Tuesday, January 18, 2011

சோனியா அக்காவின் கலக்கம்


வருண் வருகையும் சோனியா கலக்கமும்

பிலிபிட் - உத்தரப் பிரதேச மாநிலத்தின் இந்திய-நேபாள எல்லையில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. இங்கே இந்திரா காந்தியின் மருமகளும், சஞ்சய் காந்தியின் மனைவியுமான மேனகா காந்தி 1996-ஆம் வருடத்திலிருந்து தொடர்ந்து வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார். ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக இருந்து பின்னர் பாரதீய ஜனதா கட்சியில் சேர்ந்து மத்திய அமைச்சராகவும் இருந்தவர். வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் தன் மகனான வருண் காந்தியை, தான் இத்தனை வருடங்களாகக் கட்டிக் காத்து வந்த பிலிபிட் தொகுதியில் தன் கட்சியின் அனுமதியுடன் வேட்பாளராக நியமித்துள்ளார்.

வருண் காந்தி, பட்டம் படித்தவர், மேற்படிப்புக்குச் சென்றவர்; நன்றாகக் கவிதையும், உரைநடையும் எழுத வல்லவர்; ஓரளவு திறமையான பேச்சாளரும் கூட. இருபத்து ஒன்பது வயதேயான இளைஞர். குழந்தைப் பருவத்திலேயே தந்தையான சஞ்சய் காந்தியைப் பறிகொடுத்தவர் ஆதலால், இவர் வளரும்போது, நேரு குடும்பத்திற்கே உரியதான, போலி மதச்சார்பின்மையும், ஹிந்து வெறுப்பும், வெளிநாட்டு மோகமும், இவரிடம் ஒட்டவில்லை. இவரது தாயார் மேனகா காந்தி சீக்கிய வம்சாவளியில் வந்த காரணத்தால் இவரை வீரம் உள்ளவராகவும், தைரியம் மிக்கவராகவும் வளர்த்தார் என்றே சொல்ல வேண்டும்.

வருண் காந்தி, தான் பிலிபிட் தொகுதி வேட்பாளர் என்பது உறுதியானவுடன், தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தத் தொகுதி ஹிந்துக்களும், முஸ்லீம்களும் பெரும்பான்மையாகக் கொண்ட தொகுதி. நேபாள எல்லையில் இருப்பதால் இஸ்லாமியத் தீவிரவாதிகள் எல்லை தாண்டி வந்து நம் நாட்டிற்குள் புக வசதியாக இருக்கின்ற ஒரு தொகுதி. அவ்வாறு நம் எல்லைக்குள் வருகின்ற தீவிரவாதிகளுக்கு சில உள்ளூர் மதவாதிகள் இடமும் கொடுத்து உதவியும் செய்து வருகின்றனர். இதனால் அடிக்கடி இத்தொகுதியில் பசு வதை, ஹிந்துப் பெண்கள் கடத்தல் மற்றும் கற்பழிப்பு, ஹிந்துக்கள் வீட்டில் கொள்ளை போன்ற பயங்கர சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாகிவிட்டது. ஹிந்துக்கள் எப்போதும் ஒரு பயத்திலேயே உயிர் வாழவேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப் பட்டுள்ளனர். (இந்த உண்மைகளை எழுத்தாளரும், பத்திரிகையாளருமான திரு தருண் விஜய் சமீபத்தில் எழுதிய ஒரு கட்டுரையில் தெளிவு படுத்தியுள்ளார்). உத்திரப் பிரதேசத்தை ஆண்டுவரும் முலாயம் (5 ஆண்டுகள்) மற்றும் மாயாவதி (2 ஆண்டுகள்) ஆகியோரின் போலி-மதச்சார்பின்மை அரசுகள் இப்பிரச்சனையைக் கண்டு கொள்ளவே இல்லை.

தொகுதியில் ஹிந்துக்களின் நிலையைக் கண்டு கொதித்துப்போன வருண் காந்தி, தன் கட்சித் தொண்டர்களின் கூட்டத்தில், “ஹிந்துக்களுக்குத் துரோகம் இழைப்பவர் எவராயிருந்தாலும் அவர்களை அழிப்பேன். எவரேனும் ஹிந்துக்கள் மீது கை வைத்தால் அவர் கையை வெட்டுவேன். பாகிஸ்தான் தீவிரவாதிகளையும், அவர்களுக்கு உதவும் நபர்களையும், அவர்கள் ஹிந்துக்களாக இருந்தால் கூட, பகவத் கீதையில் சொன்னபடி அவர்களை அழிக்கத் தயங்க மாட்டேன்” என்று உணர்ச்சி மேலிட்டு முழங்கியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியது.

