Sunday, October 17, 2010

சகோதரன்


இந்திரா பார்த்தசாரதியின் புகழ் பெற்ற நாடகம் ஔரங்கசீப். அந்த நாடகத்தில் ஒரு காட்சி. ஔரங்கசீப் தன் அண்ணன் தாரா ஷுகோவைக் கைது செய்தபின்னர் அவருடன் உரையாடுகிறான். ஔரங்கசீப்புக்கு இந்த உரையாடலில் ஒரு முக்கிய நோக்கம் இருக்கிறது. இஸ்லாமியச் சட்டப்படி ஷுகோவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். அந்தத் தண்டனை இஸ்லாமிய மத உணர்வுகளைத் தனக்குச் சாதகமாகத் தூண்டும்படி இருக்கவேண்டும். எனவே ஷுகோ மீது ஔரங்கசீப் கூறப்போகும் குற்றம், அவர் இஸ்லாமைத் துறந்தார் என்பதே. இஸ்லாமியர் ஒருவர் இஸ்லாமைத் துறந்தால் இஸ்லாமியச் சட்டப்படி அவருக்கு மரணதண்டனை. இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களைத் திரட்டவே இந்த உரையாடல்.

தாரா ஷுகோ: உண்மையை உணர்ந்தவர்கள் சூஃபிகளாக இருந்தால் என்ன, காஃபிர்களாக இருந்தால் என்ன, அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஔரங்கசீப்: உண்மையை உணர்ந்தவர்கள் காஃபிர்கள்தான் என்று சொல்ல உனக்கு எத்தனை துணிச்சல்? ரோஷனாரா! இதை நினைவில் வைத்துக்கொள். இவனை முல்ஹீத் என்று குற்றம் சாட்டப் போதுமான சாட்சி. …

ரோஷனாரா: அப்படியானால் நீ கடவுளின் தூதனா? தாரா: நாம் எல்லோருமே கடவுளின் அம்சங்களாக இருக்கும்போது, நம் ஒவ்வொருவரின் ஆற்றலின் எல்லையாக கடவுள் வெளிப்படும்போது, கடவுளை நாம் ஏன் நம்மினின்றும் மிகுந்த தொலைவான தூரத்தில் நிறுத்தி, அவரைத் தூது அனுப்பும்படியாகச் செய்யவேண்டும். ஔரங்கசீப்: (கோபத்துடன்) நபிநாயகம் கடவுளின் தூதர் இல்லை என்றா சொல்கிறாய்? தாரா: நாம் எல்லோருமே கடவுளாக ஆகக்கூடிய வாய்ப்பு இருக்கும்போது கடவுளை நம்மினின்றும் வேறுபடுத்திப் பேசவேண்டிய அவசியமில்லை என்றுதானே கூறினேன். நபிநாயகம் கடவுளின் தூதர் அல்ல. நபிநாயகமே கடவுள். எனக்கும் உனக்கும் நபிநாயகம் மாதிரி கடவுளாகும் வாய்ப்பு இருக்கிறது.

இந்த வரிகளைக் கேட்டதும் ஔரங்கசீப் நிதானம் இழக்கிறான். இந்த முல்ஹீதின் உடம்பைக் கண்டதுண்டமாக வெட்டி, அவன் தலையை என்னிடம் கொண்டுவாருங்கள் என்று கூச்சலிடுகிறான். அவன் சகோதரி ரோஷனாரா அவனை அமைதிப்படுத்தி ‘முறையாக’ விசாரித்து தாரா ஷுகோவைக் கொல்ல அவர்கள் போட்டிருக்கும் திட்டத்தை நினைவுபடுத்துகிறாள்.

