Tuesday, March 13, 2012

புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை


அன்று உப்புக்கு வரி விதித்தது ஆங்கிலேய அரசு.

இன்று தண்ணீருக்கு வரி விதிக்கிறது சோனியா அரசு !

அண்மையில் மத்திய அரசால் வெளியிடப்பட்ட ‘தேசிய நீர்க்கொள்கை- 2012‘ வரைவைக் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். அந்த வரைவு திட்டத்தைப் படித்த அனைவரும் காங்கிரஸ்அரசின் கோணல் சிந்தனையைக் கண்டு திகைப்படைந்திருக்கிறார்கள். அப்படி என்ன சொல்கிறது, புதிய வரைவு திட்டம்?

முதலில் அதன் தேவை என்ன? இதற்கு முன் 2002ல் ஒரு தேசிய நீர்க்கொள்கை வெளியிடப்பட்டு அது அமலிலும் இருந்து வருகிறது. அது நீர்ப் பயன்பாடு, நிலத்தடி நீராதாரங்கள்,அவற்றை பாதுகாப்பது, நீர்வழித்தடங்கள், கால்வாய்கள், நீர்வள ஆதார அமைப்புகளை பாதுகாப்பது, செறிவூட்டுவது, மற்றும் மேம்படுத்துவது சம்பந்தமாகவும், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்கள், தொழில்நுட்ப உதவிகள், மக்களிடம் விழிப்புணர்வு, துல்லிய நீர்ப்பயன்பாடு, மேம்படுத்தப்பட்ட கழிவு மேலாண்மை ஆகியவற்றைக் குறித்த விளக்கமான ஒரு வரைவாக இருக்கிறது. மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்பைக் குறித்தும் அது பேசுகிறது.

அது, முந்தைய 1987ல் கொண்டுவரப்பட்ட தேசிய நீர்க்கொள்கையை விட பலபடிகள் மேலானதாகவும், சிறந்ததாகவும் இருந்து வருகிறது. ஆனாலும் மாநிலங்களுக்கு இடையேயான நீர்ப்பங்கீடு, புதிய பாசன அமைப்புகள், அவற்றின் செயல்பாடுகள் பற்றி எதுவும் இந்த வரைவில் தெளிவாகச் சொல்லப்படவில்லை, ஸ்வஜல்தாரா, IAMWARM திட்டங்கள் சிறப்பாகசெயல்பட்டுக்கொண்டுள்ள வேளையில் UPA II அரசாங்கம், இவ்விஷயத்தில் இரண்டு வகையாக சமூக நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கிறது -

1. நிலத்தடி நீர், உள்மாநிலத்தில் உள்ள நீர்நிலைகள், மற்றும் நிலத்தடி நீராதாரங்களில் மக்களுக்கோ, அந்தந்த மாநில அரசுகளுக்கோ எந்தவித உரிமையும் இல்லை, அனைத்தும் மத்திய அரசுக்கே உரியது என்றும் அவை தனியாருக்கு ஏல முறையில் திறந்து விடப்படும் என்றும் புதிய வரைவுக் கொள்கை கூறுகிறது.

2. தண்ணீர் மற்றும் கழிவுநீருக்கு வரி விதிப்பது என்றும் வரைவில் கூறப்பட்டுள்ளது. மேலும் பாசனம், குடிநீர் வினியோகம், கழிவுநீர் மேலாண்மை, சுகாதாரம் ஆகிவற்றில் இருந்துஅரசாங்கம் முழுவதும் விலகிகொண்டு தனியாரை இந்த துறையில் ஈடுபடுத்தப் போவதாக மத்திய அரசு அறிவித்து இருக்கிறது.

இந்திய அரசியல் சட்டத்தில் அதிகாரம் குறித்த பிரிவுகளில் மத்திய பட்டியல், மாநில பட்டியல், இரு அரசுகளுக்கும் பொதுவான பட்டியல் என்ற மூன்று பகுதிகள் உள்ளன. இதில்மாநில பட்டியலில் 17-வது பிரிவில் பாசனம், கால்வாய்கள், நீர்த்தேக்கம், நீர் மின்சாரம் ஆகியவை அடங்கியுள்ளன. புதிய கொள்கை இதை மறுத்து ஒரு சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்கிறது இந்த வரைவு.

