Friday, April 27, 2012

சரஸ்வதி வீணை

சை என்ற சொல்லுக்கு இசைய வைப்பது என்று பொருள். மனிதனை இசைய வைக்கிற, அமைதியடைய வைக்கிற அருமையான விஷயம் இசை.
“இசை கேட்டால் புவி அசைந்தாடும்
அது இறைவன் அருளாகும்”

என்று இசையை பற்றிய திரைப்பட பாடல் ஒன்று உண்டு. இசையை தரும் இசைக்கருவி களில் எத்தனையோ வகைகள் உள்ளன. அவற்றில் குறிப்பிடத்தக்கது, வீணை. இது ஒருவகை நரம்பு இசைக்கருவி.

வீணை இசைக்கருவி பண்டையகாலம் தொட்டு வாசிக்கப்பட்டு வந்தாலும் கி.பி.17-ம் நூற்றாண்டில் தான் அது தற்போதைய உருவத்தை அடைந்தது. இது தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்க மன்னரின் காலத்தில் தான் நிகழ்ந்தது.
வீணை என்றாலே தஞ்சை தான் நினைவுக்கு வரும். தஞ்சாவூர் வீணை தான் பிரசித்தி பெற்றவையாக இன்னும் விளங்கி வருகிறது.

வீணைகள் பலா மரத்தினால் செய்யப்படுகிறது. அதில் குடம், மேற்பலகை, தண்டி, வளைவுமூடி மேல் உள்ள மாடச்சக்கை, சுரைக்காய், பிரடைகள், யாழிமுகம், மேளச்சட்டம், மெழுகுச்சட்டம், 24 மெட்டுக்கள், குதிரைகள், லங்கர், நாகபாசம் போன்ற பாகங்கள் உள்ளன. வீணையில் 4 தந்திகள் வாசிப்பதற்கும், 3 தந்திகள் சுருதிக்காகவும் அமைக்கப்பட்டு இருக்கும். வாசிப்பு தந்திகள் சாரணி, பஞ்சமம், மந்தரம், அநுமந்தரம் ஆகியவையாகும். சுருதி தந்திகள் பக்கசாரணி, பஞ்க பஞ்சமம், ஹெச்சு சாரணி ஆகியவை.
தண்டியின் ஒரு பக்கத்தில் குடமும், மற்றொரு பக்கத்தில் யாளி முகமும் இணைக்கப்பட்டு இருக்கும். குடம் உள்ள பக்கம் பெரிதாகவும், யாளி முனைப்பக்கம் சிறியதாகவும் காணப்படும். தண்டியின் இரு பக்கத்திலும் மெழுகுச்சட்டங்கள் இருக்கும். அவற்றின் மேல் 2 ஸ்தாயிகளை தழுவிய 24 மெட்டுக்கள் மெழுகினால் செய்யப்பட்டிருக்கும். யாளி முகத்திற்கு அருகில் இருக்கும் சுரைக்காய் ஒரு தாங்கியாகவும், ஒலிபெருக்கும் சாதனமாகவும், பயன்படுகிறது. 4 வாசிப்பு தந்திகள் லங்கர்களின் நுனியில் உள்ள வளையங்களில் முடியப்பட்டு குதிரையின் மேலும், மெட்டுக்களின் மேலும் சென்று பிரடைகளில் பிணைக்கப்பட்டு இருக்கும். நாகபாசத்தில் சுற்றப்பட்டு இருக்கும் லங்கர்களின் மேல் உள்ள சிறுவளையங்கள் சுருதியை செம்மைபடுத்த பயன்படும். வளையங்களை நாகபாசபக்கமாக தள்ளினால் சுருதி அதிகரிக்கும்.
தஞ்சை வீணையின் குடத்தின் வெளிப்புறத்தில் 24 தெரணை கோடுகள் நாபுக்கள் கீறப்பட்டு இருக்கும். வீணையில் பல வகை உண்டு. இதில் ஒரே மரத்துண்டில் தண்டியும், குடமும் குடைந்து செய்யப்பட்டு உள்ள வீணைக்கு ஏகாந்த வீணை என்று பெயர். வீணை குடத்தின் மேல் பல வகை களில் பல ஒலித்துளைகள் வட்டமாக போடப்பட்டு இருக்கும். இந்த துளை நாதத்தை வெளியே கொண்டு வருவதற்கு உதவும்.
வலது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வீணையின் கம்பிகளை மீட்டுவதற்கும், இடது கையின் ஆள்காட்டி விரலும், நடுவிரலும் வாசிப்பதற்கும் பயன்படுத்தப்படுகின்றன. தாள- சுருதித்தந்திகள் வலதுகை சுண்டுவிரலால் மீட்டப் படும். தந்திகளை மீட்டுவதற்காக சிலர் விரல் களில் நெளி அல்லது மீட்டி எனப்படும் சுற்றுக் கம்பிகளை அணிந்து கொள்வார்கள். நகங்களால் மீட்டுவதும் உண்டு. வீணையை மீட்டுபவர் தன் னுடைய வலது கையில் மீட்டுகோளை அணிந்து மீட்டு கம்பிகளை இடது கையால் அழுத்தி கீழ் தண்டில் உள்ள மீட்டு கம்பிகளை வலது கையால் மீட்டுவார். தரையில் அமர்ந்து மடியில் வைத்து வலது காலில் தாங்கிக்கொண்டு வீணை மீட்டப்படும்.
***

