Tuesday, September 7, 2010

இந்துக்கள் என்ற அடையாளத்துடன் போராடினால் தமிழர்கள் ஏற்றுக் கொள்வதில்லை-பாஜக


சென்னை: தமிழர்கள் [^] என்ற அடையாளத்துடன் போராடினால் மற்ற மாநிலத்தவர்கள் புறக்கணிக்கிறார்கள். இந்துக்கள் என்ற அடையாளத்துடன் போராடினால் தமிழர்கள் புறக்கணிக்கிறார்கள் என்று முன்னாள் தமிழக பாஜக தலைவர் இல. கணேசன் கூறினார்.

பேராசிரியர் சூர்யநாராயணன் எழுதிய 'மலேசிய இந்தியத் தமிழர்களின் அவலநிலை' என்ற தமிழ் மொழிபெயர்ப்பு நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

மேற்கு வங்க முன்னாள் தலைமைச் செயலாளர் ராகவன் இந்த நூலை வெளியிட, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முத்துக்குமரன் பெற்றுக் கொண்டார்.

விழாவில் இல.கணேசன் பேசுகையில், ஒரு காலத்தில் கூலி வேலைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர்கள்தான் மலேசியத் தமிழர்கள். அவர்கள் தான் காடுகளை சீரமைத்து மலேசியாவை வளம்மிக்க நாடாக மாற்றினார்கள். அதற்காக நன்றி பாராட்ட வேண்டியவர்கள் விரட்டி அடிக்கிறார்கள்.

மலேசியாவில் உள்ள தமிழர்களில் 90 சதவீதத்தினர் அங்கேயே பிறந்து வளர்ந்தவர்கள். ஆனாலும் அவர்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது. தங்களுக்கென கொடுமைகளை எதிர்த்து வெகுண்டெழுந்த தமிழர்கள் இந்து உரிமை பாதுகாப்பு [^] படையான 'ஹிண்ட்ராப்' என்ற அமைப்பைத் தொடங்கி போராடி வருகிறார்கள்.

இலங்கையிலும் தமிழர்கள் கொடுமைக்குள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கு இங்கு நாம் எவ்வளவுதான் போராடினாலும் தமிழகத்தைத் தாண்டி அது எடுபடவில்லை. மற்ற மாநிலத்தவர்கள் அது தமிழர்களின் பிரச்சனை என்று ஒதுங்கி விட்டார்கள்.

தமிழர்கள் என்ற அடையாளத்தினால் ஒட்டுமொத்த இந்தியர்களின் ஆதரவைப் பெற முடியாமல் இலங்கையில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

மலேசியத் தமிழர்களின் அவலநிலை குறித்து மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜியுடன் பேசுவதற்கு பாஜக எம்.பி. ஒருவர் ஏற்பாடு செய்தபோது மேற்கு வங்க எம்.பி. கூட கலந்து கொண்டார். ஆனால், தமிழக எம்.பிக்கள் யாரும் வரவில்லை.

அதாவது இந்து என்ற அடையாளத்துடன் மலேசியத் தமிழர்கள் போராடுவதால் வங்காளிகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால், தமிழர்களின் ஆதரவு கிடைக்கவில்லை.

தமிழர்கள் என்ற அடையாளத்துடன் வந்தால் மற்ற மாநிலத்தவர்கள் புறக்கணிக்கின்றனர். இந்துக்கள் என்ற அடையாளத்துடன் போராடினால் தமிழர்கள் ஏற்றுக் கொள்வதில்லை.

மொத்தத்தில் அடையாளப் பிரச்சனையால் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெரும் துன்பத்துக்கு ஆளாகி வருகிறார்கள். அதுவே அவர்களின் அழிவுக்கும் காரணமாக உள்ளது.

மலேசியத் தமிழர்களின் நலனுக்காக இந்திய அரசு எதுவும் செய்யவில்லை. செய்யவும் மாட்டார்கள். அவர்களை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என்றார் கணேசன்.

செம்மொழி மாநாடு பயன் என்ன?-பொன்.ராதாகிருஷ்ணன்:

இந் நிலையில் பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மதுரையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

கோவை செம்மொழி மாநாட்டில், மொழி வளர்ச்சிக்கு என ரூ.100 கோடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மொரிஷீயஸ், மலேசியா உட்பட பல நாடுகளில் பரவியுள்ள தமிழர் குழந்தைகளுக்கு தமிழ் கற்று கொடுக்க மாநாட்டில் எந்த வழிவகையும் செய்யவில்லை.

மொரிஷீயஸில் உள்ள தமிழர்கள் வெளியேற்றப்படும் அவலம் நிலவுகிறது. அங்கு பேச்சு வழக்கில் கூட தமிழ் இல்லாமல் போய்விட்டது. மேலும், மலேசியாவில் தமிழர்கள் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. தமிழர் உரிமைக்கு குரல் கொடுப்பவர்கள் கைது செய்யப்படுகின்றனர். தமிழ் பள்ளிகள் மூடப்படுகின்றன.

இது போன்ற பிரச்சனைகளை செம்மொழி மாநாடு கண்டு கொள்ளவில்லை என்றார்.

Source: http://thatstamil.oneindia.in/news/2010/06/30/tamils-ignore-protests-hindu-ideology-bjp.html

No comments:

Post a Comment