Sunday, March 4, 2012

வூடு கட்டி அடிக்கிறாங்க

பாரதி

உணவுப் பொருள் விலை உயர்வு... பெட்ரோல் விலை உயர்வு... அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு என்று மூன்றுபுறமும் மொத்தடிபட்டுக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கத்துக்கு நான்காவது புறமிருந்தும் ஒரு பேரிடி. அது வீட்டு வாடகை உயர்வு.


வேலை தேடி கிராமங்களிலிருந்து சென்னை போன்ற நகரங்களுக்குப் படையெடுப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், சென்னையில் வசிப்போரின் தற்போதைய எண்ணிக்கை 46 லட்சம். படிப்படியாக உயர்ந்த இந்த மக்கள் தொகை காரணமாக வீடுகளுக்கான டிமாண்ட் அதிகமானது. மற்றொருபுறம். நகர் மயமாக்கலில் தீவிரம், பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவு ஆகியவற்றால் அதிக சம்பளம் நிறைந்த வேலைகள்... மக்கள் கையில் தாராளப் பணப்புழக்கம்... இவையெல்லாம் வாடகை உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள். இது தவிர இன்னும் பல காரணங்களும் உள்ளன.


"இன்றைய நிலையில் சென்னை என்றல்ல மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், ஈரோடு என்று தமிழகத்தின் பெருநகரங்களின் வீட்டு வாடகைகள் எல்லாமே அதிகரித்துதான் வருகின்றன..." என்கிறார் ஈரோட்டில் தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்க்கும் மகேஷ்.


"ரெண்டு மாசத்துக்கு முன்னாடி, நான் குடியிருந்த வீட்டுக்கு வெள்ளையடிச்ச ஹவுஸ் ஓனர், ‘இந்த மாசத்திலேர்ந்து ஆயிரம் ரூபா வாடகை உயர்த்தியிருக்கேன்...’னு கூலா சொல்லிட்டுப் போயிட்டார். இவங்க நினைச்சுக்கிட்டால் வாடகையை உயர்த்துறாங்க... ஆனால், நான் வேலை செய்யற கம்பெனில மூணு வருஷமா இன்க்கிரிமெண்ட்டே இல்லே... என்ன பண்ணித் தொலைக்கிறது..? மத்த செலவுகளைக் குறைச்சுக்கிட்டு, சமாளிச்சிக்கிட்டு இருக்கோம்..." என்கிறார் திருச்சி காஜாமலைக் காலனியைச் சேர்ந்த குமரேசன் பரிதாபமாக.


தரகர்கள் தர்பார்

"வீடுகளின் திடீர் திடீர் வாடகை அதிகரிப்புக்கு புரோக்கர்களும் ஒரு முக்கியக் காரணம்..." என்கிறார் மதுரையைச் சேர்ந்த பாண்டுரங்கன். "இவர்களுக்கு ஹவுஸ் ஓனர் மற்றும் வாடகைதாரர் என்று இரண்டு தரப்பிலும் ஒரு மாத வாடகை கமிஷன் கிடைக்கிறது என்கின்ற காரணத்தால், ஆறாயிரம் வாடகை உள்ள வீட்டை எட்டாயிரம் என்றும் எட்டாயிரம் வாடகை உள்ள வீட்டை பதினோராயிரம் என்றும் இஷ்டத்துக்கு உயர்த்திடறாங்க... இவங்களுக்குக் கிடைக்கும் சில ஆயிரம் கமிஷனுக்காக சாதாரணக் குடிமக்களின் வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கிறாங்க..." -கோபத்துடன் குமைந்தார் பாண்டுரங்கன்.


"வாடகைக்கு வீடு பிடிக்கணும்னா புரோக்கர்கள் பிடிச்சாதான் முடியும். ஏன்னா, எங்கே வீடு காலியா இருக்குனு அவங்களுக்குத்தான் தெரியும். சில இடத்துல வீட்டு ஓனரே புரோக்கர் வேணாம்னு சொல்வாங்க. இவங்க விடமாட்டாங்க... ‘நீங்க தரவேண்டாம். நாங்க குடிவர்றவங்ககிட்ட மட்டும் கமிஷனை வாங்கிக்கிறோம்’னு இந்த சைடுல வாடகையை அதிகமா சொல்லி கமிஷனைக் கறந்திடுவாங்க..." என்கிறார் சென்னையில் வீடு வாங்கி, விற்கிற தொழிலில் ஆலோசகராக 12 வருடங்களாக ஈடுபட்டு வரும் கிருஷ்ணமூர்த்தி.


