Monday, October 10, 2016

காவிரியும் - மோசடி அரசியலும் !




காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4-ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30-ஆம் தேதி நீதிமன்றம் கூறியபோதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது இப்படி கர்நாடகத்துடன் சேர்ந்து நியாயம் பேசுவது என்ன அறம்? பொது மருத்துவத் தேர்வுக்கு (நீட்) உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உடனடியாக ஓராண்டு காலத்துக்கு தள்ளி வைக்க அவசரச் சட்டம் உருவாக்கத் தெரிந்த மத்திய அரசுக்கு, தமிழக மக்களின் நலனுக்காக, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க அவசரச் சட்டம் பிறப்பிக்க முடியாதா என்ன?
இரு மாநிலங்களுக்கு இடையிலான நீர்ப் பகிர்வுப் பிரச்னையில் தலையிட நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என்றால், மத்திய அரசே ஏன் நேரடியாகக் களம் இறங்கியிருக்கக் கூடாது? பிரதமரை தலைவராகவும், காவிரி தொடர்புடைய மாநில முதல்வர்களை உறுப்பினர்களாகவும் கொண்ட காவிரி நதிநீர் ஆணையம் தலையிட்டு பிரச்னையைத் தீர்த்து வைத்திருக்கலாமே, ஏன் மத்திய அரசு செயல்படவில்லை?
பிப்ரவரி 5, 2007-இல் வெளியான நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட வைக்க தமிழக அரசு போராடியது. அதன் அடிப்படையில் மேலாண்மை வாரியம் அமைக்கப் போராடிக் கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் கர்நாடக அரசு முட்டுக்கட்டைப் போடுவதும், நீதிமன்றத்தை நாடுவதும், ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் இருப்பதும் வழக்கமாகி இருக்கிறது. காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டிய மத்திய அரசோ, கடந்த 10 ஆண்டுகளாகக் காலம் கடத்திவருகிறது.
அதுமட்டுமல்ல, "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பது நடுவர் மன்றத்தின் பரிந்துரை மட்டுமே. இதனை ஏற்பதும், ஏற்காததும் மத்திய அரசின் விருப்புரிமை சார்ந்தது" என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதைவிட, நேரடியாக தமிழ்நாட்டுக்கு கர்நாடகம் தண்ணீர் திறந்துவிடத் தேவையில்லை என்றே மத்திய அரசு சொல்லியிருக்கலாம். காவிரியில் தமிழ்நாட்டுக்கு பங்கு கிடையாது என்றும் கூறியிருக்கலாம். கர்நாடகம் எந்தெந்த வாதங்களை முன் வைக்கிறதோ அதே வாதங்களை மத்திய அரசும் முன்மொழியுமேயானால், இறையாண்மை என்பதற்கு என்னதான் அர்த்தம்?
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி ஆண்டுக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் தமிழகத்துக்குக் கிடைக்க வேண்டும். இதில் ஆகஸ்டில் 50 டி.எம்.சி., செப்டம்பரில் 40 டி.எம்.சி., அக்டோபரில் 25 டி.எம்.சி., நவம்பரில் 15 டி.எம்.சி. தரப்பட்டால்தான், இந்த நான்கு மாதங்களில் காவிரி டெல்டா பகுதி முழுவதிலும் நெல் சாகுபடி செய்ய இயலும். ஆனால் கடந்த இரு மாதங்களாகத் தண்ணீரை நிறுத்தி வைத்தது கர்நாடகம். பற்றாக்குறைக் காலங்களில், தீர்ப்பில் அறிவிக்கப்பட்ட அளவுகளின் விகிதத்துக்கு ஏற்ப தண்ணீரைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் நடுவர் மன்றத்தின் தெளிவான தீர்ப்பு.
செப்டம்பர் 5 முதல் 30 வரை கர்நாடகம் நமக்கு அளித்ததாக சொல்லப்படும் நீர் 17.5 டி.எம்.சி. ஆனால் தமிழகம் பெற்றதாக சொல்லப்படும் அளவு 16.9 டி.எம்.சி. செப்டம்பர் மாதம் நமக்கு கிடைக்க வேண்டிய 40 டி.எம்.சி.யில் பாதிகூட கிடைக்கவில்லை. அக்டோபர் 1 முதல் 6 தேதி வரை 3 டி.எம்.சி. தண்ணீர் தருகிறோம் என்று உறுதி கூறுகிறார்கள்.
"மன காவிரி' என்கிற கர்நாடகம், காவிரி நதியை சுருட்டி வைத்துக்கொள்ள முடியுமானால் அதையும் மத்திய அரசு அனுமதிக்கும். அப்படித்தான் மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது. கர்நாடகம் ஹேரங்கி அணை கட்டுவதற்குத் தமிழகம் எதிர்ப்புத் தெரிவித்தபோது, மத்திய அரசு தலையிடவில்லை. கர்நாடகம் கட்டி முடித்தது. மேக்கேதாட்டு பகுதியில் அணை கட்ட தமிழகம் எதிர்த்தாலும், அதையும் அனுமதிப்பார்கள். காவிரியின் குறுக்கே கர்நாடகத்தில் எங்கெங்கு இயலுமோ அங்கெல்லாம் அணை கட்டி, தேக்கி, தேக்கி, ஒரு சொட்டு நீர்கூட மேட்டூருக்கு கிடைக்காமல் செய்ய கர்நாடகத்தை மத்திய அரசு அனுமதிக்கும்.
இதற்குப் பின்னால் இருப்பது முழுக்க முழுக்க அரசியல். தமிழகத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று மத்திய ஆட்சியில் இருக்கும் தேசியக் கட்சி நினைத்து செயல்பட்டால், கர்நாடகத்தில் ஆட்சியைப் பிடிக்கும் வாய்ப்பை இழந்துவிடும். நியாயம் வழங்கியதற்காக, தமிழகம் ஆதரவு அளிக்குமா என்றால் அளிக்காது. இதுதான் நாம் வஞ்சிக்கப்படுவதற்குக் காரணம். 2004 - 2009இல் அன்றைய மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தி.மு.க.வின் தயவில் இருந்தபோது அழுத்தம் கொடுத்திருந்தால் ஒருவேளை மேலாண்மை வாரியம் அமைத்திருக்க முடியும். இனிமேல் அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்க வாய்ப்பே இல்லை.
காவிரி மேலாண்மை வாரியம் என்பது இனி வெறும் கானல்நீர்தான். நடைமுறைக்கு வரவே வராது. மத்திய அரசு தமிழ்நாட்டு மக்களுக்கு செய்திருக்கும் மாபெரும் துரோகம் இது. காலத்தால் மறையாத வடுவாக இது தமிழர் மனங்களில் நீடித்திருக்கும். அப்படி நீடித்திருக்கும்வரை "இந்தியன்' என்கிற பெருமிதத்துடன் தமிழன் இந்திய தேசத்துடன் ஒன்றமாட்டான்!
http://www.dinamani.com/editorial/2016/oct/05/%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2576075.html?pm=340

No comments:

Post a Comment