Monday, February 20, 2012

ஹிந்து: பன்மையின் பாதுகாப்பு அடையாளம்

-

தொடர்ச்சி…

இன்றைக்கும் தங்கள் ஹிந்து அடையாளத்தின் மீது பலவகையான ஹிந்துக்களுக்கும் ஒருவித சுய விலகலும் ஒவ்வாமையும் சங்கடமும் இருப்பதைக் காண முடியும். ஒரு கிறிஸ்தவரால், இஸ்லாமியரால் தன்னை இயல்பாக தன் மதத்தின் பெயருடன் பொதுத் தளங்களில் அடையாளப் படுத்திக் கொள்ள முடிகிறது. ஆனால் இந்தியாவிலும் சரி, மற்ற நாடுகளிலும் சரி, ஹிந்து என்ற தங்கள் அடையாளத்தை மிகுந்த தயக்கத்துடனேயே இந்துக்கள் முன்வைக்க வேண்டியுள்ளது. இன்றும் இந்து மனதில் நீடித்து வரும் பிரிட்டிஷ் காலனிய கருதுகோள்களும், அதைத் தொடர்ந்து வந்த நேருவிய, போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் செலுத்திய தாக்கமும் தான் இந்த நிலையை உருவாக்கியுள்ளன.

பிரிட்டிஷ் காலனியம் இந்தியாவில் வேரூன்றிக் கொண்டிருந்த ஆரம்ப காலகட்டத்தைச் சேர்ந்த ஆங்கில ஆவணங்கள் எல்லாவற்றிலும் Hindoo என்ற சொல்லே புழக்கத்தில் இருந்தது. இந்தச் சொல் அதன் பயன்பாட்டிலேயே ஒரு கீழான நாகரிகத்தை, மக்களை, சமுதாயத்தைக் குறித்தது (ஏறக்குறைய nigger என்ற சொல்லைப் போல). கிறிஸ்துவ மிஷநரிகள் இந்தியாவையும் இந்து மதத்தையும் குறித்து உருவாக்கியிருந்த வக்கிரமான மனப்பிம்பங்களே உலகெங்கிலும் அப்போது அறியப் பட்டிருந்தன. இது 1860கள் வரை நீடித்தது.

1857ம் வருடத்திய முதல் சுதந்திரப் போர் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அதற்குப் பிந்தைய பிரிட்டிஷ் அரசாட்சியின் போது தான் திறந்த மனத்துடன் இந்துப் பண்பாட்டை அறியும் முயற்சிகளை வில்லியம் ஜோன்ஸ் போன்ற சில மேற்கத்திய அறிஞர்கள் மேற்கொண்டார்கள். சம்ஸ்கிருத மொழி மீதும் இந்து நூல்கள் மீதும் பெரும் ஆர்வம் மேற்குலகில் ஏற்பட்டது. இந்தத் திருப்பத்தின் போது Hindoo என்ற சொல் மிக வேகமாக வழக்கொழிந்து, அதற்குப் பதிலாக Hindu என்ற சொல் பயன்பாட்டிற்கு வந்தது. இந்தச் சொல் இழிசொல்லாக அல்ல, மாறாக இந்துப் பண்பாட்டை மேற்குலகம் புரிந்து கொள்ள உதவும் ஒரு திறவுகோலாக, வாயிலாகவே அமைந்தது.

இன்றைய இணையத் தொழில்நுட்பம் இத்தகைய சொல்லாராய்ச்சிகளை மிகவும் எளிமையாக்கியிருக்கிறது. Google Ngram என்ற கூகிள் மென்பொருளின் உதவியால் 1790 முதல் 2010 வரை பதிப்பிக்கப் பட்ட ஆங்கில நூல்களில் Hindoo, Hindu ஆகிய சொற்களின் பயன்பாடு எப்படி மாறிவருகிறது என்பது குறித்த கீழே உள்ள வரைபடத்தை ஒரு நொடியில் பெற முடிகிறது!