அவரிடம் எதிர்காலத்தில் வீட்டு மனைகளின் விலை குறைய வாய்ப்புண்டா? என்று கேட்டோம். "மக்கள்தொகைப் பெருக்கம், நல்ல சம்பளம் காரணமாக முன்னெல்லாம் அதாவது இரண்டு வருஷத்துக்கு முன்னாடி 100 ரூபாயா இருந்த சதுர அடி இன்னைக்கு 300 ரூபாக்குப் போகுது. வீடுன்னு பார்த்தால், இப்போதைக்கு 450 - 500 சதுர அடிக்கு சிங்கிள் பெட்ரூம் வீடு 15 லட்சம் முதல் 20 லட்சம்வரை போகுது. 650 -700 சதுர அடிக்கு டபுள் பெட்ரூம் 25 லட்சம் முதல் 35 லட்சம் வரையும் 800 சதுர அடி 28 லட்சம் முதல் 32 லட்சம் வரையும் போகிறது. இப்போ தமிழ்நாடு அரசு வேற, நிலமதிப்ப அதிகப்படுத்தப் போறதா சொல்லியிருக்காங்க. இனி குறைய வாய்ப்பே இல்ல" என்று ஆதங்கப்பட்டார்.


சென்னையில் இடம் வாங்கி விற்கும் தொழில் செய்துவரும் நாகராஜ், "இடநெருக்கடி தாங்க முக்கியக் காரணம். இப்பல்லாம் சென்னையில ஓர் இடத்தக் கூட காலியா பாக்க முடியாது. அப்படி இருந்தா, அந்த இடம் ஏதோ பிரச்சினைல இருக்குனு அர்த்தம். பெரும்பாலான ஏரியாவுல வீடு சதுர அடி 2,000க்கு மேல போட்டு இருக்கு. அடுத்ததா, இதில் போட்டியும் அதிகமாயிடுச்சு. வீடு கிடைக்கிறதே கஷ்டமா இருக்கிறதால முன்னப்பின்ன ஆனாலும் முடிச்சுடத்தான் பாக்குறாங்க" என்றார்.


அட்வான்ஸ் அடாவடி...

வீட்டு வாடகையை கூட சமாளித்து விடலாம். ஆனால், வீட்டு உரிமையாளர்கள் வாங்கும் முன்பணம்தான் பல நேரங்களில் மூர்ச்சையடைய வைக்கிறது. நகரங்களில் வாடகையைப்போல் பத்து மடங்கு முன்பணம் வசூலிக்கப்படுகிறது. "தாம்பரத்தில் மூன்றாயிரம் வாடகையில் குடியிருந்த நான், மேற்கு மாம்பலத்துக்குக் குடிவந்தபோது ஒன்பதாயிரம் ரூபாய் வாடகை. அட்வான்ஸ் 90 ஆயிரம். மூன்று காசு வட்டிக்குக் கடன் வாங்கி, அந்த அட்வான்ஸ் பணத்தைக் கொடுத்தேன்..." என்கிறார் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வரும் சந்திரசேகரன்.


இப்படி பல மடங்கு முன்பணம் கேட்பதால், வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்திருக்கும் பெண்கள் பலரும் மகளிர் விடுதியில் தங்குகின்றனர். அதிகம் போனால் மாதம் 3,500 முதல் 5,000 வரை உணவுடன் சேர்த்துக் கொடுக்க வேண்டியிருக்கும். இதுவே நான்குபேர் வீடு எடுத்து தங்கினால் குறைவாகத்தான் வரும். ஆனால், 8,000 ரூபாய் வாடகை வீட்டுக்கு 80,000 அட்வான்ஸ் என்பது இயலாத நிலையில்தான் விடுதியில் தங்கியிருப்பதாகக் கூறுகிறார்கள்.


டார்ச்சரில் இத்தனை வகைகளா?

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், தி.நகர், வடபழனி, சாலிகிராமம், வளசரவாக்கம், பூந்தமல்லி, அண்ணாநகர், வேளச்சேரி என ஏரியாவுக்குத் தகுந்த மாதிரி வாடகை கதிகலங்க வைக்கிறது. அதிலும் வீட்டு உரிமையாளர்களின் விசாரணைகள் கிட்டதட்ட சிபிஐ என்கொயரி மாதிரியே இருக்கும். ‘வெஜ்ஜா? நான்வெஜ்ஜா? வீட்டில் எத்தனை பேர்? உறவினர்கள் யாராவது வருவார்களா? உடல்நிலை சரியில்லை என்றாலும் முறைவாசல் தெளிக்க வேண்டும்...’ குடிபோவதற்கு முன்பே நமக்குக் கண்ணைக் கட்ட ஆரம்பித்துவிடும். பல்லாவரத்தில் குடியிருந்த நரசிம்மன், "நான் குடியேறியபோது எங்களுக்கு ஒரு குழந்தைதான் இருந்தது. ரெண்டு வருஷம் பிரச்சினையில்லே... ரெண்டாவது வருஷம் என் மனைவி கர்ப்பம் ஆனாங்க. உடனே ஹவுஸ் ஓனர், ‘அந்தக் குழந்தை பிறக்கறதுக்குள்ளே வீட்டைக் காலி பண்ணிடுங்க. இல்லாட்டி, வாடகையை ஆயிரம் ரூபாய் ஏத்திக் கொடுத்துடுங்க...’ என்று சொன்னார். மனிதாபிமானமே இல்லாத ஒருத்தர் வீட்டில் குடியிருக்கக் கூடாதுன்னு முடிவு செய்து, அடுத்த மாதமே காலி செய்துட்டோம்..." என்றார் வேதனையுடன்.


