Monday, January 17, 2011

முதல்வருக்கு மீண்டும் எப்போது பாராட்டு விழா?

ரஜினி, அஜீத் ஆவேசப்பட்டது ஏன்?

திட்டமிட்டது ஒன்றாகவும் நடந்தது ஒன்றாகவுமாக மாறியிருக்கிறது முதல்வருக்கு திரையுலகினர் நடத்திய பாராட்டு விழா நிகழ்ச்சி.

முதல்வரை ஒரு அரசராக அமர வைத்து, அவரது தர்பாரில் துதி பாடிகளாக நடிகர் – நடிகைகள் நின்று, நடித்து, நடனமாடி, பாட்டுப்பாடி மகிழ்வித்து புதிய கோரிக்கைகளையும் சலுகைகளையும் முன்வைத்து கேட்டுப் பெறலாம் என்ற ஆசையோடு இருந்தவர்களுக்கு நேற்றைய நிகழ்வுகள் பெரும் எரிச்சலாக மாறியுள்ளன.

இந்த நிலைக்கு பிள்ளையார் சுழி போட்டது நடிகர் அஜீத்தாக இருந்தாலும், அதனைத் தூண்டும் விதத்தில் செயல்பட்டவர்கள் விழாக் குழுவினரும் இன்றைய ஆட்சியாளர்களும்தான் என்கிறார்கள் திரையுலகினர்.

பொதுவாக தனிப்பட்ட விழாக்களாக இருந்தால் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நடிகர் நடிகைகளுக்கு பணம் தரப்படுவதுண்டு. ஆனால் முக்கிய விருந்தினர்களாக வரும் ரஜினி, அஜீத், விஜய் போன்றவர்கள் இதில் விதிவிலக்கு. இவர்கள் மரியாதை நிமித்தமாக வந்து போவதோடு சரி. அதனால் தங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சியா, நல்ல நோக்கத்துக்காக நடத்தப்படுகிறதா என்று பார்ப்பதோடு சரி.

நடிகைகள் அனைவருக்குமே கணிசமாக பணம் தந்தாக வேண்டும். முன்னணி கவர்ச்சி நடிகைக்கு ரூ 7 லட்சம் வரை தரவேண்டும், ஒரு நிகழ்ச்சிக்கு வர. சும்மா தலைகாட்டிவிட்டுப் போக வேண்டும் என்றால்கூட லட்சத்தில்தான் சம்பளம் (சில நடிகைகளின் சம்பள விவரம் தெரியும் என்றாலும், அவற்றை வெளியிடுவது நேர்மையல்ல. காரணம் என்னை நம்பி அந்த விவரங்களைச் சொல்கிறார்கள்…)

ஆனால் முதல்வரைப் பாராட்டுகிற விழாவாக இருந்தால் அதில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகள் செய்யும் கலைஞர்களுக்கு நயா பைசா கிடையாது. நல்ல விருந்தோம்பல் கூட இல்லையாம். இந்த மாதிரி நிகழ்வுகளுக்கு கட்டாயம் அனைத்துக் கலைஞர்கள் வந்தாக வேண்டும் என்று கூறுவதோடு நில்லாமல், மேலிடத்தில் இருப்பவர்களை வைத்து பிரஷர் கொடுப்பதும் நடக்கிறது. முதல்வர் அலுவலக அதிகாரிகளையும் கூட இதில் பயன்படுத்துகிறார்கள் (இது முதல்வருக்கு தெரிந்தே நடக்கிறதா என்று நமக்குத் தெரியாது!).

‘முதல்வரின் செயலாளர்கிட்டேயிருந்து பெரிய பிரஷர்ப்பா… நீ மட்டும் வரலேன்னா அப்புறம் விளைவுகளுக்கு நாங்க பொறுப்பேத்துக்க முடியாது’ என தயாரிப்பாளர்கள் சங்க, நடிகர்கள் சங்க, பிலிம்சேம்பர் நிர்வாகிகள் தரப்பிலிருந்து ஒவ்வொரு நிகழ்வுக்குமே சொல்லப்படுவதை நாம் பார்த்திருக்கிறோம்.

நிகழ்ச்சி நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பே பிரஸ் மீட் வைப்பது, தங்களுக்கு வேண்டப்பட்ட நிருபரை விட்டு ரஜினி, கமலெல்லாம் இந்த நிகழ்ச்சிக்கு வருவாங்களா என்று கேட்க வைப்பது. உடனே சில சொத்தை ஆசாமிகள், ‘அவர்கள் வரலேன்னா அவ்வளவுதான்’ என்று வாய்சவடால் அடிப்பது… அந்த பப்ளிசிட்டியில் குளிர்காய்ந்து நினைப்பதைச் சாதிப்பது என்ற மலிவான டெக்னிக்கைத்தான் இன்றுவரை பயன்படுத்தி வருகிறார்கள், இந்த பஞ்சாயத்துப் பார்ட்டிகள்.