(படத்தின் மேல் க்ளிக் செய்தால் பெரிதாகத் தெரியும்)

(இந்த வரைபடம் கூகிளின் புத்தகக் களஞ்சியமான Google Booksக்கு உள்ளே உள்ள புத்தகங்களை மட்டுமே கணக்கில் கொண்டு அவை பதிப்பிக்கப் பட்ட வருடங்களின் அடிப்படையில் தேடிப் பெறப்பட்டது. உலகின் அனைத்து நூலகங்களையும் அலசித் தேடினாலும் இந்த வரைபடம் குறிப்பிடும் பொதுப் போக்கில் மாற்றமிருக்காது)

வரைபடத்தைக் கவனித்தால் சில முக்கியமான விஷயங்கள் புலப்படும். 1840களில் இந்துமதத்தைக் குறிக்கும் இரண்டு சொற்களுமே ஆங்கில நூல்களில் குறைவதற்குக் காரணம், பிரிட்டிஷார் இந்தியாவின் மீதான தங்களது அதிகாரம் உறுதியாகி விட்டது என்று கருதியது தான். ஆனால் 1857 போர் அந்த எண்ணத்தைத் தகர்த்து விட்டதால், அதன் பின்வந்த காலகட்டங்களில் ஆங்கில நூல்களில் மேலும் மேலும் அதிகமாக இந்து மதம் பற்றி எழுதப் படுவது தெரியவருகிறது. 1860 தொடங்கி 1960 வரை ஏறத்தாழ நூறாண்டுகள் இது நீடிக்கிறது. மேற்குலகம் இந்துமதத்தைத் தீவிரமாக கவனித்து, கண்காணித்து புரிந்து கொள்ள முயன்ற காலகட்டம் இது. 1960ல் தொடங்கி குறிப்பாக 1980களில் இந்து என்ற சொல்லின் பயன்பாடு பெரிதும் குறைய ஆரம்பிக்கிறது. இவ்வாறு குறைவதற்குப் பல காரணங்களைச் சொல்லலாம் – இந்து என்ற சொல்லின் பரவலான பொருள் குறுகிக் கொண்டே வந்தது, இந்து குருமார்கள் மீது பல உள்நோக்கம் கொண்ட அவதூறுகள் சுமத்தப் பட்டது, இந்துமதம் பற்றிய ஆய்வுகள் கல்விப்புலங்களில் உலக அளவில் குறைவது, இந்து ஞானத்தின் ஒரு சில அம்சங்களை ரீபேக்கேஜ் செய்யும் புதுயுக ஆன்மிக குருமார்கள் தங்கள் சொல்லாடல்களில் Hindu என்ற சொல்லை கவனமாகத் தவிர்ப்பது இத்யாதி இத்யாதி.

(வரைபடத்தையும் அது குறித்த புரிதல்களையும் அளித்த Manasatarangini வலைப்பதிவிற்கு நன்றி).

இன்றைய சூழலில் ஹிந்து அடையாளத்தை மறுதலிக்கும் இரண்டு கருதுகோள்களை பொதுவாகக் காணமுடிகிறது. ஒன்று ஹிந்து அடையாளமின்மை வாதம் (Negation of Hindu identity), மற்றது ஹிந்துத் தாக்க நீக்கம் (De-hinduization). இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டவை.

ஹிந்து என்ற பொது அடையாளம் ஒன்று வரலாற்று ரீதியாக இல்லவே இல்லை. இந்து மதத்தின், சமுதாயத்தின் உறுப்புகளாக உள்ள ஒவ்வொன்றும் தனிப்பட்டவை. இவற்றை “ஒற்றை பொது அடையாளத்துக்குள்” கொண்டு வருவது கருத்தியல் வன்முறை என்பது முதலாவது வாதம்.