அரசு ஒரு மின்சாரக் கட்டணம் வசூலிக்கிறதென்றால், இவர்கள் வசூலிக்கும் மின்கட்டணமோ அதைவிடப் பல மடங்கு அதிகமாக இருக்கும். சென்னையில் கரண்ட் பில் ஒரு யூனிட்டுக்கு 4 ரூபாய் முதல் 6 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. கேட்டால், ‘தனி மீட்டர் இல்லை. சப் மீட்டர்தான்’ என்பார்கள். இதுதவிர, பராமரிப்புக்கு 200, தண்ணீருக்கு 150 என எப்படியும் வாடகை போக அதிகமாக ஐநூறு முதல் ஆயிரம் ரூபாயைத் தொட்டுவிடும்.


பாடலாசிரியர் குகை மா. புகழேந்தி கூறும்போது, "இ.பி.ல.யூனிட்டுக்கு 75 பைசா வாங்கும்போதே இவங்க தனியா, கூடுதலா 4.50 பைசா வாங்குறாங்க. இனி இ.பி. 3.50 ஆகப் போகுது. அப்போ 10 ரூபாய் வரை வாங்குவாங்க. அப்போ மாசா மாசம் 2,000 ரூபாய் கரண்டுக்கே அழ வேண்டியிருக்கும். வீடுகளில் குடியிருப்போரிடம் வீட்டு உரிமையாளர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்திருக்கிறது. ஆனா, யாருமே அதைக் கண்டுக்கறதில்லே" என்றார்.

பேச்சிலர் ROCKS

முன்பெல்லாம் ‘குடும்பத்தினருக்குதான் வீடு, பேச்சிலர்கள் கெட் ஆவுட்’ கோஷம் போட்ட வீட்டு உரிமையாளர்கள், கடந்த சில ஆண்டுகளாக பேச்சிலர்களுக்கு மட்டுமே வீடு என்று தங்கள் கோஷத்தை மாற்றிக் கொண்டார்கள். அதனால், பேச்சிலர் வீட்டில் நல்ல மழை. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. பேச்சிலர்கள் தங்கியிருந்தால், சொந்தக்காரர்கள் அதிகம் வரமாட்டார்கள். நான்கைந்து இளைஞர்கள் சேர்ந்து ஒரு வீட்டில் தங்கியிருப்பதால், வாடகை அதிகம் என்றாலும் அவர்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளமாட்டார்கள்.


பாடலாசிரியர் குகை.மா.புகழேந்தி, "வீட்டு வாடகை உயர்வுக்கு முதல் காரணம் ஐடி கம்பெனியின் பெருக்கம்தான். அதனால, 1,500 ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்துக்கு நாலு பேர் சேர்ந்து 7,000 கொடுக்கத் தயாராகிடுறாங்க. சென்னைய விட்டு தள்ளிப் போனாதான் 2,000, 3,000 ரூபாய்க்கு வீடு பாக்க முடியும். அதுகூட குருவிக்கூடு மாதிரி சின்னதாத்தான் இருக்கும். ஆனால், இப்ப அதுக்கும் பிரச்சினை.நான் 1,500 ரூபாய்க்கு வாடகைக்கு வந்தேன். இப்ப ஆறு மாசத்துக்கொருதரம் ஐநூறு, ஆயிரம்னு ஏத்தி கடைசியா 4,000 ரூபாயாகிடுச்சு. நான் காலி பண்ணினால், அங்கே அதிக வாடகை கொடுத்து ஐடி கம்பெனி ஆட்கள் அங்கே குடிவரத் தயாரா இருக்காங்க... இந்த நிலையில் ஒருநாள், சொந்தக்காரங்க யாரையோ குடி வைக்கப் போறோம்னு சொல்லி என்னைக் காலி பண்ண வச்சாங்க. நானும் டைம்கேட்டு காலி பண்ணிட்டேன். அப்புறம் பாத்தா, அங்கே அதிக வாடகைக்கு வேறு சிலரைக் குடி வச்சிருக்காங்க..." என்று ஆதங்கத்துடன் தெரிவித்தார்.