இதிலெல்லாம் முதல்வருக்கு சம்பந்தமே இல்லையா என்ற கேள்வி எழலாம். உண்மையில், நிகழ்ச்சி நிரல் தயாராவதே அவர் முன்னிலையில்தான என்கிறார்கள் முதல்வரின் ‘உள்வட்டத்தில்’ இருப்போர். இன்னார் இங்கே அமரவேண்டும், இந்த வரிசைப்படி பேச வேண்டும் என்ற ‘புரோட்டாக்கால்’ எல்லாம் அவரது அறிவுக்கெட்டியே நடக்கிறது.

குறிப்பாக நடிகைகள் விஷயத்தில் விழாக் குழுவினர் செய்யும் கெடுபிடிகள் கொஞ்சமல்ல. ஆடுவதே ஓசி டான்ஸ். இதில் இப்படி வறுத்தெடுத்தால் எப்படி என்ற சலிப்பு இல்லாமல் முதல்வருக்கு நடக்கும் விழாக்களுக்கு வரும் நடிகைகள் அநேகமாக யாரும் இல்லை என்பதே உண்மை.

இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஸ்பான்ஸர்கள் லட்சங்களில் கொட்டித் தருகிறார்கள். டிவியில் ஒளிபரப்ப கணிசமாக பணம் தருகிறார்கள். ஆனால் அப்படி திரட்டப்பட்டும் பெரும் பணம் என்ன ஆகிறது என்ற குமுறல் அனைவர் மனதிலுமே உள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், திரையுலக அமைப்பினர் இதற்கான விளக்கத்தையோ, வரவு செலவு கணக்கையோ ஒரு போதும் காட்டுவதில்லை.

‘நம்ம வேலை நடிப்பது. நாம செய்யறதும் ஒரு வேலைதான். விருப்பம், நேரம் இருந்தா வர்றேன். இல்லன்னா வற்புறுத்தாதீங்க’ என்பதுதான் அஜீத் வழக்கமாக சொல்லும் பதில்.

ஆனால் முதல்வருக்காக நடக்கும் விழாக்களில் அந்த வார்த்தைகளை அமுக்கிவிடுகின்றன, விழாக் குழுவினரின் பயமுறுத்தல்கள். அதன் விளைவுதான் நேற்றைய விழாவில் அஜீத் குமுறியது.

கிட்டத்தட்ட இதே மனநிலையில் இருப்பவர்தான் ரஜினி. அவரை வற்புறுத்திக் கூப்பிட்டால் வர விருப்பப்பட மாட்டார். அவருக்கே வரத் தோன்றினால் வந்து எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் இருந்து உடனிருப்பவர்களையெல்லாம் சந்தோஷத்தில் ஆழ்த்துவார்.

காரணம் யாரிடமிருந்தும் அவர் எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை… தனக்கு தோன்றும் நேரத்தில் விருப்பப்பட்ட விதத்தில் மக்களுக்கு நன்மைகளைச் செய்வது அவர் பாணி. முன்பே சொன்னது போல ஒரு நிகழ்ச்சியின் நோக்கம், அதை நடத்துபவர்களின் நேர்மை இரண்டையும்தான் அவர் முக்கியமாகப் பார்ப்பார். எனவே அஜீத் தன் மனதில் பட்டதை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்கு எழுந்து நின்று கைதட்டி அவர் பாராட்டியதில் ஆச்சர்யமில்லை!

எவனுக்கும் பயப்பட மாட்டேன்… ஏன்?

முன்பு நடிகர் சங்கத்தின் நாடக விழாவில் ரஜினி நாடகத்தில் நடிக்க வேண்டும் என்றார்கள். அவர் பார்க்கலாம் என்றார். ஆனால் நடிக்கவில்லை. ஆனால் இறுதி நாள் நிகழ்ச்சிக்கு வந்து முழுக்க முழுக்க சக நடிகர்களோடு இருந்து சிறப்பித்துக் கொடுத்தார்.

அங்கும் அவர் ஒரு விஷயம் சொன்னார்: ‘ஸீ.. நிகழ்ச்சி நடத்தி வருமானம் பார்க்கறது உங்க விருப்பம். அதில் கலந்துகிட்டுத்தான் ஆகணும்னு யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது. தானா விருப்பப்பட்டு செய்யறது அது!’ என்றார். ரஜினியின் அந்த மனநிலையையே இந்த மேடையில் பிரதிபலித்திருக்கிறார் அஜீத்.

