அனாதிக்கு, இத்தனை நாளாக உடல் உழைப்பால் வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி வாங்கிய அரைகிரவுண்ட் வீட்டினை அடகு வைத்து வங்கியில் லோன் வாங்கி கம்பெனி ஒன்றினை உருவாக்கினேன். காலை 9 மணியிலிருந்து 12 மணி வரையிலும் கரண்ட் இல்லை. மாலை 3 மணியிலிருந்து 6 மணி வரை கரண்ட் இல்லை. இரவு 7 மணியிலிருந்து 8 மணி வரை கரண்ட் இல்லை. இரவு 9 மணியிலிருந்து 10 மணி வரை கரண்ட் இல்லை. ஆக மொத்தம் எட்டு மணி நேரம் கரண்ட் இல்லை. ஒன்பது மணிக்கு ஆரம்பித்து இரவு 10 மணி வரை மொத்தம் 13 மணி நேரத்தில் எட்டு மணி நேரம் கரண்ட் இல்லை என்றால் எப்படி தொழில் செய்வது? வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்கவாவது வேலை செய்ய வேண்டுமே அதற்கும் வழி இல்லாமல் போய் விட்டது.
நான் பட்டினியாய்க் கிடக்கலாம், எனக்குப் பிறந்த கொடுமைக்காக குழந்தைகள் பட்டினி கிடக்கலாம், நன்றாக வாழ வைப்பார் என்று நம்பி வந்த மனைவியைக் கூட பட்டினி போடலாம். ஆனால் என்னை நம்பி வந்திருக்கும் வேலைக்காரர்களை பட்டினி போடலாமா? மாதம் ஐந்து தேதிக்குள் வங்கியில் இருந்து வசூல் செய்ய வந்து விடுவார்கள். வாடகை கட்ட வேண்டும். குழந்தைகளுக்கு பள்ளிக் கட்டணம் கட்ட வேண்டும். நான் என்ன செய்வேன்? தொழில் நடந்தால் அல்லவா பிழைக்க முடியும். அதற்கு கரண்ட் வேண்டுமில்லையா? அதைத் தரவே முடியாது, உன்னால் ஆனால் உயிரோடு இரு, இல்லையென்றால் குடும்பத்தோடு செத்துப் போ என்கிறதே இன்றைய அரசாங்கம்?
நான் ஆட்சிக்கு வந்தால் கரண்ட் கட் இல்லாமல் செய்வேன் என்று புரட்சி முழக்கம் செய்தார்களே, ஆரம்பத்தில் இரண்டு மணி நேரம் பவர் கட் செய்தவர்கள் இன்றைக்கு அதை எட்டு மணி நேரமாக மாற்றியது தான் அவர்களுக்கு ஓட்டு போட்ட என் போன்ற மக்களுக்கு அவர்கள் காட்டும் செய்நன்றிக் கடனா? சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம் பவர் கட், ஆனால் பிற பகுதிகளில் எட்டு மணி நேரம் பவர் கட் என்பது தான் சமதர்மத்தைச் சொல்லும் ஜன நாயக ஆட்சியா?
சென்னைக்காரர்கள் ஏசியில் உறங்கி உல்லாசத்தில் மகிழ்கின்றார்கள். அவர்களுக்கு நன்கு உரக்கம் வர கரண்ட் கொடுக்கும் அரசு, பிழைக்க உயிர் நாடியாக இருப்போருக்கு, தவிப்போருக்கு கரண்ட் கொடுக்க மறுப்பது ஏன்? இப்படியே சென்று கொண்டிருந்தால் நான் என் குடும்பத்தோடு தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும். அதைத்தான் இன்றைய அரசு விரும்புகிறதா? ஆட்சிக்கு வந்த உடனே கரண்ட் கொடுக்கிறேன் என்று பேசியதெல்லாம் மக்களை ஏமாற்றத்தானா? இது தான் ஆட்சியா? இது தான் நீதியா? இதுதான் தர்மமா? சென்னை மட்டும் வாழ வேண்டும். பிற பகுதியினர் எல்லாம் கரண்ட் இல்லாமல் துன்பப்பட வேண்டுமென்று இந்த அரசு நினைக்கிறதா?
இது பற்றி நீங்கள் ஏதும் எழுதுவது இல்லையே ஏன்? அதிகாரத்திற்கு பயந்து போய் விட்டீர்களா? ”வெளிச்சத்தில்” என்று பெயர் வைத்துக் கொண்டு இது நாள் வரையிலும் இந்த ஆட்சியில் நடக்கும் அவலங்களைப் பற்றி ஏதும் எழுதாமல் இருக்கின்றீர்களே ஏன்? உங்கள் மீதான நம்பிக்கை அவ நம்பிக்கையாய் மாறி விட்டது அனாதி.