‘ஐடி மக்களும் குறிப்பாக பேச்சிலரும்தான் சென்னையில் வீட்டு வாடகை உயர்விற்கு காரணம்’ என்று பலரும் கூற, ஐடி நிறுவன ஊழியர் சுப்பு, "எனக்கு வீடு, ஆவடில இருக்குங்க. ஆனா, ஆபீஸ் பக்கத்துலயே பாக்கலாம்னு விசாரிச்சப்போ தலையே சுத்துது. 3,000, 4,000 வாடகை வீட்டுக்கு 7,000 ரூபாய் சொன்னாங்க. முதல்ல இங்க வந்த ஐடி மக்கள், என்ன வாடகையா இருந்தாலும் கொடுக்கத் தயாரா இருந்ததை அவங்க தங்களுக்குச் சாதகமா மாத்திக்கிட்டாங்க. அதேபோல வெளிநாடு போய்ட்டு இங்க வந்து செட்டிலாக வந்தவங்களுக்குப் பணத்தோட அருமை தெரியல. நாலு பேரு போய் வீடு கேக்கும்போது ஐடினு சொன்னதும் கொஞ்சம் இல்ல, ரொம்பவே அதிக வாடகை சொல்வாங்க. ஒரு ஆளுக்கு 3,000,4,000ம்னு கணக்குப் பண்ணி நாலு பேருக்கு 12,000 ரூபாய்ல இருந்து 15,000 வரை வாங்குவாங்க. ‘ரொம்ப அதிகம் சார்’னு சொன்னா, ‘என்ன சார் ஐடில இருக்கீங்க’ அப்டினு கூலா சொல்றாங்க" என்று தங்கள் பக்க நியாயத்தை முன்வைத்தார்.


"கணிப்பொறித் துறையில் உள்ளவர்களால் மட்டுமே வாடகை உயர்வு என்பதை ஏற்க முடியாது. சதவிகிதத்தில் வேண்டுமானால் இது கொஞ்சம் அதிகமாயிருக்கலாம். இன்றைய காலக்கட்டத்தில் அனைத்து தொழில்களுமே சிறப்பாக உள்ளன. நல்லா சம்பாதிக்கிறாங்க. தாராளமா கைல பணம் புழங்குது. அதிகமா அலையவும் மக்கள் தயாராயில்லை. அதனால, எங்க வீடு இருந்தாலும் அவங்க கேட்கிற வாடகையைக் கொடுத்துட்டு குடிபோகவே விரும்பறாங்க..." என்று பெருமூச்சு விடுகிறார் கம்ப்யூட்டர் ஹார்டுவேர் அண்ட் சர்வீஸில் இருக்கும் ஆனந்த்.


அசோக் லேலாண்டில் பணியாற்றும் மஞ்சுநாத், "நிலத்தோட மதிப்பு அதிகரிச்சுட்டேபோறதுதான் வாடகை உயர்வுக்கு முக்கியக் காரணம். ஐடி மக்கள் மட்டுமே காரணம்னு சொல்ல முடியாது. பேச்சிலர்ஸ் அஞ்சு பேருக்கு 10,000 கொடுக்கிறது பிரச்சினையா இருக்காது. ஆனா, ஒரு ஃபேமிலி 10,000 கொடுக்கிறது பெரிய தொகைதான். இப்போ 15,000, 20,000 மாசச் சம்பளம் இல்லைனா சென்னையில் காலம் தள்ள முடியாது. இதையெல்லாம் கட்டுப்படுத்த அரசு ஏதாவது வழி பண்ணணும்... இந்த ஏரியாவுல இவ்ளோதான் வாடகை இருக்கணும்னு சொல்லணும்... அதை மீறி அதிகமா வாடகை வசூலிக்கிற வீட்டு உரிமையாளர்களை கைது நடவடிக்கைக்கு உட்படுத்தணும்" என்றார் ஆவேசமாக.

ஓனர்கள் புலம்பல்ஸ்

வீட்டு உரிமையாளர்களை வாடகைதாரர்கள் வறுத்தெடுத்துக் கொண்டிருக்க, வீட்டு உரிமையாளர்கள் சிலரிடம் பேசினோம். பூந்தமல்லியைச் சேர்ந்த புனிதா, "இப்போலாம் தொழிற்சாலைகள், கம்பெனிகள் அதிகமாயிடுச்சு. பஸ் போக்குவரத்துக்குப் பக்கமா இருக்கணும் இல்லைனா, ஆபீஸ் பக்கத்துலயே வீடு இருக்கணும்னு எதிர்பாக்கிறாங்க. அதுலயும் தனி வீடு, இ.பி, தனியா இருக்கணும்னு அவங்கவங்களுக்கு தகுந்த எதிர்பார்ப்புகளோட வர்றாங்க. இதனால, போட்டி அதிகமாயிடுச்சி. ஒருத்தர் வீட்டை காலி பண்ணிட்டுப் போனால், அந்த வீட்டை நாலு பேர் கேட்டு வர்றாங்க. டிமாண்ட் அதிகமா இருந்தால், வாடகை ஏறாமல் என்ன செய்யும்? விக்கிற விலைவாசியில எங்களுக்கும் வேறு வழி தெரியலை..." என்றார்.