அந்த வீடியோவில் இருப்பது தன் குரலல்ல என்று வருண் கூறியுள்ளார்.

தன் பேச்சில் அவர் முஸ்லீம்கள் என்று ஒரு சமுதாயத்தைக் குறிப்பிட்டுச் சொன்னதாகவோ அல்லது அவர்களைத் தரக்குறைவாகப் பேசியதாகவோ தெரியவில்லை. ஆனால் அப்படிப் பேசியதாக நாடெங்கும் உள்ள பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகள் செய்திகள் பரப்பின. மத நல்லிணக்கத்திற்கு எதிராக, இரு மதத்தினரிடையே பகைமையை வளர்க்க, நாட்டின் அமைதியைக் கெடுக்கவேண்டி அவர் வேண்டுமென்றே பேசியதாக இவை விடாமல் கூறி வருகின்றன. போலி மதச்சார்பின்மை பேசி, எப்பொழுதும் ஹிந்துக்களுக்கு எதிராகவே கருத்துக்களைக் கூறிவரும் ஊடகங்களின் விஷமப் பிரச்சாரத்துக்கு மதிப்பளித்து, தேர்தல் ஆணையம், ‘இந்திய தண்டனைச் சட்டம்’ (IPC) 153A பிரிவின் கீழும். ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்’ (Representation of People Act) 125 பிரிவின் கீழும் வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்குமாறு உத்திரப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு உத்தரவு அளித்தது. அதன்படி அவர் காவல்துறைக்குப் புகார் அளிக்க, உத்திரப் பிரதேசக் காவல் துறையும் முதல் தகவல் அறிக்கை தயார் செய்தது.

இங்கே நாம் இரண்டு முக்கியமான விஷயங்களைக் கவனிக்க வேண்டும். ஒன்று, ஊடகங்களின் விஷ(ம)ப் பிரச்சாரம். இரண்டாவது, தேர்தல் ஆணையத்தின் அத்துமீறல்.

முதலாவதாக, பல ஊடகங்கள் நேரு குடும்பத்தின் அடிவருடிகளாக இயங்குவது நமக்குப் புதிதல்ல. இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை நேரு குடும்பத்தில் வாழ்க்கைப்பட்ட ஒரே காரணத்துக்காக பாரதப் பிரதமராக்க வேண்டிப் படாத பாடுபட்ட ஊடகங்கள், இந்திய சட்டப்படி அது இயலாது என்று தெரிந்தவுடன், இந்திய மற்றும் இத்தாலி ஆகிய இரண்டு தேசத்துக் குடியுரிமையும் கொண்டுள்ள பிரியங்கா மற்றும் ராகுல் ஆகியோரைப் பிரதமராக்கத் துடித்தன. பிரியங்காவும் தனக்கு ஆர்வமில்லை என்று சொல்லி விட்டதால், கடந்த ஐந்து ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் ராகுல் காந்தியை மக்கள் முன்னால் நிறுத்த அனைத்து முயற்சியும் எடுத்து வருகின்றன. உருப்படியான கல்வி அறிவு, நாட்டு நடப்புகளை கவனித்து அவற்றை ஆராய்ந்து பார்க்கும் திறன், பேச்சுத் திறன், எனப் பல தேவையான தகுதிகள் இல்லாததால் ராகுல் காந்தியால் மக்கள் மனதில் இடம் பிடிக்க இயலவில்லை.

அவரை முன்நிறுத்திப் பிரச்சாரம் செய்த எந்த மாநிலத் தேர்தலிலும் காங்கரஸ் கட்சியினால் வெற்றி பெற முடியவில்லை. இருந்தாலும், “இந்தியாவைக் கண்டுபிடித்தல்” (Discovering India) என்று அவர் நாடகத் தன்மையுடன் கூடிய ஒரு பிரயாணம் மேற்கொண்ட போது, அதன் மூலம் மக்கள் மனதில் அவர் இடம் பிடிக்க ஏதுவாக, அவர் தலித் மக்களுடன் ஒரு நாள் இரவு குடிசையில் தங்கியதையும், ஒரு நாள் மதிய உணவு அருந்தியதையும், தலித் குழந்தைகளுடன் ஒரே ஒரு நாள் விளையாடியதையும், பெரிதுபடுத்திக் காண்பித்து, அவற்றைப் பற்றிக் கட்டுரைகள் எழுதி மக்களிடையே ராகுல் காந்தியை “இந்தியாவின் இளவரசன்” என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த முயன்றன ஊடகங்கள். இந்த முயற்சியிலும் தோற்றுப்போயின.

