Thursday, March 8, 2012

ஐந்து மாநிலத் தேர்தலும் இந்திய அரசியலும்


‘ம
ணிப்பூரில் காங்கிரஸ் மகத்தான வெற்றி; பாஜக படுதோல்வி’

நல்ல வேளை, இவ்வாறு செய்தி வெளியிடவில்லை நமது ஊடகங்கள். ஐந்து மாநிலத் தேர்தலுக்கு முன்னதாக நமது ஊடகங்கள் ‘ராகுல் அண்ட் கோ’வுக்கு அளித்த முக்கியத்துவத்தைப் பார்த்தவர்கள் இவ்வாறுதான் தேர்தல் முடிவு செய்தியாகுமோ என்று அஞ்சாமல் இருக்க முடியாது. அநேகமாக அடுத்த மாத ‘காங்கிரஸ் சந்தேஷ்’ இதழில் இவ்வாறு செய்தி வரலாம்.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் உள்ள நிலையில், இந்த ஐந்து மாநிலத் தேர்தல்களை அதற்கான முன்னோட்டமாகவே ஊடகங்கள் முன்னிறுத்தின. காரணம் இல்லாமல் இல்லை. நாட்டின் மிகப் பெரிய மாநிலமான 403 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச சட்டசபைக்கு நடந்த தேர்தல் நமது அரசியல் சூழலில் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதே.

சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் கிடைத்த வெற்றியால் உத்வேகம் அடைந்திருந்த காங்கிரசுக்கு நமது ஊடகங்களும் கொம்பு சீவி விட்டன. ராகுல், பிரியங்கா, சோனியா, ராபர்ட் வதேரா… இவர்கள் உ.பி சென்று தும்மினாலும் கூட செய்தி வெளியிட்டு சேவகம் செய்தன. அருண் நேரு, நீரஜா சவுத்ரி, சேகர் குப்தா போன்ற இதழியல் பிரபலங்களை களமிறக்கி உ.பி.யில் காங்கிரசுக்கு ஆதரவான சூழல் நிலவுவதாக ஒரு பொய்யான சித்திரம் தீட்டப்பட்டது. மாறாக அங்கோ மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சிக்கு எதிரான மக்களின் அதிருப்தி அலை வாக்குகளாக மாறத் தயாராக இருந்தது.

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான முலாயம் சிங்கின் சமாஜ்வாதி கட்சியும், முன்னாள் ஆளும் கட்சியான பாஜகவும் கூட அங்கு களத்தில் இருந்தன. மக்கள் யாரை ஆதரித்தால் என்ன, எங்கள் ஆதரவு காங்கிரசுக்குத் தான் என்று சொல்லாமல் சொல்லின ஊடகங்கள். என்ன காரணமோ, மத்திய அரசு அதிகாரத்துக்கே வெளிச்சம்.

மத்திய அரசு உ.பி.யில் காங்கிரஸ் வெல்வதற்காக அனைத்து தகிடு தத்தங்களையும் செய்தது. மாயாவதி அரசில் சுகாதாரத் திட்டத்தில் நிகழ்ந்த ஊழல் குறித்து தீவிரமாக விசாரித்தது சி.பி.ஐ. மாயாவதியால் வெளியேற்றப்பட்ட அமைச்சர் குஷ்வாகாவை பாஜக கட்சியில் சேர்க்க, அவர் மீது ஊழல் வழக்கு தொடுத்து, பாஜகவின் அரசியல் வியூகத்தை சிதறடித்தது சி.பி.ஐ. வழக்கம் போல இதிலும் சொதப்பிய பாஜக, கட்சியில் சேர்ந்த சில நாட்களில் அவரை தானாக வெளியேறச் செய்தது. இந்த நாடகத்திலும் ஊடகங்களின் நிர்பந்த பலம் தெளிவாகத் தெரிந்தது.