"வீட்டுச் சொந்தக்காரர்கள் எல்லோரும் கைப்பணத்தை வைத்துக்கொண்டு வீடு கட்டுவதில்லை. வங்கியில் 14 சதவிகித வட்டியில் கடன் வாங்கித்தான் கட்டுகிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் 4 சதவிகித வட்டிதான். இங்கு வங்கி வட்டி விகிதம் அதிகம் இருப்பதும் ஒரு காரணம். வங்கியின் கடனை அடைக்கவே ஐந்து வருடம் முதல் பத்து வருடம்வரை ஆகிறது. இதில் நடுநடுவே வங்கிகள் வட்டி விகிதத்தை அதிகப்படுத்தி, கட்ட வேண்டிய இன்ஸ்டால்மெண்ட் தொகையையும் அதிகமாக்கிடும். இதுக்கு நடுவே, நாம் ஒரு பட்ஜெட் போட்டு வீட்டைக் கட்ட ஆரம்பிச்சிருப்போம். நாளுக்கு நாள் உயரும் சிமெண்ட், கம்பி, மண், செங்கல் போன்ற கட்டுமானப் பொருட்கள், மின் வசதி, தண்ணீர் வசதிக்கென அலைந்து, அங்கங்கே லஞ்சமாக் கொடுக்கக் கூடிய பெருந்தொகை இதெல்லாம் பட்ஜெட்டைப் பஞ்சராக்கிடும். வீடு கட்டும்போது செங்கல், ஜல்லி எல்லாம் கொட்டும்போது ரோட்டுல கொட்டுறாங்கனு ஒரு கம்ப்ளைண்ட் வரும். அதுக்கு கவுன்சிலர்ல இருந்து கவனிக்க வேண்டியிருக்கு.வெளியில இருந்து யார் வேணும்னாலும் என்ன வேணும்னாலும் பேசலாம். ஒரு ஹவுஸ் ஓனரா ஒரு மாசம் இருந்து பார்த்தீங்கனா, நாங்க படற சிரமத்தை நீங்க புரிஞ்சுக்குவீங்க..." என்கிறார் அயனாவரத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன்.

புறநகர் புறப்பாடு

நடுத்தர மக்களின் வருமானத்தில் ஏறக்குறைய 35 சதவிகிதம் வீட்டு வாடகைக்கே போய்விடும் நிலையில், வீட்டு வாடகை உயர்ந்து அது சம்பாத்தியத்தில் 40 சதவிகிதமாகி விடுகிறது. இந்த நிலையில் தங்கள் வருமானத்துக்குக் கட்டுப்படியாகும் விதமாக வாடகை குறைவான வீடுகளைத் தேடி ஓடுகிறார்கள். இவர்களைக் கரம் நீட்டி வரவேற்று ஆறுதல் அளித்து வந்தவை, சென்னைப் புறநகர்ப் பகுதிகள்தான். ஆரம்பத்தில் கிண்டி போன்ற பகுதிகளில் வாடகை குறைவு என்று அங்கே திமுதிமுத்தார்கள். பிறகு கிண்டிக்கும் டிமாண்ட் அதிகரித்து, அங்கும் வாடகை உயர்ந்தது. விழி பிதுங்கிய நடுத்தர வர்க்கம் பிறகு, தாம்பரத்துக்குப் படையெடுத்தது. இப்பொழுது வாடகை அங்கேயும் விஸ்வரூபம் எடுத்துவிட்டது. இப்போது, சென்னையில் வேலையை வைத்துக்கொண்டு தாம்பரத்தைத் தாண்டி வண்டலூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு என்று தங்கள் குடியிருப்பை அமைத்துக் கொண்டவர்கள் பலர். இவர்கள் அங்கிருந்து இங்கு பணிக்கு வரவேண்டியிருப்பதால், சாலைப் போக்குவரத்து நெருக்கடியும் அதிகரித்துவிட்டது.


