Monday, March 19, 2012

தலையங்கம்:"ஜனநாயக முரண்!

First Published : 20 Mar 2012 04:42:24 AM IST
Last Updated : 20 Mar 2012 06:06:50 AM IST

நல்லாட்சி தருவோம் என்றும், குண்டர்களின் ராஜ்யமாக உத்தரப் பிரதேசம் இருக்காது என்றும் மக்களுக்கு உறுதி அளித்துத் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கும் சமாஜவாதிக் கட்சி அமைச்சரவையில் கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் அமைச்சர்களாக்கப்பட்டிருப்பது அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அகிலேஷ் அமைச்சரவையில் உணவுத்துறை அமைச்சராகப் பதவியேற்றுள்ள ராஜா பையா, ஏற்கெனவே எட்டு கிரிமினல் வழக்குகளில் தொடர்புடையவர். பொடா சட்டத்திலும்கூட அவர் மீது வழக்குப் பதிவாகியிருக்கிறது. "பெயர் சொன்னால் போதும், தரம் எளிதில் விளங்கும்' வகை அரசியல்வாதி அவர். அப்படிப்பட்டவரை ஏன் அகிலேஷ் முக்கியத்துவம் கொடுத்து அமைச்சராக்கியிருக்கிறார் என்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இதில் வேடிக்கை என்னவென்றால், 50 துறைகளைத் தன் பொறுப்பில் வைத்துக்கொண்டுள்ள முதல்வர் அகிலேஷ் யாதவ், குற்றப் பின்னணி உள்ள ராஜா பையாவுக்கு உணவுத்துறையுடன் கூடுதலாகத் தந்துள்ள பொறுப்பு - சிறைத்துறை! இதை நிர்வகிக்க சரியான ஆளைத் தேர்வு செய்திருக்கிறார் என்று பாராட்டுவதா அல்லது திருடன் கையிலேயே சாவியைக் கொடுத்திருக்கும் புத்திசாலித்தனம் என்று மெச்சுவதா தெரியவில்லை.

ராஜா பையாவுக்கு அமைச்சர் பதவி அளித்தால் அனைவருடைய விமர்சனத்துக்கும் ஆளாக நேரிடும், பத்திரிகைகள் கடுமையாகச் சாடி எழுதுவார்கள் என்பதெல்லாம் அகிலேஷ் யாதவ் மற்றும் முலாயம் சிங் யாதவ் இருவருக்கும் தெரியாத விஷயம் அல்ல. இருந்தும்கூட, இதையெல்லாம் துடைத்துப்போட்டுவிட்டு அவரை அமைச்சராக்குகிறார்கள் என்றால், இதற்கான கட்டாயம் என்னவாக இருக்கும்?

இப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்கும், அமைச்சரவைக்கும் இன்றியமையாதவர் என்பதுதான் நிலைமை என்றால் முதல்வர் அகிலேஷ் யாதவால் எப்படி நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை அளிக்க முடியும்? குற்றப் பின்னணி உள்ளவர்களை அமைச்சர்களாக்கிவிட்டு, அவர்கள் செய்யும் தவறுகளில் தங்களுக்குச் சம்பந்தமில்லை என்று சொன்னால் அதை எப்படி ஏற்க முடியும்?

இதே சிக்கலில்தான் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவி மாயாவதியும் சென்ற ஆட்சியில் சிக்கிக்கொண்டார். அவரது அமைச்சரவையில் சுகாதார அமைச்சராக இருந்த குஷ்வாகா, தேசிய ஊரக சுகாதார மேம்பாட்டுத் திட்டத்தில் செய்த ஊழலுக்காக அவரை மாயாவதி பதவியிலிருந்து நீக்கினாலும்கூட, ஓராண்டு கழித்தும் அந்தச் சிக்கல் முடியாமல், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு, அவர் பாஜகவுக்கு கட்சி மாறியது எனப் பல அரசியல் கூத்துகள் நடந்தன. இந்த ஊழலில் மாயாவதிக்குப் பங்கு உண்டு என்பதுதான் கடைசியில் மக்கள் மனதில் தங்கியது. அதற்காக அவர் கொடுத்த விலை - மிகப்பெரிய தோல்வி.

