பிஎஸ்என்எல் சர்ச்சை: நடந்தது என்ன?
புதுதில்லி, ஜூலை 21: பிஎஸ்என்எல் டெண்டர் சர்ச்சைக்குப் பிறகு, தற்போது அது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விளக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா.
பிஎஸ்என்எல் மற்றும் அதன் ஊழியர்களின் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு, தான் முடிவெடுப்பதாக ராசா அக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது நடவடிக்கையால், உடனடியாக அரசுக்கு ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெள்ளிக்கிழமையன்று, மூன்று பக்கக் கடிதத்தை பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ளார். விவரம்:
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஜிஎஸ்எம் மொபைல் சேவை (2ஜி, 3ஜி) டெண்டர் தொடர்பாக அண்மையில் பத்திரிகைகளில் வெளியான செய்திகள் தொடர்பாக இக் கடிதத்தை எழுதுகிறேன்.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் செயல்பாடு குறித்து எனது அமைச்சகம் உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இந் நிறுவனம் சிறந்து விளங்குவதற்கும், தனது சேவைகளை மேலும் விரிவுபடுத்தவும் அதற்குத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் தன்னாட்சியை வழங்குவதில் உறுதிபூண்டுள்ளது.
தில்லி உயர்நீதிமன்றத்தில் மோட்டரோலா நிறுவனம் தொடர்ந்த வழக்குக் காரணமாக, பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கான ஜிஎஸ்எம் டெண்டரை இறுதி செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
நான் அமைச்சராகப் பதவியேற்றவுடன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட பல்வேறு தரப்பிலிருந்தும் ஏராளமான புகார்கள் வந்தன. மோட்டரோலா நிறுவனம் எம்டிஎன்எல் நிறுவனத்துக்கு கருவிகளை வழங்கும் விலையை விட, தற்போதைய சந்தை நிலவரத்தைவிட அதிகமான விலைக்கு, பிஎஸ்என்எல் நிறுவனம் ஆர்டர் வழங்க உள்ளதாக புகார் கூறப்பட்டது. மேலும், தொழில்நுட்ப காரணங்களைக் கூறி, சில நிறுவனங்கள் டெண்டரில் இருந்தே விலக்கப்பட்டதாகவும் புகார் வந்தது.
இவை அனைத்தும் மிகவும் கடுமையான புகார்கள். அதனால், அது தொடர்பாக விளக்கம் கேட்பதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. சந்தேகங்களைப் போக்குமாறு கேட்டேன். எல்லாம் முறையாகவும், வெளிப்படையாகவும் நடக்க வேண்டும் என்ற காரணத்தாலும், கட்டணம் நியாயமாகவும் இருக்க வேண்டும் என்ற காரணத்தாலும், பிஎஸ்என்எல் நிறுவனத்திடமிருந்து விவரங்களைப் பெற்றேன். அவற்றை ஆய்வு செய்த பிறகு, தொலைத்தொடர்புத் துறை செயலர் மூலமாக பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு தகவல் அனுப்பினேன்.
எனது கருத்துக்கள் பற்றி விவாதித்து, பிறகு கூடுதல் சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்ரமணியத்தின் கருத்தையும் கேட்டு பிஎஸ்என்எல் இயக்குநர் குழு மேற்கொண்டு நடவடிக்கை எடுத்தது.
அதாவது, தற்போதைக்கு டெண்டர் அளவை 50 சதமாகக் குறைத்து, (2.275 கோடி இணைப்புகள்), டெண்டரில் முதல் இடம் பெற்ற எரிக்ஸன் நிறுவனத்துக்கு 13.125 மில்லியன் லைன்களுக்கு (மதிப்பு ரூ.5,154 கோடி) இணைப்பு வழங்க அனுமதி அளிக்கப்பட்டது. மொத்தம் 4.55 கோடி இணைப்புகளுக்கு முதலில் ரூ.22,595 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது. அது, ரூ.16,096 கோடியாகக் குறைக்கப்பட்டது. அதாவது, ரூ.6,500 கோடி மிச்சப்படுத்தப்பட்டது.