"சென்னைக்கு வந்த புதிதில் பதினைந்து வருஷத்துக்கு முன், கோடம்பாக்கத்துல இருந்தேன். ஆரம்பத்தில் வாடகை ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான். படிப்படியாக உயர்ந்து,ஆறு வருஷத்தில் மூவாயிரம் ரூபாயா ஆயிடுச்சி. இனி கட்டுப்படியாகாதுன்னு மீனம்பாக்கத்தில் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் வாடகைக்குக் குடிவந்தேன். அதுக்கப்புறம் அங்கேயும் வாடகையை அதிகமாக்கினாங்க. பல்லாவரம் போனேன்... அதுக்கப்புறம் இப்ப செங்கல்பட்டுல குடியிருக்கேன். வாடகை மூவாயிரத்து ஐநூறு. தினமும் ரெயில்ல போய் வந்துக்கிட்டிருக்கேன்..." என்கிறார் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் சாரங்கன்.

ஒய் நாட்?

‘இட விலையை அரசு கட்டுப்படுத்தாத வரையில் வாடகைப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரப்போவதில்லை. இட விலையின் பிரச்சினை, வாடகையில் மட்டும் பிரதிபலிக்கவில்லை. ஹோட்டலில் சாப்பிடும் இட்லியில் தொடங்கி, ஒரு பக்கம் டிடிபி டைப் பண்ணுவதுவரை விலையேற்றத்தை மறைமுகமாக ஏற்படுத்துகிறது. தற்போதைய நிலையில் ரியல் எஸ்டேட் கட்டுப்படுத்த முடியாத கறுப்புச் சந்தையாக மாறிவிட்டது. ஓர் இடத்தின் உண்மையாகப் பதியப்படும் மதிப்புக்கும் பணம் கொடுக்கும் மதிப்புக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இது ஊழல் கொழிக்கவும் லஞ்சம் செழிக்கவுமே துணை நிற்கிறது. நான் 97ல் சென்னைக்கு வந்தபோது 2,000 ரூபாய்க்கு வாடகைக்கு இருந்தேன். இன்று அதுவே 10,000 ரூபாய் ஆகியிருக்கிறது. எந்தக் கட்சி ஆட்சிக்குவந்தாலும் கறுப்புச் சந்தைகளை ஊக்குவிக்கிறது. பத்திரப்பதிவில்தான் அரசுக்கு அதிக லாபம். எனவே, வீடு வாடகை உயர்வுக்கு ஐடி நிறுவனங்களின் பெருக்கம் என்று ஒரேயடியாகச் சொல்ல முடியாது" என்று அரசே காரணம் எனக் குற்றம் சாட்டிய அமீர் அப்பாஸ் தொடர்ந்து, "சீனா மாதிரியான நாடுகளில் 90 வருஷம் அக்ரிமெண்ட்டுக்கு அரசாங்கமே இலவசமா இடம் கொடுக்குமாம். அங்கே யாரும் இடத்தை விலைக்கு வாங்க முடியாதாம். இங்கே பார்க் செரட்டன், சோழா மாதிரியான ஹோட்டல்ல ஒருநாளைக்கு அறை எடுத்துத் தங்குவதற்கு 25,000ம்னா அங்க அதே மாதிரி ஹோட்டல்ல தங்க, நம்ம ரூபாய் மதிப்புக்கு 2,000ம்தான் ஆகுமாம். எப்படி இது சாத்தியம்னு இதைப் பத்தி சீன நண்பர் ஒருத்தர்ட்ட கேட்டபோது, ‘கட்டுமானச் செலவு மட்டும்தான் அவங்களோடது. அதனால, குறைச்சுக் கொடுக்க முடியுது’னு சொன்னாராம். இது வாய்வழித் தகவல் கிடையாதுங்க. ஆதாரப்பூர்வமான தகவல். இது, நடிகர் ராஜேஷ், ‘நான் கண்ட சீனா’ அப்படிங்கிற புத்தகத்துல எழுதியிருக்கிற குறிப்பு... இங்க 50 லட்சத்துக்குப் பதிவு பண்ற இடத்த, ஒன்றரைக் கோடி கொடுத்து வாங்கிக் கட்டும்போது அதுதான் ஊழலுக்கு ஊத்துக்கண்ணா இருக்கும்" என்று வெதும்பினார்.


பெட்டி செய்தி: சட்டம் என்ன சொல்கிறது?

