Thursday, February 16, 2012

பிரதமர்தான் குற்றவாளி!

First Published : 14 Feb 2012 10:09:52 AM IST

http://dinamani.com/Images/article/2012/2/14/edi.jpg

பொதுவாழ்வின் நிபந்தனைகளுக்கும் நாட்டின் சட்ட விதிகளுக்கும் காங்கிரஸ்காரர்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்; பேச வேண்டும் என்பதைத்தான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது'' என்கிறார் கட்சியின் பொதுச்செயலர் ஜனார்த்தன் துவிவேதி. பிரதமர் தகுந்த நடவடிக்கை எடுப்பார் என்கிறார் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி. சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட வேண்டிய சட்ட அமைச்சர் சட்டத்தை மதிக்காமல் நடக்கும்போது அதற்கு இதுவெல்லாமா தீர்வு?

மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், தனது தேர்தல் பிரசாரத்தில், முஸ்லிம்களுக்கு பிற்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டில் 9 விழுக்காடு உள்ஒதுக்கீடு வழங்கப்படும் என்று பேசி வந்தது, தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு மாறானது என்று தேர்தல் ஆணையம் பலமுறை எச்சரித்தும் அதை அவர் சட்டை செய்யாமல் தொடர்ந்து பேசி வருகிறார்.

இந்த விவகாரம் குறித்துக் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலுக்குத் தலைமைத் தேர்தல் ஆணையர் குரேஷி கடிதம் எழுதி, அக்கடிதம் பிரதமர் அலுவலகத்துக்கு, "உரிய நடவடிக்கைக்காக' அனுப்பப்பட்ட பிறகுதான் காங்கிரஸ் கட்சி சொல்கிறது - யாராக இருந்தாலும் சட்டப்படி நடக்க வேண்டும் என்று!

ஆனால், இதே காங்கிரஸ் கட்சி சார்பில், சில வாரங்களுக்கு முன்பு இதே விவகாரம் குறித்து பிரச்னை ஏற்பட்டபோது, கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங், அபிஷேக் சிங்வி தலைமையில் தேர்தல் ஆணையத்துக்கு நேரில் சென்று விளக்கம் அளித்தார்கள். தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வரும் முன்பாகவே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார் என்றும், 9 விழுக்காடு ஒதுக்கீடு குறித்து கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளது; அதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்றும் விளக்கம் அளித்தனர்.

ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இந்த வாக்குறுதி இடம்பெறவே இல்லை. இந்த முதல்அடி விழுந்தவுடன் குர்ஷித் தனது நிலைமையை உணர்ந்து தன்னைத் திருத்திக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவரோ, "என்னைத் தூக்கில் போட்டாலும் இதிலிருந்து பின்வாங்க மாட்டேன்" என்றெல்லாம் ஆவேசமாகப் பேசினார் எனும்போது அவர் தான் வகிக்கும் அமைச்சர் பதவிக்கு உரியவராக நடந்து கொள்ளவில்லை என்பதைத்தான் அது காட்டியது.

மத்திய சட்டத்துறை அமைச்சரே சட்டத்தை மதிக்காமல், தேர்தல் விதிமுறைகளை மீறுவது என்ன நியாயம்? பிறகு, அரசியல் சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் தேர்தல் ஆணையத்துக்கு யார்தான் மதிப்பு அளிப்பார்கள்?

முஸ்லிம்களின் வாக்குகளைப் பெறுவதற்காக காங்கிரஸ் எத்தகைய வாக்குறுதிகளையும் அளிக்கலாம். அது அக்கட்சியின் விருப்பம். ஆனால், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், தவறான வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய பின்னரும், ஓர் அமைச்சர் கட்டுப்பட மாட்டார் என்றால், அதைப் பிரதமரும் பொருட்படுத்த மாட்டார் என்றால், கட்சித் தலைவர் சோனியா காந்தியும் தடுத்து நிறுத்த மாட்டார் என்றால், இந்த விவகாரத்தை காங்கிரஸ் வேண்டுமென்றே, தெரிந்தே எல்லை மீறுகிறது என்று சொல்வதைத் தவிர வேறு என்னவென்பது?