அதேபோல 1882-ம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய சொத்துக்களின் மீதான உரிமை கட்டுப்பாடு சட்டம் திருத்தப்பட்டு, ‘நிலத்தடி நீரின் மீது நிலச் சொந்தக்காரருக்கு உரிமையில்லை’என்று மாற்றவேண்டும் என்கிறது புதிய கொள்கை. இதன்படி குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு.

அதாவது, ஒரேயடியாக மக்களின் பாரம்பரிய உரிமையும், மாநிலங்களின் உரிமையையும், உள்ளாட்சி அமைப்புகளின் உரிமையும் ஒருங்கே பறிக்கிறது மத்திய அரசின் புதிய தேசிய நீர்க் கொள்கை முன்வரைவு.

இதன்படி கிராமங்களில் ஒரு நபருக்கு ஒரு நாளுக்கு 40 லிட்டருக்கு மிகாமலும், நகரத்தில் ஒரு நபருக்கு 80 லிட்டருக்கு மிகாமலும் குறைந்தபட்ச விலையில் வழங்கவும், அதற்குமேல் உபயோகப் படுத்தப் படும் நீருக்கு அடுக்கு முறையில் வரி விதிக்கவும் மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது. மேலும் நீங்கள் வெளியேற்றும் கழிவுநீருக்கு தனி வரி என்ற புதிய சிந்தனையையும் முன்வைத்திருக்கிறது.

இதோடு 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமைகளையும் மறுபரிசீலனைக்கு உட்படுத்துகிறது.

1) குடிநீர்,

2) விவசாயம்,

3) நீர் மின்சாரம்,

4) சுற்றுச்சூழல்,

5) விவசாயம் சார் மற்றும் விவசாயம் சாரா தொழில்கள்,

6) போக்குவரத்து மற்றும் இதர பயன்பாடுகள்

என்பதுதான் 2002ல் சொல்லப்பட்டுள்ள முன்னுரிமை வரிசை.

இனி அப்படி இல்லாமல் குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ நீர் இல்லாவிட்டாலும், வாட்டர் தீம் பார்க்குகளுக்கும், அரசியல்வாதிகளின் பெருந்தொழிற்சாலைகளுக்கும் நீர் தங்குதடையின்றி வழங்கப்படும். இது தான் அரசு சொல்ல விரும்பும் மறைமுகமான செய்தி.

தேசிய நீர்க் கொள்கை – 2012 இன் முன்வரைவில், 7 வது அத்தியாயத்தில் முதல் பிரிவு இவ்வாறு கூறுகிறது:

7. WATER PRICING

7.1 Over and above the pre-emptive uses for sustaining life and eco-system, water needs to be treated as an economic good and therefore, may be priced to promote efficient use and maximizing value from water. While the practice of administered prices may have to be continued…

அதாவது, தண்ணீர் இனிமேல் அத்தியாவசிய பொருள் அல்ல; அது வர்த்தக நோக்கத்துக்குரிய பண்டம்.

நீருக்கு வரி விதிப்பதற்கு மன்மோகன், சோனியா அரசு சொல்லும் நியாயம் என்ன தெரியுமா?

2 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்கள் இந்தியாவில் 80 கோடி பேர் உள்ளனர். அரசின் பெரும்பாலான சேவைகளான ரயில், பொது போக்குவரத்து மற்றும் இன்ன பிற சமூகநலத்திட்டத்தின் பயனாளிகள் நடுத்தர மக்களும் கீழ் நடுத்தர, மற்றும் வறுமைக் கோட்டுக்கு அருகிலும் கீழும் வசிக்கும் மக்கள் தான். ஆனால் அவர்கள் வரி எதையும்நேரடியாகச் செலுத்துவதில்லை.எனவே இவர்களை நேரடியாக வரி செலுத்தும் அமைப்புக்குள் கொண்டு வரும் விதமாக, இவர்கள் அதிகம் உபயோகிக்கும் தண்ணீர் மற்றும் உப்புமீது வரி விதிக்கலாம் என்ற அரிய கருத்தை முன் வைக்கிறார்கள்.

