறம் வரிக் கொள்ளை; நினைத்தால் வரி விதிப்பது, நினைப்பை மாற்றிக் கொண்டால் வரியை நீக்குவது; வரி விதிப்பு தமிழக அரசு செய்தது; ஆனால், வரி உயர்வை ரத்து செய்தது ஜெயலலிதா என்ற இந்த நடவடிக்கைகள் எல்லாம் நமக்கு துக்ளக் தர்பாரை, இம்சை அரசன் 23ஆம் புலிகேசியைப் போல கோமாளித்தனமான, வக்கிரமான ராஜாவாக ஜெயா ஆட்சி நடத்தி வருவதைதான் எடுத்துக் காட்டுகின்றன.
“தான் பதவியேற்றவுடனேயே சங்கிலி பறிக்கும் திருடர்கள் ஆந்திராவுக்கு ஓடிவிட்டதாகசு தனக்கேயுரிய மமதையோடு புளுகித் தள்ளினார் ஜெயா. அவர் இப்படிச் சொல்லி வாயை மூடும்முன்பே ஆளுங்கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா வீட்டிற்குள் திருடன் புகுந்து தனது கைவரிசையைக் காட்டிச் சென்றான். கடந்த இரண்டு மாதங்களாகத் தமிழகமெங்கும் நடந்துவரும் கொலை, கொள்ளை, சங்கிலி பறிப்பு சம்பவங்கள் ஜெயாவின் நிர்வாகத் திறமையைச் சந்தி சிரிக்க வைத்துவிட்டன. குறிப்பாக, சென்னையில் நடந்த வழக்குரைஞர் சங்கர சுப்புவின் மகன் சதீஷ்குமாரின் கொலை, ஜெயாவின் போலீசு தமிழகத்தின் சட்டம் ஒழுங்குக்குச் சவால்விட்டிருப்பதைத் தெளிவுபடுத்தியது.
ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடனேயே பெரும்பாலான டாஸ்மாக் பார்களின் ஏலக் குத்தகை அ.தி.மு.க. பிரமுகர்களுக்கு மாறிவிட்டதாகவும், பார்களுக்கான ஏலமே குறிப்பிட்ட சில அ.தி.மு.க. பிரமுகர்கள் மட்டுமே கலந்துகொள்ளும்விதத்தில்தான் நடத்தப்பட்டதாகவும், பார்களுக்கான ஏலத்தொகை அடிமாட்டு விலைக்கு நிர்ணயிக்கப்பட்டு அ.தி.மு.க. பிரமுகர்களுக்குத் தாரை வார்க்கப்பட்டதாகவும் ஜூனியர் விகடன் இதழ் அம்பலப்படுத்தி எழுதியிருக்கிறது.
மணல் கொள்ளையைப் பொருத்தவரை, “ஆட்சி மாறியது; காட்சி மாறவில்லைசு என்றும் குறிப்பிடுகிறது, ஜெயாவின் விசுவாசியான ஜூ.வி. “கடந்த ஆட்சியில் கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் ஆறுமுகசாமியும், தென்மாவட்டத்து காங்கிரசு பிரமுகரான படிக்காசுவும்தான் மணல் விற்பனையில் பெரும் இலாபமடைந்தார்கள். இந்த ஆட்சியிலும் மணல் விற்பனை அவர்களின் கைகளுக்குதான் போயிருக்கிறது. கடந்த ஆட்சியில் இவர்கள் அழகிரியின் நிழல் நபராக இருந்தவருக்கு மாதமொன்றுக்கு 50 இலட்சம் கப்பம் கட்டினார்கள். இப்போது கப்பம் திசை திரும்பி மன்னார்குடிக்குச் செல்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம்சு என ஜூ.வி. குறிப்பிடுகிறது. (ஜூ.வி. 31.7.2011, பக்.34)
கல் குவாரி அதிபர்களைக் கோட்டைக்கு வரவழைத்து கப்பம் கட்டுவது தொடர்பாக நடத்தப்பட்ட பேரம் அம்பலமானதால்தான், தொழில்துறை அமைச்சராக இருந்த சண்முகவேலு ஊரகத் துறைக்கு மாற்றப்பட்டார். இது தவறுக்குக் கிடைத்த தண்டனையல்ல. மாறாக, கப்பத்தை யாரிடம் செலுத்த வேண்டும் என்பது முடிவாகும் முன்பே, சண்முகவேலு பேரத்தைத் தொடங்கி நடத்தியதுதான் பிசகாகிவிட்டது.
சிறுதாவூரில் தாழ்த்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலங்களை ஆக்கிரமித்துக் கொண்டு தனது சொகுசு பங்களாவைக் கட்டியுள்ள ஜெயா; கொடநாட்டில் மக்களின் புழக்கத்திற்குப் பயன்பட்டுவந்த பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கொண்டுவிட்டு, உச்ச நீதிமன்றம் அந்தப் பொதுப்பாதையைத் திறந்துவிட வேண்டும் என உத்தரவிட்ட பிறகும், அதனை விட்டுத் தர மறுக்கும் ஜெயா, நில அபகரிப்புக்கு எதிராகத் தனி போலீசு பிரிவை உருவாக்கியிருப்பது குரூரமான நகைச்சுவை. இப்போலீசார் 2006 தொடங்கி 2011 முடிய நடந்துள்ள நில ஆக்கிரமிப்புகளை விசாரிப்பார்கள் என வரையறுக்கப்பட்டிருப்பதே, இது தி.மு.க.வை அரசியல்ரீதியாக முடக்குவதற்கான முயற்சி என்பதை அம்பலப்படுத்திவிட்டது.