பின்னர் அவர் தன்னுடைய செயலர்கள் எழுதிக் கொடுத்த பேச்சைப் பாராளுமன்றத்தில் தட்டுத் தடவிப் படித்ததை ஒரு மாபெரும் சொற்பொழிவாகக் காட்ட முயற்சித்தன. அதிலும் அவை வெற்றி பெற முடியவில்லை. இந்த ஊடகங்கள் எந்த அளவுக்குத் தரம் தாழ்ந்து போயிருக்கின்றன என்றால், ராகுல் காந்தி காலையில் கண் விழிப்பதையும், பல் தேய்ப்பதையும், குளியலறை போவதையும் தான் முக்கியச் செய்தியாக (breaking news) போடுவதில்லை. மற்றபடி அவர் எது செய்தாலும் அது முக்கியச் செய்திதான்!

இவ்வாறு ராகுல் காந்தியை இந்திய மக்களின் மீது பிரதமராகத் திணிக்க ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும் முயற்சி செய்யும் வேளையில், மேனகா காந்தியின் மைந்தர் வருண் காந்தி ஹிந்துக்களின் பிரதிநிதியாகவும், பாரதீய ஜனதா கட்சியின் முக்கிய வேட்பாளராகவும், தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்குவதை அவர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சொல்லப் போனால் நேரு குடும்பத்திலிருந்து ஓர் இளைஞர் இந்த தேசத்தின் உண்மையான பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும், மத உணர்வுகளையும் புரிந்து கொண்டு அவற்றைக் காக்கும் பொருட்டு அரசியலில் இறங்குவதை அவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. வருண் காந்தி ராகுல் காந்தியை அரசியல் களத்தில் எளிதில் தோற்கடித்து விடுவாரோ என்கிற அச்சம் வெளிப்படையாகவே தெரிகிறது. கடந்த இரண்டு வாரங்களாக ஊடகங்கள் வருண் காந்தி மீது சேற்றை வாரி இறைக்க முயற்சி செய்து வருவதன் காரணம் இதுதான்.

பிலிபிட் தொகுதியின் அதிகாரபூர்வ வேட்பாளராக வருண் காந்தி தேர்தல் ஆணையத்தினால் அங்கீகாரம் செய்யப்படாத நிலையில், மேலும் தன்னுடைய வேட்பு மனுவை அவர் இன்னும் தாக்கல் செய்யாத நிலையில், தேர்தல் ஆணையம் அவர்மீது நடவடிக்கை எடுத்திருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் அது தன் எல்லையை மீறி நடந்துகொண்டுள்ளதாகவும் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களே தெளிவு படுத்தியுள்ளார்கள். காவல்துறைக்கு மட்டுமே வருண் காந்தி மீது நடவடிக்கை எடுக்க தற்போது அதிகாரம் இருக்கின்ற நிலையில், வருண் காந்தி வேட்பு மனு தாக்கல் செய்யும் போது, காவல்துறையின் அறிக்கையின் படி தேர்தல் ஆணையம் வேட்புமனுவை நிராகரித்திருக்கலாம். அல்லது தேவையான நடவடிக்கைகளை அப்போது எடுத்திருக்கலாம்.

மேலும், வருண் காந்தி, தான் அவ்வாறு மத வெறியுடனோ, இரு மதத்தாரிடையே பகைமை ஏற்படுத்திக் கலவரம் ஏற்படும் விதமாகவோ பேசவில்லை என்றும், அந்த ஒலி/ஒளி மின்வட்டுக்கள் திருத்தம் செய்யப்பட்டவை என்றும், தனக்கு எதிராக நடந்த அரசியல் சதி என்றும் கூறியுள்ளதை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்யவில்லை. அவர் தன் பக்கத்து நியாயங்களை எடுத்துச் சொல்ல அவருக்கு வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அதோடு நில்லாமல் அவருக்கு எதிராக வழக்கு பதிவு செய்துவிட்டு, பா.ஜ.க.வுக்கு வருணை வேட்பாளராக நியமிக்க வேண்டாம் என்று அறிவுரை வழங்கியிருப்பதும் ஒரு அதீதமான செயல்பாடு என்று கருத இடமிருக்கிறது. இதுவரை இந்தியாவில் நடந்திராத விதமாகத் தேர்தல் ஆணையம் இவ்வாறு நடந்து கொண்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், ஏப்ரல் 20-ம் தேதி முதல் தலைமைத் தேர்தல் ஆணையராக பதவி ஏற்கப் போகும் திரு நவீன் சாவ்லா அவர்களும், மற்றொரு ஆணையர் திரு கொரேசி அவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு வேண்டப்பட்டவர்கள் என்பதே. தற்போது உள்ள தலைமைத் தேர்தல் ஆணையர் திரு கோபாலஸ்வாமி அவர்கள் திரு நவீன் சாவ்லா காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் பலமுறை நடந்து கொண்டதாகவும் அவரைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதியிடம் அரசியல் சாசனத்தின்படி பரிந்துரை அளித்ததை நாம் அறிவோம். மேலும், வருண் விஷயத்தில் தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, நமக்குச் சந்தேகம் உறுதியாகிறது. அதாவது ராகுல் காந்திக்குப் போட்டியாக வருண் வந்துவிட்டால், ராகுலின் அரசியல் வாழ்வு அதோகதியாகிவிடும் என்கிற பயம் காரணமாக காங்கிரஸ் கட்சியும், அதன் தலைவியும், நவீன் சாவ்லா மூலமாக வருணின் அரசியல் வாழ்க்கை தொடங்கு முன்னரே முடமாக்கிவிட முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்பது தெளிவாகிறது. இதற்கு ஊடகங்களும் ஒத்து ஊதுகின்றன என்பதும் விளங்குகிறது.

இதனிடையே வழக்குகள் போடப்பட்டதால், தன்னுடைய முன்ஜாமீன் காலாவதியாகிவிட்ட நிலையில், நம் நாட்டு சட்டத்திற்கு மதிப்பளித்து, வருண் காந்தி நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அப்போது அவருடன் வந்த அவரின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் மீது காவல் துறை தடியடி, மற்றும் ரப்பர் குண்டுகள் அடங்கிய துப்பாக்கிப் பிரயோகம் ஆகிய நடவடிக்கை எடுத்து ஒரு கலவரம் ஏற்பட வழிவகை செய்துள்ளது. மேலும் சம்பந்தமே இல்லாமல் வருண் மீது கொலை முயற்சி, கலவரம் ஏற்படுத்தியது, போன்ற பல பொய் வழக்குகள் போட்டுள்ளது மாயாவதி அரசு. அதோடு நிறுத்தாமல் தேசியப் பாதுகாப்புச் சட்டத்தையும் அவர்மீது ஏவி விட்டிருக்கிறது. நம் நாட்டுச் சட்டப்படி சரண் அடைய நீதி மன்றத்திற்குச் சென்ற ஒருவரின் மீது, அபாண்டமான குற்றச்சாட்டுகள் சொல்லிப் பொய் வழக்குகள் போடுவதன் மூலம் மாயாவதியும் பா.ஜ.க.வின் வெற்றி வாய்ப்புகளைக் கண்டு பயப்படுகின்றார் என்பது தெரிகிறது. இவருக்கும் சோனியாவுக்கும் ஒரு ரகசிய உடன்படிக்கை உள்ளதோ என்றும் சந்தேகம் எழுகிறது.

