First Published : 13 Apr 2012 05:17:27 AM IST
தமிழ்ப் புத்தாண்டு ஆண்டாண்டு காலமாய் சித்திரையிலேதான் தொடங்கியது. இடையில் சிறிது குழப்பம்; இந்தக் குழப்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உண்டானது! இப்போது மீண்டும் வண்டி தண்டவாளத்தில் ஏற்றப்பட்டுவிட்டது! கருணாநிதி தையில்தான் தமிழாண்டு தொடங்குகிறது என்று போட்ட சட்டம் தலைமைச் செயலகத்தைத் தாண்டி தலையை நீட்ட முடியவில்லை. சட்டமன்றம் இருக்கிறது. ஆளுங்கட்சியின் எண்ணிக்கை போதாமையை ஈடுகட்டுவதற்கு குத்தகைக்கு எடுத்து வைத்திருக்கும் காங்கிரஸ்காரர்கள் இருக்கிறார்கள்; ஒரு சட்டம் செய்து அரசிதழில் வெளியிட்டுவிட்டால் கடல்கூட நூறு அடி உள்வாங்கி விடும் என்று நம்பியவர் கருணாநிதி! அதிகாரத்தின் தன்மை அதுதான்! அது மெல்ல மெல்ல ஒரு மனிதனைக் கடவுளாக்கிவிடும்; இரணியர்கள் இப்படித்தான் உண்டானார்கள்! ஆனால், மக்கள் வழக்கம்போல் தை முதல்நாளை அறுவடை நாள் மற்றும் தமிழர் திருநாளாகவும், சித்திரை முதல்நாளை ஆண்டுப் பிறப்பாகவும் தொடர்ந்து கொண்டாடி வருவதில் உள்நுழைந்து கருணாநிதியின் சட்டம் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியவில்லை. விளைவை உண்டாக்க முடியாத சட்டம் சட்டப்புத்தகத்திற்கே ஓர் அசிங்கம்! சித்திரைப் புத்தாண்டு அன்று இரவில் ஒவ்வொரு ஊரிலும் உள்ள புகழுடைத் தெய்வமான அம்மனோ சாமியோ குதிரை வாகனங்களில் எழுந்தருளி ஊர்வலமாக மக்கள் இருக்கும் இடங்களுக்குச் சென்று அருள்பாலிப்பது வழக்கம். இரவு முழுவதும் நாகசுரக் கச்சேரி, பாட்டுக் கச்சேரி, நாட்டியக் கச்சேரி என்று ஊரைத் தூங்க விடாமல் கிறங்க அடிக்கும்! இதில் போய் குறுக்குசால் ஓட்டினார் கருணாநிதி. அவ்வாறு குறுக்குசால் ஓட்டுவதற்கு அவர் மறைமலை அடிகளையும் உழவர் குழுவையும் துணைக்கு அழைத்துக் கொண்டார். "தமிழ் விடுதலைதான் தமிழரின் விடுதலை' என்பதைப் புரிய வைத்தவர்கள் மறைமலை அடிகள் தொடங்கி அண்ணா வரையிலானவர்கள்! மறைமலை அடிகள் தொடங்கிய தனித்தமிழ் இயக்கம் உழவர்கள் மட்டத்திலேயே தேங்கி விடாமல், அண்ணா அதை மக்கள் இயக்கமாக்கினார். 1920-ல் தொடங்கி 1970 வரை தமிழ் மறுமலர்ச்சிக் காலம்! ஒவ்வொரு இளையோனும் இளையோளும் தங்கள் பெயர்களை இளம்வழுதி, இளவழகன், செழியன், செங்குட்டுவன்,தேன்மொழி, கயல்விழி என்றெல்லாம் மாற்றிக்கொண்ட காலம்! சங்க இலக்கியம் போற்றப்பட்ட காலம்; சிலப்பதிகாரம் முன்னிறுத்தப்பட்ட காலம்; வள்ளுவன்தான் தமிழரின் முகம் என்று வலியுறுத்தப்பட்ட காலம்! அது தமிழரின் பொற்காலம்! பொற்காலத்தைச் சமைக்க ஓர் இயக்கம் ஆளுங்கட்சியாக இருக்க வேண்டுமென்னும் கட்டாயமில்லை. பக்தி இயக்கம், சித்தர்களின் கழகம் என்று தமிழ்நாட்டு வரலாற்றில் அதிர்வுகளையும் மாற்றங்களையும் தோற்றுவித்தவர்கள் ஆளும்தரப்பினர்களாக இருந்ததில்லை. "அச்சம் என்பது மடமையடா; அஞ்சாமை திராவிடர் உடைமையடா' என்னும் எம்.