Saturday, November 13, 2010

2-ஜி ஒதுக்கீடு விவகாரம்: குடியரசுத் தலைவரிடம் சிஏஜி அறிக்கை

First Published : 14 Nov 2010 02:34:57 AM IST

Last Updated : 14 Nov 2010 03:00:33 AM IST

புது தில்லி, நவ.13: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான சிஏஜி அறிக்கை குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக நிதி அமைச்சகத்திடம் தாக்கல் செய்யப்பட்ட இந்த அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் அடுத்த வாரத்தில் சிஏஜி அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது. இதனிடையே அமைச்சர் ராசாவை ராஜிநாமா செய்யக் கோரும் போராட்டத்தைத் தீவிரப்படுத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு காரணமாக அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டள்ளதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரி (சிஏஜி) அறிக்கை தெரிவித்துள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் இந்த பிரச்னையை முன்னிறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் ஸ்தம்பிக்கச் செய்தன.

பாஜக கேள்வி: இதனிடையே 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு ஏலம் நடத்தப்படாமல் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா? என்று பிரதமரிடம் பாஜக கேள்வியெழுப்பியுள்ளது. ஏலம் விடாமல், ஒதுக்கீடு செய்யும் முடிவு அமைச்சரவையில் எடுக்கப்பட்டதா? அல்லது தொலைத் தொடர்புத் துறை தன்னிச்சையாக எடுத்ததா? என்று பாஜக செய்தித் தொடர்பாளர் பிரகாஷ் ஜவடேகர் கேள்வியெழுப்பியுள்ளார். 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு சரியாக நடைபெற்றதாகக் கருதியிருந்தால் பிறகு 3-ஜி ஒதுக்கீடு மட்டும் ஏலம் விட்டது ஏன்? ஒதுக்கீடு விஷயத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு கட்ட நடவடிக்கையும் பிரதமருக்கு தெரியும் என்று அமைச்சர் ராசா கூறுவதால், இந்த விஷயத்தில் விளக்கமளிக்க வேண்டிய முழு பொறுப்பு பிரதமருக்கு உள்ளது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

சிஏஜி குற்றச்சாட்டு: 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு மதிப்பை தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் குறைத்து மதிப்பிட்டுவிட்டதாக சிஏஜி குற்றம் சாட்டியிருந்தது. புதிய நிறுவனங்களுக்கு குறைந்த தொகையில் ஒதுக்கீடு செய்ததால் அரசுக்கு 1.76 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. லைசென்ஸ் வழங்குவதில் நிதி அமைச்சகம், சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகளை அமைச்சர் ஆ. ராசா பொருட்படுத்தவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் 1999-ம் ஆண்டு வகுக்கப்பட்ட கொள்கையின்படிதான் லைசென்ஸ் ஒதுக்கப்பட்டதாக அமைச்சர் ஆ. ராசா தொடர்ந்து கூறிவருகிறார்.

இந்நிலையில் சியோலில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு தில்லி திரும்பிய பிரதமர் மன்மோகன் சிங், இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறுவதாலும், இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதாலும் இது குறித்து கருத்து தெரிவிக்க இயலாது என்று பிரதமர் கூறி வருகிறார்.

திமுக தலைமை அமைச்சர் ராசாவுக்கு ஆதரவாக உள்ளது. இதனால் நடவடிக்கை எடுப்பதில் தர்மசங்கடமான சூழல் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த ஆண்டு தமிழக சட்டப் பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ளதால், ராசா மீது நடவடிக்கை எடுப்பதை திமுக தலைமை விரும்பவில்லை.

இருப்பினும் அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதா, காங்கிரஸுக்கு ஆதரவு தரத் தயார் என்று வெளிப்படையாக அறிவித்துள்ளது காங்கிரஸுக்கு மேலும் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே 2-ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தால் அரசுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று மூத்த அமைச்சர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் ராசாவுக்கு ஆதரவாக மத்திய சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லியும் கருத்து தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அசோக் சவாண், சுரேஷ் கல்மாதி ஆகியோர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிந்த காங்கிரஸ் கட்சியால், கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சி அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மாத்தூரும் கையெழுத்திட்டுள்ளார்


ஆலந்தூர், நவ. 13: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான ஒப்பந்தங்களில் மத்திய தொலைத்தொடர்பு துறையின் செயலராக இருந்த மாத்தூரும் கையெழுத்திட்டுள்ளார் என மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ. ராசா தெரிவித்தார்.

இது தொடர்பாக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை அவர் கூறியது:

2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பாக நடைபெற்ற ஒவ்வொரு கூட்டத்திலும் தொலைத் தொடர்பு துறையின் செயலராக இருந்த மாத்தூர் பங்கேற்றுள்ளார். இது தொடர்பாக 7-11-2007-ல் போடப்பட்ட ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

ஆனால், இப்போது நான் தன்னிச்சையாக செயல்பட்டதாக கூறுவது உண்மைக்கு மாறானது. திடீரென அவர் இவ்வாறு கூறுவது ஏன் என்று தெரியவில்லை.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் நான் எந்தத் தவறும் செய்யவில்லை. சட்டப் பூர்வமாக அதனை நிரூபிக்க தயாராக இருக்கிறேன்.

ஊடகங்கள்தான் இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தி வருகின்றன. சி.பி.ஐ. வழக்கு தொடர்ந்தால் உடனே ராஜிநாமா செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை. என்னை பதவி நீக்கம் செய்யக்கோரி அதிமுகவினர் குடியரசுத் தலைவருக்கு தந்தி அனுப்பியதால் தபால் துறையின் வருமானம் அதிகரித்துள்ளது என்றார் ஆ. ராசா.

Courtesy: www.dinamani.com

No comments:

Post a Comment