Friday, February 24, 2012
கருணாநிதியின் பார்ப்பன எதிர்ப்பு கோஷம்
தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கு நேரடியாக பதில் சொல்ல முடியாத போதெல்லாம் ஆரிய-திராவிட பகை, பார்ப்பன சதி என்ற பிரசாரங்களில் இறங்கும் தன் வழக்கப்படி வேலூர் கோட்டை மைதானப் பேச்சிலும், சமீப கால அறிக்கைகளிலும் கருணாநிதி அதே உத்தியை மறுபடியும் கையில் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவையெல்லாம் விஷ(ம)ப் பேச்சு என்பதில் சந்தேகமே இல்லை.
அவர் ஆரியர்கள் என்று கருதும் பிராமணர்கள் பலரின் உதவியோடும் கூட்டோடும்தான் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார். ‘போகாதே போகாதே என் கணவா, பொல்லாத சொப்பனம் நானும் கண்டேன்’ என்று புலம்பியும், தன்னை விட்டுப் போனால் காங்கிரசுக்கு அதிக இழப்பு என்று மிரட்டியும் அவர் கூடவே வைத்துக் கொண்டிருக்க விரும்பும் காங்கிரசின் தலைமை காஷ்மீர் பிராமணர்களின் வாரிசுதான். கருணாநிதி குடும்பத்தின் அத்தனை தொழில்களிலும் பிராமணர்களின் பங்கு கணிசமாக இருக்கிறது. புதிய வருணாசிரமத்தில் உச்சியில் உட்கார்ந்திருக்கும் புதிய பார்ப்பனர் கருணாநிதிதான்.
எனவே அவர் காலாவதியாகிப் போன உத்தியை உதறிவிட்டு நேர்மையாக பிரச்சினையை எதிர்கொள்ள முன்வேண்டும். ‘ராசா தலித் என்பதனால் பாராளுமன்றத்தில் இவ்வளவு எதிர்ப்புக் கூச்சல் இதே டி.டி.கிருஷ்ணமாச்சாரியாக இருந்தபோது அவர் ராஜினாமா செய்த அடுத்த நாளே அமைதியாகிவிட்டார்கள்’ என்று (சின்னக் குத்தூசி பாணியில் சொல்வதானால்) விஷ(ம)த்தைக் கக்கியிருக்கிறார் கருணாநிதி.
டி.டி.கே விவகாரம் என்ன ? ராசா விவகாரம் என்ன என்று பார்ப்போம். 1957ல் முந்த்ரா என்ற தொழிலதிபரின் பங்குகளை அரசுக்குச் சொந்தமான எல்.ஐ.சி நிறுவனம் வாங்கி நஷ்டமடைந்தது என்பதுதான் புகார். பங்குகளை வாங்க உத்தரவிட்டவர் நிதித்துறை செயலாளர் எச்.எம் பட்டேல். நிதி அமைச்சராக டி.டி.கே.இருந்தார். எல்.ஐ.சி இழந்தது ஒன்றரை கோடி ரூபாய். பதிலுக்கு காங்கிரஸ் தேர்தல் நிதிக்கு முந்த்ரா இரண்டரை லட்சம் ரூபாய் கொடுத்ததாகச் சொல்லப்பட்டது.கான்பூரில் முந்த்ராவின் மில்லை மூடினால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பார்கள். அதை மூடக் கூடாது என்று நிபந்தனை விதித்ததை முந்த்ரா ஏற்றுக் கொண்டார்.
முதலீட்டுக்குழு ஒப்புதல் இல்லாமல் முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சி வாங்கிய முறைகேட்டை அம்பலப்படுத்தியது எதிர்க்கட்சிகள் அல்ல. பிரதமராக இருந்த நேருவின் மருமகனும் இந்திராவின் கணவரும் ஆளுங்கட்சி எம்.பியுமான பெரோஸ் காந்திதான். எதிர்க்கட்சிகள் அவரோடு சேர்ந்துகொண்டன.
நேரு உடனடியாக மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எம்.சி.சாக்ளாவை விசாரணை கமிஷனாக நியமித்தார். பங்குகளை வாங்க உத்தரவிட்டது நிதிச் செயலாளர்தான் என்றும் அதற்கான தார்மிகப் பொறுப்பு நிதி அமைச்சருடையது என்றும் சாக்ளா முடிவு செய்தார். தான் ‘ லுக் இண்ட்டு திஸ் மேட்டர்’ என்று சொன்னதாக டி.டி.கேவும், அதை பங்குகள் வாங்கச் சொன்னதாகப் புரிந்துகொண்டதாக பட்டேலும் சாட்சியத்தில் சொல்லியிருந்தார்கள். டி.டி.கே ராஜினாமா செய்தபோது நேரு உங்களுக்கு இதில் தொடர்பில்லை என்றாலும் நீங்கள் தார்மிக அடிப்படையில் விலகுகிறீர்கள் என்பதைப் புரிந்துகொள்கிறேன் என்று சொன்னார்.