ஹிந்துப் பண்பாட்டின் மேன்மையான அம்சங்களை ஒவ்வொன்றாகப் பிய்த்தெடுத்து, அவற்றின் ஹிந்து இயல்பை மறுதலித்து, அவற்றை தனித்தனியாக முன்னிறுத்துவது இரண்டாவது வாதம். அதோடு விட்டுவிடாமல், இந்து சமுதாயத்தில் உள்ள எல்லா சீர்கேடுகளையும் மூட்டை கட்டி அதற்குத் தவறாமல் “இந்து” என்ற லேபிளை ஒட்டுவதும் இந்த வாதத்தின் இன்னொரு பரிமாணம். உதாரணமாக, யோகம் இந்து அறிவியலேயே அல்ல. அது உருவாகும்போதே மதத் தீட்டு எதுவும் இல்லாமல் சுத்திகரிக்கப் பட்டு “பொது” சொத்தாகவே பிறந்தது என்று இத்தரப்பினர் ஒரு கருதுகோளை முன்வைப்பார்கள். பதஞ்சலியின் யோக சூத்திரமும், பகவத்கீதையும் இல்லாமல் ஏது யோகம்? அவை இந்து நூல்கள் இல்லாமல் கிறிஸ்தவ நூல்களா என்ன? என்று எதிர்க்கேள்வி வந்தால், உடனே பதஞ்சலியும் இந்து அல்ல, பகவத்கீதையும் இந்து அல்ல என்று தங்களது அடுத்த கருதுகோளை எடுத்து வைப்பார்கள். இன்னொரு சாரார், பொங்கல் இந்துப் பண்டிகை அல்ல, தமிழர் திருநாள் என்று ஒரு ஜல்லியை எடுத்து விட்டு, பொங்கல் பண்டிகையை கிறிஸ்தவம் லாகவமாகத் திருட வழிவகுப்பார்கள். இந்த வாதத்தின் படி பரதமும், கதகளியும், ஆயுர்வேதமும், பாரம்பரிய சிற்பக் கலையும், யோகமும், காந்தியமும் எல்லாம் ”இந்து” கிடையாது, அவை எல்லாம் வேறு ஏதோ ஒரு ஜந்து! ஆனால் இந்தியாவின் ஏழ்மை, சாதியம், சில பெண்ணடிமை செயல்பாடுகள், சில மூட நம்பிக்கைகள் எல்லாம் சந்தேகமே இல்லாமல் ”இந்து” தான்.

மேற்சொன்ன ஹிந்து அடையாள மறுப்பு வாதங்களை வைப்பவர்கள் உலகின் மற்ற பூதாகாரமான “ஒற்றை பொது அடையாளங்கள்” எவற்றையும் இது போன்று கேள்விக்கு உட்படுத்துவதில்லை என்பது மட்டுமல்ல, அவற்றின் ஆக்கிரமிப்புகளையும், நேரடி வன்முறையையும் நியாயப் படுத்துபவர்களாகவுமே இருக்கிறார்கள் என்பது ஒரு சுவாரஸ்யமான முரண் நகை.

******

சைவம், வைணவம், சாக்தம் ஆகியவை சமயப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். சாதிகள், குலங்கள் ஆகியவை சமூகப் பிரிவுகளுக்கான அடையாளங்கள். தமிழர், தெலுங்கர், வங்காளி, மலையாளி போன்றவை மொழி/பிரதேசம் சார்ந்த அடையாளங்கள். இவை அனைத்தும் ஹிந்து என்ற பொது அடையாளத்திற்கு எந்த வகையிலும் விரோதமானவை அல்ல, மாறாக அதன் உள் அடங்கியவை. ஹிந்து அடையாளம் என்பது இவற்றை அழித்து உருவானதல்ல, தொகுத்து உருவானது. இந்தியர், இலங்கையர், அமெரிக்கர், ஆஸ்திரேலியர் போன்ற தேசிய அடையாளங்களும் ஹிந்து அடையாளத்திற்கு முரணானவை அல்ல, சார்பு நிலை கொண்டவை.

மேலும் இவை ஒவ்வொன்றுமே தங்களுக்குள் இவற்றை விட குறுகிய அடையாளங்களைத் தொகுத்து உள் அடக்கிக் கொண்டிருக்கின்றன என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அலைகடலெனத் திரண்டு வருமாறு அறைகூவி புஜபலம் காட்டும் யாதவர், வேளாளர், நாடார், வன்னியர் போன்ற எல்லா சாதி அடையாளங்களும் இவ்வாறு உருவானவையே. பல உபசாதிகள் ஒன்று கூடி ஒரு பொது சாதி அடையாளத்துடன் முன் நிற்பது இந்திய, தமிழக சமூக வரலாற்றில் நெடுகக் காணக் கிடைப்பது, இன்று வரை தொடர்ந்து கொண்டிருப்பது. இதே போலத் தான் சமயப் பிரிவுகள் தங்களுக்குள் திரண்டு அதைவிடப் பெரிய சமயப் பிரிவுக்குள் இணைகின்றன. காணாபத்யமும், கௌமாரமும் தத்துவ ரீதியாக சைவத்துள் அடங்கும். சைதன்யரின் கௌடிய மரபும், மாத்வரின் துவைதமும், ராமானுஜ சித்தாந்தமும் எல்லாம் வைணவத்துக்குள் அடங்கும். அதே விதிகளின் படி சைவமும், வைணவமும் இந்துமதத்துள் அடங்கும்.