எப்பொழுதுமே இந்தியாவிற்கு எதிராக நடந்து கொள்ளும் கம்யூனிஸ்டுகளும், மற்ற போலி மதச்சார்பின்மை பேசும் கட்சிகளும் வருண் காந்தியின் அரசியல் பிரவேசத்தைக் கண்டு அச்சம் கொண்டு அவர் மீது சேற்றை வாரியிரைப்பதைப் பார்க்கும் போது, இந்த நாட்டில் பெரும்பான்மை சமுதாயமாக இருக்கும் ஹிந்துக்களின் சார்பாக யார் முன் வந்தாலும் அவர்களை மத வெறியர்களாகச் சித்தரித்து அவர்களின் அரசியல் வாழ்க்கைக்குத் தடங்கல்கள் ஏற்படுத்தும் போக்கு நன்றாகவே தெரிகிறது. அதாவது, இந்த நாட்டில் ஹிந்துக்கள் இரண்டாம் தரக் குடிமக்களாகவே இருக்க வேண்டும்; சிறுபான்மை இன மக்களுக்கு மட்டுமே சலுகைகள் வழங்கப்பட வேண்டும்; அவர்களை ஓட்டு வங்கிகளாக வைத்துக் கொண்டு, ஹிந்துக்களை ஜாதி வாரியாகப் பிரித்து, தமது சுயநல அரசியல் நாடகங்களை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்பதே இவர்களது தாரக மந்திரமாக இருக்கிறது. தங்கள் சுயலாபத்துக்காக, இந்த நாட்டின் இறையாண்மையைப் பற்றியும், பாதுகாப்பைப் பற்றியும், கலாசார சீரழிவைப் பற்றியும், பொருளாதார சீர்கேட்டைப் பற்றியும், துளியும் கவலைப் படாமல் நாட்டைக் குட்டிச் சுவராக்கும் இந்த அரசியல் வியாதிகள் இருப்பது நமக்குப் பெரும் அவமானமும் அபாயமும் ஆகும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். தன்னுடைய இருபத்தி ஒன்பதாவது வயதில், அரசியல் பிரவேசத்தைத் தொடங்கும் ஒரு இளைஞர், ஹிந்துக்களுக்கு ஆதரவாக களம் இறங்குவதாலும், நேரு குடும்பத்திலிருந்தே வந்து ராகுல் காந்திக்கு எதிராகக் களம் இறங்குவதாலும், ஆகிய இரண்டு காரணங்களுக்காக மட்டுமே வருண் மீது சேற்றை வாரி இறைக்கின்றன ஊடகங்களும், போலி மதச்சார்பின்மை வாதிகளும். பல அரசியல்வாதிகள் இதற்கு முன்னால் இந்துக்களுக்கு எதிராகப் பேசியபோதும், செயல்பட்ட போதும் ஏன் இவர்கள் மௌனமாக இருந்தார்கள்? தேர்தல் ஆணையம் அப்போது ஏன் வாய் மூடி இருந்தது?

உதாரணத்திற்கு, தமிழக முதல் அமைச்சரான கருணாநிதி, தன்னுடைய ஐம்பது ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில், சட்டசபையில் பொன்விழா கண்டதாகச் சொல்லிக்கொள்ளும் அரசியல் வாழ்க்கையில், 365 நாளும் ஹிந்துக்கள் மீதும், ஹிந்து கலாசாரம், ஹிந்து ஆன்மீகம், ஹிந்துக் கோவில்கள், ஹிந்து மதம், ஹிந்து பழக்க வழக்கங்கள், ஹிந்து மத நூல்கள் என்று எல்லாவற்றின் மீதும் வசை பாடியே வாழ்ந்துள்ளார்! எந்த ஊடகமாவது அவரை விமரிசித்தது உண்டா? தேர்தல் ஆணையம் அவர் மேல் நடவடிக்கை எடுத்ததுண்டா? சமீபத்தில் கூட, ராமாயணத்தையும், ராமர் பாலத்தையும், ராமரையும், அசிங்கமாகப் பேசிப் பல கோடி ஹிந்துக்கள் மனத்தைப் புண்படுத்தும் விதமாகப் பேசினாரே! தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? இதுவரை, ஒரு எச்சரிக்கை அறிக்கையாவது அவருக்கு அனுப்பியதுண்டா? கருணாநிதிக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

சோனியா தான் போகின்ற இடங்களிலெல்லாம், ஒவ்வொரு முறை பேசும்போதும் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களை ஹிந்துத் தீவிரவாதிகள் என்றே சொல்லிக்கொண்டிருக்கிறார். இவை ஒரு குறிப்பிட்ட மதத்தினரைத் தாக்கும் பேச்சு இல்லையா? கடந்த குஜராத் சட்ட மன்றத் தேர்தலின் போது ஹிந்துத் தலைவர்களை பொய்யர்கள், திருடர்கள், மரணத்தின் தூதுவர்கள் என்றெல்லாம் பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன வழக்குப் போட்டது? சோனியா காந்திக்கு ஒரு சட்டம், வருண் காந்திக்கு ஒரு சட்டமா?

அதே குஜராத் தேர்தலின் போது, காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் “குஜராத்தில் உள்ள ஹிந்துக்கள் தீவிரவாதிகள்” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்தது? அவருக்கு ஒரு சட்டம், வருணுக்கு ஒரு சட்டமா?

