Monday, February 20, 2012

ஹிந்துத்துவம் – ஒரு கண்ணோட்டம்


முந்தைய பகுதிகள்:

தொடர்ச்சி …

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன், ஹிந்து மதத்தின் பன்முகத் தன்மை என் சிந்தனை முறைக்கு பொருத்தமாக இருக்கிறது என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் ஹிந்துத்வம் என்றால் என்ன என்று யாராவது சொல்ல முடியுமா? நான் ஹிந்துத்வத்தை எதிர்க்கிறேன் (என்று நினைக்கிறேன்). இது என்னவோ எல்லாருக்கும் தெரிந்த, ஆனால் ஒருவராலும் வரையறுக்க முடியாத விஷயம் போலிருக்கிறது”- சில வாரங்கள் முன்பு ஒரு கூகிள் குழும விவாதத்தில் ஒரு நண்பர் இப்படிக் கேட்டிருந்தார்.

சென்ற பகுதியில் இந்தக் கேள்வியுடன் நிறுத்தியிருந்தோம். அங்கிருந்து தொடங்குவோம்.

ஹிந்துத்துவம் என்பதற்கு ஒரு சமகாலத்திய பாடப்புத்தக வரையறை தரவேண்டும் என்றால் இப்படிச் சொல்லலாம் -

ஹிந்துப் பண்பாட்டில் வேர்கொண்ட கலாசார-தேசியவாத, சமூக, அரசியல் சித்தாந்தம்.

இந்த வரையறையில் உள்ள சொற்கள் ஒவ்வொன்றும் முக்கியமானவை. இதற்கு முன்பு ஹிந்து என்ற சொல்லிற்கு நான் அளித்திருந்த பொது வரையறையும் இங்கு நினைவூட்டுகிறேன் -

ஹிந்து என்ற பெயர் ஒரு மதத்தை (religion), கலாசாரத்தை (culture), தத்துவ ஞான மரபை (philosophy), வாழ்க்கை முறையை (way of life), இவை அனைத்தையும் உள்ளடக்கிய பண்பாட்டை (civilization) குறிக்கிறது.

இரண்டையும் இணைத்து, ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும் உள்ள உறவும், அவற்றின் தனித்தன்மைகளும் புலப்படும்.

ஹிந்துத்துவம் என்ற சொல்லை உருவாக்கியவர் வீர சாவர்க்கர். அந்தமான் கடுஞ்சிறையில் வாடிய பொழுதும் தேசத்தையும் தர்மத்தையும் பற்றிய சிந்தனைகள் கனலாக அவரது உள்ளத்தில் எரிந்து கொண்டிருந்தன. 1921ம் ஆண்டு அவரது விடுதலைக்குப் பின் ஹிந்துத்துவம் என்ற பெயரில் அவை நூல் வடிவில் வெளிவந்தன. இந்தியாவின் பழம்பெரும் பண்பாட்டின் அஸ்திவாரத்தின் மீது கட்டப் பட்ட, புத்துயிரும் புது மலர்ச்சியும் கொண்ட நவீன இந்து தேசியத்திற்குக் கட்டியம் கூறியது இந்த நூல். இந்த நூலின் முகப்பில் காணப்படும் சுலோகத்தையும் சாவர்க்கரே இயற்றினார் -

ஆஸிந்து ஸிந்து பர்யந்தா யஸ்ய பாரத பூமிகா |
பித்ருபூ: புண்யபூஸ் சைவ ஸ வை ஹிந்துரிதி ஸ்ம்ருத: ||

சிந்துவில் இருந்து கடல் வரை பரந்த பாரத பூமியைத் தங்கள் தந்தையர் நாடாகவும், புண்ணிய பூமியாகவும் கருதுவோரே ஹிந்துக்கள்.

ஹிந்துத்துவம் என்பதை பண்பாடும் தேசியமும் இரண்டறக் கலந்த ஒரு கருத்தாக்கமாகவே சாவர்க்கர் முன்வைக்கிறார். தனது வாதங்களுக்கு உரம் சேர்க்க ரிக்வேதம் தொடங்கி, அர்த்த சாஸ்திரம், புராணங்கள், மத்திய கால இந்து, இஸ்லாமிய ஆவணங்கள் என்று பல வரலாற்றுச் சான்றுகளையும் இந்த நூலில் அளித்துள்ளார். இருபதாம் நூற்றாண்டு ஐரோப்பிய சிந்தனை முன்வைத்த தேசியவாதத்தையும் (idea of nation-state), இந்திய கலாசார ஒற்றுமையையும் கலந்து இப்படி ஒரு சித்தாந்தத்தை சாவர்கர் முன்வைத்தார் என்று இன்றைய அரசியல் சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் பகுப்பாய்வு செய்கிறார்கள். இதைப் பிடித்துக் கொண்டு இன்னும் ஒரு சாரார் ஹிந்துத்துவத்தின் வேர் இந்திய சிந்தனையில் இல்லை, ஐரோப்பிய சிந்தனையில் தான் உள்ளது, எனவே அது ஆசாரக் குறைவு என்று தீர்ப்பு வழங்கத் துடிக்கிறார்கள்.

நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் எல்லா தேசபக்த சிந்தனையாளர்களும், புரட்சியாளர்களும் மாஜினி, கரிபால்டி, பிஸ்மார்க் போன்ற நவீன ஐரோப்பிய தேசிய நாயகர்களை ஆதர்ச வீரர்களாகக் கருதினார்கள். அது இயல்பானதே. அர்ஜுனனும், ராமனும், கண்ணனும், சிவாஜியும், குரு கோவிந்தரும் போன்ற புராண, சரித்திர வீரர்கள் மட்டுமல்ல, தங்கள் நாட்டுக்காகப் போராடி வென்ற சுதந்திர வீரர்களின் சமகால உதாரணங்களும் அவர்களுக்குத் தேவைப் பட்டன. ஆங்கிலக் கல்வி மூலம் கற்ற சரித்திரம் ஐரோப்பிய தேசியவாத சிந்தனைகளையும் அவர்கள் மனங்களில் விதைத்தது. மகாகவி பாரதி கூட மாஜினியின் பிரதிக்கினை குறித்தும், பெல்ஜியத்தை வாழ்த்தியும் கவிதை எழுதியிருக்கிறார். எனவே இதற்கு சாவர்க்கர் மட்டும் விதிவிலக்கல்ல.

சாவர்க்கர் மாஜினியை ஆதர்ச தியாக வீரராகக் கருதினார் என்பது உண்மை தான். ஆனால் ஐரோப்பிய தேசியவாதத்தின் பக்க விளைவுகளான இனவெறி, அதிகாரப் பரவல், ராணுவ ஆக்கிரமிப்பு, சர்வாதிகாரம் ஆகிய குறுக்கல்வாத அணுகுமுறைகளை அவர் முற்றகவே நிராகரித்தார். இன்றைக்கு ஊடகங்களிலும், கல்விப் புலங்களிலும் இந்துத்துவத்தைக் கட்டுடைப்பதாகக் கூறி இந்துத்துவத்தை இந்த எதிர்மறை சித்தாந்தங்களுடன் தொடர்பு படுத்திப் பேசும் கருத்தாக்கங்கள் உள்நோக்கம் கொண்ட திரிபுவாதங்கள் அன்றி வேறில்லை (பார்க்க: பாசிசம், நாசியிசம், சோசலிசம், இந்துத்வம்).

தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியவர் சாவர்க்கர். அவரது குடும்பமே இந்திய தேச விடுதலை வேள்வியில் தன்னை முழுமையாக ஆகுதியாக அர்ப்பணித்த பெருமைக்குரியது. ஹிந்துப் பண்பாட்டை பெரிதும் மதித்த சாவர்கள் மத ரீதியாக ஒரு நாத்திகர். தனது மரணத்திற்குப் பிறகு வைதீக சடங்கு எதுவும் செய்யப் படக்கூடாது என்று உயில் எழுதியவர். தலித்துகளின் உரிமைப் போரை மிகப் பெருமளவில் முன்னெடுத்து ‘புத்தருக்கு ஒப்பான பெரியவர்’ என்று அம்பேத்கரால் பாராட்டப் பட்டவர்.

உலகம் இனவாதப் பேயின் குரூர கிருத்யங்களுக்கு சாட்சியாக நின்ற 1920களிலும் 30களிலும் எழுதப் பட்ட சாவர்க்கரின் கீழ்க்கண்ட வரிகளே அவரது மானுட சமத்துவப் பார்வையின் விசாலத்திற்குச் சான்று பகரும் -

“சொல்லப் போனால், உலகெங்கும் ஒரே இனம் தான், மனித இனம். ஒரே மனித ரத்தம் தான் அதை உயிர்த்துடிப்புடன் வைத்திருக்கிறது. மற்ற எல்லா வாதங்களும் காரிய வாதமாகச் சொல்லப் படுபவையே. தற்காலிகமாகவோ அல்லது சார்பு நிலை கொண்டோ கூறப்படுபவையே. ஒரு இனத்திற்கும் வேறோர் இனத்திற்கும் இடையில் செயற்கையாக நீங்கள் எழுப்பும் தடைகளை எல்லாம் இயற்கை இடையறாது தகர்த்தெறிந்து கொண்டே தான் இருக்கிறது. ரத்தக் கலப்பை விதிமுறைகள் போட்டுத் தடுப்பது என்பது மணல் மேல் கோட்டை கட்டுவது போல. பாலியல் ஈர்ப்பு என்பது எல்லா இறைத்தூதர்களும் போடும் கட்டளைகளை விடவும் வலிமை வாய்ந்தது என்பது தொடர்ந்து நிரூபிக்கப் பட்டு வந்திருக்கிறது.. ஒரு மனிதனது நாடி நரம்புகளில் மனிதகுலம் முழுவதின் ரத்தமும் ஓடுகிறது என்பதே உண்மையாக இருக்கும். வட துருவம் முதல் தென் துருவம் வரை மானுடத்தின் அடிப்படை ஒருமையே சத்தியமானது. மற்றவை அனைத்தும் சார்பு நிலை கொண்டவைகளே.”