ஜி.ஆரின் இனஉணர்வுப் பாடல் 1970-க்கு முந்தியது. "முஸ்தபா முஸ்தபா; டோன்ட் ஒர்ரி முஸ்தபா' என்பது 1970-க்குப் பிந்தியது. நரேஷ், சுரேஷ், சந்தோஷ், ப்ரியா, அனுஷா என்பவைதாம் இன்றைய தமிழர்களின் பெயர்கள்! காங்கிரஸ் தலையாட்டி பொம்மைகளைக் கைக்குள் வைத்துக்கொண்டு நாடாண்ட கருணாநிதி இவர்களை ஒழுங்காகப் பெயர் வைத்துக்கொள்ளச் சொல்லியும் ஒரு சட்டம் போட்டிருக்கலாம். மறைமலை அடிகளின் பெயரால் இதையும் செய்திருக்கலாம்! இவை அனைத்துமே அந்தந்தக் காலத்தின் வெளிப்பாடுகள். 1921-ல் பச்சையப்பன் கல்லூரியில் மறைமலை அடிகள் தலைமையில் திரு.வி.க., க. சுப்பிரமணிய பிள்ளை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், நாவலர் சோமசுந்தர பாரதியார், கி.ஆ. பெ. விசுவநாதம் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் கூடித் தமிழருக்கென ஒரு "தனி ஆண்டு' தேவை என்று திருவள்ளுவர் பெயரில் தொடர் ஆண்டு ஒன்றினைப் பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டாகக் கொள்வது என்றும், ஆண்டின் தொடக்கமாக தை முதல்நாளைக் கொள்வது என்றும், திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கி.மு. 31 என்றும் அந்த அறிஞர் குழு எடுத்த முடிவுக்குத்தான் தான் சட்டவடிவம் கொடுத்ததாக கருணாநிதி குறிப்பிடுகிறார். தமிழர்கள் தற்போது கடைப்பிடித்து வரும் வடமொழி ஆண்டுமுறை அவர்களுக்குரியது இல்லை. வடமொழி ஆண்டுமுறை மிகவும் குழப்பமானது. சித்திரபானு ஆண்டு ஒரு மன்னன் பிறந்தான் என்று சொன்னால் எந்த சித்திரபானு என்று கண்டறிய முடியாது. 3000 ஆண்டுகளில் 50 சித்திரபானு வந்து சென்றிருக்கும். ஆகவே, அந்த ஆண்டு முறை குழப்பமானது என்பதாலும் அது தமிழர்க்கு உரியது அன்று என்பதாலும் அந்த ஆண்டு முறையை ஒழித்துக்கட்ட அறிஞர் குழு எண்ணியது என்பது சரியானதே! வள்ளுவன்தான் தமிழர்களை அடையாளப்படுத்தவந்த முகம் என்பதனால் அறிஞர்க்கெல்லாம் அறிஞனான அந்த வள்ளுவன் பெயரில் ஒரு தொடர் ஆண்டு முறையை அமைப்பதென அறிஞர் குழு முடிவெடுத்ததும் மிகச்சரியானதே. ஆனால், அதே மறைமலை அடிகள் தலைமையிலான குழுதானே தை முதல்நாள் தான் வள்ளுவர் ஆண்டின் தொடக்கம் என்று சொல்லியிருக்கிறது; அதுமட்டும் கசக்கிறதா என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி கேட்பார்! 