எனினும், கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையாக, வணிக வரித்துறை அமைச்சர் அக்ரி. கிருஷ்ணமூர்த்தி, சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா, சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டுப் பின் பதவி பறிக்கப்பட்ட அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இசக்கி சுப்பையா உள்ளிட்டு பல அ.தி.மு.க. பிரமுகர்கள் மீதும் நில அபகரிப்பு புகார்கள் போலீசிடம் அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, அக்ரி.கிருஷ்ணமூர்த்தி மீது புகார் கொடுத்த அ.தி.மு.க.வின் திருவண்ணாமலை மாவட்டப் பிரதிநிதியான மூர்த்தியை மிரட்டி, அப்புகாரைத் திரும்பப் பெறச் செய்துவிட்டது அ.தி.மு.க. தலைமை. அக்ரி. கிருஷ்ணமூர்த்தி மீது முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கொடுத்த புகாரை கடந்த ஆட்சியின்பொழுதே போலீசு வாங்கிக்கொள்ள மறுத்துவிட்டதால், அவர் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறார்; அமைச்சர் மீது புகார் கொடுக்க முயன்றுவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்த அரவிந்த் தனலெட்சுமி தம்பதியினர் போலீசாரால் அங்குமிங்குமாக அலைக்கழிக்கப்படுகின்றனர். இசக்கி சுப்பையா மீது ஏற்கெனவே நில அபகரிப்பு தொடர்பாக மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அமைச்சர் பதவி மட்டும் அவரிடமிருந்து பறிக்கப்பட்டது.
ஊழலற்ற, யாருடைய தலையீடும் இல்லாத, நேர்மையான ஆட்சியை ஜெயா வழங்குவார் எனப் பார்ப்பன ஊடகங்கள் உருவாக்கிய பிம்பம், ஜெயா ஆட்சியைப் பிடித்த மறுநொடியே உடைந்து நொறுங்கிவிட்டது என்பதைத்தான் இவையெல்லாம் எடுத்துக் காட்டுகின்றன. தி.மு.க. என்ற கொள்ளைக் கும்பலுக்குப் பதில் அ.தி.மு.க.என்ற கொள்ளைக் கும்பல், மு.க.விற்குப் பதில் ஜெயா, கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்திற்குப் பதில் சசிகலா குடும்பத்தின் ஆதிக்கம் என்ற மாற்றத்தைத் தவிர, வேறு எதையும் இந்த ஆட்சி மாற்றம் சாதித்துவிடவில்லை என்பதே உண்மை.
இலவசங்கள் மூலம் மக்களைச் சாதுர்யமாக மயக்கி, கார்ப்பரேட் நிறுவனங்களுக்குச் சேவை செய்யும் ஆட்சியைதான் மு.க. நடத்திவந்தார். அய்யா போன அதே பாதையில்தான் அம்மாவும் தனது ஆட்சித் தேரை உருட்டிச் செல்கிறார். இது மட்டுமா, ஈழத் தமிழர் விவகாரம், தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையால் தாக்கப்படும் பிரச்சினைகளில் மைய அரசுக்குக் கடிதம் எழுதுவது என்ற மு.க.வின் தந்திரத்தைதான் ஜெயாவும் பின்பற்றி வருகிறார். தமிழ், தமிழினம், நாத்திகம் என முற்போக்கு வேடம் போடுவார் மு.க. பார்ப்பன பாசிஸ்டான ஜெயாவிடம் இந்த வேடத்தைக்கூட எதிர்பார்க்க முடியாது என்பதைத் தவிர, அய்யாவின் ஆட்சிக்கும், அம்மாவின் ஆட்சிக்கும் இடையே அடிப்படையில் எந்த வேறுபாடும் கிடையாது.
எனினும், சில விஷயங்களில் அய்யாவைவிட, அம்மா ‘திறமையானவர்’ என்பதை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து குவித்த வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு ஆகிய கிரிமனல் வழக்குகளில் முதல் குற்றவாளியான ஜெயா, சட்டத்தில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொண்டு, கிரிமினல்தனமான முறையில் இந்த வழக்குகளின் விசாரணையை 14 ஆண்டுகளுக்கும் மேலாக இழுத்தடித்து வருகிறார். தேர்தல் ஆணையத்திற்குத் தவறான தகவல்களைக் கொடுத்ததற்காக ஜெயா மீது தொடரப்பட்ட வழக்கு, 37ஆவது முறையாகத் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், தனது கிரிமினல் குற்றங்களுக்காக நீதிமன்றம் தன்னை நெருங்கிவிடாதபடி, தனக்குள்ள சாதி மற்றும் அரசியல் செல்வாக்கு, தொடர்புகளைப் பயன்படுத்திக்கொண்டு திறமையாகத் தன்னைத் தற்காத்துக் கொண்டு வருகிறார், பார்ப்பன பாசிச ஜெயா.
இப்படிபட்ட கிரிமினல் பேர்வழியை, அவர் மாறிவிட்டாரென்றும், பக்குவப்பட்டுவிட்டாரென்றும், திறமையான நிர்வாகியென்றும் ஒளிவட்டம் கட்டி, ஊடகங்கள் மக்கள் முன் நிறுத்துவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் தவிர வேறென்ன?
குர்டேசி: http://www.vinavu.com/2011/08/09/imsai-arasi-jayalalitha/
____________________________________________________________________
_________________
No comments:
Post a Comment