ரஜினி இந்த நிகழ்ச்சியில் கொதித்ததற்கு முக்கிய காரணம், அரசு ஒதுக்கிய நிலத்தை பங்குபோடுவதில், ஒதுக்குவதில் திரையுலக அமைப்புகளின் நிர்வாகிகள் காட்டிவரும் சுய நலம் மற்றும் இப்போதே அதற்கு சிபாரிசு பிடிப்பதில் மும்முரம் காட்டும் சில பெரிய நடிகர்கள்தான்.

இந்த நிலம் ஒதுக்குவது குடும்பத்துக்கு ஒன்று என்ற அளவில் இல்லாமல், ஃபெப்ஸி மற்றும் திரையுலக சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ள அனைவருக்குமே என்ற நிலை உள்ளது.

இன்றைக்கு பெரும்பாலான திரைக் கலைஞர்களின் குடும்பங்கள் முழுக்க முழுக்க திரைத் தொழிலில்தான் ஈடுபட்டுள்ளன. வாரிசுகள் அனைவருமே அதே துறையில்தான் உள்ளனர். குடும்பத்தின் தலைவன் நடிகர், அவரது வாரிசுகள் அனைவரும் நடிகர் அல்லது தொழில் நுட்பக் கலைஞர்கள் என்ற நிலைதான் உள்ளது. இவர்கள் அனைவருமே இப்போது வீடு பெறுவதில் மும்முரம் காட்டுகிறார்கள். ஒரு குடும்பத்துக்கு குறைந்தது நான்கைந்து வீடுகள் என்ற நிலை.

உதாரணத்துக்கு விஜயகுமார் குடும்பத்தை எடுத்துக் கொள்ளுங்கள்… அவர்கள் வீட்டுக்கே 10 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் ஏழைகள் அல்ல.. ஒரு நாளைக்கு 300 ரூபாய் பெறும் துணை நடிகர்களும் அல்ல.

சிவகுமார் வீட்டுக்கு 4 வீடுகள் தரவேண்டி வரும். இவர்கள் யாரும் அடிமட்டக் கலைஞர்கள் அல்ல. நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், நடிகர் விஜய் என இந்தப்பட்டியல் பெரியது. இவர்கள் அனைவருமே நன்கு வசதி படைத்தவர்கள்தான். இவர்களுக்கு எதற்கு பையனூரில் வீடு? அப்படியே வேண்டுமென்றாலும் காசு கொடுத்து வாங்கிக் கொள்ளலாமே… இவர்களைப் போன்ற வசதிபடைத்த நடிகர்கள், தயாரிப்பாளர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், ஓசியில் கிடைக்கிறதே என்பதற்காக இந்த வீடுகளுக்காக கை நீட்டிவிடக் கூடாது என்பதே ரஜினியின் அந்த ஆவேசப் பேச்சுக்குக் காரணம். தனக்கு வேண்டப்பட்ட சக கலைஞர்களே கூட இந்த வேலையில் இறங்கியிருக்கிறார்கள் என்பதை உணர்ந்துதான் ரஜினி, ‘யார் மனதையும் புண்படுத்த இப்படிச் சொல்லவில்லை’ என்று முன்கூட்டியே சொல்லிவிட்டார்.

இந்த வீடுகள் மற்றும் வசதிகள், திரையுலகில் பல ஆண்டுகளாகக் கஷ்ட ஜீவனத்தில் தவிக்கும் துணை நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்கள், லைட் மேன்கள் போன்ற அடித்தட்டு வர்க்கத்தினருக்கு முழுமையாகப் போய்ச் சேரவேண்டும் என்பதே ரஜினியின் இந்தப் பேச்சின் அடிநாதம். இதற்காக இந்தக் கலைஞர்கள் நன்றி சொல்ல வேண்டும்.

ஏன் இந்த நிலை வருகிறது… திரும்ப திரும்ப திரைக் கலைஞர்கள் முதல்வரிடம் கோரிக்கை வைப்பது, அதற்கு அவர் முன்னுரிமை கொடுத்து நிறைவேற்றி வைப்பதால்தானே… இது மக்களுக்கும் கடும் எரிச்சலை மூட்டுகிறது. இது புரிந்ததால்தான், ‘எதுக்கெடுத்தாலும் முதல்வரைப் போய் தொந்தரவு செய்யாமல், முடிந்தவரை நமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ளலாம்’ என்றார் ரஜினி நாசூக்காய்.

ஆனால் அப்படியெல்லாம் ஒரேயடியாகத் திருந்திவிடும் திரையுலகம் என்றும் சொல்வதற்கில்லை!

-வினோ

என்வழி

http://www.envazhi.com/?p=15955

No comments:

Post a Comment