மன்மோகன் சொல்ல வருவது என்னவென்றால், பணக்காரர்களுக்கும், பெரும் பணக்கரார்களுக்கும் மட்டுமே அதிக வரி என்பது அநியாயம்; ஏழைகளும், பரம ஏழைகளும், நடுத்தரமக்களும் அதிகமாக அரசாங்கத்தைச் சார்ந்து இருந்துகொண்டு சுகமாக வாழ்கிறார்கள். அது நியாயமில்லை. எனவேதான் அவர்கள் உபயோகிக்கும் தண்ணீருக்கு வரி விதிக்கவேண்டும் என்ற அரிய யோசனையை முன் வைக்கிறார் அலுவாலியா (இவர் தான் திட்டக் குழுவின் துணைத் தலைவர்!) என்ற மேதை!

இதை இப்படி எடுத்துக் கொள்ளலாமா?

ஓர் ஆண்டுக்கு ஒரு ஏக்கரில் விவசாயம் செய்யும் விவசாயி 2,00,000 லிட்டருக்கு மேல் தண்ணீரை செலவு செய்து விவசாயம் பார்க்கிறார். அவர் ஈட்டும் வருமானமோ ஒருலட்சத்திற்கும் கீழ். அரசுக்கும் வருமானம் இல்லை; வெறும் செலவு தான். இதுவே ஒரு டாஸ்மாக் சேல்ஸ்மேனோ, தரகு வணிகத்தில் இருப்பவரோ 40,000 லிட்டரை மட்டுமேஉபயோகிக்கிறார். ஆனால் அரசுக்கு இவரால் வருமானம் வருகிறது. எனவே நீரை வீணாக்கும் விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் தரகருக்கு குறைவானவரியும் விதிக்க்கப்பட வேண்டும் என்கிறார், அலுவாலியா. காங்கிரசின் நியாயம் புரிகிறதா?

ஒரு உயிர்வேலியை ஏற்படுத்தி, உப்புக்கு வரி விதித்து மக்களின் மீது பஞ்சத்தையும், பசி, பட்டினியையும் செயற்கையாகத் திணித்த காலனிய ஆட்சியாளர்களின் வாரிசுகள்அல்லவா? வேறு எப்படி யோசிப்பார்கள்?

உப்பு வேலி, உயிர் வேலி பற்றிய ஜெயமோகனின் கட்டுரையையும், அதைத் தொடர்ந்த உரையாடல்களையும் படித்தால் இப்போது கூட மனம் படைபதைக்கும்.

நீர் என்பது வெறும் பொருளாதாரப் பண்டமாக மட்டுமே பார்க்கப்பட வேண்டும் என்பது, முற்றிலும் சமூக நீதிக்கு எதிரானதாகும்.

ஓர் அரசின் கடமை என்பது அதன் மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் வழங்க வேண்டியது. ஆனால் UPA II அரசு, குடிநீர், சுகாதாரம், கல்வி, தொலைதொடர்பு, வங்கி, காப்பீடு, சுரங்கம்- இவற்றை தனியார் வசம் ஒப்படைத்து விட்டு, நிர்வாகம் செய்வது மட்டுமே தனது கடமை என்று நினைப்பது போலத் தெரிகிறது. தனியாரிடம் ஒப்படைத்தால் தானே கமிஷன்கிடைக்கும்? அதை லிச்டேன்ஸ்டைன் வங்கியில் அப்போது தானே பதுக்க முடியும்?

மேலும் ஒரு நாளுக்கு 40 லிட்டருக்குக் குறைவான நீரை ஒரு மனிதன் எப்படிப் பயன்படுத்த முடியும்? இந்த நாகரீக உலகில், இந்தியர்களின் உணவுப்பழக்கம் மற்றும் கழிவறைபழக்கங்களைக் கொண்டு சராசரி இந்தியனுக்கு ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 66 லிட்டர் நீர் தேவை என்று உலக சுகாதர நிறுவனம் சொல்கிறது.