உலகெங்கும் சமய,சமூக,கலாசாரப் பொது அடையாளங்கள் இவ்வாறு தான் அடுக்கு முறையில் உருவாகித் திரள்கின்றன.

இந்த சமூக இயங்கியலைப் புரிந்து கொள்ளாமல், ஹிந்து என்ற அடையாளம் அடித்தளமற்றது என்று கூறி, அந்த பொது அடையாளத்தைத் துறந்து உட்பிரிவு அடையாளங்களை மட்டுமே வைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்வது தற்கொலைக்கு ஒப்பான செயல். இந்து சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு உட்பிரிவையும் அன்னியப் படுத்தி, அவற்றை வலிமையிழக்கச் செய்து, இறுதியில் அவை ஒவ்வொன்றையும் தனித்தனியாக அழிவை நோக்கி இட்டுச் செல்ல வழிவகுக்கும் செயல் அது. இதைத் தான் இந்திய தேசிய விரோதிகளும், மார்க்சிஸ்டுகளும், இந்தியாவை “கட்டுடைக்கும்” மேற்கத்திய அறிவுஜீவிகளும் காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இந்த பிரசாரத்தில் மதிமயங்கும் ஹிந்துக்கள் தங்களுக்கும் தங்கள் சந்ததியினருக்கும் பெரும் தீமையையே கொண்டு வருகிறார்கள் என்பதை உணரவேண்டும்.

சில உதாரணங்களைப் பார்ப்போம்.

முதலாவது நைஜீரியா. நைஜீரியப் படுகொலைகள் குறித்து ஜெயமோகன் எழுதுகிறார் -

”நைஜீரியாவில் இருந்த தொன்மையான மதத்தையும் பண்பாட்டையும் எப்படி விவரிக்கலாம்? வைதிகம், வேதாந்தம்,சமணம்,பௌத்தம் போன்ற பெருமதங்களால் மையத்தில் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டு, சமரசப்படுத்தப்படாத இந்துமதப்பிரிவுகள் எப்படி இருந்திருக்குமோ அப்படி இருந்தது அது. அதாவது பல்வேறு வகையான பழங்குடிகள் அவரவர் தெய்வங்களை வழிபட்டுக்கொண்டு அவரவர் ஆசாரங்களின்படி வாழ்ந்தார்கள்.

அங்கே பலதெய்வக் கோட்பாடு வலுவாக திகழ்ந்தது. அவற்றில் பல இனக்குழுக்கள் உயர்ந்த நாகரீகத்தை அடைந்திருந்தார்கள். ஆனால் அவர்கள் நடுவே தத்துவப் பரிமாற்றம் நிகழவில்லை. ஒருசாராரின் தெய்வங்கள் இன்னொரு சாராருக்கு உவப்பானதாக இருக்கவில்லை. காரணம் தெய்வங்கள் குலதெய்வங்களாக இருந்தனவே ஒழிய அவற்றுக்கு தத்துவார்த்தமான உயர் விளக்கம் அளிக்கப்படவில்லை. அப்படி அளிக்கப்பட்டால் மட்டுமே ஒரு தெய்வம் இன்னொரு இனக்குழுவுக்குச் செல்ல முடியும். இருபது நூற்றாண்டுகளுக்கு முன் இந்தியாவில் நிகழ்ந்தது அதுவே.

இந்தச் சூழலில் அங்கே அரேபியாவில் இருந்து இஸ்லாம் வந்தது. இஸ்லாம் எல்லா பழங்குடி தெய்வங்களையும் நம்பிக்கைகளையும் அழித்து ஒற்றைநம்பிக்கையை முன்வைத்தது. நைஜீரிய வரலாற்றில் பத்தாம் நூற்றாண்டு முதல் எண்ணூறு வருடம் ஒவ்வொருநாளும் குருதி கொட்டியிருக்கிறது..”