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தேசிய மாநாடுக் கட்சியின் தலைவர் பாஃரூக் அப்துல்லா, பாராளுமன்றத் தாக்குதலில் தூக்கு தண்டனை வழங்கப்பட்ட இஸ்லாமிய பயங்கரவாதி அப்சல் குருவுக்காகப் பரிந்து பேசியபோது, “அவரைத் தூக்கிலிடுங்கள்! அதன் விளைவுகளை எதிர்கொள்ளத் தயாராக இருங்கள்! இந்த நாடு பற்றி எரியும்! ஹிந்து-முஸ்லீம் ஒற்றுமை சீரழியும்! தண்டனை அளித்த நீதிபதிகள் கொல்லப் படுவார்கள்!” என்று பேசினாரே! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது?

தற்போது கேரள மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியினர் மதானியுடன் கூடிக் குலாவுகின்றனர்! மதானிக்கு எதிரான தடயங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அங்கே எதிர்க்கட்சியாக இருக்கின்ற காங்கிரஸ் ஏன் வாயைப் பொத்திக் கொண்டு இருக்கிறது? ஹிந்துக்களுக்கு ஒரு சட்டம், முஸ்லீம்களுக்கு ஒரு சட்டமா? பா.ஜ.க.வுக்கு ஒரு சட்டம், கம்யூனிஸ்ட்களுக்கு ஒரு சட்டமா? மதானியை விடவா வருண் காந்தி மோசமாகப் போய்விட்டார்?

சமீபத்தில் சண்டிகார் நகரில் காங்கிரஸ் தலைவர் இம்ரான் கித்வாய் “நான் ஒரு முப்தியாக இருந்திருந்தால், பா.ஜ.க.வுக்கு முஸ்லீம்கள் ஓட்டுப் போடுவது காபிஃர்களுடன் (ஹிந்துக்களை தரக்குறைவாகச் சொல்லும் வார்த்தை - காபிஃர்) நட்பு வைத்துக் கொள்வதற்கு சமம், என்று ஒரு பஃட்வா கொடுத்திருப்பேன். நான் முப்தியாக இல்லையே என்று வருந்துகிறேன்” என்று பேசியுள்ளார். தேர்தல் ஆணையத்திடம் அவர்மீது பா.ஜ.க. புகார் கொடுத்துள்ளது. அவர் பேச்சு அடங்கிய ஒலி நாடாவையும் கொடுத்துள்ளது. ஆனால் இன்னும் தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏன்?

2007 ஜனவரி மாதம் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சென்னை வந்தபோது அவரை உயிருடன் திரும்ப அனுமதிக்கமாட்டோம் என்று சவால் விட்டனரே தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தினர்! அப்போது தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருந்தது? தௌஹீத் ஜமாத் தலைவர் எஸ்.எம். பாகர் சமீபத்தில் மதுரையில் ஒரு பொதுக் கூட்டத்தில் “வருண் காந்தி தமிழகம் வந்தால் உயிருடன் திரும்ப முடியாது” என்று பேசியுள்ளார். அது “வின்” தொலைக்காட்சியில் ஒளிபரப்பப் பட்டதே! என்ன செய்து கொண்டிருந்தது தேர்தல் ஆணையம்? அந்தப் பேச்சுக்கள் வன்முறையைத் தூண்டும் பேச்சுகள் இல்லையா? அவர்களுக்கு ஒரு சட்டம் வருணுக்கு ஒரு சட்டமா?

இந்த மாதிரிப் பல உதாரணங்கள் சொல்லிக் கொண்டே போகலாம். இப்போது வருண் காந்தி மேல் போடப்பட்டிருக்கும் அத்தனை வழக்குகளும் மேற்சொன்ன அத்தனைத் தலைவர்கள் மேலும் போட்டிருக்க வேண்டுமே!

இவற்றையெல்லாம் பார்க்கும் போது என்ன தெரிகிறது? ஹிந்துக்களுக்கு ஆதரவாக எந்த அரசியல் கட்சியும் செயல் படக்கூடாது; ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து விடக்கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு வேலை செய்கின்றன போலி மதச்சார்பின்மை பேசும் ஊடகங்களும், அரசியல் கட்சிகளும். இவ்வுண்மையை ஹிந்துக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்த தீய சக்திகளை இந்துக்கள் நிராகரிக்க வேண்டும். ஹிந்துக்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை உணர்ந்து செயல் படவேண்டும்.

http://thamizmani.blogspot.com/2009/04/blog-post_16.html

No comments:

Post a Comment