மேலும் ஒரு மனிதனின் குடிநீர், உணவு, சுகாதார நடவடிக்கைகள், தொழில் உபயோகங்கள் இவற்றை கருத்தில் கொண்டால் ஒரு மனிதனின் “per capita water need’ (தனிநபரின் தண்ணீர்ப் பயன்பாட்டுத் தேவை) 185 லிட்டர் ஆகும். 40 லிட்டருக்கு மேல் செலவாகும் 145 லிட்டருக்கும் அவன் வரி கட்டினால் மட்டுமே நீரைக் குடிக்கவோ,கழிவறையில் சுத்தம் செய்யவோ முடியும். வரி கட்ட முடியாதவர்கள் நீர் உபயோகிப்பதை சட்டம் போட்டு தடுப்போம் என்கிறது மத்திய அரசு. (பார்க்க: 7ம் படிவம்).

ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 600 லிட்டர் நீர் தேவைப்படுகிறது. இப்போது அரிசி விலை 40 ரூபாய். இனி 100 ரூபாய்க்கு மேல் அரிசி விற்றால் யாரும் அதிசயப்படாதீர்கள். எதுஎப்படியோ நமது அரசுக்கு கஜானா நிறையுமே?

நிலத்தடி நீரை நீங்கள் உபயோகித்தால் அதற்கும் அரசுக்கு வரி செலுத்த வேண்டும். நீர் என்பது பாரம்பரியமான உரிமை இல்லை; அது ஒரு பொருளாதார கருவி மட்டுமே என்கிறதுபுதிய வரைவு. இனிமேல் நீங்கள் தாகம் அடித்தால் பெக்டெல், வெண்டி, டாடா, ரிலையன்ஸ் போன்ற தண்ணீர் வழங்கும் பெரு நிறுவங்கள் அனுமதித்தால் மட்டுமே நீங்கள் தண்ணீர்குடிக்க முடியும். மீறி தாகம் எடுக்கிறது என்று நீரைக் குடித்தால் ஜெயிலுக்கு போக வேண்டி வரும் ஜாக்கிரதை.

இவ்வளவு நல்ல சட்ட முன்வரைவை வைத்து மக்களின் உரிமைகளை மத்திய அரசு கேள்விக்கு உள்ளாக்குகிறது. இதையும் வழக்கம் போல ஏற்று கொள்ளப்போகிறோமா? இல்லைநம் எதிப்பை பதிவு செய்யப் போகிறோமா?

ஒரு முக்கியமான விஷயம், இந்த சட்ட முன்வரைவு குறித்து பொது மக்களின் கருத்தை பதிவு செய்ய பிப். 29 வரை கால அவகாசம் கொடுத்திருந்தது நமது மாண்பு மிகு மத்திய அரசு.ஆனால் இதுகுறித்த எந்தத் தகவலும் பகிரங்கப் படுத்தப் படவில்லை. கூடிய விரைவில், மக்கள் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்று சொல்லிவிட்டு, ‘புதிய தேசிய நீர்க்கொள்கை- 2012′ அமல்படுத்தப்படுமோ?

எதுவும் நடக்கலாம். இத்தாலிய அம்மையாரை தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடும் இந்தியாவில்.

பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு,

வணக்கம். நீர் என்பதை தனியார்மயமாக்குவதாலும், அரசின் கண்காணிப்பிலிருந்து விலக்குவதாலும், பெரும்பான்மையான மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் மறுக்கப்படுகிறது. இதனால்ஏற்படும் சமூக சீர்குலைவுக்கும், பல்லாயிரம் மக்களின் சாவிற்கும், சுகாதாரக் கேடான வாழ்விற்கும் UPA II அரசே பொறுப்பேற்க வேண்டும்.

தண்ணீர் மனித இனத்தின் அடிப்படைத் தேவை. ஆனால், அந்தத் தேவை என்பது மக்களின் வாங்கும் சக்தியைக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. எனவே அது விற்பனைக்கானது.மாறாக, உரிமை என்பது நீங்கள் பெற்றே ஆக வேண்டிய விஷயம். அதை வியாபாரப் பொருளாக்க முடியாது. இத்தனை காலமும் வெறுமனே அடிப்படைத் தேவை என்று குறிப்பிட்டுவந்த ஐ.நா.மன்றம், இப்போது தண்ணீர் என்பது மனித இனத்தின் அடிப்படை உரிமை என்று ஏற்றுக் கொண்டுள்ளது. ஆனால், இந்திய அரசோ தன் நாட்டு மக்களுக்கு துரோகம்செய்கிறது..