இஸ்லாமிய ஆதிக்கத்திற்குப் பின்பு, கிறிஸ்தவ மிஷனரிகளும் காலனியாதிக்காவும் நைஜீரியாவைச் சூறையாட, இன்றைக்கு அமைதிக்கான எல்லாக் கதவுகளும் அடைபட்டு ரத்தவிளாறாகி நிற்கிறது அந்த தேசம். அது ஏன் இந்தியாவுக்கு நிகழவில்லை என்றும் ஜெயமோகன் வார்த்தைகளிலேயே கேட்போம் -

”.. இந்தியாவில் என்ன வேற்றுமை? இந்தியாவை கிறித்தவ மயமாக்கும் காலனியாதிக்க முயற்சிகளை இந்துமதம் அனுமதிக்காமல் எதிர்த்து நின்றது. இஸ்லாமின் ஆதிக்கத்தை வென்றதுபோலவே கிறித்தவ ஊடுருவலையும் அது வென்றது. அதற்கான காரணம் என்ன? மிக எளிய விடைதான். ஏற்கனவே இந்து,சமண,பௌத்த மதங்களால் இந்தியாவின் சிறுவழிபாட்டுமரபுகள் தத்துவார்த்தமாக தொகுக்கப்பட்டுவிட்டிருந்தன. ஆகவே அவை நைஜீரியா போல தனித்தனி வழிபாட்டுக்குழுக்களாக தேங்கி இருக்கவில்லை. ஒன்றுடன் ஒன்று உரையாடி வளர்ந்து ஒருங்கிணைந்த சக்தியாக, வலுவான தத்துவ – வழிபாட்டு அடிபப்டையுடன் விளங்கின. ஆகவேதான் நைஜீரிய பழங்குடி மதங்களுக்கு நிகழ்ந்தது இந்துமதப்பிரிவுகளுக்கு நிகழவில்லை.

அவ்வாறு இந்து,பௌத்த,சமண மதங்கள் செய்தது பெரும் வரலாற்றுப்பிழை என்று இப்போது மேலைநாட்டுப் பல்கலைக் கழகங்கள் ஆய்வேடுகள் உருவாக்குகிறார்கள். கருத்தரங்குகள் நிகழ்த்துகிறார்கள். இந்தியப்பண்பாட்டின் வேர்களை அழித்துவிட்டார்களாம். சொல்லாமல் இருப்பார்களா என்ன?”

அடுத்த உதாரணம் இந்தோனேசியாவில் உள்ள போர்னியோ தீவு. இந்தத் தீவில் வாழும் பழங்குடியினர் Hindu Kaharingan என்றழைக்கப்படும் தங்களுக்கே உரிய இந்துமதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள் என்று நியூயார்க் டைம்ஸ் இதழில் சமீபத்தில் வந்த ஒரு கட்டுரை விவரிக்கிறது. இந்தப் பழங்குடியினர் இயற்கை வழிபாட்டையும், குறிசொல்லுதல் போன்ற சடங்குகளையும் கைக் கொண்டவர்கள். இவர்களுக்கு இந்து புராணங்களையோ, சிவன், விஷ்ணு,சக்தி போன்ற தெய்வங்களையோ பற்றி எதுவும் தெரியாது. இவர்கள் எப்படி இந்துக்களாவார்கள்? இந்தோனேசிய அரசு இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், இந்துமதம் ஆகிய பெருமதங்களையே அங்கீகரிக்கிறது; உதிரியான பழங்குடி நம்பிக்கைகளுக்கு அதிகாரபூர்வ அங்கீகாரம் கிடையாது; இவர்கள் ஏதாவது ஒரு பெருமதத்துடன் தங்களை இணைத்துக் கொண்டே ஆகவேண்டிய கட்டாயம். எனவே தங்களை இந்துமதப் பிரிவாக அழைத்துக் கொள்கிறார்கள் என்று ஒரு கருத்து நிலவுகிறது.