டிசம்பர் 16, 1957ல் பெரோஸ் காந்தி புகார் எழுப்பினார். ஜனவரி முதல் வாரத்தில் சாக்ளா கமிஷன் பகிரங்க விசாரணையைத் தொடங்கியது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் முன்னிலையில் 11 நாட்கள் விசாரித்த உடனே சாக்ளா அறிக்கை கொடுத்தார். அமைச்சர் ராஜினாமா செய்தார். எல்லாமே ஒரு மாதத்துக்குள் முடிந்துவிட்டது.முந்த்ரா போலிப்பங்குகளை விற்றதற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.
கருணாநிதி அவர்களே, அப்புறம் எதற்காகத் தொடர்ந்து அவையில் யாரும் கூச்சல் எழுப்ப வேண்டும் ?
ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரம் வெளிவந்து ஒரு வருடத்துக்கு மேல் ஆகிறது. நேரு ஒரே வாரத்தில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை விசாரிக்க நியமித்தது போல மன்மோகன்சிங் ஏதாவது நியமித்தாரா ? கனிமொழி ராசா டேப் பதிவுகள் அம்பலமாகி பல மாதங்கள் ஆகிவிட்டன. கருணாநிதி அதைப் பற்றி இன்னும் வாயையே திறக்கவில்லை. என்ன செய்வது ? பதிவு செய்த மெஷின் பார்ப்பான் கண்டுபிடித்த மெஷின் என்று சொல்ல முடியாதே.
பிரதமரின் மருமகனே அரசின் முறைகேட்டை வெளிப்படுத்தும் சூழல் நேரு காலத்தில் இருந்தது. ராசாவின் ஊழலை அவர் கட்சியையே சேர்ந்த எந்த தி.மு.க காரனாவது வெளிப்படுத்தும் வாய்ப்பு இருக்கிறதா ?கருணாநிதி காலத்தில் யாராவது எந்த ஊழலையாவது வெளிப்படுத்தினால் அவரால் கம்யூனிட்டி சர்ட்டிஃபிகேட் ஆராய்ச்சி மட்டும்தான் நடத்த முடியும்.
முந்த்ராவின் பங்குகளை எல்.ஐ.சியை வாங்கச் செய்து நஷ்டமடைந்தது தவறு என்று மட்டும்தான் சாக்ளா சொன்னார். அதில் யாருக்கும் பணம் கை மாறியதாக எந்த ஆதாரமும் இல்லை என்றார். விவான் போஸ் குழுதான் கட்சிக்கு பணம் தரப்பட்டதாக சொன்னது. நேரு தன் உளவுத் துறையை விசாரிக்கச் செய்தார். அமைச்சர், அதிகாரிகள் யாரும் பணம் பெறவில்லை என்று உளவுத் துறை கூறியது.
தவிர முந்த்ரா ஒரு மோசடிப் பேர்வழி என்பது முன்பே நேரு. டி.டி.கே பட்டேல் எல்லாருக்கும் தெரியும். முந்த்ரா பங்கு மார்க்கெட்டில் செய்துவரும் நடவடிக்கைகள் பற்றி பல குறிப்புகளை டி.டி.கேவும் நேருவும் கோப்புகளில் முன்பே பதிவு செய்திருக்கிறார்கள். முந்த்ரா கம்பெனி திவாலானால் பங்கு மார்க்கெட்டில் சிக்கலும் முந்த்ராவுக்கு கடன் கொடுத்த வங்கிகளுக்கு சிக்கலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் வரும் என்பதால், தற்காலிகத் தீர்வாக முந்த்ரா பங்குகளை எல்.ஐ.சி வாங்குவதென்ற முடிவை நேரு அரசு எடுக்க வேண்டியிருந்தது. அது உண்மையில் பொருளாதார நெருக்கடி பற்றிய ஜட்ஜ்மெண்ட் எரர்தானே தவிர ஊழல் அல்ல.
ராசா செய்தது அப்பட்டமான மோசடி. ஸ்பெக்ட்ரம் விற்பனை விதிகளை, தேதிகளை மாற்றி அமைத்தது, அனுபவமில்லாத கம்பெனிகளுக்கு லைசன்ஸ் கொடுத்தது, அவர்கள் அதை விற்று பல கோடி சம்பாதித்தது, நீரா ராடியாவுடன் பேரங்களில் ஈடுபட்டது, பிரதமர் சொன்னதைக் கேட்காதது எல்லாம் ஒரு சாதாரண பாராளுமன்றக் கூட்டுக் குழுவால் கூட விசாரிக்க முடியாமல் கருணாநிதி வகையறாக்களால் வருடக்கணக்கில் தடுக்கப் பட்டு வருகிறது. இதைக் கேள்வி கேட்டால் விஷத்தைக் கக்குகிறார் கருணாநிதி. பக்தவத்சலம் சொன்னது போல விஷக் கிருமிகள் பரவிவிட்டன. அவர் கருணாநிதி வகையறாக்களைத்தான் குறிப்பிட்டிருக்க வேண்டும். தேர்தலின் போது சரியான மருந்து அடிக்கத் தவறினால் நாம்தான் மாண்டு போவோம்.
http://gnani.net/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment