உலகம் ஒரு நாடகமேடை, நாம் அனைவரும் அதில் நடிகர்கள் என்று சொன்னார் ஷேக்ஸ்பியர். அது எந்தவிதத்தில் சரியோ இல்லையோ, தமிழக அரசைப் பொறுத்தவரை சரியாகவே இருக்கிறது.
திமுக ஆட்சியில் மக்கள் அடைந்த வேதனை வார்த்தைகளால் சொல்லி மாளாது. அத்தனை வேதனைகளிலும் இருந்து வெளியேற வேண்டுமே என்ற ஒரே நோக்கத்தில் மக்கள் வேறு வழியே இல்லாமல்தான் அதிமுகவுக்கு வாக்களித்தார்கள். மக்கள் அதிமுக அரசுக்கும், ஜெயலலிதாவுக்கும் வாக்களிக்கையில், மன்னார்குடி மாபியாவின் ஆதிக்கத்தையும், சசிகலா வகையறா செய்யப்போகும் அட்டூழியங்களையும் அறியாமல் வாக்களிக்கவில்லை. எப்படியாவது நமக்கு விமோசனம் வராதா என்ற ஆதங்கத்திலேயே வாக்களித்தார்கள்.
ஜெயலலிதா அரசு பொறுப்பேற்றதும் எடுக்கப் பட்ட சில நடவடிக்கைகள் தவறு செய்து விட்டோமா என்று பொதுமக்கள் வருந்தும் விதத்திலேயே அமைந்தன. சமச்சீர் கல்வி, நூலகத்தை மூடும் திட்டம், மக்கள் நலப்பணியாளர்கள் பணி நீக்கம், பால் பேருந்துக் கட்டண உயர்வு என்று பல திட்டங்கள் பொதுமக்களை வேதனையடைய வைத்தன.
ஊழல் ஆட்சிக்கு எதிராக வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த ஒரு கட்சி, முந்தைய ஆட்சியே பரவாயில்லை என்கிற அளவுக்கு ஒரு கொள்ளைக் கூட்டத்தை பக்கத்திலேயே வைத்திருந்தது. இன்று அந்த மன்னார்குடி மாபியாவை அதிமுக அரசு விரட்டி விரட்டி அடிக்கிறது. மன்னார்குடி கும்பலில் முக்கிய பொறுப்பு வகித்த ராவணன் மற்றும் திவாகரன் மீது, பல்வேறு வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன.
திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கஸ்தூரி, திவாகரன் தூண்டுதலின் பேரில் தனது வீடு இடிக்கப்பட்டதாக எழுப்பிய புகாரில், திவாகரன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப் பட்டது.
திவாகரன், ரிஷியூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ண மேனன், வீட்டை இடிக்க பயன்படுத்தப்பட்ட ஜே.சி.பி., இயந்திர உரிமையாளர் சிவசங்கரன், கணேசன், வைத்திய நாதன், தமிழ்ச்செல்வம், குணசேகரன் ஆகிய 7 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திவாகரன் மீது கலவரம் ஏற்படுத்துதல், அத்துமீறி நுழைதல், தகாத வார்த்தையில் திட்டுதல், கொலை மிரட்டல் விடுத்தல், குற்ற சதி மற்றும் பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கில் சிவசங்கரன், ஜே.சி.பி., டிரைவர் சக்தி ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அடுத்த முக்கியப் புள்ளியான ராவணன் மீது ரவிக்குமார் என்ற கான்ட்ராக்டர் கொடுத்த புகாரில், வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. பணத்துக்காக கடத்திச் செல்லுதல், அடைத்து வைத்தல், மிரட்டி பணம் பறித்தல், கிரிமினல் சதி ஆகிய புகார்களின்பேரில் அவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
கடந்த ஆண்டு மே மாத கடைசியில் ராவணனின் உதவியாளர் மோகன், ரவிக்குமாரின் வீட்டுக்கு சென்று அவரை ராவணன் சந்தித்து பேச விரும்புவதாக கூறினார். உடனே ரவிக்குமார் தனது நண்பர் பரமேஷ்குமாருடன் கோவை-திருச்சி சாலையில் உள்ள ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு மதியம் சென்றனர்.
அங்கு இருந்த ராவணன், தொடர்ந்து பஞ்சாயத்து காண்டிராக்ட் வேலை கிடைக்க வேண்டும் என்றால் தனக்கு ரூ.10 லட்சம் கொடுக்க வேண்டும் என்று கேட்டு ரவிக்குமாரை மிரட்டி உள்ளார். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, ராவணனும் அவரது ஆட்களும் அவரை மிரட்டி இருக்கிறார்கள். அந்த சம்பவத்துக்கு பின்னர் ராவணன் மற்றும் அவரது அடியாட்கள் பலமுறை ரவிக்குமாரை போனில் தொடர்பு கொண்டு தாமதம் இன்றி பணத்தை கொடுக்குமாறு மிரட்டினார்கள்.
இந்த நிலையில் 9.10.2011 அன்று காலை 10 மணி அளவில் ராவணனின் உதவியாளர் மோகன் மற்றும் சிலரும் ரவிக்குமாரின் வீட்டிற்குள் புகுந்து, ராவணனை வந்து சந்திக்குமாறு கூறி இருக்கிறார்கள். அதற்கு ரவிக்குமார் மறுப்பு தெரிவிக்கவே, அவர்கள் ரவிக்குமாரை கத்தி முனையில் மிரட்டி காரில் வலுக்கட்டாயமாக காரில் கடத்தி ராவணனுக்கு சொந்தமான ராகா ஆயில் மில் குடோனுக்கு கொண்டு சென்று அவரது முன்பு நிறுத்தி இருக்கிறார்கள்.
அங்கு ரவிக்குமார் ராவணனால் தாக்கப்பட்டு மிரட்டப்பட்டு இருக்கிறார். பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டியதோடு அந்த குடோனில் அவரை அடைத்து வைத்தனர். ரூ.10 லட்சம் தந்தால் மட்டுமே அவரை விடுவிப்பதாக மிரட்டினார்கள்.
அன்று மாலை 5 மணி அளவில் ரவிக்குமாரின் நண்பர் பரமேஷ்குமார் ரூ.10 லட்சம் கொண்டு சென்று ராவணனிடம் கொடுத்த பின்னரே ரவிக்குமார் விடுவிக்கப்பட்டார். அப்போது, நடந்த இந்த சம்பவம் பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவரை மிரட்டி உள்ளனர். இதன் அடிப்படையில் ராவணன் கைது செய்யப் பட்டுள்ளார்.
ராவணம் மீது பாய்ந்துள்ள அடுத்த வழக்கு சென்னை மாநகர காவல்துறையினரால் பதிவு செய்யப் பட்டுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி என்பவர் ராவணன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தனக்கு திருச்சியில் இருந்து கரூர் வரை உள்ள பகுதிகளில் மணல் குவாரிக்கான உரிமம் பெற்றுத்தருவதாக கூறி ராவணன், சத்யா, ராஜா ஆகியோர் ரூ.1 கோடி பெற்றுக்கொண்டனர். ஆனால் குறிப்பிட்டவாறு லைசென்ஸ் பெற்றுத் தரவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. இதுபற்றி கேட்டபோது ராவணன் கொலைமிரட்டல் விடுத்தார். எனவே இதன் மீது நடவடிக்கை எடுக்குமாறு கூறியிருந்தார். இதன்படி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி ராவணன், சத்யா, ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். 3 பேர் மீதும் மிரட்டல், ஏமாற்றுதல், மோசடி ஆகிய 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தற்போது சிறையில் உள்ள ராவணனை இந்த இரண்டாவது வழக்கிலும் கைது செய்ய, சென்னைக் காவல்துறையினர், கோவை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
திவாகரன் இன்னும் காவல்துறையினரின் பிடியில் சிக்காமல், தலைமறைவாக உள்ளார். திவாகரனைப் பிடிப்பதற்கு பதிலாக, பொக்லைன் எந்திரத்தை வாடகைக்கு விட்டவர், அதன் ஓட்டுனர் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
திவாகரனும் ராவணனும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால், நியாயமாக சட்டத்தின்பாற்பட்டு நடக்கவேண்டிய காவல்துறையினர் எப்படியெல்லாம் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்கிறார்கள் பார்த்தீர்களா ? மணல் குவாரி வேண்டும் என்று ஒரு கோடி ரூபாயை ராவணனுக்கு கொடுத்த கிருஷ்ணமூர்த்தி அரசு காண்ட்ராக்டை பிடிப்பதற்காக லஞ்சம் கொடுத்ததன் மூலம், லஞ்ச ஒழிப்புச் சட்டம் பிரிவு 12ன் கீழ் தண்டிக்கப் படக்கூடிய குற்றத்தை புரிந்துள்ளார். ஆனால், அவர் புகாரில், ராவணன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
அதிமுக ஆட்சி வந்தால் காவல்துறை அதிகாரிகளுக்குத்தான் கொண்டாட்டம் என்று சவுக்கு சொன்னது, மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப் பட்டுள்ளது.