பிஎஸ்என்எல் நிறுவனத்தின் அடுத்த 15 மாதங்களுக்கான தேவைகளை சமாளிக்க, 22.75 மில்லியன் இணைப்புகளும், தற்போது வழங்க முடிவு செய்யப்பட்டுள்ள ஆர்டர்களும் போதுமானவை. மேலும், வளர்ச்சியை ஆய்வு செய்து, அதற்கு ஏற்றபடி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான தேவைகளைச் சமாளிக்க பிஎஸ்என்எல் உரிய நடவடிக்கைகளை எடுக்கும் என்றும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வப்போது நடைபெற்றுவரும் முன்னேற்றங்கள் தொடர்பாக தொழிற்சங்கத் தலைவர்களுக்கும் தெரிவிக்குமாறு தொலைத்தொடர்புத் துறைச் செயலரை நான் அறிவுறுத்தியிருக்கிறேன்.
பிஎஸ்என்எல் நிறுவனம் தொடர்பான சர்ச்சையின்போது, தாங்கள் எனக்கு அளித்த ஆதரவுக்கும் ஊக்குவிப்புக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் ராசா குறிப்பிட்டுள்ளார்.
——————————————————————————————————————-
டெண்டர் பிரச்னையால் “பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டம்”
(Idly-Vadai)
பிஎஸ்என்எல் டெண்டர் பிரச்னையால் தனியார் தொலைபேசி நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி லாபமும், பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ரூ.30 ஆயிரம் கோடி நஷ்டமும் ஏற்பட்டு இருக்கிறது என்று பிஎஸ்என்எல் அதிகாரிகள் சங்க மாநிலச் செயலர் என்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் ஞாயிற்றுக்கிழமை கடலூரில் கூறியது:
பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு ஜிஎஸ்எம் 2ஜி மற்றும் 3ஜி கருவிகள் வாங்க டெண்டர் இறுதி செய்யப்பட்டு பல மாதங்கள் ஆகியும், கருவிகள் வாங்க ஆர்டர் வழங்காததால் பிஎஸ்என்எல் நிறுவனம் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
டெண்டர் பிரச்னையால் மாதம் ஒன்றுக்கு தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் 65 லட்சம் இணைப்புகளை அளித்து இருக்கும்போது, பிஎஸ்என்எல் நிறுவனம் 29 ஆயிரம் செல் இணைப்புகளை மட்டுமே வழங்கி இருக்கிறது. இந்த நிலையில்தான் வேலை நிறுத்தம் என்ற நிலைக்கு பிஎஸ்என்எல் ஊழியர்களும் அலுவலர்களும் தள்ளப்பட்டனர்.
அவசர அறிவிப்பின் மூலம் பொய்யான தோற்றத்தை பதிய அமைச்சர் ராசா மேற்கொள்ள, முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் பிஎஸ்என்எல் நலனுக்காக அறிக்கை விடுகிறார். இவர்கள் இருவரும் டெண்டர் பிரச்னையை அரசியல் ஆக்கியதன் மூலம், பிஎஸ்என்எல் நிறுவனம் ரூ. 30 ஆயிரம் கோடி இழப்பை சந்தித்து வருவதுதான் வேதனை.
முன்னாள் அமைச்சர் மற்றும் இந்நாள் அமைச்சரின் அரசியல் சர்ச்சைகளில் சிக்கி, பிஎஸ்என்எல் நிறுவனம் மக்கள் நலன்களை, தனியார் முதலாளிகளிடம் அடகு வைத்துவிடக் கூடாது. எனவே அரசியல் சர்ச்சைகளை உதறித் தள்ளிவிட்டு, பிஎஸ்என்எல் நிறுவனத் தலைவர் அக்கறையுடன் செயல்பட்டு, 15 தினங்களுக்குள் தீர்வு காண வேண்டும். இல்லையெனில் மீண்டும் போராட்டம் தலைதூக்கும்.
http://bsubra.wordpress.com/2007/07/21/bsnl-tender-scam-allegations-maran-vs-raja-dmk-internal-squabbling-or-corruption/
No comments:
Post a Comment