-திருப்பூரிலிருந்து சுதர்சன்
———————- 000 ——————–
திரு சுதர்சன், உங்களின் கடிதத்தை அப்படியே பதிவேற்றி விட்டேன். மக்களை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் வாழ அனுமதிக்கவும், அவர்களுக்குத் தேவையானதை செய்து கொடுப்பதும் ஒரு அரசின் வேலை. ஆனால் தமிழகத்தினை ஆண்டு வந்த அரசுகள் எதுவும் அப்படியான வேலை எதையும் இதுகாறும் செய்யவே இல்லை என்பதுதான் வேதனை. அதற்காக தற்கொலை என்பதெல்லாம் தேவையில்லை. தமிழகத்தில் வாழவே முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று பலரும் பேச ஆரம்பித்து விட்டார்கள். மக்களின் மனதில் இந்த ஆட்சியின் மீதான நம்பிக்கையின்மை கோடாய் விரிய ஆரம்பித்திருக்கின்றது. இந்த ஆட்சிக்கு அந்த ஆட்சியே பரவாயில்லை என்று பேச ஆரம்பித்திருக்கின்றார்கள். முக்கிய காரணம் “மின்வெட்டு”. இது குடும்பங்களை நேரடியாகப் பாதிக்கின்றது. இந்தச் சூழலில் மின்சாரக்கட்டணம் அதிகமாகின்றது என்றுச் சொல்கின்றார்கள். இது மேலும் மேலும் ஆட்சியின் மீதான அவ நம்பிக்கையை அதிகப்படுத்தி விடும். பால் விலை, பஸ் கட்டணம் விலை உயர்வு வெகு சாதாரணமானது. மின்சாரம் கொடுக்க மாட்டோம், ஆனால் மின் கட்டணத்தை உயர்த்துவோம் என்பது “எரியும் நெருப்பில் நெய்யை ஊற்றுவது போலாகும்”.
கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே எட்டு மணி நேரம் பவர் கட் என்றால் கோடை காலத்தில் நிச்சயம் பத்து மணி நேரம் பவர் கட்டாக சாத்தியங்கள் இருக்கின்றன. அதற்கு காரணம் இந்த அரசு மட்டுமல்ல, பத்தாண்டுகள் ஆண்ட திமுக அரசு தான் முதற்காரணம். மத்திய அரசு மாநில அரசை வதைக்கின்றது என்றுச் சொல்கின்றார்கள். அல்லது திமுகவினரின் சதியாக கூட இருக்கலாம்.
சினிமாக்காரர்கள் தற்போதைய முதலமைச்சர் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்ததும் விழா நடத்துகிறோம் பேர்வழி என்று அனுமதி கேட்டார்கள். எத்தனை ஆயிரம் வாட்ஸ் கரண்ட் செலவாகும், தமிழகமே இருளில் தவிக்கும் போது விழாவாது ஒன்றாவது என்று அப்படிப்பட்ட எந்த ஒரு விழாவையும் நடத்தவே கூடாது என்று மறுத்து விட்டார்கள் இன்றைய முதல்வர் என்று முக்கியப் பொறுப்பில் இருக்கும் சினிமா இயக்குனர் ஒருவர் என்னிடம் சொன்னார். பேருக்கும் புகழுரைக்கும் ஆசைப்படும் அரசியல்வாதியில் தற்போதைய முதல்வர் வித்தியாசப்படுகின்றார். ஆகையால் மின்சாரம் இருந்தும் மின்சாரம் கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்ட முடியாது. எங்கிருந்து மின்சாரம் கொடுப்பது? இருந்தால் அல்லவா கொடுப்பதற்கு? இருப்பதை முடிந்த அளவு பகிர்ந்து கொடுக்கின்றார்கள்.
இருப்பினும் சென்னையில் மட்டும் ஒரு மணி நேரம் மின்வெட்டு என்பது ஜீரணிக்க முடியாத ஒன்றுதான். தமிழகமெங்கும் ஒரே மாதிரி பவர் கட் செய்வதுதான் சரியானது. சென்னைக்கு மட்டும் ஸ்பெஷல் என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. கோர்ட் படி ஏறினால் இதற்கொரு வழி பிறக்கும். உங்களூர் மக்கள் ஒன்று சேர்ந்து அத்தகைய ஒரு செயலைச் செய்யலாம். சென்னையில் அதிகப்படியான மின் உபயோகம் செய்கின்றார்கள். அங்கும் ஒரே அளவு நேரம் மின் வெட்டினை அமல் படுத்தினால் கிடைக்கும் மின்சாரத்தில் தமிழகமெங்கும் ஓரளவு மின்வெட்டினைக் குறைக்கலாம்.