- ஹிந்துத்துவம், இரண்டாம் அத்தியாயம்.

ஹிந்துத்துவத்தை ஒரு உறுதியான சித்தாந்த கட்டுமானமாக சாவர்க்கர் முன்வைத்தார்; ஆனால் அதற்கான விதை நவீன இந்திய தேசிய மறுமலர்ச்சியின் போதே ஆழமாக ஊன்றப் பட்டு விட்டிருந்தது. சாவர்க்கருடன் சேர்த்து இன்னும் மூன்று பேர் குறிப்பிடத்தக்கவர்கள் – சுவாமி தயானந்த சரஸ்வதி (ஆரிய சமாஜம்), சுவாமி விவேகானந்தர், ஸ்ரீ அரவிந்தர். இந்த மகான்களின் பெயரை வேண்டுமென்றே நான் உள்ளிழுக்கவில்லை என்பதையும் சொல்லியாக வேண்டும். ஹிந்துத்துவத்தை சித்தாந்த ரீதியாக எதிர்மறையாக விமர்சித்து பேராசியர் ஜ்யோதிர்மய சர்மா எழுதிய Hindutva என்ற நூலில் (2004) இந்த நால்வரின் கருத்துக்களையும், நிலைப்பாடுகளையும் எடுத்து விரிவாக அலசுகிறார். இன்றைய ஹிந்துத்துவ அரசியல் கொள்கைகளின் மைய கருத்தாக்கங்கள் அனைத்திற்கும் மூலம் இந்த நால்வரின் சிந்தனைகளில் தான் உள்ளது என்று அறுதியிட்டுக் கூறுகிறார். தமிழகத்தில் மகாகவி பாரதி, வ.வே.சு ஐயர்,சுப்பிரமணிய சிவா போன்றோர் இதே சிந்தனைகளை எதிரொலித்தவர்கள். காந்தி, தாகூர், திலகர், அம்பேத்கர், மதன் மோஹன் மாளவியா, சுபாஷ் சந்திரபோஸ், வல்லபாய் படேல் ஆகியோரது அரசியல்,சமூக கொள்கைகளிலும் பல ஹிந்துத்துவ கூறுகளை நாம் காணமுடியும்.

1920களில் வீர சாவர்க்கர் ஹிந்து மகா சபா என்ற அரசியல் கட்சியின் தலைவராகி தனது சிந்தனைகளுக்கு அரசியல் ரீதியாக செயல் வடிவம் கொடுக்கத் தொடங்கினார். தமிழகத்தில் பல இடங்களில் அவர் உரை நிகழ்த்தியிருக்கிறார். ஹிந்து மகா சபையை முழுமையாக ஆதரித்தவர்களில் வ.வே.சு ஐயர், சேலம் விஜயராகவாச்சாரியார், தலித் தலைவர் எம்.சி.ராஜா, வ.உ.சிதம்பரம் பிள்ளை, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஆகியோர் அடங்குவர். ஹிந்துத்துவத்தின் மையக் கருத்துக்கள் தேசபக்தி, தெய்வ பக்தி, தமிழ்ப் பண்பாடு ஆகியவற்றுடன் முற்றிலும் இயைந்திருந்தது என்று இந்தப் பெரியோர்கள் கருதியதே அவர்கள் ஹிந்து மகா சபைக்கு ஆதரவளித்ததற்குக் காரணம்.

1925ல் டாக்டர் ஹெக்டேவார் தொடங்கிய ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம், ஹிந்துத்துவத்தை செயல்முறை அளவில் பாரத நாடெங்கும் எடுத்துச் சென்ற மாபெரும் இயக்கமாகும். சங்கத்தின் இரண்டாவது தலைவராகிய குருஜி கோல்வல்கர் அந்த அமைப்பின் இயங்கு தளங்களை மிகப் பரந்த அளவில் விரிவு படுத்தி சங்க பரிவாரம் எனப்படும் சகோதர அமைப்புகளை உருவாக்கினார். மாணவர் அமைப்பு, தொழிற் சங்கம், துறவியர் பேரவை, பக்தர் பேரவை என்று பல்வேறு வகைப்பட்ட ஒருங்கிணைப்பு முயற்சிகளையும் நீண்டகால அளவில் இந்த அமைப்புகள் வெற்றிகரமாகத் தொடர்ந்து செய்து வருகின்றன. கல்வி, மருத்துவம், சமூக சேவை, வனவாசிகள் மேம்பாடு, இயற்கைப் பேரிடர் நிவாரணம் என்று பல தளங்களிலும் தன்னலமின்றிப் பணியாற்றும் ஏராளமான காரிய கர்த்தர்களை சங்கபரிவார அமைப்புகள் மிகப் பெரிய அளவில் உருவாக்கியுள்ளன.

சியாமா பிரசாத் முகர்ஜி

1951ல் சியாமா பிரசாத் முகர்ஜி நிறுவிய பாரதீய ஜன சங்கம், சுதந்திர இந்தியாவின் பாராளுமன்ற ஜனநாயக சூழலில் ஹிந்துத்துவ கோட்பாடுகளை மையப் படுத்தி உருவான அரசியல் கட்சி ஆகும். சிறந்த சமூக சிந்தனையாளரான தீனதயாள் உபாத்யாயாவின் வழிகாட்டுதலில் அந்தக் கட்சி வளர்ந்து பின்னர் 1980களில் பாரதீய ஜனதா கட்சியாக வடிவம் கொண்டது. தீனதயாள் உபாத்யாயா 1960களில் உருவாக்கிய ஒருங்கிணைந்த மானுடவாதம் (Integral Humanism) என்ற சித்தாந்தத்தையே பா.ஜ.க அதிகாரபூர்வமாக இன்றும் தனது அரசியல் கொள்கையாக ஏற்றுள்ளது. சில காந்திய சமூக, பொருளாதாரக் கொள்கைகளையும், சர்வதேச அளவில் பொதுவான மானுட அறம் சார்ந்த மதிப்பீடுகளை வலியுறுத்திய Humanism கருத்தாக்கங்களையும் ஹிந்துத்துவ கோட்பாட்டுடன் இணைக்கும் முயற்சியே தீனதயாள் உபாத்யாய உருவாக்கிய சித்தாந்தம் ஆகும். தொடக்கத்திலிருந்தே நேருவிய சமூக, பொருளாதாரக் கொள்கைகளை ஹிந்துத்துவ அரசியல் தரப்பு கடுமையாக விமர்சித்து வந்துள்ளது. காங்கிரஸ் மற்றும் இடது சாரிக் கட்சிகளின் இந்து விரோதப் போக்கு, போலி மதச்சார்பின்மை, சிறுபான்மை ஓட்டு வங்கி அரசியல் ஆகிய கொள்கைகளையும் தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

ஒரு பறவைப் பார்வையில் ஹிந்துத்துவ கண்ணோட்டம் என்பதை சுருக்கமாக இவ்வாறு பட்டியலிடலாம்.

>>> கலாசார தேசியவாதம்: இந்தியாவின் சமூக, பிரதேச, மொழி சார்ந்த பன்முகத் தன்மைகளுக்கு மத்தியிலும் இந்தியாவை ஒரே தேசமாகப் பிணைக்கும் கலாசார பண்பாட்டுச் சரடு உள்ளது. அதை வலுப்படுத்துவதே இந்தியாவின் ஒட்டுமொத்த பாதுகாப்புக்கும், வளர்ச்சிக்கும் நன்மை பயக்கக் கூடியது. ஹிந்து, பௌத்த, சமண, சீக்கிய மதங்கள் இயல்பாகவே எல்லாவிதங்களிலும் இந்தச் சரடில் பொருந்துபவை. கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள் அன்னியமானவை. வழிபாட்டு ரீதியாக அன்னிய மதங்களைக் கடைப்பிடித்தாலும், காலங்காலமாக இந்தியாவையே தாய்நாடாகக் கொண்ட இந்திய கிறிஸ்தவ, இஸ்லாமியர்கள் அதன் தேசியப் பண்பாட்டை மதித்துப் போற்ற வேண்டும். அதனை மறுதலிக்கவோ, அதற்கு எதிராகச் செயல்படவோ கூடாது.

>>> காலனியத் தாக்க நீக்கம் (Decolonization): பிரிட்டிஷ் ஆட்சியின் விளைவாகவும், மெகாலே கல்வி முறையின் மூலமாகவும் பீடிக்கப் பட்டுள்ள இந்தியாவின் சிந்தனை அந்தத் தளைகளை அறுத்து இந்தியாவின் சுயமான தேசியப் பண்பாட்டு வேர்களைக் கணடடைய வேண்டும். பிரிட்டிஷ் ஆட்சி மட்டுமல்ல, இந்தியாவின் மீதான இஸ்லாமியப் படையெடுப்பும், இஸ்லாமிய ஆட்சியும் கூட இந்தியப் பண்பாட்டை உருக்குலைத்து, சீரழித்த காலனிய ஆக்கிரமிப்பு தான். அந்த ஆக்கிரமிப்பின் தாக்கங்களிலிருந்தும் வெளிவர வேண்டும்.

>>> இந்துப் பெருமிதம்: இந்து ம்தமும், பண்பாடும் உலகின் வேறெந்த மதத்தையும் பண்பாட்டையும் போலவே பெருமையும், உயர்வும் மிக்கது. காலனியம் விளைவித்த தாழ்வுணர்ச்சிகளாலேயே அந்தப் பெருமைகளை உணராதிருந்தோம். அந்தத் தாழ்வுணர்ச்சியைக் கைவிட்டு இந்து ஆன்மிகம், அறிவியல், கலைகள், வரலாறு ஆகியவற்றை பெருமித உணர்வுடன் பறைசாற்ற வேண்டும்.

>>> இந்து சமூக ஒற்றுமை: பல உன்னதங்களைக் கொண்டிருந்த போதும், இந்து சமுதாயம் தொடர்ந்து அடிமைப் பட்டு ஆக்கிரமிப்புக்கு உள்ளானதற்கு சமூக ஒற்றுமையின்மையே முக்கிய காரணம். இந்து சமுதாயத்தின் சமுதாயப் பிரிவுகள் தம்மளவில் சக்தியும், அதிகாரமும் பெற்றால் மட்டும் போதாது. அது ஒட்டுமொத்த இந்து சமுதாய சக்தியாகவும், அரசியல் அதிகாரமாகவும் பரிணமிக்க வேண்டும்.

>>> சமுதாய சமத்துவம்: உலகின் மற்ற சமுதாயங்கள் போலவே இந்து சமுதாயத்திலும் சுரண்டலுக்கு ஆட்படுத்தப் பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளனர். அவர்களைக் கைதூக்கி விடுதலும், சம உரிமைகளை அளித்தலும் அனைத்து இந்துக்களின் தார்மீகக் கடமை. அது இந்து ஒற்றுமையை மேன்மேலும் வளர்க்கும் செயல்பாடும் ஆகும். இந்து சமுதாயத்தின் எல்லா பிரிவினருக்கும் உரிய அங்கீகாரமும், பிரதிநிதித்துவமும் அளிக்கப் படவேண்டும்.

>>> இந்து உரிமைகள்: சுதந்திர இந்தியாவின் நேருவிய போலி மதச்சார்பின்மைக் கொள்கைகள் இந்திய அரசு அமைப்பின் ஒரு பகுதியாகவே மாறி, தொடர்ச்சியாக இந்துக்களின் உரிமை இழப்புகளுக்குக் காரணமாகியுள்ளன. காஷ்மீரிலும் வடகிழக்கிலும் இந்துக்கள் வாழ்வுரிமை பறிக்கப்பட்டு துரத்தப்படுவது, ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் செய்யப் படும் கிறிஸ்தவ மதமாற்றங்கள், சிறுபான்மையினர் என்ற பெயரில் பிற மதத்தினருக்கு கல்வி போன்ற துறைகளில் வழங்கப் படும் சலுகைகள் என்று பல உதாரணங்களைக் கூறலாம். ஜனநாயக ரீதியாக இந்த பிரசினைகளை வலியுறுத்திப் போராட வேண்டும். இந்தியாவிற்கு வெளியே மற்ற நாடுகளிலும் இந்துக்கள் உரிமை இழப்புகளுக்கும், கொடுமைகளுக்கும், அடக்கு முறைகளுக்கும் ஆளாகின்றனர். உலகளவில் இந்த பிரசினைகள் கவனப் படுத்தப் பட்டு தீர்வு காணப் பட வேண்டும்.

இது ஒரு பொதுவான கோட்டுச் சித்திரம். மற்றபடி ஹிந்துத்துவர்கள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் தரப்புகளுக்கு உள்ளாக பல்வேறு வகைப்பட்ட கருத்தோட்டங்கள் உள்ளன. பல்வேறு இயக்கங்களும், இயக்கங்கள் எதையும் சாராத தன்னிச்சையான சிந்தனையாளர்களும் உள்ளனர்.

உதாரணமாக, பிற மதங்கள் பற்றிய விமர்சனப் பார்வை. சங்க பரிவார் இதனை தேசியத்துடன் தொடர்புடைய பிரசினையாக மட்டுமே பார்க்கிறது. மதமாற்றத்தில் ஈடுபட்டு தேசப் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்காத வரை கிறிஸ்தவ மதத்தைப் பற்றி நமக்குக் கவலையில்லை, அதைப் பற்றித் தெரிந்து கொள்ள அவசியமும் இல்லை என்பதே இந்த நிலைப்பாடு. கிறிஸ்தவ இறையியல் கோட்பாடுகளை அலசி ஆராய்ந்து விமர்சிப்பதோ, பைபிளில் உள்ள முரண்களை வெளிக் கொணர்வதோ, கிறிஸ்தவ வரலாற்றின் இருண்ட பக்கங்களை எடுத்துக் காட்டுவதோ, கிறிஸ்தவ மதக் கொள்கைகள் குறைபாடுள்ளவை என்று நிறுவுவதோ எதுவும் இதில் கிடையாது. பொதுவாக இவற்றை செய்பவர்கள் சங்க பரிவாரத்துடன் தொடர்பில்லாத தனிப்பட்ட சிந்தனையாளர்களும், ஆராய்ச்சியாளர்களும் தான். ஆனால் ஒட்டுமொத்தமாக எல்லாம் ஹிந்துத்துவம் என்றே ஒருகுடைக் கீழ் கொண்டு வரப்படுகிறது. அது போக, இந்த விஷயங்களைப் பற்றி நடுநிலையுடன் யாராவது பேசினால் கூட, உடனடியாக அவர்களை ஹிந்துத்துவர்கள் என்று முத்திரை குத்துதலும் நடந்து கொண்டிருக்கிறது.

இந்த ரீதியில் ஆயுர்வேத மருத்துவத்தின் மேன்மை பற்றிய சொற்பொழிவுகளையும், ஏழாம் அறிவு திரைப்படத்தையும் கூட ஹிந்துத்துவம் என்று சொல்லலாம் (“ஏழாம் அறிவில்” கடைசியில் வரும் நீண்ட வசனத்தில் மதமாற்றம் பற்றியும் ஒரு சிறுகுறிப்பு வருகிறது). பழைய இந்தியக் கல்விமுறை பற்றி உருவாக்கப் பட்டிருந்த பொது அபிப்பிராயங்களைத் தகர்த்து, அதன் உண்மையான சிறப்பம்சங்களை எடுத்துரைத்த காந்திய அறிஞர் தரம்பால் அவர்களின் புத்தகங்களையே கூட ஹிந்துத்துவ பிரசாரம் என்று சொல்லி விடலாம்.

உண்மையில், இந்து விரோதிகள் அதைத் தான் செய்கிறார்கள். சாதாரண மக்களிடம் பொதுவாக எழும் நியாயமான, இயல்பான ஹிந்து உணர்வைக் கூட ஹிந்துத்துவ அரசியல் இயக்கங்களின் நிலைப்பாடுகளோடும், சில உதிரிக் குழுக்கள் (பஜ்ரங் தள், ராம் சேனா) செய்யும் அடாவடிகளோடும் மீண்டும் மீண்டும் சம்பந்தப் படுத்திப் பேசுவதன் மூலம், அந்த இயல்பான ஹிந்து உணர்வு கூட வரவிடாமல் செய்ய முயல்கிறார்கள்.

சமீபத்தில் சென்னை நண்பர் ஒருவர் கூறிய ஒரு சம்பவம். அவர் சார்ந்திருக்கும் ஆன்மீக அமைப்பைச் சார்ந்த இளைஞர்கள் நகரில் பல இடங்களில் உள்ள பல்வேறு கோயில்களுக்குச் சென்று பஜனைகள் நடத்துவது, பக்தி புத்தகங்களை வினியோகிப்பது என்று தொடர்ந்து செய்து வருகின்றனர். வழக்கமாக நகர் மையத்திலிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் போகவேண்டுமா , ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் உள்ள சிறு கோயில்களுக்கும் செல்லலாமே என்று அந்தக் குழுவில் உள்ளவர் ஒருவர் யோசனை கூற, அதன்படி தலித் மக்கள் வாழும் பேட்டைகளிலும் குப்பங்களிலும் உள்ள அம்மன் கோயில், முனீஸ்வரன் கோயில்களுக்கும் சென்று வருகிறார்கள். அப்படி ஒரு முறை அம்மன் கோயில் ஒன்றில் அவர்கள் வழிபாடு செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று பத்துப் பதினைந்து பேர் அங்கு வந்து கூச்சல் போட ஆரம்பித்தார்கள். அங்கு கூடியிருந்த மக்களிடம் “இவர்கள் தான் குஜராத்தில் முஸ்லிம்களைக் கொன்றார்கள்; கலவரம் செய்தார்கள். ஒரிஸ்ஸாவில் கிறிஸ்தவ கன்யாஸ்திரீகளை தாக்கினார்கள்” என்று முஷ்டியை உயர்த்தி சுட்டிக் காட்டினார்கள். “பார்ப்பனீய சக்திகளே வெளியேறுங்கள்!” என்று கோஷம் வேறு. பஜனைக் கார இளைஞர்களும், யுவதிகளும் வெலவெலத்துப் போய்விட்டனர். அவர்களுக்கு தலை கால் எதுவும் புரியவில்லை. அங்கிருந்த பொதுமக்களில் சிலர் கூச்சல் போட்டவர்களை விலக்கி விட்டு, இளைஞர் குழுவினரையும் அமைதிப் படுத்தினார்களாம். கூச்சல் போட்டவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் என்று பின்னர் தெரிய வந்ததாக நண்பர் கூறினார்.

இந்த உண்மை சம்பவத்தின் மூலம் புலப்படுவது என்ன என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.

ஏன் ஹிந்துத்துவ தரப்பு கூறும் பல விஷயங்கள் எதிர்வினைத் தன்மை கொண்டவையாக (reactionary) உள்ளன என்று பொதுவாகக் கேட்கப் படுகிறது. ஏனென்றால் ஹிந்துத்துவம் சமகால யதார்த்தத்தை தயங்காமல் துணிவுடன் எதிர்கொள்ளும் ஒரு சித்தாந்தம். அதைப் பார்த்து கண்மூடிக் கொண்டு போகும் சித்தாந்தமல்ல. ஹிந்துத்துவம் பேசும் நியாயமான பிரசினைகளைக் கூட புறந்தள்ளும், மறைத்து மூடும் அல்லது விவாதிக்கத் தயங்கும் போக்கு துரதிர்ஷ்டவசமாக நமது சூழலில் உருவாகி விட்டது. எனவே யாராவது அதைச் சொல்லும்போது தீவிரமான எதிர்மறைக் கருத்து போலத் தோற்றமளிக்கிறது. “கடந்த காலத்தின் பெருமிதங்களையும், நிகழ்காலத்தின் வலிகளையும், எதிர்காலத்தின் கனவுகளையும் சுமக்கும் இளைஞர்களே ஒரு நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்வார்கள்” என்ற ஸ்ரீஅரவிந்தரின் வார்த்தைகளை இங்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

ஹிந்துத்துவம் அடிப்படையில் இந்திய தேசியத்துடன் தொடர்புடையது; அரசியல் ரீதியானது. எனவே வெளிநாட்டில் வாழும் இந்துக்களுக்கும் அதற்கும் தொடர்பு என்ன என்று கேட்கலாம். அது நியாயமான கேள்வியே. அதனால் தான் தொடக்கத்தில் நான் அளித்த “ஹிந்து” என்பதற்கான வரையறையில் தேசியம் பற்றிய குறிப்பு இல்லை. “ராஷ்டிரீய ஸ்வயம்சேவக சங்கம்” என்று தன்னை தேசிய இயக்கமாகவே இந்தியாவில் அழைத்துக் கொள்கிறது ஆர்.எஸ்.எஸ். உலகின் பல நாடுகளில் உள்ள அதன் கிளை அமைப்புகள் “ஹிந்து ஸ்வயம்சேவக சங்கம்” என்றே தங்களை அழைத்துக் கொள்கின்ற்ன. ஆனால் இந்தியாவில் வாழும் ஹிந்துக்களின் அரசியல், சமூக பிரசினைகள் ஒருவிதத்தில் உலகெங்கும் வாழும் ஹிந்துக்களின் வாழ்க்கையில் கட்டாயம் தாக்கம் செலுத்தும் என்பது நிதர்சனமான உண்மை. அவர்கள் மிக சமீபகாலத்தில் இந்தியாவிலிருந்து புலம்பெயர்ந்த ஹிந்துக்களானாலும் சரி. பாகிஸ்தான், பங்களாதேஷ், பாலித் தீவுகள், மலேசியா அல்லது இலங்கையில் நெடுங்காலமாக வாழ்ந்து வரும் இந்துக்களானாலும் சரி. தாங்கள் வாழும் இடங்களில் எதிர்கொள்ளும் பிரசினைகளை கையாள்வதற்கான சில வழிமுறைகளையாவது ஹிந்துத்துவ கருத்தியலில் இருந்து அவர்கள் கற்றுக் கொள்ளும் சாத்தியம் இருக்கிறது. மேலும் உலகில் ஏதோ பகுதியில் ஒடுக்கப் படும் இந்துக்களின் குரலை உலக அரங்கில் யார் கேட்கச் செய்ய முடியும்? இந்தியா மட்டும் தான். அவ்வகையிலும் இந்தியாவின் ஹிந்துத்துவ அரசியல் உலக அளவில் முக்கியமானது.

ஆரம்பத்தில் நண்பர் எழுப்பிய கேள்விக்கு வருவோம். ஹிந்துத்துவம் குறித்த அவரது தயக்கம் பெரும்பாலும் அது சார்ந்து உருவாக்கப் பட்டிருக்கும் எதிர்மறையான பிம்பங்கள் சார்ந்ததே என்று எண்ணத் தோன்றுகிறது. ஹிந்துத்துவ சிந்தனைகள் என்று அடிக்கோடிட்டு வெளிவந்த அரவிந்தன் நீலகண்டனின் நம்பக் கூடாத கடவுள் புத்தகத்தைப் படித்த பெண் ஒருத்தி “இது தான் ஹிந்துத்துவம்னா நான் இன்னிலேர்ந்து ஹிந்துத்துவ வாதி என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வேன்” என்று என்னிடம் அடித்துக் கூறினாள். முந்தா நாள் வரை தன்னை ஹிந்துத்துவ எதிர்ப்பாளர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தவள் அவள்.

“நான் ஒரு ஹிந்து, தெய்வ பக்தி உள்ளவன்.. என்று சொல்வதில் எல்லாம் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை” என்று நண்பர் சொல்கிறார். ஆனால் 1960களிலோ அல்லது 80களிலோ இப்படிச் சொல்வதற்கே அவர் பயங்கரமாகத் தயங்கியிருப்பார்.

1960களில் இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை பற்றி ஆய்வு செய்த ராஜ் கிருஷ்ணா என்ற பேராசிரியர், அப்போது மந்தகதியில், 2-3% விகிதத்தில் ஊர்ந்து கொண்டிருந்த இந்தியப் பொருளாதாரத்தைக் குறிக்க “ஹிந்து வளர்ச்சி விகிதம்” (Hindu Rate of growth) என்ற சொல்லாடலை அறிமுகப் படுத்தினார். இந்தச் சொல்லாடல் இன்றும் நமது பாடப்புத்தகங்களில் பொருளாதாரத் தேக்க நிலையைக் குறிக்கப் பயன்படுத்தப் படுகிறது. உண்மையில் அந்தத் தேக்க நிலைக்கும் ஹிந்து மதத்திற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அந்த நிலைக்கு முழுக் காரணமும் நேருவின் சோஷலிச பொருளாதாரக் கொள்கைகளே. “நேருவிய வளர்ச்சி விகிதம்” என்பது தான் அதற்கு மிகப் பொருத்தமான பெயராக இருந்திருக்க வேண்டும். ஆனால் அதே நேருவியம் உருவாக்கிய இந்து-இழிவு நோக்கு மனப்பான்மையின் காரணமாக, வேண்டுமென்றே இந்து என்ற முத்திரை பயன்படுத்தப் பட்டது. இதை அருண் ஷோரி தனது நூல் ஒன்றில் சுட்டிக் காட்டியுள்ளார்.

இன்றைக்கு இந்தியாவிலேயே தலைசிறந்த ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சி கண்டிருக்கும் குஜராத் மாநிலத்தில் ஹிந்துத்துவ அரசியல் தான் ஆட்சி நடத்துகிறது. எனவே 12% பொருளாதார வளர்ச்சிப் பாய்ச்சலுக்கு “ஹிந்துத்துவ வளர்ச்சி விகிதம்” என்று நியாயமாகவே பெயர் சூட்டலாம் தானே? ஒருவேளை அப்போது தயக்கங்கள் அகலுமோ என்னவோ?

“எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்ற சூத்திரம் நினைவு வருகிறது. கூடவே ஆலிஸின் உரையாடலும்.

“The question is”, said Alice, “whether you *can* make words mean so many different things”.

“The question is”, said Humtpy Dumpty, “which is to be the master – that’s all”.

(முற்றும்)

http://www.tamilhindu.com/2011/12/hindutva-an-outlook/

1 comment:

  1. நீ இருக்கும் மதம்தான் சரி என்ரு நினைத்துகொன்டு இருப்பது 5 அரிவு உடைய ஆடு மாடுக்கு சமம்.பஹுத்தரிவு பயன்படுத்து அனைத்து மதத்தயும் தீவிரமா ஆய்வு செய்.உன்மை கன்டிப்பா உனக்கு தெரியவரும். உனக்கு ஏன் இரைவன் 6வது அரிவ கொடுத்தான் என்பதும் தெரியவரும்.இவ்வுலக வாழ்க்கை வெரும் பருட்சை அரை.பருட்சையில் தேரினால்தான் உனக்கு நீ இரத்ததற்கு பிரகு அழிவற்ற வாழ்கையில் வெற்றி கிடைக்கும்.

    ReplyDelete