இது நாடகம். இந்திரா பார்த்தசாரதி எழுதிய இந்த நாடகத்தை இன்று சென்னையில் நடத்தி மேலே இருக்கும் வசனங்களைப் பேசினால் ஒரு கலவரம் வெடிக்கலாம். குறைந்தபட்சம் தமுமுகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் மேலே இருக்கும் வரிகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள். எனவே, இன்றைய சூழலில் இந்த நாடகம் மேடையேறாமல் இருப்பதே முதுபெரும் எழுத்தாளரான இந்திரா பார்த்தசாரதிக்கு நல்லது. இஸ்லாமியர்களால் நபி என நம்பப்படும் முகமது குறித்து இந்நாடகத்தில் ஔரங்கசீப் கொண்டுள்ள பார்வை சரியானதா அல்லது தாரா ஷுகோ கொண்டுள்ள பார்வை சரியானதா? இன்றைக்கு அரசியல் பலத்துடனும், சவுதி ஆதரவுடன் பரப்பப்படும் வஹாபிய இஸ்லாமியர்களுக்கு அதில் எந்த ஐயமும் இருக்காது. ஔரங்கசீப்பின் பார்வையே சரியானது. ஆனால் இந்திரா பார்த்தசாரதியின் நாடகத்துக்கும், இன்றைய மதவாத அரசியலுக்கும் அப்பால் வரலாறு காட்டும் தாரா ஷுகோ எத்தகையவர்?

இதற்கு நாம் சூஃபிகள் அன்றைய இஸ்லாமிய அரசு நிர்வாகத்தில் கொண்டிருந்த ஆதிக்கம் குறித்துப் புரிந்துகொள்ள வேண்டும். சூஃபி இறையியலாளர்கள் பொதுவாக ஹிந்து முஸ்லீம் ஒற்றுமை பேசினார்கள் என்பதே நம்முன் வைக்கப்பட்டிருக்கும் சித்திரம். ஆனால் பெரும்பாலான வட இந்திய சூஃபிகளுக்கு ஓர் இஸ்லாமிய இறையியல் சட்டகம் இருந்தது. இஸ்லாம் ஒரு பரிபூரண மார்க்கம். ஹிந்து மதத்தில் ஏற்கதக்கதாக இருப்பதெல்லாம் பண்டைய இறைத்தூதர்களால் அளிக்கப்பட்டவை. பின்னர் மார்க்கக்கேடால் அந்த மார்க்கம் சீரழிந்து ஹிந்து மதமாக மாறிவிட்டது. இப்படி ஒரு சித்தாந்தப் பார்வையை அவர்கள் முன்வைத்தார்கள். யூத கிறிஸ்தவ மறைகளை எப்படி இஸ்லாமிய இறையியல் பார்க்கிறதோ அப்படியே ஹிந்து வேதங்களையும் அவர்கள் பார்த்தார்கள். அதாவது அவற்றில் நல்ல விஷயங்கள் இருக்கலாம், ஆனால் இப்போது இஸ்லாம் வந்துவிட்டதால் அவை செல்லாக்காசு ஆகிவிட்டன. இத்தகைய சூஃபிகளுக்கு, பொதுவாக அதிகார ஆதரவும் இருந்தது. சூஃபிகள் தயக்கமே இல்லாமல் அதிகாரப் பீடங்களாகவும் ஆனார்கள். எனவே இந்த இறையியல் சட்டகத்தை மீறி யாராவது அரசனோ அல்லது பக்கீரோ செல்வது தெரிந்தால் அதைக் கடுமையாக எதிர்த்தார்கள். கலவரங்களை உருவாக்கினார்கள்.

உதாரணமாக அக்பரின் சமரசப் போக்கைக் கடுமையாக எதிர்த்து அவர் ஒரு காஃபிர் என ஃபத்வா அறிவித்தவர் ஷேக் அஹமது சிர்க்கிந்த் என்கிற சூஃபி. இந்திய எல்லைக்கு அப்பாலிருந்த இஸ்லாமிய அரசர்களிடம், ‘அக்பர் இஸ்லாமிய நெறி தவறிவிட்டார்’ என்று சொல்லி, இந்தியா மீது அவர்களைப் படையெடுக்கத் தூண்டினார். அரியணைப் பங்காளிச் சண்டைகளில் பங்கெடுக்கவும்கூட சூஃபிக்கள் தயங்கவில்லை. சிர்க்கிந்த் சூஃபி இயக்கம் இந்தியா முழுவதும் பரவியது. பிராந்திய இஸ்லாமிய அதிகார வர்க்கங்களுடன் இணைந்து கைக்கோர்த்துச் செயல்பட்டது. முழுக்க ஷரியா அடிப்படையிலான ஆட்சி. ஹிந்துப் புனிதத்தலங்களில் எல்லாம் இஸ்லாமிய சூஃபி மையங்கள் உருவாக்கப்பட்டன. இன்றைய சவுதி அரேபியாவுக்கு இணையாக சில நிர்வாக மாற்றங்கள்கூடச் செய்யப்பட்டன. ரம்ஸான் காலத்தில் உணவு விற்பனையே தடை செய்யப்பட்டது. புதிய கோவில்கள் கட்டிக்கொள்ளவும், இடிந்த கோவில்களைப் புதுப்பிக்கவும் ஹிந்துக்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. அக்பரின் காலத்துக்குப் பிறகு மொகலாய சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் மதவாதக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதில் சூஃபிகளின் பங்கு முக்கியமானதாக இருந்தது. அக்பரால் புறக்கணிக்கப்பட்ட சிர்க்கிந்த் ஜஹாங்கீரிடம் ஓரளவு செல்வாக்கு பெற்றிருந்தார். அவரது ஆலோசனையில் முக்கியமானது: “ஷரியாவை அமல்படுத்த போர்வாளே உற்ற நண்பன்.”

சிர்க்கிந்தின் சிஷ்யர்களில் ஒருவரான ஹஸரத் முஜாதித் அலீஃப் சானி அக்பர் செய்த ஒவ்வொரு செயலையும் மாற்ற வேண்டும் எனத் தீவிரமாகப் பிரசாரம் செய்தார்: “ஜிஸியாவைத் திரும்பக் கொண்டுவாருங்கள். பசுவதைத் தடையை அகற்றுங்கள்.” ஜஹாங்கீரே இவரைக் கைது செய்து விடுவிக்கவேண்டிய சூழல் உருவானது. வகாபியிஸம் எனும் அடிப்படைவாதம் உருவாக இன்னும் ஒரு சில நூற்றாண்டுகள் இருந்தன. இருப்பினும் இன்று அது முன்வைக்கும் தூய மத அடிப்படைவாத வித்துக்கள் சூஃபி இறையியலில் தாராளமாகவே சூல் கொண்டன. பின்னாட்களில் இஸ்லாமிய தேசியம் எனும் கோட்பாட்டை முஜாதித்திலிருந்தே ஆரம்பிக்கவேண்டும் என சில இஸ்லாமிய வரலாற்றாசிரியர்கள் கருதுவதாக பாகிஸ்தானிய அறிஞர் ஷேக் முகமது இக்ரம் கூறுகிறார்.

மதநூல்களுக்கும், அவை சொல்லும் சட்டத்திட்டங்களுக்கும் அப்பால் துணிச்சலுடன் சென்று ஆன்மநேய ஒருமைப்பாட்டை வலியுறுத்தி, மக்கள் அனைவரையும் அரவணைத்த மெய்ஞானிகளுக்கும் குறைவில்லை. இவர்களுடன் அதிகாரப் பீடங்கள் எப்போதும் மோதலும் சந்தேகமும் கொண்ட உறவே வைத்திருந்தன. இந்தச் சூழலில்தான் தாரா ஷுகோ உதயமானார்.

ஷுகோ செய்த பெரிய பண்பாட்டுத் தாவல் – இஸ்லாம் ஒரு பரிபூரணமான மதம் என்ற கருத்தாக்கத்தை நிராகரித்தது. இஸ்லாமிய அறிஞரும் வரலாற்றாய்வாளருமான முனைவர் மாலிக் முகமது கூறுகிறார்: “குரானின் உண்மைப் பொருளை அடைய ஹிந்து வேதங்களின் மூலமே முடியும் என்கிற (ஷுகோவின்) நிலைப்பாடு, ‘இஸ்லாம் ஒரு பரிபூரண அமைப்பு; அதற்கு, வெளியிலிருந்து எந்த ஞானமும் தேவையில்லை’ என்கிற இஸ்லாமியக் கருத்தியலின் அடிப்படைக்கே அடி கொடுப்பதாக இருந்தது. இதுவே ஷுகோவை மத்திய கால இஸ்லாமின் எல்லைகளுக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டது.”

மாலிக் முகமது அசாத்திய நேர்மையுடன் ஷுகோ கொண்டிருந்த கோட்பாடு குறித்து பின்வரும் சித்திரத்தை அளிக்கிறார்.