"ஒரு வீட்டின் வாடகை என்பது எப்படி நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று தமிழகக் கட்டிடங்கள் (குத்தகை மற்றும் வாடகைக் கட்டுப்பாடு) சட்டப்படி, ஒரு வீட்டின் ஒட்டு மொத்த மதிப்பில் ஒன்பது சதவிகிதத்தையே வருட வாடகையாக வாங்க வேண்டும் (அதாவது ஒரு லட்சம், வீட்டின் மதிப்பென்றால் 9 சதவிகிதம் வைத்து வருடத்திற்கு 9,000 ரூபாய் வரும். 12 மாதங்களுக்குப் பிரித்தால், மாதத்திற்கு 750 ரூபாய் வரும்). ஒரு வீட்டின் மதிப்பென்பது நில மதிப்பு மற்றும் கட்டிட மதிப்பைக் கணக்கிட்டு வருவதாகும். இப்படி கணக்கிட்டுக் குடியிருப்புக்கு 9 சதவிகிதமும், கமர்ஷியலுக்கு 12 சதவிகிதமும் வாடகை நிர்ணயிக்க வேண்டும்.


அடுத்து, கட்டிட மதிப்பு என்பது அதன் தளங்களைப் பொறுத்தது. மூன்று தளங்கள் இருக்கிறதெனில், முதல் தளத்திற்கு மொத்த நிலத்தின் மதிப்பையும் அந்தத் தளத்திற்கான கட்டிட மதிப்பையும் கணக்கிட வேண்டும். இரண்டாம் தளமென்றால், நிலத்தின் மதிப்பில் பாதியையும் மூன்றாவது தளமென்றால், நிலத்தின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கையும் கணக்கிட வேண்டும்.


இத்துடன் ஒரு வீட்டின் கூடுதல் வசதிகளைப் பொறுத்து (கார் பார்க்கிங், லிஃப்ட், ஏசி, வாட்டர் ஹீட்டர், ஃப்ர்னிச்சர், எலிவேஷன், ஓவர் டேங்க் போன்றவை) கணக்கிட்டுக் கொள்ளலாம். கரண்ட் உள்ளிட்ட வசதிகளைப்பொறுத்து, மொத்த மதிப்பில் 7.5 சதவிகிதம்வரை வருடத்திற்கு நிர்ணயிக்கலாம்.


தாம் கொடுக்கும் வாடகை அதிகம் என்று குடியிருப்பவர் நினைத்தால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் மனு போடலாம். அதன் பின்னர், குடியிருப்பவர் ஒரு என்ஜினீயரையும் வீட்டு உரிமையாளர் ஒரு என்ஜினீயரையும் வைத்து, வீட்டின் மதிப்பைக் கணக்கிட்டு அவரவர்களுக்குச் சாதகமாக சமர்ப்பிப்பார்கள். எது சரி? எது தவறு என்பதை இரண்டு என்ஜினியர்களும் கொடுத்த விவரங்களிலிருந்து சரி பார்த்து தீர்ப்பு வழங்குவார்கள்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/2 ன்படி குடியிருப்பவர் வாடகை கொடுக்காமல் இருப்பது, உள் வாடகை அல்லது மேல் வாடகைக்கு விடுவது, வீட்டு உரிமையாளரை ‘நீ ஓனரே இல்லை’ எனச் சொல்வது, மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டைப் பூட்டியே வைத்திருப்பது, வீட்டை சேதப்படுத்துவது போன்ற காரணங்களுக்காக குடியிருப்பவரை காலி செய்யச் சொல்ல முடியும்.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 10/3 ன்படிவீட்டு உரிமையாளரின் வாரிசுகளுக்கு வீடு தேவை என்றாலோ, தன் சொந்தத் தேவைக்கு வேண்டுமென்றாலோ குடியிருப்பவரைக் காலி செய்யச் சொல்ல சட்டம் இருக்கிறது.


தமிழ்நாடு கட்டிடங்கள் சட்டம் 1960, பிரிவு 14 பி -ன் படிவீட்டை இடித்துக் கட்டவேண்டும் என்றால், அவரைக் காலி செய்யச் சொல்லலாம்.


வீட்டின் உரிமையாளர் வாங்கும் வாடகை நியாயமானது இல்லை என்கிறபோது சென்னைவாசிகள் என்றால், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் இருக்கும் சிறு வழக்கு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம். மற்ற மாவட்டத்திலுள்ளவர்கள், முன்ஷிப் நீதிமன்றங்களை அணுகலாம்.


வீட்டு உரிமையாளருக்கும் குடித்தனக்காரருக்கும் இடையே ஏதாவது பிரச்சினை வந்து, பேச்சுவார்த்தையே இல்லாமல் போய்விடுவதும் உண்டு. அதுபோன்ற நேரங்களில், வீட்டு உரிமையாளரின் வங்கிக் கணக்கில் வாடகைப் பணத்தை போட்டு வரலாம்.


வங்கிக் கணக்கு பற்றிய விவரம் கிடைக்கவில்லை எனில், மணியார்டர் செய்யலாம். அதையும் வாங்க மறுத்து திருப்பி அனுப்பினால், சிறு வழக்கு நீதிமன்றத்தில் டெபாசிட் செய்து வந்தால், குடித்தனக்காரர் மீது வீட்டின் உரிமையாளர் குற்றம் எதுவும் சொல்ல முடியாது.