இந்த ஆட்சியில் பலவித சர்ச்சைக்குரிய பிரச்சினைகள் இருக்கின்றன. அதுபற்றி விரிவாக விரைவில் எழுதுவோம். அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?அதிகாரத்திற்கு பயப்பட நாங்கள் திருட்டுத்தனமா செய்து வருகின்றோம். மடியில் கனம் இருந்தால் வழியில் பயமிருக்கும். அப்படியான எந்த ஒரு கனமும் எங்களிடத்தில் இல்லை.
திமுக ஆட்சியில் உருவாக்கப்பட்ட இத்தகைய பிரச்சினைக்கு நான் ஆட்சிக்கு வந்ததும் சரி செய்வேன் என்றுச் சொல்லி ஓட்டு வாங்கினார்கள் தான். நான் இல்லையென்றுச் சொல்லவில்லை. ஆனால் எங்கிருந்து கரண்ட் வாங்குவது என்பதுதான் பிரச்சினை. கூடங்குளம் அணு உலையின் பிரச்சினை உங்களுக்குத் தெரியும். மத்திய அரசாங்கத்தின் “கண்ணை விற்று சித்திரம் வாங்கும்” இத்தகைய அணு உலைகளின் மூலம் கிடைக்கும் மின்சாரம் பற்றி எனக்கு எதுவும் எழுத தோன்றவில்லை.
நீங்கள் எழுதி இருப்பதை வைத்துப் பார்த்தால், நிலைமை இப்படியே சென்றால் விரைவில் தமிழர்கள் தமிழகத்திலிருந்து அண்டிப் பிழைக்க வேறு மாநிலங்களுக்கு அகதிகளாய் செல்லத்தான் நேரிடும். சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு விடும். அக்குடும்பங்கள் கடனாளி ஆகும். கடன் கட்ட முடியாமல் தற்கொலைகள் அதிகமாகும். இதைத் தமிழர்களின் விதி என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் பத்து கிலோ மீட்டர் தூரத்தில் கொத்துக் கொத்தாய் தமிழர்களைக் கொன்று குவித்த போது நாமெல்லாம் செம்மொழி விழாவில் ஆட்டம் பாட்டங்களை பார்த்து ரசித்தவர்கள் தமிழ் நாட்டவர்கள். இப்படியான எண்ணப் போக்குதான் தமிழர்களுக்கு என்ன துன்பமிழைத்தாலும் சகித்துக் கொள்வார்கள் என்று பிறர் நினைக்கும்படி ஆகி விட்டது. ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள் என்றால் ஆட்சி செய்பவர்களுக்குப் பயமிருக்கும். அந்தக் காலத்தில் ஐந்து பைசா பேருந்து கட்டணத்தை உயர்த்தியதற்காக, தெருவில் இறங்கிப் போராடினார்கள் மக்கள். அரண்டு போன ஆட்சியாளர்கள் உடனடியாக கட்டணத்தைக் குறைத்தார்கள். ஆனால் இன்றைக்கு மக்களை போராட்டத்திற்கு அழையுங்கள் பார்ப்போம். போடா போடா என்பார்கள்.
தமிழர்கள் ஆட்டு மந்தைக் கூட்டமாய் மாறி சினிமாக்காரர்களின் பெண்டாட்டிகள் வைர ஒட்டியாணம் போட தங்கள் காசுகளை இறைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
மின்வெட்டு உங்கள் பிரச்சினை மட்டுமல்ல, மொத்த தமிழகத்திற்கும் மன்னிக்க சென்னை தவிர்த்த தமிழகத்திற்கும் பிரச்சினை. கூடிய விரைவில் சரி செய்வோம் என்கிறார்கள். அதுவரை பொறுத்து இருங்கள் சுதர்சன். என்ன நடக்கின்றது என்று பார்க்கலாம். “இதுவும் கடந்து போம்” என்று எண்ணிக் கொள்ளுங்கள். விரைவில் தமிழக அரசு மின்வெட்டினை முற்றிலுமாய் நீக்கும் என்று நம்புவோம். நம்பிக்கை தான் வாழ்க்கை சுதர்சன்.
- அன்புடன் அனாதி
No comments:
Post a Comment