தமிழகம் கொலைக்களமாக மாறிவிட்டதோ என்று சந்தேகிக்கும் வகையில் நாள்தோறும் தமிழகமெங்கும் கொலைகள் அரங்கேறி வருகின்றன. பொம்மைத் துப்பாக்கியை வைத்து, வங்கியை கொள்ளையடிக்கிறார்கள். தமிழகமெங்கும் குற்றச் செயல்கள் பெருகி வருகின்றன. ஆனால் அதைத் தடுக்க வேண்டிய காவல்துறையினர், சட்ட விரோதமாக, ராவணனும், திவாகரனும், வசூல் செய்த பணத்தை அவர்களிடமிருந்து மீட்டு அம்மாவிடம் ஒப்படைக்கும் பணியில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர்.
வழக்கமாக அரசியல் கட்சிகள், தேர்தல் சமயங்களிலும், மாநாடுகள் சமயங்களிலும்தான் நிதி வசூலில் ஈடுபடுவார்கள். ஆனால், அதிமுகவில் மட்டும் திடீரென்று, சம்பந்தமே இல்லாமல், அமைச்சர்களும், கழக நிர்வாகிகளும், அம்மாவின் புதிய ராசி எண்ணான ஏழில் கூட்டுத்தொகை வரும் வகையில் நிதியை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த 26ம் தேதி மட்டும், ஆறு கோடியே 82 லட்ச ரூபாயை அதிமுக நிர்வாகிகள் கொடுத்திருக்கின்றனர்.
வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்தியலிங்கம் ஒரு கோடியே ஆறு லட்சம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் ஒரு கோடியே ஆறு லட்சம், கோவை அதிமுக செயலாளர் எஸ்.பி.வேலுமணி ஒரு கோடியே ஆறு லட்சம், தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஒரு கோடியே ஆறு லட்சம், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சம்பத் 52 லட்சம் வழங்கியுள்ளனர்.
இவர்களுக்கு இந்தப் பணம் எங்கிருந்து வந்தது, எதற்காக இப்போது இந்த வசூல் என்பது புரியவில்லை. ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மின்வெட்டை ஒழிப்பேன் என்று சபதமிட்ட ஜெயலலிதா ஏழு மாதங்களாக தமிழகத்தை இருளிலேயே வைத்துள்ளார். தானே புயலில் பாதிக்கப் பட்ட கடலூர் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் மின்சாரம் வழங்கப்படவில்லை.
அரசு நிர்வாகத்தில் அதிகாரிகள் எப்போது மாறுதல் உத்தரவு வருமோ என்று அஞ்சி நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். அமைச்சர்களும் அடுத்த மாற்றம் எப்போது என்று ஜெயா டிவியைப் பார்த்தபடி உள்ளனர். ஆறு மாதத்தில் ஆறு முறை மந்திரி சபையை மாற்றி அமைத்துள்ளார் ஜெயலலிதா.
ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ள மக்களை மேலும் சிரமத்தில் ஆழ்த்த போக்குவரத்துக் காவல்துறையை முடுக்கி விட்டு, கண்மூடித்தனமாக வசூல் செய்ய உத்தரவிட்டுள்ளார் ஜெயலலிதா. போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராதம் செலுத்தத்தான் வேண்டும் என்றாலும், போக்குவரத்து காவல்துறைக்கு டார்கெட் வைத்து, வசூல் செய்வது, அரசின் நோக்கத்தை கேள்விக்குள்ளாக்குகிறது.
பத்தே நாட்களில் பாழ்பட்ட சாலைகளை சரிசெய்வேன் என்று உறுதியளித்த மேயர் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சாலைகளை சரிசெய்யாமல் உள்ளார். இத்தனை பிரச்சினைகளையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, மன்னார்குடி மாபியவைக் கைது செய்வதில் தீவிரம் காட்டி, வாரமிருமுறை புலனாய்வு இதழ்களுக்கு தீனி போடும் வேலையில் அரசு கவனம் செலுத்தி வருகின்றது.
காவல்துறை அதிகாரிகளோ, மன்னார்குடி மாபியாவைச் சேர்ந்தவர்களை மேலும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து, அம்மாவிடம் எப்படி நல்ல பெயர் எடுப்பது என்பதில் அதி தீவிரமாக இறங்கி வருகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டில், சட்டத்தையும், அதிகாரத்தையும் துஷ்பிரயோகம் செய்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் ? கருணாநிதியும் தனக்கு எதிராக குரல் எழுப்பியவர்களை இப்படித்தானே பொய் வழக்கில் சிக்க வைத்தார் ? அது ஒரு வகை என்றால் இது ஒரு வகை.
http://savukku.net/home1/1452-2012-01-31-09-57-11.html
No comments:
Post a Comment