வீணையின் வகைகள்

வீணைகளில் சாதாரண வீணை (சரஸ்வதி வீணை), ஏகாந்த வீணை, கார்விங் வீணை, உட்கார்விங் வீணை, விசித்திர வீணை, ருத்திரவீணை ஆகிய வகைகள் உள்ளன. இதில் விசித்திர வீணை என்பது கோட்டுவாத்தியம் எனவும் அழைக்கப்படும். இந்த வகை வீணை அரிது. இந்த வகை வீணை இசைப்பவர்களும் அரிது. இப்போது விசித்திரவீணை, ருத்திர வீணை போன்றவைகளும் அரிதாகிவிட்டன. ஒரு வீணை தயாரிக்க ரூ.8 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை செலவாகிறது. முன்பு வீணை தயாரிக்க அதிக நாட்கள் ஆனது. தற்போது 3, 4 பேர் வேலையை பிரித்து செய்வதால், 20 நாட்களில் ஒரு வீணையை பூர்த்தி செய்துவிடுகிறார்கள். வீணைக்கு தேவையான பலாமரங்கள் பண்ருட்டியில் இருந்தும், கம்பிகள் மும்பையில் இருந்தும், பைபர் (சுரக்குடுவை) சென்னையில் இருந்தும் வரவழைக்கப்படுகிறது. வீணையின் அளவு 41/4 அடி. வெளிக்கூடு அகலம் 141/2 அங்குலம். எடை சராசரியாக 7 கிலோவில் இருந்து 9 கிலோ வரை இருக்கும்.
தஞ்சையில் 3-வது தலைமுறையாக வீணை தயாரிக்கும் சகோதரர்களான வெங்கடேசன், அனந்தநாராயணன் ஆகியோர் சொல்கிறார்கள்..
“நாங்கள் மரத்திலான வீணைகள் மட்டுமின்றி வெள்ளி வீணை, தோல் வீணை, எலக்ட்ரானிக் வீணை, எப்.எம். வீணை, பைபர் வீணை போன்றவைகளையும் தயார் செய்கிறோம். இதில் எப்.எம். வீணையை அது இசைக்கும் இடத்தில் இருந்து 10 மீட்டர் தொலைவிற்குள் எப்.எம்.மூலம் கேட்கலாம். தற்போது 50 குடும்பங்கள் இந்த வீணை தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
முந்தைய காலங்களில் வீணை குடத்தை அலங் கரிக்க யானை தந்தத்தை தகடுகளாக அறுத்து பூவேலைப்பாடுகளுடன் பயன்படுத்தினார்கள். பின்பு மான் கொம்புகள் பயன்படுத்தப்பட்டன. இப்போது பூ வேலைப்பாடுகளை மரத்திலும், பிளாஸ்டிக் தகடுகளிலும் செய்கிறார்கள். இதை லாபம் சம்பாதிக்கும் தொழிலாக நடத்துவதில்லை.
ருத்திர வீணை என்பது அரிதாகிவிட்டது. விசித்திர வீணையும் அரிதாகிவிட்டது. இந்த வீணையில் மெழுகுசட்டம், 24 மெட்டு போன்றவை இருக்காது. மேல் பகுதியில் 4 கம்பிகளும், 4 தாள கம்பிகளும், உட்பகுதியில் 12 தாளக்கம்பிகளும் இருக்கும். தற்போது வீணை அதிகம் தேவைப்படுகிறது. ஆனால் தயாரிப்பு குறைவாக உள்ளது. தஞ்சையில் செய்யும் வீணை தான் உலகின் பல பகுதிகளுக்கும் எடுத்துச்செல்லப்படுகிறது” என்று அவர்கள் கூறினார்கள்.

http://senthilvayal.wordpress.com/2012/04/27/%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%A3%E0%AF%88/

No comments:

Post a Comment