“குரானுக்கு எவ்விதத்திலும் குறையாத அதிகாரபூர்வத்தன்மையை தாரா ஷுகோ ஹிந்து வேதங்களுக்கு அளிக்கிறார். ஒரு குறிப்பிட்ட பார்வையில் உபநிடதங்களே உலகின் அனைத்து இறைநூல்களைக் காட்டிலும் உயர்ந்தவை. ஏனெனில் இதில்தான் இறைச்செய்தி ஆகச்சிறந்த தெளிவுடன் வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றது. எனவே, இவற்றின் அடிப்படையிலேயே குரானில் இருக்கும் தெளிவற்ற கருத்துக்களைப் புரிந்துகொள்ளவேண்டும். இப்படிக் கூறியதன் மூலம் தாரா ஷுகோ இஸ்லாமின் உயிரனைய ஒரு நம்பிக்கையைப் புறக்கணித்துவிட்டார். “நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் (அங்கீகரிக்கப்பட்ட) மார்க்கம் இஸ்லாம்தான்” (சுரா 3:19) என்பதையும், குரான் தெளிவாகப் புரியும்படியாக அருளப்பட்டநூல் என்பதையும் அவர் நிராகரித்துவிட்டார்.”

தனது வாழ்க்கை முறையிலும் ஹிந்து சம்பிரதாயங்களை வெளிப்படையாகவே ஷுகோ பின்பற்றி வந்திருக்கிறார். அவர் காலையில் சூரிய நமஸ்காரமும் மாலையில் குடும்பத்தினருடன் திருவிளக்கு பூஜை செய்வதையும் வழக்கமாகக் கொண்டிருந்தார். ஆனால் ஷுகோவின் மிகப்பெரிய பங்களிப்பு பாரத ஞானநூல்களை அவர் பாரசீக மொழிக்கு மொழிபெயர்த்ததே. ராமாயணம், பகவத் கீதை, யோக வசிஷ்டம் மற்றும் உபநிடதங்கள். உபநிடதங்களை “மாபெரும் மறைஞானம்” (சிர்-இ-அக்பர்) எனும் தலைப்பில் மொழி பெயர்த்தார். பொதுவாக ஹிந்து மத பிரசார இலக்கியங்களில் உபநிடதங்களின் மேன்மை குறித்து வெளிநாட்டு அறிஞர்களின் மேற்கோள்கள் வெளியிடப்பட்டால் அதில் தவறாமல் ஜெர்மானிய சிந்தனையாளரான ஆர்தர் ஷோபனரின் மேற்கோள் இருக்கும். அப்போது ஐரோப்பாவில் நிலவிய மிகப்பெரியப் பொது ஆர்வமே ஷோபனரை இந்தியத் தத்துவ ஞானத்தில் ஈடுபட வைத்தது. ஷுகோவின் உபநிடத மொழிபெயர்ப்புகளே ஐரோப்பிய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஐரோப்பாவை சென்றடைந்தன. எனவே பாரத ஞான மரபை உலகறியச் செய்தமைக்கு நாம் என்றென்றைக்கும் ஷுகோவுக்குக் கடன்பட்டிருக்கிறோம். ஆர்தர் ஷோபனர், “ஷுகோவின் மொழிபெயர்ப்புகளே மேற்கத்திய மொழிபெயர்ப்புகளைக் காட்டிலும் உபநிடதங்களின் உள்ளோட்டத்திற்கு உண்மையாக இருக்கின்றன” என்று குறிப்பிடுகிறார்.

தனது உயிரை உண்மையாகவே கொடுத்த ஷுகோவின் மொழிபெயர்ப்புக்கும், பின்னர் பாதிரிகளும் மேற்கத்திய இந்தியவியலாளர்களும் செய்த மொழிபெயர்ப்புகளுக்கும் ஒரு முக்கிய வேறுபாடு உண்டு என்பதையும் இங்குக் குறிப்பிடவேண்டும். மேற்கத்தியர்கள் உபநிடதங்களை மொழிபெயர்த்தபோது, ஒரு காலனியாதிக்க நாட்டின் செல்வத்தை அதன் அதிபர்கள் தெரிந்துகொள்ளவேண்டி ஆவணப்படுத்தும் மனநிலையிலிருந்தே செய்தார்கள். ஆனால் ஷுகோவின் மொழிபெயர்ப்பு அத்தகையது அல்ல. ஓர் ஆழ்ந்த ஞான உண்மையை உலகுக்கு அளிக்கும் அருட்பணியாகவே ஷுகோ இதைச் செய்தார்.