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 விழுக்காடு ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு என்பதை 2011, டிசம்பர் 22-ம்தேதி மத்திய அரசு அறிவித்தது. அதாவது, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருந்த இரு தினங்களுக்கு முன்பு இந்த அறிவிப்பை வெளியிட்டார்கள். இதுவே காங்கிரஸ் கட்சியின் உள்நோக்கத்தை அம்பலப்படுத்திவிட்டது. சிறுபான்மையினரின் வாக்கு வங்கியை முன்னிலைப்படுத்திய அறிவிப்பு என்பது தெளிவாகிவிட்டது.

இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் எதிர்ப்பு தெரிவித்ததால், தேர்தல் ஆணையம் இந்த அரசாணையை, தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் 4.5 விழுக்காடு உள்ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தக்கூடாது என்று ஜனவரி 11-ம் தேதி தடை விதித்தது.

காங்கிரஸ் கட்சி இத்துடன் நிற்கவில்லை. கட்சியின் தலைமை அலுவலகம் அச்சிட்ட தேர்தல் பிரசார சுவரொட்டிகளில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் குறித்தும், முஸ்லிம்களுக்கு உள்ஒதுக்கீடு குறித்தும் வாக்குறுதிகள் அடங்கிய வாசகங்களை இடம்பெறச் செய்தது. ஆனால், இதனை ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்புக் குழு அனுமதி அளிக்க மறுத்துவிட்டது.

இப்படி எல்லா இடங்களிலும் தடை ஏற்பட்டாலும், முஸ்லிம் தலைவர்கள் 4.5 விழுக்காடு போதாது என்று கூறி அறிக்கை வெளியிட்டிருந்ததால், முஸ்லிம்களுக்கு 4.5 விழுக்காடு ஒதுக்கீட்டை இருமடங்காக்கி, 9 சதவிகிதமாக அரசு உயர்த்தி வழங்கும் என்று சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மிக ஆணித்தரமாகப் பேசத் தொடங்கினார்.

காங்கிரஸ்காரர்கள் நாட்டின் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கட்சி விரும்புகிறது என்று இப்போது சொல்வதை, அப்போதே சட்ட அமைச்சருக்குச் சொல்லியிருக்கலாமே!

குழந்தையைக் கிள்ளிவிட்டுத் தொட்டிலையும் ஆட்டுவதில், காங்கிரஸýக்கு அனுபவம் அதிகம். பொதுவாக இடைத்தேர்தல் பிரசாரத்தின்போதுதான் அமைச்சர்களின் தீவிர வாக்கு சேகரிப்பின்போது அரசு இயந்திரம் தேர்தல் பணிக்காக பயன்பட்டதாகப் புகார்கள் எழும். இந்த முறை உத்தரப் பிரதேச மாநில பொதுத் தேர்தலிலேயே இத்தகைய புகார்கள் எழுந்துள்ளன.

சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் அதிகப் பிரசங்கித்தனமான பேச்சுகளால் காங்கிரஸூக்குக் கெட்ட பெயர், மத்திய அரசுக்குக் கெட்ட பெயர், எல்லாவற்றுக்கும் மேலாக பாஜக மூன்றாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புமல்லவா ஏற்படுகிறது.

சட்டம் படித்தவர் சல்மான் குர்ஷித். அதிலும் இந்தியாவின் சட்ட அமைச்சரும்கூட. அவர் சட்டத்தை மீறிச் செயல்படுகிறார் என்றால், சட்டத்தின் ஆட்சி பற்றிப் பேச அரசுக்கு இனிமேல் தார்மிக உரிமை உண்டா? சல்மான் குர்ஷித்தைவிடப் பெரிய குற்றவாளி இனியும் அவரைத் தனது அமைச்சரவையில் சட்ட அமைச்சராகத் தொடர அனுமதிக்கும் பிரதமர்!

No comments:

Post a Comment