இதுமட்டுமல்ல, உத்தரப் பிரதேசத்தில் இருந்த பல கூட்டுறவு சர்க்கரை ஆலைகளைத் தனியாருக்குக் குறைந்த விலையில் விற்றதன் மூலம், மாயாவதியின் நண்பரும், மதுபானத் தொழில் ஜாம்பவானுமாகிய குர்பிரீத் சிங் என்கிற போண்டி சத்தா என்பவர்தான் பயன்அடைந்தார் என்ற குற்றச்சாட்டும் மாயாவதிக்கு விவசாயிகள் மத்தியில் பின்னடைவை ஏற்படுத்தின.

ஆகையால், அமைச்சர்களையும், தொழில் அதிபர்களின் நட்பையும் பகிரங்கமாக்கிக்கொள்ளும்போது ஆட்சியில் இருப்பவர்கள் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதற்குத் தனது தந்தை முலாயம் சிங்கின் முந்தைய ஆட்சியையும், தேர்தலில் தோல்வியைச் சந்தித்திருக்கும் மாயாவதியின் ஆட்சியையும் பார்த்தாகிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உத்தரப் பிரதேச முதல்வராகப் பதவி ஏற்றிருக்கும் அகிலேஷ் யாதவ் தெரிந்துகொள்ள வேண்டாமா?

அகிலேஷ் யாதவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் அரசியல் நெருக்கடி என்றாலும்கூட, உத்தரப் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏ-க்களில் 35 விழுக்காடு பேர் குற்றப் பின்னணி உள்ளவர்கள் என்கிறது ஓர் ஆய்வு.

ஐந்து மாநிலங்களில் - உ.பி., பஞ்சாப், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா - ஆகிய ஐந்து சட்டப்பேரவைத் தேர்தலில் குற்றப் பின்னணி உள்ள 690 பேர் எம்எல்ஏ.க்களாகத் தேர்வு பெற்றுள்ளனர். இவர்களில் 252 பேர் உத்தரப் பிரதேசத்தில் மட்டும். 2007 தேர்தலைக் காட்டிலும், குற்றப் பின்னணி உள்ளவர்கள் எம்எல்ஏ ஆவது 8% கூடியிருக்கிறது என்கிறது அந்த ஆய்வு.

உத்தரப் பிரதேசத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள 189 எம்எல்ஏ-க்கள் தங்கள் வேட்பு மனுவில் தங்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்பதைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

தூய்மையான அரசை அளிப்போம், ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என்று குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள் ஏன், குற்றப் பின்னணி உள்ளவர்களை வேட்பாளர்களாக அறிவிக்க வேண்டும். பின்னர் வெற்றி பெற்று, ஆட்சிக்கு வரும்போது அவர்களுக்கு அமைச்சர் பதவிகளையும் வழங்க வேண்டும்? முதலிலேயே இவர்களை வடிக்கட்டி விட்டுவிடலாகாதா?

எந்த ஓர் அரசியல் கட்சியும் குற்றப்பின்னணி உள்ளவர்களை முழுமையாக ஒதுக்கி நிறுத்த முடியாத ஒரு நிலைமை காணப்படுகிறது. ஏனென்றால், குற்றப் பின்னணி உள்ளவர்கள்தான் பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். 189 எம்எல்ஏ.க்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளன என்றால், கோடீஸ்வர எம்எல்ஏ.க்கள் எத்தனைப் பேர் தெரியுமா? 271 எம்எல்ஏ.க்கள்!

தெளிவான கொள்கைகள், தேசத்தின் வருங்காலத்தை வளப்படுத்தத் தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய செயல்திட்டம் என்று எதுவுமே இல்லாமல், பதவி, பணம், ஆதாயம் என்பதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்ட அரசியல் நிலைபெற்றிருப்பதுதான் இதற்கு அடிப்படைக் காரணம். பணபலத்தையும், அடியாள் பலத்தையும் மட்டுமே நம்பி அரசியல் கட்சிகள் செயல்படுவதால் ஏற்பட்டிருக்கும் விபரீதம் இது. இதற்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் மட்டும் விதிவிலக்கா என்ன?

அகிலேஷ் மட்டுமல்ல, நமது தேசத்தின் வருங்காலத்தில் அக்கறையுள்ள ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் சிந்திக்க வேண்டிய பிரச்னை இது!

No comments:

Post a Comment