இதில் ஓரளவு உண்மையும் இருக்கலாம். ஆனால் முக்கியமான விஷயம் என்னவென்றால் இவர்கள் தங்கள் சுதந்திரத்தையும் கலாசாரத்தையும் பண்பாட்டுத் தொடர்ச்சியையும் இழக்கவில்லை என்பதே. மற்ற ஆபிரகாமிய மதங்களுக்கு மாறுவது பொருளாதார ரீதியாக அவர்கள் முழுவதும் சுரண்டப் படுவதற்கே வழிவகுத்திருக்கும். தங்கள் மரபையும் தனித்துவத்தையும் முற்றாகவே இழந்து ஒரு தீராத ரணத்தையும், நிரந்தர வடுவையும் சுமக்கும் நிலைக்கு அவர்கள் ஆட்பட்டிருப்பார்கள்.

கிறிஸ்தவ மிஷநரிகள் எங்கள் சமுதாயத்தின் மீது ஆக்கிரமிப்பு செய்து அதை அடிமைப் படுத்தத் துடித்தார்கள். அப்போது இந்தோனேசியாவின் மற்ற இந்துக்கள் தான் எங்களுக்கு ஆதர்சமாகவும் ஆதரவாகவும் இருந்தார்கள் என்று இந்த பழங்குடி சமுதாயத்தின் குலகுரு கூறுகிறார். சந்தர்ப்பவாதம் தங்களை ஹிந்துக்களாகியது என்பதை மறுக்கிறார் அவர். “பல நூற்றாண்டுகளாக நாங்கள் இந்துக்களாகத் தான் இருந்து வந்திருக்கிறோம். ஆனால் சமீபகாலமாக, 20-30 ஆண்டுகளாகத் தான் அதை அறிந்து கொண்டோம்” என்கிறார். Dayak என்ற அந்தப் பழங்குடியினர் பின்பற்றும் சமயம் 4ம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்தோனேசியாவிற்கு வந்த இந்து மதத்தின் ஆதார நம்பிக்கைகளில் இருந்து தான் உருவானது என்று வரலாற்று ஆதாரங்களையும் அவர் அளிக்கிறார்.

மொத்தத்தில் ஹிந்துமதமே தங்கள் சமூக, ஆன்மிக விடுதலைக்கும், உரிமைகளுக்கும் அரணாக நின்று காக்க வல்லது என்பதில் அந்தப் பழங்குடியினர் சமூகம் மிக உறுதியாக நின்று கொண்டிருக்கிறது. இந்தோனேசியாவின் மற்றொரு பகுதியான பாலித் தீவின் இந்துக்கள் ராமாயணம், மகாபாரதம், கோயில்கள்,பூஜைகள்,விரதங்கள் ஆகிய கூறுகள் கொண்ட புராண இந்துமதத்தைக் கடைப்பிடிப்பவர்கள். இந்த இரண்டு தீவுகளிலும் வாழும் இந்துக்களுடையே இணக்கமான கலாசாரப் பரிவர்த்தனைகளும் நடந்து வருகின்றன என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். இன்னும் சில வருடங்களில் Kaharingan பிரிவினர் தங்கள் மரபிலிருந்தே சிவலிங்க வழிபாட்டுக்குள் வரக் கூடும். தங்களுக்கான ராமாயணத்தைக் கண்டடைந்து அதை நாடகமாக நடிக்கவும் கூடும்!

மற்றொரு உதாரணம் ஐரோப்பிய யூனியன். இரண்டாம் உலகப் போரில் தங்களை ஜன்ம விரோதிகளாகக் கருதி ரத்தக் களறியில் ஈடுபட்ட தேசங்கள், இன்று ”ஐரோப்பிய யூனியன்” என்ற பெயரில் அரசியல், பொருளாதார, வர்த்தக லாபங்களைக் கருதி ஒன்றிணைந்து நிற்கின்றன. இன்றைய உலகில் இந்த அடையாளம் ஒரு மாபெரும் வலிமையையும் பாதுகாப்பையும் அந்த தேசங்களுக்கு அளிக்கிறது. ஐரோப்பிய யூனியனின் உருவாக்கத்திற்கு என்ன “வரலாற்று நியாயம்” உள்ளது என்று எந்த மேதாவியும் வாயைத் திறப்பதில்லை. ஆனால் மூவாயிரம் வருடங்களுக்கு முன்பு நடந்ததாகச் சொல்லப் படும் “இன மோதல்களின்” அடிப்படையில் தான் இந்தியாவும், இந்து மதமும் என்றென்றும் இயங்க வேண்டும் என்று இவர்கள் உபதேசம் செய்கிறார்கள். இது என்ன நியாயமோ?