பாஜக அயோத்தி குறித்து பேசினாலும், பேசாவிட்டாலும் அதையே செய்தியாக்குவது ஊடகங்களின் கடமை. ஊழல் கடலில் மூழ்கி முத்தெடுக்கும் சோனியா உ.பி அரசை ‘ஊழல் அரசு’ என்று வர்ணிக்கும் போது, அதையே தலைப்புச் செய்தியாக்கும் தார்மிக ஆவேசமும் கொண்டது நமது ஊடகங்களின் தனிப்பெரும் திறன். (குட்டுப் பட்டாலும் மோதிரக் கையால் குட்டுப்பட வேண்டாமா?) இப்படிப்பட்ட நிலையில் தான், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளும் சிறுபான்மையினரும் தேர்தல் களத்தை தீர்மானிக்கும் உ.பி.யில் தேர்தல் 7 கட்டங்களாக நடந்தது.

மாயாவதியின் அரசை 5 ஆண்டுகளுக்கு முன் ஏன் தேர்ந்தெடுத்தார்களோ, அதே நோக்கத்துக்காக – ஆட்சி மாற்றம் தேவை என்பதற்காக – அடுத்த நிலையில் உள்ள முலாயம் சிங் தலைமையிலான அரசை இப்போது ஏற்படுத்தி இருக்கிறார்கள் உ.பி. வாக்காளர்கள். இதற்கு அவரது சிறுபான்மையினர் ஆதரவு நிலைப்படும் உதவி இருக்கிறது. உ.பி.யில் சரிபாதி தொகுதிகளில் வெற்றிவாய்ப்புகளை நிர்மானிப்பவர்களாக இஸ்லாமியர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அவர்கள் யாரை ஆதரிப்பார்களோ அவர்களே வெற்றி பெற முடியும் சூழல் உ.பி.யின் பிரத்யேகமான நிலை. இந்த வாக்குகளைக் கவரவே ‘இஸ்லாமியருக்கு ஒதுக்கீடு’ என்ற கோஷத்தை காங்கிரஸ் முன்வைத்தது. ஆனால், புதிதாக குடை பிடிக்கும் காங்கிரஸ் கட்சியை விட, ஏற்கனவே வால் பிடிக்கும் சமாஜ்வாதியே போதும் என்று உ.பி. வாழ் இஸ்லாமியர்கள் முடிவு செய்து விட்டார்கள். அதன் விளைவே, 224 தொகுதிகளில் வெற்றியுடன் தனிப் பெரும்பான்மையாக முலாயம் மீண்டும் முதல்வராக முடிந்தது.

மாயாவதி அரசின் கரை காணாத ஊழல்கள், அதிகார அத்துமீறல்கள், ஆடம்பரச் செயல்பாடுகளால் வெறுப்புற்றிருந்த மக்களுக்கு ஒரு நிவாரணம் தேவைப்பட்டது. அப்படியே சீட்டுக்கட்டை மாற்றுவது போல, பொதுவான வாக்காளர்களும் காட்சியை மாற்றிக் காட்டி இருக்கிறார்கள். சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் உ.பி.யில் 22 எம்.பி.களுடன் வென்ற காங்கிரஸ் இம்முறை தனது கணக்கை அதிகப்படுத்த தீவிரமாக முயன்றது. அக்கட்சியின் இளவரசர் ராகுல் ‘புயல்வேக பிரசாரம்’ செய்தார். அவரது சகோதரியும், அவர்தம் கணவரும், அன்னையும் கூட உ.பியில் தெருத் தெருவாக சுற்றினார்கள்.

மத்திய அமைச்சர்களும் சளைக்கவில்லை. அமைச்சர் சல்மான் குர்ஷித் ‘’காங்கிரஸ் வென்றால் இஸ்லாமியர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்படும்’’ என்று விதிகளை மீறி அறிவித்தார். பிறகு தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பால் மன்னிப்பு கேட்டார்; அதை அடுத்து, மற்றொரு மத்திய அமைச்சர் வேணி பிரசாத் வர்மா மீண்டும் இதையே வலியுறுத்திக் கூறி, அவரும் மன்னிப்பு கேட்டார். (இதே போன்ற தவறுகளை வேறு கட்சியினர் செய்திருந்தால் நமது தேர்தல் ஆணையம் எத்தகைய நடவடிக்கை எடுத்திருக்கும் என்று தெரியுமா?) மற்றொரு மத்திய அமைச்சரான ஸ்ரீ பிரகாஷ் ஜெய்ஸ்வால், ”உ.பியில் யாருக்கும் பெருமான்மை கிடைக்காவிட்டால் ஜனாதிபதி ஆட்சி அமலாகும்” என்று தேர்தல் முடிவதற்கு முன்னதாகவே மிரட்டினார்.

ஒருபுறம் மாயாவதியின் அதிகார துஷ் பிரயோகம்; மறுபுறம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் (தான் மட்டுமே ஆள்வதாக அக்கட்சிக்கு நினைப்பு!) கட்சியின் அதிகார துஷ்பிரயோகம். இந்த வாய்புக்களை பாஜக மிகச் சிறப்பாகவே பயன்படுத்தியிருக்க முடியும், ஆனால் செய்யவில்லை.

மத்தியப் பிரதேசத்திலிருந்து களமிறக்கப்பட்ட துடிப்புமிக்க பெண் தலைவர் உமா பாரதி பா.ஜ.கவுக்காக இயன்ற அளவு பிரசாரம் செய்தார். சிதறிய நெல்லிக்காய் மூட்டைகளாக இருந்த பாஜக தலைவர்கள் ஆட்சியை மாற்ற மக்களிடம் வாக்கு கேட்டனர். பாஜகவால், தனது வெற்றிகரமான குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை உ.பி.யில் பிரசாரம் செய்யவைக்கக் கூட முடியவில்லை. இப்படி பல காரணங்களால், சென்ற தேர்தலில் வென்ற 51 தொகுதிகளைக் கூட தக்கவைக்க முடியவில்லை; பாஜகவின் வீழ்ச்சி கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்கிறது. பாஜகவின் உ.பி. சரிவு ஏமாற்றம் அளிக்கிறது. ஆயினும், காங்கிரசை விட பரவாயில்லை என்னும் அளவுக்கு 46 தொகுதிகளில் வென்று மூன்றாவது இடம் பிடித்திருக்கிறது.

மாயாவதியின் பகுஜன் சமாஜ் மக்களின் எதிர்பார்ப்புகளை ஏமாற்றியதால் 78 தொகுதிகளில் மட்டும் வென்று ஆட்சியை இழந்திருக்கிறது. (சென்ற தேர்தலில் இக்கட்சி வென்ற தொகுதிகள் 206). காங்கிரசுக்கு தனியே 26 எம்.எல்.ஏக்கள் மட்டுமே கிடைத்திருக்கிறார்கள் (சென்ற தேர்தலில் வென்ற தொகுதிகள் 22). காங்கிரசின் கூட்டணி கட்சியான அஜித் சிங்கின் ராஷ்ட்ரிய லோக்தளம் 9 தொகுதிகளில் வென்றிருக்கிறது. முந்தைய தேர்தலில் 97 இடங்களைப் பெற்ற சமாஜ்வாதி கட்சி இப்போது தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியைப் பிடித்திருக்கிறது. சரியோ, தவறோ, மக்களாட்சியின் மாண்பே இத்தகைய அமைதிப் புரட்சி தான். இனிவரும் ஐந்தாண்டுகள் முலாயம் தலைமையிலேனும் உ.பி.யில் நல்லாட்சி நடக்கட்டும்!