இதேபோல், வாடகைக்கு இருப்பவர் சரியாக வாடகை தரவில்லை அல்லது வாடகையே தரவில்லை என்றாலும் வீட்டின் உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம். வாடகை சரியாக தரவில்லை என்பதற்காக மின்சாரம், தண்ணீர் சப்ளையை நிறுத்துவது சட்டப்படி தவறு. நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தே இழப்பீடு பெற முடியும்.

வீட்டைக் காலி செய்ய வைக்க

குடியிருப்பவர் வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்றால், குறைந்தது இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு முன்னறிவிப்பு தரவேண்டும். இந்த விஷயத்தை ஆரம்பத்திலேயே அக்ரிமெண்ட்டில் எழுதிக் கொள்வது நல்லது. சொந்தக் காரணம், மகன்/மகளுக்கு வீடு தேவை என்பது போன்றவற்றுக்காக வீட்டை காலி செய்யச் சொல்லலாம்.


அதே நேரத்தில், வீட்டின் உரிமையாளருக்கு அந்தப் பகுதியில் வேறு ஒரு வீடு இருந்து, அது காலியாக இருக்கும் பட்சத்தில் வாடகைக்கு இருப்பவரைக் காலி செய்ய வைக்க உரிமை இல்லை. வீட்டை இடித்துக் கட்டுவது என்றால், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி வாங்கியதற்கான ஆதாரத்துடன்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்ல முடியும். வீட்டைக் காலி செய்த பிறகு இடிக்கவில்லை என்றால், ஏற்கெனவே வாடகைக்கு இருந்தவரை அதில் குடியமர்த்த வேண்டும்.


வீட்டை இடித்துக் கட்டிய பிறகும் பழைய வாடகைதாரர்கள் வீட்டைக் கேட்டால், அவர்களுக்குமுன்னுரிமை கொடுக்க வேண்டும். வீட்டின் உரிமையாளர் ஒருவேளை தவறான தகவல் கொடுத்து காலி செய்ய வைத்தால், குடித்தனக்காரர் அதற்கான நஷ்ட ஈடு கோர வாய்ப்பிருக்கிறது.


பெட்டி செய்தி: அக்ரிமெண்ட் அவசியம்!

வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் உறவு நீடித்து நிலைத்து நிற்க, சில அடிப்படையான சட்ட விஷயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். இதற்கு வழக்கறிஞர் வேலுமணி தரும் சட்டப்பூர்வமான ஆலோசனைகள்...


ஒப்பந்தம்

முதலில் வீட்டு உரிமையாளர் மற்றும் வாடகைக்கு வருபவர் அக்ரிமெண்ட்/ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக முக்கியம். 20 ரூபாய் முத்திரைத்தாளில் முன்பணம், மாத வாடகை எவ்வளவு எனத் தெளிவாக ஒப்பந்தம் போட்டுக் கொள்வது மிக அவசியம்.


ஒப்பந்தத்தில் முன்பணம், மாத வாடகை, பராமரிப்புக் கட்டணம் தவிர வேறு ஏதாவது கட்டணங்கள் இருந்தால், அதையும் கட்டாயம் குறிப்பிட வேண்டும்.


அதில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்றால், இரு தரப்பினரும் சேர்ந்துதான் மேற்கொள்ள முடியும்.

முன்பணம்

வீட்டுக்கான முன்பணம் பெற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. சந்தை நிலவரத்தைப் பொறுத்தே இது இருக்கிறது. சென்னை போன்ற நகரங்களில் மாத வாடகையைப்போல் பத்து மடங்கும் மற்ற நகரங்களில் சுமார் ஐந்து மடங்கும் முன்பணம் வாங்குகிறார்கள். அவரவர் சாமர்த்தியத்திற்கேற்றாற்போல் பேரம் பேசி குறைத்துக் கொள்ள வேண்டியதுதான்.

வாடகை

வாடகைக்குப் போகிறவர் முன்பணம் தொடங்கி, அனைத்துக்கும் உரிமையாளரிடம் ரசீது பெற்றுக் கொள்வது அவசியம். இதற்காக அச்சடித்த ரசீதுகள் எதுவும் தேவையில்லை. சாதாரண வெள்ளைத் தாளில் எழுதி வாங்கிக் கொண்டாலே போதுமானது. தேவைப்பட்டால், ரெவின்யூ ஸ்டாம்ப் ஒட்டியும் வாங்கிக் கொள்ளலாம்.

http://www.puthiyathalaimurai.com/this-week

No comments:

Post a Comment