இந்த உதாரணங்களில் இருந்து நாம் என்ன பாடம் கற்றுக் கொள்ளப் போகிறோம்? உலகளாவிய சூழலில் நம்மை பகாசுர சக்திகள் விழுங்கக் காத்துக் கொண்டிருக்கையில் அவற்றுக்கு ஈடாக அவற்றை விழுங்காவிட்டாலும், சமமாக நின்று போரிடும் அளவுக்கு வலிமையுள்ள பீமசேனனாக ஆவது தான் நாம் வாழும் வழியே தவிர, ஒவ்வொரு நாளும் தனித்தனியாக அவற்றிற்குத் தீனியாக ஆகிக் கொண்டிருப்பதல்ல.

ஹவாய் தீவுகள் முதல் நியூசிலாந்து தீவுகள் வரை உலகின் 92 நாடுகளில் இந்துக்கள் வசிக்கிறார்கள். உலக அளவில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 100 கோடி (1 பில்லியன்). எண்ணிக்கை அளவில் உலகின் மூன்றாவது மிகப் பெரிய மதமாக இந்து மதம் விளங்குகிறது. இந்த மாபெரும் உலகளாவிய அடையாளம் அளிக்கும் வலிமையும்,பெருமிதமும் சாமானியமானதா என்ன? தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வாழும் ஒரு இந்து, ஏதோ கிறுக்கர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக தனது இந்து அடையாளத்தை மறுதலிப்பது என்பது உலகளவில் தனக்கான இடத்தை ஒரு மாபெரும் வட்டத்திலிருந்து ஒரு சிறு புள்ளிக்கு நகர்த்திக் கொள்வதற்கு ஒப்பாகும். அத்தகைய புள்ளிகள் வெறும் புள்ளிகளாகவே நெடுங்காலம் நீடிப்பதில்லை. அவை ஒரு வட்டத்தில் அடங்கியே ஆக வேண்டும் என்பது உலக இயற்கை விதி.

அதனால் தான் ”திருப்பெருந்துறையுறை சிவபெருமானே” என்று பாட ஆரம்பித்த மாணிக்கவாசகர் அங்கேயே நின்றுவிடவில்லை. “தண்ணார் தமிழளிக்கும் தண்பாண்டி நாட்டானை” என்றும், “தென்னவன் சேரலன் சோழன் சீர்பதங்கள் வரக் கூவாய்” என்றும், “தென்னாடுடைய சிவனே போற்றி” என்றும், ”கயிலை மலையானே போற்றி” என்றும் பாடி, இறுதியில் “என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்று முடிக்கிறார். ”சேர வாரும் செகத்தீரே” என்று தான் திருச்சிக்காரர் தாயுமானவர் அறைகூவுகிறார். பாண்டிச்சேரியில் கனகலிங்கம் வசித்த தாழ்த்தப் பட்டவர் குடியிருப்புக்குச் சென்ற மகாகவி பாரதி, அங்குள்ள முத்துமாரி அம்மனைக் கண்டு மெய்மறந்து “உலகத்து நாயகியே எங்கள் முத்துமாரியம்மா” என்று பாடினார்; ”உள்ளூர் தெய்வமே” என்று பாடவில்லை.

ஹிந்து மதம் உலக மதம்.
ஹிந்து அடையாளம் தனித்துவமிக்கதொரு உலக அடையாளம்.
அதனை மறுக்காதிருப்போம்.
மறவாதிருப்போம்.

*******

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் நண்பர் ஒருவர் இப்படிக் கேட்டிருந்தார்.

அந்தக் கேள்வியை மையமாகக் கொண்டு அடுத்த பாகத்தில் சந்திப்போம்.

http://www.tamilhindu.com/2011/11/hindu_identity_what_and_why_2/

No comments:

Post a Comment