சாதாரண மக்கள் நீர் குடிக்கும் உரிமையை கூட பறித்து அதை பன்னாட்டு கம்பெனிகளுக்கு விற்றுத் தான் இந்த தேசத்தை வளப்படுத்த வேண்டுமா? மனசாட்சியை தொட்டுச்சொல்லுங்கள் திரு.மன்மோகன்சிங் அவர்களே! தேசத்தையும், மக்களையும் வளப்படுத்தத்தானா இந்த வரி? மனித இனத்தின் அடிப்படை உரிமையான தண்ணீரை வெறும்வணிகப்பொருளாக மட்டுமே பார்க்கும் காங்கிரஸ் அரசின் பார்வையே வக்கிரமானதாகவும், அருவருப்பூட்டுவதாகவும் உள்ளது. இது உங்களையும் நம்பி ஓட்டு போட்ட மக்களைஒருங்கே வஞ்சிக்கும் செயல் அல்லாமல் வேறு என்ன?

2009ல் ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா? இது நியாயம் தானா?

விவெண்டி, சூயஸ், பெக்டெல் முதலான உலக அளவில் தண்ணீர் வியாபாரத்தில் முதன்மையாக உள்ள பத்து நிறுவனங்கள், 150 நாடுகளில் 200 கோடி வாடிக்கையாளர்களுக்குத் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. உலக வர்த்தகக் கழகம் தண்ணீரையும் ஒரு சரக்காகவே ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே தண்ணீரும் ஏற்றுமதி வியாபாரமாகிறது.

ஏழை நாடுகளில் உலக வங்கியின் கடன் திட்டங்களில் பெரும்பாலானவை தண்ணீர் தனியார்மயத்தை நிபந்தனையாகக் கொண்டுள்ளன. இதன்படி, தண்ணீர், சுகாதாரம் முதலானமக்களின் அடிப்படைத் தேவைகளை அரசாங்கம் செய்து தர வேண்டியதில்லை என்பதுதான் உலக வங்கி மற்றும் உலக வர்த்தகக் கழகத்தின் விதி. அதை வழிமொழிவதன் மூலமாகநீங்கள் உலக வங்கியின் ஒரு பொருளாதார அடியாளை விட மோசமாக செயல்படுகிறீர்கள்.

இந்தியாவையும் அதன் ஆன்மாவையும் யாரிடமாவது அடகு வைத்து பொருளீட்டலாம் என்று நினைக்கிறீர்களே, நீங்கள் படித்த கல்வியும், உங்கள் நாகரீகமும் இவ்வளவு தானா?தண்ணீர் என்பது வெறும் லாபம் மட்டுமே ஈட்டும் நீலத் தங்கமாக மட்டுமே உங்கள் கண்களுக்கு தெரிகிறதா?

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, உலகில் நடந்த எல்லா வன்முறைப் படுகொலைகளையும் விட தண்ணீர் தொடர்பான போர்களால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கையேஅதிகம். ஆண்டுதோறும் தூய குடிநீர் கிடைக்காமலும் சுகாதார வசதி இல்லாமலும் உலகெங்கும் ஐந்து வயதுக்கும் குறைவான 21 லட்சம் குழந்தைகள் மாண்டு போகின்றன. மிகக்கொடிய இரு பெரும் நோய்களான எயிட்ஸ் மற்றும் மலேரியாவினால் கொல்லப்பட்டவர்களை விட, தூய குடிநீர் கிடைக்காமல் மாண்டவர்களின் எண்ணிக்கை அதிகம்.

ஐ.நா.வின் கணக்கீட்டின்படி, உலகில் ஏறத்தாழ 200 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதிப்படுகின்றனர். உலகின் 88 கோடியே 40 லட்சம் மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர்வசதி இல்லை. 260 கோடி மக்களுக்குக் கழிப்பறை வசதி இல்லை. இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல், இந்திய தண்ணீர் சந்தையை உலகப் பெருநிறுவனங்களுக்கு ஏலமுறையில் திறந்து விடலாம் என்று யோசனை சொல்ல உங்களுக்கும், உங்கள் அமைச்சரவைக்கும் வெட்கமாக இல்லை?

http://www.tamilhindu.com/2012/03/on-upa-govt-national-water-policy/

No comments:

Post a Comment