ஷுகோவின் ஆப்த நண்பராகவும் குருவுமாகவும் திகழ்ந்த ஒரு ஃபக்கீரைக் குறித்து இங்கே குறிப்பிடவேண்டும். ஸர்மத் அவர் பெயர். பிறப்பால் யூதர். பின்னர் இஸ்லாமைத் தழுவியவர். அதன் பின்னர் ராம-லட்சுமணர்களின் பக்தரானவர். இதனை அவரே அவருடைய பாடல்களில் ‘ராம லட்சுமணர்களின் தோட்டத்துக்குள்’ வந்துவிட்டதாகக் குறிப்பிடுகிறார். இவருடைய தீட்சையைத் தொடர்ந்து ஷுகோவுக்குச் சில ஆன்மிக அனுபவங்கள் கிடைத்தன.

ஒருமுறை ரிஷியின் முன்னால் ஓர் இளவரசர் இருப்பதைப் போன்ற ஒரு காட்சியை அவர் கண்டார். அந்த முனிவர் வசிஷ்டர் என்றும், அந்த இளவரசர் ஸ்ரீ ராமர் என்றும் ஷுகோவுக்கு புரிந்தது. ஷுகோவைத் தழுவிக்கொள்ள வசிஷ்டர் ஸ்ரீ ராமரிடம் கூறினார். ஸ்ரீ ராமர் ஷுகோவைத் தழுவிக்கொண்டார். பின்னர் வசிஷ்டர் ராமரிடம் ஷுகோவுக்கு இனிப்புகள் சிலவற்றைக் கொடுக்கச் சொன்னார். ஸ்ரீ ராமர் தன் கையால் பாபரின் வழித்தோன்றலுக்கு இனிப்புகளை வாயில் ஊட்டினார். இது கனவாக இருந்திருக்கலாம். ஆனால் ஷுகோவுக்கு இது மிகப்பெரிய ஆன்மிக அனுபவமாக இருந்தது. இதுவே அவரை யோக வசிஷ்டத்தை பாரசீகத்துக்கு மொழிபெயர்க்கத் தூண்டியது.

ஆனால் ஷுகோவுக்கு ஆன்மிக ஞானமும், அனைவரிடமும் அன்பும் இருந்த அளவுக்கு அரசியல் தந்திரம் இருக்கவில்லை. அவர் மிகவும் நம்பியவர்களே ஔரங்கசீப்பின் போலி வாக்குறுதிகளை நம்பி ஷுகோவுக்குத் துரோகம் செய்தனர். 1659 ஆகஸ்டு 30 நள்ளிரவில் ஔரங்கசீப்பின் மோசமான அவமானப்படுத்தல்களுக்குப் பிறகு ஷுகோ கொல்லப்பட்டார். அங்கு நடந்தேறியது வெறும் அரியணைப் போட்டி அல்ல. அதைவிட ஆழமான ஒன்று. சில காலத்துக்குப் பின்னர் ஸர்மத்தும் ஔரங்கசீப்பால் கொல்லப்பட்டார். இந்திரா பார்த்தசாரதியின் ‘ஔரங்கசீப்’ நாடகத்தில் ஔரங்கசீப் துரோகத்தால் கைதியாகி நிற்கும் ஷுகோவைப் பார்த்துச் சொல்கிறான்:

“ஹிந்து மதக் கொள்கையிலேயே ஏதோ ஒரு கோளாறு இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சொல்லுக்கும் செயலுக்கும் ஏன் இவ்வளவு இடைவெளியும் முரண்பாடும் இருக்கின்றன? நூற்றாண்டு நூற்றாண்டுகளாக வெளியிலிருந்து வருகின்ற அந்நியர்களுக்கு ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுத்துக்கொண்டு ஏன் அடிபணிகிறார்கள்? ஹிந்துக்கள் உன் முதுகில் இப்படிக் குத்தியிருந்தும் உனக்கு ஏன் புத்தி வரவில்லை?

ஔரங்கசீப் கேட்பது ஷுகோவை இல்லை.

ஓட்டுவங்கிக்காக நாட்டைப் பிளக்கும் அரசியல்வாதிகளையும், நேர்மையின்மையையும் தேசத்துரோகத்தையும் குடும்பப் பாரம்பரியமாகக் கொண்ட அந்த அரசியல்வாதிகளை, சுய ஆதாயங்களுக்காக அரசுக்கட்டிலில் அமர்த்தும் நம்மையும்தான்.

http://www.tamilpaper.net/?p=570

No comments:

Post a Comment