பிற மாநிலங்களின் முடிவுகள்:

பஞ்சாப் (117), உத்தரகண்ட் (70), கோவா (40), மணிப்பூர் (60) ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் மக்களாட்சியின் சிறப்பை வெளிப்படுத்தி இருக்கின்றன. மணிப்பூரில் ஆளும் காங்கிரஸ் (42) தன்னை தக்கவைத்துக் கொண்டிருக்கிறது. கோவாவில், பாஜக – மகாரஷ்டிரவாதி கோமந்தக் கட்சி கூட்டணி (24), காங்கிரஸ் அரசை வெளியேற்றி இருக்கிறது. பஞ்சாபில், பலரது கணிப்புகளையும் மீறி, பிரகாஷ் சிங் பாதல் மீண்டும் முதல்வர் ஆகி இருக்கிறார்; பாஜக- சிரோமணி அகாளிதளக் கூட்டணி (68) மீண்டும் வெற்றிவாகை சூடி இருக்கிறது. உத்தரகண்டில் மட்டுமே நிச்சயமற்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது. இங்கு ஆட்சியில் இருந்த பாஜக 31 தொகுதிகளுடன் பின்தங்கினாலும், 32 தொகுதிகளில் வென்ற காங்கிரசாலும் வெற்றியைக் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. அங்கு யார் ஆட்சி அமைத்தாலும், சுயேச்சைகளின் கரமே ஓங்கி இருக்கும்.

நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் தெளிவாக உரைப்பது, தற்போது மத்தியில் ஆளும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கான எச்சரிக்கையே. இனிமேலும், அதிகார மமதையுடன் பேசும் திக்விஜய் சிங், கபில் சிபல் போன்றவர்களின் வழிகாட்டுதல்களில் மத்திய அரசு செயல்படக் கூடாது என்பதை அக்கட்சி உணர வேண்டிய தருணம் இது. ‘ஊழல் திலகம்’ காங்கிரசின் ஊழலுக்கு எதிரான முழக்கத்தை மக்கள் நம்பத் தயாரில்லை என்பதும் வெளிப்பட்டிருக்கிறது. அதே சமயம், காங்கிரஸ் கட்சிக்கு மாற்றான பாஜக இன்னும் வலுப்பெற வேண்டியதன் அவசியத்தையும் இத்தேர்தல் சுட்டிக் காட்டியுள்ளது.

பஞ்சாபில் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை அகாலிதள கூட்டணியால் மாற்ற முயன்றபோது, உத்தரகண்டில் பாஜகவால் அவ்வாறு செய்ய முடியாதது ஏன் என்று அக்கட்சி பரிசீலிக்க வேண்டும். கோவாவில் பெற்ற வெற்றியால் திருப்தி அடைந்துவிடாமல், சுயபரிசோதனைகளில் பாஜக இறங்க வேண்டிய தருணம் இது. சமாஜ்வாதி கட்சியின் எழுச்சி ‘மூன்றாது அணி’ என்ற பகல் கனவுக்கு வித்திடலாம். இவை தேசிய அளவில் ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளின் பிரதிபலிப்பாக இருக்கும்.

இனியேனும், ஊடகங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜால்ரா அடிக்காமல், உண்மை நிலையை நடுநிலையுடன் செய்திகளாக தர வேண்டும். ‘பஞ்சாபில் அகாலிதளக் கூட்டணி தோற்கும்; உத்தரகண்டில் பாஜக படுதோல்வி அடையும்; கோவாவில் காங்கிரஸ் வெல்லும்; உ.பி.யில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது’ என்றெல்லாம் நமது ஊடகங்கள் கூறிவந்த செய்திகள் அனைத்தும் பொய்யென்பது தெரிந்துவிட்டது. அவர்களின் நோக்கம் மக்களை திசை திருப்புவதாகவே இருந்துள்ளது. மக்களை யாரும் முட்டாளாக்க முடியாது என்பதை இப்போது ஊடகங்கள் புரிந்துகொண்டிருக்கும். இதுவும் தேர்தல் கூறும் பாடம் எனில் மிகையில்லை.

http://www.tamilhindu.com/2012/03/up-and-state-elections-mar-2012/

No comments:

Post a Comment