500 புலவர்கள் கூடியெடுத்த முடிவு என்னும் ஒன்றே கருணாநிதி தான் எடுத்த நிலைப்பாட்டுக்குப் போதுமானது என்று கருதுகிறார். 500 புலவர்களும் நிகரற்றவர்கள்தாம்; ஆனாலும் 6 கோடித் தமிழர்களும் பல நூற்றாண்டுகளாக சித்திரைதான் ஆண்டின் தொடக்கம் என்று கொண்டிருப்பதை புலவர்கள் கருத்தில் கொண்டிருந்தார்களா என்பதை நம்மால் அறிய முடியவில்லை. சித்திரபானு, சுபானு, பார்த்திப என்பவை வடமொழி ஆண்டுகள்தாம்; ஆனால், சித்திரையும், வைகாசியும் வடமொழி மாதங்களா? அவை தமிழ் மாதங்கள் இல்லையா? ஆண்டு முறை தமிழர்க்கு இருந்ததை நம்மால் அறிய முடியவில்லை. ஆனி, ஆடி என்று மாதமுறையும் ஞாயிறு, திங்கள் என்னும் கிழமை முறையுமா தமிழர்க்கு இல்லாமல் போய்விட்டது? திருவள்ளுவர் ஆண்டு சித்திரையில் தொடங்குகிறது என்று பழைமையைக் கருத்தில்கொண்டும், மக்களின் பழக்கத்தைக் கருத்தில்கொண்டும் ஏற்கெனவே அறிவித்திருக்க வேண்டும்! ஆனால், அந்த அறிஞர் குழு அறிவார்ந்த மக்களை உள்ளடக்கியதுதான்! வடமொழி ஆண்டின் தொடக்கம்தான் சித்திரை என்று அன்றுவரை நம்பப்பட்டது! காலம் அவர்களுக்கு ஏற்படுத்தியிருந்த ஆறாச்சினத்தின் காரணமாக, வடமொழியோடு சேர்த்துச் சித்திரையையும் புறந்தள்ளிவிட்டார்கள் என்றுதான் கொள்ள வேண்டியிருக்கிறது. மறைமலை அடிகள் தலைமையிலான அந்த அறிஞர் குழு தொன்றுதொட்ட நடைமுறையையும் மக்களிடையே ஆழமாக வேரோடி இருக்கும் நம்பிக்கையையும் அடிப்படையாகக் கொள்ளாமல், தை முதல்நாளே திருவள்ளுவராண்டின் தொடக்க நாள் என்று அறிவித்ததால் திருவள்ளுவராண்டு மக்களிடையே புழக்கத்திற்கு வராமலேயே போய்விட்டது! கருணாநிதிதான் இதற்குச் சட்டம்போட்டுப் பார்த்தாரே; கடந்த மூன்று ஆண்டுகளில் அந்தச் சட்டத்திற்குப் பயந்து எந்த மக்களாவது திருவள்ளுவர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்களா? அது மக்கள் நினைப்பிலாவது இருக்கிறதா? குறைந்தது அவர் போட்ட சட்டத்திற்கு எ.வ. வேலுவாவது, பேரன் உதயநிதியாவது பயந்ததாகக் காட்டிக்கொண்டாவது கடைப்பிடித்ததுண்டா? மறைமலை அடிகள் தொடங்கிய தமிழ் இயக்கம் வெல்ல முடிந்தது; திருவள்ளுவர் ஆண்டு முறை மட்டும் வெல்லவில்லையே, ஏன்? சித்திரையை மாற்றித் தை என்று அறிவித்த நெருடல்தான் அதற்குக் காரணம். கதிரவன் மேஷ ராசிக்குள் நுழைவதிலிருந்து அதனின்று வெளியேறும் வரையிலான காலத்தை பழந்தமிழர்கள் சித்திரை மாதமாகக் கொண்டார்கள் என்று தெளிவான காலக்கணிதத்தை முன்வைக்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கதிரவனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டுதான் தமிழர்களின் காலக்கணிப்பு முறை உருவாகியிருக்கிறது; வானநூலையும் பருவங்களின் சுழற்சியையும் தமிழர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவியல்பூர்வமாக சித்திரை தொடங்கிய மாத வரிசை முறையை ஓர் ஆண்டாகக் கொண்டுள்ளார்கள். இன்னும் சொல்கிறார் முதல்வர் ஜெயலலிதா! கோடைகாலமே முதலாவது பருவம் என சீவகசிந்தாமணி சொல்கிறது! பத்துப்பாட்டு நெடுநெல்வாடையில் கதிரவன் மேஷத்தில் சஞ்சாரம் செய்து சுழற்சியைத் தொடங்கும் உண்மையை நக்கீரர் தெளிவுபடுத்தி உள்ளார் என்று தெளிவுபடுத்துகிறார் முதல்வர் ஜெயலலிதா. சீவகசிந்தாமணியையும் நெடுநெல்வாடையையும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதியையும் கல்வெட்டுகளையும் சான்றாதாரங்களாகக் கொண்டுள்ள இன்றைய முதல்வர் ஜெயலலிதா எங்கே? "பாரதிதாசன் சொன்னார்; பாரதிதாசன் சொன்னார்' என்று கிளிப்பிள்ளைபோல் சொல்லுகின்ற நேற்றைய முதல்வர் கருணாநிதி எங்கே? பழந்தமிழர் காலக்கணிப்பு முறை என்ன என்பதே கேள்வி. அதற்கு திருத்தக்கதேவரும், நக்கீரரும் உதவ முடிவதுபோல் பாரதிதாசன் உதவ முடியாது! ஆகவே முதல்வர் ஜெயலலிதா கூறுவதுபோல தமிழ் ஆண்டின் தொடக்கம் தை இல்லை; சித்திரைதான்! ஆனால், எந்த ஆண்டு முறைக்கு சித்திரை முதல்நாள் தொடக்கம் என்னும் கேள்வி எஞ்சி நிற்கும்! தமிழருக்கான ஆண்டு முறை பிற மொழியாளர்கள் பலர் ஆண்டபோது தொலைந்து போயிருக்கக்கூடும். ஆகவே, மறைமலை அடிகள் காட்டுவித்த திருவள்ளுவர் ஆண்டைத் தமிழரின் ஆண்டு முறையாகக் கொண்டு தைக்குப் பதிலாக சித்திரையையே ஆண்டுப்பிறப்பாகக் கொண்டால் திருவள்ளுவர் ஆண்டு மக்களின் நடைமுறைக்கு வந்துவிடும். இல்லாவிடில் சித்திரைப் பிறப்பை நந்தன ஆண்டுப் பிறப்பாகவே கருணாநிதி ஏளனம் செய்வார். திருவள்ளுவர் தை முதல்நாள் பிறந்தார் என்பது கற்பனைதானே! அவரை சித்திரை முதல்நாளில் பிறக்க வைப்பதால் தமிழினம் வாழும்; உரம் பெறும் என்றால் அந்தத் தெய்வப்புலவன் மறுக்கவா போகிறான்? ஒருவேளை அவன் பங்குனியில்கூட பிறந்திருக்கக்கூடும்! தாசில்தாரிடம் திருவள்ளுவர் பிறப்புச் சான்றிதழா வாங்கப் போகிறார், காசு கொடுக்காமல் பெற முடியாதே என்று கவலைப்படுவதற்கு? திருவள்ளுவர் ஆண்டு சித்திரை முதல்நாளில் பிறக்கிறது என்னும் சிறு மாற்றத்தை முதல்வர் ஜெயலலிதா சட்டத்தில் செய்தால் போதும்! சித்திரை என்னும் வழமையும் நிலைபெறும்; வள்ளுவர் ஆண்டும் மக்களிடையே பழக்கத்திற்கு வந்துவிடும்! நந்தன, விபவ, தாரண என்னும் ஆண்டுமுறை ஒழிந்துவிடும்! ராமநாதபுரம் பாம்புப் பஞ்சாங்கக்காரன்கூட 2043-ஆம் திருவள்ளுவர் ஆண்டு பஞ்சாங்கம் என்று போடத் தொடங்கி விடுவான்! "காலக்கணிதத்தை ஒழுங்குபடுத்திய முதல்வர்' என்று ஜெயலலிதாவை வரலாறு சுட்டும்!
No comments:
Post a Comment